வாசிப்பும் ரசனையும்: சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை கதைகளை முன்வைத்து.

மயாழ் சிறுகதை பட்டறையில் பங்கெடுக்க உள்ள ஆசிரியரிமிருந்து ஒரு கேள்வி.

புலனக்குழுவில் நீங்கள் குறிப்பிடும் படைப்புகள் அனைத்தும் சிறப்பானவையாக உள்ளன. இவ்விரு படைப்பாளிகளின் எல்லா படைப்புகளும் சிறந்தவைதானா? ஒரு படைப்பாளியின் அனைத்துப் படைப்புகளும் சிறந்தவையாக இருக்குமா?

புனிதவதி, ஜொகூர்

ஆரம்பக்கட்ட வாசகன் தீவிர இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கும்போது சிலவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என விரும்புவேன். ஒருவகையில் அது நான் வந்த வழி. முதலில் குறிப்பிட்ட ஒரு படைப்பாளியின் முக்கியமான ஆக்கங்களை வாசிக்க வேண்டும். அதன் வழி ஒரு வாசிப்பு  ரசனையை உங்களுக்குள் உருவாக்கிக்கொள்ளுதல் அவசியம். பின்னர் அந்த ரசனையைக் கொண்டு நீங்கள் அப்படைப்பாளியின் மொத்தப்படைப்புகளையும் வாசித்து உங்கள் ரசனையின் படி மதிப்பிட்டுக்கொள்ள முயலவேண்டும்.

இதில் முதல் கட்டமாக, குறிப்பிட்ட ஒரு படைப்பாளியின் தரமான சில சிறுகதையை வாசிக்கும்போது ஏன் அவை தரமானவை என கதையின் முடிச்சுகளைத் திறந்துகாட்ட கூட்டு வாசிப்பு முறை தேவைப்படுகிறது. அவ்வகையில் மலேசியாவுக்கு வரும் இரு படைப்பாளிகளை அவர்கள் படைப்புகள் வழி அறிந்துகொள்ளவே இத்தொடர் கட்டுரை முயற்சி. இக்கதைகளை நீங்களும் வாசித்து உங்களுக்குள் உருவான அபிப்பிராயத்திற்கு மாற்றான ஒரு குரல் இக்கட்டுரைகளில் ஒலிக்குமென்றால் அதுவே இக்கட்டுரைகள் தன் இலக்கை அடைந்ததற்கான சான்று.

ஒரு புனைவிலக்கியத்தில் உள்ள நுட்பமான பகுதிகளை, நீங்கள் காணாமல் விட்டப்பகுதிகளை இன்னொரு வாசகன் காட்டுவதன் மூலமே புனைவு கொண்டுள்ள சூட்சுமத்தை உங்களால் அறிய முடியும். எனது தொடக்க கால வாசிப்புக்கு ஜெயமோகனின் கட்டுரைகளே அவ்வாறு சிறுகதைகளை உள்வாங்க உதவின. அதன்பின்னர் பல்வேறு தரப்பு படைப்பாளிகள், விமர்சகர்கள், கோட்பாட்டாளர்கள் வழிகாட்டலில் பல சிறுகதைகளை, நாவல்களை வாசித்துள்ளேன். இந்தத் தொடர் வாசிப்பில் எனக்குள் கலை இலக்கியம் குறித்த ஒரு ரசனை உருவாகியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு காலத்திலும் உருவாகும் ரசனைமனம் அதற்கு முன் இருக்கும் கலை இலக்கியம் குறித்த அபிப்பிராயங்களுடன் முயங்கி, விலகி, முரண்பட்டு தன்னைப் புதுப்பித்திக்கொள்கிறது.  அது சரியா தவறா என்பதல்ல விசயம். பல்வேறு வாசிப்பு அனுபவங்களில் இதுவும் ஒன்று. இதற்கு மாற்றான வேறு அபிப்பிராயங்களும் ஒரு சிறுகதையை ஒட்டி இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

அடுத்து உங்கள் கேள்வி இவ்விரு படைப்பாளிகளால் எழுதப்பட்ட அத்தனை படைப்புகளும் முக்கியமானதுதானா? இது இரண்டாவது கட்ட வாசிப்பில் நீங்களே முடிவு செய்ய வேண்டியது. இருந்தாலும் என் வாசிப்பில் நான் உணர்ந்த சில உதாரணங்களைச் சொல்லலாம் நினைக்கிறேன்.

venugopal1நான் மிகவும் நேசிக்கும் எழுத்தாளர் சு.வேணுகோபால். அவரைச் சந்திக்கும் முன்பிருந்தே அவர் எழுத்தின் ஊடாக மிக நெருக்கம். சமகாலத்தில் நான் மிக முக்கியமாக கருதி பலருக்கும் பரிந்துரைக்கும் படைப்பாளி. ஆனால் அவரது ஒருசில சிறுகதைகள் எனக்குப் பிடித்தமானது இல்லை. உதாரணமாக ‘பாரம் சுமக்கிறவள்’ சிறுகதையைச் சொல்லலாம். ஒரு இந்துப்பெண்ணை கிருத்துவ இளைஞன் உருக உருக காதலிக்கிறான். ஒரு வார்த்தை அவளிடம் பேசாமல் அவளை பார்ப்பது மட்டுமே போதுமென்று வாழ்கிறான். அவளுக்கு முதலில் அவனிடம் காதலில்லை. ஆனால் அவன் உருகுவதை அவளும் விரும்புகிறாள். ஒரு சமயம் அவன் விபத்தில் இறக்க அவள் என்ன செய்வதென்று தெரியாமல் சர்ச்சில் பாவ மன்னிப்புக் கேட்க வருகிறாள். கதை பாவ மன்னிப்பு கேட்கும் அவளது குரலில் தொடங்கி முடிகிறது. அவன் விபத்தில் சிக்கிவிட்டப்பின் அவன் பிழைத்துக்கொண்டால் தான் மதம் மாறி அவனை திருமணம் செய்துக்கொள்வதாகச் சொல்லும் அவள் வேண்டுதல்கள் அர்த்தமற்றதாகிறது.

இக்கதையை வாசித்து முடித்தப்பின் ஒரு அழுத்தம் மனதில் எழவே செய்யும். அப்பெண் இனி எப்படி காலம் முழுவதும் அந்த பாரத்தைச் சுமப்பாள் என்றும், அவள் தன்னை நிராகரித்து விடுவாளோ எனும் பயத்தில் இளைஞன் தன்னைத் துன்புறுத்திக்கொண்டதையெல்லாம் விட இனி அவள் அனுபவிக்கப்போகும் எஞ்சிய ரணம் மிகுந்த வாழ்வு குறித்தும், அவனை அவள் வெறுத்துக்கொண்டே அவன் தனது நாமத்தை ஜெபிப்பதை ரசித்ததையும் விஸ்தாரமாகப் பேசலாம் என்றாலும் தமிழ்ச்சினிமாக்களில் வந்து வந்து தேய்வழக்காகிவிட்ட காட்சிகள் என்பதாலேயே மேற்கொண்டு இக்கதை குறித்த யோசிக்க எனக்கு ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.

இதற்கு அடுத்த படிநிலை ஒன்று உண்டு. அது பிரபலமான டெம்ப்ளட்டுகளுக்குள் கதையை உருவாக்குவது. வாசிப்பில் தீவிரமாக நுழைபவர்களுக்கு இவ்வகை கதைகளை நான் பரிந்துரை செய்வேன். அதுபோல எழுதிப்பார்க்கவும் முயலலாம். முதல்கட்டத்தில் அவை நல்ல பயிற்சியாக இருக்கும். என்னை இதுபோன்ற குறிப்பிட்ட டெம்ப்ளட்டில் உள்ள கதைகள் கவர்வதில்லை.  பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் கதைகளில் இருந்தே இரு உதாரணங்கள் சொல்கிறேன்.

‘வேட்டை’ என்றொரு கதை. ஜப்பான் கிழவன் என்ற நரிக்குறவர் வேட்டைக்குச் செல்கிறார்.20chrcjpava அவருக்கு வேட்டை என்பது காட்டுடன் அவர் நடத்தும் யுத்தம். அவர் வைத்த கண்ணியில் விலங்குகளும், பறவைகளும் சிக்காமல் இருந்ததில்லை. ஆலமர மைதானத்தில் தனது கூட்டத்தினரோடு வாழ்ந்தவனின் விருப்பமில்லாமல் சாலையோரம் இருக்கும் ஓட்டுவீட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு கடை வைத்துக்கொடுப்பதாகவும்  சொல்லப்படுகிறது. ஜப்பான் கிழவனுக்கு இது எதுவும் பிடிக்கவில்லை. புறப்படும்போதே தன் கூட்டத்தினரிடம் நெருக்கம் காட்டும் வேதக்காரர்களைப் பார்க்கிறான். வேட்டைக்குச் சென்றவன் எவ்வளவு முயன்றும் கண்ணியில் எதுவும் சிக்காமல் போகிறது. 60 ஆண்டுகளுக்கு மேல் வேட்டையில் அனுபவம் கொண்டவனுக்கு அது பெரும் அவமானம். நொந்தபடி மீண்டும் வீட்டை நோக்கி வருகிறான். அவன் கூட்டத்தினர் வேதக்காரர்களோடு நெருக்கம் காட்டுவதோடு கதை முடிகிறது. அவன் மட்டும் பையில் உள்ள தன் கண்ணியை இறுக்கப் பிடிக்கிறார்.

கதையில் டெம்ப்ளட் மிக எளிதானது. தலைப்பு ‘வேட்டை’. வேட்டையாடச் சென்ற ஜப்பான் கிழவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. காடு அவனை ஏமாற்றுகிறது. ஆனால் நகரத்தில் வேதக்காரர்களால் அவன் குழுவின் அடையாளம் வேட்டையாடப்படுகிறது. இனி வரும் தலைமுறை முழுக்க காட்டை மறந்தவர்கள் ஆவார்கள். இங்கு வேட்டையாடப்பட்டது ஒரு கலாச்சாரம். எளிய திருப்பம். எளிய முரண்.

இதேபோல சு.வேணுகோபாலின் ஒரு சிறுகதையையும் ஒப்பிடலாம். ‘நிரூபணம்’ என்றொரு சிறுகதை. பள்ளி மாற்றப்பட்டப்பின் குறைந்த புள்ளிகளுடன் வீட்டுக்குச் செல்லும் எபி அம்மாவால் கண்டிக்கப்படுகிறான். அப்பாவும் அவனை அடிக்கிறார். அம்மா கிறிஸ்டி மகனின் நிலையை எண்ணி கடவுளிடம் வேண்டுகிறாள். அவள் பக்தி மிக்கவள். அடிக்கடி தன் மகனிடம் ஒரு கதையைச் சொல்கிறாள். ஒரு ஏழை மூட்டைத்தூக்கும் கிறித்துவ தொழிலாளி இரக்கத்துடன் பிறரிடம் நடந்துகொண்டதால் கிறிஸ்மஸ் தினத்தின் போது தேவனின் தரிசனம் கிடைக்கிறது. அவன் பக்கத்து வீட்டில் இருந்த வைர வியாபாரி உள்ளிட்ட பணக்காரர்களின் ஆடம்பர வேண்டல்களுக்கு செவி சாய்க்காத ஆண்டவர் மூட்டை தூக்கும் தொழிலாளியின் நிலையை உயர்த்துகிறார். அம்மா அத்துடன் நிறுத்தவில்லை. ஒவ்வொரு நாளும் அந்தக் கதையின் முடிவை நீட்டிக்கிறாள். அந்தத் தொழிலாளியில் நிலை எவ்வாறு மாறுகிறது என்றும் அவரது ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் நடக்கிறது என்றும் சொல்கிறாள். இப்படி கதை சொல்லும் அம்மாதான் எபியை தேவாலயத்திற்கு அழைத்துச்செல்லும் போது பிச்சை எடுக்கும் அழுகிய உடல் கொண்ட கிழவனைக் கண்டு அருவருத்து அகல்கிறாள். அம்மா தேவாலயத்தில் கண்களை மூடி கடவுளைத் தொழும்போது உண்டியலில் போடக்கொடுத்த 10 ரூபாய்க்கு எபி கிழவருக்கு பிஸ்கட்டை வாங்கிகொடுத்து அம்மாவிடம் உண்டியலில் போட்டதாகப் பொய் சொல்லலாம் என நினைப்பதுடன் கதை முடிகிறது.

இதுவும் ஒரு பிரபலமான டெம்ப்ளட்தான். சதா மகனை அடித்துக்கொண்டும் கடிந்துகொண்டும் இருக்கும் அம்மா, கடவுளிடம் மன்றாடும் அம்மாவிடம் இல்லாத இரக்கம் தோய்ந்த கண்கள் அவள் மகனிடம் உள்ளது. அம்மா கதைகளில் காட்டும் கருணை மிகுந்த மனிதன்தான் அவளுக்கு மகனாக இருக்கிறான். எளிய திருப்பம். எளிய முரண்.

இக்கதைகள் இரண்டும் சிறுகதை எழுத விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டியவை என்றே சொல்வேன். ‘வேட்டை’ சிறுகதையில் பவா செல்லதுரை காட்டும் வனமும் ‘நிரூபணம்’ சிறுகதையில் சு.வேணுகோபால் காட்டும் சிறுவனின் கதாபாத்திரமும் மிக நுணுக்கமானவை. பவாவினால் ஒரு காட்டை கண்முன் கொண்டுவர முடிவதுபோல ஆர்வமும் ஈரமும் கொண்ட ஒருஜோடி கண்கள் கொண்ட சிறுவனை சு.வேணுகோபாலினால் காட்ட முடிந்துள்ளது.

மேற்சொன்ன மூன்று கதைகள் குறித்த அபிப்பிராயங்கள் அனைத்துமே என் தனிப்பட்ட வாசிப்பில் எனக்குள் நான் உருவாக்கிக்கொண்ட ரசனை அடிப்படையிலானவை. இதற்கு முழு முற்றான கருத்துகள் கொண்ட வேறு வாசகர்கள் இருப்பார்கள். அவர்கள் இக்கதைகளை கொண்டாட வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். அப்படித்தான் நீங்களும் வருங்காலத்தில் உங்கள் வாசிப்பில் ஒரு சிறுகதை குறித்த தனித்த அபிப்பிராயங்களை உருவாக்க வேண்டும். அதுவே வாசிப்பின் அடையாளமும் கூட.

(Visited 228 times, 1 visits today)