மனசலாயோ 1: தென்னங்கடல்

20181202_175332திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கியதும் கார் காத்திருந்தது. காரில் அமர்ந்தவுடன், பார்வதிபுரம் இங்கிருந்து பக்கமா? எனக் கேட்டேன். வாகனமோட்டி அருகில்தான் எனச் சொன்னார். ஆனால் எவ்வளவு அருகில் எனக் கொஞ்சம் தமிழ் கலந்த மலையாளத்தில் சொல்ல நெடுநேரம் முயன்றுக்கொண்டிருந்தார். சிகிச்சைக்கு கேரளா வந்ததும் வராததுமாக ஏன் தமிழகத்தில் உள்ள ஊரைப்பற்றி விசாரிக்கிறான் என அவர் யோசித்திருக்கக் கூடும்.  ஆயுர்வேத சிகிச்சை நிலையம் விமான நிலையத்திலிருந்து தள்ளி ஒரு மேட்டுப்பகுதியில் பசுமைக்கு நடுவில் இருந்தது. தனித்த இருமாடிக் கட்டடம். மொட்டை மாடியில் நின்று பார்த்தால் சுற்றிலும் பச்சையாகத் தெரியலாம் என நினைத்துக்கொண்டேன்.  இரவாகிவிட்டிருந்தது. மருத்துவர் காத்திருந்து தங்கும் வசதிகளைக் காட்டினார்.

கேரளாவில் இதுபோன்ற ஏராளமான சிகிச்சை நிலையங்கள் உள்ளன. பெரும்பாலும் ஆங்கிலேயர்களுக்கான சௌகரியங்களுடன் அதிக விலையில் இயங்குபவை. கேளிக்கைத்தனம் நிறைந்தவை. உடம்புப்பிடி, ஓய்வு  என வருபவர்களுக்கு அதுபோன்ற இடங்கள் தோதானது. இரவில் பாட்டு, இசையென பலவித உணவு வகைகளுடன் இருக்கும். என் நிலை அதுவல்ல.

கலை இலக்கிய விழாவுக்கான 10 நூல் தயாரிப்பு, 4 ஆவணப்பட தயாரிப்பு, பள்ளிப் பணிகள், மேற்கல்வி பணிகள், யாழின் 4 புத்தகத் தயாரிப்புகள் எனப் பெரும்பாலும் கணினியையே கடந்த 10 மாதங்கள் பார்த்துக்கொண்டிருந்ததில் கழுத்துப்பகுதி கடுமையாகப் பாதித்திருந்தது. எந்திரன் ரஜினி போல கழுத்தைத் திருப்பும் போதெல்லாம் உள்ளுக்குள் ஒலி எழுந்தது. மேலும் தலை அதிக உஷ்ணமாகியிருந்ததை உணர்ந்தேன். மூளை  எரிமலை குழம்புபோல முட்டைவிட்டு கொதிப்பது போன்ற கனவுகள் தோன்றி பயமுறுத்தின. ஒரு பெரும் விழாவை வெற்றிகரமாக முடித்தப்பின் சட்டென அதிலிருந்து துண்டித்துக்கொண்டு செல்வதே மனதுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். அதன் வெற்றிகள் அதன் பலவீனங்கள் என எதுவாயினும் காலம் கடந்தபின் மிகச் சிறியவைகளாக மாறி அதிலிருந்து தள்ளி நின்று சிந்திக்க வைக்கும்.

மறுவாரம் பள்ளி விடுமுறை தொடங்கியதுமே கேரளா செல்வதென திட்டமிட்டிருந்தேன். ஆனால் சுவாமி பிரம்மானந்தாவை மையமிட்டு இயங்கும் நவீன களம் நடத்தும் மூன்று நாள் முகாமில் கலந்துகொள்ள சுவாமி கேட்டுக்கொண்டதால் மறுக்கமுடியவில்லை.

கூலிமில் முகாம் முடிந்த ஞாயிறே எழுத்தாளர் சு.வேணுகோபாலை சரவண தீர்த்தா கையில் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு பவா செல்லதுரையை அழைத்துக்கொண்டு பினாங்கு விமான நிலையம் சென்றேன். அங்கிருந்து நேராக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்து இறங்கியதும் பவா செல்லதுரையை கோலாலம்பூர் இரண்டாவது விமான நிலையம் அழைத்துச்சென்று திருச்சி செல்லும் விமானத்தில் ஏற ஏற்பாடுகளை முடித்து மீண்டும் முதன்மை விமான நிலையம் சென்று விமானத்தில் ஏறி அமர்ந்தபோது கழுத்து நொந்தது.

சிகிச்சை மையத்தைப் பார்த்தபோது கொஞ்சம் தெம்பு வந்தது. எல்லாம் சரியாகிவிடும் எனச் சொல்லிக்கொண்டேன். நெடுநாளைக்குப் பின் மனம் சாவகாசமான நிலைக்கு வந்திருந்தது.

முதல் நாள் மட்டும் நன்கு உறங்க அனுமதி வழங்கப்பட்டது. அதிகாலையில் அவசரமாக எழ01 வேண்டிய எந்த அவசியமும் இல்லை. உண்ண வேண்டிய மருந்துகள் பட்டியலிட்டு வழங்கப்பட்டன. முழுமையாக சைவ உணவுதான் உண்ண வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது. கேராளாவில் மீன் புத்தம் புதியதாக இருக்கும் என யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. காலையில் மொட்டை மாடியில் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன. முன்பு பத்துமலை ஆசிரமத்தில் குமுக்ச்சி என்பவரிடம் ஓரளவு யோகா பயின்றிருந்தேன். மொட்டைமாடியில் இருந்து கண்ணுக்கு எட்டியவரை தென்னந்தோப்பு தெரிந்தது. தோப்பைத் தாண்டிக் கடல். வலது இடது சிறிய காடு. எப்போதும் காகங்கள் சத்தம். மனம் இலகுவாகி ஓர் இறகுபோல் ஆனது. தென்னந்தோப்பை அடுத்துள்ள கடலை சற்று உயரத்தில் இருந்து பார்ப்பது அற்புதமான அனுபவம்.

முதல் நாள் மசாஜ் தொடங்கியது. கழுத்துப் பகுதியைச் சரி செய்ய உடம்புப்பிடி நிபுணர் ஹரி முயன்றுக்கொண்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ் காரர். பிரார்தனையெல்லாம் செய்து தொடங்கினார். மோடியைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார். என் கழுத்து அவர் கையில் இருந்ததால் மௌனமாகவே வலிக்கு ஏற்ப வளைந்துகொடுத்தேன். மசாஜ் முடிந்தவுடன் இரண்டு முறை குளித்தும் உடலில் எண்ணெய் வழிந்தபடி இருந்தது. தேகத்தின் கறுமையை மின்ன வைத்தது. மறுநாளில் இருந்து சிகிச்சை தீவிரமாகும் எனவும் இன்று மட்டுமே பயண அனுமதி என்றதால் அந்த நாளில் ஜெயமோகனைச் சந்தித்தே தீர்வதென முடிவெடுத்துக்கொண்டேன். மருத்துவரிடம் பார்வதிபுரம் செல்ல வேண்டும் என்றேன்.  திருவனந்தபுரத்திலிருந்து 80 கிலோ மீட்டர் பார்வதிபுரம். போக வர கணக்கிட்டு நேற்று விமான நிலையத்திலிருந்து ஏற்றி வந்த வாகனமோட்டி ஒரு தொகை சொன்னார்.

திருவனந்தபுரத்திலிருந்து பார்வதிபுரத்துக்கு நெடுஞ்சாலை போடும் பணி நடப்பதால் சுற்றிக்கொண்டு செல்வதாயிற்று. கொஞ்சம் விசாரித்து குத்து மதிப்பாக சாரதா நகர் சென்ற பிறகு தொலைவிலேயே அருண்மொழி நங்கை அக்காவைப் பார்த்துவிட்டேன். எங்கோ நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்படியானால் அங்குதான் வீடு என வண்டியை சிறிய சந்துபோன்ற பாதையில் விடச்சொன்னேன். வண்டியை அக்காவின் அருகில் நிறுத்தியதும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார். “நவீன்” என்றார். உண்மையில் வேறொருநாளில்தான் ஜெயமோகனை சந்திப்பதாக இருந்தது. வருவதாக ஒரு மின்னஞ்சல் போட்டுவிட்டு நேராகப் போய்விட்டேன். வீட்டுக்குச் செல்ல பாதை சொன்னார். வண்டியை அனுப்பிவிட்டு நான் நடந்தே சென்றேன். அதுதான் ஜெயமோகன் வீட்டுக்குச் செல்வது முதன் முறை என்றாலும் சில ஆவணப்படங்கள் வழி வீட்டை நன்கு அடையாளம் தெரியும். எளிதாகவே கண்டுப்பிடித்துவிட்டேன்.

02டோரா குரைத்தது. அதற்கு நிச்சயம் மலேசியாவில் ஒரு வாசகன் தன்னை அறிந்திருப்பான் என தெரிந்திருக்காது. எட்டிப்பார்த்து “டோரா” என்றேன். “வாடா மச்சி” என்றது. யாரும் இருக்கிறார்களா என வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். திறந்து கிடக்கும் வீட்டில் நாய் மட்டும்தான் நுழைய வேண்டுமா என்ன? வலது பக்க அறையில் அஜிதன் தூங்கிக்கொண்டிருந்தார். சோபாவில் மடிக்கணினி இருந்தது. நிச்சயம் ஜெயமோகனிடன் அடிபட்டதாகத்தான் இருக்க வேண்டும். நாக் – அவுட்டாகி கிடந்தது. நான் அனுப்பிய மின்னஞ்சலை ஜெயமோகன் பார்த்திருக்கவில்லை எனப்புரிந்தது. என் கற்பனையில் அவர் எப்போதும் கணினி முன் இருப்பதாக தோன்றுவதால் வந்த வினை.

கதவைச் சாற்றிவிட்டு மீண்டும் டோராவை எட்டிப்பார்த்தேன். அதற்கு பின் அது குரைக்கவில்லை. அருகில் வந்தால் வாஞ்சையாக நக்கிவிடுவேன் என்பதுபோல உடலில் பாவனை காட்டியது. டாபர்மேன். உயரத்தைப் பார்த்து தைரியம் வரவில்லை. மசாஜ் செய்ய கழுத்து உடலில் இருப்பது அவசியம்.

கொஞ்ச நேரத்தில் அக்கா வந்தார். மடமடவென வீடு உயிர் பெற்றது. அஜித்தன் தூக்கத்தை துண்டித்துக்கொண்டு ஹாலில் அமர்ந்தார். ஜெயமோகன் மேல் மாடியில் இருந்து இறங்கி வந்தார். ஏன் வந்ததும் தெரிவிக்கவில்லை என எல்லாரிடமும் கேள்வி இருந்தது. ஜெயமோகன் எப்படி படைப்பூக்கத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறார் என அறிந்த ஒருவரால் அவரை அவ்வளவு எளிதில் எழுப்ப முடியாது.

ஆனாலும் நான் ஜெயமோகனை சென்று சந்தித்துத் தொந்தரவு செய்ய ஒரு காரணம் உண்டு.

தொடரும்

(Visited 1,183 times, 1 visits today)