மனசலாயோ 2: செருக்கழித்தல்

000இவ்வருடம் வழக்கத்தைவிட முன்னதாகவே கலை இலக்கிய விழாவுக்கான பணிகள் தொடங்கியிருந்தன. மலேசியா மட்டும் அல்லாமல் தமிழகத்திலும் கலை இலக்கிய விழாவில் வெளியீடு காணும் நூல்கள் அறிமுகமாக வேண்டும் எனும் நோக்கில் சென்னை மற்றும் மதுரையில் நூல்களை வெளியீடு செய்திருந்தோம். நூல்களைப் பற்றி பேசியவர்கள் அனைவரும் தமிழின் முக்கியப்படைப்பாளிகள். ஒரு நூலின் உள்ளடகத்தின் தரத்தை அளவிடுவதில் நிபுணத்துவம் மிக்கவர்கள். அவர்கள் வழியே நூல் கவனம் பெற வேண்டும் என திட்டமிட்டிருந்தோம்.

தரமான நூல்களைப் பதிப்பிப்பது ஒருவகை பணி என்றால் அதை விரிந்த தளத்தில் கொண்டு செல்வது மற்றுமொரு பணி. வல்லினம் இவ்விரு பணிகள் மூலம் சமகால மலேசிய இலக்கியம் குறித்து கவனத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த முன்னெடுப்புகள் மலேசியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. கலை இலக்கிய விழாவுக்கு முன்பே முகம் அறியாத ஒருவராவது ஒவ்வொரு நாளும் அழைத்துப் பாராட்டினர். ஓர் இயக்கம் செய்ய வேண்டியதை ஒரு சிறிய இலக்கியக் குழு செய்வது பலருக்கும் ஆச்சரியம். அதில் பலரும் கலை இலக்கிய விழாவிலும் கலந்துகொண்டனர். அது நாங்களே எதிர்பார்க்காத பெரும் திரள். 200 இருக்கைகள் போடப்பட்ட அரங்கில்  சட்டென தடுப்புகளைப் பிரித்து மண்டபத்தின் விசாலத்தை அதிகரிக்க வேண்டியதாகிவிட்டது.

பாராட்டுகள் பிடித்தமானவைதான். ஆனால் தொடர் செயல்பாட்டுக்குப் பாராட்டுகளுக்கு ஈடாக போதாமைகளை அறிவதும் அவசியம். நுணுகி கவனித்து அதைச் சொல்ல அது குறித்த சிந்தனையும் ஆளுமையும் கொண்டவர்கள் அவசியம். மலேசியாவில் நேர் எதிராக வயிற்றெரிச்சலின் வசைகளும் அவதூறுகளும் விமர்சனங்கள் என நம்பப்படுவதால் மிகக் கவனமாக அதை ஓர் அறிவார்ந்த தளத்தில் இருந்தே பெற வேண்டியுள்ளது.

ஜெயமோகனை சந்திக்கும் ஒவ்வொரு தருணமும் நான் மிகச்சிறியவனாகி விடுகிறேன். திரண்ட0000 பாராட்டுகளால் வேர்விட்டிருக்கும் அகங்காரம் அழுகிப் புதைகின்றன. தமிழ் நவீன இலக்கியத்தின் மகத்தான ஆச்சரியத்தின் முன் அதுவரை வல்லினம் வழி செய்த பணிகள் எளிமையாகி புதிய செயல்திட்டம் உருவாக்கும் புத்துணர்ச்சி எழும்.  தன்னருகில் மிகப்பிரமாண்டமாக வளர்ந்து நிழல் கொடுக்கும் விருட்சத்தை மீறி வளர போதுமான பேராசை ஒரு செடிக்குப் பிறப்பது போல.  புனைவிலக்கியத்தில் பெரும் பங்களிப்பு, ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கியத்தின் போக்குகளை வகுத்துத் தொகுக்கும் விமர்சன அறிவு, அவ்வறிவைப் பிறர் பெறச்செய்ய உருவாக்கும் ‘ஊட்டி முகாம்’ போன்ற முயற்சிகள், முந்தைய இலக்கியச் சாதனையாளர்களைக் கௌரவித்து முன்னிறுத்தும் விஷ்ணுபுரம் விருது முயற்சி, விரிந்த உரையாடலுக்கான கள அமைப்பு, இவையெதற்கும் தனக்குச் சம்பந்தம் இல்லை என்பது போன்ற தோழமை குணம்; எளிமை – இது ஜெயமோகன். ஒரு மாபெரும் பிரமாண்டத்தின் முன் வணங்கி நிற்பதும், அதை முன்முடிவுகளற்று அறிய முயல்வதும், அதனோடு உடன்படுவதும் முரண்படுவதும், பின்னர் அதிலிருந்து மாறுபட்ட தனி பாதைகளை உருவாக்குவதுமே கலை ஊக்கம் குன்றாமல் செயல்படும் வழி. ஆன்மிகத்திற்கான வழியும் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

நான் ஜெயமோகனிடம் அவரின் சமீப சிறுகதைகளான ரயிலில், பிரதமன், ஆனந்தியின் அப்பா பற்றி பேச ஆரம்பித்தேன்.  ‘ரயிலில்’ சிறுகதை பற்றி பேசும்போது இரு சிறுகதைகள் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன. முதலாவது கந்தர்வனின் ‘சாசனம்’.

gandharvanகதைசொல்லி தன் அப்பாவைப்பற்றியும் தாத்தாவைப் பற்றியும் சொல்வதாக அமையும் எளிய நடை கொண்ட கதை சாசனம். அப்பாவுக்கு பல கிராமங்களில் நிலம் இருந்தாலும் மனதுக்கு நெருக்கமானது ஒரு புளியமரம்தான். கதைசொல்லி தொடக்கத்திலேயே தொலைவில் நின்று பார்த்தால் அம்மரம் குன்றுபோலவும் அருகில் சென்று பார்த்தால் தோப்புப்போலவும் இருக்கும் என விவரித்திருப்பார். அம்மரம் உட்பட பல நிலங்களை மகாராஜாவின் நாக்குக்கு ருசியாகச் சமைத்துப் போட்டு தாத்தா சன்மானமாகப் பெற்றது. சாசனங்கள் எல்லாம் இரும்புப் பெட்டியில் இருந்தன. அப்பா அம்மரத்திலிருந்து கிடைக்கும் புளியைக் ‘கொறட்டுப் புளி’ என்று குறிப்பிடுவார். அதன் அர்த்தம் குறவர்வீட்டுப் புளி என்பதாகும்.  அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு கிழவி, மகளோடு வாழ்ந்து வந்தாள். குறவர் கூட்டத்திலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டு தாத்தா ஜாடையில் இருந்தாள் கிழவியின் மகள்.

ஒவ்வொரு வருடமும் அப்பா ஆட்களைக் கூட்டிக் கொண்டு புளி உலுக்கப் போவார். உதிரும் புளி ஒரு ஆண்டுக்கு வரும். உலுக்கும் நிகழ்வுக்கு முன் கிழவி மரத்தைத் தொட்டு வணங்கி அழுவாள். உலுக்கி முடித்து மூட்டைகள் கட்டியப்பின் அப்பா, காலால் கொஞ்சம் புளி ஒதுக்குவார். அதை அந்தக் கிழவி எடுத்துக் கொள்வாள். அப்போதும் அவள் அழுவாள். இதெல்லாம் அப்பாவுக்குச் சங்கடமாகவே இருக்கும். சாசனத்தில் அந்தப் புளியமரம் யாருக்குச் சொந்தமானது எனப் பார்க்க வேண்டும் எனத் தோன்றினாலும் அதைத் தள்ளிப் போடுகிறார். ஒருவேளை சாசனத்தில் தனக்குச் சொந்தம் இல்லை என இருந்தாலும் ஏதும் ஏமாற்று வேலை செய்து தனதாக்கிக்கொள்ள முடியும் அவரால். என்றாலும் வெளியில் தெரிந்தால் அதுவரை அது தன்னுடையது இல்லை என்ற உண்மை வெளிபட்டுவிடும் எனத் தயங்குகிறார்.

மறுவருடமே சூழல் மாறுகிறது. மரத்துக்குக் கீழே சுத்தப்படுத்தப்படாத பன்றிக் கழிவுகளுடன் கிழவி கயிற்றுக் கட்டில் போட்டு அமர்ந்திருந்தாள். குறவர்கள் யாரும் அன்று வேலைக்குப் போகாமல் இருக்கின்றனர்.

அப்பா கடுமையாக ‘‘என்ன இதெல்லாம்?” என்கிறார்.

தாத்தா ஜாடையில் இருந்த அந்தப் பெண் ‘‘இனிமேற்பட்டு இந்த மரத்தை நான்தான் உலுக்குவேன். இதிலே எனக்கும் பாத்தியதை உண்டு…” என்று பேசத் தொடங்கியதும் அப்பா அவளது பேச்சை நிறுத்துகிறாள். கடைசிவரை அப்பா சாசனங்களை ஆராயவும் இல்லை.

கந்தர்வன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்ததால் இக்கதையை எளிமைப்படுத்திப்புரிந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. எளிய மக்களை எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. அவர்கள் தங்களே போராடி உரிமையை மீட்பர் எனச் சொல்லிவிட்டு செல்லலாம்தான். ஆனால் அவரது பல சிறுகதைப் போலவும் இது அபாரமான வாசிப்பனுபவம் கொடுக்கும் கதை. அப்பாவும் பாட்டியும் மாறி மாறி விளையாடும் ஒரு விளையாட்டுதான் இக்கதை. இக்கதையின் உச்சம் முடிவில் இல்லை. கதை முழுவதும் அப்பாவும் பாட்டியும் செய்யும் பாவனையில் உள்ளது. ஒரு மன்னனுக்குச் செய்வதுபோல அப்பா நடந்து செல்கையில் பாதையில் இருக்கும் குப்பைகளைச் சுத்தம் செய்து வழியனுப்பும் பாட்டிக்குத் தெரியும் தன் மகள் யாருக்குப் பிறந்தவள் என்பதும் அந்த மரம் யாருக்குச் சொந்தம் என்பதும் கால்களால் புளியை ஒதுக்கி அழுதுகொண்டிருக்கும் கிழவிக்குப் பிச்சை போல போட்டுவிட்டுச் செல்லும் அப்பாவுக்கும் சாசனத்தில் என்ன எழுதியிருக்கக் கூடும் என உணர்ந்தே இருப்பார். ஆனால் எது இவர்களை இந்தப் பாவனையைச் சுமக்க வைக்கிறது. அந்தப் பொருள் தெரியாத, விளக்க முடியாத மர்மத்தில்தான் கலை இருக்கிறது.

அடுத்த கதை, பவா செல்லதுரையின் வலி. தன்னை மிரட்டி வீட்டில் உள்ள நகைகளையும்பவா கதை பணத்தையும் திருடிவிட்டு வெளியே போகும் திருடனை மாட்டிவிட நினைக்கும் ரகோத்மனின் (வீட்டுக்காரர்) விரல்கள் கதவிடுக்கில் திருடனால் நசுக்கப்படுகின்றன. திருடர்களின் வாசம் அறிந்த போலிஸ்காரர் மோப்பம் பிடித்து நால்வரில் இருவரை கைது செய்கிறார். கைது செய்யப்பட்ட திருடனை அடையாளம் காட்ட ரகோத்மன் அழைக்கப்படுகிறார்.  ரகோத்மன் முற்றிலும் முரணாக திருடனின் கண்களை எதிர்கொள்ள தயங்குகிறார். திருடன் எவ்வித பொய்யுமற்ற பார்வையுடன் வீட்டுக்காரரை ஏறிடுகிறான். திருடன் தன் வீட்டில் திருட வந்தபோது அவனை முழுமையாகப் பார்த்த அவரால் இப்போது அவன் கண்களைச் சந்திக்க முடியவில்லை. தன் எதிராளியை வீழ்த்த எல்லா சாத்தியங்கள் இருந்தும் அதை செய்யாமல் ஒருவன் விட்டு விலகும் கணத்தை எந்தத் தத்துவத்தின் மூலமும் விளக்க முடியாது. அது நம்மை எப்போதும் கண்காணிக்கும் அறம். அதை மீறும்போதுதான் நாம் உலகத்திடமிருந்து நம் கண்களை விலக்கிக் கொள்கிறோம். ரகோத்மன் திருடர்கள் அவர்களில்லை எனக்கூறி அவர்களை விடுவிக்கிறார். அது திருடர்களுக்கான விடுதலை மட்டுமல்ல.

இவ்விரு கதைகளின் இரு வேறு ஜீவன்கள் ‘ரயிலில்’ சிறுகதையில் உள்ளன. முதலாவது நீண்ட காலமாய் தன்னுடையதாகப் பாவித்த ஒன்றை இழக்க முடியாத உரிமை கோரலும் அதில் இயல்பாக ஏறி அமரும் வன்மமும். ஆம்! உரிமையாளனைவிட அபகரிக்க நினைப்பவன் எப்போதுமே ஒரு அடியை முன்நோக்கி அவசரமாகவே வைக்கிறான். உடமையாகிவிட்ட ஒன்று தனதல்ல என உள்ளூர அறிபவனிடம் எப்போதும் வன்மம் தொற்றியுள்ளது. திமிருடனேயே அவன் அதை தக்க வைக்க முயல்கிறான். திமிர் பொய்மைக்கு துணைநிற்கும் தற்காலிக பாவனை. அடுத்தது உரிமையும் நீதியும் உள்ள மறுதரப்பினுள் ஏற்படும் தடுமாற்றமும் அவசரமும். ஆனால் ‘ரயிலில்’ சிறுகதை இன்னும் பல உள்ளடுக்குகளைக் கொண்டது.

சட்டென இலக்கியத்தில் இருந்து பேச்சு துண்டித்து சர்க்கார் விவகாரம் பற்றி சென்றது. சர்ச்சைகள் அவரை அந்தரங்கமாக என்னச்செய்கிறது எனக்கேட்டேன். ஒரு முக பாவனையால் அதற்கான பதிலைச் சொன்னார். கண்விழித்து மீம்ஸ் உருவாக்கும், கிராப்பிக் செய்யும், வசைகளை எழுதிக்குவிக்கும் ஒருவர் ஜெயமோகனின் அந்தப் பாவனைக் கண்டால் தங்கள் உழைப்பெல்லாம் பாழானதை எண்ணி நொந்துபோவார்கள். தொடர்ந்த பேச்சு மீண்டும் இலக்கியத்தில் நுழைந்தது. சிறுகதையின் வடிவம் என சுந்தரராமசாமி போன்ற நவீன எழுத்தாளர்கள் கடைப்பிடித்த கட்டமைப்பு இன்று எவ்வாறு மாறியுள்ளன என விளக்கினார். வீட்டில் அனைவருமே ஜெயமோகனின் பேச்சை ரசித்துக்கேட்டனர். அப்படியா? என இடையிடையே ஆச்சரியம் அடைந்தனர். எத்தனை வருடங்கள் பேசிக்கொண்டிருந்தாலும் புதிதாய் ஒன்றை சொல்லும் திறன் ஜெயமோகனின் பேச்சை ரசிக்கும் வாசகர்கள் உருவாகக் காரணமாக இருக்கலாம் எனத் தோன்றியது. எப்போதும் அவரிடம் புதிய உவமைகள் வருகின்றன. மூன்றாவது கோணம் என எப்போதுமே ஒன்றை  வைத்துள்ளார்.

வாகனமோட்டியிடம் மூன்று மணிநேரத்தில் வருவதாகச் சொல்லியிருந்தேன். மசாஜ் செய்திருந்ததால் எண்ணெய் பிசுக்கு அசௌகரியமாக இருந்தது. நேரம் நெருங்கியதும் புறப்படும்போது அக்கா சாப்பிட்டுச்செல்லச் சொன்னார். இடியப்பத்துடன் கோழிக்குழம்பு. சிகிச்சை தொடங்கிவிட்டதால் நான் அசைவம் உண்ணக்கூடாது. இலக்கியத்தில் அனைத்திற்கும் இடமுண்டு என்பதால் திருப்தியாகச் சாப்பிட்டேன். அக்கா என்னிடம் கேட்டார், “மலேசியாவில புதிய தலைமுறை எழுத்தாளர்கள் யாரும் வரலையா?” ஜெயமோகன் இதுபோன்ற சந்தர்ப்பங்களை விடுவதே இல்லை. “யாரும் வராததாலதான் நவீனே கஷ்டப்பட்டு அந்த இடத்த ரொம்ப காலமா தக்க வச்சிருக்கிறாரு…” என்றார். அமைதியாக சிரித்துக்கொண்டால் கிண்டலில் இருந்து தப்பிக்கலாம் என்பதால் இடியப்பத்தின் சிக்கலைக் களைவதில் தீவிரமானேன்.

ஜெயமோகன் வீட்டைப் படங்களில் பார்த்ததுண்டு. புத்தக அலமாரியில் காந்தி மற்றும் அசோகமித்திரன் படங்கள் அருகருகே இருக்கும். புறப்படும்போது அவை எங்கே என்றேன். மேலே உள்ள புத்தக அலமாரியில் உள்ளது என்றார். அப்படம் நேர்த்தியாகக் கூட நிறுத்தப்பட்டிருக்காது. ஆனால் அது ஒரு அடையாளம். அவ்வாறான சின்னச் சின்ன அடையாளங்கள் வழிதான் ஜெயமோகனைத் தொகுத்துக்கொள்ள முடிகிறது. இடது பக்க புத்தக அலமாரியில் ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ இருந்தது.

அது நல்ல விடைபெறலுக்கான மகிழ்ச்சியைக் கொடுத்தது.

காரில் ஏறியதும் ‘ரயிலில்’ சிறுகதை குறித்து இன்னும் பேசியிருக்கலாம் என நினைத்துக்கொண்டேன். மிக எளிதாக அக்கதை பலரையும் கவரும். யாரோ ஒருவர் இன்னொருவரால் ஏமாற்றப்பட்டவராகவும் ஏமாறுபவராகவும் இருந்தே வருகின்றனர். மேலோட்டமாக அது அவர்களுடன் பொருந்துவதால் அக்கதையை தனதாக்கிக்கொள்வர்.

ஆனால் ‘ரயிலில்’ சிறுகதை அதுவல்ல…

தொடரும்

(Visited 1,029 times, 1 visits today)