மனசலாயோ 3: ரயிலில்

train2திரும்பும்போது ஜெயமோகனின் மூன்று கதைகள் குறித்தும் நினைத்துக்கொண்டேன். கதை குறித்து உரையாடியவற்றைத் தொகுத்துப்பார்த்தேன். விடுபட்டவற்றை இணைத்துக்கொண்டேன். மீண்டும் அவற்றைப் படித்துப்பார்க்க தோன்றியது. தொலைபேசியில் இணைய இணைப்பில்லை. சில இடங்களை சில வரிகளை மட்டும் நினைவில் இருந்து மீட்டுப்பார்த்தேன்.

பிரதமன் சிறுகதையில் “சமையல்ல கணக்குதான் ருசி. ஆனா கணக்கத்தாண்டுத ஒண்ணுண்டு அதாக்கும் தெய்வம். சாப்பாட்டிலே தெய்வம் வரணும்… அந்த ருசி வேற” என்ற வரி சற்று முன் சிறுகதை வடிவத்தைப் பற்றி ஜெயமோகன் பேசியதுபோலவே இருந்தது. வடிவம் மட்டும் கலையல்ல. குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தின் வடிவத்தில் பிடிவாதமாக இருப்பவர்களாக அதன் கட்டற்ற திறப்புகளை வாசிப்பில்கூட அடைய முடியாததை நான் பார்த்ததுண்டு.  மாறாக, அதன் வடிவத்தை சிலாகிக்கின்றனர். வெகு சுமாரான பாயாசத்தில் சேமியா மிதப்பதை ரசிப்பதுபோல எளிய முரண், முறுக்கிய திருப்பம், மெல்லதிர்ச்சி இவையே வாசிப்பு அனுபவமாகச் சுருங்கிவிடுவதுண்டு. ஜெயமோகனிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் என்னால் எப்போதும் நேர்ப்பேச்சில் தடுமாற்றம் இல்லாமல் பேச முடிந்ததில்லை. குறிப்பாக இலக்கியம் பேசும்போது ஒன்றை சொல்லி முடிப்பதற்குள் மற்றொன்று மூளையில் மோதும். அதை சொல்வதற்குள் மற்றுமொன்று. இறுதியில் மனத்தடுமாற்றம் நாக்கில் வந்து விடியும்.

ஜெயமோகனின் சிறுகதைகள் ஒரு மையத்தில் நின்று பேசுபவை அல்ல. நுணுகி வாசிக்காமல் போனால் அதன் ரகசிய இடைவெளிகள் அகப்படாது. ‘ரயிலில்’ சிறுகதை யாரை மையப்படுத்துகிறது. யாரையும் அல்ல. அல்லது அதில் வரும் இருவரையும். சாமிநாதனுக்கு அவனுக்கென சில நியாயங்கள் உள்ளது போலவே முத்துசாமிக்கும் தன் தரப்பு நியாயங்கள் உள்ளன.  இருவரும் பரம்பரை பகையாளிகள். ஆனால் கடந்துவிட்ட காலம் அவர்களை மீண்டும் உரையாடலுக்குத் தோதாக்குகிறது.

தன் தாத்தாவின் வழி பரம்பரை சொத்தான நிலத்துக்கும் அதில் உள்ள மூன்றுமாடி கட்டடத்துக்கும் உரிமைக் கோரி போராடும் சுவாமிநாதன் மற்றும் அவர் தந்தை ஒருபக்கம், பன்னிரெண்டு ஆண்டுகளாய் வாடகை கட்டாமல் அனுபவித்து வந்த சொத்தை விட்டுத்தர முடியாத முத்துசாமியும் அவர் அப்பாவும் மறுபக்கம். சுவாமிநாதனின் அப்பா பரம சாது. வேலையிடத்தில் மேனேஜர் எவ்வளவு கேவலப்படுத்தினாலும் அடங்கிப்போகும் மனிதர். கூன் வளைந்து வசைகளை வாங்கிக்கொள்ளும் குணம் கொண்டவராகவே கதையில் வர்ணிக்கப்படுகிறார். இவருக்கு எதிராகத்தான் வியாபாரத்தில் சாமர்த்தியமே அறமென வழக்கை எதிர்கொள்ள முத்துசாமி அப்பா தயாராகிறார். கதையின் தொடக்கத்தில் இருவருக்கும் அவரவருக்கான நியாயங்கள் உள்ளன. சுவாமிநாதனின் அப்பா உரிமையின் அடிப்படையில் தனது நியாயத்தை உருவாக்குகிறார் என்றால்; முத்துசாமியின் அப்பா, அந்தச் சொத்து நியாயமான முறையில் சம்பாதிக்கப்படவில்லை என்றும் டீத்தூளில் கலப்படம் செய்தே சுவாமிநாதனின் தாத்தா அதனைச் சேர்த்தார் என்றும் மற்றுமொரு நியாயத்தைக் கட்டமைக்கிறார். அநீதியான முறையில் சேர்க்கப்பட்ட சொத்து தந்திரம் மூலம் அபகரிக்கப்படலாம் என்பது அவர் நியாயம். அந்நியாயம் நீதிமன்றத்தில் மெல்ல வலுவிழக்கிறது.

சுவாமிநாதன் அப்பாவின் காலத்தில் தொடங்கிய வழக்கை அவர் மரணத்துக்குப் பின் சுவாமிநாதனும் தொடர்ந்து வெல்கிறார். தன் வருமானம் அனைத்தையும் தொலைத்து தனக்குச் சாதகமாக வந்திருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்புடன் வந்து சொத்தை கேட்டும் முத்துசாமியால் மறுக்கப்படுகிறது. தன் அப்பாவை வேலைக்காரர்களை விட்டு ஒருகாலத்தில் அடித்து விரட்டிய முத்துசாமி அப்பா இப்போது காவலர்களையும் லஞ்சத்தால் முடக்குகிறார். சட்டம் தனக்குச் சாதகமாகும் என்ற நம்பிக்கை விட்டப்பின் முத்துசாமியின் அப்பா அகங்காரத்தை கையில் எடுக்கிறார். அறத்தை நம்பிய சுவாமிநாதனிடம் இருக்கும் அச்சம் அவரை அடுத்த நிலைக்குத் தள்ளுகிறது.

உண்மையில் வீரத்தைவிட அச்சமே கொடூரமான செயல்களைச் செய்யத் தூண்டும். நன்கு கவனித்தால் பயந்தவனே ஒரு சண்டையில் முதலில் தாக்கத் தொடங்குகிறான். வீரத்தின் நிதானம் அவனை அச்சம் கொள்ள வைக்கும். எதிராளி தன்னை அவ்வளவு எளிதில் வீழ்த்துவான் என அவசர அவசரமாக அவனுக்கெதிரான எல்லா ஆயுதங்களையும் பிரயோகிப்பான். அதில் ஏதாவதொன்று அவனைப் பலவீனப்படுத்தும் என நம்புவான். நீதி தன் பக்கம் இருந்தாலும் சுவாமிநாதனுக்கு முத்துசாமி அகங்காரம் பதற்றம் கொள்ள வைக்கிறது. அவனே முதலில் தாக்கத் தொடங்குகிறான். ஆனால் மறைமுகமாக. ஊரறிந்த கேடிக்கு நிலத்தையும் கட்டடத்தையும் அறுபது லட்சத்துக்கு விற்கிறார். அவருக்குத் தெரியும் முத்துசாமி குடும்பத்துக்குக் கேடியால் என்ன நிகழுமென. அவர் ஆழ்மனது அறியும் அவர் குடும்பம் அனுபவிக்கப்போகும் கொடூர விளைவுகளை. ரத்த வெறிகொண்ட வளர்ப்பு நாயை அதன் எஜமானன் நிதானமாகத் திறந்துவிடுவதுபோல அவர் வன்மத்தை திறந்துவிடுகிறார்.

வீட்டை விற்ற பணத்தில்தான் சாமிநாதன் தன் இரண்டு பெண்களை நன்றாக வாழவைத்தார் என்றால் அந்த வீட்டை விற்கும் நடவடிக்கையின்போதே முத்துசாமி தன் இரண்டு பெண்களின் வாழ்க்கையைத் தொலைக்கிறார். சாமிநாதனின் அப்பா முத்துசாமியில் அப்பாவின் காலில் மட்டும் விழுந்து கெஞ்சினார்; முத்துசாமி, கட்டடத்தில் தங்கியுள்ளவர்கள் அனைவரது காலிலும் விழுந்து வெளியேறச் சொல்கிறார். வெளியேறாமல் கடத்தப்பட்ட மகளைக் காப்பாற்ற முடியாது. சாமிநாதனிடம் சாவகாசம் காட்டிய காவல்துறை இப்போது முத்துசாமியிடம் காட்டுகிறது. சிறிய மீனைப் பெரிய மீன் விழுங்க அந்தப் பெரிய மீனை மற்றுமொரு பெரிய மீன் விழுங்குகிறது. நாற்பது ஆண்களால் கப்பலில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான முத்துசாமியின் இரு பெண்களும் மனநலம் பாதிக்கப்பட்டு; அதில் ஒருத்தி சாகிறாள். மற்றுமொரு பெண்ணை வடநாட்டில் வேலை செய்யும் இராணுவத்தானுக்கு உண்மையை மறைத்து திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முத்துசாமி. சொல்லாமல் அப்படி செய்வது தவறென சாமிநாதன் கூறவும் விசாரித்து கல்யாணம் செய்யவேண்டியது அவன் கடமை; இதில் தனது தவறு ஒன்றும் இல்லை என்கிறார்.

மரபான வாசிப்புள்ள ஒருவன் இக்கதையில் நீதி வெல்லும்; பாவிகள் நொந்து சாவார்கள் எனப் புரிந்துகொள்ளலாம். ஆனால் இக்கதை எண்ணற்ற அடுக்குகளைக் கொண்டுள்ளது. என் வாசிப்பில் இது ஜெயமோகனின் அபாரமான சிறுகதைகளில் ஒன்று. இரு எதிரெதிர் வாழ்க்கை. எது நீதி? எது அநீதி? எதற்கு எவ்வளவு தண்டனை? இழப்புகளில் எந்த இழப்பு பெரியது?  ஒரு செயலுக்கான பாவ புண்ணிய கணக்கு அந்தச் செயலில் மட்டும் உள்ளதா? அல்லது அது தொடர்ந்து விளைவித்துக்கொண்டே போகும் செயல்களின் தொடர்ச்சியில் உள்ளதா?

கதையின் தொடக்கத்தில் முத்துசாமியின் அப்பாவிடம் அவன் அம்மா தன் கணவரைக் train3கடிந்துகொள்கிறார். அதற்கு முத்துசாமி தான் ஆள் வைத்து அடித்துப்பிடுங்கவில்லை என்றும் சட்டப்படி செல்கிறேன் என்றும் சொல்கிறார். அவரளவில் அடித்துப்பிடுங்குவதுதான் மகா பாவம். ஆனால் அவருக்கு அதுவே நடக்கிறது. அதில் சாமிநாதனும் ஒரு அங்கம். அவரைப் பொறுத்தவரை மொத்த அபகரிப்பு முயற்சியும் தனது வணிகத்தில் ஒரு பகுதி. நீதிமன்றம் தனக்கு எதிராக தீர்ப்பு கொடுத்தாலும் தான் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காததற்கு மேலும் ஒரு வழக்குப் பதியச் சொல்கிறார். இது மொத்தமும் அவரளவில் தன் வணிகச் சாமர்த்தியங்கள். இந்தச் சாமர்த்தியத்தைதான் முத்துசாமி மகளின் திருமணத்திலும் காட்டுகிறார். இருக்கும் சொத்தை விற்று இராணுவத்தானுக்குக் கொடுப்பதன் மூலமாக ஒரு பொய்யினால் விளையும் நட்டத்தை சரிசெய்வதாகவே நினைக்கிறார். உண்மையில் தனது மூத்த மகளை ஒரு விடுதியில் சேர்க்கும்போதே அங்கு விட்டால் ஆறு மாதத்தில் மரணம் என தெரிந்தே விடுகிறார். இரண்டாவது மகளை அவ்வாறு அனுப்புவதும் ஒரு கொலையை நோக்கிதான். கொஞ்சம் நாசுக்காக நடக்கும் கொலை. அவ்வளவு பதற்றத்தை உருவாக்காத கொலை. அவன் மனதில் தானும் தன் தகப்பனும் செய்த எச்செயலுக்குமே குற்ற உணர்ச்சி இல்லை. இதனால் இது நிகழ்ந்தது என்பதில் தெளிவாகவே இருக்கிறார். சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஆள் வைத்து அடித்துப்பிடுங்க காரணமாக இருந்த சாமிநாதன்தான் குற்றவாளி.

சாமிநாதனின் எல்லா செயல்களிலும் இன்னொரு முகம் உள்ளது. அது அவருக்குள் இயங்கும் ரகசிய முகம். அவரது வன்மம் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாதது. பாவனைகள் நிறைந்தது. குரூரத்தை கண்ணீராலும் அப்பாவித்தனத்தாலும் மறைப்பது. செயலின் தொடர்ச்சிகளின் பாவபுண்ணியங்கள் தன்னை வந்து சேராது என அடுத்தடுத்தச் சந்தர்ப்பங்களுக்குள் தாவிச்செல்லக்கூடியது. அது ஊர் கேடியிடம் நிலத்தை விற்கும்போது முகம் காட்டுகிறது. நாற்பது ஆண்கள் தன் மகளைச் சிதைத்த வலியைச் சொல்லி துடித்து எழுந்த முத்துசாமியின் தலையில் அடிபட்டு விழும்போது அருகில் இருக்கும் மார்வாடியைப் பார்த்து சாமிநாதன் புன்னகைக்கும்போது அந்த வன்மமும் சிரிக்கிறது. முத்துசாமியின் அவ்வளவு அழிவுகளையும் கேட்டப்பின்பும் ‘எதை செஞ்சாலும் சொந்த சொத்தில் செய்யனும் அடுத்தவன் சொத்தில் இல்லை’ எனும்போது முழுக்கவே அவரின் கோர உருவம் வெளிபட்டு பின் தன்னைத்தானே மூடிக்கொள்கிறது.

அவரால் மனைவி கொடுத்த இட்டிலியைச் சாப்பிட முடியாமல் போகிறது. முத்துசாமி எந்தத் தடையும் இல்லாமல் சாப்பிடுகிறார். இறுதியில் முத்துசாமி ஒரு இளைஞனை ஏமாற்றி மகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் என்று தெரிந்தவுடன் மீண்டும் இட்டிலியைத் தடையில்லாமல் சாப்பிட ஆரம்பிக்கிறார்.

அவர் சாப்பிட காரணம் தன்னால் ஒரு குடும்பத்தில் நிகழ்ந்துவிட்ட எல்லா கொடுமைக்கும் ஒரு சின்ன வெளிச்சம் கிடைத்ததால் இருக்கலாம்; தன்னைப் போல உலகம் பாவிகளால் நிறைந்தது என்ற எதார்த்தத்தால் இருக்கலாம்; தப்பிப்பிழைத்த முத்துசாமியின் இளைய மகளும் சீக்கிரம் செத்தொழிவாள் என்பதாலும் இருக்கலாம். அதற்கு பதில் ஜெயமோகனுக்குக் கூட தெரியாதுதான். கதைகளில் உலாவும் மனிதர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என யாருக்குமே தெரியப்போவதில்லை. காரணம் அவர்கள்தான் பல அடுக்குகள் கொண்ட மனதுடன் நம்முடனும் நமக்குள்ளும் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

வாகனமோட்டியிடம் சாயா குடிக்கலாமா என்றேன். குடிக்கலாம் என்றார். வண்டியை நிறுத்தி என்னை மட்டும் அனுப்பினார். பல வறுப்புறுத்தல்களுக்குப் பின் உடன் வந்தார். டீக்கடை பக்கத்தில் ஒரு உணவகம் இருந்தது. கொஞ்ச நேரம் பார்த்தபோது, “டாக்டர் வெளியே எங்கயும் சாப்பிடக்கூடாது என கண்டிஷனா சொல்லிட்டார்” என்றார். நான் சற்றுமுன் சாப்பிட்ட கோழிக்குழம்பை நினைத்துக்கொண்டேன். இங்கு பிரதமன் கிடைக்குமா என்றேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவர் சிகிச்சை நிலையத்தில் இறுதிநாள் பிரதமனுடன் டாக்டர் விருந்து வைப்பார் என்றார். ஒரு மலையாளியிடம் அந்த வார்த்தையைச் சொல்லிப்பார்க்க ஆசை வந்ததால் அப்படிச் சொன்னேன். நான் தமிழில் பிரதமன் எனும் தலைப்பில் கதை எழுதப்பட்டுள்ளது என்றேன். அதை தமிழ்நாட்டில் பாயாசம் என்பார்கள் என்றவர், அடை பிரதமன் பிரமாதமாக இருக்கும் என்றார்.

நான் பிரதமனில் வரும் ஆசான் பற்றி நினைக்கத் தொடங்கினேன்.

ரயிலில் சிறுகதை

தொடரும்

(Visited 873 times, 1 visits today)