மனசலாயோ 4: பிரதமன்

Ada-Pradhaman-Creativity (படைப்பாற்றல்) மற்றும் Crafting skills (கைவினை திறன்) ஆகியவற்றுக்கான வித்தியாசம் என்ன?

இதன் வித்தியாசம் தெரியாமல்தான் நமது கல்விக்கூடங்கள் படைப்பாற்றலை வளர்ப்பதாகச் சொல்லி இயங்குகின்றன. இந்த வித்தியாசம் தெரியாமல்தான் நமது கலை இலக்கிய உலகமும் படைப்புத்திறன் எனச் சொல்லிக்கொண்டு இயங்குகிறது. பயன்படுத்தாத பாட்டில்களைக் கொண்டு சிறிய பூச்சாடிகளை உருவாக்குவது, மணிகளைக் கொண்டு ஓவியத்தை அலங்கரிப்பது, அலுமினிய டின்களில் குருவிகள் செய்வது எனப் பள்ளிகளில் போதிக்கப்படுவதையும் அதை திறமையாகச் செய்யும் மாணவனையும் படைப்பாளன் எனச் சொல்ல முடியாது. அவர்கள் கைவினைத்திறன் பெற்றவர்கள் எனலாம்.

முகநூலில் ஆச்சரியமாகச் சில காட்சிகள் பகிரப்படுவதைப் பார்ப்பதுண்டு. சாலை ஓரங்களில் மூன்று நிமிடங்களுக்குள் இயற்கை காட்சிகளை சில சாயங்களைக் கொண்டு உருவாக்கும் வல்லமை கொண்டவர்களைப் பலரும் பாராட்டுவார்கள்; வியப்பார்கள். அவர்களால் நாள் முழுக்க அவ்வாறு செய்ய முடியும். ஆனால் அவர்கள் ஓவியர்கள் அல்ல; அந்தத் துறையில் தேறிய கைவினை த்திறனாளிகள்.

அண்மையில் இரு படங்களைப் பார்த்தேன். முதலாவது பரியேறும் பெருமாள். அடுத்தது 2.0. இதில் மாரி செல்வராஜ் படைப்பாளி; சங்கர் கைவினைத்திறன் பெற்றவர். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? படைப்பாளி வாழ்வின் அனுபவத்திலிருந்து  அரூபமாகத் திரண்டு உருவெடுக்கும்  தான் பெற்ற தனக்கான தனி உண்மையை/ கேள்வியை/ சந்தேகத்தை  சத்தம், ஒளி, வண்ணம், மொழி போன்ற மூலங்களைப் பயன்படுத்தி வாசகனுக்கு / ரசிகனுக்கு அவ்வரூபத்தைக் கடத்துகிறான்.  கைவினைக் கலைஞன் இந்த மூலங்களைக் கொண்டு அனைவருக்கும் பரிட்சயமான பொது உண்மையை/ பொது ரசனையை/ அறுதியிட்ட நீதியை/ திட்டவட்டமான கட்டமைப்பை  வேறு வகையில் மறுநிர்மாணிப்பு செய்துபார்க்கிறான்.

பிரதமன் சிறுகதையில் வரும் ஆசான் ஒரு அசல் கலைஞர். அவரைச் சுற்றி உள்ளவர்கள் கைவினைத்திறன் உள்ளவர்கள். அவர்களால் கறிகாய்களைத் திறம்பட வெட்டி வைக்க முடியும், ஒரே முட்டில் தேங்காயை உடைக்க முடியும், கையால் வாய் பொத்தி குரவையோசை எழுப்ப முடியும், தேங்காய்களை சோர்வாகாமல் துருவ முடியும், குழம்புகளை இறக்குவதில் பக்குவம் காட்ட முடியும், பிரதமனைக் கிண்டவும் முடியும். ஆனால் உணவில் தெய்வம் வந்து அமரும் கணத்தை பிரதமனால் மட்டுமே உருவாக்க முடியும். அது கலைஞனில் கைகள். அங்கிருந்து மட்டுமே அரூபமான சுவை பிறக்கிறது.

ஆனால் அந்தக் கலைஞன் தன் ஒளியை முன்னாள் காதலியிடம் மறைக்கிறான். அவளுக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். ஓர் ஓவியக்கூடத்தில் இருக்கும் ஓவியன் கொஞ்ச நேரம் வீட்டுக்கு வந்து சாயம் அடிப்பதுபோன்ற உரையாடல் அவர்களுக்குள் நடக்கிறது. ‘வண்ணம் அடிக்கிறது ஒன்னும் பிரமாதம்  இல்ல; எல்லாமே ஒவ்வொரு வகை வண்ணம்; நீ உன் வீட்டில் அடிக்கப்பட்ட வண்ணத்துக்கு கண்களைப் பழக்கிக்க’ என்பதாக பேசுகிறார். அனைத்தையும் மறந்து வாழப்பழகு எனக் காதலியிடம் சொல்லும் இடத்தில் அவர் எளிய மனிதனாக வந்து போகிறார். சுவை ஒன்றும் பெரிய விசயமில்ல எனும் இந்த ஆசான்தான் பிரதமனுக்கான அடையை தானே மெனக்கெட்டு செய்கிறார்.

‘ஆசான்’ எனக்கு Cinema Paradiso திரைப்படத்தில் வரும் சல்வடோரை (Salvatore) indexநினைவுப்படுத்திக்கொண்டே இருந்தார். இத்தாலியின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனராக விளங்கும் சல்வடோர், தன் ஊரான ரோம் நகரத்துக்கு வருகிறார். சிறுவனாக இருக்கும்போது அவர் செல்லப்பெயர் டோடோ (Toto). பல வருடங்களுக்குப் பின் திரைத்துறையில் வென்றவராக அவர் ஊர் வரக்காரணம் அல்பிரடோவின் (Alfredo) மரணம். அவர் அவ்வூரின் திரையரங்க பணியாளராக இருந்தவர். ஊருக்கு வந்ததும் சல்வடோருக்குப் பழைய நினைவுகள் வருகின்றன. அவ்வூரில் திரைப்படம் தேவாலயத்தில் பாதிரியாரால் முன் திரையிடப்பட்டு அவர் சொல்லும் காட்சிகள் சென்சார் செய்யப்பட்டப் பின்னரே திரைக்கு வரும். அவை பெரும்பாலும் காதலின் நெருக்கக்காட்சிகளாக இருக்கும். திரைப்படம் ஒளிபரப்பாகும் தொழில்நுட்பத்தின் மேல் டோடோவுக்கு பெரும் ஈர்ப்பு. அதை ஒளிபரப்பும் அல்பிரடோவின் மீதும் நெருக்கம் அதிகம் ஏற்பட்டிருந்தது. எல்லாவற்றுக்கும்  மேலாக  எலனா (Elena) எனும் பெண் மீதும் காதல் வருகிறது.

அவள் பணக்காரப்பெண். இருவருக்கும் காதல் அரும்புகிறது. தகுதி வித்தியாசம் இருப்பதால் குடும்பத்தில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என ஓடிப்போக நினைக்கிறார்கள். ஆனால் அவள் இறுதி நேரத்தில் வராமல் போகிறாள். அல்பிரடோ டோடோவின் எதிர்காலம் அந்த ஊரில் இல்லையென நகரத்துக்கு அனுப்புகிறார். அப்போது சென்றவன் பெரும் கலைஞனாகி மீண்டும் ஊருக்கு வரும்போதுதான் சில உண்மைகள் தெரிகிறது. அல்பிரடோ தலையீட்டினால்தான் எலனா அவனைக் காண வரவில்லை எனத் தெரிய வருகிறது. காலம் கடந்துவிட்டு எதையும் யோசிக்க முடியாத அவர் அல்பிரடோ தனக்கு அன்பளிப்பாகக் கொடுத்துச்சென்ற பரிசைத் திறக்கிறார். அதில் ஒரு சினிமா ஃபிலிம் உருளை உள்ளது. அதை திரையரங்கில் ஓட்டிப்பார்க்கிறார். பாதிரியார் சொல்லச் சொல்ல அவர் கத்தரித்த காதலர்களின் நெருக்கமான காட்சிகள் ஒட்டப்பட்டு / தொகுப்பாக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது.

தன் வாழ்நாள் முழுவதும் செய்த தணிக்கையைத்தான் அல்பிரடோ தனது வாழ்விலும் செய்துள்ளார் எனத் தெரிந்தது. அவன் வாழ்வில் அவர் தலையிட்டு செய்த அந்தத் தணிக்கைதான் அவனை மாபெரும் கலைஞனாக நிறுவியுள்ளது.  ஒருவனுக்குள் புகுந்து முற்றும் முழுதுமாக ஆக்கிரமிக்கும் முன் ஏதோ ஒன்றை பலி கேட்கிறது கலை. ஆசானும் அதை விரும்பியே தன் காதலைப் பலி கொடுத்திருக்க வேண்டும். அதன் பின்னர் அவர் திருமணமே செய்யாமல் வாழ்கிறார்.

சமையல் அறையில் ஆசானைப் பற்றிய கிசுகிசுக்கள் கேட்டபடி இருக்கின்றன. சில சலிப்புகள் உள்ளன. முகம் கொடுத்து பேசாத அவர்மேல் புகார்களும் உள்ளன. அவர் கோபத்தின் மேல் விமர்சனங்களும் பணியாளர்களுக்கு உள்ளன. கதைசொல்லி மட்டுமே ஆசானைப் பிரமிப்போடு பார்த்துக்கொண்டே இருக்கிறான். அவன் புதிதாக இணைந்தவன். ஆனால் அவனையே தன் பிரதிநிதிபோல ஆங்காங்கு அனுப்புகிறார். பழைய காதலியிடம் ஆசான் நிகழ்த்தும் உரையாடலால் பணியாளர்கள் அவரை தங்களில் ஒருவராகவே நினைத்திருக்கலாம். ஆனால்  அத்தனையும் ஆசான் களைத்துப்போடுகிறார்.

மரக்கைப்பிடி கொண்ட அகப்பையை  எடுத்து உருளியில் மையத்திற்குக் கொண்டுவந்து சுழற்றும்போது மணம் வீசுகிறது. அது கலைஞனின் உச்ச வெளிபாட்டில் தெறிக்கும் மணம். கலைஞன் சாதாரண மனிதன்தான் ஆனால் அவன் அசாதாரணமானவனும்கூட எனச் சொல்லும் இடம் அது.

ஆயுர்வேத நிலையத்துக்கு வந்து சேர இரவானது. முகப்பறையில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். நட்பாகப் புன்னகைத்தாள். தான் மெக்ஸிகோவில் இருந்து வந்துள்ளதாக அறிமுகம் செய்துகொண்டு அங்குள்ள சிகிச்சை முறைகளைக் கேட்கத் தொடங்கினாள். உன் அறையில் உள்ள WIFI கருவியை இங்குப் பொதுவில் வைக்க முடியுமா? நான் டாக்டரிடம் சொல்லிவிட்டேன் என்றாள். இதென்னடா இது வந்ததும் வராததுமாக ஒரு சீனியரை (ஒரு நாள் முந்தி வந்திருக்கிறேன்)  ரேகிங் செய்கிறாள் என நினைத்துக்கொண்டே அறையில் புகுந்தேன்.

சற்று நேரத்தில் அவள் டாக்டரிடம் விவாதம் செய்யும் சத்தம் கேட்டது.

பிரதமன் சிறுகதை

தொடரும்

 

(Visited 675 times, 1 visits today)