மனசலாயோ 5: சேமமுற வேண்டுமெனில்

yogaகாலையில் ஆறரைக்கெல்லாம் தனக்கு யோகா சொல்லித்தரவேண்டும் என்பதும் மாலையில் ஒருதரம் யோகா சொல்லித்தர வேண்டும் என்பதும் சாராவின் வாதமாக இருந்தது. காலை ஆறரை என்றதும் என் வயிற்றில் புளி மூட்டையையே கரைத்தது போல உணர்ந்தேன். அன்று மாலை சுயமாகவே யோகா செய்திருக்கிறாள் என அவர்கள் உரையாடலில் புரிந்தது. அந்நேரத்தில் நான் பார்வதிபுரத்தில் கோழிக்குழம்பு சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கலாம் என ஊகித்துக்கொண்டேன். மருத்துவர் சுலபமான யோகாவை சுயமாகவே செய்யலாம் என்பதாக விளக்கப்படுத்திக்கொண்டிருந்தார். “சுயமாகச் செய்ய வேண்டியதென்றால் நான் மெக்ஸிகோவிலேயே செய்துகொள்வேனே ஏன் இங்கு வர வேண்டும்?” என்றாள். கொஞ்ச நேரம் யோசித்த மருத்துவர், என்னைப் பார்த்து “இருவரும் நாளை காலை ஆறரைக்குத் தயாராகி விடுங்கள்” எனக்கூறி அறைக்குச் சென்றார். சாரா வெற்றிக்களிப்பில் சிரித்தாள். எனக்கு ஏதோ நன்மை செய்துவிட்டதாக நினைப்பு.

நான் காலை யோகா வகுப்புக்குத் தயாராகியிருந்தேன். கண் இடுக்கியது. சாரா நேற்று போட்டிருந்த உடையுடன் தயாராக இருந்தாள். “மேலே சென்று அரை மணி நேரம் வேகமாக நடந்துகொண்டிருங்கள். நான் வருகிறேன்” என்றார் டாக்டர். “நீங்களும் உடன் வாருங்கள் போகலாம்” என்றாள். “நடப்பதற்குக் கூட நான் உடன் வர வேண்டுமா?” டாக்டரின் நிலை பரிதாபமாக இருந்தது. “ஆமாம். தனியாக நடப்பதென்றால் நான் மெக்ஸிகோவிலேயே நடந்துகொள்வேனே!” என்றாள்.

எவ்வளவு கறார். இவள் இலக்கிய விமர்சனம் எழுத வந்தால் எழுத்தாளர்கள் செத்தார்கள் என நினைத்துக்கொண்டே மொட்டை மாடிக்கு ஏறினேன். அரை மணி நேர நடை. பின்னர் ஒரு மணி நேரம் யோகா. பிரணாயாமத்திலிருந்து பயிற்சி தொடங்கியது. அதிலேயே டாக்டர் யோகாவில் ஆளுமை பெற்றவர் அல்ல எனப் புரிந்துகொண்டேன். பிரணாயாமத்திற்கென தனி முத்திரை உண்டு. மூச்சை இழுத்து, நிறுத்தி, விடுவதற்கு குறிப்பிட்ட கால அளவுகள் உள்ளன. அவர் அதை எதுவும் சொல்லவில்லை. மூச்சை ஒரு துவாரத்தின் வழி இழுத்து மறுதுவாரத்தில் வெளியே விடச்சொன்னார். எனக்கு முன் அனுபவம் இருந்ததால் ஓரளவு சரியாகச் செய்தேன். பின்னர் யோகா தொடங்கியது. சில எளிய யோகா முறைகளைச் சொல்லிக்கொடுத்தார். கழுத்தும் தோள்பட்டையும் எவ்வளவு பாதித்துள்ளன எனச் செய்ய செய்ய அறிந்துகொள்ள முடிந்தது. இத்தனைகாலம் நான் வலிக்கக்கூடாது எனக் கழுத்தை அசைப்பதில் சில கட்டுப்பாடுகளுடன் இயங்கி ஒரு மாதிரி உடலைப் பழகி வைத்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். நிபந்தனையில்லாமல் கழுத்தை அசைக்க அசைக்க வலி தாங்காமல் முனகத் தொடங்கினேன்.

“ஏன் யோகா செய்யும்போது நீங்கள் சுவாசம் இழுப்பதையும் விடுவதையும் பற்றி சொல்லித்தரவில்லை?” சாரா திடீரென ஆரம்பித்தாள். நல்லதா போச்சி என தனுராசனம் செய்ய முக்கிக்கொண்டிருந்த நான் கொஞ்ச நேரம் யோகாவுக்கு ஓய்வு கொடுத்து ஆதிசேஷன் மீது பெருமாள் பள்ளிக்கொண்ட பாணியில் தலையில் கைவைத்து டாக்டரைப் பார்த்தேன். முக்கிக்கொண்டிருந்தது நானாக இருந்தாலும் அவருக்கு வியர்த்திருந்தது. “யோகா செய்யும்போதே நமது உடல் அதை சரியாக நிகழ்த்திக்கொள்ளும்” என்றார் டாக்டர். அப்படி நிகழ்த்தாது என்றாள் சாரா. “நாம் மூச்சை இழுப்பதும் விடுவதையுமே தவறாகச் செய்துகொண்டிருக்கிறோம். இழுக்கும்போது வயிறும் மார்பும் விரியவேண்டும். விடும்போது சுருங்க வேண்டும். நாம் சராசரியாகச் சுவாசிக்கும் முறையே தலைகீழாக நடக்கும். மூச்சை விடும்போது வயிறு விரியும். அது தவறான சுவாச முறை. யோகாவில் குனிந்து உடல் மடங்கும்போது மூச்சைவிட வேண்டும். ஆனால் முதலில் செய்பவர்களுக்கு அது தெரியாமல் தம்கட்டிச் செய்ய மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்வார்கள். அது பின் விளைவுகளை உண்டாக்கும்.” நீண்ட விளக்கவுரைக்குப் பின் டாக்டர் பெருமாளை தரிசிப்பதுபோலவே என்னைப் பார்த்தார். நான் மந்தகாசமாகச் சிரித்தேன்.

யோகாவுக்குப் பின் மசாஜுக்குத் தயாராக வேண்டும். அது ஒன்றரை மணி நேரம் நடக்கும். அதன் பின்னர் முப்பது நிமிடம் ஆவி கூண்டில் அமர்ந்திருக்க வேண்டும். ஆகமொத்தம் இரண்டு மணி நேரம். இடையில் கிடைத்த ஓய்வில் சாராவிடம் “உனக்கு எப்படி யோகா நுணுக்கங்கள் தெரியும்?” என்று கேட்டேன். அவளது அம்மா ஒரு யோகா டீச்சர் என்றாள். அவளுக்கு யோகா நன்கு அறிமுகம் இருந்தது. பின்னர் ஏன் இங்கு வந்து கஷ்டப்படுகிறாய் எனக்கேட்டேன். யோகா செய்பவர்கள் டென்ஷன் ஆவார்கள் என நடிகர் சிவகுமார் வழி ஏற்கனவே தெரிந்து வைத்திருந்ததால் கொஞ்சம் கவனமாகவே பேசினேன்.

அவள் நீண்ட பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும் இப்போது பிரான்சில் இருந்து வருவதாகவும் இங்கிருந்து எங்கு செல்ல வேண்டுமென இனிதான் சிந்திக்கப்போவதாகவும் கூறினாள். நானெல்லாம் இந்த ஒரு நாட்டுக்கு வர ஒரு மாதமாகத் திட்டமிட்டதை நினைத்துக்கொண்டேன். “இணையத்தில் பார்த்துதான் இந்த இடத்தைக் கண்டுபிடித்து வந்தேன். எனக்கு முதுகெலும்பில் வலி உள்ளது. கால் மூட்டுகளில் சிக்கல் உள்ளது. அதை குணப்படுத்த வேண்டும்” என்றாள்.

மெக்ஸிகோவின் தேசிய மொழி ஸ்பானிய மொழி (Spanish) உலகில் அதிகமாக ஸ்பானிய மொழி 220px-Gabriel_Garcia_Marquezபேசுபவர்களும் மெக்ஸிகோ மக்கள்தான். அதனால் ஆங்கிலத்தைக் கொஞ்சம் நிறுத்தி நிதானமாகவே பேசினாள். ஆங்கிலத்தை தெளிவாக உச்சரித்தாள். என்னைப்பற்றி கேட்டாள். நான் ஓர் எழுத்தாளன் என அறிமுகம் செய்துகொண்டேன். மிகுந்த உற்சாகம் ஆனவளாய் எந்த மொழியில் எழுதுகிறாய் என்றாள். தமிழ் என்றேன். “ஓ” என்றாள். உலகின் பழைய மொழிகளில் ஒன்று எனச் சொல்லி கூகுலில் தட்டிக்காட்டினேன். படித்துவிட்டு ‘ஆமாம்’ என ஆச்சரியப்பட்டாள்.  “நீ கேள்விப்பட்டதே இல்லையா” என்றேன். இல்லை என்றாள். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு “ஆனால் எனக்கு லத்தின் அமெரிக்க எழுத்தாளர்கள் சிலரைத் தெரியும்” என்றேன். காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ், பாப்லோ நெருடா, ஜார்ஜ் லூயி போர்ஹேஸ், பாவ்லோ கொய்லோ என சிலரைச் சொன்னேன். அவர்களை உலகம் முழுக்கத் தெரியும் என்றாள் சாதாரணமாக.

என்ன திமிர் என நினைத்துக்கொண்டேன். அது அம்மொழிப் படைப்பாளிகள் கொடுத்துள்ள திமிர். இவரையும் உலகம் முழுக்கத் தெரியும் எனச் சொல்ல யாரேனும் தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என யோசித்தேன். மொழித்தூய்மையைப் பாதுகாக்கிறேன் என நவீன இலக்கியங்களை இளம் தலைமுறை கண்களில் இருந்து தள்ளி வைக்கும் மொழிப்பற்றாளர்கள் ஒரு பக்கம். ஒழுங்கு மீறிய பிரதிகளாய் உள்ளன என கல்விக்கூடங்களில் நவீன இலக்கியம் என்பது மு.வரதராசனும் ந.பார்த்தசாரதியும் என சுருக்கிக்கொள்ளும் கல்வியாளர்கள் ஒருபக்கம். வெகுசனப்பிரதிகளை முன்வைத்து தமிழ் நவீன இலக்கியத்தை முன்னெடுப்பதாக இயங்கும் அமைப்புகள் ஒருபக்கம் இவற்றுக்கு மத்தியில் சமகாலத்தில் நவீன இலக்கியத்துக்குள் இயங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு படைப்பாளிக்கு அபரிதமான தன்னூக்கம் தேவைப்படுகிறது. தமிழகம், இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் இலக்கியத்துக்கு அரசு அங்கீகாரமாவது உண்டு. அரசு விருதுகள் வழி ஒரு தேசத்தில் வாழும் பிற மொழி பேசும் மக்களிடமாவது ஒரு தமிழ்ப் படைப்பாளி சென்று சேரும் வாய்ப்புகளையாவது அவை வழங்குகின்றன. மலேசியாவில் அதுவும் இல்லை. ஆனால் கொஞ்ச நஞ்சம் அரசிடம் இருந்து தமிழ் இலக்கியத்திற்கென பெறப்படும் பணமும் பயனற்ற திட்டங்களால் அமைப்புகளின் வழியே அழியும். அரசு ஆதரவு இல்லாமல், தனிப்பட்ட பொருளியல் பலமும் இல்லாமல், ஆக்ககரமான இயக்கங்களின் ஆதரவும் இல்லாமல் ஏதோ ஒரு நம்பிக்கையில் காலகாலமாக ஒரு தொடர்ச்சி தீவிரமாக இலக்கியத்தை நகர்த்தி வந்துகொண்டே உள்ளது.

இன்று பல மொழிகளில் பெயர்க்கப்பட்டு பல லட்சம் விற்பனையாகும் பாவ்லோ கொய்லோ, ஹாருகி முராகாமி புனைவுகளைவிட பல மடங்கு ஆற்றல்மிக்க படைப்புகள் தமிழில் உண்டு. அவர்கள் தங்கள் வாழும் காலத்தில் உலக வாசகர்கள் மத்தியில் அறியப்படப்போவதில்லை. ஆனால், காலச்சுவடு போன்ற பதிப்பகங்கள் சல்மாவையும் பெருமாள் முருகனையும் தமிழ் எழுத்தாளர்களின் பிரதிநிதிகளாக மொழிபெயர்த்து உலக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வர்த்தக முயற்சி நடந்துகொண்டே இருக்கும்.

நூறு ஆண்டுகளுக்கு மேலாகவே, வங்காளம், ர‌‌ஷ்ய மொழி என ஆரம்பித்து, ஹிந்தி, கன்னடம், மலையாளம் பல இந்திய மொழி இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டு வருகிறோம். தற்காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு ஆங்கில நாவல்களைத் தமிழில் மொழி பெயர்க்கிறோம். அனைத்தும் தமிழகச் சந்தையை மையப்படுத்தி மட்டுமே நடக்கிறது. ஆனால் நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்துக்கும் மற்ற மொழிகளுக்கும் கொண்டுபோகும் முயற்சியை நாம் பெரிய அளவில் எடுக்கவில்லை. அம்முயற்சி ஒரு பேரியக்கமாக மாறவில்லை.

இதில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் ஓரளவு முன்னேறி இருக்கிறார்கள். அதுவும் எழுத்தாளர்கள் முன்னெடுக்கும் முயற்சியாக இருந்தாலும், அதற்கு அனைத்துலக அளவில் பதிப்பகங்களும் உதவுகின்றன. உதாரணமாக சேரன் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு (‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ (IN A TIME OF BURNING), ‘இரண்டாவது சூரிய உதயம் ( A SECOND SUNRISE), You Cannot Turn Away)  இன்று அவருக்கு அனைத்துலக அளவில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது. அதேபோல் ‌‌ஷோபாசக்தியின் நாவல்களும் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டதால் இன்று அவர் பரவலாக வாசிக்கப்படுகிறார். தமிழகத்தில் சாரு நிவேதிதா இது குறித்த பிரக்ஞை உள்ளவர். மொழிப்பெயர்ப்பின் தேவை குறித்த அவரது ஆதங்கம் தொடர் விளைவுகளை உருவாக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு

திறமான புலமையெனில் வெளி நாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

என்பதை அப்படியே மறந்துவிட்டோம்.

வல்லினம் மூலம் எட்டு தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ந்து நூலாக்கினோம். ஆனால் அதை சந்தைப்படுத்துதலில் உள்ள சிக்கல் எதிர்ப்பாராதது. இதுபோன்ற முயற்சிகளைதான் அமைப்புகள் எடுக்க வேண்டும் என எப்போதுமே சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். ஒரு படைப்பிலக்கியவாதி தனது படைப்பை தானே முயன்று மொழிப்பெயர்த்து அதை நூலாக்கி விநியோகம் வரை முயன்று தோற்பதெல்லாம் தமிழ் இலக்கியச் சூழலின் சமகால அவலம்.

“நீ என்ன செய்கிறாய்” என்றேன். “ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்தேன். பயணம் புறப்படும் முன் வேலையில் இருந்து துண்டித்துக்கொண்டேன் என்றாள். ஏன் என்று கேட்டால் வேலை செய்வதானால் நான் மெக்ஸிகோவிலேயே இருந்திருப்பேனே எனச் சொல்லிவிடக்கூடும் என்பதால் மௌனமாக இருந்தேன்.

மசாஜுக்கு அழைத்தவுடன் அவரவர் அறைக்குச் சென்றோம். கேரளா ஆயுர்வேத மசாஜ் எனக்கு பதினாறு வயதினிலே படத்தை நினைவுபடுத்தியது. அப்படத்தில் ரஜினி உடம்பில் மசாஜ் செய்துகொண்டிருக்கும் எண்ணெய்யையும் கமலஹாசன் கட்டியிருக்கும் கோமணத்தையும் இணைத்து யாரோ ஒருவர் இந்த சிகிச்சை முறையை உருவாக்கியிருக்க வேண்டும். சின்னஞ்சிறிய கோமணத்தைக் கட்டிவிட்டு மசாஜ் தொடங்கியது. சிகிச்சை எண்ணெய்யால் உடம்பை உருவி எடுத்த பின்னர் கிழி கொடுக்கிறார்கள். அதாவது மருத்துவ இலைகளைக் கொண்டு எண்ணெயில் சூடாக்கி ஒத்தடம். கழுத்தில் எந்தப் பகுதி வலி என்றேனோ அங்கே ஒத்தடம் தீவிரமானது. பின்னர் நீராவி குளியல். இதுதான் அடுத்து வரப்போகிற அனைத்து வாரங்களிலும் அடிப்படை வைத்தியம். அரை மணி நேர ஓய்வுக்குப் பின் குளித்துவிட்டு மதிய உணவுக்கு அழைத்தார்கள். எங்களுடன் ஹரியும் இருந்தார்.

தான் யானைகளைப் பார்க்க விரும்புவதாக சாரா கூறினாள். நான் மடிக்கணினியில் மேற்கல்வி வேலையில் மூழ்கியிருந்தேன். ஹரி யானைகளைப் பார்க்க நெய்யாறு யானைகள் பராமரிக்கும் பகுதிக்குச் செல்லலாமா என்றார். நான் அதிக தூரம் நடக்க விரும்பாதவனாக இருந்தேன். கடும் தூக்கம். ஆனால் பணிகளை முடிக்க வேண்டுமென கட்டுப்படுத்திக்கொண்டு வேலை செய்தேன். அனேகமாக அங்கிருந்த எந்த நாளிலும் மசாஜுக்குப் பின் வரும் தூக்கத்தை துறந்தவனாகவே இருந்தேன். அதிக தூரம் நடக்க வேண்டிருக்காது. சரியாக 4 மணிக்கு யானைகளைக் குளிப்பாட்டி உணவளிப்பார்கள். பார்த்துவிட்டு வரலாம் என்றார். டாக்டரும் உனக்கு கழுத்துப்பிரச்சனையே கணினியால்தான் வந்தது. கழுத்து தசைகள் வலுவாகும் வரையாவது கணினியிடம் இருந்து ஒதுங்கியிரு என்றார். எனக்கு உண்மையில் யானைகளைப் பார்ப்பதில் ஆர்வம் வந்தது. ஆனால் சாராவுடன் செல்வதில் சிறு தயக்கம் இருந்தது.

ஒருவழியாக யானையைப் பார்த்துவிடுவதென புறப்பட்டேன். கோபத்தின் வழி, சிரிப்பின் வழி, வன்மத்தின் வழி ஒரு மனிதரை ஏதோ ஒரு கணத்தில் முழுமையாக அறிகிறோம்.

நான் சாராவை அங்குதான் கண்ணீரின் வழி அறிந்துகொண்டேன்.

தொடரும்

(Visited 665 times, 1 visits today)