மனசலாயோ 6: சாரா

index 03பெரியதும் சிறியதுமாக 12 யானைகள் உள்ள சரணாலயம் அது. இன்னும் அதிகம் இருக்கலாம். நாங்கள் அவ்வளவுதான் பார்த்தோம். சரியாக நான்கு மணிக்கு அவற்றை நெய்யாறு அணையில் குளிப்பாட்டுகிறார்கள். யானைப்பாகன் அதன் மேலேறி ஓட்டி வரும் காட்சி அபாரமானது. ஒரு மேட்டு நிலத்திலிருந்து சரசரவென இறங்கி வந்துவிடுகிறது யானை. என்னை மிக அருகாமையில் அந்த யானை கடந்து சென்றது. நான் நகரவில்லை. மிக அருகில் அதன் தோல் சுருக்கங்களைப் பார்க்க ஆவல் மிகுந்தது. ஹரி அது பெண் யானையென்றார்.

சாரா ‘நானும் அப்படி ஏறிச் செல்ல வேண்டும் அனுமதி கேள்’ என ஹரியிடம் பிடிவாதம் பிடித்தாள். ஹரி அதற்கெல்லாம் சம்மதிக்க மாட்டார்கள் என சமாதானப்படுத்தியும் பெண் யானையில் பெண்தான் ஏறவேண்டும் என்றாள். முன்பு ஒரு பாகன் யானையால் தாக்கப்பட்டு இந்த இடத்தில் இறந்துவிட்டான் என்பதால் பார்வையாளர்கள் யானை சவாரி செய்வதற்குத் தடை விதித்துள்ளார்கள் என ஹரி எடுத்துக்கூறிய பிறகு சமாதானமானாள். அவன் எப்படி பெண் யானை மீது ஏறி  சவாரி செய்யலாம் என முனக ஆரம்பித்தாள்.

‘நீள்நீலத் தார்வளவன் நின்மேலான் ஆகவும்
நாணிமை யின்றி நடத்தியால்’

இந்த வரி  குத்துமதிப்பாக அப்போது மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ‘நாணிமை யின்றி நடத்தியால்’ என மட்டும் திரும்பத் திரும்ப  சொல்லிப் பார்த்தேன். அது முத்தொள்ளாயிரத்தில் சோழனை ஏந்தி வரும் பெண் யானையைப் பார்த்த பெண்ணொருத்தி ஆணைச் சுமந்துகொண்டு, வெட்கம் இல்லாமல் ஆடிக்கொண்டு வருகிறாயே! என யானையைத் திட்டும் காட்சி. எனக்குச் சங்கப் பாடல்கள் நினைவில் இருப்பதில்லை. சில  காட்சிகள் மட்டுமே சித்திரங்களாக நினைவில் இருக்கும். காட்சிகளை மீட்டெடுத்த பின்னர் வார்த்தைகளைத் தேடி சில சமயம் சொந்த வார்த்தைகளைப் போட்டுக்குழப்பி விடுவேன். இவன் மன்னனல்ல. ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பெண்கள், யானையையோ பாகனையோ திட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கொஞ்ச நேரத்தில் பெருங்கூட்டம் கூடிவிட்டது. யானைப் பாகன் அதனை அதட்டி மிரட்டிindex 04 குனியவும் நிமிரவும் சொல்லிக்கொண்டிருந்தான். பின்னர் தும்பிக்கையால் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க கட்டளை இட்டுக்கொண்டிருந்தான். யானை அதைச் செய்ய தயாராக இல்லை. தண்ணீரில் இருக்கும் யானையின் தும்பிக்கை  மண்புழு நிலத்தில் உழல்வதுபோல அலைந்தது. ஆனால் அது நீரை அள்ளித் தெளிக்க தயார் இல்லை. சட்டென பாகன் வைத்திருந்த கம்பில் இரு அடிகள் கொடுத்தான். ஈரத்தில் தோய்ந்திருந்த அதன் தோலில்பட்டு சத்தம் பளீர்  எனக் கேட்டது. அவ்வளவு பெரிய யானை. கம்பால் அடிபடும் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் பயத்தில் கண்களை மூடுவதுபோல படபடக்க  மூடியது. சட்டென தும்பிக்கையில் நீரை உறிஞ்சி தன் உடலின் மீது பீச்சியபோது படம் பிடித்தேன். திரும்பியபோது சாரா இல்லை. கதறி அழுதுகொண்டிருந்த அவளை ஹரி சமாதானம் செய்துகொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“யானைகளின் தோல் தடிமன்தான். ஆனால் அவை உணர்ச்சி அதிகம் உள்ளவை. அவற்றால் நமது மெல்லிய தொடுதலையும் உணர முடியும். அந்த அடி அதற்கு வலித்திருக்கும் ” தொடர்ந்து அழுதாள். நான் நைசாக இடத்தை விட்டு நழுவினேன். யானை அடிபட்டு நீரை பீய்ச்சி அடிப்பதை ஆர்வத்துடன் படம் பிடித்ததை அவள் பார்த்திருந்தாள். இரக்கம் இல்லா அரக்கன் என சரஸ்வதி சபதத்தில் வருவதுபோல தலை மட்டும் வெளியே தெரிவதுபோல புதைத்து யானையை வைத்தே மிதிக்கவிட்டு என்னை கொன்றுவிடக்கூடும் என்பதால் முகத்தை அப்பிராணியாக வைத்துக்கொண்டு ஒரு ஓராமாய் ஒதுங்கிவிட்டேன். அதற்குப் பிறகு அவளுக்கு எதையும் பார்ப்பதில் ஆர்வம் வரவில்லை. தனியாகச் சென்று அமர்ந்துகொண்டாள். குட்டியானைகளை மட்டும் சென்று கண்டாள். பின்னர் காரில் ஏறியதும் எதுவும் நடக்காதது போல உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தாள். என்னைக் கிண்டல் செய்தாள். நான் நிலையத்தில் வாசிக்கத் தொடங்கியிருக்கும் டான் குவிக்ஸார் (Don Quixote) நாவலில் வரும் டான் குவிக்ஸாட் நான்தான் என்றாள். பின்னர் அது பழங்காலத்து ஸ்பானிய மொழியில் இருப்பதால் வாசித்துப் புரிந்துகொள்வதில் சிரம்பப்படுவதைப் பார்த்துள்ளேன் என்றாள். எனக்கு அவளின் திடீர் உற்சாகம் குழப்பத்தையே கொடுத்தது.

index 05ஹரி அவளைச் சமாதானப்படுத்தும் விதமாக சுந்தரி புட்டு வாங்கிக்கொடுத்தார். சுந்தரி புட்டு என்பது பல்வேறு மூலங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வேறு புட்டுகளை ஒன்றாக அடுக்கி கொடுக்கிறார்கள். ஹரி இதற்கு கோழிக் குழம்புதான் சுவை என்றார். டாக்டரிடம் சொல்லமாட்டேன் சாப்பிடுகிறாயா என்றார். நான் அதிகாலையிலிருந்தே உணவுக் கட்டுப்பாட்டில் உறுதியாக இருந்ததால் கடலைக் குழம்பை ஊற்றி சாப்பிட்டேன். கடலைக்கே இப்படி இருந்தால் கோழிக் குழம்புக்கு எப்படி இருக்கும் என யோசனை வராமல் இல்லை.

சாரா திடீரென, “நவீன் நீ ஒரு எழுத்தாளன். இதைப்பற்றி என்ன நினைக்கிறாய் எனச் சொல்” என ஒரு குறும்படத்தை அவள் தொலைபேசியில் ஓடவிட்டு காட்டினாள்.  பின்னர் ஸ்பானிய மொழியில் ஒலிக்கும் அதன் வரிகளை ஆங்கிலத்தில் சொல்லத்தொடங்கினாள்.

குறும்பட லிங்க் : https://www.youtube.com/watch?v=ypp56YNqy4E&feature=youtu.be

இன்று நான் எனக்காக நேரம் ஒதுக்கினேன்

இன்று நான் நேரம் எடுத்துக்கொண்டேன்
இந்த நகரத்தில்
இன்னமும் சூரிய உதயத்தின்போது பாடிக்கொண்டிருக்கும் பறவைகளைக் கேட்க

முதல்நாள் இரவின் நுண்மையான வாசனைகளை உணர

பரபரப்பு என்னை அடிமையாக்கிக் கொண்டிருக்கும் வேளையில்
எதுவுமற்றிருப்பவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட

இசையை வடிவங்களாக மாற்ற

நான் நினைத்தே பார்த்திராத என்னைக் கண்டுபிடிக்க

எனக்கருகே ஓடிக்கொண்டிருக்கும்
என் வாழ்க்கையைப் போலவே தங்களுடைய பரபரப்பான
எப்போதும் ஒரேமாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்களை உணர்வதற்காக

மற்றவர்களை எப்போது நினைத்துப் பார்க்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள

நம்மைச் சுற்றிலும் எப்போது புன்னகையைப் பரப்புகிறோம் என்பதை அறிந்துகொள்ள

நான் நடந்துகொண்டிருக்கும்போது வாழ்க்கையளிக்கும் அற்புதத்தை அனுபவிக்க

துரதி‌‌ஷ்டவசமாக  எனக்கு நேரம் இருப்பதில்லை.

அவள்தான் அதில் நடித்திருந்தாள். அவளிடம் மீண்டும் வரிகளைக் கேட்டு தமிழில் எழுதிப் பார்த்தேன். கவித்துவமான வரிகளைக் கொண்டிருந்தன. தன் தங்கை எழுதியது என்றாள். “ஆனால் இது உன் வாழ்க்கையாக இருக்கக்கூடும்” என்றேன். அதற்குப்பின் நாங்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. ஹரியும் தன் பங்குக்கு ஒரு வீடியோ காட்டுகிறேன் என ஏதோ மந்திரத்தை ஓடவிட்டு “வெரி பவர்” என்றார்.

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

வீடு வந்ததும் நான் மீண்டும் கணினியின் முன் அமர்ந்தேன். சாரா இங்கும் அங்கும் நடந்துகொண்டிருந்தாள். பெரும் அலைக்கழிப்பு அவள் மனதில் எனப் புரிந்துகொள்ள முடிந்தது. சாரா என்னிடம் பேச வேண்டும் என்றாள். நான் பேசலாம் என்றேன். அவள் பேச நினைக்கிறாள் என்பதை முன்னமே அனுமானித்திருந்தேன். அவள் தன்னைப்பற்றி சொல்லத் தொடங்கினாள்.

“நான் மனத்தெளிவு இல்லாதவள். என் மருத்துவரின் ஆலோசனையினால்தான் பயணம் மேற்கொண்டுள்ளேன். என் அம்மாவும் நான் வெகுதூரம் போகவேண்டும் என ஆசைப்படுகிறாள். அப்படி ஒரு அம்மா கிடைப்பது ஆச்சரியம். அப்பா பயப்படுவார். நான் குடும்பத்துடன் இல்லை. என் அம்மாவும் அப்பாவும் விவாகரத்துக்குப் பின் தனித்தனியாக இருக்கின்றனர். நான் வேலை செய்வது ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய சம்பளத்தில் பெரிய வேலைதான். ஆனால் நான் வேலையை விட்டுவிட்டேன். என் சிக்கல் என்ன என்று உனக்கு தெரிகிறதா? நீ எழுத்தாளன். எழுத்தாளனுக்குத் தெரியவேண்டும் இல்லையா?”

“நான் முன்பே உன்னை கவனித்தேன். இருந்தால் உச்சபட்ச மகிழ்ச்சியில் இருக்கிறாய். இல்லாவிட்டால் கோபப்படுகிறாய். அல்லது அழுகிறாய்” என்றேன்.

“ஆம் அதுதான் என் சிக்கல். நான் நெடுநேரத்திற்கு ஒரே உணர்ச்சியில் இருக்க மாட்டேன். நான் நல்ல வேலை செய்கிறேன் என பெருமை இருந்தது. இதோ அந்த வேலையைத் தூக்கி எறிந்துவிட்டேன். இது நான் தூக்கியெறிந்த மூன்றாவது வேலை. இப்போது எனக்கு வயது 33. நான் முன்பு ஒருவனைக் காதலித்தேன். எனக்கு ஒரு காதலன் இருப்பது பெருமையாக இருந்தது. பின்னர் இவன் எனக்கு ஏற்ற காதலன் இல்லை என அவனையும் விரட்டிவிட்டேன். எனக்கு எதிலும் திருப்தி ஏற்பட மாட்டேன் என்கிறது. உள்ளுக்குள் நான் மகிழ்ச்சியாக இல்லை. காலையில் டாக்டரைத் திட்டியதும் அதுதான் காரணம். இதற்கு முன் வந்தவர்களுக்கும் இந்தச் சலுகைதானே கிடைத்திருக்கும். நான் பொறுத்திருந்திருக்கலாம். எல்லாவற்றையும் சந்தேகிக்கிறேன்.  நான் ஆர்வத்துடன் அணுகும் எல்லாவற்றிலும் முழுமை இல்லை என உணர்கிறேன். எனக்குக் கோவம் வருகிறது.”

“உனக்கான அடையாளம் தேடுகிறாயா?”

“எனக்கு நிறைய அடையாளங்கள் உள்ளன. நான் நன்கு வரைவேன். பாடுவேன். சில இசைக்கருவிகள் வாசிக்கத் தெரியும். எனக்குப் பல விடயங்களில் நிபுணத்துவம் உள்ளது. ஆனால் நான் பெற்ற எதிலும் எனக்கு மகிழ்ச்சி இல்லை. இதோ மகிழ்ச்சியாக இருக்கதான் இங்கு வந்தேன். இவ்வளவு தூரம். அநாவசியமாக அழுகிறேன். என்னால் இனி இங்கிருக்க முடியாது எனத் தோன்றுகிறது. நான் ஒரு இடத்தில் அழுதால் அங்கிருந்து புறப்பட்டு விடுவேன்.”

எனக்கு அவள் சிக்கல் புரிந்தது. ஆனால் நான் சரியாகப் பேசவேண்டும். சிக்கலானவற்றை விளக்கும் ஆங்கில புலமை என்னிடம் இல்லை. ஆனால் நான் நினைப்பதை எளிமையாகச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது அறிவுரையாக இருக்கக்கூடாது. எனவே நான் என்னைப்பற்றி அவளுக்குச் சொல்லத் தொடங்கினேன்.

“சாரா, நான் உனக்கு அறிவுரை கூற முடியாது. அதில் நான் தேர்ந்தவன் அல்ல. ஆனால் என்னைப்பற்றி சொல்லலாம். என் வலது கை விரல்களைப் பார். இதில் இரண்டு விரல்களை மட்டும்தான் டைப் செய்ய பயன்படுத்துகிறேன்.  இந்த விரல்கள் அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த மாதம் நான் பேனாவைப் பிடித்து எழுதத்தொடங்கினேன். நீ நம்புகிறாயா? என்னைவிட்டு பலர் பிரிந்துள்ளனர். நானும் பிரிந்து வந்திருக்கிறேன். ஆனால் எந்தப் பிரிவும் நான் எழுதுவதை நிறுத்தியதே இல்லை. சமீபத்தில் எனக்கு விவாகரத்து ஆனது. அதன் படபடப்பு நிரம்பிய சட்ட நடவடிக்கையின்போதும் நான் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தேன். நான் பல்வேறு பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொள்பவன். எதுவாக இருந்தாலும் ஆனால் நான் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். சமீபத்தில் என் மாமா  ஒருவருக்கு மூளையில் புற்றுநோய். நான் அவரை ஒரு மாத காலம் வீட்டில் வைத்துப் பராமரித்தேன். அப்போதும் நான் எழுதிக்கொண்டுதான் இருந்தேன். என் அன்புக்குரியவர்களின் கண்ணீருக்கும் துன்பத்திற்கும் நான் உண்மையான அன்பைக் கொடுக்கிறேன். சில சமயம் முற்றும் முரணாக வன்முறையைக் கையில் எடுக்கிறேன்.  ஆனால் அவை எதுவும் என்னைப் பாதிப்பதில்லை. என்னை என்பது இன்னொரு என்னை. எந்தக் காரணத்திற்காகவாவது சாப்பிடவில்லை சுவாசிக்கவில்லை எனச் சொல்கிறோமா?  நான் என்னை என் எழுத்தின் வழியே அடையாளம் கண்டுகொள்கிறேன்.” ஆச்சரியமாக அவளுக்கு நான் சொன்ன அனைத்தும் புரிந்தது.  நான் விடும் இடைவெளிகளையும் வார்த்தைகள் தேடும் மௌனத்தையும் அனுமதித்தாள். நான் பேச உரிய வெளியை அளித்தாள். கண்கள் வழி இன்னும் பேசு எனும் நம்பிக்கையைக் கொடுத்தாள்.

“அப்படியானால் நான் என்னை இன்னும் அடையாளம் காணவில்லை என்கிறாயா?”

“எனக்குத் தெரியவில்லை. ஆனால் தொழிலை தங்கள் அடையாளமாகச் சொல்பவர்களைப் பார்க்கும் போது எனக்குப் பாவமாக இருக்கும். நான் ஒரு ஆசிரியர் தெரியுமா உனக்கு?”

அவள் ஆச்சரியப்பட்டாள். ஏன் சொல்லவில்லை என்றாள். என் முழு நேர பணியே எழுதுவது என நினைத்ததாகக் கூறினாள்.

“இன்னும் நான் இயங்கும் பகுதிகளை உன்னிடம் சொல்லவில்லை சாரா. அது அவசியமும் அல்ல. அவை என் அடையாளமல்ல. நான் எழுத்தாளன் மட்டுமே. என்னிலிருந்து எதைப் பிரிக்க முடியாதோ அதுவே என் அடையாளம். தொழில்சார்ந்த முன்னேற்றங்களைத் தங்கள் முன்னேற்றமாகச் சொல்வதுகூட எனக்கு உடன்பாடில்லை சாரா.”

“இப்போது நான் என்ன செய்யலாம். என் மனநல மருத்துவர் தியானம் செய்யச் சொன்னார். ஆனால் எதையும் கவனித்து நினைக்க முடியவில்லை.”

“நான் அதற்கெல்லாம் முயற்சிப்பதே இல்லை சாரா. நீ எதை செய்யும்போது மகிழ்ச்சியடைகிறாயோ அதை செய். அந்தச் செயல்தான் எல்லாமும். அது மிக எளிய செயலாக இருக்கலாம். நான் எழுத்தாளன் என்பது ஒரு படைப்பைப் பிரசுரிப்பதால் அல்ல. நான் எழுதும் கணமே அந்த மகிழ்ச்சி என்னைத் தொற்றிக்கொள்கிறது. கலைகள் பிறரை மகிழ்ச்சிப்படுத்தும்தான். ஆனால் அது நம்மை மகிழ்ச்சிப்படுத்தாமல் பிறரை எப்படி மகிழ்ச்சிப்படுத்தும். என் மகிழ்ச்சியை யாரும் என்னிடமிருந்து அகற்ற முடியாது சாரா. அது பிறரை சார்ந்தது இல்லை. நான் அழுவேன். கோபப்படுவேன். பதற்றமாவேன். ஆனால் உள்ளுக்குள் என் அமைதி என்றுமே கெட்டது இல்லை. அடுத்த நிமிடம் என்னால் அமர்ந்து எழுத முடியும்.  என் கைகள் இல்லாமல் போனாலும் மனதில் எழுதிக்கொண்டிருப்பேன்.” இதை சொல்லும்போது மனம் கனத்தது. அப்போதே புறப்பட்டு வீட்டுக்குச் சென்றுவிடவேண்டுமென தோன்றியது.  இதை பேசிக்கொண்டிருப்பது யார் என்ற பயமும் சட்டென தோன்றியது.

சாரா கொடுத்த ஓவியம்

சாரா கொடுத்த ஓவியம்

“அப்படியானால் என்னை ஏதும் கலைகளில் ஈடுபடச் சொல்கிறாயா?”

“நிச்சயமாக இல்லை. உனக்கு வணிகம் பிடித்துள்ளதா? அதை செய்யும்போது மகிழ்ச்சி அடைகிறாயா? அதை செய். ஆனால் அது தொழில் எனச் செய்யாதே. வணிகம் ஒரு கலை. அதனால் பணம் வரலாம். ஆனால் பணம் வணிகத்தின் மையம் அல்ல. உங்கள் மொழி எழுத்தாளர்களின் நூல்கள் பல லட்சங்கள் விற்பனையாகும் இல்லையா? தமிழில் ஒரு கவிஞன் வெறும் நூறு பிரதியை விற்பனை செய்யும் நூலொன்றை பதிப்பகத்தில் கொடுத்துவிட்டு அதே கம்பீரத்துடன் தேசமெங்கும் சுற்றித் திரிவான். அந்த கம்பீரம் விற்பனையாகும் பிரதியால் அல்ல. அவனுக்குத் தான் யாரென்று தெரியும் என்பதால்.”

“எனக்குப் புரிந்துவிட்டது” என்றாள் சத்தமாக.

அவள் முகத்தைப் பார்த்தேன். ஏதும் தவறாகச் சொல்லிவிட்டேனா என மீண்டும் “சாரா ” என்றேன்.

“எனக்குப் புரிந்துவிட்டது நீ சொல்லாதே” என்றாள். அது உற்சாகத்தின் தொணி. என் மடிக்கணினியை கொஞ்ச நேரம் இரவல் கேட்டாள். கொஞ்சம் தடுமாற்றத்துடன் கொடுத்தேன். எனக்கு நிபுணத்துவம் இல்லாத ஒன்றில் மூக்கை நுழைத்துவிட்டேனோ எனக் குழப்பமாக இருந்தது. மறுநாள் காலையில் வரவேற்பறை மேசையில் மடிக்கணினி இருந்தது. அவள் டாக்டரிடம் சொல்லி அதிகாலையிலேயே புறப்பட்டிருந்தாள். கண்டிக்குச் செல்வதாகச் சொன்னாளாம்.

index 02மடிக்கணினி ஓரம் ஒரு தாளில் கடிதம் எழுதி வைத்திருந்தாள். தாளின் மறுபக்கம் ஓர் ஓவியம். அதில் அவள் ஏறிய, பார்த்த மலைகளை வரைந்திருந்தாள். என்னை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டதாகக் கூறியிருந்தாள். முக்கியமாக நான் அழகானவன் எனச் சொல்லியிருந்தாள். அவள் பார்த்த மலைகளை எனக்குப் பரிசாகக் கொடுத்திருந்தாள். அது மிக அழகான கடிதம். மலைகளில் அலைந்துகொண்டிருப்பவளின் கடிதம்.

கடிதத்தை மடித்து வைத்து நான் மெதுவாக மொட்டை மாடிக்கு ஏறி யோகா செய்ய தயாரானேன். தொலைவில் தென்னந்தோப்புகளைத் தாண்டி கடல் தெரிந்தது. பறவைகள் சூழந்த வானம். இந்த மொத்தப் பிரபஞ்சத்தில் நான் எவ்வளவு சிறியவன் என்றும் எவ்வளவு பெரியவன் என்றும் மாறி மாறி தோன்றியது. பிரணயாமம் செய்ய மூச்சை இழுத்தபோது இரண்டும் வெவ்வேறு இல்லை எனப் புரியத் தொடங்கியது.

தொடரும்

(Visited 642 times, 1 visits today)