மனசலாயோ 7: தன்செயலெண்ணிய தவிப்பு

ma.navin21 நாட்கள் சிகிச்சைக்காக ஒதுக்கியிருந்தேன். முதல் வாரம் கடந்ததுமே கழுத்து வலி குறையத்தொடங்கியது. எனவே 14வது நாளுடன் புறப்பட்டுவிடலாம் எனத்தோன்றிக்கொண்டே இருந்தது.

சிகிச்சை காலத்தில் காலை 6.30 மணிக்கு எழ வேண்டும். சில ஆயுர்வேத மருந்துகளை உண்டுவிட்டு, ஒன்றரை மணி நேரம் எளிய யோகா செய்வேன். ஏழு நாட்கள் கடந்தபோது ஜிம்னாஸ்டிக் நாடாபோல உடல் சிக்கல் இல்லாத வளைவுகளுக்கு ஒத்துழைத்தது. 30 நிமிட ஓய்வுக்குப்பின் கசாயம் கொடுப்பார்கள். அதன் கசப்பு அடங்கியதும் காலை பசியாறை. 9.30க்கு மசாஜ் தொடங்கி 11.30 க்கு முடியும்.

முதல் நான்கு நாட்கள் கழுத்து வலி என துடித்துக்கொண்டிருந்ததால் கிழி ஒத்தடத்தில் உஷ்ணத்தை அதிகமாக்கியதில் கழுத்து கொப்பளித்துக் காயமானது. 30 நிமிடம் எண்ணெயை உடம்பில் ஊரவைத்து குளித்துவிட்டு மீண்டும் மேலே ஏறினால் மதிய உணவு தயாராக இருக்கும். பெரும்பாலும் பழங்களைதான் மதியமும் இரவும் உண்டேன்.

அங்கிருந்த காலங்களில் உணவுக்கட்டுப்பாட்டை நானாகவே தீவிரப்படுத்திக்கொண்டேன் எனலாம். சமையல் பொறுப்பில் இருந்த லில்லி முழுக்கவே தாய்மை குணத்தால் நிரம்பியிருந்தார். அவரால் நான் பழங்களை மட்டுமே சாப்பிடுவதைச் சகிக்க முடியவில்லை. ‘டாக்டருக்குத் தெரியாமல் முட்டை பொரித்துக்கொடுக்கவா? ஸ்ட்ராங்கா டீ போட்டுத்தரவா?’ எனக்கேட்டுகொண்டே இருப்பார். கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது பிஸ்கட்டுகளை எடுத்து வந்து வைத்து ‘சாப்பிடு சாப்பிடு’ என்பார். எந்த அன்னைக்கும் உலகில் எங்கோ ஒரு கோடியில் இருக்கும் குழந்தைக்கு உணவில்லை என்றால் மார்பு சுரந்து விடுகிறது. ஒருநாள் அவரை அமரவைத்து நான் ஒரு வேட்டை விலங்கு என்றும் அதுவரை நான் சாப்பிட்டுள்ள மாமிசங்கள் பற்றியும் சொன்னபோது வாயைப் பொத்திக்கொண்டார். பின்னர் அவரே என் டயடிஷனாக மாறிப் போனார்.

அந்தி நெருங்கும்போது நான்கு கிலோ மீட்டர் நடந்தால் அலைகளற்ற செத்த கடல் ஒன்று இருந்தது. நிறைய தென்னை மரங்களைக் கடந்து செல்லும் பாதை அது. முதல் நாள் வழி கேட்டுக் கேட்டே சென்றேன். அடுத்தடுத்த நாட்களில் வழிகாட்டிய குளக்கரையில் அமர்ந்திருக்கும் இளைஞர்களும் பெட்டிக்கடைக்கார முதியவரும் நட்பாய் புன்னகைக்கத் தொடங்கினர். அறிமுகமில்லா பிரதேசத்தில் வழி கேட்பது புதிய மனிதர்களிடம் கொஞ்சம் பிரியத்தையும் புன்னகையையும் பகிரவும் பெறவும் உதவுகிறது. Waze அறிமுகமான பின்னர் மலேசியாவின் முச்சந்திக் கடைகளில் இருக்கும் தன்னார்வ வழிகாட்டிகள் நுட்பம் குறைந்தவர்களாகிவிட்டதை நினைத்துக்கொண்டேன். அவர்கள் வழி தெரியாதவர்களுக்குச் சொல்லவென வைத்திருந்த சிறப்பு அடையாளங்களை மறந்தவர்களாய் உள்ளனர். அவரவர் செல்லும் வழி அவரவருக்கு.

பெரும்பாலும் புகைப்படங்கள் எடுப்பதில் விருப்பம் இல்லாமல் போனது. நடையின்போது கைப்பேசியை எடுத்துச்செல்லவும் இல்லை. அப்படி எடுத்தால் ஒவ்வொரு அங்குலத்தையும் சேமிக்க வேண்டிவரும் என்பதுபோல கேரள மண் குளிர்ச்சியைக் கொடுத்தது. டாக்டர் மட்டும் அவ்வப்போது எனக்குத் தெரியாமல் ஓரிரு படங்களை எடுத்து வாட்சப் செய்தார். தென்னைகளினூடே நடப்பது என்னை ஒவ்வொரு முறையும் சிறுவனாக்கியது. ஏழு வயதில் கம்போங் லாமாவில் இருந்தபோது வீட்டுக்குப் பக்கத்திலேயே தென்னை மரம் இருந்தது. ஒற்றைத் தென்னை. காலையில் அரிசியை வாரி இறைத்தால் புறாக்கள் அதன் அடியில் குழுமும். தென்னை பிற மரங்கள் போல உடலுக்குக் குளிர்ச்சி தர படைக்கப்பட்டதல்ல. அது மனதிற்குள் குளிர்ச்சியை உந்துகிறது. எப்போதாவது வீட்டுக்குப் பக்கத்தில் விழும் தேங்காயைப் பொறுக்கி எடுத்து வந்து உரித்தால் உள்ளே தேங்காய் முட்டை இருக்கும். சிறியதாக இருக்கும் முட்டையிலேயே சுவை அதிகம். அது பெருக்கும்போது தேங்காயில் நீர் வற்றுகிறது. சுவையில்லாமல் ஆகிறது. தேங்காய் முட்டைக்காக எனக்கும் அக்காவுக்கும் போட்டி நடக்கும். ஆத்தா அதனைச் சரிசமமாகப் பிளந்துகொடுப்பதாகச் சொல்வார். அதில் ஒரு பகுதி அவர் வாய்க்குச் சென்றுவிடும். குரங்கு பூனைக்கு அப்பத்தை பிரித்துக்கொடுத்த கதைபோல. எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது.

சரியாகச் சூரிய அஸ்தமனத்தில் மொட்டை மாடியில் இருப்பதை உறுதி செய்துகொள்வேன். சூரியன் கடலுக்குள் இறங்குவதை ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மற்ற நேரங்களில் பனி மறைத்துக்கொள்ளும். பனிக்கூட்டத்தின் அலைகள் செந்நிறக் கீற்றுகளைப் பரப்பி வைத்திருக்கும். அருகில்தான் கன்யாகுமரி. 2005இல் ஒரு மாதம் தமிழகத்தைச் சுற்றியபோது கன்யாகுமரியில் தங்கி சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்க்க முயன்றேன். எல்லோரும் எதையோ பார்க்கிறார்களே என்றுதான் பார்த்தேன். அன்றும் பனிமூடிக்கொண்டதாக நினைவு. அப்படி மூடாவிட்டாலும் ஏன் அதைப் பார்த்தேன் என்றே புரிந்திருக்காது. அஸ்தமனச் சூரியனின் அழகு அது தன்னைச் சுற்றி உள்ள பிறவற்றை என்னவாக மாற்றிவிடுகிறது என்பதில் உள்ளது. ஒரு தேவதை ஒரு சில நொடிகள் நுழைந்து செல்லும் இருண்ட அறைபோல, ஒரு மனிதனிடம் சட்டென உதித்து மறையும் கவித்துவம் போல, காமத்தின் முயங்கலில் சட்டென கண்டடையும் மனமற்ற வெறுமைபோல கடலும் வானமும் அந்தச் சொற்பமான நேரத்தில் முற்றிலும் புதிய ஒன்றாக மாறிவிட்டு தன்னிலைக்குத் திரும்பும்.

காலையில் காகங்கள் சூழந்திருக்கும் மொட்டைமாடியில் இருந்தபடி உச்சிவெயிலில் பருந்துகளைப் பார்க்கலாம். அது அவை வேட்டையாடும் நேரம். கடலுக்கு மேல் பறந்தபடி இருக்கும். தொலைநோக்கியில் கடலைப் பார்த்தால் மீனவர் படகுகள் தெரியும். பருந்துகள் ஒவ்வொரு வட்டமும் ஒவ்வொரு இடத்தை அளந்தபடி நகரும். எல்லாப் பறவைகளும் குளிர்ச்சியைத் தேடி ஓட அந்த உச்சிவெயிலில் தனதாக்கிக்கொண்ட வானத்தை பருந்துமட்டும் வட்டமிடும். ஒரு முறை திமிங்கலத்தின் வால் அலையை உண்டாக்கிச் சென்றதை தான் பார்த்ததாக ஹரி சொன்னார். மாலையில் சூரியன் மறைந்த பின்னர் பெரிய வௌவால்கள் பறப்பதைப் பார்க்கலாம். யோகா செய்து முடித்து சவாசனத்தில் மல்லாந்திருக்கும்போது முக்கோணங்களைக் கலைத்துப்போட்டதுபோல அதன் இறக்கைகள் வெற்றுவானத்தில் அசைந்து செல்லும்.

இரவில் லில்லி போய்விடுவார். ஒரு முதியவர் மட்டும் என் பாதுகாப்புக்காகத் தங்கிவிடுவார். அவர் என்னைப் பாதுகாக்கிறாரா நான் அவரைப் பாதுகாக்கிறேனா எனக் கடைசி வரை குழப்பமாகவே இருந்தது. தனிமை என்பது என்ன? யாருடனும் பேசாமல் இருப்பதா? இல்லை; அது நம்முடன் நாம் ஆழச்சென்று பேசுவது. ஒரு மலை தன் உச்சியை அடைய பல வழித்தடங்களை வைத்திருப்பதுபோல மனம் பல திறப்புகளை வைத்துள்ளது. எளிய மனிதனின் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் அந்தப் பாதைகளில் ஏதாவது ஒன்றில் பயணித்துச் செல்ல வைக்கிறது. எழுத்தாளர்கள் தங்கள் உருவாக்கும் கதாபாத்திரங்களின் நிறத்தை அந்தப் பாதையில் சென்றே பெறுகிறார்கள். தங்கள் உருவாக்கும் ஆயிரம் ஆயிரம் கதாபாத்திரங்களின் நிறங்களை தங்களிடம் இருந்தே பெறுகிறார்கள். உண்மையில் ஒரு மனிதன் ஆயிரம் ஆயிரம் கதாபாத்திரங்களைத் தனக்குள் கொண்டவன். அப்படி இல்லை என பாவனையும் செய்பவன்.

தனிமை மட்டுமே ஒருவனை அந்த எண்ணற்ற பாதைகள் வழியாகப் பயணிக்க வைக்கிறது. அது அச்சம் தரக்கூடிய பாதை. அந்தப் பாதை முழுக்கவும் நமது எண்ணற்ற கதாபாத்திரங்கள் எப்போது நாம் அவற்றை மீண்டும் தேர்வு செய்வோம் எனக்காத்திருக்கிறது. நான் ஒவ்வொரு முகத்தையும் தரிசித்து வந்தேன். எவ்வளவு ஆபத்தானவன் நான் என்றும் எவ்வளவு கருணையானவன் நான் என்றும் மாறி மாறித் தோன்றிக்கொண்டே இருந்தது.

இருள் கூடக்கூட கொசுக்களின் தொல்லை அதிகரித்தது. அதைவிட இன்னும் மிகச் சிறிய உயிர் எதற்காவது கொசுவும் ஒரு பறவை எனத் தோன்றக்கூடுமா என சம்பந்தம் இல்லாமல் யோசித்தேன். எல்லாம் நமது கற்பிதம்தானோ.

தொடரும்

(Visited 465 times, 1 visits today)