தேர்ந்தெடுத்த நூல்களினை வாசிக்கும் பழக்கமுள்ளோருக்கு மா.சண்முகசிவா சிறுகதைத் தொகுப்பினை உள்வாங்கி கொள்ள ஏதுவாக இருக்கும். அதற்கு அவரின் எளிய உரைநடை சொல்லாடலே காரணமாகும். மா.சண்முகசிவா சிறுகதைத் தொகுப்பை வாசிக்கையில் இத்தொகுப்பில் தற்கால சமூகப் பிரச்சனைகளின் ஊடே வாழ்வாதார சிக்கலை எதிர்நோக்கிய விளிம்புநிலை மக்களின் அவலநிலையினை மையமாகக் கொண்டுள்ளது எனப் புரிந்துகொள்ளமுடியும். கதையில் வரும் மையக் கதாபாத்திரங்கள் தங்களுக்கு நேரும் இன்னல்களுக்கு நடுவே, தங்களது இறுதி மனிதத்தை எவ்வாறு தக்க வைத்துக்கொள்கிறார் என்பதை சண்முகசிவா நுட்பமாகச் சித்தரித்துள்ளார்.
இச்சிறுகதைத் தொகுப்பானது மொத்தம் எட்டு கதைகளினை உள்ளடக்கியது. எளிய இலகுவான மொழிதனில், நேரடியான உரையாடலினை கொண்டிருப்பினும் உள்ளக்கிடங்கில் சிறிதாயினும் வாசகனுக்கான முடிவற்ற அக தரிசனத்திற்குள் மூழ்கடிக்க வைக்கின்ற கதைகள். கதைகளில் வலம் வரும் கதாபாத்திரங்கள் நம் சமூக அடுக்குகளில் நம்மினூடே உடன் பயணிக்கும் அல்லது பயணித்து கொண்டிருப்பவர்களாக இருப்பதுடன் நம் கரம் பிடித்து அவர்களோடு நம்மையும் வசிப்பனுவத்தின் வாயிலாக உள்ளிழுத்து பயணிக்க வைக்கிறார் மா.சண்முகசிவா. அவர் அழைத்து செல்லும் அக உலகத்தினுள் நம்மை நாமே பகுப்பாய்ந்து கொள்வதற்கான இடைவெளியையும் செதுக்கிச் செல்கிறார்.
இத்தொகுப்பில் வரும் பெரும்பாலான சூழல் தோட்டப்புறம் மற்றும் மருத்துவமனை சார்ந்ததாக உள்ளது. தோட்டத்துண்டாடலுக்குப் பின் ஏற்பட்ட இடமாற்றத்தால் வாழ்வாதார சிக்கலை எதிர்நோக்கிய விளிம்புநிலை மக்களின் அவலநிலையின் தாக்கத்தினை இவர் கதைகளில் காண முடிகிறது. ஆனால் எல்லாவற்றையும் மீறி பெண்கள் சார்ந்த இவரது பார்வை இன்னும் நுட்பமானது. மா.சண்முகசிவாவின் கதைகளின் பிரதானப்பாத்திரங்கள் பெண்களே. கண்ணீர் சிந்தும் பெண்கள் மட்டுமல்ல அதிலிருந்து மீளும் பெண்களும் மீள உதவும் பெண்களும் என பெண்களால் ஆன உலகை வடித்துள்ளார் சண்முகசிவா.
புலிசிலந்தி கதையினில் வரும் அகிலா எஸ்.பி.எம் தேர்வை எதிர்நோக்கும் மாணவி. அவளில் தந்தையின் மரணத்திற்கு பிறகு பிள்ளைபேறு அற்ற தன் மாமா, அத்தை வீட்டில் வளர்கிறாள். அத்தை இனிப்பு நீர் வியாதியால் வலது கால் துண்டிக்கப்பட்டவர், மாமாவினால் பாலியல் கொடுமைக்குள்ளாகும் அகிலா ஒரு கணம் பெற்றதாயிடமே சென்றுவிட எத்தனிக்கையில் அப்பாவின் மேனேஜரின் அறையினுள் தன் தாயானவள் இருப்பதை கண்ணுற்றவள் உடல் நடுக்கம் உடலோடு போக, மனமானது அத்தை நினைவாகி மீண்டும் அத்தையின் வீடு நோக்கிப் பயணிக்க தொடங்குகிறாள். சண்முகசிவா இக்கதையின் காட்டியுள்ள முடிவு பல எண்ணங்களைத் தூவக்கூடியது. ஏன் அவள் மீண்டும் மாமாவின் வீட்டுக்கே செல்கிறாள்? அவள் அம்மாவை அவள் அந்தரங்கமாக உணரும் தருணம் அது. தனக்கு நிகழும் கொடுமையை மறைக்கவும் அது தன் மகளுக்கு நடக்காமல் இருக்கவுமே அம்மா மகளை வெளியில் அனுப்புகிறாள். தன் மகள் நன்றாக வாழ்வாள் என்ற நம்பிக்கையில் மட்டுமே அம்மா தனக்கு நிகழும் கொடுமைகளைச் சகித்துக்கொள்கிறாள். அதை அகிலா கெடுக்க விரும்பவில்லை. உண்மையில் அகிலா யாருடைய நிம்மதியையும் கெடுக்க விரும்பவில்லை. தன்னை அழித்து அத்தையைக் காத்தவள் மீண்டும் அம்மாவின் நம்பிக்கையைக் காக்க அதே குளிக்குள் மீண்டும் விழுகிறாள். இக்கதையில் தீர்வு இல்லை. ஒரு பெண்ணின் முடிவுறாத துக்கத்தின் கண்ணீரே பிசுபிசுக்கிறது.
துர்க்காபாய் சிறுகதையும் அவ்வகையில் ஒரு சிறுமியின் துன்பத்தைச் சொல்லும் கதைதான். பாலியல் கொடுமையினால் தன் வயிற்றினுள் பதினான்கு வார சிசுவை சுமந்தபடி மருத்துவமனைக்கு சமூகநல அதிகாரியினால் அனுப்பப்படும் பன்னிரெண்டே வயது நிரம்பிய சிறுமியான தினேஸ்வரியை நோக்கி பயணிக்கிறது கதை. குழந்தைத்தனம் மாறாத பிஞ்சு உடம்புதனில் மற்றொரு பிஞ்சு உடம்பு சேர்ந்து கொண்டது. இக்கதைக்களமானது மருத்துவமனையினை கொண்டிருப்பதோடு அம்மருத்துவமனைதனில் குழந்தைகள் மருத்துவரான செரினா லிம் மற்றும் ஆயம்மாவாக வரும் துர்க்காபாய் (தமிழ் குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட சீனப் பெண்) இருவருமே வெவ்வேறான சமய பின்னணியினை கொண்டிருந்தாலும் இவ்விருவரும் அச்சிறுமியின் நிலை கண்டு மனம் வேதனை கொள்வதோடல்லாது தங்களாலான உதவியினை செய்ய தயங்காதிருந்ததை, “இந்த பெண்ணை நாம் தான் கவனிக்கணும் சிவா” என்று செரினா லிம் கூறுவதிலிருந்தும் “என்ன அநியாயம் இது… பச்ச புள்ளய இப்டி பண்ணின பாவிய சும்மா விடக்கூடாது டாக்டர்” என்று துர்க்காபாய் குமுறுவதிலிருந்தும் அறிய முடிகிறது.
மேலும் அரசியல்வாதிகளில் ஒரு சிலர், தான் செய்வது சமூகசேவை என்பதனை மக்கள் அறியவேண்டுமென அரசியல் லாபத்திற்காக தங்களின் செயல்பாடுகள் சம்பந்தப்பட்டவர்களை பாதிக்குமா என்றுணராது தினேஸ்வரியைக் கொண்டு நடத்தும் நாடகங்களையும் நுட்பமாகக் கேலி செய்துள்ளார் சண்முகசிவா. மனிதர்கள் மத பேதங்களின்றி தன் விழி முன் அல்லலுறும் எத்தகைய ஜீவனையும், வாய் திறந்து பேசும் மனிதராயினும் வாய் பேச மிருகமாயினும் அவர்களின்/அவைகளின் துயர் கண்டு வேதனையடையும் அகத் தெளிவே போற்றுதலுக்குரியதாகிறது. சிறுமியின் பெற்ற தாயே கணவன் சிறைச்சாலைக்குச் சென்றபின் குடும்பசூழல் காரணமாக வேறொருவனோடு வாழ்வதால் தன் பிள்ளையை (கர்ப்பமான சிறுமியை) வைத்துக்கொள்ள முடியாது என்கிறார். இந்நிலையில் அச்சிறுமிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்றாலும் தானே முன்வந்து பாதுகாப்பளிக்கிறார் துர்க்காபாய் என கதை முடிகிறது. குழந்தைத்தனம் மாறாத தினேஸ்வரியை துர்க்காபாய் தன் குழந்தையாக அனைத்துக்கொள்ளும் இடத்தில் தன்னைக்காட்டிலும் உயர்ந்திருக்கும் அவளை போற்றுகிறார் கதையில் வரும் மருத்துவர். அந்த மருத்துவர் சண்முகசிவாதான் என்றால் தன்னை கதையின் வழி சுயவிமர்சனம் செய்துக்கொள்ளும் அவர் பண்பையும் போற்றலாம். எளியவர்கள் கருணை காட்டுவது எளியவர்களாகவே இருப்பதை சுட்டிக்காட்டும் அருமையான கதை இது.
கனவு கதையில் தோட்டத் துண்டாடலினால் பாதிக்கப்பட்ட வயதான பாட்டி, அடுத்த தலைமுறையாக அவர்தம் பிள்ளைகளுடன் பிழைப்பு தேடி தோட்டத்தினை விட்டு வெளியேற அதன் விளைவால் எதிர்நோக்கும் வாழ்வாதார சிக்கல்களும் அவலமும் நெருக்கடிகளும் அடுத்தடுத்த தலைமுறைகளின்பால் எத்தகையிலான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதனை காட்சிப்படுத்திச் செல்கிறது. கதையானது என்னமோ பாட்டியின் பேத்தியை வட்டமிட்டே சென்றாலும் அக்கதையுனுள் அடுத்த தலைமுறையினை பார்த்துவிட்ட பாட்டியின் வாழ்வியல் சுழலானது ஏழ்மையை உரைத்து செல்வதாக உள்ளது.
பாட்டியின் கணவர் மறைவிற்கு பிற்பாடு இரண்டாவது மகளை உறவினர் ஒருவர் வளர்ப்பதற்கு தத்து கொடுத்துவிட்டதாக கூறுவதும், பாட்டியினை காண மின்தூக்கி பழுதடைந்த ஏழாவது அடுக்குமாடி வீட்டிற்கு மூச்சிரைக்க படியேறிச்சென்றடையும் டாக்டர் அங்கு அமர்வதற்கென்று கால் வளைத்திருந்த ஒரே பிளாஸ்ட்டிக் நாற்காலி மட்டுமே இருப்பதாய் குறிக்கும் இடமானதும், பாட்டியின் வாழ்வாதார நிலைப்பாடு தோட்ட துண்டாடலின் பிற்பாடும் எவ்வித மாற்றமில்லாதிருப்பதை காட்டுகிறது. என்றைக்காவது பரந்து விரிந்த திடல் கிடைக்கும் என பக்கத்து வீட்டு பையன் தான் வைத்திருக்கும் பந்தினை விரல்களில் வைத்து விளையாடுவதாய் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வரிகளானது தோட்ட துண்டாடலின் அவநிலையினால் அடிமட்ட மக்களின் சராசரியான விளையாட்டு பருவ வயதிலான ஆசைகள் கூட துண்டாடப்பட்டுள்ளதை இயம்பிச்செல்கிறது.
இவ்வாறு ஒரு சமூகத்தின் அவலத்தை அடியில் வைத்து அதற்கு மேல் அருணா எனும் சிறுமியின் கதையைச் சொல்லிச்செல்கிறார் சண்முகசிவா. பாட்டியின் பேத்தியாக வரும் அருணா புரிந்து கொண்டதை கனவின் வாயிலாக நகர்த்தி செல்லும் கதையோட்டமானது இச்சிறுகதைக்கான இடைவெளியை வாசகனுக்கு இட்டுச் செல்கிறது. இக்கதையில் வரும் அருணாவின் அம்மா வாழ்வாதார நெருக்கடிகள் உந்தித்தள்ள சமூகத்திற்கு புறம்பான தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் தான் பெற்ற பிள்ளையான அருணாவினை இத்தகைய சீர்கேடுகள் படியாதிருக்க வேண்டுமென்றெண்ணி பாட்டியிடம் பிள்ளையைக் கொடுத்து வளர்க்கும் இடமானது ஒரு சராசரி மனிதரின் ஒழுக்க பிறழ்வுகளுக்கு வாழ்வாதார அவலநிலையின் தாக்கமும் ஒரு காரணமாக தொக்கி நிற்பதை காண முடிகிறது.
மிக நுட்பமாக அருணா தான் அம்மாவைப் போலீஸிடம் மாட்டிவிட்டதைக் கனவாகச் சொல்லும்போது அதுவரையும் அவள் கனவெனச் சொல்லிய அனைத்தையும் மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்ய கதையை மறுவாசிப்புக்கு உட்படுத்தியபோதுதான் இச்சிறுகதையின் உத்தி அபாரமானது எனப் பிடிப்பட்டது.
வைரத்தூசி சிறுகதையில் வருபவளும் தான் ஏன் பிறந்தோம் என்றெண்ணி மரணிப்பதே எல்லா சிக்கலுக்கும் தீர்வென்று என்னும் பலவீனம் கொண்ட விளிம்பு நிலை பெண்தான்.
பார்வதி, அவள் குழந்தை நாகு, எண்பது வயது தாத்தா இவர்களை சுற்றி வண்ணமிட்டு செல்கிறது கதை. மகனுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக தோட்டத்திலிருந்து கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு தன் எண்பது வயது தாத்தாவை அழைத்து கொண்டு தனக்கான வாழ்வை நொந்தபடி மருத்துவமனைக்கு வந்திறங்கியவள் அங்கு தனி ஒரு பெண்ணாக யாரை சென்று காண்பதென்று தெரியாது அங்கு நடமாடும் மனித இயந்திரங்களில் யாரிடமாவதேனும் வழி கேட்கவும் திராணியற்று தவித்திருக்கையில் அங்கு மருத்துவ வளாகத்தை சுத்தம் செய்யும் ஆயாம்மா உதவுவது, தாத்தாவிடம் மகனை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு ஆயம்மாவை தேடி சென்று வழியை தவறவிட்டு பரிதவிக்கும் உணர்வெழுச்சிகளை நம்மிலும் கடக்க வைத்திருக்கிறார் ஆசிரியர்.
பால் மரங்களுக்கு நடுவே மரம் வெட்டும் பொழுதுகளில் தோன்றாத தனிமை பொதுமருத்துவமனையில் அந்நியபட்டு நிற்பதாய் அவள் உணரும் தருணமானது நகர மாந்தர்களில் சுயநலத்தன்மையையும் அங்கு மனிதத்தை காணவில்லை என்பதனையும் சொல்லாமல் சொல்லி செல்கிறது. குழந்தைக்கு மருத்துவம் பார்க்க வரும் இடத்திலும் சரி எஸ்டேட் ஆசுபத்திரியில் வயிற்று வழியென்று செல்கையில் ஆண்களில் சிலரின் கீழ்மையான காமப் பார்வைகள் அவளை உடலாலும் மனதாலும் வதைக்கிறது. கோலாலம்பூர் மருத்துவமனைக்கு வந்திறங்கிய பொழுதினில் இருந்த வாழ்வதற்கான பற்றற்ற நிலையானது இருபது நிமிட தொலைதலால் தாயைக் காணாது தவித்திருந்த மகன் நாகுவின் வழி மீட்டெடுக்கப்பட்டது.
இக்கதையிலும் அந்தப் பெண்ணுக்கு உதவ துப்புறவு பணி செய்யும் பெண்ணே வருகிறாள். இதுபோன்ற பாத்திரங்களை சண்முகசிவா திட்டமிட்டு அமைப்பதாகத் தெரியவில்லை. ஒரு மருத்துவரான அவருக்கு விளிம்பு நிலை மக்கள் மீதான நம்பிக்கையும் அவர்களிடம் மனிதம் இன்னும் எஞ்சியுள்ளது என்ற எண்ணமும் இருப்பதாகவே புரிந்துகொள்கிறேன்.
சண்முகசிவா கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் புரட்சியோ பிரச்சாரமோ செய்யவில்லை. மாறாக அம்மனிதர்களாகவும் பலவீனங்கள் கொண்டோராகவும் புற/அக சிக்கல்களில் சிக்குண்டு போராட்டமிகு வாழ்வினை நடத்துபவர்களாகவும் காட்சிப்படுத்தப்படுகின்றனர். ‘புலிசிலந்தி’, ‘துர்க்காபாய்’, ‘கனவு’ மற்றும் ‘வைரத்தூசி’ போன்றே கதைகளில் வரும் பெண் கதாபாத்திரங்கள் தனக்கு நேரும் இன்னல்களுக்கு எதிர்த்து போராடாமல் இயலாமை கொண்டோராக வருகின்றனர்.
இத்தொகுப்பில் சற்று வித்தியாசமான கதைகளாக மெர்சிடிஸ்பென்சும் முண்டகண்ணியம்மனும் மற்றும் சாமிகுத்தம் ஆகியவற்றைக் குறிப்பிடவேண்டும். இவ்விரண்டு கதைகளும் மூட நம்பிக்கையினை நிகழ்கால அரசியல் போக்கினையும் சிந்திக்க வைக்கும் விதமாக நையாண்டி தன்மையோடு நகர்த்தியுள்ளளார். படித்த மெத்த மேதாவியானாலும் படிக்காத பாமாரனானலும் பக்திக்கு முன் மூடநம்பிக்கையானது சிறிதே கேள்விக்கிடமானாலும் எவ்விதமானதொரு பதில்களுக்கும் இடமளிக்காது, சந்தேகத்திற்கும் உற்படுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் பகுத்தறிந்திட இயலாத மனப்போக்கினையும் வாசிக்கும் வாசகனுக்கு நையாண்டி தன்மையுடன் கொடுத்திருக்கிறார் சண்முகசிவா. இக்கதையினை வாசித்து முடிக்கையில் நாமும் இப்படிபட்ட சமூக அடுக்கு மக்களினூடே பயணிக்க வேண்டியுள்ளதை சொல்லி செல்கிறது.
ஒரு கூத்தனின் வருகை சண்முகசிவாவின் முத்திரைக்கதை எனலாம். இந்நாட்டில் பலகாலமாக பேசப்பட்டு வரும் கதை. அவரது வீடும் விழுதுகளும் என்ற தொகுப்பிலிருந்து இணைக்கப்பட்டுள்ளது.
நூற்றி ஐம்பது வருடங்களாக தெருக்கூத்து நடத்திவரும் பரம்பரையை சேர்ந்த ஒரு கூத்தாடியின் கதை. தன் கலையானது அழிந்து வருகையில் அதனால் வருமானமற்றிருந்தாலும் தன் மூதாதையர் போற்றி செய்து வந்த தெருக்கூத்தினை இகழாது; ஒரு கலையானது மனிதனின் மேன்மையான உணர்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படும் என்பதனை உள்வாங்கிய கலைஞன் அவர். இப்படிப்பட்ட கலைஞர் கதைசொல்லியிடம் கடனாக ஐம்பதாயிரம் வாங்கிவிட்டு சொல்லிக்கொள்ளாமல் ஊருக்கு திரும்பிவிடும் பட்சத்தில் கதைச்சொல்லிக்கு சந்தேகம் எழுகிறது. அது வலுத்து கதைச்சொல்லி தன்னைத் தானே நொந்துக்கொள்கிறார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அக்கலைஞரிடமிருந்து வரும் பல லட்சத்துக்கு விலைபோகும் சொத்துபத்திரத்துடன் கூடிய கடிதமானது விற்று பணத்தை கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து விடுமாறும் தனக்கென்று எதுவும் வேண்டாமென்று சொல்லும் பரந்த மனதுடன் முத்துசாமி தம்பிரான் கதையின் முடிவில் நம் மனதில் ஓரிடத்தை தக்க வைத்து கொள்கிறார். இக்கதாபாத்திரம் இன்னும் பல ஆண்டுகள் மலேசிய வாசகர்கள் மத்தியில் நிலைத்து வாழக்கூடும்.
இத்தொகுப்பினில் உள்ள சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒன்றுதான் தோன்றியது. இவ்வுலகம் இறைத்தன்மையுடன்தான் உள்ளது. இறைத்தன்மை என்பதை அன்பால் ஆன உலகம் எனப் பொருள் கொள்ளலாம். அதை உணர்ந்து வாழ்பவரை மனிதன் என்றும் உணராதவை மிருகம் என்றோ வரையறை செய்கிறோம். சண்முகசிவா மூலமாக இருக்கும் அன்பெனும் இறைத்தன்மையை மட்டுமே தன் புனைவில் உலகாகப் பார்க்கிறார்.
மா.சண்முகசிவா சிறுகதைகள் குறித்த பிற கட்டுரைகள்: