இலட்சுமணக்கோடுகள்

09picஇராமயணத்தில் சீதையைக் கவர்வதற்காக இராவணன் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க இலட்சுமணன் கோடு ஒன்றை வரைந்து அதற்குள்ளே சீதையை இருக்கச் சொன்னதாக தொன்மக்கதை இருக்கிறது. அப்படியாகப் பெண்களைப் பல காரணங்களுக்காக நிரந்தரமாகக் கோடு போட்டு வைத்திருக்கிறது சமூகம். எப்பொழுதுமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் நிகழ்த்திக் கொள்ளவும் கலை கட்டற்ற வெளியை அளிக்கிறது. அப்படியாகத் திரைக்கலை அளித்திருக்கும் வெளியைப் பயன்படுத்திப் பெண்கள் எவ்வாறு பொதுவெளியில் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை உலக சினிமாக்களைப் பார்த்து அதன் காட்சியனுபவம், அரசியல் இவற்றைச் செறிவாக நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் இரா.சரவணதீர்த்தா. உலகத் திரைப்பட வரிசையில் பெண்களின் வாழ்வை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட 10 படங்களின் காட்சி மொழியின் விரிவு, அரசியல், சமூகப் பின்னணி ஆகியவற்றை ஊதா நிற தேவதைகள் கட்டுரை தொகுப்பு விவரிக்கிறது.

இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது இத்தகைய படங்களின் மையமான நோக்கம் என்பது என்ன? எந்தப் பார்வையாளர்களை மையப்படுத்தி இவை எடுக்கப்பட்டிருக்கின்றன? போன்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. இந்தப் படங்கள் யாவும் சமூகக் கட்டமைப்பும், சிந்தனை முறையும் மதக்கோட்பாடுகள் ஏற்படுத்தியிருக்கின்ற இடுங்கலான பாலியல் கற்பிதங்களும் எவ்வாறு பெண்களைக் குறுக்குகிறது என்பதைக் காட்டிச் செல்கின்றன. இப்படங்களின் பார்வையாளர்கள் யாராக இருக்கக்கூடும் என்பது முக்கியமான கேள்வி.

ஈரானில் வீட்டுச் சிறையில் இருக்கும் ஜவாஹர் பனாஹி, எகிப்தில் பிறந்து பிரான்ஸில் வளர்ந்து எகிப்தில் கெய்ரோ 678 படம் எடுக்கும் முகமட் டியாப் போன்ற இயக்குநர்கள் தொடர்ந்தாற்போன்று அரசு, ‘மதக்காவலர்களின்’ கெடுபிடிகளுக்கு இடையில் படமெடுத்து வெளிநாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களில் அப்படங்களைத் திரையிட்டு விருதுகளையும் உலகக் கவனத்தையும் பெறுகிறார்கள். இலக்கியம் ஆழ்மனத்தைச் சார்ந்து இயங்குகிறது. அதிகார நெறிகள், ஒழுக்கவிதிகளால் கட்டுப்படுவதில்லை என்கிறார் ஜெயமோகன். அவரின் அக்கூற்று திரைப்படைப்புகளுக்கும் பொருந்தும். தன்னைப் பாதிக்கும் ஒன்றைத் தன் படைப்பில் வெளிப்படுத்தும் திமிர்வைப் படைப்பாளுமை அளிக்கிறது. எனவே, இப்படங்களில், மிகப்பெரும்பாலனவை அந்தந்த நாட்டுப் பெண்களின் நிலையை, உலகைக் காத்திரமாகக் கவனித்து வரும் திரைப்பார்வையாளர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சிகளே. வெளியில் நமக்கான நம்மைக் கவனிக்கும், நம் குரல் ஒலிக்கும் வெளி ஒன்றின் மீதான நம்பிக்கையே இந்தப் படங்கள்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கட்டுரைகளில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அத்தனை ஒடுக்குதல்களையும் கட்டுப்பாடுகளையும் இரு காரணங்களில் வகைப்படுத்த முடியும்.   முதலாவதாகப் பெண்கள் உடல் சார்ந்து பலவீனர்களாகக் கருதப்பட்டு அதன் விளைவாகச் சமூகக் கட்டுப்பாடுகளாலும், மதக்கோட்பாடுகளாலும் பெரும் ஒடுக்குமுறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இன்னொரு புறத்தில் பெண்ணியம், தாய்மை எனப் புனிதப்படுத்தப்படுவதும் ஆதிக்கத்தின் பிடியில் அடிபணியச் செய்வதும் நிகழ்கிறது.  தாய்மையையும் பெண்களின் பிற மேன்மை குணங்களையும் விதந்தோதுவதும், அவர்களின் மீதான ஒடுக்குதலையும் அடக்குமுறையையும் மறைப்பதற்காக திட்டமாக கருத முடிகிறது. பெண்கள் இயல்பாகவே பலவீனமானவர்கள் எனும் கற்பிதத்தை எடுத்துக் கொள்பவர்கள் ஆண்களை வலிமையானவர்களாகவும் பெண்களை பலவீனர்களாகவும் சித்திரிக்க முயல்கின்றனர். பெண்ணடிமை-ஆணாதிக்கம் எனும் எதிரீடு நிலையை நிறுவ முயலுகின்றனர். இக்கற்பிதத்துக்கு வலுசேர்க்க பண்பாட்டையும் மதத்தையும் துணைக்கழைகின்றனர். மதங்களின் துணை கொண்டு போலியாக விதிகளை உருவாக்கிப் பெண்களை நிரந்தரமாகச் சிறை வைத்திருக்கின்றனர். இந்த நூலினை வாசிக்கும் போது

அரண்மனையில் அந்தப்புரம்

அடர்வனத்தில் லட்சுமணக்கோடு

லங்காபுரிக்குள் அசோகவனம்

எங்கிருந்தாலென்ன…

 

எனும் ஆதவன் தீட்சண்யாவின் கவிதையைப் போல பெண்களுக்கு ஆண்களால் அளிக்கப்படும் புனிதபிம்பங்கள், சிறுமைப்படுத்தல்கள் அனைத்தும் அவர்களின் வெளியைக் குறுக்கிப் போடுவதை உணர இயல்கிறது.

இந்தப் படங்களில் காட்டப்படும் பெண்கள் மதம், சமூகம், மொழி, நிலப்பின்னணி ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும் சூழலில் எதிர்நோக்கும் சிக்கல்கள் ஒன்றானதாகவே இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த கட்டுரைத் தொகுப்பு அளிக்கும் சித்திரத்தை ஒரு பெண்ணின் நீண்ட வாழ்வாக விரித்துக் கொள்ள முடிகிறது. வாட்டர் திரைப்படத்தில் இந்தியாவில் கங்கையின் ஓரத்தில் ஏழு வயது சிறுமி தன் தந்தையால் எழுப்பப்பட்டு ‘உனக்கு திருமணம் நடந்தது நினைவு இருக்கிறதா…உன் கணவன் இன்று இறந்து விட்டான் எனக் கூறுவதிலிருந்து தொடங்குகிறது அந்த நீண்ட வாழ்வு. பால்யம் பறிக்கப்பட்டு சூன்யவெளியான விதவைகள் விடுதியில் மொட்டையடிக்கப்பட்டு இனிப்புப் பண்டங்கள் கூட உண்ண தடைவிதிக்கப்பட்டு வாழ்கிறாள். ஒசாமா எனும் ஆப்கானியப்படத்தில் ஆண்கள் மட்டுமே வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற தலிபான் தீவிரவாதிகளின் கெடுபிடிகளுக்கு இடையில் வாழும் 12 வயது சிறுமி தன் குடும்பத்தின் நிதிநிலை பொருட்டு தன் பெண் அடையாளத்தை மறைத்து வேலைக்குச் செல்கிறாள். தன் நீள் முடியினை வெட்டிக் குறுக்கி, அதனை பூச்சாடியில் நட்டுத் தண்ணீர் ஊற்றி தொலைந்த பெண்மையுடன் இருக்கிறாள். தி கலர் பெர்பல் படத்தில் அமெரிக்காவில் இரண்டாம் தலைமுறை கருப்பினப் பெண் 15 வயதிலே 40 வயதினனுக்கு இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்யப்பட்டு, கொடுமையான சித்திரவதைக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகிறாள். இப்படியாக இந்தக் கதை இழைகளை ஒவ்வொரு படத்திலும் தனியாகப் பிரித்து உலகப் பெண்களின் வாழ்வு சித்திரத்தைப் பெற முடிகிறது

 

குறியீடுகளும் நுண்ணரசியலும்

35935199_10217202724249709_8420521131722670080_n

இரா.சரவண தீர்த்தா

ஒவ்வொரு முழுநீளப்படத்தில் வரும் வாழ்வையும் ஒருசில குறியீடுகளால் சுருக்கிக் கொள்ள முடியும் நெகட்டிவ் ரோல் என அந்தக் குறியீடுகளே காட்சியாகக் கண்முன் விரிகின்றது. கட்டுரையாளர் அத்தகைய காட்சியனுபவத்தைத் தம் எழுத்துகளின் வழி அளிக்கிறார். அப்படியாக ஒவ்வொரு படத்திலும் வரும் குறியீடுகளைக் கண்டடைந்து அதனை விரித்து நமக்கு காட்டுகிறார். வாட்டர் படத்தில் விதவைப் பெண் இலட்டுக்காக ஏங்குவதும், வாட்ஜா படத்தில் வரும் சைக்கிளும், கெய்ரோ 678 படத்தில் வரும் செப்புக்கம்பிகளும், என ஒவ்வொரு படத்தின் சாரத்தையும் ஒரு குறியீட்டில் விரித்தும் குறுக்கியும் கொள்ளும் பொருளை நன்கு காட்டிச் செல்கிறார்.  விதவைகளுக்கான மடத்தில் இனிப்பு உண்ண விதிக்கப்படுகிற தடையானது வலுகட்டாயமாகக் கைம்பெண்களிடம் பறிக்கப்பட்ட மகிழ்ச்சியை நோக்கியதாக இருக்கிறது. சைக்கிள் ஓட்டினால் பெண்ணின் புனிதம் கெட்டுவிடும் என்றலறும் சூழலில் சைக்கிள் விடுதலையின் சின்னமாக மாறுகிறது. ஆண்களின் பாலியல் தொல்லைகளைப் பொறுத்துக் கொள்வது அல்லது அடிபணிவது என்பது விதியாக மாறிவிட்ட சூழலில் செப்புக்கம்பிகள் கேடயமாக மாறுகிறது. இப்படியாக ஒவ்வொரு படத்தின் சாரத்தையும் இந்தக் குறியீடுகளால் அளிக்கிறார்.

தெ முஸ்தாங் படத்தில் வரும் பெண்களுக்கான பாலியல் கட்டுப்பாடுகள் என்பவைப் பெண்களை பண்டங்களாக்கும் முயற்சி என்கிற வரியின் வாயிலாகப் பெண்களைச் சமூகம் எவ்வாறு உருவாக்க நினைக்கிறது என்பதைக் காட்டுகிறது. தி. சர்க்கிள் படத்தில் ‘அடர்ந்து கிடக்கும் காடுகளைப் போல் மனிதனின் மனங்களுக்குள் அடர்ந்து கிடக்கும் ஆசைகளும் கனவுகளும் மதக்கோடுகளால் எல்லைக்குட்படுத்தப்படுகிறது’ என எழுதியுள்ளார் ஆசிரியர். இவ்வாறாக படத்தின் ஒட்டுமொத்தத் தன்மையையும் சுருக்கி அளிக்கும் வரிகளையும் நுண்ணிய குறியீடுகளையும் கொண்டு படத்தைக் காட்சியனுபவமாக நம் முன் விரித்திருக்கிறார். அரசியலையும் பொருள் விரிவுகளையும் கூறிச் செல்லுகிறார் கட்டுரையாளர். கதையைக் காட்சிப்படுத்தி அதன் முக்கியமான விவரணைகளையும் விட்டுவிடாமல் பத்தியில் வெளிப்படுத்தியிருக்கிறார். சான்றாக, நெல்லி எனும் பெண்ணைக் கெய்ரோ 678 படத்தில் காரில் முந்திச் செல்லும் ஒருவன் அரபு பெண்கள் முட்டாள் எனப் பாடும் பாடலையும் சொல்லியிருப்பது சான்று. மேலும், சவுதி அரேபியாவில் அரசு அளிக்கும் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை முதலான உரிமைகள் என்பன பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் எனும் ஐயம் என நூலில் வரும் பின்புலச் சித்தரிப்பும் நுண்ணியத்தருணங்களின் விவரிப்பும் முழுமையாக அந்தந்த நாட்டுப் பெண்களின் நிலையை உள்வாங்கி கொள்ள உதவுகிறது.

படைப்பில் அரசியல் இருவிதமாக இயங்குகிறது என ஜெயமோகன் தம் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூலில் குறிப்பிடுகிறார். படைப்பாளரின் நேரடியான அரசியல் செயற்பாட்டின் தாக்கம். அவ்வகையான அரசியலானது படைப்பில் வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கும். மற்றொரு நிலையில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சூழலில் இருந்து அரசியலை நாமே கண்டடைதல் வேண்டும். அவ்வாறு தேடிக் கண்டடையும் அரசியல் அழகியலாக வெளிப்படும் என்கிறார் ஜெயமோகன். ஊதா நிற தேவதை கட்டுரைகளில் வெளிப்படும் அரசியல் பெரும்பாலும் வெளிப்படையானதாக இருக்கிறது. அந்தந்த நாட்டின் அரசியல், மதச் சூழல் புற அரசியலையே தோலுரித்துக் காட்டுகிறது. இந்த அரசியல் சரி தவறுகளைப் பற்றி மேலதிகமாகப் பகிராமல் அந்தப் புள்ளிகளுக்கு இட்டுச் சென்ற சமூக நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுகிறார். அவ்வகையில் அழகியல் காட்சிகளின் சித்தரிப்பும் அதனைத் தான் உள்வாங்கி கொண்ட முறையையும் கட்டுரையாளர் விரிவுப்படுத்தியிருக்கலாம். பெண்கள் மீது தொடர்ந்து முன்வைக்கப்படும் வன்முறைகள் உள்ளூர ஆண்களின் அச்சத்தைத்தான் காட்டுகிறது. அத்தகைய சூழலில் ஆண்கள் உணரும் அச்சத்திற்கும் பாதுகாப்பின்மைக்கும் காரணத்தைக் காட்டியிருக்கலாம்.

 

மதங்களும் அதிகார மையங்களும்

மதங்கள் பாலியல் ஒடுக்கத்தைத் தங்கள் முதன்மை விதியாக முன்னிறுத்துகின்றன. பாலியல் சுதந்திரம் அல்லது கட்டற்ற பாலியல் என்பது ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைக் கருத்தில் கொண்டு இம்மாதிரியான பாலியல் ஒழுக்கங்கள் மதவிதிகளாகத் தொடக்கக்காலத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், காலப்போக்கில் மதம் என்பது ஆணாதிக்க அதிகார மையங்கள் அவற்றுடன் இணைந்து பெண்களுக்கான பாலியல் ஒடுக்கத்தை மட்டும் அதிமுக்கியமாகப் போதிப்பவையாக உருமாறியிருக்கின்றன. மதத்தின் பிடியில் அரசியல் அதிகாரம் சிக்குகின்ற போது பெண்களின் மீதான ஒடுக்குதல் அரசுச் சட்டமாகவே மாறிவிடுகிறது. கன்னிமை என்பது பொருளாக மாறியிருக்கும் சூழல் துரதிஷ்டவசமானது. கணவன் இறந்தபிறகு பாலியல் ஒடுக்கத்தை மேற்கொண்டு கடும் தவவாழ்வைப் போன்று வாழச் செய்யும் மதநடைமுறைகள் கருணையற்றவை. இந்தப் படங்களில் பெண்களின் வெளியை வாழ்வை மீண்டும் மட்டுப்படுத்துபவையாகச் சமயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆக, சமயம் என்பதும் பெண் என்பதும் கேள்விக்குரியதாகின்றன. மதங்கள் பெண்கள் மீது திணிக்கும் இந்த வன்முறைக்குக் காரணம் என்ன? பெண்கள் மீது திணிக்கப்படும் இந்த விதிகள் பின்னால் இருக்கும் அரசியலை வாசகர்கள் அறிய வேண்டியதைக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

சமூக வாழ்வும் மதமும் அரசியலும் பெண்களுக்கு ஒவ்வாததாக ஆகிவிட்டன. அவற்றில் பெண்கள் ஈடுபடுவதற்கு மேலான தகுதி பெண்ணிடம் எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய நிலையில் பெண்கள் வீடுகளில், குடும்பத்திலும் பலநிலைகளில் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவளுக்கு நேர்கிற சிக்கல்களைக் கேட்பதற்குக் கூட குடும்பத்தினர் தயாராக இல்லை. எகிப்தியப் படமான கெய்ரோ 678 படத்தில் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட சேபா தன் தாயாராலே கைவிடப்படுகிறாள். பாலியல் சார்ந்த தொடுதல்களும், சீண்டல் பேச்சுகளும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளே என உருவாகி இருக்கும் நவீன சிவில் சட்டப் புரிதல் எட்டாத நிலையிலே சமூகம் இருக்கிறது. காலங்காலமாகப் பெண்களின் மீதான சமூகப்பார்வையை ஏற்றுக்கொண்டு பழகிவிட்ட சமுதாயம் நவீன சமுதாயம் ஏற்படுத்த விரும்பும் பெண்ணியச் சிந்தனைகளை உள்வாங்கவோ சுவீகரிக்கவோ தயங்கிக் கொண்டு இருப்பதை இது காட்டுகிறது.  அப்படி ஏற்றுக் கொள்ளும் நிலையிலும் தான் நம்புகிற கடவுள், மத, சமூகக் கட்டமைப்பு சார்ந்த நம்பிக்கைகளை மீள்பரிசீலிக்கவும் மாற்றிக்கொள்ளவும் சமுதாயம் எந்த வகையிலும் தயாராக இல்லை.

ஆதிக்கமும் பாலியல் வன்முறைகளும்

பாலியல் இச்சை என்பது இருபாலருக்கும் பொதுவாக இருக்கும் போது அதனை ஆண்கள் மட்டும் பெண்களிடமிருந்து வலிந்து பெறச் செய்யும் வன்முறைகளுக்கான காரணம் இயற்கையான உணர்ச்சியன்று. ஆணாதிக்கம் என உறைந்து போயிருக்கும் அதிகார மனப்பான்மையே அதற்குக் காரணம். அதனைத் தாங்களும் பெறுவதன் மூலமாகவே தங்களின் தன்மானம், உணர்ச்சிகளின் பெறுமதிப்பு நிறுவப்படும் எனும் முடிவுக்குத் தள்ளப்படுகின்றனர்.

arvin

அர்வின் குமார்

பாலினத் திரிபு என்பதை நோயாக புரிந்து கொண்டு அதற்கு மருந்து தேடும் சமுதாய நிலை ‘ஆண்கள் அழ வேண்டாம்’ எனும் அமெரிக்க திரைப்படத்தில் காட்டப்படுகின்றது. பெண்களாகப் பிறந்து மாற்றுப் பாலின அடையாளத்தை நாடுகிற, தன்பாலின ஈர்ப்பும் உடைய பெண்கள் குறித்த பார்வையும் உரையாடலும் எல்லா சமூகத்திலும் இன்னும் தொடக்கக் கட்ட நிலையிலே இருக்கிறது. அத்தகைய நிலையில் உடலுறவு சார்ந்து சமுதாயத்தில் நிலவுகின்ற புரிதலைத் தகர்க்கும் வகையில் ‘அந்தரங்க உறுப்புகளுக்கிடையிலான நுகர்ச்சி மட்டுமன்று; மாறாக உணர்வுகளுடன் பேசும் ஆன்மீக மொழி’ எனும் வரியில் குறிப்பிடுகிறார். ஆணாதிக்கம் என்பது பாலியல் வன்புணர்வில் நிறுவ துடிக்கும் ஆண்மைத்தனத்தின் பாதுகாப்பின்மையை நன்கு காட்டியிருக்கிறார். பாலினத்திரிபால் ஒருவர் எதிர்நோக்கும் பாலியல் உணர்ச்சிகள் எவ்விதத்திலும் தாழ்ந்ததில்லை என்பதைக் கட்டுரையாளர் உணர்த்துகிறார். தன்பாலின ஈர்ப்பையும். பாலினத்திரிபையும் இயற்கை முரணாகப் பார்க்கும் சமூகம், பெண்களுக்கெதிரான பாலியல் ஒழுக்க விதிகளைத் தாங்கி பிடிப்பது விந்தையளிக்கிறது. இறுகிப்போயிருக்கும் பெண்களின் பாலியல் சுதந்திரம் குறித்த உரையாடலையும் தொடங்கிவைக்கும் திறப்பாக இந்தக்கட்டுரைத் தொகுப்பில் இருக்கும் ஆரஞ்சுமட்டும் பழம் அல்ல, ஆண்கள் அழ வேண்டாம் ஆகிய திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகள் அளிக்கும் என உறுதியாக நம்பலாம்.

மீள்வும் முன்னகர்வும்

பெண்களின் அவல வாழ்வையும், துயரத்தையும் மட்டுமே சொல்வதாக இருந்தால் ஆய்வுக்கட்டுரை தன்மையில் இந்நூல் அமைந்திருக்கும். ஆனால், அதிலிருந்து இந்தக் கட்டுரைகளை வேறுபடுத்திக்காட்டுவது இதில் பெண்கள் தங்களை இறுக்கமான சூழலிருந்து முன்னகர்த்திச் செல்வதற்கு வழிகளாகச் சொல்லப்பட்டிருக்கும் சிலவற்றைக் குறிப்பிடுவதுதான். இந்தக் கட்டுரைகளில் வரிசைமுறையே அதனைக் காட்டிச் செல்கிறது. காந்தியின் இரயில் பயணத்தில் காந்தியம் பெண்களுக்கான வெளியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் நிறைவு பெறும் கட்டுரை 10 ஆம் கட்டுரையில் பெண்கள் காற்பந்து அரங்கத்திற்குள் தன்னிச்சையாக நுழைந்து தங்கள் நாடு தோற்க வேண்டுமென வேண்டுவதில் முடிகிறது. காந்தியம் தங்களுக்கான வெளியை உருவாக்கவும் சூழலிருந்து தங்களை மீட்டு முன்னகரவும் உதவும் என்கிற நம்பிக்கையை முன்னது அளிக்கிறது. ஒருவகையில் பிறிதொரு கேள்வியின்றி முழுதற் ஒப்புக்கொடுக்கும் மதமாகக் காந்தியம் தெரிகிறது. பின்னதில், நமக்கு வேண்டிய வெளியை நாமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற புரிதலுடனான கலகக்குரல் பெண்களிடமிருந்து வெளிப்படுகிறது. தங்கள் நாடு காற்பந்து போட்டியில் வெற்றிபெறும் நிலையில் பெண்களைப் பாலியல் அடிப்படையில் சீண்டுவதை அதீத மகிழ்ச்சி மனநிலையில் விளைந்த எதிர்பாராத நிகழ்வு என அனுமதிக்க முடிந்த சமூகத்தில் தங்கள் நாடு தோல்வியடைய வேண்டும் என பெண்கள் கூச்சலிடுவது மிக முக்கியமான கலகக்குரல். இப்படி படைப்பாளர்கள் தம்தம் பார்வையில் வெளிப்படுத்தியிருக்கும் பெண்களுக்கான சாத்தியமான முன்நகர்வினைக் கண்டடைந்து இந்நூலில் ஆசிரியர் அளித்திருக்கிறார்.

இலட்சுமணன் வரைந்த கோட்டைத் தாண்டி சீதை வெளியேறிய போது இராவணனால் கவரப்பட்டாள் என்கிறது இதிகாசம். பெண்களுக்குத் தேவை கோடுகளோ மதில்களோ அல்ல. மாறாக, சமூகத்தில் பெண்கள் எந்தவிதமான நெருக்குதலும் தடைகளுமின்றி வாழும் வாழ்வே ஆகும். அத்தகைய வாழ்வினை நாமனைவரும் கற்பனை செய்ய வேண்டும். பேச வேண்டும்.அதற்கான நல்ல முதற்கட்ட உரையாடலை இந்த நூல் ஏற்படுத்தும் என நம்பலாம்.

 

மேற்கோள்கள்

 சரவணதீர்த்தா, 2018, ஊதா நிற தேவதைகள், வல்லினம் பதிப்பகம்

ஜெயமோகன், 2011, நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், கிழக்கு பதிப்பகம்

பிற இணைப்புகள்:

 

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...