காலத்தால் நிரப்பப்பட்ட இடைவெளி

07pic‘அவரவர் வெளி’ எனும் நூல், அ.பாண்டியன் அவர்களது மூன்றாவது நூல். வல்லினம் பதிப்பகமும் யாவரும் பதிப்பகமும் இணைந்து பதிப்பித்த நூல். வல்லினத்தின் பத்தாவது கலை இலக்கிய விழாவில் வெளியீடு கண்டது. மலேசிய தமிழ் இலக்கியச் சூழலில் படைப்பிலக்கியங்கள் குறித்த விமர்சன நூல்கள் வெளிவருவது மிகவும் குறைவு. அதன் விளைவு, எழுதப்படுவது எல்லாமே இலக்கியம் என ஏற்றுக்கொள்ளப்பட்டு மலேசியத் தமிழ் இலக்கியத்தின் தரத்தை மேலும் சிதைத்துவிட்டது. படைப்பிலக்கியத்தில் பல நேரங்களில் வைக்கப்படும் விமர்சனம் வெறும் எழுத்தாளர் குறித்த முகஸ்துதியாக மட்டும் இருக்கின்றதே தவிர அது படைப்பின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த தவறிவிடுகின்றது. இதன் காரணமாக, நம் நாட்டு இலக்கியத்தில் படைப்பாளர்களின் படைப்பைக் காட்டிலும் படைப்பாளர்கள் பிரபலமானவர்களாக இருக்கின்றனர்.

2000-ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு ஏற்பட்ட தீவிர இலக்கியம் மீதான பாய்ச்சல் மலேசிய தமிழ் இலக்கியத்தில் விமர்சனத்தின் தேவையை உணர்த்தியது. நாம் நம்பக்கூடிய பிரபலமான எழுத்தாளர்களின் படைப்பிலக்கியத்தை மீள்வாசிப்பு செய்து எந்தவொரு தயவு தாட்சண்யமின்றி வைக்கப்பட்ட கறாரான விமர்சனங்களால் மலேசியத் தமிழ் இலக்கிய அரங்கில் புதிய உரையாடல்கள் தொடங்கின. அதுவரை அடையாளம் காணத் தவறிய சில எழுத்தாளர்களை அடையாளப்படுத்தியதோடு மட்டுமல்லாது இலக்கியத்தின் தரத்தையும் அதன் அளவுகோளையும் நிர்ணையித்து அவ்வப்போது மேம்படுத்திக்கொண்டே வந்தது. அதன் தொடர்ச்சியில் ஒன்றாக இணைந்திருப்பது அ.பாண்டியனின் ‘அவரவர் வெளி’ எனும் விமர்சன நூல். வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த பத்து படைப்பாளர்களின் தேர்ந்தெடுத்த படைப்புகளை தெரிவு செய்து அதை மீள்வாசிப்புக்கு உட்படுத்தி தொடர்ந்து வல்லினத்தில் அது சார்ந்து எழுதப்பட்ட விமர்சனக்கட்டுரைகள் நேர்த்தியாக தொகுக்கப்பட்டு நூல் வடிவாக வந்துள்ளது.

நூலின் தலைப்பு, அதன் உள்ளடக்கத்தின் சாரத்தையும் அதன் தர்க்கத்தையும் வாசகர்களுக்கு ஓரளவு தெளிவுபடுத்திவிடுகிறது. எழுத்தாளர்கள் அவரவர்களுக்கென சில கொள்கையும் எல்லையும் வரையறுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் தங்கள் இலக்கியப் படைப்புகளை படைக்கின்றனர். அப்படிப் படைக்க எழுத்தாளர்களுக்கு எல்லா சுதந்திரமும் உண்டு. அவ்வகையில் அ.பாண்டியன் அவர்கள் தேர்ந்தெடுத்த பத்து எழுத்தாளர்களும் அவரவர் வெளியில் நின்று தங்கள் படைப்புகளை எவ்வாறு படைத்திருக்கின்றனர் என்பதை விமர்சனமாக நிறுவியிருக்கிறார். ஆனால் அவர் முன்வைத்திருக்கும் விமர்சனம், கோட்பாட்டு ரீதியாக அல்லாமல் வாசகனின் வாசிப்பு இரசனை சார்ந்ததாக வைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஆசிரியர் முன்வைத்திருக்கும் விமர்சனம் நேர்மையானதாகவும் பொறுப்புணர்ச்சியுடனும் இருக்கிறது.

ஆனால் அந்த நேர்மையைக் குறித்து வசைபாடும் சில தரப்புகள் கேள்விகள் எழுப்புவற்கு வாய்ப்புண்டு. இருந்தாலும் முன்னமே சொன்னதுபோல வாசகனின் இரசனை சார்ந்த விமர்சனம் எப்போதுமே ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டிருக்கும். அது அவரவர் வாசிப்பு இரசனை சார்ந்தது. உதாரணமாக வல்லினம் 100 இல் இடம்பெற்றுள்ள விமர்சனத்தில் எழுத்தாளர் ஶ்ரீதர் ரங்கராஜ் சு.யுவராஜனின் ‘அல்ட்ராமேன்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த கதைகளை முழுமையாக நிராகரித்திருப்பார். அதே தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகள் அதன் முடிவில் புதிய திறப்புகளை கொடுக்கக்கூடியது என அ.பாண்டியன் தன் விமர்சனத்தை முன்வைக்கிறார்.

‘அவரவர் வெளி’ நூலில் இடம்பெற்றுள்ள விமர்சனக்கட்டுரைகள் பெரும்பாலும் கறார் தன்மையற்றதாக இருப்பதை அறியமுடிகின்றது. ஆசிரியர் சில இடங்களில் கறாரான விமர்சனத்தை முன்வைத்தாலும் அதை சமன் செய்யும் விதமாக படைப்புகளில் காணப்படும் சில ஆக்ககரமான நிறைகளை அடையாளம் காட்ட முயற்சித்துள்ளார். எழுத்தாளர்களின் படைப்புகளை அடியோடு நிராகரிக்காமல் அவை முழுமையடையாமல் போன இடைவெளியைக் கண்டடைந்து அதன் போதாமைகளையும் எடுத்துரைத்துள்ளார். அது எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் வாசகனிடம் தோற்றுப்போன காரணத்தை அறிந்துகொள்வதற்கு வாய்ப்பாக அமைகிறது. அதோடு அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையலாம்.

கங்கா

க.கங்காதுரை

அ.பாண்டியன், படைப்புகளை அடியோடு அடித்து வீழ்த்தாமல் அவர்களை தட்டிக்கொடுக்கும் விதமாக சில அம்சங்களை தன் விமர்சனக்கணக்கில் எடுத்துக்கொள்கிறார் என்பதை அறிய முடிகின்றது. உதாரணமாக எழுத்தாளர் எஸ்.பி.பாமாவின் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கதைகள் பலகீனமானவையென்றும் கலையமதியற்றவையாக இருப்பதாகவுமென விமர்சிக்கும் ஆசிரியர், மற்ற பெண் படைப்பாளர்களிடமிருந்து எஸ்.பி.பாமாவை வேறுபடுத்தும் கூறு நகைச்சுவை உணர்வுதான் என்று கூறுகிறார். விமர்சனத்தில் படைப்பாளரின் நகைச்சுவை உணர்வை ஓர் அளவுகோளாக எடுத்துகொள்ள முடியுமா என்ன!

ஆசிரியர் சில இடங்களில் படைப்பைத் தவிர படைப்பாளர்களின் போதாமையையும் நாசுக்காக கிண்டல் செய்வதை உணர முடிகிறது. உதாரணமாக எழுத்தாளர் ந.மகேஸ்வரி அவர்களின் போதாமையை குறித்து, 90களில் தன் கதைகளுக்கு நாளிதழ்களையே நம்பியிருக்கும் எழுத்தாளர் நாளிதழ்களில் இருந்து கிடைக்கும் தகவல்களையும் செய்திகளையும் கதையாக்கி நாளிதழ்களுக்கே அனுப்பி இலக்கிய நிறைவு பெற்றிருக்கிறார் என ஆசிரியர் கிண்டலடிக்கிறார். அதுபோல எஸ்.பி.பாமாவின் சிறுகதைகள், பழத்துடன் மரத்தையும் தூக்கிக்கொண்டு பறக்க முனையும் சிட்டுக்குருவிகள் போல் திணறி நிற்கின்றன என காத்திரத்துடன் கிண்டலடிக்கிறார்.

ஆசிரியர் தனது கட்டுரை தொடக்கத்திலேயே எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும்போது அவர்களுடைய காலக்கட்டம் எதுவென வாசகன் அறிந்துகொள்ள முடிகிறது. கட்டுரைகளின் தொகுப்பும் காலக்கட்டம் ஏற்பவே தொகுக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு தொகுக்கப்பட்டதா அல்லது இயல்பாக அமைந்ததா எனும் கேள்வி எழாமல் இல்லை! அதற்கான பதிலையும் ஆசிரியர் தன் முன்னுரையிலேயே வழங்கிவிடுகிறார். இது தரவரிசையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது, காலவரிசையாக எடுத்துக்கொள்ளலாம் என்கிறார். ஆம், காலவரிசையாக பார்க்கும்போது மலேசியத் தமிழ் இலக்கியத்தில் கால ரீதியாக படைப்பிலக்கியத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்துகொள்ளவும் வாய்ப்பாக இருக்கிறது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள பத்து எழுத்தாளர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். முதல் பிரிவில் ந.மகேஸ்வரி, பாவை, கா.பாக்கியம் எனவும், இரண்டாம் பிரிவில் சீ.முத்துசாமி, கோ.புண்ணியவான் எனவும், மூன்றாம் பிரிவில் சு.யுவராஜன், மஹாத்மன், ம.நவீன், கே.பாலமுருகன் எனவும் பிரிக்கலாம். ஆனால் இப்பிரிவில் எஸ்.பி.பாமாவை எந்தப் பிரிவில் வைப்பதென்று மண்டை கொஞ்சம் சுற்றத்தான் செய்கிறது. ஆசிரியர் விமர்சனத்திற்கு உட்படுத்தியிருக்கும் எழுத்தாளர்கள் மீதான தேர்வு குறித்து எந்தவித விமர்சனம் இல்லாதபோது எஸ்.பி.பாமாவை இதில் இணைத்திருப்பது குறித்து கேள்வி எழாமல் இல்லை. மேலே குறிப்பிட்டது போல முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள பெண் எழுத்தாளர்கள் 60ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து எழுத வந்தவர்கள். அவர்களுடைய சில படைப்புகள் நிராகரிக்கப்பட்டாலும் மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு அவர்கள் வழங்கிய பங்களிப்பை நிராகரிக்க முடியாது. எனவே அவர்களது தேர்வு நியாயமானதும் கூட. மாறாக, எஸ்.பி.பாமா படைப்பு ரீதியாகவும், இலக்கியப் பங்களிப்பு அவ்வளவாக இல்லாத பட்சத்தில் இப்பட்டியலில் சேர்த்திருப்பது ஏமாற்றத்தை தருகிறது. இருந்தாலும் 2017 – இல் வல்லினத்தில் இடம்பெற்ற கதைகளில் அவரது ‘புதிதாக ஒன்று’ சிறுகதை எழுத்தாளர் கோணங்கி அவர்களால் சிறந்த கதையாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

01

அ.பாண்டியன்

ஆசிரியர், எழுத்தாளர்களின் படைப்பிலக்கியத்தை விமர்சனத்திற்கு உட்படுத்த அவர்களுடைய முழுமையான சிறுகதைத் தொகுப்புகளை வாசித்துவிட்டு விமர்சனம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதில் சீ.முத்துசாமியின் குறுநாவல் விமர்சனம் மட்டும் தனித்து நிற்கிறது. அக்கட்டுரை நூலில் ஒட்டாததுபோல ஓர் உணர்வைக் கொடுத்தாலும் அது மிக முக்கியமான கட்டுரை என்பதை மறுப்பதற்கில்லை. மாறாக, சீ.முத்துசாமியின் சிறுகதைத் தொகுப்பை மட்டும் வாசிப்புக்கு உட்படுத்தியிருந்தால், மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்களின் முழுமையான சிறுகதைத் தொகுப்புகள் குறித்த முதல் விமர்சன நூலாக இது அமைந்திருக்கும்.

ஆனாலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்க வேண்டிய நூல் காலம் கடந்து வந்திருப்பதாக, நூல் வெளியீட்டின் போது எழுத்தாளர் சு.வேணுகோபால் கூறியது ஞாபகத்தில் வருவதை தடுக்க முடியவில்லை.

நூலை வாங்கலாம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...