ஆவணப்படம்: சை.பீர்முகம்மதுவின் இலக்கியப் பங்களிப்பு

01மலேசிய இலக்கியத்தின் வளர்ச்சியை ஊடாடிப் பார்க்கையில் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் பங்களிப்பு அதற்கு அச்சாணியாக இருந்ததை அறியமுடிகிறது. மொழியை முதலில் நேசிக்க ஆரம்பித்த அவர்களின் ஆளுமையின் முதல்படி பின்னர் விரிந்து தழைத்துப் பலர் போற்றும் இலக்கிய படைப்புகளைப் பிரசவித்துள்ளது. அவ்வாறான இலக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை அனுபவங்களையும் அவர்கள் கடந்து வந்த பாதைகளையும் அறிந்து கொள்வது இலக்கியச் சூழலில் இயங்குபவர்களுக்கு அவசியமானது. அது போன்ற அவர்களின் வாழ்க்கை பயணங்களை நமக்கு பகிரும் தளமாக நேர்காணல்கள் இருந்தபோதிலும், வாய்மொழியாக அவர்களிடமிருந்து நேரடியாக கிடைக்கப்பெறும் தகவல்கள் உணர்வுபூர்வமானவை.

அவ்வகையில் நவீனத் தமிழ் இலக்கிய ஆளுமைகள் எனும் வல்லினம் பதிப்பகத்தின் ஆவணப்படம் இலக்கிய ஆளுமைகளின் உள்ளத்து உணர்வுகளை உலகோர் அறிந்து கொள்ள எடுக்கப்பட்ட உன்னத முயற்சி.  “மதத்தைக் கடந்து பார்க்கும் மனம் வேண்டும்” எனும் சை.பீர்முகம்மது அவர்களின் ஆவணப்படம் மலேசிய நவீன இலக்கியத்துக்கு ஒரு கொடை. இந்த ஆவணப்படம் வழி அவரை அறியும் முயற்சியாகவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.

ஆரம்பக்கால வாழ்க்கை

சை.பீர்முகம்மது அவர்களின் ஆரம்பக்கால வாழ்க்கை அற்புதமானது. அவருடைய இரண்டு வயதில் அவரின் தந்தையார் சயாம் மரண ரயில் பாதை அமைக்க அழைத்துச் செல்லப்பட்டார். ஒரே ஆண் மகன் என்பதால் தாயாரின் அன்பு அதிகமாகவே அவருக்குக் கிடைத்தது. ஆனால், அவருக்கு ஏழு வயதாக இருக்கும்போது அவரின் தாயார் சூலை நோயால் (Appendix)  பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அதற்கு அன்றைய நாளில் நிலவிய அறியாமையே காரணமாகும். அன்னையாரின் மறைவிற்குப் பின்பு அவரது வாழ்வு நிச்சயமற்ற ஒன்றாக மாறிவிட்டது. ஒரு வருடம் அவரின் தந்தையாரால் சென்ட்ரல் திரையரங்கத்தின் முன்பிருந்த சீனர் கடையில் பாத்திரங்கள் கழுவச் சேர்த்து விடப்பட்டார். அவரின் ஆரம்பக்கால வாழ்க்கை அவ்வளவு எளிதாகவும் சுகமிக்கதாகவும் பின்னர் அமையவில்லை. ஏறக்குறைய ஒரு வருடத்தின் இறுதியில் அவருக்கு நண்பரான இருதயம் என்பவரின் துணையோடும் அவரின் அக்காளின் துணையோடும் கணிதம் போன்றவற்றைப் பயின்றார்.

கல்வி வாழ்க்கை

ஊரிலுள்ள மற்றவர்கள் அவரின் கல்வி வாழ்க்கையைப் பற்றி வினவ, சை.பீர் அவர்களின் சின்னம்மா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் சை.பீர் முகம்மதுவைச் சேர்த்து விட முயற்சித்தார். ஆனால், சை.பீர் அவர்களுக்குப் பத்து வயது ஆனமையால் அவ்வாறு சேர்த்துக் கொள்ள முடியாதென அப்போதைய தலைமையாசிரியர் வே.காசிநாதன் அவர்களால் மறுக்கப்பட்டிருக்கிறது. இருந்தப்போதிலும், தற்போதைய உமா பதிப்பகத்தின் உரிமையாளராகிய டத்தோ. சோதிநாதனின் தமக்கையால் அவர் அப்பள்ளியில் தலைமையாசிரியருக்குத் தெரியாமல் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

பின்னர்,  பேச்சுப்போட்டியில் சை.பீர் அவர்கள் கலந்து கொண்டு வென்றதற்குப் பரிசாக வழங்கப்பட்ட விநோதரசமஞ்சரி எனும் நூலே அவரின் இலக்கிய ஆர்வத்திற்கு சிறுபொறி எனலாம்.

இவ்வாறு வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது, தந்தையாரால் குடும்பச்சுமை காரணமாக பள்ளிக்குச் செல்ல வேண்டாம் எனத் தடுக்கப்பட்ட சை.பீர் வீட்டை வீட்டு ஓடிப் போனார். ஒரு பஞ்சாபி குடும்பத்தில் தஞ்சமடைந்த அவருக்கு அக்குடும்பம் அடைக்கலம் வழங்கியது. காலையில் பள்ளிக்குச் சென்று கொண்டும் மாலையில் நேரத்தில் அவர்களின் மாடுகளைக் கவனித்துக் கொண்டும், மாதம் முப்பது வெள்ளி சம்பளத்தில் சை.பீர்முகம்மது அவர்கள் அங்கேயேத் தங்கி விட்டார். வகுப்பில் முதல் மாணவராக வந்த சை.பீர் அவர்களைத் தூக்கிக் கொண்டாடியப் பஞ்சாபிக் குடும்பத் தலைவர் அவரின் கல்விச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் கூறியதைத் தனக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே சொல்கிறார் சை.பீர் முகம்மது. ஆனால், சை.பீர் அவர்களின் தந்தையாருக்கும் அவரின் பெரியப்பாவிற்கும் வியாபாரம் போன்றவற்றின் காரணமாக பின்னாளில் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக, சை.பீர் முகம்மது இருப்பிடத்தை அறிந்து அவரை அழைத்துச் சென்றார் பெரியப்பா.

இலக்கிய ஆர்வம்

சை.பீர் முகம்மது அவர்களைப் பொறுத்தமட்டில் அவருடைய இலக்கிய ஊற்றுக்குத் திறவுக்கோலாக இருந்தது அவரின் பெரியப்பா வாங்கிய தமிழ் முரசு நாளிதழ்தான். அதில் வெளிவந்த தேன்கூடு எனும் தொடர்கதையை மிகுந்த ஆர்வத்தோடு வாசித்தார். அப்போதுதான் 1954- ஆம் ஆண்டு செந்தூல் இரயில்வே திடலுக்குப் பெரியார் வருகைப் புரிந்தார். சை.பீர் அவர்களின் பெரியப்பா மிகுந்த பெரியார் பற்றுதல் உடையவராக இருந்த காரணத்தினால் அக்கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சை.பீர், பெரியாரின் பேச்சு அந்த அளவிற்கு புரியாத போதிலும் அவருடைய தாடி, கைத்தடி, பேச்சு ஆளுமை போன்றவற்றால் கவரப்பட்டார். அது அவருக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது.

பின்னர், நட்பு வட்டாரத்தில் நிலவிய மர்ம நாவல் வாசிப்பில் சை.பீர் அவர்கள் தன்னை ஈடுப்படுத்தி கொண்டார்.  அவருக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்த ஜே.பி. சேவியர் அவர்களிடமிருந்து நிறைய மர்ம நாவல்களை இரவல் வாங்கி வாசித்தார். அவருக்கு அப்போது புத்தகம் வாங்கும் அளவிற்கு பணவசதி இல்லை. அன்றைய காலக்கட்டத்தில் தமிழ் முரசில் ஆரம்பித்து நிறைய வாசிக்க ஆரம்பித்தார் சை.பீர் முகம்மது. பின்னர், ஜே.பி. சேவியர் துணையோடு St.Anthony பள்ளியில் கல்வித் தொடர்ந்த சை.பீர் அவர்கள், பள்ளிக்குப் பேருந்தில் செல்லும் நேரத்தில் சேவியரோடு இலக்கியச் சர்ச்சைகளில் ஈடுப்பட்டார். அவர்களுக்குள் இலக்கியம் தொடர்பான ஆரோக்கியமான கலந்தாய்வு ஒன்று நிகழ்ந்தது.

சை.பீர்முகம்மதின் பெரியப்பாவின் வெற்றிலை வியாபாரம் போன்றவை நின்று போன பின்பு, குடும்பப் பொருளாதார நிலைமையைச் சமாளிக்க சை.பீர் அவர்கள் பக்கிரிசாமி என்பவரின் நாளிதழ் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அந்தக் காலக்கட்டத்தில் செந்தூலில் அமைந்திருந்த தங்கம் புத்தகச்சாலையில் ஒரு வெள்ளிக் கொடுத்து, கல்கி போன்றவற்றிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டிருக்கும் கதைகளை வாசிக்கும் சூழல் இருந்தது. அங்குதான் சை.பீர் அவர்களுக்குத் தில்லானா மோகனாம்பாள் நாவலை வாசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதுநாள் வரை, மர்ம நாவலையே அதிகம் சுற்றி வந்த அவருக்குத் தில்லானா மோகனாம்பாள் வாசிப்பு மடை மாற்றம் செய்தது. பக்கிரிசாமி கடையில் குறைந்த சம்பளம் என்பதால், வேலையிலிருந்து நின்று விட்ட சை.பீர் அவர்களைச் சேவியர் முத்தமிழ் படிப்பகத்தில் வேலைக்குச் சேர்த்தார். வாசிக்க நிறைய வழிச்செய்து கொடுத்த அப்படிப்பகத்தை ஆவணப்படத்தில் தங்க சுரங்கம் என்கிறார் சை.பீர் முகம்மது. அங்கேதான் அவருக்குப் புதுமைபித்தனின் எழுத்து அறிமுகம் கிடைத்தது. அதுவரை வெறும் பெயரளவில் மட்டும் அறிந்து வைத்திருந்த புதுமைபித்தனை, அங்கேதான் முழுமையாக அறிந்து கொண்டார்.  தன்னை மிகவும் கவர்ந்த புதுமைப்பித்தனின் சிறுகதைகளோடு, ஜெகசிற்பியன் போன்றோரின் கதைகளையும் அங்கே வாசித்தார் சை.பீர் முகம்மது.

அப்போது தமிழ்நேசன் அலுவலகத்திற்கு அருகில் இருந்த இந்தியக் கைத்தறி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த சை.பீர் அவர்களுக்குத் திருஞானம் என்பவரின் நட்பு கிடைத்தது. அப்போது வெள்ளிக்கிழமைகளில் இந்தியத் தூதரகத்திற்கு வரும் இந்திய பத்திரிகைகளில் கல்கியும் ஒன்றாகும். அதில் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் தொடர்கதையாக வெளிவந்தது. அதுபற்றி பெரிதும் திருஞானம் தன்னிடம் சிலாகித்துக் கொண்டதாகக் கூறும் சை.பீர் அவர்கள், அவரிடத்தில் பேசி இதழைப் பெற்று  அக்கதைகளை வாசித்துள்ளார்.

இதே காலக்கட்டத்தில் தமிழ்நேசனில் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாக இருந்த கவிஞர் சங்கு சண்முகத்தோடு சை.பீர் அவர்களுக்கு நட்பு ஏற்பட்டது. அவர் வாரத்திற்கு ஒரு முறை செந்தூலில் நடத்திய மரபு கவிதை, இலக்கிய வகுப்பிற்குச் சை.பீர் முகம்மது அவர்கள் சென்று கலந்து கொண்டார்.

எழுத்தாளராகப் பரிணாமம்

கவிஞர் பாதாசன், நகைச்சுவை பித்தன், செல்வநாதன் போன்றோரின் நட்பு வட்டத்தில் இருந்த சை.பீர் அவர்கள், அவர்களோடு இணைந்து நிறைய வாசித்ததோடு இலக்கியக் கலந்தாய்வுகளையும் செய்தார். அதன் பிறகு, நா.சுப்பையா, சேவியரின் தூண்டுதலில் பேரில் செந்தூல் தமிழர் திருநாளில் நடைபெற்ற கதை, கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டார். கட்டுரைக்கு மட்டுமே மூன்றாவது பரிசு கிடைத்தது. ஆனால், அது அவருடைய ஆரம்பக்கால எழுத்துத் திறமைக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகும். அன்றைய நாளில், சங்கமணி நாளிதழில் வேலை செய்த இராஜமாணிக்கனாரின் உதவியோடு அவரின் பரிசுப் பெறாத கதையும் பரிசு பெற்ற கட்டுரையும் பிரசுரமாகின. நாளிதழின் ஆசிரியர் ஆலிவர் குணசேகர் தமக்கு எழுத வரும் என்று கூறியதை இராஜமாணிக்கனார் வழி அறிந்து கொண்டதாகக் கூறும் சை.பீர் அவர்கள் அதன்பின்னர், மலை நாடு நாளிதழில் சிறு சிறு கட்டுரைகளையும் எழுதி வந்தார். அதன் பிறகு, தமிழ்நேசனில் ஞாயிறு பதிப்புப் பொறுப்பாசிரியராக இருந்த எம். துரைராஜ் அவர்களால் சை.பீர் முகம்மதுவின் தமிழ்நேசனுக்கான முதற்கதை தலைப்புத் திருத்தப்பட்டு இரண்டு வாரம் கழித்து  வெளிவந்தது. அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த சேவியர் இது என்னுடைய நண்பனுடைய கதை என்று அதைப் பிரசுரிப்பதில் அழுத்தம் கொடுத்தமையால் அது விளைந்தது.

அக்கால இலக்கியச் சூழல்

இலக்கியத்தின் மீது முழு ஈடுபாடு வருவதற்கு எழுத்தாளர் பா.சந்திரகாந்தம் அவர்களின் உதவி சை.பீர் அவர்களுக்கு பெரும் உறுதுணையாக இருந்தது. தமிழ்ப்பள்ளிக்குச்  செய்முறை பயிற்சி ஆசிரியராக வந்த பா. சந்திரகாந்தம், பின்னாளில் சை. பீரோடு நட்பு பாராட்டினார். அதன் பிறகு, சி.பி. லுயிஸ் என்ற திராவிடப் பற்றாளரோடு சை.பீர் அவர்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர், அரசாங்கத்தில் அதிகாரியாக இருந்ததோடு கோலாலம்பூர் திராவிடக் கழகத்தின் பொருளாளராகவும் பொறுப்பு வகித்தார். அவரிடமிருந்து திராவிடக் கழகப் புத்தகங்களை வாங்கி வாசித்த சை.பீர் அவர்களுக்குத் திராவிட இலக்கியம் தொடர்பான அறிமுகம் ஏற்பட்டது. பகுத்தறிவு சிந்தனை போன்றவற்றை ஆழ்ந்து அறிய விழைந்தார்.

ஒரு சமயம், கவிஞர் சங்கு சண்முகம் அவர்களால் ஆனந்த விகடனில் வெளிவந்து கொண்டிருந்த ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் எனும் குறுநாவலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சை.பீர் முகம்மது, அதன் பிறகு ஜெயகாந்தனை இறுகப் பிடித்துக்கொண்டார். அதுவரை, திராவிட இலக்கியத்தின்பால் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த சை.பீர் முகம்மது அவர்களுக்கு ஜெயகாந்தனை வாசித்தப்பிறகு அவை வெறும் பிரச்சார இலக்கியமாகவே தோன்றியது. அதிலிருந்து விடுபட்டு முழுக்கத் தன்னை ஜெயகாந்தனின் எழுத்துகளோடு கரைத்துக் கொண்டார். அவரின் முத்திரைக் கதைகளை வாசித்து தன்னுடைய எழுத்துச் சிந்தனைகளை மடை மாற்றம் செய்தார். அவர் ஒரு பெயர் பெற்ற எழுத்தாளனாக வளர்ந்து வரும் வேளையில், எழுத்தாளர் சங்கம் நா.பார்த்தசாரதியை மலையகத்திற்கு அழைத்து வந்தது. அவரோடு ஒரு மாதம் காலம் தங்கியிருந்த சை.பீர் முகம்மது, நா.பாவால் சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டு, நிறைய வாசிக்க ஆரம்பித்தார். அவரின் வாசிப்பு மூலங்களும் முறைகளும் மாற்றம் கண்டன.

பேச்சுக்கலை

பேச்சுக்கலை என்று வரும்பொழுது சை.பீர். முகம்மது அவர்கள் இறையருட் கவிஞர் அமரர் சீனி நைனா முகம்மது, கவிஞர் பா.மு அன்வர், பசீர் போன்றோரின் இலக்கியக் கலந்தாய்வு பேச்சுகளையே முதலில் கேட்டு உள்வாங்கி கொண்டார். பின்னர், ந.சுப்பையா அவர்கள் முத்தமிழ் படிப்பகத்தில் நடத்திய பேச்சுப் பயிற்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பேச்சுக் கலையை வளர்க்க ஆவணப்படுத்தினார். நா.சுப்பையா அவர்களால் பல தமிழர் திருநாள் பேச்சுப் போட்டிகளில் சை.பீர் முகம்மது அவர்கள் கலந்து கொண்டார். செந்தூலில் நடைபெற்ற தமிழர் திருநாள் பேச்சுப்போட்டியில் பாதியிலேயே மேடையிலிருந்து இறங்கிவிட்டதாகக் கூறும் சை.பீர் அவர்கள், அதன் பிறகு ம.இ.கா நடத்திய கலை, கலாச்சார விழா பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார்.
முத்தமிழ் படிப்பகம்

முத்தமிழ் படிப்பகத்தில் தன்னுடைய வாசிப்பை விரிவுபடுத்திக் கொண்ட சை.பீர் அவர்கள் அதன் இலக்கியப் பகுதி செயலாளராகவும் பின்னர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய காலகட்டத்தில்தான் சிவப்பு விளக்கு, உண்டியல், அதனால் என்ன போன்ற கதைகளை எழுதினார். நா.பார்த்தசாரதி அவர்கள் கூறியதைப் மனதிற்கொண்டு ஒரு சம்பவத்தைத் தன்னுடைய நேரடி அனுபவத்தோடு குழைத்து சிறப்பான கதைகளை எழுதினார். அதன்வழி அவருடைய கதைகள் மிகுந்த வரவேற்பு பெற்றன.
மணிமன்ற இணைவும் விலகலும்

மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிறும் அப்பர் தமிழ்ப்பள்ளியில் கூடிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் சை.பீர் அவர்கள் பா. சந்திரகாந்தத்தின் வற்புறுத்தலின் பேரிலேயே முதலில் சைக்கிளில் போய் கலந்து கொண்டார். முதலில் பார்வையாளனாக மட்டும் போய் கலந்து கொண்ட சை.பீர் அவர்கள் பின்னாளில் அதன்மீது முழு ஈடுபாடு வந்து எழுத்தும் இயக்கமுமாக இளைஞர் மணிமன்றத்தில் செயல்படத் தொடங்கினார். அப்போது அவர் இராணுவத்திலும் பணியாற்றி கொண்டிருந்தார்.

மலேசியாவில் ஏழு இடங்களில் தனித்தனியாக இயங்கி கொண்டிருந்த மணிமன்றங்களை இணைக்கும் நோக்கில் 1964-ஆம் ஆண்டு பினாங்கில் கூட்டப்பட்ட மாநாட்டில், அப்போது நிலவிய இந்தோனேசிய கலவரத்தால் சை.பீர் முகம்மது அவர்கள் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அவர் இராணுவத்தில் இருந்த காரணத்தால், அப்பிரச்சனையைக் களைய தேர்ந்தெடுக்கப்பட்ட 64 வீரர்களுள் இவரும் ஒருவராவார். அதன் பொருட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி பயிற்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டமையால் அவருக்கு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய வாய்ப்புத் தவறி போய்விட்டது. அந்த மாநாட்டில்தான் தமிழ் இளைஞர் மணிமன்ற பேரவை அமைப்புக் குழு அமைக்கப்பட்டது.

முதலாவது அமைப்புக் கூட்டம் கோலாலம்பூர் கம்போங் பண்டானில் அமைந்திருந்த ஒரு பள்ளியில் இளைஞர் அமைச்சின் ஆதரவோடு நடைபெற்றது. அதில் ச.அன்பானந்தன் தலைவராகவும், கிருஷ்ணசாமி செயலாளராகவும், துணைச்செயலாளராக சை,பீர் முகம்மதுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் தங்களுடைய சொந்த செலவில், கிருஷ்ணசாமி அவர்களின் மாமனாருடைய சிறிய காரில் தோட்டம் தோட்டமாகச் சென்று இளைஞர் மணிமன்றங்களை ஆக்கப்பூர்வமாக செயலவை உறுப்பினர்கள் அனைவரும் அமைத்தனர். அது இளைஞர்களிடையே மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நேசனில் இருந்த முருகு. சுப்பிரமணியம் மணிமன்றம் தொடர்பான தலையங்கம் எழுதுவது, செய்திகளை வெளியிடுவது போன்ற வகைகளில் மணிமன்றத்தின் வளர்ச்சிக்கு ஆதரவு நல்கினார். மணிமன்றத்திற்குப் பலரின் ஆதரவு இருந்தபோதும் அவர்கள் ஏழ்மையில் இருந்ததால் சைக்கிளில் சென்றே மணிமன்றத்தை வளர்க்கும் நிலைமை ஏற்பட்டது. சை.பீர் அவர்கள் இதை நேரடியாகவே செய்தார். தமிழ், தமிழர் உணர்வோடு பெருகி தழைத்த மணிமன்றங்களில் துடிப்போடு செயல்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களை வருடத்திற்கு ஒரு முறை இணைத்து மாநாடு நடத்துவதைப் பெரும் சவாலான விடயமாகும். ஆனால், அதை வெற்றிக்கரமாக மூன்று நாட்கள் நடத்தி முடித்துள்ளனர். அது உணர்வுமிக்க உறவுகளை இணைக்கும் தளமாகவும் இருந்துள்ளது.

அரசாங்கம் தரும் எந்த விருதுகளையும் மணிமன்றம் வாங்குவதில்லை என்ற கொள்கை பிடிப்பில் அப்போதைய மணிமன்ற பொறுப்பாளர்கள் இருந்துள்ளதை சை.பீர் முகம்மது வழி அறியும் போது மன்றத் தலைமைத்துவத்தின் சுயமரியாதை கொள்கை மறைமுகமாக வெளிப்படுவதை உணர முடிகிறது. ஆனால், ம.இ.கா அரசியல்வாதிகளின் தலையீட்டால் மணிமன்றத்தின் பத்து மைல் சுற்றளவில் மற்றொரு மணிமன்றம் அமைக்கக் கூடாதென்ற கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுப் பல குளறுபடிகள் நிகழத் தொடங்கின. எனவே, சை.பீர் முகம்மது அவர்கள் முழுமையாக மணிமன்றத்திலிருந்து விலகி தம்முடையத் தொழிலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். ஏறக்குறைய பதினான்கு ஆண்டு காலகட்டம் தொழிலோடு ஆழ்ந்த வாசிப்பை வரித்துக் கொண்டு நகர்ந்தார். எழுத்தாளனை யாராலும் அடக்க முடியாது என்று சொல்லும் சை.பீர் அவர்கள் பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுத்துலகில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார்.
பத்திரிகைகளில் இலக்கியம்

அன்றைய நாளைப் பொறுத்தமட்டில் ஒரு எழுத்தாளனின் கதை தமிழ் முரசில் வருவது மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதப்பட்டது. சங்க இலக்கியம் முதல் சாதாரண இலக்கியம் வரை ஆதரித்தும், மக்களின் மனம் அறிந்தும் பத்திரிகை நடத்தியதாக கோ.சாரங்கபாணியை அவர் விளம்புகிறார்.  ஆனால், நம்மவர்களே கோ.சாரங்கபாணிக்கு எதிராக பல கீழறுப்பு வேலைகளைச் செய்து, மிகுந்த செல்வாக்கோடு விளங்கிய தமிழ் முரசை முடக்க எத்தனித்ததை அறியும்போது வெட்கம் மேலிடுவதைத் தடுக்க முடியவில்லை.

முருகு. சுப்பிரமணியம் தமிழ்நேசனுக்கு வந்தபிறகு பல்வேறு இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 1962-ஆம் ஆண்டு மலாயா தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டு, முருகு. சுப்பிரமணியமே அதற்கு தலைவராகவும், துரைராஜ் அவர்கள் துணைத்தலைவராகவும் இருந்துள்ளனர். அதன் செயலவையில் சை.பீர் அவர்களும் உறுப்பியம் வகித்தார். அக்காலத்தை மலேசிய சிறுகதையில் பொற்காலம் எனவும் குறிப்பிடலாம். ரெ.கார்த்திகேசு, எம்.ஏ இளஞ்செல்வன், கோ.புண்ணியவான், சீ.முத்துசாமி, மா.இராமையா, பாவை போன்றோரோடு இன்னும் பல முத்திரைப் பதித்த எழுத்தாளர்கள் இக்காலத்தில்தான் முகிழ்த்தெழுந்தார்கள். மலேசியக் கவிதை, சிறுகதை இலக்கியம் ஒரு தாண்டுதலை இச்சமயத்தில் ஏற்படுத்திக் கொண்டன.

ஆனால், பத்திரிகைகளில் வெளிவந்த இலக்கியங்கள் ஒரு நிலையான இலக்கியமல்ல என்ற ஏக்கம் எல்லா எழுத்தாளர்களிடமும் நிலவியுள்ளது. அவர்களுக்கான வார, மாத இதழ்கள் இல்லாமல் இருந்த நிலைமையும் இருந்துள்ளது. இப்போது இருப்பது போன்றதான தொழில்நுட்ப வசதிகள் அப்போது இல்லாமலிருந்த நிலைமையும் வார, மாத இதழ்கள் வெளிவருவதற்கு தடைக்கல்லாக இருந்துள்ளன. இருந்தபோதிலும், 60-ஆம் ஆண்டு முதல் 75-ஆம் ஆண்டு வரை பதினைந்து ஆண்டுகால இடைவெளியில் வந்த சிறுகதைகள் தொட்ட உச்சத்தினை யாராலும் தொட முடியவில்லை என்பதை சை.பீர் முகம்மது குறிப்பிடும்போது அப்போதைக்கு இருந்த எழுத்து ஆளுமைகளின் உயர்வை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

பத்திரிகைகளில் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம்

அக்காலத்தில் இலக்கிய உச்சம் என்பது இருந்தபோதிலும், எழுத்தாளர்களுக்குச் சரியான அங்கீகாரம் என்பது கிட்டாமல் இருந்த நிலைமையும் நிலவியது. முருகு. சுப்பிரமணியம் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் அவரோடு இந்த விடயத்தால் பல மனச்சங்கடங்களுக்கு ஆட்பட்ட சை.பீர் அவர்கள், அவரோடு கலந்தாய்ந்து ஒவ்வொரு சிறுகதைக்கும் ஐந்து வெள்ளி சன்மானம் பெற்றுத் தந்திருக்கிறார். பிரசுரமாகும் சிறுகதையின் எழுத்தாளருக்கு நாளிதழை இலவசமாக அனுப்பும் சேவையும் சில காலம் நடந்தேறியது.

சன்மானம் வேண்டும் என்ற எண்ணம் எல்லா எழுத்தாளர்களிடம் இருந்தாலும், தங்களின் படைப்புகள் வெளிவராமல் முடக்கப்படும் என்ற பயத்தினாலேயே யாரும் இது குறித்துப் பேசவில்லை. இன்றைய இளைஞர்களுக்கு இருப்பது போன்ற கணினி வசதி, தங்களின் படைப்புகளைச் சுயமாக வெளியிட்டுக் கொள்ளும் ஆற்றல், நாளிதழ்களை நம்பி நிற்காத சுயக்காலில் நிற்கும் தன்மை ஆகியன அன்றைய நாளில் இல்லாதது சை.பீர் அவர்களிடத்தில் இருக்கும் மனக்குறைகளாகும்.

இலக்கியத்தில் மறுபிரவேசம்

வெளிநாடுகளின் பயணங்களின்போது பலர் மலேசியாவில் தமிழர்கள் எழுதுகிறார்களா என்ற கேள்வியே சை.பீர் முகம்மது அவர்களைப் பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதத் தூண்டியது. தான் சார்ந்துள்ள இயக்கங்களின் கொள்கைகளுக்கு ஏற்றவாறு இயங்க வேண்டும் என்பதாலும், தன்னுடைய தனிமனிதச் சுதந்திரம் பறிபோகும் என்பதாலும் சை.பீர் அவர்கள் தனித்தே இயங்க முற்பட்டார். பின்னர், புத்தகங்களைப் பதிப்பிக்க புத்தக்கப் பதிப்பகம் இல்லாததால், ரெ.கார்த்திகேசு, மா.சண்முகசிவா போன்றோரோடு இணைந்து முகில் என்ற பதிப்பகத்தைச் சை.பீர் முகம்மது தொடங்கினார். கைதிகள் கண்ட கண்டம், பெண் குதிரை போன்ற அவரின் படைப்புகளும், ரெ.கார்த்திகேசுவின் ஒரு நாவலின் மறுபதிப்பும் முகில் பதிப்பகத்தில் பதிப்பிக்கப்பட்டன. தொடர்ந்து ஆண்டிற்கு மூன்று நான்கு நூல்கள் என அச்சேறின.

மேலும், மலேசியத் தமிழ் இலக்கியங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சேராமையைக் கருத்தில் கொண்டு சை.பீர் முகம்மது அவர்கள் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் முயற்சியாக ‘வேரும் வாழ்வும்’ என்ற தரமான ஐம்பது ஆண்டுகாள சிறுகதைகளை தொகுப்பை அச்சடிக்கும் முயற்சியை மேற்கொண்டார். ஆனால், சில கதைகள் கிடைப்பதில் ஏற்பட்டக் காலத்தாமதம் காரணமாக அதில் 43 கதைகள் மட்டுமே தொகுக்கப்பட்டன. அதை வெளியிட எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சை.பீர் அழைத்து வந்தார். அதற்கு முன்பாகவே அவருடைய ‘மண்ணும் மனிதர்களும்’ எனும் நூலை வெளியிடுவதற்கு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, வாசந்தி போன்றவர்களை மலையகத்திற்கு அழைத்து வந்தார். ஜெயகாந்தனை அழைத்து வந்த அவரின் நோக்கம் போற்றுதலுக்குரியது. 70-களில் நிலவிய சிறுகதை எழுத்தாளர்களின் உத்வேகத்தை மீண்டும் புத்துயிர் பெற்று எழச் செய்யவே சை.பீர் அவர்கள் ஜெயகாந்தனை அழைத்து வந்தார். ஆனால், புது எழுத்துப் படைப்புகள் நிறைய வராமையால் “வேரும் வாழ்வும்” இரண்டாம் மூன்றாம் தொகுதியையும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் கட்டுரைகளை இணைத்து “மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும்” என்ற நூலையும் பதிப்பித்து வெளியிட்டார். இது  மலேசியா போன்ற வெளிநாட்டுவாழ் தமிழர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்தில் இயங்குகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.
மதமும் மனமும்

தான் முதலில் ஒரு மனிதன், பின்னர் இனத்தாலும் மொழியாலும் தமிழன், அதன் பிறகே மதத்தால் தான் ஒரு முஸ்லிம் என்று சொல்லும் சை.பீர் அவர்களுக்கு மதம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. அது மட்டுமில்லாது, தான் தமிழ்நாட்டு, இலங்கை பத்திரிக்கைகளுக்குத்தான் அதிகம் எழுதுவதாகவும், மலேசியாவில் அதிகம் எழுத விரும்பாததற்கு காரணம் இங்கு ஞாயிறு பதிப்பு ஆசிரியருக்கும் இலக்கியம் தொடர்பான அறிவு ஊறுகாய் அளவிற்கு கூட இல்லாததது தான் காரணம் என்று வெளிப்படையாகச் சொல்வது மலேசிய நாளிதழ் சூழலில் நிலவும் வெறுமையைக் காட்டுவதாகவே உள்ளது.
பாரதி எனும் முன்னோடி

சை.பீர்முகம்மது அவர்கள் பல எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்தாலும், அவருக்கு எப்போதும் பாரதியே முன்னோடியாக இருப்பதாக கூறி உவகைக் கொள்கிறார். அவனின் ஞானப்போக்கு சை.பீர் அவர்களுக்குப் பெரிய தூண்டுதலாகும். தான் சார்ந்த சமூகத்தின் கட்டமைப்புகளை உடைத்துப் பாரதி வேறுப்பட்டிருந்ததை முன்னுதாரணமாகக் கொள்ளும் சை.பீர் முகம்மது, அவனைப் போலவே தான் இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டு கொண்டார். அவனின் படைப்புகளைப் போலவே தன்னுடைய படைப்புகளும் வளர்ந்து ஞானத்தின் நோக்கி பயணிக்க வேண்டும் என்று சை.பீர் அவர்கள் விரும்புவது எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்றே தோன்றியது.

தற்கால மலேசியத் தமிழ் இலக்கியச் சூழல்

அறுபதிலிருந்து எழுபத்தைந்து வரை நிலவிய வளர்ச்சியை தற்போது அவரால் காண முடியவில்லை. எழுத்தாளர்கள் கூட்டாகச் செயல்பட்டதும், எல்லா இடங்களிலும் ஒருவித எழுச்சி இருந்ததும் அன்றையக் காலத்தை மிகச் சிறப்பான ஒன்றாக ஆக்கியுள்ளது. ஆனால், அவ்வாறான போக்கு இன்றையத் தலைமுறை எழுத்தாளர்களிடம் காண முடியாதது ஆற்றாமையாகவே சை.பீர் முகம்மது அவர்களுக்கு இருக்கிறது.

பல புதிய தலைமுறை எழுத்தாளர்கள் சோர்ந்து போயிருப்பதும் வேதனைக்குரிய விடயம்தான். மாற்றுக்கருத்துள்ள இளைய தலைமுறை எழுத்தாளர்களை சமூகம் உடனே அங்கீகரித்து விடாது என்பதால் அவர்கள் சோர்ந்து போய்விடக்கூடாது என்பதை சை.பீர் அவர்களின் முக்கிய அறிவுரையாகக் கொள்ளலாம். புதியவைகளை அவர்கள் தமிழில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார். காலம் தாழ்த்தி மீண்டும் எழுத்துலகில் பிரவேசித்தாலும் தன்னுடைய படைப்புகளை மீண்டும் உயிர்ப்பிக்க எத்தனிக்கும் சை.பீர் முகம்மது அவர்களின் இந்த ஆவணப்படம் இனி பல ஆண்டுகள் அவரின் அடையாளத்தைப் பதிவுச் செய்து வைத்திருக்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...