நாவல் முகாம்

cropped-mukappu.jpgவணக்கம். வல்லினம் இலக்கியக்குழு 2020இன் முதல் நிகழ்ச்சியாக அக்டோபர் 17,18 ஆகிய நாட்களில் நாவல் இலக்கிய முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் தைப்பிங் நகரில் உள்ள (HOTEL GRAND BARON) விடுதியில் நடத்தப்படும். அதிக பட்சம் 30 பேர் மட்டுமே கலந்துகொள்ளத்தக்க விவாத அரங்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு வருகையாளர்கள்:

சு.வேணுகோபால் (எழுத்தாளர்), ஜா.ராஜகோபாலன் (விமர்சகர்)

நோக்கம்

நவீன இலக்கியத்தில் நாவல் என்பது மிகவும் செழுமையான விரிவான கலைப்படைப்பு. ஆனால் நாவல் பொழுதுபோக்குக்காக எழுதப்படும் கதைபுத்தகமாக மட்டுமே இன்று கவனிக்கப்படுகிறது. பிற தேசங்களில் இந்நிலை இருந்தாலும் மலேசியாவில் கல்வி நிலையங்கள், இலக்கிய அமைப்புகள் போன்றவற்றிலும் இந்த மேம்போக்கான வாசிப்பு நிலை தொடர்கிறது. அதோடு தொடர்கதைகளையும் நாவல் என்றே அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலையே இங்கு உள்ளது. அதன் காரணமாகவே இங்குத் தரமான நாவல்கள் எழுதப்படுவது மிகக்குறைவு. கடந்த காலங்களில் மலேசிய எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நாவல் குறித்த ஆழ்ந்த உரையாடல்களை நிகழ்த்த பொருத்தமான களம் அமைவதில்லை. சிறந்தவை என்று உலக இலக்கிய ஆளுமைகளால் சுட்டிக்காட்டப்படும் நாவல்களை வாசிக்கும் வாய்ப்பைக் கூட நாம் ஏற்படுத்திக் கொள்வதில்லை. ஒரு கலையில் தேர்ச்சி பெற அந்தக் கலையின் எல்லா கோணங்களையும் அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம். அதன் உச்ச சாதனைகளை ஆழ்ந்து அறிந்திருப்பதும் அவசியம். அதோடு அறிதலுக்கு திறந்த மனதோடு முன்வைக்கப்படும் விவாதங்களும் கலந்துரையாடல்களும் அவசியமாகின்றன.

ஆகவே, உலக தரம் பெற்ற நாவல்களை வாசிக்கவும் அவற்றை பற்றிய விவாதங்களை நிகழ்த்தவும் வல்லினம் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றது. கூடுதலாக, மலேசியாவின் பண்பாட்டை வெளிப்படுத்தும் படைப்புகளையும் நாம் வாசித்து கலந்துரையாடுவதன் வாயிலாக, மலேசியாவிலும் உலகத்தரம் வாய்ந்த நாவல்களை எழுதும் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்.

விவாதிக்க தேர்ந்தெடுக்கப்படும் நாவல்கள்

 1. அசடன் – தஸ்தாயேஸ்கி (ரஷ்ய இலக்கியம்)
 2. நீலகண்ட பறவையைத் தேடி – அதீன் பந்த்யோபாத்யாய (இந்திய இலக்கியம்)
 3. நுண்வெளி கிரணங்கள் – சு.வேணுகோபால் (தமிழக இலக்கியம்)

மலேசிய நாவல்கள்

 1. பேய்ச்சி – ம.நவீன்
 2. அக்கினி வளையங்கள் – சை.பீர்முகம்மது
 3. ரிங்கிட் – அ.பாண்டியன்
 4. மலைக்காடு – சீ.முத்துசாமி
 5. மிச்சமிருப்பவர்கள் – செல்வன் காசிலிங்கம்

முகாமில் கலந்துகொள்பவர்கள் கவனிக்க வேண்டியது.

 1. முகாமில் கலந்துகொள்பவர்கள் குறைந்த பட்சம் மலேசிய நாவல்கள் நான்கினையும் வாசித்திருக்க வேண்டும். ஆயினும் உலக இலக்கிய நாவல்களையும் வாசிப்பது வரவேற்கப்படுகின்றது.
 2. நாவல்கள் பற்றிய விமர்சன கட்டுரைகளையோ குறிப்புகளையோ எழுதி எடுத்துவருவது சிறப்பு.
 3. ஒரு நாவல் குறித்து இருவர் தங்கள் பார்வையை முன்வைப்பர். அதை ஒட்டி விவாதம் நடக்கும். விவாதத்தில் எல்லாரும் பங்கேற்கலாம்.
 4. கட்டணம் 200 ரிங்கிட் (தங்கும் வசதி, காலை மற்றும் மதிய உணவு இக்கட்டணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இக்கட்டணம் தங்கும் இடத்தைப் பொறுத்து குறையும்; அதிகரிக்காது.)
 5. நாவல் முகாமில் பயன்படுத்தப்படும் நாவல்களைக் கைவசம் வைதிராதவர்கள் முகாம் பொறுப்பாளரை தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம்.
 6. நாவல் முகாமில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் முன் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். முன் பதிவுக்கு 016-3194522(ம. நவீன்) தொடர்பு கொள்ளவும்.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...