எழுத்தாளர்கள்தான் நிதர்சன உலகின் சாட்சியங்கள்- கே.எஸ்.மணியம்

KSManiam 2கடந்த ஆண்டு (2019) தன்னுடைய நூல் வெளியீடு, பொதுவெளி கலந்துரையாடல்கள், சந்திப்புகள் என பல ஆண்டுகள் நீடித்திருந்த மௌனவெளியிலிருந்து திடுமென கிளம்பி வந்திருந்தார் எழுத்தாளர் கே.எஸ். மணியம். கல்வியாளர்களுக்கே உரிய நடையுடை பாவனைகள் இல்லாமல் நிழற்படங்களில் முழுவதும் கலைஞனாய் தோற்றமளித்தார்.  அதன் இடைப்பட்ட கணங்களின் பதிவுதான் இந்த நேர்காணல். ஜூன் 2019 ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ஆங்கில மொழியில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணலின் தமிழ் மொழியாக்கமிது. 19.2.2020இல் காலமான அவரது சிறப்பு நேர்காணல் இது. ஆஸ்ட்ரோவில் ஆங்கிலத்தில் ஒளிபரப்பான இந்த நேர்காணலைத் தமிழ் வாசகர்களுக்கு வழங்குவது அவருக்குச் செய்யும் இறுதி மரியாதை என நம்புகிறேன்.

விஜயலட்சுமி

கேள்வி : நாடகங்கள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என  55 ஆண்டுகாலம் இலக்கிய உலகில் செல்வாக்குமிக்க எழுத்தாளராக திகழும் திரு மணியம் தற்சமயம் புதிய கவிதை தொகுப்பையும் முன்பு வெளிவராத இதர இலக்கியப் படைப்புகளையும் வெளியிட்டுள்ளார். மலேசிய இலக்கிய காட்சியில் ஒரு எழுத்தாளராக தனது 50 ஆண்டுகால பணி குறித்து இன்று நம்முடம் கலந்துரையாடவிருக்கிறார்.  எங்களுடன் இணைந்ததற்கு நன்றி திரு மணியம்.

கே.எஸ்.மணியம் : நன்றி.

கேள்வி : கெடா மாநிலத்தில் தோட்டப்புற, உழைப்பாளர் வர்க்கத்திலிருந்து வந்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர், ஆசிரியர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் என பன்முக தன்மைமிக்க ஆளுமையாக இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை பல மலேசியர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது. இன்றைய சூழலில் பல மலேசியர்கள் நீங்கள் இளமை பருவத்தில் கடந்து வந்த பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு திவ்யா, ஜனனி என STPM அரசாங்க தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இம்மாணவர்கள் வறுமையிலிருந்து வெளியேறுவதற்கு கல்வி மட்டுமே வழி என்று கூறுகிறார்கள். அடுத்த தலைமுறை மலேசியர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

கே.எஸ்.மணியம் : கல்வி, அது தொடர்பான செயல்பாட்டில் முழுமையாக ஈடுபடுங்கள். பள்ளிக்கூடம், கல்வி மையங்களில் கல்வி கற்பதை மட்டும் நான் இங்கு குறிப்பிடவில்லை. பரந்த, தெளிந்த அறிவுடன் மொழி ஆளுமை கொண்டிருப்பதும் கல்விதான். மொழி வளத்தை மேம்படுத்துவது அவசியம். மூன்றாவது மொழியாக தமிழ் உட்பட மொழி வளமும் உயர்கல்வியை நோக்கிய அவர்களது பயணத்திற்கு அவசியம்.

கேள்வி : ஆங்கில மொழி படைப்புகளுக்காக நீங்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளீர்கள். உலகளாவிய வேலை சந்தைக்கு ஏற்ப தங்களை வளர்த்துக்கொள்ள முனையும் மலேசியர்களுக்கு, குறிப்பாக மலேசிய இளைஞர்களுக்கு ஆங்கில மொழி எவ்வளவு முக்கியமானது?

கே.எஸ்.மணியம் : மிக நீண்ட காலமாக நான் இதைக் கூறி வருகிறேன். 20-30 வருடங்களாக இதைப் பற்றி கூறிவருகிறேன் என நினைக்கிறேன். ஆங்கில மொழி அனைத்தையும் இணைக்கிறது. ஆங்கிலத்தில் சரியாக எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். பொதுவெளியில் கூடுதல் மதிப்பையும், எளிதில் பிறரால் அணுகக்கூடிய வாய்ப்பையும் ஆங்கிலம் ஏற்படுத்துகிறது. உலக மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் எழுதும் பேசும் ஆற்றல் மிக்கவர்களுக்கான தேவை இன்றுவரை இருக்கிறது.

கேள்வி : எழுத்துத் துறையைத் திரும்பிப் பார்க்கும்போது உங்களது படைப்புகளில் பல்வேறு கருப்பொருள்கள் நிரம்பியிருந்தாலும் கதைகள் தேசிய அடையாள உணர்வைப் பேசுகின்றன. உங்கள் படைப்புகளின் மைய புள்ளியாக தேசிய அடையாள உணர்வு இருப்பதன் காரணத்தை அறிய எனக்கு ஆர்வமாக இருக்கிறது.

கே.எஸ்.மணியம் : காரணம் உண்டு. நாம் இன ரீதியாக இங்கு பிளவுபட்டுள்ளோம், அவ்வகையான பிளவை நான் விரும்பவில்லை. இந்த இடைவெளியையெல்லாம் தகர்த்துவிட்ட பின் “பாருங்கள்,  நாம் அனைவரும் ஒரே பூமியில்தான் இருக்கிறோம், ஒரே பூமியிலிருந்துதான் வந்திருக்கிறோம். நிலம் கொஞ்சம் வித்தியாசப்படலாம். ஆனால் மலேசியா, இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, எல்லா நாடுகளும் பூமியிலிருந்து வேறுபட்டவையல்ல,” என்று கூற விரும்புகிறேன். வாழும் ஒவ்வொருவருக்கும் இந்த பூமி இணக்கமானதாக இருக்கும்போது இதே நாட்டில் வாழும், குறைந்தபட்சம் இங்கேயே பிறந்,து இந்த நாட்டிற்காக தன்னால் இயன்றதைச் செய்பவர்களுக்கு நாம் ஏன் இணக்கமாக இருக்கக்கூடாது. மனிதர்கள்தானே இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய முடியும், அதைவிட்டு அவர்களுடைய வேர்களை தேடிச் சென்று ஏதேனும் செய்யச் சொல்ல முடியுமா?

கேள்வி : எழுத்தின் மூலம் நீங்கள் இதுவரை செய்தவை, உருவாக்கியவைகள் பிளவின் மூலம் ஏற்பட்டிருக்கும் இந்த இடைவெளியை இணைக்கும் பாலமாக உருமாறி எவ்வகையிலும் உதவியிருப்பதாக நினைக்கிறீர்களா?

கே.எஸ்.மணியம் : செய்திருக்கிறது. உங்கள் இனத்தைச் சார்ந்தவர்கள்மீதும் பிற இனத்தைச் சார்ந்தவர்கள்மீதும், உங்கள்மீதும் பிறர்மீதும் ஆதிக்கம் செலுத்தப்பார்க்கும் சிலவகை மனப்போக்குகளை நீங்கள் ஆதிரிக்கவில்லை என்று சொல்கிறீர்கள் என்றால் பிளவும் இடைவெளியும் இனி இங்கு இல்லை, இதற்குமேலும் இருக்கக்கூடாது என்று பொருள்படுகிறது.

கேள்வி : உங்களது வேர்கள் தமிழோடு பிணைந்திருக்கிறது. ஆங்கிலவழி கல்வியைப் பெறும் சாத்தியமும் உங்களுக்கு அமைந்தது. மலேசியர் எனும் அடையாளமும் உங்களுக்கு உண்டு. இவற்றோடு சேர்த்து இயற்கையாக உங்களுக்கு இருக்கும் ஆற்றல் என இவ்வனைத்தும் உங்களுக்குத் தனித்துவமான பார்வையை வழங்கியுள்ளது. ஆனால் உங்கள் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மலேசியாவில் வாழ்வதை தங்கள் சொந்த மண்ணில் வாழ்வதாக உணரவில்லை என்கின்றன. உண்மையில் இது நீங்கள் எதிர்கொண்ட சிக்கலா?

கே.எஸ்.மணியம் : இதை நான் எதிர்கொண்டதில்லை. ஆனால் இப்படியான சிக்கல்

KS Maniam launch his new book.(09/03/2019/S.S.KANESAN/The star)

மற்றவர்களுக்கு இருக்கிறது என்பதை அடையாளப்படுத்த முனைந்தேன். ஒரு நாட்டில் தன் இருப்பை முழுமையாக உணர முதலில் அந்நாட்டிற்கே உரிய நுண்ணுணர்வைக் கொண்டிருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அந்த உணர்வு நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, எங்கிருந்து வந்ததாக சொல்லப்பட்டதோ அங்கிருந்து அடையாளங்காணப்பட வேண்டும்.  என் கதையொன்றில் வரும் புலியானது கதை முழுவதும் தனது அடையாளத்துடன் புலியாக மட்டுமே இருக்கும். சுல்கிப்லியும் முத்துவும் தூர தேசத்திலிருந்து வந்தவர்கள். புலி வசிக்கும் காட்டில் தனக்கான வழித்தடத்தைத் தேடுவார்கள். ஏன் அப்படி தேட வேண்டும்? அவர்கள் தங்களுடைய அனுமானங்கள் அனைத்தையும் களைந்து, புலி எனும் நுண்ணுணர்வுடன் ஒன்றி, ஒத்துப்போய் தங்களை அடையாளம் காண வேண்டும் என நினைக்கிறேன்.

கேள்வி : இந்திய மலேசியர், சீன மலேசியர், மலாய் மலேசியர் என்பதாக இல்லாமல் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்களை மலேசியராக பார்க்கத் தொடங்கும்போது இப்போதிருக்கும் சூழல் மாறும் எனச் சொல்ல வருகிறீர்களா?

கே.எஸ்.மணியம் : தங்களை தனித்து, பிரித்து அடையாளப்படுத்திக் கொள்ள அவர்கள் எந்தவொரு முயற்சியையும் கையிலெடுக்க வேண்டியதில்லை. ஒன்றுடன் இணைய, பிணைவதற்குத்தான் சில கட்டுடைப்புகளும் திமிரல்களும் எதிர்ப்புகளும் அவசியமாகிறது.

கேள்வி : மிகச் சிறந்த எழுத்தாளர்களைப் போலவே உங்களுடைய  படைப்புகளிலும் சொந்த வாழ்க்கை அனுபவங்களின் மெல்லிய தொடுதலைப் பார்க்க முடிகிறது. உதாரணமாக, தோட்டத்து வாழ்வை ஒட்டிய பதிவுகளை ரத்னமுனியின்வழி சொல்கிறீர்கள். குறிப்பிடத்தக்க காலம் பீடோங், கெடாவில் வாழ்ந்துள்ளீர்கள். இப்போதைய சூழலில் மலேசியர்களே அந்த மாதிரியான வாழ்க்கை முறையிலிருந்து மாறி வந்துவிட்டார்கள். இப்படியான கால ஓட்டத்தில் உங்கள் படைப்புகளின் தாக்கம் குறையும் என்றோ வீரியத்தன்மை காணாமலாகும் என்றோ நினைக்கிறீர்களா?

கே.எஸ்.மணியம் : அது வாசகர்களின் தேர்வையும் அணுகுமுறையையும் சார்ந்தது. பழைய அமைப்புகளில் மட்டுமே இதுபோன்றவை நிகழும் என்று வாசகர்கள் கூறலாம்தான். ஆனால் அது தவறான அணுகுமுறை என்பேன். காரணம் இன்றைய பெருநகர், நவீன வாழ்வுக்குள்ளும் அதே அமைப்பு முறை நுழைந்திருப்பதைப் பார்க்க முடிகிறதுதானே. எனவே, இன்றும்கூட என் படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். ஒருவேளை சீனர், மலாய்க்காரர், இந்தியர் என்கிற பேதமின்றி பக்கத்து வீட்டுக்காரரை உங்களால் ஒரே உணர்வுடன் அனுசரிக்க முடிந்தால், யாராக இருந்தாலும் அது ஒரு பொருட்டாக இல்லாமல் உங்களால் இருக்க முடிந்தால் பழைய அமைப்புமுறைகள் உடைந்து விட்டதென ஏற்கிறேன்.

கேள்வி : படைப்புகள் வழியாக நீங்கள் பேசியிருக்கும் பல சிக்கல்கள் இன்றைய சூழலிலும் சிக்கல்களாகத்தான் இருக்கின்றன. மதுப்பழக்கத்தை உதாரணமாகக் கூறலாம். இந்திய சமூகம் இதிலிருந்து மீண்டெழ என்ன செய்தால் சரியாக இருக்குமென நினைக்கிறீர்கள்?

கே.எஸ்.மணியம் : இரு விடயங்களைச் செய்ய முடியும். மதுப்பழக்கம் இதுவரை அவர்களது வாழ்வில் என்ன செய்திருக்கிறது என்பதை அவர்களுக்குச் சொல்லலாம். குறிப்பாக அவர்களது உடலுக்கும் மனதுக்கும். மதுப்பழக்கத்திற்குப் பின்னால் இருக்கும் முக்கியமான காரணமாக நான் பார்ப்பது ‘தாங்கள் இருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு போக முடியாது’ என்பதை அவர்கள் தெரிந்துகொண்டதாக இருக்கலாம். உன்னால் போக முடியும் என ஊக்குவிக்கும்போது இச்சிக்கலை ஓரளவு குறைக்க முடியும். சுய மரியாதை இருக்கும்போது நிச்சயமாக ஒருவர் மதுப்பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வார்.

கேள்வி : இந்திய சமூகத்தைப் பற்றி பேசும்போது மதுப்பழக்கத்தைப் போலவே குண்டர் கும்பல், குற்றச்செயல்கள், குடும்ப வன்முறைகளும் சரிசம அளவில் பெரும் சிக்கலாகப் பார்க்கப்படுகிறது. முதலில், இந்திய சமூகத்தில் இச்சிக்கல்கள் பரவலாக காணப்படுவது எதனால்? அடுத்து,  இந்திய சமுதாயம் மீண்டெழ நாம் எவ்வகையில் உதவ முடியும்?

கே.எஸ்.மணியம் : இவர்கள் தங்களது கால்கள் தரையில் படாததை மறந்து மிதமிஞ்சிய கனவில், கற்பனையில் வாழ்கிறார்கள் என்று சொல்வேன். காரணம் இவர்கள் தங்களுக்கென்று எதுவுமே செய்துக்கொள்ள வில்லை. தங்களை மேம்படுத்திக் கொள்ள, நல்ல வேலையை பெற அதில் உயர் பதவிகளுக்குப் போக, கூடுதலாக உழைக்க என எதுவும் செய்துக்கொள்வதில்லை. எளிய வழியில் பணம் கிடைக்குமென்று வழிபறி, வீடு புகுந்து களவாடும் வேலைகளைச் செய்கிறார்கள். நாம் இம்மாதிரியான குணத்தையும் செயலையும் நிராகரிக்க வேண்டும். அடுத்து, வெகுமதி வழங்குதல் பதவி உயர்வு, கவனப்படுத்துதல் போன்றவையும் இச்சிக்கல்களை வளரவிடாமல் தடுக்கலாம்.

கேள்வி : உங்களைப் பற்றி எழுதப்பட்டவைகளில் இரண்டு விடயங்கள் தனித்துத் தெரிகின்றன. ஒன்று, மலேசிய இலக்கியம் என்பதற்கான ஓர் வடிவத்தை கொடுத்தீர்கள்; அடுத்து, மலேசியராக இருப்பது என்றால் என்ன என்பதற்கான அர்த்தத்தை நீங்கள்தான் எழுதினீர்கள். இந்தப் பாராட்டை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

KSManiam 4கே.எஸ்.மணியம் : பள்ளி பருவத்திலிருந்தே மலேசிய எழுத்துலகையும் அதன் வளர்ச்சியையும் மிக நீண்ட காலமாக கவனித்து, பின்தொடர்ந்து வருகிறேன். Ee Tiang Hong, Lee Kok Liang போன்று மலேசிய இலக்கியத்திற்கு பங்களித்த பலரைப் பார்த்துள்ளேன். படைப்பின் வழி மக்களை ஒன்றிணைக்க அவர்கள் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்தார்கள். இங்கிருந்து எதையும் பெரிதாய் செய்துவிட முடியாது, சாத்தியமற்றது எனும்போது Ee Tiang Hong போன்றவர்கள் ஆஸ்திரேலியா என இடம்பெயர்ந்து போய்விட்டார்கள். அவ்வகையில் நான் என்னை அவர்களது தொடர்ச்சியாக, அவர்கள் தொடங்கியதையும் இணைத்துக் கொண்டு முன் செல்லும் ஆளாகத்தான் பார்க்கிறேன். ஒரு நாட்டில் நாம் அனைவரும் பொதுவான, சமமானவர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

கேள்வி : இது சற்று விரிவான பார்வையைக் கோறும் கேள்வியாக இருக்கலாம். ஏன் நீங்கள் எழுதுகிறீர்கள்?

கே.எஸ்.மணியம் : நான் அதற்குள்ளேயே உயிர்பெற்றதாக நினைக்கிறேன். நம்மில் சிலர் அதனுள்ளேயே உயிர்ப்பித்தவர்கள், அதிலிருந்து நழுவி எங்கும் ஓடிவிட முடியாது. ஒருவன் இசைக்கலைஞன் ஆகிறான் என்றால் அதற்கும் காரணம் இருக்கும். ஆரம்பகாலங்களில் இந்நாட்டில் அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டை உருவாக்குவது என்பது முற்றிலும் வேறான பாதை. சகல வசதிகளுடன் ஒரு நாட்டை வடிவமைத்து கட்டியெழுப்புவதற்குள் பல இழப்புகள், கண்ணீர், தாக்குதல்கள், சண்டை, போர் என பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இப்படியான காரணங்களைச் சொல்வதால் கலையை விட்டு ஒருவர் தன்னை விடுவித்துக் கொள்வதாக நினைக்க வேண்டியதில்லை. கலையை உட்பட இதுவும் ஒரு மனிதன் தான் இருக்கும் இடத்திலிருந்து இன்னொரு இடம், இன்னொரு நிலையை நோக்கி நகர்வதுதான்.

கேள்வி : உங்களுக்கு இப்போது 77 வயது ஆகிறது. இதுவரை எழுதியதற்கு இணையாக எழுதவேண்டும் என்று உங்களுக்குள் இன்னும்கூட தீ கனன்று கொண்டிருக்கிறதா? அல்லது எழுத வேண்டியதையெல்லாம் எழுதி முடித்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

கே.எஸ்.மணியம் : ஓர் எழுத்தாளராக நான் எப்போதும் சொல்வது ஒன்றுதான். நிச்சயமாக நான் எழுத நினைத்த அனைத்தையும் எழுதி முடித்துவிட்டதாக உணரவில்லை. அப்படி ஒரு இடம் எழுத்தாளனுக்கு வாய்க்காது. அதேசமயம் எழுதுவதற்கு அதை இயக்கும் சக்தி உச்சத்தில் இருந்து இயங்க வேண்டும். அதுதான் இத்தனை காலம் என்னை இயக்கியது. தனியாக நானென்று எதுவுமில்லை. சமீபகாலமாக எனது உடல் நலம் சரியாக இல்லை. தற்காலிகமாக ஒரு காற்புள்ளியை வைத்திருக்கிறேன். எழுதுவதற்குரிய எதுவும் யோசனையில் வந்தால் தவறாமல் பதிவு செய்து வைக்கிறேன். பிறகு அதை விரிவாக்கி படைப்பை உருவாக்குவேன்.

கேள்வி : உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பைப் பற்றி கூறுங்கள். உங்களுடைய படைப்புகளைப் புதிதாக வாசிக்க வருபவர்களுக்கு இத்தொகுப்பு எப்படி உதவும்?

கே.எஸ்.மணியம் : என்னுடைய நாவல், சிறுகதை என எனது படைப்புலகம் குறித்த சுருக்கங்களை உள்ளடக்கிய வழிகாட்டி நூலாக இத்தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. எனது படைப்புகளைப் புதிதாக வாசிக்க வருபவர்கள் ஒவ்வொரு நாவலையும் முழுமையாக இறுதிவரை வாசிப்பதற்கு பதிலாக ஆக்கங்களின் சுருக்கங்களை வாசித்து, தெரிவு செய்து பிறகு படைப்புகளுக்குள் நுழையலாம். ஏதாவது ஒரு படைப்பை மட்டும் வாசித்து, அது அவர்களுக்குள் ஆழமான, வலுவான உணர்வுகளைத் தூண்டினால், நெடுங்காலம் அவர்களுடன் பயணித்தால் “என்னை, என் குணத்தை, என் செயல்பாட்டை இக்கதை கொஞ்சம் அசைத்துவிட்டது,” என்று அவ்வாசகன் நினைத்தால் போதுமானது. நான் அதில் மனநிறைவு கொள்கிறேன்.

கேள்வி : உங்களது படைப்பு ஒருவரை அசைத்துப் பார்க்கும்போது ஒருவகையில் உங்களது நோக்கம், பணி நிறைவுற்றத்தாக கருதுகிறீர்கள். எழுதுவதை உங்களுக்கான அடையாளமாகவும் அங்கீகாரமாகவும் குறிப்பிடுகிறீர்கள். ஆனால்,  பிரதான ஊடகங்களில் பிரபலமாக கொண்டாடப்படும் எழுத்தாளர்களுக்கு புகழும் அதையொட்டி ‘அதிஸ்டங்களும்’ வாய்க்கின்றன. மலேசியாவில் வாழும் ஓர் எழுத்தாளராக உங்களது பயணத்தில் அப்படியேதும் வந்ததுண்டா?

கே.எஸ்.மணியம் : நான் அதை எதிர்பாத்ததில்லை, தேடிச் சென்றதுமில்லை. இன்றைய நிலையிலும் எனக்கு அது வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். காலந்தோறும் மாறிவரும் நடையுடை முறையைப் போல (fashion) அதுவும் மேலெழுந்து, அடங்கி, மடிந்துபோகும்.  சிலர் இன்னும்கூட என் படைப்புகளை ஆராய்ச்சி செய்கிறார்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று என்னைப் பேட்டி காண்கிறார்கள். வேறெதைக்காட்டிலும் இதுதான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. என் படைப்புகள் இன்னமும்கூட வாசிப்புக்கும் ஆய்வுக்கும் பொறுத்தமானவையாக இருக்கின்றன என்பதற்கு இதுதான் அடையாளம். உயர எழுந்து மடியும் ‘fashion’களைக் காட்டிலும் என் படைப்புகள் ஒருவரை ஆழமாக ஈர்த்துள்ளதையும் தன்வசம் அவர்களைத் தக்கவைத்துக் கொண்டதையும் முக்கியமாகப் பார்க்கிறேன்.

கேள்வி : நாம் இப்போது தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். மனிதர்கள் பரவலாக மடிக்கணினி, கைத்தொலைபேசி, இன்னும் பல தொழில்நுட்ப சாதனங்களுடன் தங்களைப் பிணைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். புத்தகங்களை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் வாசிக்கும் எளிய குதூகலத்திலிருந்து நாம் வெகுதூரம் விலகி சென்றுவிட்டோம். ஒரு விடயத்தில் கவனத்தைச் செலுத்தும் கால அளவும் குவிமயமான சிந்தனையும் பெருமளவு குறைந்து வருவதாக ஆய்வுகள் சான்றுகளைக் காட்டுகின்றன. எழுத்தாளர்கள் வாசகர்கள் குறித்து இத்தரவுகள் என்ன கூற விளைகின்றன?

கே.எஸ்.மணியம் : இன்றைய வாசகர்கள் தங்களது கவனம் எளிதில் திசை திரும்பிச் செல்ல அனுமதிக்கிறார்கள். உங்கள் முன் நிறைய வகை சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் எதை தெரிவு செய்யப் போகிறீர்கள்? ஒன்றை எடுத்துப் பார்க்கிறீர்கள், அது பிடிக்கவில்லை என்று உடனே அடுத்ததை நோக்கி போகிறீர்கள். ஒன்றைப் பார்ப்பதில் நம்மிடம் ஒழுங்கும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும். ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது ஓர் ஓவியத்தை ரசிக்கும்போது அல்லது நீங்களேகூட எழுதும்போது வரையும்போது அதன் முடிவுவரை போக வேண்டும். வாசித்து முடிக்கும்போது, ரசனையின் எல்லையைத் தொடும்போது, எழுதி முடிக்கும்போது ஓர் உலகம் உங்களுக்காக அகல திறக்கிறது. அது இதுவரை நீங்கள் கண்டிறாதவொரு உலகம். அது அப்படி மட்டும்தான் நிகழும். அதற்காக நீங்கள் உங்கள் செயல்பாட்டின் எல்லைவரை போக வேண்டும். அதனால்தான் மீண்டும் சொல்கிறேன் ஒழுங்கும் கட்டுப்பாடும் இன்றைய சூழலில் அவசியம். வெறுமனே “எனக்கு இப்போது இது பிடித்திருக்கிறது, நான் ரசிக்கிறேன்,” என்று சொல்வதும் அடுத்த கணம் இன்னொன்று நோக்கி போவதுமாக இருக்கக் கூடாது. கவனம் பிசகி, குவிமயமான பார்வை இல்லாமல் கடைசியில் “போதும் போதுமென வாழ்ந்துவிட்டேன், ஆனால் இந்த வாழ்க்கை எனக்கு எவ்வித திருப்தியையும் தரவில்லை. வெளியேறும் கதவு வந்துவிட்டது, நான் போகிறேன்,” என்று கூறிவிட்டு போகிறார்கள். இதை ஒரு படைப்பாளன், வாசகன் செய்யவே கூடாது.

கேள்வி : இப்போது இதை உங்களுள் இருக்கும் ஆசிரியர் சொல்கிறாரா அல்லது எழுத்தாளர் சொல்கிறாரா?

மணியம் : தெரியவில்லை. எழுத்தாளர்கள்தான் பல வழிகளில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். காரணம் அவர்கள்தான் நிதர்சன உலகின் சாட்சியங்கள்வழி ஒரு கதை மூலம், கதைக் கூறலின்மூலம் உரையாடுகிறார்கள். அதனால்தான் எழுத்தின்மீது ஈர்ப்பு அல்லது கூடுதல் ஈர்ப்பு எப்போதும் இருக்கிறது.

கேள்வி : எழுத்தாளர்கள்தான் பல வழிகளில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் ஆசிரியராக இருந்ததால் கிடைக்கப்பெற்ற அனுபவங்கள் ஏதோவொரு வகையில் எழுத்தாளரான உங்களுக்கு உதவுகிறது என்று புரிந்து கொள்ளலாமா?

KSManiam 1

கே.எஸ்.மணியம் : இல்லை. இவை இரண்டுமே வேறு வேறான பகுதிகள். கற்பித்தல் என்பது கற்பித்தல் மட்டும்தான். எழுத்தாளராக இருக்கும் ஓர் ஆசிரியனாக மாணவர்கள் சொல்லும் பல மாதிரியான விடயங்களை உள்வாங்கிக்கொண்டு என்னால் அவர்களுக்குக் கற்பித்தல் சூழலில் சுமூகமான தருணங்களை உருவாக்கிக் கொடுக்க முடியும் என்பதை ஏற்கிறேன். உதாரணமாக அவர்கள் ஒன்றை மிகவும் கடினம் என்று சொல்லும்போது அவர்கள்கூறும் கடினங்கள்மீது அழைத்துச் சென்று “பாருங்கள், உண்மையின் இது கடினமில்லை, நீங்களாகத்தான் இதை கடினமாக ஆக்கியுள்ளீர்கள்,” என்று காட்டுகிறேன்.

கேள்வி : மலேசியாவில் மலாய் இலக்கியம் மட்டும்தான் மையமாகவும் அதன்மீதுதான் முழு கவனமும் செலுத்தப்படுவதாகவும் கூறுகிறீர்கள். ஆங்கிலம், தமிழ், சீனம் போன்ற மலேசியர்களால் எழுதப்பட்ட பிற மொழிகளில் இலக்கியங்களை ஒதுக்குவது குறித்தும் குறிப்பிடுகிறீர்கள். பிற மொழி இலக்கியங்களுக்கு ஆதரவின்மை, அதேசமயம் மலாய் இலக்கியங்களை ஆதரிக்கும் வகையிலான கல்விக் கொள்கைகள், இலக்கியம் சார்ந்த திட்டங்கள் போன்றவை நீங்கள் எழுதத் தொடங்கிய காலங்களிலிருந்து இப்போதுவரை எவ்வகையிலாவது மாறியுள்ளத்தென நினைக்கிறீர்களா?

கே.எஸ்.மணியம் : ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்திருப்பதாக நினைக்கிறேன். மொழி வளத்தை மேம்படுத்தும் பொருட்டு படிவம் 4 மற்றும் படிவம் 5ஆம் ஆண்டு பாடத்திட்டங்களில் இலக்கியத்தை அறிமுகப்படுத்தியதைச் சொல்கிறேன். அச்சமயம் பல்வேறு சமூகங்களைச் சார்ந்த மூன்று எழுத்தாளர்களின் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. என்னுடைய ‘தி ரிட்டன்’ நாவல் அதிலொன்று. இன்னொருவரின் காலணியில் நின்று ஒன்றை பார்க்கும்போது, இன்னொருவரின் சிந்தனையின்வழி ஒன்றை அவதானிக்கும்போது அவர்களுடைய சிக்கலும் சூழலும் தெரிய வரும். அதன்வழி பரிவும் இறக்கமும் கூடும். வாசிப்பின் வழியாக கொஞ்ச காலமேனும் அதனுள் வாசம் செய்யும்போது இறக்க உணர்வு வளர்ந்து, பின், பிறர் உளமறிந்து இயங்க அது வழிசெய்யும். ‘தான்’ என்பதாக இருப்பதைவிட மற்றவர்களிலும் தன்னை உணர்வது மிகப்பெரிய இருத்தல். அந்த வகையில் சிறிய அளவாக இருந்தாலும்கூட இது கவனிக்கப்பட வேண்டிய மாற்றம்தான்.

கேள்வி : இந்நாட்டு அரசாங்கம் ஏன் மலாய் மொழியை அதிகாரம் மிக்கதாக ஆக்க விரும்புகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஏனென்றால் அது இந்நாட்டின் பாரம்பரியம், அதுதான் இந்நாட்டின் கலாச்சாரம். உங்கள் பார்வையில் மலாய் இலக்கியத்திற்கு மட்டும் இப்படியான கவனம் அவசியமில்லை என்று நினைக்கிறீர்களா, அல்லது மொழியைப் பொருட்படுத்தாமல் நல்ல இலக்கியங்கள் என்பதுதான் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

கே.எஸ்.மணியம் :   ஒரு படைப்பு எவ்வளவு தூரம், எவ்வளவு ஆழம் செல்ல முடியும் என்பதும்  தனிப்பட்ட ஒருவருக்கு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் சுற்றிதான் எல்லாமே. எழுத்து என்பது வாழ்வனுபவத்தின்வழி அறிய, உணர முடியாத ஒன்றை படைப்பின் வழியாக வாசகனின் முன் வைப்பது மட்டுமே.

கேள்வி : எழுத்துத் துறையை பொருத்தமட்டில் மலேசிய இலக்கியக் காட்சியில் நிறைய பங்களிப்பைச் செய்துள்ளீர்கள். ஆனால் டத்தோ, தான் ஶ்ரீ போன்ற சிறப்புப் பட்டங்கள் எதுவும் உங்களுக்கு வழங்கப்படவில்லை. அதே சமயம் ஷா ருக் கான் போன்றவர்களுக்கு டத்தோ பட்டம் வழங்கப்படுகிறது. உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒரு சிறு பகுதி இதனால் காயப்பட்டிருக்கிறதா?

கே.எஸ்.மணியம் : இல்லவே இல்லை. காரணம் நான் எப்போதும் கௌரவிக்கப்படுகிறேன்; உபகாரங்கள் எனக்கு அவசியமில்லை. இன்னமும்கூட ஏதோ ஓர் சூழலில் முதுகலை ஆய்வுக்காக என்னைத் தேடி மாணவர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதுதான் கௌரவிக்கப்படுதலின் உச்ச முனை. என்னுடைய படைப்புகளை முதுகலை ஆய்வுக்கு உட்படுத்த விரும்புவதாக மட்டும் அந்த மாணவர்கள் கூறுவதில்லை, அதைக்கடந்து இது ஒருவகையில் அவர்களது தொழில் சார்ந்த தேவைகளுக்கும் பயன்படுகிறது. என் அறையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஆய்வு மாணவர்களைப் பார்க்கலாம். ஆகக் கடைசியாக குறைந்தது பத்து மாணவர்களாவது வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

கேள்வி : உங்கள் படைப்புகளில் எதை நீங்கள் விளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடிய நாவலாக கருதுகிறீர்கள்? பிரபலமான நாவல்களைத் தவிர்த்து ஒன்றைக் கூறுங்கள்.

கே.எஸ்.மணியம் : Between Lives – அண்மையில் வெளிவந்த நாவல். முழுமையாக மலேசியராக மாறுவதில் இருக்கும் நுட்பங்களையும் சிக்கல்களையும் அந்நாவல் பேசுகிறது.

கேள்வி : அனைவருக்கும் குறிப்பிடத்தக்க, வரையறுக்கப்பட்ட காலம் மட்டுமே இருக்கிறது. அந்த காலம் வரும்போது, (அந்தக் காலம் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது என்று நம்புகிறேன்), நீங்கள் என்னவாக நினைவில் வைத்துக்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

கே.எஸ்.மணியம் : யாரோ ஒருவர் எனது கதை அல்லது நாவல் அல்லது எதையாவது எடுத்துப் படித்துக்கொண்டிருக்கும்வரை, எனக்கு மிகப்பெரிய கௌரவிப்பு செய்யப்படுவதாக நினைக்கிறேன். அதற்கு நன்றிகூற நான் அப்போது இல்லாமல் இருக்கலாம், ஆனால் பிரிதொரு வழியில் என் படைப்பின் மூலமாக நான் அங்கு இருப்பேன். என் இருப்பு இருக்கும். நன்றி.

1 comment for “எழுத்தாளர்கள்தான் நிதர்சன உலகின் சாட்சியங்கள்- கே.எஸ்.மணியம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...