சொற்ப காலம் கொள்ளும் இம்மானுட வாழ்வில் மனிதன் தன் இறுதி கணம்வரை எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் தேடி அடைய முடியாததை அவன் சந்ததி தேடுகிறது. முற்றிலும் புறவயமான இத்தேடலின் பின்னால் அவனது அகம் சார்ந்த வலிகளும் வடுக்களும் ஆயிரம் கதைகளைத் தேக்கி வைக்கின்றன. மூதாதையர்களின் இருத்தலை கேள்வி எழுப்புவதும் தன் இருப்பை மீள்பார்வை செய்வதுமாக நிலையற்று அலையும் மனிதனை நோக்கி வரும் ஓர் அசரீரியாய் ‘பேரண்டத்து படைப்பின் மூலத்திலிருந்து வந்த துகல் மட்டுமே நீ. ஒருபோதும் உன்னால் உன் இலக்கை சென்றடையவே முடியாது. இங்கு யாருமே எங்குமே சென்றடைவதில்லை. எந்த இடமும் இங்கு நிலையில்லை. இங்கு அனைத்தும் அனைவருக்குமானது,’ என்று ஒலித்துக் கொண்டேயிருந்தது ஓர் குரல்.
கே.எஸ். மணியம். 55 ஆண்டுகாலம் பாண்டியன், சுல்கிப்லி, சுமதி, செல்லம்மா, பெரியத்தாய், ராஜு, புலி, முதியவன், கிருஷ்ணன் என பல உருவங்களில் பெயர்களில் ஒற்றைக் குரலாய் தன் சமகால மலேசியத் தமிழ் படைப்பாளிகள் பேசத் தயங்கிய, தெரிந்தே தவிர்த்த, அசட்டையாய் விட்ட ஓர் எல்லையை முட்டி முட்டி அசைய வைத்தவர். சில காலம் மெளனவெளியில் தன்னை தனிமைப்படுத்தி வைத்திருந்து கடந்த ஆண்டு திடுமென கிளம்பிவந்து புத்தக வெளியீடுகள், கலந்துரையாடல், நேர்காணல் என தற்காலிக வெளிச்சத்தை தன்மீது படரவிட்டு 19 பிப்ரவரி 2019 நிரந்தரமாய் மெளனவெளிக்குள் நுழைந்துவிட்டார். மலேசிய இலக்கியத்தின் போக்கை வடிவமைத்தவர், சிந்தனையைத் தூண்டும் எழுத்தாளராக பரவலாக அறியப்பட்டவர் என ஒரு பக்கம் வாசகர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கொண்டாட இன்னொரு பக்கம் வகுப்புவாத எழுத்தாளர், இனவாத எழுத்தாளர், குறுகிய பார்வையைக் கொண்டவர், அங்கீகாரத்தைத் தேடி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்தவர் என ஆளும் வர்க்கம் கோரக்குரல் எடுத்து அவரை வசைபாடிக்கொண்டே இருந்தது.
கே.எஸ். மணியம் (சுப்பிரமணியம் கிருஷ்ணன்) மலேசிய ஆங்கில இலக்கியச் சூழலில் மிக முக்கியமான ஆளுமையாக தான் வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட்டவர். அவரது பல படைப்புகள் மலேசிய இந்திய சமூகத்தின் நிலை மற்றும் பன்முக சமூகம் வாழும் ஓர் நாட்டில் சிறுபான்மை இனமாக இந்தியர்கள் ஓரங்கட்டப்படுவதைத் தொட்டு பேசியவை. இலக்கியப் பிரதிகளில் அவரது கருப்பொருள்கள், கதாபாத்திரங்கள், கதைக்குரலின் தரம் அனைத்தும் உலக அளவில் அவருக்குத் தனித்த இடத்தைப் பெற்றுத் தந்தது. ஓர் எழுத்தாளனுக்கு அடுத்தவர் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்கும் குணமும் மனிதாபிமான உள்ளுணர்வும் இருக்க வேண்டும் என்று சொன்னதுடன் தன்னிடமிருந்த எழுத்தாற்றலை அதற்காகவே முழுவதும் அர்ப்பணித்தவர்.
1964ஆம் ஆண்டு முதல் கவிதை வழி 22 வயதில் இலக்கியம் நோக்கி தனது கவனத்தை பதித்தார் கே.எஸ். மணியம். The Loved Flaw சிறுகதை 1987ஆம் ஆண்டு New Straits Times–McDonald’s சிறுகதைப் போட்டியிலும், Haunting The Tiger சிறுகதை 1990ஆம் ஆண்டு New Straits Times–Shell போட்டியிலும் முதல் பரிசை வென்றது. இந்நாட்டில் இவற்றை எழுதலாம் இவற்றை எழுதக்கூடாது என்று எழுத்தாளர்கள் சுயதணிக்கை இட்டுக்கொள்ளும் சூழல் பரவலாக இருந்த காலத்திலேயே மலேசியராக இருப்பது என்றால் என்ன என்பதற்கான அர்த்தத்தைக் கூறுவதாக பெரும் சர்ச்சையைத் தோற்றுவிக்கக்கூடிய ஒரு கருவை தனது அடர்ந்த மொழியாற்றல்வழி எழுதி அதற்காக பரிசையும் வென்றதில் கே.எஸ். மணியம் தனித்து தெரிய தொடங்கினார். மணியத்தின் படைப்புகள் தனித்துவமானவை. அவை வெறுமனே கருத்துகளை சொல்வதாக இருப்பதில்லை. ஒவ்வொன்றிலும் ஆழமான மெல்லிய இசை உயிரோட்டத்துடன் பதிவாகியிருக்கும். அது ஒவ்வொரு கதாபாத்திரத்தின்வழியும் வாசகனுக்குள் இறங்கி இம்மண்ணில் புதையுண்டு போன ஓராயிரம் உயிர்களின் அலறலை, கண்ணீரை, ஏக்கத்தை கேட்க அனுமதிக்கும். மனிதர்கள் அக்கம் பக்கம் இருந்தாலும்கூட அவர்கள் அனைவருக்குள்ளும் ஓராயிரம் மைல் இடைவெளி இருப்பதையும் அவர்களை நெருங்கித் தொடுவதற்கான மெல்லிய கோடொன்றையும் வரைந்து செல்கிறது மணியத்தின் படைப்புகள். மணியத்தின் படைப்புகள் மனித வாழ்வின் எதார்த்தத்தை சொல்லவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதுண்டும். ஆம், உண்மையில் அவை எதார்த்தத்தை சொல்ல எழுதப்பட்டவையல்ல மாறாக தரிசனத்தைச் சொல்பவை, பெரும் லட்சியங்களைத் தேக்கி வைத்தவை. அதனால்தான் அவர் தனித்துவமான படைப்பாளியாக கொண்டாடப்பட்டார்.
எழுத்துத் துறையைத் தவிர நாடகங்கள் சார்ந்து அவரது செயல்பாடுகளும் கவனிக்கப்பட வேண்டியவை. மணியம் நாடகத்துறை வட்டத்திலும் அதிக பிரபலமானவராகத் திழ்ந்தவர். இனம், வர்க்கம், மனிதனின் அகவய சிக்கல்களைப் பேசும் அவரது The Cord (1983), The Sandpit: Womensis (1990), The Skin Trilogy (1995) ஆகிய நாடகங்கள் மலேசிய நாடகத்துறைக்கு மிக முக்கிய பங்களிப்பு செய்தவையாக இருக்கின்றன. சிக்கலான, கடினமான விடயங்கள அவற்றின் ஆழம் குன்றாமல் சொல்லியிருப்பதில் இந்நாடங்கள் அசாதாரணமானவையாகவும் மிரட்டலானவையாகவும் பார்க்கப்படுகிறது. Five Arts Centre எனும் மலேசிய நிகழ்த்துக் கலை அமைப்பை தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும் மணியம் செயல்பட்டிருக்கிறார்.
மலேசியாவில் ஆங்கில இலக்கியம், காலனித்துவத்திற்குப் பிந்தைய இலக்கியம் எனும் வரைபடத்திற்குள் கே.எஸ். மணியம் முன்னணியில் இருக்கும் எழுத்தாளர். உலகெங்கிலும் அதிகம் வாசிக்கப்பட்ட, ஆராய்ச்சி செய்யப்பட்ட மலேசிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவரது சாதனைகள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றவை. பல இலக்கிய, ஆய்வு மேடைகளில் ஓங்கி ஒலித்தது இவரது குரல். ஆனால் இந்நாட்டு அரசாங்கமும் இலக்கிய அமைப்புகளும் மணியத்தை கவனிக்கவுமில்லை கவனப்படுத்தவுமில்லை. இதற்கு இந்நாட்டு அரசாங்கம் கொண்டிருக்கும் மொழி ரீதியான பாகுபாட்டை ஒரு காரணமாக முன்வைத்தால், ஆழத்தில் இந்நாட்டு அரசியலை, கல்வி முறையை, இன சமய பாகுபாட்டை இலக்கிய பிரதிகள் ஊடாக விமர்சித்தார் என்பதற்கான எதிர்வினையாகவும் இதைக் கூற முடியும்.
கே.எஸ். மணியத்தின் படைப்புகள் மலேசியாவில் வாழும் இந்தியர்களை மட்டுமே பேசுவதாக ‘இனவாத எழுத்து’ என்று முத்திரை குத்தப்பட்டவை. அவரும்கூட தனது படைப்புகள் இந்நாட்டில் வாழும் இந்தியர்களை ஐந்து தலைமுறை காலங்களாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றன என்று எல்லா மேடைகளிலும் நேர்காணல்களிலும் முழங்கியிருக்கிறார். ஆனால், வாழும் காலத்திலும் சரி இறப்பின்போதும் சரி மணியத்தை இந்த இந்திய சமூகம் சரியாய் கவனித்ததா என்பது கேள்விக்குறிதான். ஆங்கில மொழியில் புலங்கும் இந்திய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்களைத் தவிர்த்து மணியம் தமிழ் மொழி இலக்கியம், கல்வியாளர்கள், ஆய்வுச் சூழலில் அறிமுகம்கூட ஆகவில்லை. 2018ஆம் ஆண்டு கே.எஸ். மணியம் சிறுகதைகள் எனும் மொழிபெயர்ப்பு நூல் மூலமும், தொடர்ச்சியாக அவரது நேர்காணல்கள், உரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வல்லினம் இலக்கிய இதழில் பதிப்பிக்கப்பட்டதன் மூலமும் தமிழ்ச் சூழலுக்கு அவரை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. வேறேதும் அதற்கு முன்னும் பின்னும் நிகழவில்லை. துண்டு செய்தியாக அவரது மரணம் குறித்தச் செய்தியைக்கூட இந்நாட்டு தமிழ் நாளிதழ்கள் பிரசுரிக்கத் தவறின.
மணியம் தன் எழுத்தைக் கொண்டு எதையும் வேட்டையாட முயலவில்லை. கடைசிவரை எழுத்தை விரும்பியதால் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார். எழுதும் விடயத்தில் தனக்கிருந்த தெளிவைப் போலவே ஓர் எழுத்தாளன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் எனும் தெளிவான சித்திரம் அவரிடமிருந்தது.
‘எழுதுதல் கடினமானது; கடும் கட்டொழுங்கைக் கோருவது. ஆனால் அதுதான் வாசகனிடம் நேர்மையாகவும் நெருக்கமாகவும் சென்று பேசும் ஒரே குரல். உடனடி புகழ், வசீகரம், பிரபலம் போன்ற போலியான கவன ஈர்ப்பு, கவர்ச்சி ஆகியவற்றை எழுத்தாளர்கள் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். எழுதுதல் என்பது தன்னையும் சமூகத்தையும் அடையாளம் காணும் ஒரு தொடர்ச்சியான செயல்பாடு, பணத்திற்காகவும் வெற்று மினுமினுப்புக்காகவும் அதை தியாகம் செய்துவிடக் கூடாது,’ என்பது மணியம் முன்வைக்கும் எழுத்தாளனுக்கான சித்திரங்களாகும்.
கே.எஸ். மணியம் இந்நாட்டில் வாழ்ந்த அற்புதமான எழுத்தாளர், சிந்தனையாளர் என்பதற்கு அவரது படைப்புகளே சாட்சியாக இருக்கும். மணியத்தை கௌரவிக்க அவர் நம் ஒவ்வொருவருக்கும் நமது வாழ்நாள் நெடுக வாய்ப்பு வழங்குகிறார். இனியாவது நாம் அதைச் செய்யத் தயாரா என்பதுதான் கேள்வி. படைப்பாளனுக்கு மரணமில்லை, மரணமில்லா பெருவாழ்வு வாழ படைப்பாளனுக்கு மட்டுமே வாய்க்கிறது. மணியத்தின் இருப்பு எப்போதும் நாம் தொட்டுத் திறக்கும் பக்கங்களில் உயிர்கொண்டிருக்கும்.
தொடர்புடைய பதிவுகள்: