கே.எஸ். மணியத்தின் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என அனைத்தும் மலாயா/மலேசியாவின் புலம்பெயர் சமூகம் இதுவரை கடந்துவந்திருக்கும் பாதையையும் இனி செல்ல வேண்டிய இலக்கையும் அதற்கான வழிகளையும் அலுக்காமல் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அனைத்து சமூக உறுப்பினர்களும் தங்களுடைய மரபுவழி அடையாளங்களையும் வாழும் நாட்டின் அடையாளங்களையும் ஒருங்கே அணைத்துக் கொள்வதன்வழி பன்முகத் தன்மைகொண்ட ஒன்றைச் சமூகமாக உருவெடுக்க முடியும் எனும் பெரும் எதிர்பார்ப்பை கே.எஸ். மணியத்தின் படைப்புகள் சுமந்து நிற்கின்றன. இதுவரையில் இவரது படைப்புக்கு கிடைத்த மிக உயரிய அங்கிகாரமாக Raja Rao Award இருக்கின்றது. இது அவரின் ஒட்டுமொத்த படைப்புக்கும் கிடைத்த ஒற்றை விருதாகும். இதைத் தவிர அவருடைய ‘The Return’ நாவலும் இதர சில சிறுகதைகளும் இடைநிலைப் பள்ளிகளில் ஆங்கில இலக்கியப் பாட நூல்களாகப் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆங்கிலத்தில் தன் எழுத்துகளைப் பதிப்பிக்கும் கே.எஸ்.மணியத்தில் இந்த உரையாடல் தமிழ் வாசகர்களுக்காக ஆங்கிலத்தில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்டது.
– விஜயலட்சுமி
கேள்வி: உங்கள் மூன்றாவது நாவல், Between Lives, மே 2003ல் வெளியானது. ஆனால் நீங்கள் Delayed Passage நாவலை முன்னதாக வெளியிட்டிருந்தால் Between Lives உங்கள் நான்காவது நாவலாக இருந்திருக்கும். Between Lives நாவலுக்கு முன்பதாகவே நீங்கள் எழுதி முடித்தும் வெளியிடாமல் வைத்திருக்கும் நாவல் Delayed Passage. அதைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?
பதில்: 1995ஆம் ஆண்டு தொடங்கி Delayed Passage உருவாக்க வேலையில் ஈடுபட்டிருந்தேன். அதன் பிறகுதான் Between Lives எழுத ஆரம்பித்தேன். புனைவுகள் எழுதுவது பொருத்தமட்டில் எவ்வித இடைவெளியும் இல்லை, இப்போதைக்கு Delayed Passage நாவலை வெளியிட விரும்பாததைத் தவிர மற்ற எழுத்துவேலைகள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன. பிறகு எப்போதாவது Delayed Passage-ஐ வைத்து ஏதாவது செய்யக்கூடும்.
கேள்வி: Delayed Passage நாவலுக்கு நீங்கள் கொடுத்திருந்த சுருக்கத்தை வைத்துப் பார்த்தால் இன்றைய தேதி வரை நீங்கள் எழுதியதில் மிக வெளிப்படையாக அரசியல் பேசக்கூடிய படைப்பாக அது இருக்கும் என்ற கணிப்புக்கு வர முடிகிறது. மலேசிய-இந்தியர்களின் கதாமாந்தர் சித்தரிப்புகளில் இந்தியர்கள் மிக நெடிய காலம் இந்நாட்டில் உரிமையுடையவர்கள் என்பதாகவும், ஆனால், இனவாத மலாய் முஸ்லீம்களால் இந்தியர்களின் கலாச்சாரம் உள்ளீர்த்துக்கொள்ளப்பட்டு பின் அவ்விந்தியர்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரங்களைக் கட்டாயமாக துறக்க நிர்பந்திக்கிறது என்று மலேசியாவில் நடைபெறும் இனப் பாகுபாடு தொடர்பில் நேர்மையாகவும் நேரடியாகவும் வினையாற்றுவதைப் பார்க்க முடிகிறது. ஏன் Delayed Passage நாவல் பிரசுரிக்கப்படுவதை இடைநீக்கம் செய்ய முடிவு செய்தீர்கள்?
பதில்: சில நேரங்களில் ஒரு புத்தகம் வாசகர்களிடம் சென்று சேர தயாராக இல்லை என்று நினைக்கிறேன், அல்லது இப்படியும் சொல்லலாம் வாசகர்கள் ஒரு புத்தகத்திற்கு இன்னும் தயாராகவில்லை. Delayed Passage பல வழிகளில் மிக கூர்மையான நோக்குநிலையைக் கொண்டது, வாசகர்கள் அதனுள் நுழைய சிரமப்படக்கூடும். ஒரு எழுத்தாளரின் பார்வையிலிருந்தும் படைப்பின் உட்பொருளிலிருந்தும் இந்நாவல் அவன் வாழ்வில் மிக அந்தரங்கமான ஒன்றாக இருப்பதுபோல் இத்தருணத்தில் தோன்றலாம். கதையில் வரும் இதேபோன்ற பல சம்பவங்கள், மனிதர்களுடன் ஒப்புமை உள்ளதாகவும் இருக்கலாம். அது எனக்குப் பிடிக்கவில்லை. இந்தக் காரணங்களால்தான் நான் அந்நாவலை பிரசுரத்துக் கொண்டு வரவில்லை.
கேள்வி: மலேசியர்கள் முதல் முறையாக தெருக்களுக்கு வந்து இன, மத ஆதிக்கமற்ற ஒரு புதிய அரசியலையும் நீதி, ஜனநாயகம் மற்றும் நல்ல ஆட்சியை உரிமையுடன் கோரிய ஆண்டான 1998ல் Delayed Passage நாவலை வெளியிட்டிருந்தால் பொருந்தமாக இருந்திருக்காதா?
பதில்: மக்கள் என் படைப்புகளில் அரசியலைத்தான் பார்க்க விரும்புகிறார்கள். ஆமாம், என் படைப்புகளில் எப்போதும் அரசியலும் இருந்தது. ஆனால் அவர்கள் அந்தப் பகுதியை மட்டுமே பார்க்க விரும்புகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் மக்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் பல்வேறு சக்திகளில் அரசியல் ஒரு வகையான சக்தி மட்டுமே. என்னளவில், மிகப்பெரும் சக்தி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது என்பேன். பிழைத்திருப்பதற்கான அவர்களது வாழ்முறை என்ன, பெருந்திரளில் அவர்கள் எப்படி மூழ்காமல் இருக்கிறார்கள், அவர்களது குரலை எப்படி அடையாளம் காண்கிறார்கள் அல்லது அவர்களுக்காக செயலாற்றுபவர்களை எப்படி அடையாளம் காண்கிறர்கள் என இதுபோன்ற இன்னும் பலவற்றைக் கூறலாம். இந்தச் சக்திகளுக்கு எதிரானதுதான் அரசியல். கிடைக்கக்கூடிய அணுகூலங்களை முன்வைத்து ஒன்றைச் செய்வதற்கான காலத்தை நான் ஒருபோதும் முடிவு செய்ய மாட்டேன். என்னைப் பொறுத்தவரை, அணுகூலங்கள், வாய்ப்புகள் வரும் காலங்களை எல்லாம் கடந்து பயணிக்கக்கூடியதாகத்தான் ஒரு படைப்பாக இருக்க வேண்டும். சர்ச்சைகளில் எல்லாம் சிக்காமல் மறைந்துக் கொள்வதாக நினைக்கக் கூடாது. சர்ச்சைகளில் நேர்மறை, எதிர்மறை என இருவகைகள் இருப்பதாக நினைக்கிறேன். இதில் எதிர்மறை தன்மையிலான சர்ச்சைகளிலிருந்து விலகி செல்லவே விரும்புகிறேன்.
கேள்வி: Between Lives தெளிவானதாகவும் எளிமையானதாகவும் இருக்கிறது, In a Far Country போல அடர்த்தி மிகுந்ததாகவும் முறுகலாகவும் பரிசோதனை முயற்சிபோலவும் இல்லை. அது பல அசாத்திய தருணங்களையும் கொண்டிருக்கிறது. உதாரணமாக, ஆற்றோரத்தில் நிகழும் துயர் தோய்த காட்சியில் செல்லம்மா தொலைந்துபோன தன் தங்கை அஞ்சலையை நினைத்து ஏங்கியும் தன் தனிமையைக் குறித்து பேசியும் சுமித்ராவை [கதையின் நாயகி] குழப்புகிறாள். முந்தைய படைப்புகளைக் காட்டிலும் Between Lives எழுதுவதற்கு கடினமாக உழைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?
பதில்: ஏன் எளிமையாகவும் தெளிவாகவும் புரிந்துகொள்ள முடிகிறது என்றால் அதன் உருவாக்கத்தில் பல முன் வரைவுகள் (drafts) இடம்பெற்றிருந்தன. இதை வாசகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. படைப்பு ஆழமான பொருள்கொள்ள முன்வரைவுகள் வழிசெய்கின்றன. உங்களது முழு உளகாட்சி முன் வரைவுகளால் சுருங்கிப் போகாது; மாறாக மேலும் தெளிவடையும். நான் என் எல்லாப் படைப்புகளிலும் கடுமையாகவே உழைக்கிறேன், ஆனால் Between Lives எழுதும்போது படைப்பின் தெளிவையும் ஆழத்தையும் கொண்டுவர ஒன்றிரன்று அதிகமாகவே முன் வரைவுகள் செய்தேன். படைப்பின் ஆழத்தைக் கொண்டுவர Between Lives என்னை பலி கொடுத்திருப்பதாக நான் கருதவில்லை.
கேள்வி: Between Lives நாவலை வாசிப்பதில் உணரப்படுவதுபோல் உண்மையில் அதன் உருவாக்கத்தில் நீங்கள் மொழியுடன் நெருக்கமாகிவிட்டதாக உணர்கிறீர்களா?
பதில்: நான் அப்படியொன்றையும் திட்டவட்டமாக அமைத்துக்கொள்ள வில்லை. நீங்கள் கவனித்துப் பார்த்தால் நான் ஒரு இளைய நபரின் [சுமித்ரா] குரல் மூலம் பேசியிருப்பேன், ஒரு சிறிய அனுபவத்தின் குரலது. குறிப்பிட்ட நபரின் தோலுக்குள் இறங்கி, அந்நபரின் சிந்தனை வடிவங்கள், உணர்ச்சி வடிவங்களை அவதானிக்க வேண்டும். உண்மையில் அதுதான் நான் பயன்படுத்துவதற்கான மொழியை எனக்குப் பெற்றுத் தருகிறது. ஒருவேளை அதில் நான் இப்போது கூடுதலான நிபுணத்துவத்தை அடைந்திருக்கக்கூடும்.
கேள்வி: Between Lives உங்களுக்கு எந்த அளவு திருப்தி தருகிறது? அதை எழுதியது வலி மிகுந்ததா? குறைவான வலிதானா? அல்லது சுலபமாக எழுதிவிட்டீர்களா?
பதில்: இந்தச் சொல்லாடல் எதையும் நான் ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன். படைப்பு ‘கோரியபடி’ என்று சொல்வேன். இந்நாவல் உருவாக்கத்தில் அதிக நாட்கள் ஈடுபட்டிருக்கிறேன், ஆக்கத்தில் முடிவில் கதாபாத்திரங்கள் ‘உயிர்ப்பித்து’ இருப்பதைப் பார்த்தேன். அது என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. முந்தைய சில கதாபாத்திரங்கள் நோக்குநிலைகளில் தத்துவார்த்தமானதாக இருந்தன. In a Far Country நாவலில் வரும் சிவசூரியன் போல. வாசகர்கள் அவனுள் நுழைந்து, அவன் யாரென புரிந்து கொள்வது கடினம். டோஸ்டோவ்ஸ்கி படைப்பில் வரும் முட்டாள் ‘idiot’ போல இவனும் இருக்கக்கூடும். அப்பாவி ஆனால் அறிவார்ந்தவன் போல.
கேள்வி: Between Lives நாவலில் எதைச் சொல்ல முனைந்திருக்கிறீர்கள்?
பதில்: நான் சொல்ல முனைந்திருப்பது எளிமையான விடயம்தான். திடமான ஆதரவாய் தாங்கிப் பிடிக்க எதுவும் இல்லாதபோது வாழ்க்கை வெறுமையானது. திடமான ஆதரவு என்பது அரசியல் கட்டமைப்பாக, தத்துவஞான கட்டமைப்பாக, கலாச்சார மாதிப்பீடாக… எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்நாவலில் வரும் முதன்மை கதாபாத்திரம் சுமித்ரா, அவள் நண்பர்கள் என எவரும் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துவிட்டதாகவே தெரியவில்லை. ஒரு விளிம்பின் மேற்பரப்பில் ‘இருக்கிறார்கள்’, அந்த விளிம்புதான் மையம் என்று நம்புகிறார்கள். செல்லம்மா சுமித்ராவை கடந்து செல்லும்வரை இதுதான் நிலை. இதில் செல்லம்மா நிஜ மனிதனாகவும் இருக்கலாம், நினைவின் வடிவமாகவும் இருக்கலாம் அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம். நான், நமக்கு நினைவுகள் (Memory) தேவை என்று நினைக்கிறேன். நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வதற்கும் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கவும் நினைவின் சக்தி தேவைப்படுகிறது. சுமித்ரா, க்ரிஸ்டினா, அவள் தோழிகள், சக பணியாளர்கள் தெளிவற்று இருக்கிறார்கள்; மேலோட்டமான ஏக்கங்களை மட்டும் கொண்டிருக்கிறார்கள். சுமித்ரா அவளது துறையில் புகழ்பெற்றவளாக இருக்க நினைக்கிறாள். அதன் பொருட்டு தன்னுணர்வில்லாமல் புகழுக்காக நேர்மையைப் பலியிடுகிறாள். க்ரிஸ்டினாவும் தன்னோடு முரண்பட்டு செயல்படுகிறாள். கிளப்புகளில் முதல் வரிசை உறுப்பினர்கள் தங்களுக்குரிய வைப்புப் பெண்களை அங்கேதான் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை அறிந்து திகிலடைகிறாள்; பெண்கள் அங்கே நகைகளைச் சூதில் அழிப்பார்கள் என்றும் பயப்படுகிறாள். ஆனால் அவளும் கிளப்பில் கவனத்தை ஈர்க்கும் வேலைகளைச் செய்கிறாள். கிளப் நீச்சல் தளத்தில் கொத்தாய் ஆண்கள் கூட்டத்தை மயக்குகிறாள். தொடக்கத்தில் பிரக்ஞைபூர்வமாக புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், இந்த மேலோட்டமான அசைவுகளுக்கு அடியில் இருக்கும் அவளது விருப்பம் அல்லது ஆசையை உணர முடியும். உதாரணமாக, சார்லி வோங் அந்த கிளப்பை எவ்வாறு கட்டியிருப்பான் என்பதை சுமித்ரா கற்பனை செய்து பார்க்கிறாள். இந்தக் கற்பனைக்குப் பின்னால் ஆழமான உலவியல்பூர்வமான ஏக்கம் இருக்கிறது. இந்தக் கற்பனை அழுத்தப்பட்டு கிடக்கும் அவளது அறிவார்த்தம், மரபு, வரலாற்று அம்சங்களை உள்ளடக்கியது. க்ரிஸ்டினா, தன் திறமைகளைக் குறைவாகவே எப்போதும் வெளிபடுத்தியிருப்பதைத் தவிர்க்கவியலாமல் ஒப்புக்கொள்கிறாள்.
கேள்வி: Between Lives இதற்கு முன்பு நீங்கள் எழுதிய மற்ற நாவல்களிலிருந்து வேறுபட்டது. இதில்தான் முதல் முறையாக எல்லா முதன்மை கதாபாத்திரங்களையும் பெண்களைக் கொண்டு புனைந்திருக்கிறீர்கள். அதே சமயம், உங்கள் முந்தைய படைப்புகளில் பேசிய அதே கருப்பொருள்களைத் திரும்பக் கொண்டு வந்திருக்கிறீர்கள்: மலேசியாவில் இந்தியர்களுக்கான இடம், மரபு – நவீனம் ஆகிய இரண்டுக்கும் இடையேயான ஊடாட்டம் என இப்படி சில. ஏன் அவற்றை மீண்டும் மீண்டும் பரிசீலனை செய்கிறீர்கள்? அவை குறித்து போதுமான அளவு சொல்லவில்லை என்று நினைக்கிறீர்களா? அல்லது புதிய கோணத்திலிருந்து அவற்றை அணுக நினைக்கிறீர்களா?
பதில்: நீங்கள் இரண்டாவதாக சொன்னதை ஏற்கிறேன். Between Livesல் இளைய தலைமுறையைக் கொண்டு கையாண்டிருக்கிறேன். இதற்கு முன் மூன்றாம் தலைமுறையைக் கொண்டு வந்திருக்கிறேன், இது நான்காம் தலைமுறை. நிச்சயமாக, நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் (மலேசிய இந்தியர்கள்) வரலாற்றில் உள்ள சிக்கல்கள் பற்றிதான் எழுதுகிறேன். இந்தச் சமூகம் என்னை வசீகரித்திருக்கிறது. அதன் யதார்த்தத்தாலும் அசாதாரணங்களாலும். நாம் எங்கிருந்து வந்திருக்க முடியும் என்பதை, எங்கு செல்ல முடியும் என்பதை ஆய்வு செய்ய அனுமதிக்கிறது, கூடுதல் இணைப்பாக அதன் கலாச்சார புரிதல்களையும், நம்மில் பலருக்கு ஆதாரமாய் விளங்கும் இந்த மண் குறித்தும் ஆராய இந்தச் சமூகம் எனக்கு அனுமதியளித்திருக்கிறது. எனவே, என்னால் இதிலிருந்து தப்பி வர முடியாது. நான் இதை மற்ற வழிகள், திசைகள் நோக்கி கிளை பிரித்துவிட்டிருக்கிறேன். எனது சிறுகதைகளிலும் மற்றவற்றிலும் சமூகங்களைக் கலாச்சாரம் நீக்கலாகவே பார்க்கிறேன். ஆனால், ஒரு நீண்ட படைப்பாக்கம் என்று வரும்போது இந்த முக்கிய விஷயங்களைச் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. F Scott Fitzgeraldஐ பாருங்கள், அவர் கடைசியில் என்ன பேசியிருப்பார் என்று பாருங்கள். ‘மனிதனின் ஆதாரமான களங்கமின்மை இப்போது சிதைந்து வருகிறது’. ஹெமிங்வேவுக்கு ஆஜானுபாகுவான மனிதன் போல, இதுதான் அவருடைய படைப்புகளில் நிலையான இடம் பிடித்திருக்கிறது. புனைவு நோக்கத்திற்காக எழும் ஒன்றன்மீதான தீவிரத்தன்மை அல்லது அதீத கவனம் முற்றிலும் சளிப்படைந்து போகும்வரை அதை கடந்து வேறெதற்குள்ளும் போக முடியாது என்றே நினைக்கிறேன்.
கேள்வி: Between Livesல் காட்டப்பட்டிருக்கும் எதார்த்தம் நமக்குத் தெரிந்த அன்றாட வாழ்வின் எதார்த்தமல்ல. Kafka, Marquez, Rushdie போன்றவர்களுக்குப் பெயர்போன கற்பனாவாதமாகவும் அது இல்லை. சுமாத்திராவின் பணியிடத்தில் (சமூக மறுசீரமைப்பு துறை) நடக்கப்போகும் அசம்பாவிதம் குறித்த முன்னறிவிப்பு விசித்திரமானது. இந்தக் கற்பனையான துறையை நீங்கள் உருவாக்கியபோது உங்கள் எண்ணம் என்னவாக இருந்தது?
பதில்: செய்கிற வேலையில் நாம் ஏற்க மறுக்கும் ஒரு அழுத்தத்தின் குறியீடுதான் அந்தத் துறை. அது நம் சமூகத்தில் அல்லது மற்ற சமூகத்திலும் நிகழலாம். ஆனால் மிக செயற்கையாக நான் அதை ஒரு வேலையிடத்தில் பொறுத்திப் பார்க்க காரணம் அது சமூகச் சூழலில் மட்டுமின்றி மற்ற இடங்களுக்கும் பொருந்தும் எனும் கற்பிதத்தை உருவாக்கவே. பிரிட்டனில் உள்ள சமூக கட்டமைப்பை நீங்கள் பார்த்தால் புரியும், அது ஒருவித கலவையான கலாச்சாரத் தோற்றம் கொண்டிருக்கும். அதிகாரமும் செல்வாக்கும் கொண்டிருக்கும் தரப்பைச் சார்ந்த மனிதர்கள் எப்போதுமே குடிபெயர்ந்தவர்கள் கல்வியளவிலும் சமூக படிநிலைகளிலும் சிலவற்றை அடைந்திருக்க அல்லது பெற்றிருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். உண்மையில் இவர்கள், புதிய சூழலில் வந்து குடியேறியிருக்கும் மனிதர்கள் நிலைத்தன்மை பெற்றிருப்பதைக் காண உளப்பூர்வமாக விரும்புபவர்களாகவும் இருக்கலாம்; இன்னொரு பக்கம், இப்படி சொல்வதற்குப் பின்னால் கபடமான திட்டங்களும்கூட இருக்கலாம்தான். இப்படி சில வகையான சமூகப் கட்டுமானங்கள் எப்போதுமே எல்லா இடங்களிலுமளிருக்கின்றது. Between Lives கொண்டிருக்கும் திருப்பம் என்னவென்றால், அது மறுசீரமைப்பை வலியுறுத்தி நிற்கிறது. சமுதாயத்தின் ஒரு பகுதியோ அல்லது சில பிரிவுகளோ மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதனுள் ரகசிய அரசியல் மற்றும் பண்பாட்டு கட்டுமானங்களை இல்லாமலாக்குகிறது.
கேள்வி: அந்தத் துறையில் நடைபெறும் வேலைகள் மலேசியாவில் நடப்புச் சூழலில் உள்ளதை வினோதமான வகையில் ஒப்புமை காட்டுகிறது; அதாவது பன்முக மதச்சார்பற்ற சமுதாயத்தில் மலாய்க்காரர்மயமாக்கல் இஸ்லாமியமயமாக்கல் என இவ்விரண்டையும். இது எனக்கு மலாய்-சார்பு நிலை கொள்கைகளை நினைவுப்படுத்துகிறது. சிறுபான்மையினரை இரண்டாவது வர்க்க குடிமக்களாக பாவிக்கும் கொள்கைகளை விமர்சிப்பதாகத் தோன்றுகிறது. Between Lives நாவலைத் திட்டமிட்டே இந்த மாதிரியாக உருவாக்கினீர்களா?
பதில்: இருக்கலாம்.., இருக்கலாம். தொடக்கத்தில், பிரக்ஞைபூர்வமாக நான் அவ்வாறு சிந்தித்திருக்கவில்லை. ஆனால் உங்கள் கருத்துப்படி, இந்நாவலுடனான என் நீண்டகால பணியில் அது ஒரு கோவையில் இப்படி பிரக்ஞைக்குட்பட்ட ஒன்றாக வளர்ந்திருக்கலாம்.
கேள்வி: சமூக மறுசீரமைப்பு துறை உங்கள் ‘Project: Graft Man’ [1983] எனும் அறிவியல் புனைகதையை ஞாபகப்படுத்துகிறது. சுய சிந்தனை, உணர்வு அற்ற ஒரு புதிய வகை இனத்தை உருவாக்க ஒரு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி பற்றி பேசும் அக்கதையை.
பதில்: திரைக்குப் பின்னால் நடக்கும் அதிகாரமய சக்தியின் வேலைகள் வெளித்தோற்றத்திற்கு மேம்போக்கானதாகவும் தாக்கமற்றதாகவும் தெரியும், ஆனால் அது நிகழ்த்துவது குரூரமான மழுங்கடிப்பு. நீங்கள் அனுமதித்தால் அழுத்தம் மனித வாழ்க்கைக்குள் நுழைந்து அவர்கள் என்னவாக ஆக விரும்புகிறார்களோ அதிலிருந்தே அவர்களை விலகி வைக்கும்.
கேள்வி: இதில் சுவாரஸ்யமாக, அந்தத் துறை அதைதான் கடைசியாக செய்திருக்கிறது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள கூடியதாகவும் இல்லாமல் முழுக்க நிராக்கரிக்கவும் முடியாததாக. உறுதி வாய்ந்த செல்லம்மாவை அந்தத் துறை நீக்கிவிட வேண்டும் என்று சில தருணங்களில் வாசகனேகூட எதிர்பார்க்க வைக்கிறது.
பதில்: அந்தத் துறை வெறும் வெளிபார்வைக்கு மட்டும்தான். அதன் பின்னால்தான் முன்பே நான் கூறிய கபடங்கள் இருக்கின்றன. அதன் காரணமாகவே செல்லம்மாவிடம் அது கணிவாக நடந்து கொள்கிறது. அவள் நடத்தையில் பிழைகண்டும், அதிகாரத்தில் இருப்பவர்கள் கனிவானவர்கள், எதையும் ஆலோசிப்பவர்கள் என்பதாக மனிதர்களை அல்லது குடிமக்களை நம்பவைக்க முயற்சிக்கிறது. அவளுடைய நிலத்திலிருந்து மெதுவாக அவளை வெளியேற்ற அல்லது அப்புறப்படுத்த விரும்புகிறது. வேறொரு படிநிலையிலிருந்து பார்த்தால், செல்லம்மா என்பதே நினைவுதான் – Memory. நீ எவ்வளவு முயன்றாலும் ஒரு நினைவை உன்னால் அப்புறப்படுத்த முடியாது. இந்த நிலத்தில் இன்னும் ஆழமாக வேரூன்ற நீங்கள் ஆசைப்படுவதை அகற்ற முடியாதது போலவே.
கேள்வி: கதாபாத்திரங்களின் குணநலன்கள் மீது உங்களால் சிறிது வெளிச்சம் தூவ முடியுமா? ஏன் கடைசியில் சுமித்ரா, அவள் பெற்றோர், குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் மிக ஆவலாக சொல்லம்மாவுடன் இணைய விரும்புகிறார்கள்; பைத்தியக்காரத்தனமான அவளது இந்துமத சடங்குகளில் பங்கேற்கிறர்கள்?
பதில்: பொதுவாக அப்படி செய்வதில்லைதான். ஆனால் அதில் ஈடுபடுவதற்கு அவர்களிடம் மிகவும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கவே செய்கின்றன. கதாபாத்திரங்களுக்கு மத்தியில் நிகழும் சமன்குழைவு என்று இதைச் சொல்வேன். உதாரணமாக, சுமித்ராவின் அம்மா கெளரிக்கு தன் சுயம் சார்ந்து சரிக்கட்ட வேண்டிய ஒரு கடந்த காலம் இருக்கிறது. பள்ளி நாட்களில் வீட்டிலிருந்து ஓடி, ஜேன் என்பளிடம் சேர்கிறாள். ஜேன், ஒரு மகப்பேறு மருத்துவச்சி, எவனோ ஒருவனுடன் தொடர்பில் இருக்கிறாள், கெளரியை பொதுவில் தனக்கிருக்கும் கன்னியத்தை காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்துகிறாள். அதை ஒரு அழுக்காக உணர்ந்த கெளரி பிறகு ஜேன் வாழ்வைவிட்டு வெளியேறுகிறாள். படிப்பில் தேர்ந்தவளாக இருந்தும், பள்ளி செல்வதை நிறுத்தும் முடிவை திட்டவட்டமாக எடுக்கிறாள். உண்மையானவனை திருமணம் செய்ய விரும்பும் தன் ஆவலைச் சொல்கிறாள்: இந்த வார்த்தை மிக முக்கியமானது, காரணம் சுமித்ராவின் அப்பா அப்படியானவன் அல்ல. அவன் கதாபாத்திரத்திற்கு பெயரில்லை, அதற்கும் காரணம் உண்டு: நம்மைச் சுற்றி இப்படி பலர் இருக்கிறார்கள்; அவர்கள் ஒவ்வொருக்கும் தனித்தனியாகப் பெயர் வைக்க முடியாது. இப்படியாக சுமித்ராவின் அம்மா எப்போதும் எதிலாவது சிக்கிக் கொண்டிருப்பதை உணர்கிறாள்: முதலில் தன் சொந்த குடும்பத்திலேயே சிக்கிக் கொண்டாள், பிறகு மருத்துவச்சி ஒருவளின் வாழ்க்கைக்குள் நுழைந்து அங்கும் அகப்பட்டுக் கொண்டாள். பிறகு திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து அதிலிருந்து விடுதலையாகாமல் இருக்கிறாள். இன்னொரு பக்கம் சுமித்ராவின் அப்பா, அவனும் சடங்கில் பங்கேற்கிறான். அக்கம் பக்கத்து ஆட்கள் அவன் மனைவுக்கு அவன்மேல் ஈடுபாடு இல்லை என்று நினைத்துவிடக் கூடாதென்று அப்படி செய்கிறான். அவன் சடங்கில் இணைவது செல்லம்மாவுக்காக அல்ல, தன் மனைவிக்காக.
கேள்வி: சுமித்ராவின் பாட்டி?
பதில்: அவள் இன்னொரு முகம், அல்லது செல்லம்மாவின் மறுபக்கம், இல்லையா? செல்லம்மாவும் தன் சகோதரி அஞ்சலையைப் போலவே சிறு, பெரு நகர்களின் மினுமினுப்பில் மூழ்கி போய்விடலாம். ஆனால் அவள் அப்படியாகவில்லை, காரணம் அவையெல்லாம் குறுகிய நாளைக்கானதுதான் என்பதை அறிவாள். அதற்கு பதிலாக ஏக்கத்தில் மூழ்கிக் கிடப்பதையே தேர்ந்தெடுக்கிறாள்.
கேள்வி: செல்லம்மாவுக்கு நிலத்தின் மீதிருக்கும் பிடிப்பைத் தளர்த்த முயலும் சும்த்ராவின் பக்கம்தான் தொடக்கத்தில் Between Lives நம்மை இழுக்கிறது. கால்வாசி கடந்தபின் செல்லம்மா, சுமித்ரா இருவரில் யார் பக்கம் நம் நிலைபாடு என தடுமாற வைக்கிறது. இருப்பினும், முடிவில் எழுத்தாளர் செல்லம்மாவின் பக்கமே தன் தார்மீக கவனத்தைக் குவிக்கிறார் என்று கருதுகிறேன். இவ்விடம், தற்செயலாக The Return நாவலில் ரவி பெருமதிப்புடன் அணுகும் குடியேறிப் பெண்ணான (பாட்டி) பெரியத்தாய் கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறது.
பதில்: ஒரு நாவலாசிரியன் என்கிற முறையில் நான் எவர் பக்கமும் (சார்பு ஏற்று) இருக்க முடியாது என நினைக்கிறேன். ஆனால் அதிலும்கூட ஒரு குறிப்பிட்ட வகை பக்க-எடுக்கும் (சார்பு-ஏற்கும்) நிலையும் உள்ளது. நீங்கள் சுமித்ரா பக்கம் நிற்கிறீர்கள், ஏனென்றால் அவள் இளமையானவள்; உற்சாகமானவளாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறாள். சில நேரங்களில் தவறாக வழிநடத்தப்பட்டாலும் அவள் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறாள். இன்னொரு பக்கம் செல்லம்மா இருக்கிறாள். பெயரில் ‘செல்லம்’- அன்பை ஏந்தி நிற்பவள். இந்த நிலத்தில் மிக நீண்ட காலம் வாழ்பவள், அந்த அன்பே அவளை இந்நிலத்தில் வாழ வைக்கிறது. ஒரு புள்ளியில் இருவரும் இணைந்து ஒன்றாகிறார்கள், இங்குதான் நீங்கள் பார்க்கும் நிறைய குழப்பங்கள் நிகழ்கின்றன. இதுதான் இந்நாவலின் முக்கிய அம்சம்.
கேள்வி: எப்படி நீங்கள் சுமித்ராவும் செல்லம்மாவும் ஒன்றானதாக பார்க்கிறீர்கள்?
பதில்: ஒரு எளிய மட்டத்திலிருந்து விளக்கினால், கடந்த காலமும் நிகழ்காலமும் சந்தித்தாக வேண்டும். நினைவும் தற்போதைய இருப்பும் ஒன்றுடன் ஒன்று கலக்க வேண்டும். இப்படி சொல்லிப்பார்க்கிறேன், கொஞ்சம் தேய்வழக்கானதுதான் – கடந்த காலம் இல்லையென்றால் நிகழ்காலம் என்பதும் இருக்காது. சுமித்ரா தனது சொந்த கடந்த காலத்திற்கு அப்பால் சென்று ‘பெற்றோரிடமிருந்தோ அல்லது தன் முன்னோர்களிடமிருந்தோ மரபணு ரீதியாக (குணம், பண்பு, அல்லது முன்முடிவு எனபன) ஒரு கடந்த காலத்தைப் பெற வேண்டும். இதன் அடிப்படையில்தான் சுமித்ராவும் செல்லமாவும் ஒன்றாகிறார்கள் (ஒரு புள்ளியில் சங்கமிக்கிறார்கள்).
கேள்வி: In A Far Countryயைப் போலவே Between Lives-லும் இந்திய கதாப்பாத்திரங்கள் இந்த நிலத்தின்மீது வைத்திருக்கும் தொடர்பு/உறவு வெறுமனே ஒரு நிலப்பகுதியின்மீது வைத்திருக்கும் உணர்வுபோ இல்லை. குறியீட்டு ரீதியிலாக, அவர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரங்களைக் பாதுகாக்க வேண்டும் என்ற தேவையைக் கொண்டிருப்பதாக வாசிக்கப்படலாம். இந்த அடிப்படையில் பார்த்தால், நிலம் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிக்கொள்வதில் செல்லம்மா அடைந்த தோல்வி மட்டுமே தெரிகிறது, கவலையைக் காட்டிலும்.
பதில்: நிலத்தின்மீது விசுவாசம் செலுத்துவதில் போதுமான அளவு கவனத்தைக் குவிக்காமல் இருப்பது கவலைக்குறியதுதான்.
கேள்வி: ஆனால் அது ஏன் அவ்வளவு முக்கியமாக முன்வைக்கப்படுகிறது?
பதில்: இது முக்கியம், உங்கள் பார்வையை விரிவாக்கிப் பாருங்கள். உலகிற்கு இப்போது என்ன நடக்கிறது என்று பார்த்தால், சுற்றுச்சூழலில் இயற்கை சுருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரியும்.
கேள்வி: ஆனால், இயற்கையையும் கலாச்சாரத்தையும் இணைப்பது அவசியமா?
பதில்: இதில் ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரிக்கவே முடியாது. தனிமைப்படுத்திவிடப்பட்ட பின்பு கலாச்சாரத்தை எப்படி பார்ப்பீர்கள்? கலாச்சாரம் என்பது பல்வேறு வகையான இணைப்புகளை அடிப்படையாகக் கொண்ட சடங்குகளின் தொகுப்பு ஆகும். அந்த ‘பலவகையான இணைப்பு’களில் ஒன்றுதான் நிலம்.
கேள்வி: இதுதான் தன்னுடைய கலாச்சாரம் என்று நம்பி அல்லது பாவனையாக ஏற்றுக்கொண்டு பிறகு அது இல்லாமல் தனக்கு வாழ்வில்லை என்று கூறுவதைக் காட்டிலும் மாறிவரும் உலகத்திற்கு ஏற்ப புதிய இணைப்புகளை உருவாக்கி கொள்வது பொருந்தாதா? ‘ஒரு பச்சோந்தியின் வழியில்’ எனும் உங்கள் சொல்வழக்கில் கூறுவதுபோல சூழலுக்கு ஏற்ப எவ்வித பொருளாதார, அறிவார்ந்த மற்றும் சமூக வெளியில் கலந்துவிடும் திறன் பெறுவதை பின்பற்றுவது கூடாதா?
பதில்: விஷயம் என்னவென்றால், செல்லம்மா இந்நிலத்தில் பிடிவாதமாக இருக்கிறாள், அது அவளது இயல்புக்குள்ளேயே இருக்கிறது. அவள் மனதார ஏற்றுக்கொண்டிருக்கும் ‘பண்பு’களை முற்றிலுமாக அழிக்க விரும்பவில்லை. சுமித்ராவின் வருகையில் புதிய புதிய கலாச்சார சித்தாந்தங்கள் உள்நுழைகின்றன. அவளது கலாச்சார உணர்வு கிறிஸ்டினா மற்றும் ஆயிஷா போன்ற பிற கதாபாத்திரங்கள் வெளிபடுத்துவது போலவே இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் நிலம், கலாச்சாரம் சார்ந்து வித்தியாசமான உணர்வை அவளுக்குக் கொடுக்கின்றன. இந்த நாவல் நிலம் மற்றும் கலாச்சாரங்களின்பால் இவர்களுக்கு இருக்கும் வெவ்வேறானா பார்வையைத் தொகுத்துக் காட்டும் நோக்குடன் செல்கிறது. இந்நாவல் அவர்களை நிலம் நோக்கி இழுத்துச் செல்கிறது, இப்போதைக்கு அதைத் தவிர்த்தவர்களுக்கு வேறெதுவும் பிடிமானம் இல்லை. மலேசியாவில் பல கலாச்சாரங்கள் அக்கம் பக்கத்தில் வாழ்கின்றன என்பதுபோன்றான கட்சியைக் கடந்து கூடுதலான ஒன்றைக் காட்டி நிற்கிறது இந்நாவல்.
கேள்வி: நான் சொல்வது சரிதான் என்றால், இந்தியர், சீனர், மலாய்க்காரர் என யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிடத்தக்க நிலையில் தன் பிறப்புடன் கலந்திருக்கும் கலாச்சாரத்திற்குள் தன்னை பதியவைத்துக்கொள்ள வேண்டும் என்றீர்கள். பலவந்தமாய் ‘அசல்’ கலாச்சாரத்தைக் கண்டடைந்து, பிறகு அதோடு முரண்படுவதை விடுத்து நாம் ஏன் நம் சொந்த உருவாக்கமாக இருக்கக் கூடாது?
பதில்: ஆனால் உங்களுடைய சொந்த உருவாக்கமாக இருக்க நீங்கள் முடிவு செய்வதென்பது உங்களது தெளிந்த சிந்தனைப் பரப்பிலிருந்து வருகிறது. தன்னுணர்வற்ற நிலை என்ற ஒன்று இருக்கிறது, நீங்கள் ஏற்றாலும் சரி மறுத்தாலும் சரி அங்கிருந்துதான் இந்த ஆசியத்தன்மை (Asianness), சீனத்தன்மை (Chineseness) போன்றதெல்லாம் வருகிறது. ஆனால் நீங்கள் அதை முழுதுமாக ஏற்றுக்கொள்ளாததால், முழுக்க சீனர்களைப் போல் நீங்கள் நடந்துகொள்வதில்லை. அதே சமயம் சீனத்தன்மைகள் உங்களிடம் எப்போதும் மீந்திருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. நான் சொல்லவரும் முக்கியமான பகுதி அதுதான்.
கேள்வி: ஆனால் அது எதற்கு? அதேபோல் செல்லம்மா மற்றும் சுமித்ரா போன்ற மலேசிய இந்தியர்கள் தங்கள் இந்தியத்தன்மையைத் தக்க வைத்துக் கொள்வதன் அவசியம் என்ன?
பதில்: சரி, நான் இதிலிருந்து கொஞ்சம் திசைமாறி போகிறேன். cord blood வங்கி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களைப் பிரசவித்தபின் தாயின் தொப்புள்கொடியிலிருந்து சில இரத்தத்துளிகளை எடுத்துக் சேமித்து வைத்துக்கொள்கிறார்கள். அவசரகாலத்தில், பிரகெப்போதாவது குழந்தைக்கு ஏதாவது நடந்தால், குறிப்பிட்ட உடலுருப்பை மீளுருவாக்கம் செய்ய அந்த உயிரணுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மண், கலாச்சாரம் எல்லாம் அந்த வங்கியைப் போலதான். ஏதாவது நடந்தால் அல்லது தவறினால், உங்களுக்கு வழிகாட்டும் புள்ளி அதுதான்.
கேள்வி: உங்கள் கருத்தை ஊகிக்க முடிகிறது. ஆனால் இது நெருப்புடன் விளையாடுவது போல இல்லையா? மிகப் பொருத்தமான உதாரணத்தை மேற்கோள்காட்டி சொல்வதென்றால் நாசிக்கள் தங்களது இந்தோ ஐரோப்பிய இன புராண மரபுகளில் ஊடுருவப்பட்டிருந்தார்கள். யூதர்களின் ரத்தத்தைக் கொண்டு அதன் புனிதத்தை நிலைநிறுத்தினார்கள். நமக்கு மிக அண்மைய உதாரணமாக: ‘தேசியவாத’ மலாய்க்காரர்கள் தங்கள் இன, கலாச்சாரம் மற்றும் மதத்தை ‘விட முடியாமல்’ தங்களை மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு முந்தையவர்களாக முன்னிறுத்தி, இனவெறி கொண்ட நாடு என மலேசியாவிற்கு உலக பரப்பில் பெயர் சேர்த்திருக்கிறார்கள்.
பதில்: அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆபத்தானதாக இருக்கும். Between Lives கலாச்சாரம் முற்றிலுமாக மறந்து விடப்பட்டதற்கு எதிராக போராடுகிறது. அதனால்தான் செல்லம்மாவைச் சுற்றியிருக்கும் விஷயங்களைப் பற்றி அதிகம் பேசுகிறது; எப்படி சுமித்ராவுக்குப் புரியவைக்கிறாள், தன் வசம் மடிய வைக்கிறாள் போன்றவைகளை. இறுதியில் சுமித்ரா பல குறியீட்டுத் தன்மையிலான குறிப்புணர்வுகளைச் செய்ய தொடங்குகிறாள். அவளிடம் சில தெளிவுகள் ஏற்படுகிறது, ஆனாலும் அவள் அதன்வழியில் முழுமையாக செல்லவில்லை. கொஞ்சமாக ஆங்காங்கு வெளிப்படுத்துகிறாள், உதாரணமாக செல்லம்மாவின் சாம்பலை நிலத்தில் சிதறவிடுவது போன்ற செயல்கள். தன்னுடைய சில மாறுதலான செயல்பாடுகளையும் அதனுள் இணைத்துக் கொள்கிறாள். சாம்பலை ஆற்றிலோ கடலிலோ கறைக்கவில்லை; நிலத்தில் தூவிவிடுகிறாள். ஆனால் அதனுள் அடிப்படையான சடங்கும் தவறாமல் இடம்பெற்றிருக்கிறது.
கேள்வி: செல்லம்மா அரிதாகவே தவறுகள் செய்வதும், அவள் முன்வைக்கும் மதிப்பீடுகள் சரியாக இருப்பதும், அதற்கு அவள் உலகம் அனுமதித்திருப்பதும் பார்க்க சுவாரசியமாகவே இருக்கிறது.
பதில்: ஆனால் பாருங்கள், நான் முன்பே சொன்னது போல, இதில் கொஞ்ச காலத்துக்காவது விவாதம் நடந்திருக்க வேண்டும். ஒரு வாழ்வுக்கு எது அங்கிகாரம் அல்லது மதிப்பை ஏற்படுத்துகிறது என்ற கேள்விக்கான விவாதம் நடந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் செல்லம்மா நிலத்தின்மீது பிடிப்பு கொண்டிருக்கிறாள். நான் கூறும் கற்பனை வெளிக்குள் செல்லம்மாவும் வருகிறாள், அவள் தன் இயல்போடு இந்த மண்ணில் இணைந்துகொள்ள வருகிறாள். செல்லம்மாவுக்கும் சுமித்ராவுக்கும் இது வெவ்வேறு வழியிலான பார்வை. இந்த நிலத்தை இருவரும் வெவ்வேறு அடையாளமாக பார்க்கிறார்கள். செல்லம்மாவை பொறுத்தவரை இந்த நிலம் என்பது மனித வாழ்வில் எல்லா நிலைகளிலும் ஒரு தொட்டிலைப் போல செயல்படுகிறது. சுமித்ராவுக்கு, தொடக்கத்தில், இந்த நிலம் தன் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தியாக இருக்கிறது, சார்லி வோங்ஙுக்கும்கூட இப்படியான ஏற்பு நிலையே இருக்கிறது.
கேள்வி: இந்தியத்தன்மையின் உருமாற்றம், நம்பிக்கைகளை விலைபொருளாவதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: இதில் விஷயம் என்னவென்றால், ஒருவரது பூர்வீக நாட்டில் இருந்துகொண்டு இன்னொருவரின் கலாச்சாரங்களைப் பேசுவது சிரமம். நான் இந்தியர்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன் என்றெல்லாம் குற்றம் சாட்டப்படுகிறேன். ஆனால் இந்தியர்கள் வெளிநாடு சென்று அங்கிருந்துகொண்டு இந்தியர்களைப் பற்றி எழுதும்போது, அவர்கள் ஏன் ‘இந்தியர்’-களை விற்பனை செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுவதில்லை? கேள்வியை அப்படியே உங்கள் பக்கம் திருப்புகிறேன். வெளிநாட்டு நிலத்தில் ஏன் இந்தியராக இருக்கிறீர்கள் என நீங்கள் ஏன் அவர்களைக் குற்றஞ்சாட்டுவதில்லை. யாரும் யாரையுமே குற்றம் சாட்டுவதில்லை. உதாரணமாக, பாரதி முகர்ஜி. அவர் நாவல்களில் இந்தியத்துவத்தை அல்லது இந்தியத்தன்மையை எழுதுவது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. பதிலாக, மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை வாங்கி குவித்தது அவர் படைப்புகள். நான் முன்பு கூறியது போல் நாங்கள் அனைவரும் எங்களுக்கு அறிமுகமான ஒரு சமூகத்திலிருந்து வெளிநோக்கி விரிந்திருக்கும் சமுகத்தை அணுகுகிறோம். வாழ்க்கைக்குள் நுழைய நான் இதை ஒரு சாளரம்; அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சாளரம் போல பயன்படுத்துகிறேன். நான் இந்தியத்தன்மையை விற்கவில்லை. மன்னியுங்கள், நான் அந்த வகையான அணுகுமுறையை என் எழுத்தில் பயன்படுத்துவதில்லை.
கேள்வி: Between Lives இந்திய மலேசியர் நாவலா அல்லது மலேசிய இந்தியர் நாவலா?
பதில்: இந்த நாட்டில் உள்ள வாழ்வுகளைப் பார்க்கும் ஒரு நாவல் என்று சொல்வேன். ஒருவேளை இந்நாட்டில் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் உறவின் எதார்த்தத்தைக் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால் இது ஒரு மாற்று நிதர்சனத்தை உருவாக்குகிறது. அதை, பல மாற்று வழிமுறைகளைப் பின்பற்றி முன்மொழிகிறது. அதற்குள்தான் பல விடயங்களும் பேசப்பட்டிருக்கின்றன.
கேள்வி: சமகால பிரச்சினைகளான இஸ்லாமிய அடிப்படைவாதம், அதன் தீவிரவாதத்தை வெளிப்படையாக எழுத நீங்கள் ஆசைப்பட்டிருக்கிறீர்களா?
பதில்: எழுத உந்தல்களும் இருக்கலாம், ஆனால் அதைப்பற்றி எழுதும் முன் அந்த நிகழ்வுகள் மற்றும் எழுதுபவனுக்கு இடையேயான இடைவெளியை உருவாக்க வேண்டும். ஏற்கனவே சந்தையில் இந்த வகை எழுத்துகள் அதிகம் உள்ளது. அதே சமகால வாழ்க்கைமீது மற்றொரு ஒளியை வீசும் பதற்றம் என்னிடமில்லை. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இருள் தருணத்தின்மீது ஒரேயொரு முறை ஒளி வீசிப்பட்டிருந்தால், அதுவேகூட போதுமானதுதான் என நினைக்கிறேன்.
கேள்வி: உங்களது முந்தைய எழுத்துகளில் மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பைத் தொட்டுவிட்டீர்கள், ஆனால் Between Livesல்தான் அது எல்லாவகையிலும் முழுமைபெற்றிருக்கிறது. ஜப்பானிய ஆக்கிரமிப்பு குறித்து உங்களை எழுத வைத்தது எது?
பதில்: அந்தக் காலப்பகுதியில் எனக்கு மூன்று வயதுதான். ஆனால், அது எப்படி இருந்தது என்பதை மனதில் தெளிவில்லாத காட்சியிலிருந்தே நான் நினைவு கூர்கிறேன். ஜப்பானிய ஆக்கிரமிப்பு முக்கியம் என நினைக்கிறேன், ஏனென்றால் இங்கே ஒரு ஆசிய சக்தி (ஜப்பான்) நம் நாட்டை ஆக்கிரமித்திருக்கிறது என்பதால். இதனால் பல விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், அனைத்து மக்களும் கலாச்சாரங்களும் ஒரே வழியில் ஒரே மாதிரியான பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை. பின்னர் வந்த பல பிளவுகளுக்கு ஜப்பானின் ஆக்கிரமிப்பும் அது ஏற்படுத்திய தாக்கங்களும் முன்னோடியாக இருந்திருக்கின்றன.
கேள்வி: எதன் அடிப்படையில் Between Lives அரசியல் வயமானது என்பீர்கள்?
பதில்: இது முழுக்க இளம் தலைமுறையைச் சம்பந்தப்படுத்தியது. வெவ்வேறு கலாச்சார பின்னணியிலிருந்து வந்து ஒன்றுக்குள் இணைந்து விளையாடுவது. இந்நாவல் சில பரிந்துரைகளை முன்வைக்கிறது. அதில் ஒன்று, ஒரு கலாச்சாரம் மட்டும் ஆதிக்கம் செலுத்துவது ஆபத்தானது என்பது. மலேசியா போன்றதொரு நாட்டில் ஒவ்வொருவரும் அவரவர் காலாச்சாரத்தவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், ஒன்றைவிட இன்னொன்று பெரியது என்பதாக நினைக்கக் கூடாது.
கேள்வி: Between Livesல் வரும் மலாய் கதாபாத்திரங்கள் சற்றே அனுதாபத்துக்குரியதாக வடிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் ஏற்பீர்களா?
பதில்: இந்தப் புத்தகம் இந்து அல்லது இந்தியர்கள் அடிப்படையிலானது அல்ல, பதிலாக வாழ்வின் பெரிய பிரச்சினைகளை மைமிட்டது என்பதை நிரூபிக்கிறது. எனவே மலாய்க்காரர்கள் பக்கம் அனுதாபம் வரும் என்றால் அது வெறும் எழுத்தாளர் அவ்வாறு காட்ட முயல்வதாக நினைத்துவிட முடியாது, மாறாக அவர்களின் வாழ்வின் உணர்வுக்குள், கலாச்சாரத்தினுள், நம்பிக்கைகளினுள் வாசகன் நுழைய முடியும் என்பதன் சமிக்ஞையே. இந்த நாவலினுள் ஒரு மலாய் கதாப்பாத்திரம் தன் வெள்ளை அணுவில் வாழ்வதை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறேன்.
கேள்வி: ஹிஷாம்? அவருக்கு பிரச்சினைகள் இருப்பதை நாம் அறிவோம், ஆனால் அவர்கள் வெளிப்படையாக அதைச் சொல்வதில்லை.
பதில்: வெளியில் சொல்ல முடியாத சில விஷயங்கள் எப்போதும் இருக்கின்றன. நான் சொல்லவருவது என்னவென்றால் பிரச்சினை எப்போதும் அங்கேயேதான் இருக்கிறது. ஹிஷாம் தன்னை உள்ளிழுத்துக் கொள்கிறான், அவன் என்னவாக ஆக முடியும் என்பதற்கும் என்னவாக ஆகியிருக்கிறான் என்பதற்கும் பெரிய இடைவேளை இருக்கிறது. அவனது தந்தை வணிக நோக்கம் கொண்டவர், இவனோ ஆன்மீகத்தில் பிடிப்புள்ளவன். சில நேரங்களில் நாம் யாரையும் அழுத்த முடியாது. மீறி செய்தால் அவர்கள் நொறுங்கிவிடுவார்கள்; அப்படி நிகழும்போது மற்றவர்களுக்கு வசதியா இல்லையா என லட்சியம் செய்யாமல் தனக்கு வசதியான ஒரு உலகத்தை உருவாக்கிக் கொள்வார்கள் என்பதை ஹிஷாம் காட்டுகிறான். இப்பகுதியை எழுதி முடிக்கும்போது ‘நீ ஒருபோதும் தீவிரத்தன்மைக்கு உட்படக்கூடாது’ எனும் சமிக்ஞையாக ஹிஷாமின் செயல்பாடு இருப்பதைக் கண்டுகொண்டேன். நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும், ஆனால் அதே தீவிரத்துடன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. காரணம் உள்ளது. தீவிரமாக சிந்திக்காவிட்டால் உண்மை என்னவென்று நமக்குத் தெரியாமல் போகும். அனுபவப்பூர்வமாக உணர நாவலில் இதுபோல் பல இடங்கள் உள்ளன.
கேள்வி: சமகாலத்திய மலேசிய ஆங்கில இலக்கியம் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: நான் வாசிக்காமல் அதுகுறித்து பேச முடியாது. நீங்கள் அறிந்திருக்கலாம். நான் எழுதிக் கொண்டிருக்கும்போது எவரது படைப்பையும் வாசிக்க மாட்டேன். எடிட்டோரியல் தேவைக்காக வாசிப்பதைக் கடந்து வேறேதும் வாசிப்பதில்லை. அங்கும் இங்குமாக சிறிது நனைத்ததில் இருந்து என்ன சொல்ல முடியும் என்றால், அவர்கள் இன்னும் அதிகம் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.
கேள்வி: இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்று நினைக்கவில்லையா?
பதில்: இன்னும் நன்றாக எழுத, முதலில் நிறைய எழுத வேண்டும். ஒரு படைப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு எழுதுவது பற்றி பேசுவதும் ஓய்வெடுப்பது என இல்லாமல் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும். ஒரு பொருளைப் பற்றிய முழுமையான தொகுப்பு (முழு சித்திரம்) என்று ஒன்று உள்ளது. ஒரு எழுத்தாளராக ஒரு கருத்தைத் சொல்வதற்கு அல்லது மற்ற எழுத்தாளர்கள் பற்றி தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாக உங்களிடம் உங்கள் படைப்பு குறித்த முழு சித்திரம் (அதன் உடல்) இருக்க வேண்டும். என்னிடம் அப்படியான சித்திரம் இருந்தும்கூட படைப்புகள் குறித்து கருத்து சொல்ல, குறிப்பாக மலேசிய படைப்புகள் குறித்து சொல்ல கடினமாக இருக்கிறது.
கேள்வி: நிறைவாக, Between Lives முழுமைப்பெற்றுவிட்டது. இந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?
பதில்: தொடக்கம் – முடிவு என நேரடி நீண்ட கோடு எதுவும் இல்லை. நான் தினமும் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பேன். நிச்சயமாக நாடகம் எதையும் எழுதப்போவதில்லை. உரைநடை, சிறுகதைகள், இளைஞர்களுக்கான கதைகள், நாவல்கள் எழுதுவது எனக்கு உகந்ததாகப் படுகிறது. ஆற்றல் இருக்கும்வரை இவற்றில்தான் நான் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
மூலம் : The path of the imagination: A conversation with K S Maniam by David C L Lim
2 comments for “ஒரு கற்பனையின் வழித்தடம் : கே.எஸ். மணியத்துடன் ஓர் உரையாடல்”