புலி வேட்டை – கே.எஸ்.மணியம்

36950874_2014690675210667_8402146561550712832_nகிழவன் மரணத்தை எதிர்கொள்ள போராடிக் கொண்டிருந்தான். அவன் எதிர்ப்பார்த்த அமைதியைக் கனவுகள் வந்து தொல்லைபடுத்தி குலைத்தன. அவற்றுள் சில கொடுங்கனவுகளின் கூர்மையான எல்லைவரை கொண்டுபோய் தூக்கத்தை அவனிடமிருந்து பறித்துக் கொண்டிருந்தன. அவனது சிந்தனையைச் சிதைத்துகொண்டேயிருந்த கனவுகள் அவனை விரக்தியாலும் எரிச்சாலாலும் முணுமுணுக்க வைத்தன. “எதைப்பற்றியும் அக்கறையில்லாமல் இருந்தாதான் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும்.” அவன் அப்போது சன்னல்வழி வெளியில் நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததால், “நிலமற்றவனா இருந்தால்தான் நிலம் உள்ளவனா இருக்க முடியும்,” என்றான்.

பொழுது கடந்த பகல்களில், ஒளியும் மங்கிப்போக, நிலை இன்னும் மோசமாகி அவனது காதுகளில் ஆராவாராகக் குரல்களும் மனம் இறந்தகால படங்களை உயிர்ப்புடனும் ஓட்டிக்கொண்டிருக்கும். ஆண்டாண்டுகளாக அவன் சேகரித்து வைத்திருந்த அனைத்தையும் அவன் மனமே நிர்மூலமாக்கி அவனை நிர்வாணமாய் நொந்துபோக வைத்திருந்தது. மரக்கட்டிலில் உடலைக் கிடத்தி, சத்தமில்லாமல் உள்நோக்கி சிரித்துக் கொண்டு தனக்குள்ளேயே கூறிக்கொண்டான். “தோலிலிருந்து விலகி பிரிந்து செல்வதுதான் இது, எனக்கிது நீண்ட நாட்களுக்கு முன்பே தெரியும்.” அம்மாவின் மரணத்துக்கு பிறகு அவன் இதை அனுபவித்திருக்கிறான். அப்போது அவனுக்கு எட்டு வயதிருக்கும். அம்மாவின் மரணம் ஏற்படுத்திய இழப்பு அல்ல, தன்னைத்தானே இழக்க நேர்ந்ததால் உண்டாவது. தான் அறிந்துவைத்திருந்த ‘நான்’ என்பவன் திடீரென இறந்துவிடுவது.

மற்றுமொரு சந்தர்ப்பம் அவன் தனது திருமண சடங்குகளை மேற்கொண்ட தருணம். காலில் மெட்டி அணிவது தொடங்கி சந்தனத்தைக் குலைத்து காலில் பூசுவதும் பாதங்களை பாத்திரம் மீது வைப்பதும் நொருங்கி படபடத்து வெடித்து உடையும் தானியங்கள், உப்பு, மரப்பட்டைகள், குச்சிகள் என இதெதுவும் அவனுக்குள் எவ்வித அர்த்தத்தையும் கொடுப்பதாக இல்லை. அவன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த இளம்பெண் அவனுக்குள் எவ்வித அருகாமையையும் கொடுப்பவளாக இருக்கவில்லை. மிக அந்நியமாகத் தென்பட்டாள். தன்னைத் தானே இழந்துவிடுவதன் மூலமே அவளை அறிந்துகொள்ள முடியும் என்றாகி இருந்தது அவனுக்கு. அவனுடைய தோலிலிருந்து வெளிபட்டு வந்து அவளுடன் வாழ்க்கையில் பொருந்துமாறு தன்னை மறுசீரமைக்க வேண்டும், இதை அவன் தன்னிடமே சொல்லிக் கொள்ள வேண்டும், சொல்லியும் கொண்டான்.

அப்போதுதான் அவனுடைய மனைவியும் நொண்டியபடி வந்தாள். வெடிப்பு படர்ந்திருந்த பாத்திரத்தில் கஞ்சியை ஏந்திய கையோடு பேசினாள். “உடம்புக்குக் கொஞ்சமாவது தெம்பு வேணும்னா சாப்பிடனும்.” மெல்லிய, கிட்டத்தட்ட எழும்புக்கூடுகளின் தொகுப்பும் அதன் உச்சியில் வெள்ளியான முடிகளின் இருப்புமாய், நடனத்துக்குரிய அசைகளில் அங்கிருந்து வெளியேறி, கடந்து மறைந்து போனாள்.  பூமியிலிருந்து கிளம்பிய கரும் நச்சுப்புகைக்குள், அவனது தற்போதைய பிரக்ஞைக்குள். ‘இந்த மரணம்தான் கடைசியா?’ நினைத்துக் கொண்டான். ‘இதனால்தான் அதற்கு பிறகு உடல் சில்லென குளிர்ந்துபோய் விறைத்துவிடுகிறதா?’

ஆனால் மரணம் அவ்வளவு எளிதில் வருவதில்லை. அதற்கு பதிலாக, எங்கோ கேட்ட அல்லது வாசித்த புனைகதைகளைப் போல அவை நள்ளிரவில் ஆழ்ந்த அமைதியில் அவன் கனவுகளில் தங்கிவிட்ட அந்த நிலம் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது. அயர்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவனாக, ‘அது பிரம்மா தானே? ஆண்கள் விளையாடுவதற்காக இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவன்தானே?’ இப்போது அவனை நோக்கிவரும் அந்த நிலம் மனிதர்கள் தங்களது பூர்வீக நாடுகளை நோக்கி மீண்டும் இடபெயர்வதற்கு முன், கடுமையான மாபெரும் போர்களுக்கு முன், சூரியனைப் பிரதிபலிக்கும் கட்டடங்கள் எல்லாம் உருவாவதற்கு முன்பு இருந்த நிலம்.

இருப்புக்கும் இறப்புக்கும் மத்தியில் நினைவும் கற்பனையுமாக,குழப்பம் மர்மமுமாக, புதியதாய் பசுமை நிறைந்த ஒரு நிலப்பகுதி மலர்ந்தது. விதைகள் வெடித்தன, ஒளிகடத்திச் செல்லுமளவு மெல்லிய தண்டுகள் நிலத்திலிருந்து வெளிவந்தன, பிசுபிசுத்த உளர்மண்ணிலிருந்து மேற்பரப்புகள் வெடித்து தடித்த மரத்தண்டுகளை ஏறெடுத்தன, சரிவுகளை புற்கள் போர்வையாகிப் படர்ந்தன, புதர்களில் லாலான்கள் வேல்கம்பாய் ஊன்றின, படர்கொடிகள் பச்சைப் பந்தல் நெய்தன. நாடு சூரையாடப்பட்டது, காலனியாகியது. உயிரினங்கள் காடுகள்தோறும் கதரின, காடுகள் அபாயத்தில் கதிகலங்கின.

ஒரு தொழிலைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு வீடும் அதில் திருப்தியில்லாமல் ஒரு குடும்பமுமாய் இளைஞன் முத்து, இவற்றுள் ஏதாவதொரு காட்டுக்குள் அடிக்கடி போய்வந்து கொண்டிருந்தான். உள்காட்டுக்குள் செல்வதில்லை. குடியிருக்கும் வீட்டுக்கு மிக அருகில் மிக பாதுகாப்பான எல்லைவரை மட்டும் போய்வந்தான். தொடக்கத்தில், வெறுமனே சுற்றி அலைந்து கொண்டிருந்தான். பிறகு எங்கிருந்தோ வெறுப்பை உமிழும் சீற்றம் காதுகளுக்குத் தட்டுப்பட்டது, புதர்கள் திடுக்குற்று நடுங்கின, காட்டு பன்றி வேட்டைக்கு இறங்க முடிவெடுத்தான். ‘இந்த நாட்டை தெரிந்துகொள்ளனும்னா முதலில் இந்த நாட்டை நல்லா தெரிந்து வைத்திருக்கும் ஒரு விலங்கை வேட்டையாடுவதைவிட சிறந்த வழி என்ன இருக்க முடியும்?’ நினைத்துக் கொண்டான். தாமதமாகத்தான் மனக்குறையோடிருந்த பெற்றோர்கள் அவனைக் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்: அவர்கள் இதற்கு முன் வாழ்ந்த நாட்டுக்கே திரும்பிப்போக விரும்பினார்கள். ‘தங்களுக்கு தெரிந்த வாழ்க்கைக்குள் போவதற்காக இந்த நிலத்தை அப்படியே விட்டுப்போக அவர்களால் முடிகிறது,’ என்று யோசித்தான். ‘ஆனால்… நான் விட்டுப்போக என்ன இருக்கிறது?’

இது அவனுக்குள் புதியதொரு நோக்கத்தை நிரப்பி, கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவிலும் அவனை காட்டுக்குள் அழைத்து செல்ல தொடங்கியது. இலாவகமான, கூட்டிப்பெருக்கப்பட்ட குடியிருப்பு: சிறுவர்கள் ஒருவரை ஒருவர் விரட்டிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். தாயொருவள் செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்; தந்தை சிறுபிள்ளத்தனமான வேடிக்கைகளை முகத்தில் பொருத்திக்கொண்டு அமர்ந்தபடி சிறுவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தார். முத்து சுருக்கமாக அவனிடம் தலையை ஆட்டினான். அவனது புதிய உடைமையாக ஒரு துப்பாக்கி, தோல்பட்டையில் சாய்ந்திருந்தது. அவன் முத்துவைப் பார்த்து சிரித்தான். துப்பாக்கி – எதையோ தேடிப்போகிறான் என்ற எதிர்பார்ப்பையும் சேர்த்து அந்தச் சிரிப்பு மலர்ந்தது.

ஷுல்கிப்லியின் குடிசையை கடந்து வெகுதொலைவில், சில இரவுகள் அவன் காட்டின் விளிம்பில் இருந்தான். அவனது துப்பாக்கி தயாராகவே இருந்தது. தோல்பட்டையும் அவனுக்கு ஒத்திசைந்தது. ஒன்றும் நடக்கவில்லை. சீற்றொலியும் செடிகள் அசையும் சத்தமும் மாயமாய் நின்றுபோனது. ‘ஒருவேளை நான் அதிகமா இரைச்சல் செய்கிறேனோ,’ சிந்தித்தவனாய் அவன் சுவாசமே அந்நியன் எழுப்பும் ஓசையாகக் கேட்கும் அளவுக்கு மேலதிக மெளனமானான், அரவமற்றிருந்தான்.

பிறகு ஒரு பெளர்ணமி இரவில் அவனே ஆச்சரியப்பட்டு போனான். காட்டுப்பன்றி ஒன்று கொத்துக் கொத்தாய் முளைத்திருந்த கருணைக் கிழங்குகளுக்கு மத்தியில் வேரூன்றியிருந்தது. கால் பாதங்களால் தோண்டி, கருப்பும் செந்நிறமுமாய் பூமியை திறந்து கொண்டிருந்தது. முற்றிய கொம்புகளால் இளஞ்சிவப்பு கிழங்குகளை நெட்டி உடைத்து உணவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. முத்து சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தான். துப்பாக்கி அந்த மிருகத்தை குறிபார்த்துக் கொண்டிருந்தது. பெளர்ணமி அடர்ந்த இலைகளை வெளிச்சத்தால் கழுவிக் கொண்டிருந்ததைக் கவனித்தான். மிக அண்மையில் ஆற்றோட்டம் குறிப்பிட்ட திசையில் வளைந்து நெளிந்து கடல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அவன் சுட்டான். காட்டுப்பன்றி திரும்பியது, அதன் முகத்தில் குழப்பம், பின் சரிந்தது. அதன் இரத்தம் இதய வடிவ இலைகளிலும் மென்தரையிலும் தெறித்து சிதறியது. கொஞ்ச நேரத்திற்கு முத்து அசையவில்லை, பிறகு அந்த மிருகத்தை டவுனுக்குக் கொண்டு போவதில் தன்னை பரபரப்பாக ஆக்கிக் கொண்டான்.

இன்னொரு சமயம், ஒரு காட்டுப் பன்றி, அவனது ஆச்சரியத்தைப் பெரிதாய் வளர்த்துவிட்டிருந்தது. நாராசமாய் அவனை நோக்கி வந்தது. ஒரேயொரு துப்பாக்கி சூடுதான், அவனை மூட்டை மூட்டாய் ஆக்கிரமித்திருந்த அச்சுறுத்தல்கள் அப்படியே குறைந்தன. துப்பாக்கியின் மின்வெட்டொளியும் காட்டு பன்றியின் முற்றிய கொம்பின் வெட்டொளியும் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டு தரையில் வீழ்ந்தன. மடிந்துபோனதை அவன் வீட்டுக்கு எடுத்துப்போகவில்லை. ஆற்றோரமாய் தசை அடர்ந்த அந்த உடலை புதைத்து மூடினான்.

அதன்பிறகு அவன் ஒவ்வொரு முறையும் காட்டுப் பன்றிக்குக் குறி வைக்கும்போது, அவன் கை,முக தோல்கள் இறுகின. ஆனால், அதற்குப்பின் இதய வடிவத்திலிருந்த அந்த இலைகள் மட்டும் ரத்தத்தில் குளிப்பதில்லை. மரம் ஒன்றின் எதிரில் உட்கார்ந்தான், களிப்பிழந்து ஆழமாய் சிந்தனைக்குள் புகுந்திருந்தான். அசாதாரண மெளனத்தில், அவன் அருகில் துப்பாக்கி பயனற்று கிடந்தது.

டவுனில், அவன் வீடு நீண்ட செவ்வக வடிவில், தகர கூரைகளில் வெப்பத்தை உள்ளே உறிஞ்சி அவனை அமைதியிழக்க வைத்தது. சலிப்பூட்டும் நீள்சதுர வரவேற்பறையைத் தவிர பெருத்த பழைய அலமாரி, கறுத்த சிமெந்து தரையில் அம்மா போட்டுவைத்த கோலம் ஒன்றும் இருந்தது. ரகசியம் காக்கும் வெள்ளை வடிவங்கள் தங்களுக்குள்ளேயெ சுழன்று வட்டமடித்து கொண்டிருந்தன. அது அவனை மேலும் உக்கிரமாக்கிக் கொண்டிருந்தது. என்னதான் சில நாட்களாக காட்டுப் பக்கம் போகாமல் விலகி இருந்தாலும், இப்போது கைகளில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு தட்டுத் தடுமாறி கித்தான் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அப்பாவைக் கடந்து வீட்டிலிருந்து வெளியேறினான்,

“அங்கே ஒன்னுமில்ல,” அப்பா கூறினார். “நான்தான் தவறாக புரிந்து கொண்டேன். அங்க எதுவுமே இல்ல.”

சுல்கிப்லியின் குடிசையை விட்டு வெகுதூரம் வந்துவிட்ட பின்னும் முத்துவின் காதில் அந்தச் சொற்கள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியவனாய், கிட்டத்தட்ட சுல்கிப்லியின் முகத்தைப் பார்க்காமலேயே முத்து அவனை கடந்து வந்திருந்தான்.

“கண்களை இப்படி வைத்துக் கொண்டு உன்னால் எதையுமே பார்த்துவிட முடியாது,” சுல்கிப்லி கூறினான், சிரித்தபடி.

கைகளில் விசித்திரமான சில செடிகளையும் மரப்பட்டைகளையும் பிரம்பு சுருள்களையும் தோள்களிலும் சுமந்திருந்தான்.

“அங்க ரொம்ப கவனமா இருக்கணும்,” முத்து அமைதியாக இருப்பதைப் பார்த்துவிட்டு சுல்கிப்லி கூறினான்.

“என்கூட வா,” அந்த நிசப்தம் தன்னை தனிமையில் இருப்பதைப் போல உணரவைத்திருப்பதை நினைவுகூர்ந்தவானாய், முத்து உணர்ச்சி பொங்க அழைத்தான்.

“காட்டுப் பன்றிகளை வேட்டையாடக் கூடாது. அவை நம்முடைய பயிர்களை அழித்து நாசம் செய்ய வந்தால் மட்டும்தான் வேட்டையாடணும்…”

“வேறு எதாவது வேட்டை?”

“சுல்கிப்லியிடமிருந்து அப்போதும் சிரிப்பு வெளிபட்டது. ஆனால் அது முத்து கூறியதை ஏற்றுக்கொண்டதற்கானதாகவோ மறுத்ததற்கானதாகவோ இல்லை.

“குடும்பத்தைவிட்டு வந்து நீண்ட நேரம் ஆகிவிட்டது,” அவன் கூறினான். தலை தன்னிச்சையாக வீடு நோக்கி திரும்பியது.

அந்த இரவு, வழக்கத்திற்கு அப்பாற்பட்ட ஊடாட்டம் மிகுந்த பகுதிக்குச் சென்றான். சுல்கிப்லியின் செளகரியமான சிரிப்பில் அசூசையடைந்தவனாய், ‘என்னால் போக முடிந்த தூரத்திற்கு அவன் போக மாட்டான்’ முத்து நினைத்துக் கொண்டான்.  தொடர்ந்து நடந்து முன்னேறி செல்லச் செல்ல, அவன்  நடந்துவந்த பாதையை தூர கடந்துவிட்டிருந்தான்; அங்கு ஒருவன் எங்கு தொலைந்து விட்டான் என்பதற்கான அறிகுறிகளை அவனால் பார்க்க முடிந்தது. உடைந்த கிளை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. இலைகள் கறுத்து வதங்கியிருந்தன. ரம்பத்தால் அறுபட்ட மரத்தின் அடிக்கட்டை ஒன்று, திக்குதொலைந்த ஒருவனால் மற்றவர்களுக்குப் பயன்படுவதற்காகவே விட்டுச் செல்லப்பட்ட திசைக்காட்டியைப் போல நின்று அவனை வெறித்துப் பார்த்தது.

‘நான் எங்கும் தொலைந்துவிடக் கூடாது,’ தனக்கு அறிமுகமான தடத்திலிருந்து விலகி அடியெடுத்து வைத்தவாறு அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். உடனடியாக அவனது மன உளைச்சல் கலைந்துபோய் தூக்கக் கலக்கமும் அயற்சியும்கூட மாயமாய் மறைந்தது. புதிதாய் உருகொள்ளப்பட்டவன்போல் மாறினான். அப்பாவின் சொற்களும் சுல்கிப்லியினது வார்த்தைகளும் அனாயாசமாய் தன்னை தொட்டுவிடாதபடி இறுகி, உறுதியானான். அவன் இப்போது தனது தூக்கத்தில் வரும் கனவு நிலத்தினுள் நுழைந்து விட்டான். அளந்துகூற முடியாத சரிவுகளையும் அதனுடன் இணைந்தே வந்த பயத்தையும் தன் கண்பர்வை முன் கொண்டு வந்து அவற்றை எதிர்கொள்ள தயாரானான்.

DCS7_082.Tiger_Print_grandeஅவன் முடிவு செய்திருந்தான். எந்தவொரு தேர்வுக்கும் இனி இடமளிக்காது, சில தன்னிச்சையான வழிகளை அவன் முடிவு செய்திருந்தான். அவன் நடக்கும்போது, புதர்களும் செடி கொடிகளும் வலுக்கட்டாயமாக அவனை கடந்து நகர்ந்தன. ஆனால் ஒரு கீறலோ குத்தலோ இல்லை. இது அவனை உசுப்பேற்றியது. அல்லது அவனது ஆண்மையை கிளறிவிட்டது. தெளிந்த சிந்தனையில் நம்பிக்கையுடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான். சோர்வில்லாமல் போய்க் கொண்டே இருந்தான். அவன் திரும்பி வரும்போது நேரம் என்பது பொருட்டே இல்லை என்பது போலவும் எங்குத் தொடங்கினானோ அங்கு போய் சேர வேண்டும் என்கிற குழப்பமும் இல்லை என்பது போலவும் போய்க் கொண்டே இருந்தான். அங்குதான் அந்த புற்று இருந்தது. மனதில் குறியிட்டு வைத்திருந்த அந்த இடம், ஆனால் அதன் கூம்பு போன்ற மேல் பகுதி சிதைக்கப்பட்டு கடைக்கால் நோக்கி நொறுங்கி சரிந்திருந்தது.

எறும்புக் கூட்டங்கள் குழுமியிருக்காததைப் பார்த்து முத்து ஆச்சரியமடைந்தான்; மிக சமீபத்தில் கட்டப்பட்ட பாதாள குழிக்குள் நெருங்கிச் சென்று கூர்ந்து பார்த்தான். எப்போதும் தவறாமல் எடுத்தும் வரும் கைவிளக்கு, இருளுக்குள் ஊடுருவி பார்த்தான். பெருந்திரள் ஒளியில் பாதாள குழிக்குள், திறந்திருக்கும் அதன் உதட்டருகில். தரைமட்டமாய்க் கிடந்த அந்தப் புற்றின்மீது கைவிளக்கை மின்னச் செய்தான். காட்டுப்பன்றி வேட்டைக்குச் சென்ற பொழுதுகளில் தெளிவற்று கேட்கும் இந்தச் சத்தங்களைக் கேட்பதற்கும் சீர்குலைந்தசையும் தாவரங்களின் சொற்ப மாற்றங்களையும் அறியும் தேர்ச்சி கிடைக்காமலிருந்தால் இடம்பெயர்ந்து வந்திருக்கும் இந்த மண்ணில் அரிதாகத் தென்படும் அந்தக் காலடித் தடத்தை கவனிக்காமல் போயிருப்பான்.

முத்து உற்சாகமும் படபடப்பும் கலந்து காணப்பட்டான். பாதி அழிந்துவிட்ட புற்றுக்கு அருகில் நின்றிருந்தான்; தான் தனிமையில் இல்லை என்பதையும் உணர்ந்தே இருந்தான். ‘ஆனால் எது இவ்வளவு பெரியதாகவும் கூடவே சாதுவாகவும் இருக்கும்?’ நினைத்துக் கொண்டான். அவன் அங்கிருந்து நகரப்போவதில்லை, அதன்மூலம் அதன் கவனத்தை ஈர்க்கப்போவதில்லை; ஆனால் அங்கேயே காலமெல்லாம் நின்றுகிடக்கவும் முடியாதென அறிந்தே வைத்திருந்தான். அங்கிருந்து மிக கவனமாய் பின்வாங்கி மீந்திருந்த மரத்தின் அடிக்கட்டையின் அருகில் வந்து நிற்கும்போது தன்னை வேடிக்கையாய் இருகண்கள்; கடும் முரட்டுப் பாய்ச்சலுடன் பார்த்துக் கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது.

கிழடுதட்டிய முத்து மரக்கட்டிலில் சிற்றதிர்வுடன் அசைந்தபடி, ‘நான் மீண்டும் போயிருக்கக் கூடாது. அதிலும் குடிசையிலிருந்து வந்த அவனுடன். அவனை அழைத்துப் போனது பெரும் சிக்கல். ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்வதற்கு முன்பே நாங்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தோம்.’

முத்து, தொடர்ந்து ஆர்வமாகவே இருந்தாலும், அவனால் சுல்கிப்லியின் வீட்டைக் கடந்து போக முடிந்ததில்லை. அவனுடைய சிந்தனை முழுக்க வண்ணங்களும் நீள்வரிக் கோடுகளும் ஓடிக்கொண்டே இருந்தன. அதிலும் கடைசியாக தான் எப்படியும் சந்தித்துவிடப் போகின்ற அந்த ஒன்றை குறித்த பயம் அவனுக்குள் இருந்தது; ஆனாலும்கூட அவன் இதற்காகத்தான் காத்திருந்தான்; ஒருபோதும் இதை தவறவிட மாட்டான். ஆனால் அவன் தனியாகப் போக மாட்டான்; நிச்சயம் அவனுக்கு ஒரு துணை வேண்டும். அப்பா அவனைப் பார்த்து சிரித்தார். “நீ பேசுறதெல்லாம் விளையாட்டுத்தனமா இருக்கு. தெளிவான ஆம்பளயா இருக்கப்பாரு.” அவன் வயதில் இருந்த மற்றவர்களுக்கு மனைவியும் குழந்தைகளும் இருந்தார்கள், அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை அவர்களுக்கு இருந்தது.

‘சாப்பாடு, உடுப்பு, தங்குவதற்கு இடம்! அதைப்பற்றி மட்டுமே அவர்கள் கவலை,’ முத்து இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்க அவன் கால்கள் பன்றி வேட்டையாடும் பகுதியைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. ஏளன பார்வையை வீசும் அப்பாவின் முகம் அந்த சொற்களை தாங்கி வந்தது, “எங்கக்கூட வந்திடு. உன்னை ஒரு ஆம்பளயா உணர வைக்கிற மாதிரி ஒரு பொண்ண கட்டி வைக்கிறேன்!”

இந்த இரவு தன்னை ஓர் ஆண் என்று நிரூபிக்க கிளம்பினான். வழியில் சுல்கிப்லியின் வீட்டை பார்க்காமலேயே கடந்து சென்றான். திசைக்காட்டியாக நின்ற அந்த  மரத்தின் அடிக்கட்டையை நோக்கி நேராக சென்றான். அதைக் கடந்து திகிலூட்டும் அந்த நிசப்தத்துக்குள் சென்றான். பயம்தான் ஆனால் அதை நேரெதிர்கொள்ள வேண்டும். நிலைகுலைக்கப்பட்ட அதே புற்றிடம். அந்தக் காலடித்தடம் இன்னும் பெரிதாகியிருந்தது. இன்னும் ஆழமாய் பூமியில் பதிந்திருந்தது. தன்னை ஆட்டிப்படைக்கிற புலி குறித்த முன்முடிவுகள் அவனது பார்வைக்கு அதை திரித்துக் காட்டுகிறதா என  வியந்தான். அச்சுருத்தும் அடர்ந்த நிசப்தத்தை நோக்கி உடைத்துக் கொண்டு போய் தனக்கு பயமில்லை என காட்ட முடிவெடுத்தான்.

போக வேண்டிய திசை குறித்து இப்போது அவனுக்கு மிகச் சரியான பிடிப்பு இருந்தது. கையில் துப்பாக்கி இருந்தது. கடந்து செல்லும் ஒவ்வொன்றையும் மனதில் புகுத்திக் கொண்டான். தன்னை கொடும் கிலியூட்டும் நிசப்தத்துக்குள் தள்ளிச் சென்றான். ஆனால், வினோதமாக எது முடிவற்றதாய் அதுவரை நீண்டதோ அந்த நிசப்தம் ஆழ்ந்த சதிப்போல் நீங்கியது. சிறகுகள் சத்தம் கம்மி படபடத்து தப்பியோடுவதை அவன் காதுகள் ஈர்த்தன; இருண்ட, சடசடத்த உருவங்கள் பலவந்தமாய் தங்கள் அசைவற்றிருந்த நிலையிலிருந்து உந்தப்படுவதை அவன் கண்கள் பார்த்தன. பிரகாசமாய் பச்சை உருள்களுக்கு முன் அவனது கைவிளக்கு பயனற்றுப் போனது – மின்மினிப்பூச்சிகளா? – அவனை நோக்கி வந்தன. அவன் ஓட்டமெடுத்தான். அந்தச் சதித்திட்ட வலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். புற்றிருக்கும் இடத்திற்கு திரும்பியபோது, கைகளிலும் கால்களிலும் ரத்தம் கசிந்தோடியது.

இளவயதில் தான் உணர்ந்த அதே கோபம் கிளர, கிழட்டு முத்து இப்போது போராடினான். ‘நான் சாவதற்கு இது நிச்சயமா உதவாது,’ நினைத்துக் கொண்டான். ‘கோபம்தான் என்னை சுல்கிப்லியிடம் அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.’ பக்கவாட்டில் திரும்பிப் படுத்துக் கொண்டான். ஒடிசலாய் சிறு மண் மேடுபோல் உடம்பொன்று தன்னை நோக்கி வரும் திசைபார்த்து ஒருக்கழித்திருந்தான்; வெள்ளை படுக்கை விரிப்புடன் அவன் மனைவி வந்து கொண்டிருந்தாள்.

அப்படியே பார்த்துக் கொண்டிருக்க, அம்மா அப்பா இந்தியாவுக்கு திரும்பிவிட்ட பிறகு, அவனருகில் முக்காடு போட்டு அமர்ந்திருந்தவளின் நினைவு வந்தது. திருமணம் செய்துகொள்வதன் அர்த்தம் என்ன என்பதுபற்றியெல்லாம் பெரிதாய் யோசிக்காமல், பக்கத்து தோட்டத்தில் முன் எப்போதோ பார்த்த அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தான். முதலிரவில் ஒன்றாய் இருந்ததில் அடைந்த அதிர்ச்சி அவனது போதாமைகளை அழுத்தாமாகக் காட்டியது. புடவை மறைத்து வைத்திருக்கும் அவளின் எல்லையற்ற மர்மங்களையும் அப்பாவித்தனங்களையும் அசட்டையாய் புறந்தள்ளினான். ஒரு பெண்ணாக அவளை அடையாளம் காட்டினான். வன்முறையோடு அவளை ஒரு இருண்ட தேசத்தின் பிரஜையாக்கினான். அது அவனுக்கே தெரிந்திருக்காத ஒரு தேசம்.

இளவயது முத்து உருமாறியிருந்தான்; முக்கால்வாசி இரவுகளில் தூக்கம் கலைந்து விழித்திருந்தான். இருட்டில், தனக்கு கீறல்களையும் வெட்டுக் காயங்களையும் கொடுத்த நீள்வரிக் கோடுகளையும், ஆழமற்ற வடுக்களையும் உடைய அதை அவனால் உணர முடிந்தது. ஆனால் அவன்தான் உள்ளூர நைந்து உருசிதைக்கப்பட்டிருந்தான். கண்ணுக்குப் புலப்படாத ஒன்று தன்னை இவ்வளவு பயமுறுத்தி வைத்திருப்பதை எண்ணி வெறியேறி அமைதியிழந்திருந்தான். முழுமையான திட்டங்களுடன், மறுநாள்  மரத்தின் அடிக்கட்டையைக் கடந்து போனான். ஆனால் அந்த வட்டத்தைக் கடந்து அவனால் போக முடியவில்லை. எல்லா நேரமும் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியாத ஒன்றின் கண்கள் தன்மீது பதிந்திருப்பதுபோல் உணர்ந்தான்.

சுல்கிப்லி அவனையே நோட்டமிட்டவனாய், ஒரு நாள் மதியம் வீட்டுக்கு அழைத்தான். இருவரும் ஒருவருக்கொருவர் அந்நியமாய் இருந்தார்கள். ஆனால் முத்து ஆவலுடனும் கண்ணும் கருத்துமாகவும் இருந்தான். அவர்களது உரையாடல் மேலோட்டமாய் சிற்றலையில் மிதந்து கொண்டிருந்தது. அந்தக் கணங்களில் அவர்களது கண்களின் ஒளி மட்டும் உள்ளுள் மறைந்திருக்கும் வாசல் நோக்கி சுழன்று கொண்டிருந்தது.

“நீ வேட்டையாட வேண்டியதை கண்டுபிடிச்சிட்ட,” கடைசியில் ஒருவாறாய் சுல்கிப்லி கூறினான்.

“உனக்குத் தெரியுமா?”

“என் மூதாதையர்களின் கண்களிலும் இதே ஒளிதான். அப்பா சொல்லியிருக்கிறார்,” சுல்கிப்லி கூறினான்.

 “நீ?” முத்து கேட்டான்.

“உள்ளுக்குள் இருக்கு. இவ்வளவு வெளிப்படையாகவெல்லாம் இதை உலகத்துக்குக் காட்ட வேண்டியதில்ல,” சுல்கிப்லி கூறிவிட்டு சிரித்தான். “உன் வழியையும் தொலைத்துவிட்டாய்தானே.”

“உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கு,” முத்து கூறினான்.

“நூற்றாண்டுகளாய் இங்கேயே வாழ்ந்தது,” சுல்கிப்லி கூறினான். “ஒரு நாள் நாம இருவரும் சேர்ந்தே போவோம்.”

முத்துவின் தூக்கம் கனவுகளால் நிரப்பப்பட்டிருந்தது. அந்தக் கனவுகள் அனைத்தும் ஒன்றுபோலவே இருந்தன: இப்போது அவன் ஒரு ஒரு பச்சோந்தியாக மாறியிருப்பதை வியந்து பார்த்தான். நுனி நோக்கி சிறுத்து செல்கிற அவனது சுருண்ட வால் தடித்த மரக்கிளைகளில் கொக்கிபோல் மாட்டிக் கொண்டிருந்தது. அவனது கண்களைச் சுற்றி வளையமிட்டிருந்த கண்மடல்கள் எப்போதும் மூடாமல் இருந்தன. கீழே இருக்கும் அபாயங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தான். எம்பிப் பாய்ந்து செல்ல வேண்டும் என்கிற எண்ணம் அவனை உற்சாகமாக்கியது. அவனுடைய வால் பிடிதளர்த்தியது. நிறத்தை மாற்றிக்கொண்டே சடாரென்று பாயும்போது சிவப்பும் கருப்புமாய் பூமி தன்னை நெருங்கி வருவதைப் பார்த்து வீறிட்டான். நான் அதை அடைவேன்! அடைவேன்!

விழித்ததும் அந்தச் சொற்களை அடியோடு துடைத்துவிட முயற்சித்தான். ஆனால் விழிப்பு நிலையிலும் கனவு தொடர்ந்தது. அப்போதும் தான் பச்சோந்தியாகவே இருப்பதைப் பார்த்தான். இலைகளால் கம்பளம் விரித்திருந்த நிலத்தில் வந்திறங்கினான். குருதிக்குழாய்களில் இரத்தம் அலைபாய்ந்து நூற்றாண்டுகளைக் கடந்து சென்றது.

அடுத்தமுறை சந்திப்பில் இருவரும் நிதானமாகவே வேலையில் ஈடுபட்டார்கள். ஆயினும் செயல்களில் தீவிரமும் பரபரப்பும் இருந்தது. புலியின் நிலம் நோக்கி பயணிக்க தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டார்கள். இருவரும் தீவிரத்தன்மையால் சூழப்பட்டு வெளிதோற்றத்தில் புராதன புத்தர் சிலைபோல் நிதானச் சொரூபமாய் காணப்பட்டார்கள். ஆன்மீக தேடலை மேற்கொள்பவர் போல, குடும்பத்தையும் வீட்டையும் குறைந்தது சில நாட்களுக்கு விட்டுப்பிரிந்து, எண்ணத்தில் மட்டும் உருகொண்டிருந்த அந்தப் பெளதீக இருப்பைத் தேடிச் சென்றனர். மனநிறைவும் தரும் அதைத் தேடிச் சென்றனர்.

பன்றி வேட்டையாடும் பகுதியை இருவரும் அடைந்திருந்தனர். வழிகாட்டிபோல நின்ற வெட்டுண்ட மரத்தின் அடிக்கட்டையை முத்து சுல்கிப்லிக்குக் காட்டினான். தலையை ஆட்டியபடி சுல்கிப்லி அதன் எதிர்விசை நோக்கி நடந்தான். முத்து அவன் பின்னால் விரைந்தான். போதுமான இடைவெளியில் கையில் பாராங்கத்தியைப் பிடித்து சுல்கிப்லி படர்கொடிகளையும் குறுக்கிட்ட மரக்கிளைகளையும் அவசியமான சமயங்களில் மட்டும் வெட்டிச் சிதைத்தான்.  சுல்கிப்லி தெரிந்துதான் இப்படி செய்கிறானா என்ற வியப்புடன் முத்து அவனை மெளனமாக பின்தொடர்ந்தான்

பிறகு, எல்லாவற்றையும் கண்காணித்தபடி முந்திச் சென்றுகொண்டிருக்கும் அவர்களுக்குச்20180304_161641 சட்டென்று எதுகுறித்தும் ஆச்சரியப்பட நேரமில்லாமல் ஆனது. இதற்கு முன்பு நடந்த நடை அல்ல அது. அவர்களது உடலும் கால்களும் எவ்வித கட்டாயமுமில்லாமல் ஒருவிதமாய் மந்திரித்துவிட்டதுபோல இயங்கியது. அவர்களுடைய சிந்தனையும்கூட அவர்கள் வசம் இருக்கவில்லை. அவர்கள் இயங்கினார்கள் – உடலும் சிந்தனையும் – அவர்களுக்கு வெளியிலிருந்து செயல்பட்டது. அலைபாயும் இலைகளின் தகிப்புதான் அவர்கள், தவரங்களின் தண்டுகளில் பாய்ந்தோடும் உயிர்ச்சாறுதான் அவர்கள், அடர் ஊதாப்பூவின் மெல்லிய மலர்ச்சிதான் அவர்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், மலைப்பு, திகில்.. இவற்றில் இருவேறு பக்கங்களாக அவர்கள் முகம் காட்சியளித்தது.

‘நாங்கள் அப்போதே திரும்பியிருக்க வேண்டும்,’ கிழட்டு முத்து நினைத்துக் கொண்டான். மென்மையற்ற மெத்தையின்மீது உட்கார்ந்திருந்தான். ‘நாங்கள் மனிதர்களாக ஆவதற்கு முன்பு. மனிதர்கள்? ஆமாம், முதலில் நான் யாராவது ஒருவனாக இருக்க வேண்டும். சுல்கிப்லி? அவனும் தன்னை யாரென காட்ட வேண்டும்.’

திரும்பினான், பக்கவாட்டில் சாய்ந்து இன்னும் ஆழமாக கூர்ந்து பார்த்தான்.

என்னதான் இருவரும் ஒரே சீராய் நடந்தாலும், நடையின் வேகத்தை அப்படியே தக்கவைக்க முடியவில்லை. ஒருவர் இன்னொருவரின் வலிமை, செறிவான கவனம் ஆகியவற்றின்மீது வைத்திருந்த மதிப்பை நிசப்தம் இன்னும் அழுத்தமாக்கியிருந்தது. ஆனால், உடல் மனம் நீங்கியவர்களாகத் தொடர்ந்து இயங்க அதற்குமேல் அவர்களால் முடியாமல் போனது. தோல்பட்டையிலிருந்த துப்பாக்கியின் கணம் முத்துவுக்கும் சுல்கிப்லிக்கு தன் கையில் ஏந்தியிருந்த பாராங் கத்தியும் உரைக்கத் தொடங்கியது. பேசி இளைப்பாறுவதன் மூலம் சூழ்ந்திருக்கும் நிசப்தத்தைத் துரத்த நினைத்தார்கள்.

போதுமான அளவு தங்களை உயிர்பித்துக் கொண்டவர்களாக, முன்னரே முடிவு செய்து வைத்திருந்த நோக்கத்தை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்து கொண்டனர்.

 “சீக்கிரமே புலியைப் பார்த்து விடுவோமா?” முத்து கேட்டான்.

“நாம ரொம்ப உள்ள வந்துவிட்டோம். உன் காதுகளாகவும் கண்களாகவும் நான் இருக்கணும்.”

“என்ன செய்யனும்னு மட்டும் காட்டு,” சுல்கிப்லியின் பதற்றத்தை உணர்ந்தவனாக முத்து பேசினான்.

“நீ என்ன செய்வ?”

“அதை சுடுவேன்,” முத்து கூறினான்.

“நான் உனக்குக் காட்டப்போகும் புலியை உன்னால் சுட முடியாது,” உறுதியுடன் சுல்கிப்லி கூறினான்.

“நான் அதைப் பார்ப்பேன் ! அதை அடைவேன்!”

“யாராலும் அதை அடைய முடியாது,” சுல்கிப்லி கூறினான்.
அவர்கள் இப்போது காட்டில் பெரும்பாலும் சிக்கலான நிசப்தத்தைத் தாண்டி சென்றுவிட்டிருந்தனர். தத்தமது இயல்புதன்மைக்குள் புகுந்திருந்தனர். பதற்றம் இருந்தாலும்கூட  முழுவீச்சுடன் அதை எதிர்கொள்ள விரும்பும் பேரார்வத்தைத் தங்களுக்குள்ளாகவே கொண்டாடினார்கள். ஒருவருக்கொருவர் எதிர்த்துப் போரிடுவதற்கு மூர்க்கமாய் செய்திருந்த தயார்நிலைகள் சிறிதுநேரத்துக்கு அவர்களுள் ஊடுருவியிருந்த பயத்தைப் போக்கியிருந்தது. இப்போதைக்கு அம்மிருகத்தைக் அடையாளம் காண்பதற்கும் அதை வெளிபடுத்துவதற்கும் போதுமான பலம் இல்லாமலிருப்பதை இருவரும் உணர்ந்தே இருந்தார்கள்.

ஆனாலும்கூட அவர்களது ஊணிலும் உணர்விலும் தோய்ந்திருக்கும் அதை எளிதில் விட்டுவிட விருப்பமில்லை. முத்துவின் உடலும் உள்ளமும் அவனை உந்தித்தள்ளிக் கொண்டிருந்தது: அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதையும் சுல்கிப்லிக்கு இவையெல்லாம் தெரிந்திருப்பதன் தேவை என்ன என்பதும்: அவனுக்குள் குடியிருக்கும் அந்த விசயங்களை முத்து என்ன  செய்து தன்வசமாக்கிக் கொள்வது என்றும் ஏங்கிக் கொண்டிருந்தான்.

இப்போது விசித்திரமாய் ஒன்று நடந்தது. அதுவரை அவர்கள் நடந்துகொண்டிருந்த நிலம் அதற்குமேல் அவர்களை முன்நோக்கி நகர்த்தவில்லை. அதுவரை சுழன்றுகொண்டிருந்த உடல் பிற்பாடு அவர்களின் ஞாபகத்தில்கூட தென்படவில்லை. தரை தடிமனானது, சரிவுகள் கூர் செங்குத்தாகின; செடிகளும் புதர்களும் குரூரமாய் மோதித் தள்ளின. ஆச்சரியத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“இந்தப் பாதையிலேயே நீ தொடர்ந்து போக போகிறாயா?” சுல்கில்பி கேட்டான்.

“வேறெப்படி?”

“இதற்கு முன்பு இப்படி நடந்ததில்ல. இந்த நிலம் நம்மைவிட்டு போய்கொண்டிருக்கிறது. ஒருவேளை நாம் புலிக்கு எதிராக செயல்படுகிறோமோ?”

“நாம இன்னும் அதைப் பார்க்கவே இல்லையே.”

“அது இங்கதான் இருக்கு. நம்மை சுற்றிதான் பக்கத்தில் இருக்கு,” சுல்கிப்லி விளக்கினான்.

“நான் அதைத் தெளிவா பார்க்கனும். முகத்துக்கு நேராக,” முத்து கூறினான்.

“மனிதனுக்கு ஞாபகம் என்பது வருவதற்கு முன்பிருந்தே புலி இந்த நிலம் முழுக்க சுற்றி திருந்திருக்கு. அதோட நீண்ட வரிக்கோடுகள் எல்லா இடங்களிலும் இருக்கு.”

“சரி அப்படினா அதை எங்கு பார்க்க முடியுமோ அங்கு என்னை கூட்டிக்கொண்டு போ.”

“துப்பாக்கியை தூக்கிக்கொண்டு இல்ல. அதை வைத்துவிட்டுதான் போகணும்.”

“அது நம்மை தாக்க வந்தால்?”

“நீ நினைப்பதுபோலெல்லாம் நடக்காது.”

“ஆச்சரியப்படும்படி நான் அதை அடைவேன்,” மரத்திற்கு எதிராக துப்பாக்கியைச் சாய்த்துவிட்டு முத்து கூறினான்.

‘அந்த நேரத்தில் ஏதோ தவறு நடந்திருப்பதா நினைத்து விட்டேன்,’ கிழட்டு முத்து தன்னிடமே கூறிக்கொண்டான், பலகையின்மீதிருந்து சுற்றித் திரும்பினான். வைகறை வெளிச்சம் சன்னலின் குறுக்கே ஒளியைத் திறந்துக் காட்டிக்கொண்டிருந்தது. பலகை சுவருக்கு எதிரிலிருந்து உடலை இழுத்துக் கொண்டான். உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியின்மீது அவனது பார்வை விழுந்தது. போர்வை விலகியதில், பாழ்பட்டு கிடந்த அவள் உடலைப் பார்த்தான். காலத்திற்கு ஏற்றவாறு சதைப்பிடிப்பு இல்லாமலிருந்தது. “ஏன் எல்லாவற்றியும் காலம் ஆக்கிரமிக்க நான் அனுமதித்தேன்,’ போராடி போர்வையை இழுத்து கருவிலிருக்கும் குழந்தைபோல படுத்திருந்த அவளுக்குப் போர்த்தி விட்டான். யோசித்தான். “இவ என்னவா ஆகியிருப்பா…”  அவன் சிந்தனை அர்த்தமில்லாமல் தாவிக்கொண்டிருந்தது. “நான் வாழ்க்கையை அர்த்தபூர்வமாக்கியிருந்தால்…”

முதுகை கடினமான அந்த பலகையின்மீது பதித்து, மீண்டும் இறந்த காலத்தில் தான் எதைப் பார்க்காமல் விட்டானோ அதைத் தேடத் தொடங்கினான். ‘நான் பார்க்காமல் போன அதுதான் எனக்கு மரணத்துக்கான விடுதலையைக் கொடுக்கக்கூடும்,’ நினைத்துக் கொண்டான்.

துப்பாக்கியிடமிருந்து விடுதலை பெற்றவன், உடலிலிருந்து தோல்மட்டும் தனியாக உரித்துக் கொண்டு வந்ததுவிட்டதுபோல் உணர்ந்தான். போதாகுறைக்கு விசித்திரமாய் மேலெழுந்து மிதந்து கனமற்று போனான். சுல்கிப்லியும் பாராங் கத்தியை ஓரமாக வைத்துவிட்டான், அழுத்திக் கொண்டிருந்த ஒன்று அப்போது அவனை விடுவித்திருந்தது.

மீண்டும் இயங்கத் தொடங்கியபோது, “செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கு,” என்றான் சுல்கிப்லி.

அவர்கள் இன்னும் அடர்த்தியான காட்டுக்குள் நுழைந்தார்கள். குரூரமான அந்த கண்கள் தங்களைதான் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்தாலும்கூட அவர்கள் கண்ணுக்கு மட்டும் ஒன்றுமே புலப்படவில்லை. சுல்கிப்லி அசைவுகளை நிறுத்தினான், அங்கேயே நின்று யோசித்தான். முத்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சுல்கிப்லி அந்த நிலப்பகுதியுள் உழன்றுக் கொண்டிருந்தான். ‘நான்தான் பச்சோந்தி!’ முத்து மனதுக்குள் போராட்டத்தைத் தொடங்கியிருந்தான், முன்பைக் காட்டிலும் தீர்க்கமாக சுல்கிப்லியின் மீது பதிந்திருந்த புலியின் கவனத்தை இழுக்க நினைத்தான்.

“என்ன தவறுனு எனக்குத் தெரிந்துவிட்டது. ஏதோ அந்நியமான வாடை புலியின் மூக்குக்கு எட்டியிருக்கு. இந்த வாடை போகும்வரை அது தன்னை வெளிகாட்டாது.”

பார்வையை முத்துவின்மீது பொருத்தி, அளவிடுவதுபோல் உற்றுப்பார்த்தான். முத்து பதற்றமானான்.

என்ன வாடை?”

“உடலும் சிந்தனையும் உண்டாக்கும் வாடை…”
முத்து எரிச்சலடைந்தான். சுல்கிப்லிக்கு முதுகைக் காட்டி திரும்பி நின்றான்.

“மனிதர்கள்கிட்ட நெறுங்குவதைப்போல புலிக்கிட்ட முடியாது,” சுல்கிப்லி முத்துவை எதிர்கொண்டு பேசினான்.

“நீ அணிந்திருக்கும் உடை, நீ சிந்திக்கிற எண்ணம்… இதெல்லாம் எங்கிருந்து வந்தது?” சுல்கிப்லி தொடர்ந்தான்.

“அது வெருமனே யோசனையும் உடம்பும் தானே.”

“புலி வாழ்கிற இடத்திற்கு அது பொருந்தி போகனுமே.”

“எதற்கு பொருந்தனும்? நான் என் அப்பாவோட பிடியிலிருந்து வெளிவரணும். அவ்வளவுதான்.”

“அப்படினா நீ ஒரு குறிக்கோலோடுதான் இங்கு வந்திருக்க இல்லையா? இந்த மாதிரியான சிந்தனையோடு நீ எப்படி புலியுடைய நீள்வரி கோடுகளுக்குள்ளும் அதன் ஆன்மாவுக்குள்ளும் நுழைய முடியும்?”

“என்னால்  நெட்டிப் பாய முடியும்,” மனதில் பச்சோந்தியை நினைத்துக் கொண்டு பேசினான்.

‘நான் அப்படி நெட்டிப் பாயல,’ கிழட்டு முத்து படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தவாறு முணுமுணுத்தான். சுல் – அதற்குப் பிறகு நான் அவனை அப்படித்தான் அழைத்தேன். அவன் என்னை புதிதாய் கட்டமைக்க முயற்சித்தான். என்னை புலியாக நினைக்கும்படி கூறினான். அதுவாக என்னை பாவிக்கச் சொன்னான். நான் மறுத்தேன். இருந்தும் சுல் என்னை புலி வாழுமிடத்திற்கு அழைத்துப் போனான். எல்லா இடமும் அதன் வாழிடம்.

பகல் வெளிச்சத்தில் கிழவன் முழு சோர்வுக்குள் சரிந்திருந்தான். சாய்ந்திருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான், அளவுகடந்த நிதானத்துடன். காய்ச்சல் அவன் கால்களிலிருந்து பரவியது, இடுப்பு நோக்கி, தலைவரை. அவன் மனைவி எழுந்து காப்பி கலந்து வந்து அவனைத் தொட்டாள்.

“உங்க உடம்பு கொதிக்கிது.”

“ஆமா. கொதிக்கிது,” கூறினான், காப்பியை மறுத்துவிட்டான்.
காய்ச்சலுக்கு உட்பட்டவனாய் அவன் சுல்கிப்லியின் அருகிலிருப்பதைப் பார்த்தான். அதற்கிடையேயான காலங்கள் அழிந்துவிட்டிருந்தது. விருப்பத்தை நோக்கிய போராட்டத்தில் தாழிடப்பட்டிருந்தது. விருப்பத்திற்கு மத்தியில் அல்ல, தன்னுடைய விருப்பத்திற்கும் அதை நிறைவேற்றுவதில் சுல்கிப்லிக்கு இருந்த தேர்வுக்கும் மத்தியில் தாழிடப்பட்டுக் கிடப்பதை இளைஞனான முத்து புரிந்து கொண்டான்.  தன்னைப் பொருத்தவரை முத்து சுல்கிப்லியுடன் உள்காட்டின் ஆழம்வரை போயிருந்தான். சுல்கிப்லி மட்டும் பேசிக்கொண்டிருந்தான். கால வரையறையற்ற திண்மையுடன்  முத்துவின் காதுகளில் இடைவிடாது ரிதமொன்று கேட்டுக் கொண்டே இருந்தது.

ஏற்கனவே, சுல்கிப்லியின் அருகில் இருப்பதுபோல உணர்வு. பெயர்சொல்லமுடியாத பயம் அவனை ஆக்கிரமித்துக் கொண்டது. அவன் ஓட நினைத்தான், ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டான். ஒருவித அடர்த்தி அவர்களைச் சுற்றி அதிகரித்திருந்தது. அனைத்துக்கும் நடுவில் இருவரும் அசையாமல் நின்றனர். சுல்கிப்லி பேசவில்லை, ஆனால் அவனுடைய மொத்த இருப்பும் விழிப்புடன் இருந்தது.

பீரங்கியின் சத்தம் போல பலத்த உறுமல் அவர்களை நோக்கி வந்தது. அநேகமாக அதைவிட சீக்கிரமே எண்ணிலடங்கா விலங்குகள் பூச்சிகளின் கதறலிலும் ஊளையிலும் கலந்து அந்த ஒலி சிதைந்து மறைந்தது. கிளைகளும், கூடவே இலைகளும் நடுங்கின, ஒருவகையில் நிலவொளியின் தந்திரமான வடிகட்டலுக்கு மத்தியில் காடு மிக அருகில் தன்னை நெருங்கி வருவதையும்  ஆரஞ்சு நிற பட்டைகளும் கருப்பு நீள்வரிக் கோடுகளும் தன்மீது ஊர்வதைப் பார்த்தான். அவன் தோல் பற்றியெரியத் தொடங்கியது. அவன் அணிந்திருந்த உடைகள் அதற்குமேல் அவன் உடலில் இல்லாமல் போனதை உணர்ந்தான். சில மாதங்களுக்கு முன் நிலம் அவன்மீது வடித்துவைத்த வடுக்கள் இப்போது பிழந்தன. ஏதும் செய்ய வழியற்றவனாய் வரி கோடுகளை நோக்கி மிதந்து சென்றான். வேதனையின் கூக்குரலிட்ட தருணம் தன் தெளிந்தநிலையை செயல்பட வைத்தான்.

கிழவன் காட்டுத்தனமாய் பிதற்ற ஆரம்பித்தான். அடிக்கடி மனைவி வந்து ஈரமான துணியில் துடைத்துவிட்டு போனாள். பேச்சு அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல் போய்விட்டதற்கு சான்றாக எல்லா நேரமும் பிதற்ற ஆரம்பித்தான். உடலும் அவன் கட்டுப்பாட்டை இழந்திருந்தது.

“என் உடம்பு எங்க? என்னால் அதை உணர முடியல. ஒருவேளை தோல்வழியாக எகிரி வெளியே குதிச்சிடுச்சா… அதோ பாரு. சாதாரண ஒரு வடிவம் மட்டும்தான் அது. இப்போது ரொம்பவே இருள்படிந்து கிடக்கு. எப்போதும் நின்றுக் கொண்டும், காத்திருந்தும். நீ நீயாக இல்லாமலிருக்கிறாய். நீயாக இருப்பதுனா என்ன?… ரொம்ப நாளைக்கு முன்பு, இந்த சின்ன பொன்னு, அவளோட முகத்துல நிறைய இலக்குகள் எழுதப்பட்டிருந்தது. நான்தான் தெரிந்து கொள்ள விரும்பல. ரொம்ப பயம். ஆழமான குழியுள், இருட்டுக்குள் விழுந்துவிடுவேனோனு பயம். கையால் தொட முடிஞ்சத மட்டும் எடுத்துக்கிட்டேன். அந்த உடம்பு… ஆமா, சுல்லோட சிரிப்பை எடுத்துக்கிட்ட மாதிரிதான். அவனிடமிருந்து வேறு எதையும் எடுத்துக்கொள்ளல. அந்த வரிக்கோடுகளிடமிருந்து ஓடினேன். இன்னும் தூரமாக, பார்க்கவே முடியாத தூரத்திற்கு. எப்படி இவ்வளவு நடுகாட்டுக்குள்ளே வர்றது? நான் என்னவாக இருந்தேனோ அதெல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு வரணும்… ஒன்னுமே இல்லாத நானாக வரணும். நான் ஒன்னுமே இல்ல. அவனுடைய சிரிப்பை ஏற்றுக்கொண்டேன், எதையும் புரிந்துக்கொள்ள வேண்டிய அவசியமில்ல. இப்போது… எல்லாமும் புரிந்து கொள்வதற்கு அப்பால் போய்விட்டது… இந்த வீட்டை வாங்கினேன், நிலம் இன்னுமின்னும் பெருசானது. இதிலெல்லாம் ஒன்னுமே இல்ல. எல்லாமே வெறும் வன்முறைதான். எடுத்துக்கொள்வதுதான் வன்முறை. நடக்கும் என நம்புவது, தொடுவது, பார்ப்பது எல்லாத்தையும் அடைய நினைக்கிறது வன்முறை. எதுதான் நிச்சயமா நடக்கும்? நான் சாக முடியாது. நான் எப்படி சாவது? இந்த மூலை நிரம்பவே இல்லையே, பிறகெப்படி காலி செய்றது. உடம்பே இல்லை பிறகெப்படி ரத்தம் சில்லிடும்… இதுதான் உண்மையான மரணம். வாழாமலேயே இருந்தது, அதுதான் மரணம்…”

மூலம்: Haunting the Tiger

1 comment for “புலி வேட்டை – கே.எஸ்.மணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *