அந்தக் கோயில்

சி.மு 04நாங்கள் தத்தளிப்பு மிகுந்த பரவசத்திலிருந்தோம். தேனிலவுடன் வரும் எதிர்ப்பார்ப்பு, விடலைக்காதல், மென்மை, வெம்மை ஆகியவற்றுடன் நெகிழ்ந்திருந்தோம். அரை மாதமே விடுமுறை என்றாலும் வங்வங்கும் நானும் பயணத்தைப் பலமுறை திட்டமிட்டிருந்தோம்; பத்து நாட்கள் திருமண விடுப்பு,மேலும் ஒரு வார கூடுதல் வேலை விடுப்பு. திருமணம் என்பது வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு. எங்களுக்கு அதைவிடவும் வேறெதுவும் அத்தனை முக்கியமில்லை. ஏன் அதற்காக கூடுதல் விடுப்பு எடுக்கக்கூடாது? என்னுடைய மேலாளர் ஒரு கஞ்சன்: அவனிடம் விடுப்பு கேட்கச் செல்லும் எவரும் அதற்காக அவனுடன் போராட வேண்டும்; உடனடி அனுமதி சாத்தியமில்லை: விடுப்பு பாரத்தில் நான் குறிப்பிட்டிருந்த இரண்டு வாரத்தை அவன் ஒரு வாரமாக மாற்றினான், வழக்கமான ஞாயிறு விடுப்பையும் சேர்த்து. மிகுந்த தயக்கத்துடனே அவன் சொன்னான், “குறிப்பிடப்பட்ட நாளில் வேலைக்கு திரும்பிவிடுவாய் என எதிர்பார்க்கிறேன்.”

“நிச்சயமாக. நிச்சயமாக.” என்றேன் நான். தவறினால், எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையை எங்களால் ஈடுசெய்ய இயலாது. அதன்பிறகுதான், அவன் விடுப்பு பாரத்தில் கையொப்பமிட்டு, விடுப்பில் செல்ல அனுமதித்தான்.

நான் இனி ஒற்றை மனிதனில்லை. எங்களுக்குக் குடும்பம் உண்டு. மாதத்தொடக்கத்தில் சம்பளம் கிடைத்ததும், இனிமேல் நண்பர்களுடன் உணவு விடுதிக்குச் செல்ல முடியாது. என்னால் இனி ஊதாறித்தனமாக செலவுசெய்து, ஒரு பேக்கெட் சிகரெட் வாங்க பணமில்லாமல், பாக்கெட்டில் துழாவியும் மேசை இழுப்பறைகளைத் திறந்தும் சில்லறைக் காசுகளைத் தேடுவது ஆகாது. ஆனால் நான் அதற்குள் எல்லாம் செல்ல விரும்பவில்லை. நான் சொல்ல விரும்புவது, நான் – நாங்கள் – மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எங்கள் குறுகிய வாழ்க்கையில் சந்தோசமென்று பெரிதாக ஒன்றுமில்லை. வங்வங்கும் நானும் பல ஆண்டுகள் சிரமத்தை அனுபவித்துள்ளோம் என்பதால், வாழ்க்கை என்பது என்னவென்று படித்துள்ளோம். இந்த நாட்டில், சீர்குலைவான ஒரு காலகட்டத்தில், எங்கள் குடும்பங்கள் அநேக துரதிர்ஷ்டங்களை எதிர்கொண்டு துன்புற்றுள்ளன. எங்கள் தலைமுறையின் தலைவிதியை நாங்கள் கசப்புற்ற மனநிலையிலேயே அணுகினோம். நான் அதற்குள்ளும் போக விரும்பவில்லை. நாங்கள் தற்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்பதே முக்கியம்.

அரை மாத விடுப்பு மட்டுமே. அரை தேனிலவானபோதிலும், எங்களுக்கு இதனைவிடவும் இனிமையானதாக இது இருக்க இயலாது. அது எத்துணை இனியது என்பதை நான் விவரிக்கப்போவதில்லை. உங்கள் அனைவருக்கும் அது தெரியும். நீங்களும் அதை அனுபவித்திருப்பீர்கள். ஆனாலும், இந்த குறிப்பிட்ட இனிமை எங்களுக்கு மட்டுமே உரியது. நான் உங்களிடம் சொல்ல விழைவது பரிபூரண கருணை என்கிற கோயிலைப் பற்றித்தான்; ‘பரிபூரணம்’ என்பது, ‘பரிபூரண ஒன்றிணைவு’ என்பதாகவும், ‘கருணை’ என்பது, ‘பரிவுமிக்க காதல்’ என்பதாகவும். ஆனால், அந்தக் கோயிலின் பெயர் அத்தனை முக்கியமில்லை. அதுவொரு பாழடைந்த சிதைவுற்ற கோயில். நிச்சயமாக, அதுவொரு புகழ்பெற்ற சுற்றுலா தலமல்ல. உள்ளூர்வாசிகளைத் தவிர்த்து வேறெவரும் அது குறித்து அறிந்திருக்கவில்லை. அவர்களிலும் அதன் பெயரை அறிந்தவர் வெகு சிலராகவே இருக்கக்கூடும் என்கிற ஐயப்பாடும் எனக்குண்டு. மேலும், நாங்கள் சென்று காண நேர்ந்த அந்தக் கோயில், மக்கள் நறுமண பொருட்களை எரிக்கவும் வழிபடவும் செய்யும் கோயில்களில் ஒன்றாகவும் இல்லை. அங்கே சாக்கடையில் கிடந்த ஒரு கல்வெட்டிலிருந்த மங்கிய எழுத்துக்களை கவனமாக ஆராயாமலிருந்திருந்தால், அந்த கோயிலுக்கு ஒரு பெயர் உண்டு என்பதே தெரியாமலாகி இருக்கும். உள்ளூர்வாசிகள் அதனை ‘பெரிய கோயில்’ என்றே குறிப்பிட்டனர். ஆனால், ஹங்ஜௌவிலுள்ள ஆன்மாவுக்கான இளைப்பாறல் என்கிற கோயிலோடும், பெய்ஜிங்கிலுள்ள இளநீல பச்சை மேக கோயிலோடும் ஒப்பிட்டால் அது ஒன்றுமில்லை.

நகருக்கு சற்றே தள்ளி, ஒரு பழைய இரு அடுக்கு மாடி கட்டிடமாக, பறக்கும் கூரை நுனியும், சிதைவுற்ற ஒரு கற்கதவின் எஞ்சிய பகுதிகள் அதன் எதிரிலுமாக, ஒரு மலை மேல் இருந்தது. அதன் முற்றத்துச் சுவர்கள் இடிந்துவிட்டிருந்தன. வெளிச்சுவற்றின் கற்களை கிராமத்து மக்கள் வீடு கட்டுவதற்கும், பன்றிக்கொட்டகை அமைப்பதற்கும் எடுத்துச் சென்றுவிட்டிருக்க, ஒரு வட்ட அளவிலான சில சுடப்படாத கற்கள் மட்டுமே மிதமிஞ்சிய களைக்கொடிகள் சூழ கிடந்தன.

சி.மு 03இருந்தபோதிலும், சற்றே தூரத்திலிருந்து அந்த நகரின் ஒரு சிறிய தெருவிலிருந்து பார்க்க, சூரிய ஒளியில் மினுங்கும் அதன் மஞ்சள் நிற கூரையோடுகள் எங்கள் கண்களைக் கவர்ந்தன. நாங்கள் அந்த நகருக்கு வந்து சேர்ந்ததே ஒரு விபத்துதான். நாங்கள் பயணித்த ரயில்,புறப்படுவதற்கான அறிவிப்பு வந்த பின்பும், அநேகமாக பின்னாலிருந்து வந்துகொண்டிருக்கும் விரைவு ரயில் ஒன்று கடக்கும் பொருட்டு பிளாட்பாரத்திலேயே நின்றிருந்தது. அதுவரை, வண்டியில் முண்டியடித்து ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த பயணிகளின் ஆரவாரம் அடங்கிவிட்டிருந்தது. ரயில் பெட்டிகளின் கதவருகே நின்று பேசிக்கொண்டிருந்த அதன் சில மேலாளர்களைத் தவிர பிளாட்பாரத்தில் ஒருவருமில்லை. அந்த நிலையத்திற்கு அப்பால், ஒரு பள்ளத்தாக்கில், பழுப்புநிறக் கூரைகள் விரிந்து சென்றன. அதற்கும் அப்பால், காடுகள் அடர்ந்த சங்கிலித் தொடர் போன்ற மலைகள், இந்தப் பழமையான நகருக்கு ஒரு தனித்துவமான அமைதியைத் தந்திருந்தன.

திடீரென, எனக்குள் அந்த எண்ணம் எழுந்தது. “நாம் இந்த நகரை பார்க்கலாமா?”என்றேன்.

எதிரில் உட்கார்ந்திருந்த வங்வங், என்னைக் காதலுடன் பார்த்து தலையசைத்தாள். அவளது கண்கள் பேசின. ஒருவருக்கொருவர் நுண்ணுணர்வு கொண்டவர்களாதலால், நாங்கள் ஒத்த அலைவரிசையில் தொடர்புற்றிருந்தோம். ஒரு சொல்லுமில்லை. எங்கள் பிரயாணப் பையை எடுத்துக்கொண்டு கதவை நோக்கி ஓடி,பிளாட்பாரத்தில் குதித்த வேகத்தில் இருவரும் சிரித்தோம்.

நான் சொன்னேன், “அடுத்த ரயிலில் புறப்பட்டுச் செல்வோம்.”

“புறப்படாவிட்டாலும் எனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை,” என்றாள் வங்வங்.

மேலும், அது எங்கள் தேனிலவு பயணம். ஓரிடத்தின் மேல் காதல் வசப்பட்டால், நாங்கள் அங்கே செல்வோம். அந்த இடத்தின் மேல் பிரியம் தொடர்ந்தால், அங்கே கூடுதல் நாட்களுக்குத் தங்குவோம். எல்லா நேரங்களிலும், செல்லுமிடமெல்லாம், புதுமணத் தம்பதிகளின் பூரிப்பு எங்களைத் தொடர்ந்தது. உலகத்திலேயே அதிக சந்தோசமான மனிதர்களாக நாங்கள் இருந்தோம். வங்வங் என் கையைப் பற்றியிருந்தாள்: நான் எங்களின் பயணப் பையை பிடித்திருந்தேன். அந்த ரயில்வண்டி மேலாளர்களும், வண்டியின் மறுபக்க சாளரங்கள் வழி பார்த்துக்கொண்டிருந்த எண்ணிலடங்கா ஜோடிக் கண்களும் எங்களை பொறாமையுடன் பார்க்க வேண்டும் என நாங்கள் ஆசைப்பட்டோம்.

மாநகருக்கு மாற்றம் பெற வேண்டி, இனி நாங்கள் எங்களை வலிந்து வெறித்தனமாக துரத்த வேண்டியதில்லை. எங்கள் பெற்றோரிடமும் இனி இரந்து உதவி கேட்டு நிற்கப்போவதில்லை. மேலும், இனி நாங்கள் எங்கள் வசிப்பிடம் குறித்தோ, வேலை நிலைமை குறித்தோ கவலைப்படத் தேவையில்லை. எங்களுக்கென சொந்தமாக ஒரு அபார்ட்மென்ட் குடியிருப்பு கொண்டிருந்தோம். எங்கள் வீடு: அது மிகப் பெரியதில்லை. ஆனால் வசதியானது. நீ எனக்குச் சொந்தம், நான் உனக்குச் சொந்தம். மற்றும் வங்வங் நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குத் தெரியும்: நமது உறவு இனிமேலும் முறையற்றதல்ல! அதன் பொருள் என்ன? நமது மகிழ்ச்சியில் அனைவரும் பங்குகொள்ள வேண்டும். நாங்கள் மிக அதிகமான பிரச்னைகளைச் சந்தித்துள்ளோம். அதனை முன்னிட்டு உங்கள் அனைவரையும் சிரமப்படுத்தியுள்ளோம். நீங்கள் அனைவரும் எங்களுக்காகக் கவலைப்பட்டுள்ளீர்கள். நாங்கள் எப்படி உங்களுக்கு திருப்பிச் செலுத்துவோம்? திருமணத்திற்குப் பிறகு சில இனிப்பு பண்டங்கள், சிகரெட்டுகள் வழங்கியா? இல்லை. நாங்கள் எங்கள் மகிழ்ச்சியை உங்களுக்குத் திருப்பித் தருகிறோம். நான் சொல்வதில் தவறேதும் இல்லையே?’

அவ்வாறுதான் நாங்கள் பள்ளத்தாக்கில் அமைந்த இந்த அமைதி நிறைந்த பழமை நகருக்கு வந்து சேர்ந்தோம். ஆனால், ரயிலின் சாளரம் வழி நாங்கள் பார்த்தபோது உணர்ந்த அமைதி அங்கில்லை. பழுப்புநிற கூரைகளுக்குக் கீழே, அதன் தெருக்களும், குறுக்குச் சந்துகளும் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருந்தன. காலை ஒன்பது மணி இருக்கும். மக்கள், காய்கறிகள், பாறை குமுட்டி பழங்கள், புதியதாய் பறிக்கப்பட்ட ஆப்பிள், பேரிக்காய் எல்லாம் விற்றுக்கொண்டிருந்தனர். இது போன்ற சிறு நகரங்களில் அதன் தெருக்கள் அகலமாக இருப்பதில்லை. அதனால், கழுதை வண்டிகள், குதிரை வண்டிகள், லாரிகள் எல்லாம் நெருக்கி நெரிசல் மிகுந்துவிட, வண்டியோட்டிகள் சாட்டையை சொடுக்கியும், ஹாரன் ஒலி எழுப்பியபடியும் சென்றனர். தூசு காற்றை நிரப்ப, சாக்கடைநீர் தெறித்து காய்கறி கடைகளுக்கு அருகில் சிதற, உடைந்த குமட்டி பழங்களின் துண்டுகள் தரை எங்கும் சிதறிக் கிடக்க,கொக்கரிக்கும் கோழிகள், அதை வாங்கியவர்களின் கைகளில் சிறகடித்து படபடத்தன: இந்தக் காட்சிகள்தான் எங்களை அந்த  நகருக்கு நெருக்கமாக உணரச் செய்தது.

நாங்கள் பட்டதாரிகளாகக் கிராமப்புறங்களுக்கு வேலை செய்ய அனுப்பப்பட்ட தருணத்தோடு ஒப்பிட இது முற்றிலும் வேறொன்றாக உணரச் செய்தது. இப்பொழுது நாங்கள் வெறும் கடந்து போகும் பயணிகள், சுற்றுலா பயணிகள். இங்குள்ள மக்களுக்குள் இருக்கும் சிக்கலான உறவுமுறைகளோடு எங்களுக்கு எவ்வித தொடர்புமில்லை. தவிர்க்கவியலாதபடி, இது எங்களைப் போன்ற பெருநகரவாசிகளை உயர்குடிகளாக உணரச் செய்தது. வங்வங் என் கையை அழுத்திப்பிடிக்க, நான் அவளுக்கு நெருக்கமாய் சாய, பலரின் கண்கள் எங்கள் மேலிருப்பதை உணர்ந்தோம். ஆனால், நாங்கள் இந்நகரைச் சேர்ந்தவர்கள் அல்ல: நாங்கள் வேறொரு உலகைச் சேர்ந்தவர்கள். நாங்கள் அவர்களைக் கடந்து சென்றோம். அவர்கள் எவரும் எங்களைப் பற்றி கிசுகிசுக்கவில்லை: அவர்கள் அறிந்த மனிதர்கள் பற்றியே கிசுகிசுத்துக்கொண்டிருந்தனர்.

இறுதியில், காய்கறி ஸ்டால்கள் ஏதும் இருக்கவில்லை. சிலபேர் மட்டுமே இருந்தனர். நாங்கள் அந்த மார்க்கெட்டின் ஆரவார ஓசைகளைக் கடந்திருந்தோம். நான் எனது கடிகாரத்திலிருந்து, ரயில் நிலையத்திலிருந்து அந்த பிரதான சாலையைக் கடந்துவர அரைநாழிகை பொழுதே ஆகியிருப்பதைக் கண்டேன். இன்னும் பொழுதிருந்தது. இதற்குள், நிலையத்திற்குத் திரும்பிச் சென்று, அடுத்த வண்டி வர காத்திருப்பது ஏமாற்றமளிக்கும். இதற்குள் வங்வங் இந்த இரவை, இங்கேயே கழிப்பது பற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தாள்.

அவள் ஏதும் சொல்லவில்லை. ஆனாலும், அவளுடைய ஏமாற்றத்தை என்னால் உணர முடிந்தது. பாவனை மிக்க கவன ஈர்ப்பு நோக்கோடு, கைகளை வீசியபடி ஒரு மனிதன் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஒருவேளை, அவன் கட்சி பிரமுகராக இருக்கலாம்.

“மன்னிக்கவும், உங்களால், உள்ளூர் விடுதிக்குச் செல்லும் வழியை எனக்குச் சொல்ல முடியுமா?”நான் கேட்டேன்.

அவன் வங்வங்கையும் என்னையும் ஒருகணம் நோட்டமிட்டு, உற்சாகத்துடன் அதை எங்களுக்குச் சுட்டினான். “அந்த வழி செல்லுங்கள்,” அவன் சொன்னான், “பிறகு, இடது பக்கம் செல்லுங்கள். அந்தச் சிகப்பு மூன்று மாடி கல் கட்டிடம்தான் உள்ளூர் தங்குவிடுதி.” நாங்கள் யாரைத் தேடுகிறோம் என்று கேட்டவன், அவனே எங்களை அங்கே கூட்டிச் செல்ல விழைபவன் போலிருந்தான். நாங்கள் நகரை கடந்து போகும் சுற்றுலாப் பயணிகள் என்பதைச் சொல்லி, இங்குப் பார்ப்பதற்கு உகந்த இடம் ஏதும் உண்டா எனக் கேட்டோம். அவன் தன் தலையைத் தட்டிக்கொண்டான்: இதில் ஒரு பிரச்சினை இருப்பது போல் தோன்றியது.

அது குறித்து சிறிது யோசித்த பிறகு, அவன் சொன்னான், “இங்கு அத்தகைய  கவர்ச்சிகரமான இடம் ஏதுமில்லை. ஆனால், நீங்கள்  பார்க்க விரும்பினால், இந்த நகருக்கு மேற்கே ஒரு பெரிய கோயில் உண்டு. நீங்கள் மலையேற வேண்டும். அது செங்குத்தானது!”

“அது ஒரு பிரச்னையல்ல. நாங்கள் கொஞ்சம் மலை ஏறும் எண்ணத்தோடும் இங்கு வந்துள்ளோம்.” நான் சொன்னேன்.

வங்வங் முந்திக்கொண்டு, “அது சரிதான். எங்களுக்கு மலை ஏற பயமேதுமில்லை.”

அந்த மனிதன் எங்களை அந்த தெருவின் ஒரு வளைவுக்கு அழைத்துச் சென்றான். மலை மேல் சூரிய ஒளி ஒளிரும் கூரையுடன், எங்களுக்கு நேர் எதிரே நின்றது அந்தக் கோயில். பின், வங்வங் அணிந்திருந்த தூக்குச் சப்பாத்தைக் கவனித்து அவன் சொன்னான், “நீங்கள் ஒரு ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்,”

“ஆறு ஆழமா?”நான் கேட்டேன்.

“முட்டிக்கு மேல் வரும்.”

நான் வங்வங்கைப் பார்த்தேன்.

“அது ஒன்றுமில்லை. நான் சமாளித்துக்கொள்கிறேன்.”அவள் எனக்கு ஏமாற்றமளிக்க விரும்பவில்லை.

நாங்கள் அவனுக்கு நன்றி கூறி, அவன் சுட்டிய திசையில் நடந்தோம். தூசு படிந்த அழுக்கு மண் பாதைக்குள் நுழைய, அவளது புதிய உயரமான மெல்லிய பட்டை கொண்ட தூக்குச் சப்பாத்தைப் பார்க்க சங்கடமாய் இருந்தது. இருந்தாலும், அவள் விரைந்து முன்னே சென்றுகொண்டிருந்தாள்.

“நீ உண்மையில் ஒரு சின்ன பைத்தியம்” நான் சொன்னேன், அவளை நெருங்கி சென்று.

“நான் உன்னுடன் இருக்கும் வரை,” உனக்கு நினைவிருக்கிறதா வங்வங்? என்னை அணைந்து நீ அதை சொன்னாய்.

ஆற்றங்கரை நோக்கிச் செல்லும் பாதையில் நாங்கள் நடந்தோம். இருமறுங்கிலும், ஒரு மனிதனைவிட உயரமாக, சோளப்பயிர் நேராக வளர்ந்திருந்தது. நாங்கள் அந்தப் பசுமை கூடாரத்தின் ஊடே நடந்தோம். எங்களுக்கு முன்னாலோ பின்னாலோ எவருமில்லை. வங்வங்கை இழுத்து அணைத்து மென்மையாக முத்தமிட்டேன். அதிலென்ன தவறு? அவள் அது குறித்து பேச வேண்டாம் என்கிறாள். எனவே வாருங்கள், நாம் திரும்ப அந்த பரிபூரண கருணை கோயிலுக்குச் செல்வோம். அது ஆற்றின் மறுகரையில், மலையின் உச்சியில் இருந்தது. அதன் மினுங்கும் மஞ்சள் கூரை இடுக்குகளில், களைக்கொடிகள் கொத்தாக வளர்ந்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

ஆறு தெளிந்தும் குளிர்மையுடனும் இருந்தது. வங்வங் ஒரு கையால் தனது பாவாடையை தூக்கிப் பிடித்திருக்க, நான் அவளது மறு கையைப் பற்றியபடி அவளது சப்பாத்தையும், எனது தோல் சப்பாத்தையும் ஒரு கையால் பிடித்திருந்தேன். வெறும் கால்களில் ஆற்றைக் கடந்தோம். நான் வெறுங்காலில் நடந்து நீண்ட நாட்கள் ஆகியிருந்தபடியால், எனது பாதங்கள் ஆற்றுப் படுகையிலிருந்த வழுவழுப்பான கற்களுக்கும் கூசியது.

“உனது பாதங்கள் வலிக்கிறதா?” வங்வங்கிடம் கேட்டேன்.

“எனக்குப் பிடித்திருக்கிறது,”நீ மென்மையாய் சொன்னாய். நமது தேனிலவில், நோகும் பாதங்கள்கூட இன்ப அனுபவமே. உலகின் அனைத்து துயரங்களையும், அந்த ஆற்று நீர் அடித்து செல்வதுபோலிருக்க, நாம் ஒரு கணம் நம் இளமைக்குத் திரும்பினோம். குறும்புக்கார சிறுவர்களைப்போல், நாம் அந்த நீரில் விளையாடி குதூகளித்தோம்.

ஒரு கையால், நான் அவளை நிலைகொள்ளச் செய்ய, அவள் ஒவ்வொரு பாறைக் கல்லாக, அவ்வப்போது ஒரு பாடலை முனுமுனுத்தவாறு தாவிச் சென்றாள். ஆற்றைக் கடந்தவுடன், நாங்கள் சிரித்தபடியும் உரக்க குரலெழுப்பியும் மலைச் சரிவில் ஏறியபோது, வங்வங்கின் காலில் ஒரு வெட்டுக் காயம். நான் கலங்கினேன். ஆனால், அவள் அதொன்றும் பெரிதல்ல. சப்பாத்தை அணிந்துகொண்டாள் சரியாகிவிடும் என்று என்னை ஆறுதல்படுத்தினாள். நான் அது என்னுடைய தவறுதான் என்றதற்கு அவள் என்னை மகிழ்விக்க தான் எதை வேண்டுமானாலும் செய்வேன்; காலில் வெட்டுக்காயம் ஏற்பட உடன்படுவது உட்பட என்றாள். சரி சரி, நான் அது குறித்து மேலும் எதுவும் பேசமாட்டேன். ஆனால், நீங்கள்தான் எங்கள் பதற்றங்களை எங்களோடு பகிர்ந்துகொண்ட நாங்கள் மிக மதிக்கும் நண்பர்கள் என்பதால், நாங்கள் எங்கள் மகிழ்ச்சியையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த முறையில்தான், நாங்கள் அந்த மலையிலேறி இறுதியில் அதன் உச்சியில், கோயிலின் முன்புற வாசற்கதவை அடைந்தோம். சிதைவுற்ற முற்றத்து சுவர்களிடையே, சாக்கடையொன்று, பம்பிலிருந்து வடிந்த தெளிந்த நீருடன் ஓடிக்கொண்டிருந்தது. முற்றமாய் இருந்திருக்கக்கூடிய இடத்தில், யாரோ சிறிது காய்கறி பயிர் செய்திருந்தனர். அதன் பக்கமே எருக்குழி. நாங்கள், கிராமப்புறங்களில் எங்கள் உற்பத்தி யூனிட்டுடன் சேர்ந்து எருவை அள்ளிக் கொட்டிய காலத்தை நினைவுகூர்ந்தோம். அந்தச் சிரமமான காலங்கள் ஒழுகிச் செல்லும் நீரைப்போல கடந்துபோய், சிறிது துயரத்தையும் கூடவே சில இனிமையான நினைவுகளையும் விட்டுச் சென்றது. அதில் எங்கள் காதலும் இருந்தது. இந்த அற்புத சூரிய ஒளியில்,  எங்களின் இந்த பாதுகாப்பான காதலில் யாரும் குறுக்கிட இயலாது. இனி யாரும் எங்களை காயப்படுத்த முடியாது.

பெரிய கோயிலுக்கு அருகில், ஒரு இரும்பு நறுமண எரியூட்டி இருந்தது. அது அநேகமாக நகர்த்த இயலாதவாறு மிக கனமாகவும் இருந்தமையால் அது அங்கேயே கோயிலுக்கு துணையாக பிரதான கதவுக்கு முன்னால் காவல் நின்றது. கதவு பூட்டப்பட்டிருந்தது. மக்கிப்போயிருந்த குறுக்கு மரச்சட்டங்களாலான சாளரங்களின் மேல் அட்டைகள் பொருத்தி ஆணியடிக்கப்பட்டிருந்தது. அவையும் மக்கிவிட்டிருந்தன. அந்த இடம், அநேகமாக உள்ளூர் உற்பத்தி யூனிட்டின் கிடங்காக பயன்படுத்தப்படலாம்.

சுற்றிலும் யாருமில்லை. மிக அமைதியாக இருந்தது.கோயிலுக்கு எதிரில், பழமையான ஊசியிலை மரங்களிடையே மலைக்காற்றின் வலியின் முனகலை எங்களால் கேட்க முடிந்தது. தொந்தரவு செய்ய ஒருவருமில்லாதலால், மரங்களின் நிழலிருந்த புற்தரையில் சாய்ந்தோம். வங்வங் எனது கைமேல் தலை சாய்த்திருக்க, நாங்கள் அன்னாந்து, நீலவானத்துள் மறையவிருந்த ஒரு நூலிழை மேகத்தைப் பார்த்தோம். எங்களுடையது, ஒரு விவரிக்க முடியாத சந்தோசம், உண்மையான நிறைவு.

இந்த அமைதியின் போதையில், நாங்கள் தொடர்ந்து அப்படியே இருந்திருப்போம். ஆனால், படிகளிலிருந்து காலடியோசை வர, வங்வங் நிமிர்ந்து உட்கார்ந்தாள். நான் பார்ப்பதற்காக எழுந்து நின்றேன். கற்பாதையில் ஒரு மனிதன், கேட்டைத் தாண்டி கோயிலை நோக்கி வந்துகொண்டிருந்தான். பெரிய உருவம். தலையில் சிக்கலடைந்த கத்தையான தலைமுடி. கன்னத்தில் கத்தரித்து சீர்செய்யப்படாத தாடி. முகத்தில் கடுகடுப்பு. அடர்ந்த புருவங்களின் கீழிருந்து வெறித்த கண்கள், எங்களை அளந்தன. காற்று குளிரத் தொடங்கிவிட்டிருந்தது. அநேகமாக, எங்களின் ஆர்வமிக்க பார்வையைக் கண்டுகொண்டு, அவன் கோயிலின் திசையில், தன் பார்வையை மெல்ல திருப்பினான். பின், கண்களைக் குறுக்கி, மினுங்கும் கூரையில் ஆடிக்கொண்டிருந்த களைக்கொடிகளைக் கவனித்தான்.

சி.மு 01

 நறுமண எரியூட்டி முன்பு நின்றான். ஒரு கையால் அதை ஓங்கி அடித்து ஓசை எழுப்பினான். அவனது விரல்கள் முறுக்கி முரடாக, அதுவும் இரும்பால் செய்யப்பட்டதுபோலிருந்தது. மறு கையில், ஒரு கிழிந்த கறுப்பு நிற பஞ்சுப் பையை பிடித்திருந்தான். அவன் அங்கிருக்கும் காய்கறி தோட்டத்தை பராமரிக்க வந்த கம்யூனைச் சேர்ந்தவனாகத் தெரியவில்லை. வங்வங்கின் தூக்கு சப்பாத்தியையும், புல்லின் மேலிருந்த எங்களின் பயணப் பையையும் கவனித்தபடி, மீண்டும் அவன் எங்களை அளந்துகொண்டிருந்தான். வங்வங் விரைந்து தன் சப்பாத்துக்களை எடுத்து அணிந்துகொண்டாள். பின், எதிர்பாராத வகையில், அவன் எங்களை நோக்கி விளித்தான்.

“நகருக்கு வெளியிலிருந்து வருகிறீர்களா? நீங்கள் இங்கே சந்தோசமாக இருக்கிறீர்களா?”

நான் தலையாட்டினேன்.

“நல்ல பருவநிலை,” என்றான். அவன் பேச விரும்புவதாகப் பட்டது.

அந்த அடர்ந்த புருவங்களுக்குக் கீழிருந்த கண்களின் இறுக்கம் குறைந்திருந்தது. நல்லெண்ணம் கொண்டவனாகத் தோன்றினான். அடிப்பகுதி ரப்பர் டயரால் ஆன, பக்கவாட்டில் சில இடங்களில் வெடிப்புற்று கிழிந்திருந்த தோல் சப்பாத்தை அணிந்திருந்தான். கால்சட்டை நனைந்திருந்தது. நிச்சயமாக அவன் நகரிலிருந்து ஆற்றைக் கடந்து வந்திருக்க வேண்டும்.

“நல்ல குளுமை. காட்சியும் சிறிது அழகாயிருக்கிறது,” என்றேன் நான்.

“உட்காருங்கள். சிறிது நேரத்தில் நான் கிளம்பிவிடுவேன்,”

அவன் ஏதோவொருவகை மன்னிப்பு கோறுவதுபோலிருந்தது. அவனும், புற்தரையில், கற்தரைக்குப் பக்கம் உட்கார்ந்துகொண்டான்.

அவன் பையைத் திறந்தபடி சொன்னான்,” குமட்டி பழம் சாப்பிடுகிறீர்களா?”

“வேண்டாம். நன்றி,”விரைந்து சொன்னேன். இருந்தாலும், ஒன்றை என்னை நோக்கி வீசினான். நான் அதைப் பற்றி, திரும்ப வீச இருந்தேன்.

“அது ஒன்றுமில்லை. இங்கு என்னிடம் இன்னும் அரைப்பை இருக்கிறது,” என்று, பையைத் தூக்கிக் காட்டி, இன்னொரு பழத்தை எடுத்தபடி சொன்னான்.

என்னால், வேண்டாமென்று சொல்ல முடியவில்லை. என்னிடமிருந்த பையிலிருந்து, ஒரு சிற்றுண்டி பொட்டலத்தைப் பிரித்து அவனிடம் நீட்டி, “எங்களது சிற்றுண்டியை சாப்பிட்டு பாருங்கள்,”என்றேன்.

ஒரு சிறு கேக் துண்டை எடுத்து, தன் பையின் மேல் வைத்துக்கொண்டான்.

“இது எனக்கு போதும்,” என்றான் அவன். “நீங்கள் அதை சாப்பிடுங்கள்.” தனது பெரிய கைகளால், குமட்டிப் பழத்தை அழுத்திப் பிழிய, அதன் தோல் விரிசல்விட்டு உடைந்தது. “அவை சுத்தமானவை. நான் அவற்றை ஆற்றில் கழுவினேன்.” சிறிது தோலை வீசியவாறு, வாசலிருக்கும் திசை பார்த்து சத்தம் கொடுத்தான், “போதும், வா. வந்து கொஞ்சம் பழம் சாப்பிடு!”

“ஆனால், நீள கொம்பு வெட்டுக்கிளிகள் உள்ளன இங்கே!” வாசல் கேட்டுக்கு அப்பாலிருந்து ஒரு சிறுவனின் குரல் வந்தது: பின் அந்தச் சிறுவனே ஒரு வலை பொறியை பிடித்தபடி மலைச் சரிவில் தோன்றினான்.

“நிறைய உள்ளன. பிறகு சிலதை உனக்கு பிடித்து தருகிறேன்,”அந்த மனிதன் பதிலளித்தான்.

அந்தச் சிறுவன் எம்பிக் குதித்தவாறு, எங்களை நோக்கி ஓடி வந்தான்.

“பள்ளிவிடுமுறையா?” கேட்டபடி, அந்த மனிதனைக் காப்பியடித்து , பழத்தை உடைத்து துண்டுகளாக்கினேன்.

“இன்று ஞாயிற்றுக்கிழமை. எனவே, அவனை வெளியில் கூட்டி வந்தேன்,”அவன் பதிலளித்தான்.

நாங்கள், எங்கள் விடுமுறையில் மிக ஆழ்ந்துவிட்டிருந்தபடியால், வாரத்தின் எந்த நாள் அது என்பதை மறந்துபோயிருந்தோம். வங்வங், பழத்தை கடித்தபடி என்னைப் பார்த்து, அவன் நல்ல மனிதன் என்பதை எனக்கு உணர்த்தும் பொருட்டு, புன்னகைத்தாள். உண்மையில் உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.

“சாப்பிடு. அது அதோ அந்த அங்கிலும் ஆன்டியும் கொடுத்தது,”என்று, அவனது பையின் மேலிருந்த கேக் துண்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுவனிடம் சொன்னான். அந்தச் சிறுவன் நிச்சயமாக இந்த நகரிலேயே வளர்ந்திருக்க வேண்டும். அது போன்ற ஒரு கேக்கை அவன் பார்த்திருக்கப் போவதில்லை. எடுத்த கையோடு அதைச் சாப்பிட்டான்.

“அவன் உங்கள் மகனா?” நான் கேட்டேன்.

அந்த மனிதன் பதிலளிக்காமல், அந்தச் சிறுவனிடம் சொன்னான், “கொஞ்சம் பழத்தை எடுத்துக்கொண்டு போய் விளையாடு. பிறகு உனக்கு கொஞ்சம் வெட்டுக்கிளிகளை பிடித்து தருகிறேன்.”

“நான் ஐந்து வெட்டுக்கிளிகளை பிடிக்கப்போகிறேன்!” சிறுவன் சொன்னான்.

“சரி. நாம் ஐந்து வெட்டுக்கிளிகளைப் பிடிப்போம்,”

அந்தச் சிறுவன் கையில் வலைப்பொறியோடு ஓடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த மனிதன். கண்களின் விளிம்பில் அழுத்தமான மடிப்புக்கள் தெரிந்தன.

குனிந்து கீழே பார்த்துக்கொண்டு, ஒரு சிகரெட்டை எடுத்தபடி, சொன்னான், “அவன் என் மகனில்லை.” சிகரெட்டை பற்றவைத்து, ஆழ இழுத்தான். பிறகு, எங்களின் ஆச்சர்யத்தை உணர்ந்தவனாய், அவன் தொடர்ந்தான், “அவன் என் அப்பன் வழியில் ஒரு சகோதரனின்… அவனை நான் தத்தெடுக்க விரும்புகிறேன். ஆனால், அது அவன் என்னோடு வந்து இருக்க விரும்புகிறானா என்பதை பொறுத்தது.”

ஒருகணம், நாங்கள் இந்த முரட்டு மனிதனின் உள்ளம் உணர்வுகளால் கொந்தளித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தோம்.

“உங்கள் மனைவி?” வங்வங்கால், கேட்பதை தவிர்க்க முடியவில்லை. பதிலேதுமில்லை. அவன் சிகரெட்டை மீண்டும் ஆழ இழுத்து, எழுந்து புறப்பட்டுச் சென்றான்.

நாங்கள், உறையச் செய்யும் அந்த மலையின் குளிர்காற்றை உணர்ந்தோம். பிரகாசமானசி.மு 02 மஞ்சள் கூரைகளில், வசந்த காலத்தில் முளைத்த பசும்புற்கள், பழைய காய்ந்த புற்களின் அளவுக்கே நின்று, இரண்டுமாய் காற்றில் அசைந்தாடின. கூரையின் நுனியில் தொங்குவதுபோல் தோன்றிய நீலவானத்து மேகமொன்று அந்த கோயிலே சாய்வாய் இருப்பதுபோல் தோன்றச் செய்தது. கூரையின் நுனியிலிருந்த உடைந்த ஓடொன்று, பார்ப்பதற்கு விழுவதற்கு தயாராய் இருப்பது போலிருந்தது. அநேகமாய், அதே நிலையில் அது அங்கே பல ஆண்டுகள் உட்கார்ந்திருக்கலாம், கீழே விழாமல்.

அந்த மனிதன் ஒரு காலத்தில் சுவராக இருந்த கற்குவியல் மேல் நின்று, நீண்ட நேரம் மலைகளையும் பள்ளத்தாக்கையும் வெறித்தவாறு நின்றிருந்தான். தூரத்தில், மலைத்தொடரின் முகடுகள், நாங்களிருந்த மலையை விடவும், உயரமாய் கூர்மை கொண்டிருந்தன. ஆனால், அதன் சரிவில் பயிர்த் தோட்டங்களோ, குடிசைகளோ தென்படவில்லை.

“நீ அதை கேட்டிருக்க கூடாது,” நான் சொன்னேன்.

“ஓ, நிறுத்து.” வங்வங் மனம் குன்றியிருந்தாள்.

“இங்கே ஒரு வெட்டுகிளி இருக்கிறது!”அந்தச் சிறுவனின் குரல், மலையின் மறுபக்கமிருந்து வந்தது. அது தொலைதூரமாய் இருந்தாலும், சிறிது தெளிவாகவே இருந்தது.

அந்த மனிதன், பழப் பையை அசைத்தாட்டியபடி, அந்தத் திசை நோக்கி நடந்து, பார்வையிலிருந்து மறைந்தான். நான் ஒரு கையை வங்வங்கின் தோளில் வைத்து, என் பக்கம் இழுத்தேன்.

“வேண்டாம்.” அவள் திரும்பிக்கொண்டாள்.

“உனது முடியில் சிறிது புல் இருக்கிறது.”நான் விளக்கினேன், அவள் முடியில் சிக்கியிருந்த ஒரு ஊசி இலையை அகற்றியபடி.

“அந்த ஓடு விழுந்துவிடும்போல் இருக்கிறது,” வங்வங் சொன்னாள். அவளும், அங்கே ஆபத்தான முறையில் தொத்திக்கொண்டிருந்த உடைந்த ஓட்டை கண்டுகொண்டிருந்தாள். “அது விழுந்துவிட்டால் நல்லதாக இருக்கும். இல்லை என்றால் அது யாரையாவது காயப்படுத்தலாம்,”அவள் முனுமுனுத்தாள்.

“அது விழுவதற்கு சில காலமாகலாம்,”நான் சொன்னேன்.

நாங்கள், சற்றுமுன் அந்த மனிதன் நின்றுகொண்டிருந்த கற்குவியல் நோக்கி நடந்தோம். பள்ளத்தாக்கின் விரிந்த வேளாண் நிலத்தில், அடர்ந்த வளமையான பச்சை பார்லியும், புரூம்கோர்ன் சிறு தானியமும், அறுவடைக்குக் காத்திருந்தன. எங்களுக்கு கீழே, சரிவின் ஒரு தட்டையான நிலத்தில், சில மண் குடிசைகள், அதன் அடிப்பாதி புதிய பிரகாச வெண் சுண்ணாம்பு பூச்சுடன் நின்றன. கீழ்நோக்கிச் செல்லும் ஒரு சிறிய வளைவான பாதையில், அந்த மனிதன், அந்த சிறுவனின் கையைப் பற்றியபடி, அந்தக் குடிசைகளைத் தாண்டி, பயிர்களின் நடுவே போய்க்கொண்டிருந்தனர். திடீரென, கடிவாளம் விடுபட்ட குதிரைக் குட்டிபோல, அந்தச் சிறுவன் ஓட்டமெடுத்து, பின் நின்று திரும்பி ஓடிவந்தான். அவன் அந்த வலைப் பொறியை, அந்த மனிதனை நோக்கி அசைப்பது போலிருந்தது.

“அந்த மனிதன் சிறுவனுக்கு வெட்டுக்கிளிகள் பிடித்து கொடுத்திருப்பான் என நினைக்கிறாயா?” வங்வங், நீ அதை என்னிடம் கேட்டது நினைவிருக்கிறதா?

“நிச்சயமாக,”நான் சொன்னேன். “நிச்சயமாக.”

“ஐந்து வெட்டுக்கிளிகள்!” நீ குறும்புடன் அதைச் சொன்னாய்.

சரி, அதுதான் எங்கள் தேனிலவுக்கு நாங்கள் சென்று கண்ட பரிபூரண கருணை என்ற கோயில். நான், அதை உங்கள் அனைவருக்குமாக  விவரிக்க விரும்பினேன்.

மூலம் : GAO XINGJIAN (Winner of the nobel prize for literature)

மொழிப்பெயர்ப்பு : சீ.முத்துசாமி

 

2 comments for “அந்தக் கோயில்

  1. Balan Palanisamy
    July 17, 2018 at 10:27 pm

    சுவாரஷ்யமாக சென்று கொண்டிருந்த கதை திடீரென்று முடிவுற்றது ஒரு சிறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான தேனிலவு அனுபவும் அந்த முரட்டு மனிதனின் வருகையால், சற்று திசை திருப்பப் பட்டதாக உணர்கிறேன். எனினும் நல்ல கதை ஓட்டம். நன்றி.

  2. Turga
    July 21, 2018 at 6:06 am

    Moliy peyarpu, moly meruktra pattiruntal inum sirappu…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...