பல நூற்றாண்டுகளாக, பெண் உரிமைக்கும் அவர்களுக்கான சுதந்திர வெளிக்கும் முக்கியத்துவம் கொடுக்காத சவூதி அரேபியா இன்று பல மாற்றங்களை கண்டு வருவதாக ஊடகங்கள் சொல்கின்றன. சவூதி மன்னன் சல்மான் தலைமையில் நடக்கும் மாற்றத்தின் வேகமும் அவை மேற்கத்திய செய்தி ஊடகங்களில் முதல் பக்கச் செய்திகளாகக் காட்டப்படுவதும் எத்தனை நாள் நீடிக்கும் என்ற சந்தேகங்களை பல அரசியல் பார்வையாளர்கள் எழுப்பி வருவதாக ‘தி அட்லான்டிக்’ இணையத்தளம் கூறுகிறது. பெண்கள் மீதான பல கட்டுப்பாடுகளைத் தளர்த்திவரும் சல்மானின் ஆட்சியில் புரட்சி நடைபெறுவதாக உலகப் பார்வைக்குக் காட்டப்படாலும், இம்மாற்றங்கள் தொடருமா என்ற சந்தேகமும் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் குலைந்து மீண்டும் பெண்களின் நிலை பழையபடி கட்டுப்படுத்தப்படலாம் என்ற ஐயத்தையும் அரேபியப் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர். மன்னன் சல்மானுக்கு நாட்டு மக்களிடமிருந்து பெரிய ஆதரவு இல்லாதது இவ்வெண்ணத்துக்கு முக்கிய காரணம்.
2018ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் திகதி, சவூதியில் பெண்களுக்கு காரோட்ட அனுமதி அளிக்கப்பட்ட செய்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தாலும், மன்னன் சல்மான் பெண்கள் விடுதலைக்கு முன்னுரிமை அளித்து இதனைஅறிவிக்கவில்லை; மாறாக பெண்கள் மூலம் தனது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் பெண்களுக்கான சட்டங்களில் இருக்கும் இரும்புப்பிடிகளைத் தளர்த்துகிறார் என்று இளைஞர்களிடமிருந்து கருத்துகள் எழுந்தவண்ணம் உள்ளன. பெண்களை கார் ஓட்டுவதற்கும், வேலைசெய்வதற்கும் அனுமதிப்பது இருவருமானம் கொண்ட குடும்பங்களை உருவாக்குவதேயாகும் என்ற கருத்து இளைஞர்கள் மத்தியில் பரவலாகி உள்ளது. கார்களுக்கான புதிய சந்தைகள், பெட்ரோல் பயன்பாடு என்று பல துறைகள் பெண்களால்பொருளாதார முக்கியத்துவம் அடைவதற்கான வாய்ப்புகள், சட்டங்கள் தளர்த்தப்படுவதால் உருவாகியுள்ளன என்ற உண்மையை மறுப்பதற்கில்லை.
ஒருபுறம் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், மறுபுறம் அந்நாட்டின் சட்ட வன்முறைகள் குறித்து அரண்மனை மௌனமாக இருப்பதை மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்படுவது நடப்பில் இருப்பதை பலரும் சாடுகின்றனர்.
இந்தச் சிறைப்பிடிப்பை வெளி உலகத்திற்கு, குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளிடம் நியாயப்படுத்தி வருவதாக மன்னர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. ஜூன் 28ஆம் திகதி, அல்ஜசீரா வெளியிட்டிருந்த செய்தியில், எழுத்தாளரும் சவூதியின் பெண் உரிமைப் போராளியுமான ஹட்டூன் அல் ஃபசீ (Hatoon al-Fassi), சவூதி போலிசாரால் கைது செய்யப்பட்டார் என்று தகவல் வெளிவந்தது. பெண்களின் உரிமைகளுக்காக நெடுங்காலமாகப் போராடி வரும் இவர், மாநகரத் தேர்தலுக்காகக் குரல் கொடுத்தவர். பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில், எதிர்ப்புகளுக்கு இடையில் கார் ஓட்டிய முதல் பெண் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற மே மாதம், சந்தேகத்துக்குரிய அந்நியநாட்டவர்களுடன் அவர் தொடர்பு கொண்டிருப்பதாகவும் எதிரி தேசங்களுக்கு நிதி உதவி செய்துவருவதாகவும் தேடல் நடவடிக்கையை முடுக்கி விட்டிருந்த அரசாங்கத்தின் தொடர் நடவடிக்கையாக ஹட்டூனின் கைது பேசப்படுகிறது.
அஸ்பென் நிறுவனம், “தி அட்லாண்டிக்” இணையத்தளம் வழி நடத்தியஅஸ்பென் யோசனைகள் விழாவில் (Aspen Ideas Festival) பேசிய ஹாலா அல்டோசாரி, (இவர் ஹார்வர்ட் ராட்க்ளிஃப் கல்விக் கழகத்தில் பெண்கள் உரிமைப் பிரிவில் பணிபுரிபவர்) பெண்கள் வாகனமோட்ட விதித்திருந்ததடைச் சட்டத்தைஅரசு மாற்றிக்கொண்டாலும், பெண்களின் மேல் திணிக்கப்பட்டிருக்கும் சுதந்திரமான நடமாட்டக்கட்டுப்பாட்டுச் சட்டங்கள் இன்னும் நடப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஆகவே சவூதியில் நடந்து வரும் பெண்களுக்கான சீர்திருத்தம் அவர்களுக்கு முழுமையான நன்மையைத் தரவில்லை. அவர்களுக்கான முழுச் சுதந்திரம் இன்னும் அவர்களுடைய குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களின் ஒப்புதலைச் சார்ந்தே இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
பெண்கள் ஆண்களை எதிர்த்தோ அல்லது அவர்களின் ஒப்புதல் இன்றியோ எந்த முடிவையும் எடுக்க முடியாது என்ற பாதுகாப்பு விதிமுறை இருக்கும் வரையிலும், பெண்களின் சுதந்தம், கொள்கை அளவில் மட்டுமே இருக்க முடியும். ஆகவே அந்நாட்டின் பெண் உரிமை இயக்கங்கள் இந்தச் சட்டத்தை நீக்குமாறு மன்னரிடம் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
அப்பா, அண்னன், தம்பி, மாமா என யாராவது உறவு சம்பந்தந்தப்பட்ட துணையுடன் மட்டுமே, ஒரு பெண் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகிறாள். குடும்ப வன்முறை, பாலியல் வன்முறைக்கு பலியான ஒரு பெண் போலிசில் புகார் செய்வதற்கு பாதுகாப்பில் இருக்கும் ஆணின் ஒப்புதலைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பெண்கள் புகார் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். சில சமயங்களில் பாதுகாக்கும் ஆண்களே அந்தப் பெண்களைப் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்துகின்றனர். இந்த நடப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்று அரசியல் அறிவியலாளர் எல்ஹாம் மானே(Elham Manea) Deutsche Well-இல் எழுதிய பத்தியில் குறிப்பிடுகிறார்.
பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதி, வேலைக்கான அனுமதி, நோய்மையினால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள ஆண்களிடம் அனுமதியைக் கோருதல் போன்ற பெண்கள் பாதுகாப்பு விதிமுறைகளில் மே 2017-இல், மன்னன் சல்மான் சில தளர்வுகளைக் கொண்டு வந்துள்ளார். நடைமுறையில் இருந்த விதிகளைத் தளர்த்தி இருக்கிறார். இந்தப் பாதுகாப்பு விதிமுறையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர சவூதி அரேபியப் பெண் உரிமை இயக்கங்கள், ஊடகங்கள் வழியாக பரப்புரையை முடுக்கி உள்ளனர். “எனக்கு நானே பாதுகாவலன்” (“#IAmMyOwnGuardian”.) எனும் பரப்புரை மூலம் அரேபிய சமூகத்தில் பெண்களுக்கான உரிமையையும், சுதந்திரத்தையும் நிலைநிறுத்தும் முயற்சிகளைப் பெண் உரிமை இயக்கங்கள் நடத்தி வருகின்றனர்.
பெண்களுக்கான சுதந்திரக் குரலாக ஒலித்து வரும் ஊடகங்கள் மத்தியில் சினிமாத் துறையும் பெரும் பங்காற்றி வருகின்றன. மனித உரிமை, பெண் உரிமை, பெண்ணியம், பெண் சுதந்திரம் போன்ற கருக்களைக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் அனைத்துலக ரீதியில் கவனிக்கப்படுவதால் தகவலை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்கக்கூடிய ஒற்றனாக சினிமா பயன்படுகிறது. ஆனால் சினிமாவை முழுமையாகத் தடைசெய்திருக்கும் தீவிர மதவாதத்தைக் கொண்ட பெரும்பகுதி நாடுகளில் நடக்கும் அடக்குமுறைகளை, உலக மக்களுக்குத் திரையில் காட்டிய இயக்குனர்கள் பல கெடுபிடிகளையும், சவால்களையும் தாண்டித்தான் செயல்பட்டுள்ளனர். சிலர் சிறையிலும் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் அடிப்படைவாதிகளால் கொலைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
35 வருடங்களுக்குப் பிறகு சினிமாவுக்குத் தடையை நீக்கியுள்ளது சவூதி அரேபிய அரசு. இஸ்லாம் பிறந்த நாடான சவூதி அரேபியாவில், பெண்கள் பொதுவில் உறவுக்கார ஆண்களின் துணையின்றித் தனியாக நடமாடுவதை அனுமதிக்காத சூழலில் ஹைஃபா அல் மன்சூர் (Haifaa Al Mansour) சவுதி அரேபியாவில் முதல் பெண்திரைப்பட தயாரிப்பாளராகவும்,அந்நாட்டின் மிக முக்கியமான சினிமா ஆளுமையாகவும் தோன்றியிருக்கிறார். கெய்ரோவில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில்இலக்கியத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்கும் இவர், சிட்னி பல்கலைக்கழகத்தில் இயக்கம், திரைப்படம் சார்ந்த துறையில் முதுகலைப் படிப்பை முடித்தார்.
மூன்று குறும்படங்கள் மூலம் அனைத்துலகக் கவனத்தை ஈர்த்த ஹைஃபா, சவூதி சமூகத்தில் பேச அஞ்சப்படும் சகிப்புத்தன்மை, பழமைவாத ஆபத்துக்கள், பாரம்பரியம், கட்டுப்பாடான கலாச்சாரம் போன்றவை பற்றி சவூதிமக்கள் எதிர்வினைப்பார்வையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியங்கள் தொடர்பான விவாதங்களை நடத்தியுள்ளார். கவிஞர் அப்துல் ரகுமான் மன்சூரின் மகளான ஹைஃபா, தமது தந்தை ஒரு முற்போக்குவாதி என்று குறிப்பிடுகிறார். சுதந்திரமாக வளர்வதற்கான வாய்ப்புகளை தந்தை அளித்திருந்ததாக ‘த கார்டியன்’ இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். “நான் பெண்ணாக இருப்பதால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணமே எனக்குத் தோன்றவில்லை,” என அந்த நேர்காணலில் கூறும் அவர், தம் வீட்டிலும் ஒரு பச்சை நிற சைக்கிள் இருந்ததாகவும் அதனை ஓட்டுவதற்கான முழு சுதந்திரத்தை தாம் அனுபவித்திருப்பதாகவும் கூறும் இடம் கவித்துவமானது.
வேனுக்குள்ளிருந்து வாட்ஜ்டா (Wadjda) படப்பிடிப்பு
சவூதி அரேபிய திரைப்படம் வாட்ஜ்டா. 2012-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இப்படம், சவூதி நாட்டுப் பெண் இயக்குநரால் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும். அந்நாட்டின் தலைநகரமான ரியாட்டில் படமாக்கப்பட்ட இப்படத்தின் காட்சிகள் பல சிக்கல்களுக்கு இடையில் இயக்குநரால் பதிவாக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் ஆண்களுடன் கலந்து பணிபுரிவதை தடைசெய்கிறது சவூதி நாட்டின் விதிமுறைகள். இந்நிலையில் பொது இடங்களில் படமாக்கப்பட்ட காட்சிகளை இயக்குநர் வேனுக்குள் இருந்துகொண்டே, கதாபாத்திரங்களுடன் வாக்கிடோக்கி தொடர்புக் கருவி மூலமாக தொடர்பு கொண்டு இயக்கியுள்ளார். பல சிரமங்களை எதிர்கொண்டு தயாரிக்கப்பட்ட இப்படம் உலகத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றது.
இப்படத்தில் காட்டப்படும் மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள் படத்தின் கதையை நகர்த்திச் செல்கிறார்கள். சிறுமி வாட்ஜ்டா. வாட்ஜ்டாவின் தாய் மர்கூக். மதப் பள்ளியின் தலைமை ஆசிரியை உசா.
வாட்ஜ்டா
பெண்களுக்கான உரிமையையும் சுதந்திரத்தையும் தேடும் பெண்ணாக வாட்ஜ்டா திகழ்கிறாள். சைக்கிள் ஓட்டத் தடை விதித்திருக்கும் சமூகத்தின் பழமைவாதங்களை எதிர்த்து தான் ஆசைப்படும் பச்சை நிற சைக்கிளை வாங்க வைராக்கியம் கொள்கிறாள் வாட்ஜ்டா. அதற்காகப் பணம் சேர்க்கிறாள். அவள் தினமும் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவள் விரும்பும் அந்த பச்சை நிற சைக்கிளை வாங்கிவிட வேண்டும் என்று லட்சியம் வளர்ந்து உந்துகிறது. சைக்கிளை வாங்கி, நண்பன் அப்துல்லாவுடன் போட்டிபோட்டு அவனை சைக்கிள் ஓட்டத்தில் முந்த வேண்டும் என்று தீவிரமாகச் சிந்திக்கிறாள். சைக்கிள் வாங்க வேண்டும் எனும் அவளுடைய விருப்பத்தை அவளுடைய அம்மா ஆதரிக்கவில்லை. பெண்கள் சைக்கிள் ஓட்டுவதைச் சமூகம் அனுமதிக்காது என்பதால் வாட்ஜ்டாவின் விருப்பம் நிராகரிக்கப்படுகிறது. சைக்கிளை வாங்கவேண்டும் என்ற இலக்கில், சுயமாகப் பணம் ஈட்டுவதில் முனைப்புக்காட்டுகிறாள் வாட்ஜ்டா. சக மாணவர்களுக்கு அலங்கார கைவினை அணிகலன்கள் செய்து தருகிறாள். பல இசைகளைக் கலந்து கலப்புப் பாடல்களைப்பதிவு செய்து தருகிறாள். பணத்தை இவ்வகையாகச் சேர்க்கிறாள் வாட்ஜ்டா. இவளுடைய இந்த நடவடிக்கைகளுக்கு கடுமையான கட்டுபாடுகளை விதிக்கும் தலைமை ஆசிரியர் உசா, அவள் இஸ்லாமியப் பெண்களின் நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகிறார். அவள் மேல் கட்டொழுங்கு விசாரணை நடத்துகிறார்.
வாட்ஜ்டா கூர்ஆன் போட்டியில் கலந்துகொள்ள ஆசைப்படுகிறாள். ஏற்கனவே தலைமை ஆசிரியையுடனான சிக்கலைத் தவிர்க்க அவரிடம் மன்னிப்புக் கேட்கிறாள். போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறாள். விடாமுயற்சியுடன் பயிற்சி செய்து போட்டியில் வெற்றி பெறுகிறாள். கட்டுப்பாடுகளுக்கு எதிராகவே நடந்துகொள்ளும் மாணவியாக தலைமை ஆசிரியரால் பார்க்கப்பட்ட யோ, கூர்ஆன் போட்டியில் முதல்நிலையில் வந்து அவர் மனதில் உயர்கிறாள். அவளுடைய விடாமுயற்சியை சபையில் பாராட்டிப் பேசிய தலைமை ஆசிரியர், கிடைக்கும் பரிசுப் பணத்தை என்ன செய்யப் போகிறாய் என்று கேட்க, “சைக்கிள் வாங்குவேன்” என்ற அவள் கூறிய பதிலால் அரங்கம் சிரிக்கிறது.
“என்ன சைக்கிள் வாங்குவாயா?” எனக்கோபத்துடன் தலைமையாசிரியர் கேட்க, “எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியும் என்பதால் ‘பயிற்சி சக்கரம்’இல்லாத சைக்கிளை வாங்குவேன்,” என்கிறாள்வாட்ஜ்பா நம்பிக்கையாக.
“சைக்கிள் பெண்களுக்கான விளையாட்டுப் பொருள் அல்ல. குறிப்பாக, ஆன்மாவையும், கௌரவத்தையும் காக்கும் நல்ல நடத்தை கொண்ட பெண்களுக்கு இது ஆகாது. நான் உறுதியாகச் சொல்கிறேன். இதனை உன் வீட்டார் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இப்பணத்தை பாலஸ்தீன சகோதரர்களுக்கு நிதி உதவியாகக் கொடுப்பது சிறந்தது,” என்று கூறி வாட்ஜ்டா வென்ற 1000 ரியால் பணம் அவளிடமிருந்து பறிக்கப்படுகிறது.
ஆம்! பழமைவாதம் சாத்தானிடமிருந்து பெண்களின் உரிமைகளும் கனவுகளும் பறிக்கப்படுவதைப்போல வாட்ஜ்டாவின் பணம் பறிக்கப்படுகிறது. ஆனால் அவள் அடங்கிப்போன குணம் கொண்டவளல்ல. அவள் தன் விடுதலைக்காக சைக்கிளைத் தேடவில்லை; விடுதலையடைந்ததின் அடையாளமாகவே சைக்கிளைத் தேடுபவளாகவே திரைப்படம் முழுக்க பவனி வருகிறாள்.
சைக்கிள் நண்பனாக வரும் அப்துல்லாவின் உறவினருடைய பெரிய படத்தைப் பார்க்கிறாள் வாட்ஜ்டா. அவருடைய முறுக்கு மீசை பெரியதாக இருப்பதைப் பார்த்து, அந்த மீசை சவரம் செய்யும் சோப்பு விளம்பரத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்கிறாள். அது உண்மையான மீசை. ராஜாளி பறவை அதன் மீது உட்காரும் என்று ஆணின் பலத்தை சிறுவன் அப்துல்லா நிறுவுகிறான். பின்னர் ஒரு காட்சியில் அப்துல்லா தம்முடைய உறவினரைப்பற்றி பெருமையாக வாட்ஜ்டாவிடம் கூறுகிறான். “ரேடியோவில் என் அங்கிள் புகழ்பெற்ற கூர் ஆன் ஓதுவாருடன் பேசுவார். அது உன் இதயத்தை கரையச் செய்துவிடும்” என்று கூறியபோது “உன் அங்கிள் என் அம்மா பாடுவதைக் கேட்டிருக்க வேண்டும். என் அம்மாவுக்கு சொந்த ஒலியலை இருந்திருந்தால் புகழ்பெற்ற பாடகியாகி இருப்பாள்” என்று கூறுகிறாள் வாட்ஜ்டா. உண்மையில் அவள் தன் அம்மா பாடகியாகவேண்டும் என்றே விரும்புகிறாள்.
மர்கூக் வீட்டில் பாடிக்கொண்டிருக்கும்போது வாட்ஜ்டா தாயைப் பார்த்து இப்படி கேட்கிறாள், “நீ ஒரு பாடகியாக ஆகவேண்டும் என்று ஆசை பட்டதுண்டா?”
“நானா? பாடகியா? அது இறைக்குத் தடையானது” என்று மர்கூக் பதில் அளிக்கிறாள். திறமையும், ஆசையும்கொண்ட ஒரு பெண்ணின் எதிர்காலத்தை அர்த்தமற்ற மத நம்பிக்கைகள் கனவை எட்டவிடாமல் செய்து விடுகிறது என்று இக்காட்சி பேசுகிறது. புர்காவின் துவாரங்கள் வழியே உலகத்தின் காட்சிகளை உள்ளிருந்து ரசித்துக்கொண்டிருப்பதைப்போல வீட்டில் இருக்கும் கண்ணாடிக்கு முன் நின்று தம்முடைய நிர்வாண அங்கங்கங்களைப் பார்த்து ரசித்துப் பரவசமடைகிறது பெண் மனம். வாட்ஜ்டா அந்த முடக்குவிசைக்கு அடங்காதவள் என்றே இயக்குநர் பல இடங்களில் காட்சிப்படுத்துகிறார்.அவள் எப்போதும் எதற்கும் தன்னையும் தன் அன்னையையும் மட்டுமல்ல பெண் அடையாளத்தையும் விட்டுத்தர தயாராக இல்லை.
குடும்ப பாரம்பரிய பெயர் வரிசையில் (Family Tree) பெண் வாரிசுகளுக்கு இடமில்லை என தனது அப்பாவின் பரம்பரை வரிசையில் தனது பெயர் இடம்பெறவில்லை என்பதைப் படத்தைப் பார்த்து அறிகிறாள். அப்பாவின் பெயருக்குப் பக்கத்தில் தனது பெயரை ஒரு தாளில் எழுதி ஒட்டிவைக்கிறாள் வாட்ஜ்டா. ஆனால் மறுநாள் அந்தத் தாள் மேசை மேல் வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறாள். குடும்பம் என்பது ஆண் மட்டுமே என்ற பழக்கவழக்கங்கள் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இயக்குநர் வாட்ஜ்டா மூலம் தொடந்து அறிவித்தபடி இருக்கிறார்.
மர்கூக்
இஸ்லாத்தில் ஆண்கள் பலதார திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்யலாம். இதனை ஆங்கிலத்தில் போலிகாமி என்பார்கள் (Poligamy). இந்த நிலையை எதிர்கொள்ளக்கூடிய பெண்கள் உளவியல்பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதை மர்கூக் கதாபாத்திரம் நுண்மையாகச் சித்தரிக்கிறது.
மதத்தின் பெயரால் பெண்களுக்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை சடங்காகக்கடைபபிடிக்கும் வாட்ஜ்டாவின் தாய் மர்கூக்,தன் கணவனை வேறொரு பெண்ணிடம் இழந்துவிடக்கூடாது என்று பதற்றம் நிரம்பிய மனதுடனே நாட்களைக் கடக்கிறாள். அது அவளுடைய மனம் மட்டுமல்ல. அந்தச் சூழலில் வாழும் அச்சமூகத்தின் மனம். ஆனாலும் தன் முயற்சியில் அவள் தோல்வி அடைகிறாள். கணவனுடனான காதலைக் காப்பாற்ற நினைக்கும் பெண்ணின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்காத கணவனின் குடும்பம், ஆண் குழந்தையைப் பெற்றுத்தர முடியாத இயலாமையைப் பெரிதுபடுத்துகிறது.
ஆண் வாரிசுகளைப் பெற்றுத் தரக்கூடிய பெண்களுக்கு முதலிடம் தரும் குடும்பங்களில் மணவாழ்க்கையைக் காப்பாற்றப் போராடும் பெண்களின் மனச்சிக்கலைப் பிரதிபலிக்கிறது மர்கூக் கதாபாத்திரம்.
வாட்ஜ்டாவின் அப்பா, மர்கூக்குக்குக் கணவனாகவும் வாட்ஜ்டாவுக்கு அப்பாவாகவும் பெயரளவில் மட்டுமே நடந்துகொள்வதைக் காணலாம். கூர்ஆன் போட்டியில் வெற்றி பெற்ற மகளை உதட்டளவில் பாராட்டி அணைக்கும் அவனுக்கு, அவள் சொல்ல வந்த ஏமாற்றத்தைக் காது கொடுத்துக் கேட்க அவகாசமில்லை. அவனுக்காகச் சமைத்தும் தலைப்பாகையை இஸ்திரி போட்டும் தரும் மனைவியின் காதலைப் புரிந்துகொள்வதில் உவப்பில்லை. “உன் அம்மாவிடம் சொல், நான் அவளைக் காதலிக்கிறேன் என்று,” என மகளிடம் கூறிய அவன், மறுநாள் மறுமணத்திற்குத் தயாராகிறான். ஆண் ஆதிக்கம் என்பது வன்முறையும் அடக்குமுறையும் மட்டுமல்ல. திட்டவட்டமாக நிரூபிக்க முடியாத அலட்சியமும்தான். இந்த அலட்சியம் அரூபமானது. புற வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் மனைவிக்கு வழங்கி அவளை மிக அந்தரங்கமாக அலட்சியம் செய்ய ஆணால் முடியும். அதற்காக பெண் காட்டும் எதிர்வினைகள் பல சமயங்களில் அர்த்தம் இல்லாததாகிவிடுகின்றன. இந்த ஆணாதிக்கத்தால் பாதிக்கப்படும் பெண்ணின் பிரதிநிதியாக மர்கூக் கதாபாத்திரம் அமைந்துள்ளது.
உசா
சிறுமிகளைக் குழந்தைகளாக சவூதி உலகம் பார்ப்பதில்லை. அவள் ஆணுக்கு மணம் முடிப்பதற்காக வளர்க்கப்படும் ஒரு மனிதப் பிராணியாக இருக்கிறாள். அதற்காக அவள் ஒழுக்கக் கல்வியின் மூலம் தயார் படுத்தப்படுகிறாள். ஒரு வலையைப்போல் இருக்கும் துணியால் மூடிக்கொண்டு வெளியே நடந்து செல்லும் பெண்கள், அந்த வலைக்குள் இருக்கும் சிறு சிறு ஓட்டைகளின் வழி உலகத்தைப் பார்க்கிறார்கள். பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை வடிவிலான அடக்குமுறையை ஒழுக்கமுள்ளவர்களுக்கான ஆடை நெறி என்று கற்பிக்கின்றனர். ஆனால் மனித மனம் இதற்கு அடங்குமா? பெண் விடுதலையின் சின்னமாக வரும் வாட்ஜ்டா, தலையையும், முகத்தையும் மறைக்கமறுக்கிறாள்.
அவளுடைய மதப்பள்ளி ஆசிரியர் உசா இவளின் செய்கை குறித்து பலமுறை கடிந்து கொள்கிறாள். ஒரு காட்சியில் மாணவர்கள் மகிழ்ச்சியாகப் பேசி சிரித்துக் கொண்டிருக்கும்போது, சத்தம் போட்டுச் சிரிக்காதீர்கள் என்று உசா கண்டிக்கிறாள். வெளியில் இருக்கும் ஆண்களுக்கு பெண்களின் குரல் கேட்டுவிடக்கூடாது. பெண்ணிலிருந்து வெளிப்படும் உரத்த குரல் அவளை நிர்வாணமாகக் காட்டுவதாகும் என்று கடிந்துசொல்கிறாள். தலையில் முக்காடு இல்லாமல் இருக்கும் வாட்ஜ்டாவிடம் முக்காடு எங்கே என்று கேள்வி எழுப்புகிறாள். இனி முக்காடு இல்லாமல் வந்தால் உன்னை வெயிலடிக்கும் இடத்தில் அமரவைத்து விடுவேன் என்கிறாள் ஆசிரியை.
மதப் பள்ளிக்கூடங்கள் மாணவர்களுக்குப் போதிக்கும் இடங்களாகவும், அவர்களின் ஒழுக்கத்தைக் கண்காணிக்கும் காவல் நிலையமாகவும் இயங்குகின்றன. பேச்சுரிமைக்கு இங்கே இடமில்லை. கற்பனை வளத்திற்கு ஆதரவில்லை. விளையாடுவதற்கு அனுமதியில்லை. சிரிக்கக்கூடாது, அதிகாரத்துக்கு எதிராக கேள்வி எழுப்பக்கூடாது, தலையைத் துணியால் மறைத்துக்கொள்ள வேண்டும், வெளியே சென்றால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் போன்ற கட்டுக்கோப்புகளுக்குள் மாணவர்களை அடக்கி வளர்க்கிறது மதப் பள்ளிக்கூடம். தலைமை ஆசிரியராக வரும் உசாவின் நடவடிக்கை பெண்களுக்கு எதிராகத் திணிக்கப்படும் அடக்குமுறையைப் பிரதிபலிக்கிறது.
ஆண்களின் பார்வை பெண்களின் மேல் விழக்கூடாது. ஆண்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இடத்தில் இருக்கும் பெண்கள் அங்கிருந்து அகன்றுவிட வேண்டும் என்பது சவூதியர்களின் நடைமுறை வழக்கமாக இருக்கிறது. பள்ளியும் இந்தக் கட்டுப்பாட்டை பிடிவாதமாகக் கடைபிடிக்கும் இடமாக உள்ளது. அதை உசா போன்ற ஆசிரியர்கள் பிடிவாதமாக நிறைவேற்றினாலும் அவர்களிடமும் சொல்லப்படாத ரகசிய உலகம் இருக்கவே செய்கிறது.
தலைமை ஆசிரியர் உசா வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டான் என்று அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருத்தி சக மாணவிகளிடம் கூறுகிறாள். புகுந்தவன் திருடனல்ல. உசாவின் காதலன். அது தெரியாமல் உசாவின் தந்தை போலிசுக்குப் புகார் செய்துவிட்டதாக மற்றொரு மாணவி கூறுகிறாள். ஆசிரியர் வீட்டில் புகுந்தவன் திருடனா அல்லது அவனது காதலனா என இயக்குநர் உறுதியாகச் சொல்லாவிட்டாலும் வந்தவன் ஆசிரியரின் காதலனாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தைப் பார்வையாளனிடம் காட்சியின் வாயிலாக எழுப்பி இருக்கிறார்.
ஒரு பெண்ணை ரகசியமாகச்சந்திக்க வரும் ஆண் திருடனாகத்தான் வரவேண்டும் என்று மாணவி சொல்லும் வார்த்தைகள் காதலுக்கு எதிர்ப்பான அச்சமூகச் சிந்தனையைக் காட்டுகின்றன.
ருசிப்பெண்
வயது வந்த சிறுமிக்கு உடல் அங்கங்களில் ஏற்படும் வளர்ச்சி என்பது இயற்கையின் அம்சம். பிற்போக்குச் சமூகத்தில் அவ்வகையான வளர்ச்சிகள் அவள் திருமணதிற்குத் தயாராகிவிட்டதாகவே பார்க்கப்படுகின்றன. அவளது மன வளர்ச்சி குறித்து அக்கறையற்ற மனநிலையே வளர்ச்சி பெறாத சமூகத்திடம் நிலவுகிறது. வாட்ஜ்டாவும் அவளின் தாயும் உரையாடும் காட்சியில், பள்ளி ஆசிரியர் தம்மை அபயா எனப்படும் புர்காவை அணியச் சொன்னதாக வாட்ஜ்டா கூறுகிறாள். அதற்கு அவள் “அப்படியா? உன்னை ஒருத்தனுக்கு மணமுடித்து வைக்க நேரம் வந்துவிட்டது” என்று கூறும் காட்சி அம்மா அலட்டலில்லாமல் சொல்வதுபோல இருந்தாலும் மதவாதவும், பழமைவாதமும்பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை ஆண்களுக்கு மணம்முடித்து வைக்கும் அளவுகோளாக உருவாக்கி வைத்துள்ளதைத் துல்லியமாகச் சொல்லிச்செல்கிறது. வயதுக்கு வந்துவிட்ட சிறுமி திருமணம் எனும் “சட்டபூர்வமாகஆண்களின் காம சேவைக்கு” தயார் செய்யப்படுகிறாள்.
அபயா எனப்படும் புர்காவில் எந்த அலங்காரமும் வெட்டுகளும் இருக்கக்கூடாது என்றும் அந்த நாட்டின் ‘மகள்கள்’ கடுமையான கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரபல மதகுரு ஒருவர் கூறியுள்ளார் என்று இங்கிலாந்தில் இயங்கும் “த வீக்” இணையத்தளச் செய்தியில் வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்புக்கு சில வாரங்களுக்குப் பின் சமூக ஊடகங்களில் அநாமதேய பெண்மணி ஒருவர் குட்டையான பாவாடையை அணிந்து நகரத்தை நோக்கி நடந்து செல்லும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண் பிறகு மத போலிசாரால் விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
ஆண்களுடன் சமமாக உரையாடும் நடவடிக்கைகள் இருபாலருக்கும் குற்றச்செயலாகும். ஆனால் பெண்கள் பொதுவாகக் கடுமையான தண்டனையை எதிர்கொள்கின்றனர். அதிகமான மேக்அப் போடும் பெண்களையும் மத போலிஸ்காரர்கள் தொந்தரவு செய்வதுண்டு.
2012-இல் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட இரு பெண்களை அந்த நாட்டின் மத அடிப்படைவாதிகள் விபச்சாரிகள் என்று அழைத்தனர். அவர்கள் தலையில் முக்காடு அணியவும், அவர்கள் ஆண் பாதுகாப்புடன் நடமாடவும் பணிக்கப்பட்டனர். சவூதி அரேபியாவின் தேசிய விளையாட்டு அரங்கத்தில் இதுநாள்வரை பார்வையாளராகத் தடைசெய்யப்பட்ட பெண்கள் 2017 செப்டம்பர் 27-இல் அனுமதிக்கப்பட்டனர்.
மதக்கட்டுபாடுகளுக்காகப் பெண்களை புர்காவுக்குள் போர்த்தி விடப்பட்டிருக்கும் சமுதாயத்தில் கட்டுப்பாட்டுமீறல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதனின் மனங்களில் ஆழ்ந்துகிடக்கும் ஆசைகளுக்கு முன்னால் இறைவனின் வார்த்தைகளும் சக்தி இழந்துகிடக்கின்றன. இதனால் நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று மனம் துணிந்துவிடுகின்றது.
வாட்ஜ்டா படத்தில் காட்சியின் வழியாக பெண்களுக்கு எதிரான பழமைவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பை பிரசாரத்தொனியில் புரட்சியைத் தூண்டும் காட்சியாக இயக்குனர் கையாளவில்லை. திரைக்கான மொழியிலேயே ஒரு சமூகத்தை விளக்கியுள்ளார். முழு திரைப்படமும் சைக்கிள் எனும் படிமத்தில் பயணிக்கிறது.
சைக்கிள் சுதந்திரம்
படத்தில் காட்டப்படும் சைக்கிள், பெண் சுதந்திரத்தின் அடையாளமாகக் காட்டப்பட்டுள்ளது. பெண்கள் சைக்கிள் ஓட்டக்கூடாது என்பது ஓர் அடக்குமுறை. இந்த அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பெண்கள் சைக்கிள் ஓட்டக்கூடாது என்று அப்துல்லா வாட்ஜ்டாவிடம் கூறுகிறான். பெண்களிடம் தோற்பது ஆண்களுக்கு இரட்டிப்புப் பேரிழப்பாகும் என்றும் கூறுகிறான். “எனக்கு சைக்கிள் கிடைத்தவுடன் நான் உன்னைப் போட்டியில் வெற்றிகொள்வேன். அப்போது நாம் இருவரும் சமமாகிவிடுவோம்” என்று வாட்ஜ்டா பேசும் வசனங்களில் பெண்ணிய சித்தாந்தம் வெளிப்படுகிறது.
பெண்கள் சைக்கிள் ஓட்டினால் பிள்ளை பெற முடியாது என்று அம்மா வாட்ஜ்டாவிடம் கூறுகிறாள். “நீ சைக்கிள் ஓட்டவில்லை. இருந்தாலும் உன்னால் ஏன் மற்றுமொரு பிள்ளையைப் பெற முடியவில்லை?” என்ற கேள்வியால் பெண்கள் மேல் புனையப்பட்ட பழைமைவாதப் புளுகல்களைப் போட்டு உடைக்கிறாள் வாட்ஜ்டா.
வாட்ஜ்டா பழமைவாதங்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பி புரட்சி செய்யவில்லை. அறிவுநிலைக்கு ஒவ்வாத பழக்கங்களைப் பின்பற்றாமல் கேள்விகள் கேட்டு புறக்கணிக்கிறாள்.சவூதி மண்ணில் பெண்ணுக்குச் சைக்கிள் ஓட்ட சுதந்திரம் இல்லையா? சவூதி மண்ணில் சுதந்திரத்தைவிட ஒரு பெண்ணுக்கு வேறு என்ன தேவையாக இருக்க முடியும்? கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கும் பெண்களை அடிமைகளின் படிமமாகக் காட்டுகிறது இயக்குநரின் காமிரா. சைக்கிளை ஓட்டி ஆண் நண்பனை வெல்லுவேன் என்று வேட்கையுடன் இயங்கும் வாட்ஜ்டா வழி, ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை பெற நினைக்கும் பெண்கள், தங்களின் பலத்தை அறிந்து விவேகமாகச் செயல்பட்டால் சுந்திரம் நிச்சயம் என்பதைச் சொல்லியிருக்கிறார் ஹைஃபா.
இறுதியில் வாட்ஜ்டா சைக்கிளை ஓட்டுகிறாள். கணவனைக் கவர உடை தைப்பதற்காக அவள் அம்மா சேமித்த பணம் கணவனின் மறுமணத்தால் அர்த்தப்படாமல் போனபோது அப்பணத்தை மகளின் விடுதலையின் அடையாளத்துக்காகச் செலவு செய்கிறாள். சவுதி அரசாங்கம் பெண்களை கார் ஓட்ட அனுமதி அளித்துள்ளதிலும் அவ்வூர் இளைஞர்கள் நினைப்பதுபோல உள் அரசியல் இல்லாமல் பெண்களின் விடுதலையில் அடையாளமாக இருந்தால் மகிழ்ச்சிதான்.
அருமையான ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதயங்கனிந்த வாழ்த்துகள்!