கொல்லப்படும் குறிகள்

index3000 வருடங்களுக்கு முன், எகிப்து மன்னராட்சியின் போது, பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு, பண்டைக்கால பாபிருஸ் ஏட்டில் (Papyrus Salt 124) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக டெய்லிமெய்ல் இணையத்தள செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.  Deir el Medina-வில் தங்கியிருந்த பானெப் எனும்  சிறந்த  கட்டிடக்கலை கைவினைஞர் (Paneb) மேல் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகளில்  பெண் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டும் அடங்கும். ஃபாராஓ மன்னனின் கல்லறையை வடிவமைத்த கட்டிட வேலைப்பாடு கலைஞனான பானெப் மீது கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டான். யாயெம்வாவ் (Yeyemwaw)  என்ற பெண்ணை நிர்வாணமாக்கி, அவளை அடித்துத் துன்புறுத்தினான் என்று குற்ற அறிக்கையில் பதிவிடப்பபட்டிருப்பதை  ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பண்டைக்காலத்து  எகிப்தியர்களின் வாழ்வில், பாலியல் தொடர்பான நிலைப்பாட்டினை புரிந்துகொள்வதற்கு இது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு என்பது வரலாறு ஆசிரியர்களின் நம்பிக்கையாகும்.

பண்டைக்காலத்து எகிப்து நாட்டில் இருந்த பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், இந்த நூற்றாண்டில், எகிப்து மக்கள் புரட்சிக்குப் பிறகும் மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினையாகும். எகிப்தியப் பெண்கள், தினமும் ஏதோ ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட HarassMap தன்னார்வ இயக்கம் சேகரித்தப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவர்களின் ஆய்வுகள் அடிப்படையில் பார்த்தால் 99.3 விழுக்காடு பெண்கள் ஆண்களின் இச்சைகளுக்குப் பலியானவர்கள். இதில் 90 விழுக்காடு எகிப்தியப் பெண்கள் பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்றும் 81 விழுக்காடு சம்பவங்கள் பொதுப் போக்குவரத்துகளில் நடப்பதாக HarassMap ஆய்வுகள் கூறுகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் எளிய பெண்களுக்கு மட்டுமல்ல, I Want to Get Married எனும் பிரபல நூலை எழுதிய காடா அப்டேல் ஆல் (Ghada Abdel Aal)  கெய்ரோவுக்குப் பஸ்ஸில் பயணம் செய்ய நேரும்பொழுதெல்லாம், பக்கத்தில் அமர்ந்து பயணிப்பவரின் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகாமல் இருக்க, இரண்டு இருக்கைக்கான சீட்டுகளை வாங்கிப் பயணம் செய்வதாக எழுதியுள்ளதையும் உளவியல் ரீதியாகவே அங்குள்ள அனைத்துதரப்புப் பெண்களும் எப்படி பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் புரிந்துகொள்ள துணைப்புரிகிறது.

உலகத்திலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான பெருநகரம் கெய்ரோ என்று தோமஸ் ரியூடர்ஸ் அறவாரியம் கூறுகிறது. பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் தொல்லைகளின் ஆபத்துக்கள் இல்லாமல் பெண்கள் வாழமுடியாது எனும் சூழலின் அடிப்படையில், சாவ் போலோ  டெல்லி நகரங்களுக்கு அடுத்து கெய்ரோ மூன்றாவது நிலையில் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பாலியல் சொல்லாடல்களால், அனுமதிக்காத தொடுதல்களால் எகிப்துப் பெண்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று எகிப்து நாட்டின் பத்திரிகையாளரும், பெண் உரிமை பரப்புரையாளருமான சஹீரா அமீன் கூறியுள்ளார்.

பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் இந்தக் கொடுமைகளை எகிப்து சமூகம் எப்படிப் பார்க்கிறது? ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களின் மனநிலை எப்படி உள்ளது? பாலியல் சீண்டல்களை பெண்கள் விரும்புகின்றனர் என்று அந்நாட்டு ஆடவர்கள் சிலர் கூறுவது உண்மையா? பாதிக்கபட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க குடும்பமும், சமூகமும், அதிகார வர்க்கமும் எந்த அளவுக்குத் தங்களின் பங்களிப்பைச் செய்கிறார்கள்? எனும்பல கேள்விகளுக்கு,  எழுத்தாளரும், இயக்குநருமான முஹமட்டியாப்(Mohamed Diab)  ‘கெய்ரோ 678’ சினிமாவின் வாயிலாக பதிலைத் தந்துள்ளார். இப்படத்திற்காக இரண்டு ஆண்டுகள் ஆய்வுகள் செய்து, அந்த ஆய்வின் அடிப்படையில், ‘கெய்ரோ 678’ வழி எகிப்துப் பெண்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகளை அழுத்தமான காட்சிகளின் வழி பார்வையாளனுக்குக் காட்டியுள்ளார். நவீன எகிப்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அச்சமின்றி இப்படம் பேசியுள்ளது.

“ஆணாக இருக்கும் நிலையிலிருந்து எனக்குள் ஒரு குற்றவுணர்வு ஏற்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக ஆண்களும் எழவேண்டும். பெண்கள் பாலியல் தொல்லைகள் சட்ட ரீதியில் குற்றமாக ஏற்றுக் கொள்ளப்பட்டத்தில்  ‘கெய்ரோ 678’ படத்துக்குப் பங்களிப்பு உண்டு. இப்படத்திற்குப் பிறகு, எகிப்து சமூகச் சூழலில் மாற்றங்களைக் காண முடிந்தது. பாலியல் தொல்லைகளை எதிர்த்து பெண்கள் மட்டுமல்ல சமூகத்தில் பல தரப்பினரும் வெளியில் அதிகமாக வந்து பேச துணிந்து விட்டனர். எகிப்து நாட்டின் வரலாற்றுப் பெருமைகளைச் சிறுமைப் படுத்துவதற்காக இப்படத்தை எடுக்கவில்லை. இந்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்சிப் படுத்தியுள்ளேன்” என்று இயக்குநர் டியாப் (Mohamed Diab) தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இப்படம் வெளியாகிய 30 நாட்களில் எகிப்தில் மக்களின் புரட்சி வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களுக்கு நடந்ததை வெளியில் சொல்லாமல் அமைதியாக இருக்கும் பாதிக்கப்பட்டப் பெண்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும், பெண்களின் மேல் நடத்தப்படும் காமத் தொல்லைகளை ஒரு குற்றமாகப் பார்க்காத சமூகத்துக்கு, சமூக அக்கறையை வலியுறுத்தவேண்டும், சர்வதேசப் பிரச்சினையான பாலியல் தொல்லைகளால் அதிகமாகப் பாதிக்கப்படும் எகிப்து நாட்டுப் பெண்களின் மோசமான பாதுகாப்பற்ற நிலையை சர்வதேச அளவில் கவனப்படுத்த வேண்டும் எனும் நோகத்திற்காக, எகிப்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் இயக்குநரால் எடுக்கப்பட்டுள்ளது. 

படக்கதையில் முக்கியப்பாத்திரமாக 3 பெண்கள் தோன்றுகின்றனர். சிரமப்படும் பொருளாதாரச் சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஃபாயிசா, மேல் தட்டு மக்கள் பிரிவைச்சேர்ந்த பணக்கார பெண்ணான சேபா, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நெல்லி, ஆகிய மூவரும் பெண்களுக்கான சுதந்திரத்தையும், தங்களுக்கான பாதுகாப்பையும் எகிப்து ஆண்களிடமிருந்து மீட்டெடுப்பதற்காகத் தொடங்கும் போரையே இப்படம் மையமாகக் கொண்டுள்ளது. இவர்கள் மூவரும் ஆண்திமிரினால் பாதிக்கப்பட்டவர்கள் எனும் ஒரே வட்டத்துக்குள் நின்றுகொண்டு, வெவ்வேறு தளத்தில் ‘காமுக வெறிநாய்களை’ வேட்டையாடத் தயாராகின்றனர். பாலியல் தொல்லைகளுக்கு எதிராகப் புறப்பட்டுவிட்ட இவர்களை சமூகம் எப்படிப் பார்க்கிறது? குடும்ப உறுப்பினர்கள் எந்த அளவிற்குத் துணையாக உள்ளனர்? என்பதைச் சொல்லுவதே படம்  முன்வைக்கும் அரசியல் எனலாம்.

 

மூன்று கதைகள்

1. 678 எண் பேருந்தின் கதை

ஃபாயிசா, சிறிய வருமானம் கொடுக்கும் ஓர் அரசாங்க வேலையில் இருக்கிறாள்.index 00 கெய்ரோவுக்குச் செல்லும் 678 பஸ்ஸில் ஏறினாள் அது ஃபாயிசாவை அவளுடைய பணியிடத்தில் இறக்கிவிடும். ஆனால் 678 பேருந்து எதிர்ப்படும்போதெல்லாம் அவள் வெறித்துப் பார்க்கிறாள். பாலியல் தொல்லைகளால் பேருந்து பயணம் அவளுக்கு வெறுப்பையும், பயத்தையும் கொடுக்கிறது. பொது போக்குவரத்தில் ஆள் நெரிசல் கொண்ட பேருந்தில் பயணிக்கும் ஃபாயிசாவின் பின்புறத்தை கூட்ட நெரிசலுக்கு இடையில் வரும் ஏதேனும் ஒரு மர்மக்கை தொட்டுப் பார்க்கிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஆண்களிடமிருந்து வரும் மர்மக் கைகள் ஃபாயிசாவின் அந்தரங்கத்தைத் தீண்டிப் பார்க்கிறது.

பேருந்தில் ஏறுவதைத் தவிர்க்கிறாள். வாடகைக்காரில் செல்ல ஆரம்பிக்கும் அவளுக்கு ஆண்களின் பாலியல் தொல்லையிலிருந்து தீர்வு கிடைக்கவில்லை.  அந்த வாடகைக்காரின் முன்புறத்தில் சிறுசிறு கண்ணாடிகள் காரின் முன் வலது புறமிருந்து இடதுபுறம் வரை ஒட்டியிருப்பதை ஃபாயிசாக கவனிக்கிறாள்.

“பெண்கள் எல்லோரும் கிறுக்குப் பிடித்தவர்கள்”என்ற அரேபியப்பாடல் காரில் ஒலிக்கிறது. சிறு கண்ணாடிகளின் மூலம் ஓட்டுனர் ஈமொய்ப்பது போல ஃபாயிசாவை மொய்க்கிறான். பின்சீட்டில் அசௌகரியத்துடன் அமர்ந்திருக்கும் ஃபாயிசாவிடம் அவனுடைய உதடுகளையும் நாக்குகளையும் காட்டி வக்கிரக்குறியீடுகள் செய்கிறான்

இவ்வகையான தொல்லைகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிகொள்ள, தன்னார்வ முறையில் நடத்தப்படும் பெண்கள் தற்காப்பு ஆலோசனை நிகழ்ச்சியில் ஃபாயிசா கலந்துகொள்கிறாள். அங்குதான் ஃபயிசாவும் பயிற்சி நடத்துநரான சேபாவும் அறிமுகமாகிறார்கள்.

பெண்களுக்குப் பாதுகாப்பு வியூகங்களைச் சொல்லித்தரும் சேபாவின் தைரிய மூட்டலான பேச்சு, ஃபாயிசாவுக்குப் புதுத்துணிச்சலைத் தருகிறது. செப்புக்கம்பிகளைக்காட்டி, “இது உன் பாதுகாப்புக்குப் போதும்”என்று சேபா காட்டும் கூர்மையான கம்பி ஃபாயிசாவுக்குத் தற்காக்கும் ஆயுதமாக மாறுகிறது. தன்னை உரசிப்பார்க்கும் ஆண்குறிகளைக் கூர்மையாக்கப்பட்ட கம்பிகளால் குத்திக்காயப்படுத்தத் தொடங்குகிறாள் ஃபாயிசா. அவளின் செப்புக்கம்பி, கொஞ்சம் கொஞ்சமாகச் சிவப்புப் கம்பியாக மாறத்தொடங்குகிறது.

2. செப்புக்கம்பியின் கதை

ஃபாயிசாவைப்போல சேபாவும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானவள் என்பதை இயக்குநர் பின்னணி கதை சொல்லும் உத்திகளின்  மூலம் ரசிகர்களுக்குக் காட்டுகிறார். கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு தொழில் முனைவர் சேபா. இவளுடைய கணவன் ஷாரிப் குழந்தைகள் நலன் மருத்துவராகப் பணி செய்கிறார். சேபா முதல் பிள்ளைக்குக் கருத்தரித்திருக்கிறாள். காற்பந்து பைத்தியமான ஷாரிப் சேபாவை, எகிப்து விளையாடும் போட்டியைக் காண காற்பந்து அரங்கிற்கு அழைத்துச் செல்கிறான்.

அரங்கில் அமர்ந்து கொண்டு, “நீ உண்மையான எகிப்தியன் என்பதனால் எகிப்தின் பெயரைச் சொல்லி உரக்கக் கத்து. எகிப்து தோற்றுவிட்டால் அது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கும். நான் தற்கொலை செய்து கொள்வேன்” என சேபாவிடம்  கூறுகிறான்.

தாம் கருத்தரித்திருப்பதை கணவனிடம் அதிர்ச்சி தரும் செய்தியாகத் தெரிவிக்கலாம் என்று மகிழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டிருக்கும் சேபா, “அப்படி எகிப்து தோற்றாலும், அந்தச் சோகத்தைச் சரிகட்ட நான் உங்களுக்கு ஒரு மகிழ்சியான செய்தியை வைத்திருக்கிறேன்” என்று கணவனிடம் தெரிவிக்கிறாள். எகிப்தின் தோல்வி இங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். அதனுடைய தோல்வியின் ஏமாற்றத்தை எந்தவொரு மகிழ்சியான செய்தியால் என்னை ஈடுகட்ட முடியாது என்று ஷாரிப் பதில் சொல்கிறான்.

எகிப்து வெற்றி பெறுகிறது. பல்லாயிரம் மக்கள் திரண்டு கிடந்த அரங்கம் எகிப்தின் வெற்றியால் அதிர்கிறது. அச்சமயம் ஷாரிப்பின் உடன் இருந்த சேபா காணாமல் போகிறாள். கூட்டத்தில் அவளுடைய அலறல் சத்தம் மட்டுமே கேட்கிறது. எகிப்தின் வெற்றியைக் கொண்டாடிய பல்லாயிரம் ஆண்களுக்கு முன் சேபா பாலியல் விளையாட்டு பொம்மையாகப் பந்தாடப்படுகிறாள். வெற்றிக் களிப்பு கொடுக்கும் போதையில் ஒரு பெண்ணை தங்களுக்கான ஊறுகாயாக அரங்கில் இருந்த ஆண்கள் பயன்படுத்துகின்றனர். அந்த வெற்றிக்காகக் காத்திருந்த ஏராளமான இளைஞர்களின் கூட்டு மனநிலையின் ஒரு அங்கமாகவே அவள் கணவனை உள்வாங்க வைக்கிறார் இயக்குநர்.

சேபாவைப் பார்க்கும் போதெல்லாம் அந்தச் சம்பவம் தம் முன் வந்து போகும் என்றும் இதிலிருந்து விடுபட தமக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கணவன் சேபாவிடம் கூறிய வார்த்தைகள் அவளுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. எகிப்தின் தோல்வியின் வலிகளை மட்டுமே வலியாகக் கருதும் கணவன், சிதைத்து இருக்கும் மனைவியின் வலிகளை அவன் உணர்ந்திருக்க வாய்ப்பில்லைதான்.

3. கடன் அட்டையின் கதை

கதையில் அடுத்து வரும் முக்கியப்பாத்திரம் நெல்லி. அழைப்பு மையத்தில் கடன் அட்டையை சந்தையில் அறிமுகம் செய்யும் வேலையைச் செய்து வருகிறாள். பயனீட்டாளர்களோடு உரையாடும் போது, அவர்களிடமிருந்து  பாலியல் தொல்லைகளையும் அனுபவிக்க நேர்கிறது. ஓமார் நெல்லியைக் காரில் ஏற்றி அவளுடைய வீட்டின் எதிரே இறக்கிவிடுகிறான். சாலையைக் கடக்கும் பொழுது,  ஒரு டிராக் வண்டியை ஓட்டிக் கொண்டு வரும் ஆடவன் அவளுடைய சட்டையை இழுக்கிறான்.

ஓடிக் கொண்டிருந்த வண்டியோடு அவளும் இழுத்துச் செல்லப்படுகிறாள். பல போராட்டங்களுக்குப் பிறகு அந்த ஆடவன் பிடியிலிருந்து விடுபடுகிறாள். அந்த வண்டியைத் துரத்திச் சென்று அவனை மடக்கிப் பிடிக்கிறாள். போலிசுக்குப் புகார் செய்து வழக்கு பதிவு செய்கிறாள். அது பாலியல் தொல்லைகளுக்கு எதிராகத்தொடுக்கப்பட்ட  முதல் வழக்காகும். (உண்மைச் சம்பவத்தில் ரௌஷ்டி எனும் பெயர் கொண்ட பெண்) இந்த வழக்கினால் குடும்பத்துக்கு இழுக்கு வந்து விடுமோ என்ற கௌரவ அச்சம் நெல்லியின் காதலன் குடும்பத்திடமிருந்து அழுத்தம் வெளிப்படுகிறது. காதலனா? நீதிமன்ற வழக்கா? என்று எதை முடிவு செய்வது என்று தெரியாமல் நிற்கிறாள் நெல்லி.

பெருநிறுவனங்களில் பணிசெய்யும் பெண்கள் அவர்களைச்சுற்றியுள்ள ஆண்களினால் பல அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். முதலாளிகளின் இச்சைகளுக்கு இணங்கினால் அதற்குக் கைமாறாக அப்பெண்ணுக்குப் பணமும் பதவிகளும் வழங்குவது நடப்பில் இருக்கும் ஒன்றாக உள்ளது. இணங்காதவர்கள் தூசு படிந்தநிலையில் அதே இடத்தில் வைக்கபடுவார்கள் அல்லது வேலை சரியில்லை என்று வெளியேற்றப்படுவர். மற்றொரு வகையில் தங்களின் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு வாடிக்கையாளர்களிடம் ‘சகஜமாக’ நடந்துகொள்ளுமாறு முதலாளிகள் பெண் பணியாளர்களைத் தூண்டுவதும் உண்டு. பெண்களின் சுயமரியதையை இழக்கச்செய்து, வாடிக்கையாளர் என்ன பேசினாலும் பொருத்துக்கொண்டு வேலை செய்யச்சொல்லும் முதலாளிகள் உண்டு. வாடிக்கையாளர்களின் பாலுறவுத்தொல்லைக் குற்றங்களுக்கு உடன்படச்சொல்லும் முதலாளிகள், பெண்கள் உடல்சேவைத் தரகருக்கு நிகரானவர்கள் என்பதை நெல்லி பணிப்புரிந்த அழைப்புமையத்தின் முதலாளிகள் நடந்துகொண்ட பாங்கினைக்காட்டும் காட்சிகளில் உணர்த்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் ஒருவர் நெல்லியுடன் தொலைபேசி உரையாடலின்போது தகாதவார்தைகளில் பேசுகிறான். கோபமடைந்த நெல்லி அழைப்பைத்துண்டிக்கிறாள். தன் நிறுவனதிற்காக உழைக்கும் பெண்ணிடம் தவறாகப் பேசிய வாடிக்கையாளனைக் கண்டிக்காத முதலாளி, அழைப்பைத்துண்டித்த நெல்லியைக்கடிந்து கொள்கிறார். தயாரிப்புப்பொருட்களை அல்லது சேவைகளைச் சந்தைப்படுத்தி இலாபத்தை அள்ளும் நிறுவனங்களில் பெண்கள் எப்படிப் பாதிப்பு அடைகிறார்கள் என்பதை இயக்குநர் நெல்லியின் மூலம் கவனப்படுத்தியிருக்கிறார்.

பாலியல் தொல்லைகள் புரியும் ஆண்களுக்கு எதிராகப் பெண்கள் புகார் செய்ய முன்வந்தால் புகார் செய்ய வரும் பெண்ணுக்கும் குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கும் தொடர்பு இருக்கலாம் எனும் அடிப்படையில் போலிஸ் தரப்புவிசாரனையை முடிக்கிவிடுகிறது. சாலையைக் கடந்து வீட்டிற்குச் செல்லவிருந்த நெல்லியைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லைகள் கொடுத்தவனை காவல்துறை கைது செய்கிறது. நெல்லியின் புகாரை ஏற்காமல் போலிஸ் அதிகாரி அவளைக் காக்கவைக்கிறது. நெல்லியைத் தாக்கியக் மட்டும் குற்றப் பதிவாக ஏற்கும் அதிகாரி, பாலியல் தொல்லைகள் புரிந்த குற்றத்தின்கீழ் புகாரை ஏற்க மறுக்கிறார். கோபம் கொண்ட ஒமார் புகாரை ஏற்கும்படி அழுத்தம் கொடுக்கிறான். இது மத்திய போலிஸ் நிலையம் கிடையாது என்று சொல்லி பாலியல் தொல்லை புகாரைத் தொடர்ந்து ஏற்க மறுக்கிறான் அதிகாரி. குற்றவாளியைத் தங்களுடைய காரில் ஏற்றிக்கொண்டு தலைமை காவல் நிலையம் நோக்கிச் செல்கின்றனர். பாலியல் குற்றவாளிக்கு எதிராகத்தொடுக்கப்பட்ட முதல்வழக்காக இது பதிவாகிறது.

 
உறவுகளின் பகடையாட்டம்

இப்படி பெண்களின் சிக்கலை மட்டுமே சொல்லிச்சென்றிருந்தால் இது நல்ல ஒரு ஆவணப்படமாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் இயக்குநர் சொல்ல வரும் அரசியல் வேறு. இந்தப் பெண்களைப் பாதுகாக்க வேண்டிய குடும்ப அமைப்பு அவர்களுக்கு நடக்கும் பாதிப்புக்குப் பின் எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதே திரைக்கதை முன் வைக்கும் அழுத்தமான கேள்வி.

.ஃபாயிசா பஸ்ஸில் ஏறாமல் டெக்சியில் ஏறிச் செல்வதால்தான் பணக்கஷ்டம் என்கிறான் அடேல். இனி பஸ்ஸில் பயணம் செய்வதாகப் ஃபாயிசா கூறுகிறாள். ஆண்களின் தொல்லைகளுக்கு மத்தியில் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் ஃபாயிசா, பிள்ளைகளுக்குப் பாடங்களைப் படித்துக் கொடுக்கிறாள். கணவனுக்கும் சமைத்துப் போடுகிறாள். 

எப்போதும்போல வேலை முடிந்து வீடு திரும்பும் அடேலைக் கண்டவுடன் குசினிக்குள் நுழைந்து வெங்காயத்தைக் கடித்துச்சாப்பிடுகிறாள் ஃபாயிசா. சவரம் செய்து குளித்துவிட்டு, அனைத்துக்கும் தயார் ஆகிவிட்டநிலையில் ஃபாயிசாவின் முன்வந்து நிற்கிறான் அடேல். உடலுறவுக்குத்தயாராகிவிட்ட கணவனிடமிருந்து தப்பிக்க அவள் கடித்துத்தின்ற வெங்காயவாடை அவனை வெறுப்பேற்றுகிறது. முதுகைக்காட்டிக் கொண்டுப் படுத்திருக்கும் ஃபாயிசாவை அடெல் அழைக்கிறான். “எனக்கு அசதியாக இருக்கிறது” என்கிறாள். அடேல் கோபமாகிறான். தொடர்ந்து செக்ஸ் உறவை மறுத்துவரும் ஃபாயிசா இதற்கான காரணத்தைச் சொல்லாமல் தாம் தூங்கப்போவதில்லை என்கிறான்.

நுட்பமான காட்சிச் சித்திரம் இது. காலையில் எழுந்து வீடு திரும்பும்வரை வெளி உலகத்தில் ஆண்களால் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்ணில் மனநிலை பற்றி துளியும் அக்கறை செலுத்தாத கணவன் எனும் ஆணூடன் உடலுறவு கொள்ள அவள் மனம் ஏற்காததைப் பூடகமாகக் காட்டுகிறார் இயக்குநர். ஒரு பெண்ணின் அனுமதியின்றி பொதுஇடங்களில் ரகசியமாகத் தீண்டும் ஆணுக்கும், உடல் ரீதியாகவும் தயாராக இல்லாதப் பெண்ணை உடலுறவுக்குக் கட்டாயப்படுத்தும் கணவனுக்கும் வேறுபாடில்லாததை இக்காட்சி சித்தரிக்கிறது.

குலுங்கும் பஸ்ஸில் நின்றுகொண்டு பயணம் செய்யும் மனிதர்களின் உரசல்கள் எந்தவகையைச் சேர்ந்தவை என்பதை தெரிந்துகொள்ள முடிந்த ஒரு பெண்ணால் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும் ஆணின் அழைப்பில் மறைந்துள்ளது அதிகாரமா? காதலா என உணர முடியாமலா போகும்.

தம்முடைய இச்சைகளைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் ஃபாயிசாவைப் பார்த்து,      “கணவனின் விருப்பங்களை நிராகரிக்கும் பெண்களை தேவதைகள் சபிப்பார்கள்”என்று அடேல் எச்சரிக்கிறான். அதை ஏற்காத ஃபாயிசா “நிராகரிப்பு என்பது ஒருவர் ஏற்றுக்கொள்ளும் பொழுது, மற்றொருவர் முடியாது என்று சொல்வதாகும். நான் முடியவில்லை என்று சொல்லவில்லை. முயற்சிக்கிறேன் ஆனால் என்னால் முடியவில்லை” என்று பதிலளிக்கும் இடம் வலி மிக்கது.

“இதற்காகவா உன்னைத் திருமணம் செய்துக் கொண்டேன்?” என்று கோபமாகக் கேட்கிறான் அடேல்.

“நீ என்னைத் திருமணம் செய்துக் கொண்டது இதற்கு மட்டும்தானா?” என்று ஃபாயிசாவும் எதிர்வினையாற்றுகிறாள்.

“ஆமாம். நான் இதற்காகத்தான் உன்னைத் திருமணம் செய்துக் கொண்டேன். உன்னோடு உட்கார்ந்து சொக்கட்டான் ஆடுவதற்காக அல்ல” என்று அடேல் மனைவியைப்பார்த்து நையாண்டியாக இடித்துரைகிறான்.

ஒரு பெண்ணின் மன உணர்வுக்குக் கணவனிடம் எவ்விதத்திலும் கவனமில்லை என்பதையும் அவளது உடல் ஒரு வாகனம் போல எஜமானனுக்கு எந்நேரமும் திறந்து கிடக்க வேண்டும் என்ற ஆணின் எதிப்பார்ப்புக்கு பெண்ணில் அந்தரங்கம் எவ்வாறு இசைய மறுக்கிறது அது எவ்வாறு அவமதிக்கப்படுகிறது என இயக்குநர் அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

சேபாவுக்கு அவளது தாயிடமே நியாயம் கிடைக்காமல் போவதையும் அவள் தன்னைத் தானே மறு கட்டமைப்புச் செய்ய சக உறவுகளே காரணியாவதையும் இயக்குநர் இன்னொரு கோணத்தில் சித்தரிக்கிறார்.

images 00சேபா மீது ஆண்கள் நடத்திய அத்துமீறல்கள் அறச் சீற்றமாக மாறுகிறது. ஆண்களின் மேல் அவள் நம்பிக்கையை இழக்கிறாள். ஆண்களிடமிருந்து வரும் தொல்லைகளிலிருந்து பெண்களைத் தற்காக்கும் ஆலோசனையை வழங்கும் தொலைக்காட்சி நிகழ்சியை நடத்துகிறாள் சேபா. இலவசமாக வழங்கும் இவ்வகுப்பில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பு ஆலோசனையை வழங்கி வருகிறாள். “பெண்களுக்கு ஆண் பாதுகாப்பு தேவையில்லை. உங்களைத்தற்காக்க ஆயுதங்கள் ஏந்தத் தேவையில்லை. பெரும்பான்மையான பெண்கள் தற்காப்போடு செல்கிறார்கள். இருந்தும் அவர்களைத் தற்காக்க அவர்களால் முடிவதில்லை. ஒருவரைத் தற்காத்துக் கொள்வது என்பது அவர் எடுக்கும் முடிவாகும். என்மேல் கைவத்தால் அதனை வெட்டி வீசுவேன். அமைதியாக இருக்கமாட்டேன். பலவீனமாவர்கள் ஆணின் இலக்காகும்” என்று சேபா வகுப்பில் பெண்களுக்கு கற்றுத்தருகிறாள். ஆண்களுக்கு எதிராகப் போர்த்தொடுக்கும் வியூகங்களைக் கற்றுத் தரும் பெண் படைத் தளபதியாக சேபாவின் குணம் மாறுகிறது.

செப்புக் கம்பியைக் கொண்டு ஆண்-பெண் காதலர்கள் உருவத்தைச் செய்து விற்பனை செய்து வந்தவள், கணவனின் நிராகரிப்பால் அப்பொம்மைகளைச் செய்வதை நிறுத்தி விடுகிறாள். ஆண்கள் இனியும் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடையாது என்பதை பெண்களிடம் தெளிவு படுத்துகிறாள். செப்புக் கம்பிகளை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆயுதமாக மாற்றுகிறாள். ஆனால் அவளது கோபம் கணவனிடம் மட்டுமல்ல.

பொது இடத்தில் பல ஆண்களால் பாலியல் சேட்டைகள் செய்யப்பட்ட சேபா, போலிசில் புகார் செய்யச் செல்வதை அவளது தாய் தடுக்கிறாள். யாரும் உன்னிடம் வன்புணர்ச்சி செய்யவில்லை. யாரின் மேல் புகார் கொடுக்கப் போகிறாய்? உன் அப்பாவின் அந்தஸ்துக்கு இந்த இழி செயல் கலங்கம் ஏற்படுத்தி விடக்கூடாது என்று தாய் நடந்ததை மறக்கச் சொல்கிறாள். ஒரு பெண்ணுக்கு உடலால் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டும் குற்றமல்ல. வார்த்தைகளால், பார்க்கும் பார்வைகளால், அனுமதியின்றி தொடுதல்கள் போன்ற செய்கைகளும் அவளுக்கு எதிராகப் புரியுப்படும் குற்றம் என தாய்க்கு உணர்த்த முடியாத சேபா தனது மொத்தக் குணத்தையும் மாற்றுகிறாள்.

நெல்லிக்கு மேலும் மேலும் அழுத்தங்கள் அவளது இரு குடும்ப தரப்பில் இருந்தும் தொடர்கிறது.

ஒமாரின் குடும்பம், நெல்லியின் குடும்பம் ஆகியோர் இந்த வழக்கை கைவிடும்படி நெல்லியிடம் கூறுகிறார்கள். இந்த வழக்கு அவமரியாதையைக் கொண்டு வரும் என்பதால் இதனைக் கைவிட்டு விடச்சொல்லி அவளுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

இந்த வழக்கை நான் கைவிட்டால் நான் என்னையும் உன்னையும் சேர்த்து அனைவரையும் வெறுப்பேன் என்று நெல்லி ஒமாரிடம் கூறுகிறாள். குடும்ப மரியதையைப் பற்றி யோசிக்கும் சமூகம், பொதுவில் ஒரு பெண்ணின் தன்மானம் சீண்டப்பட்டுள்ளதைக் கருதுவதில்லை. பாதிக்கப்பட்டவளுக்கு நீதிவழங்கி குற்றவாளிக்குத் தண்டனையைப் பெற்றுத் தருவது குடும்ப அங்கத்தினர்களின் தார்மீகப்பொறுப்பாகும். ஆனால் பலகுடும்பங்கள் இப்பொறுப்பிலிருந்து விலகி நிற்கிறது.

இந்த அறியாமை பாதிக்கப்பட்ட பெண்களிடத்திலும் எவ்வாறு பரவியுள்ளது எனக் காட்சிப்படுத்தும்போதே இயக்குநர் அடுத்தத் தளங்களுக்குத் தாவிச்செல்வதை புரிந்துகொள்ள முடிகிறது. 

“மத நெறிகள் காட்டும் வழியில் நடக்காதப் பெண்களின் நடவடிகையால்  அனைத்துப் பெண்களும் மோசமானவர்கள் என்ற தோற்றதை ஆண்கள் மத்தியில் காட்டுகிறது. இதனால் என்னைப்போன்றவர்கள் பாதிப்பு அடைகின்றனர்” எனக்கூறி சேபாவின் ஆடையும் அவளின் தோற்றமும் ஆண்களின் தொல்லைகளுக்குக் காரணமாகிறது என்று குற்றம் சாட்டும் ஃபாயிசாவின் மூலம் இயக்குநர் மேலும் மேலும் நுட்பமான அரசியலைப் பேசத்தொடங்குகிறார். திருமணத்திற்கு முன் காதலனோடு சுற்றித் திரியும் நெல்லியின் நடத்தைக் குறித்தும் இடித்துறைத்துப் பேசுகிறாள் ஃபாயிசா. 

ஃபாயிசாவுக்கு நடக்கும் தொல்லைகளுக்குத் தாங்கள் காரணம் இல்லை அவளைப்போன்ற பிற்போக்குவாதிகளின் சிந்தனையே காரணம் என்று வாதிடும் சேபா தொடர்ந்து பேருந்து நெரிசலில் இஸ்லாம் மத நெறியோடு உடுத்தியிருக்கும் பெண்ணின் பின்னால் ஒரு ஆடவன் உரசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவனைக் கத்தியால் குத்துகிறாள். ஃபாயிசா கூறிய உடை இலக்கணம் கண் முன்னே உடைந்து போகிறது. சேபா கத்தியால் குத்திய ஆடவன், ஃபாயிசாவின் கணவன் என்பதைக் காட்டும் காட்சியில் பாலியல் தொல்லைகள் ஆடைகளினால் வரும் நோயல்ல. அது ஆணாதிக்கதின் வெளிப்பாடு என்பதை இயக்குநர் துள்ளியமாகச் சித்தரிக்கிறார்.

கெய்ரோ 678 எனும் படம் விருதுகளைப் பெற்ற பெருமை ஒருபுறம் இருந்தாலும், இப்படம் பல பெண்களின் ஊமைக் கனவுகளுக்கு மொழிகொடுத்து உலக அரங்கில் எகிப்துப் பெண்கள் எதிர்நோக்கி வரும் இன்னல்களை மொழிப்பெயர்த்து கொடுத்துள்ளது. இது எங்கோ தொலை தேசத்தில் வேறொரு கலாச்சாரத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதியென நாம் கடந்து சென்றுவிட முடியாது.

நம் வீட்டில் உள்ள பெண்களின் உணர்வுகளை என்றாவது நாம் உள்வாங்க நேரம் ஒதுக்கியுள்ளோமா? அவர்களின் நியாயங்களை விசாரித்துள்ளோமா என ஆழமான கேள்வியை நம் மனதில் பதிவு செய்வதாலேயே இப்படம் மொழி, மதம், கலாச்சாரம் கடந்து முக்கிய கலை வடிவமாகத் திகழ்கிறது.

1 comment for “கொல்லப்படும் குறிகள்

  1. அண்டனூர் சுரா
    July 18, 2018 at 2:10 pm

    இப்படத்தை விரைந்து பார்க்க முயற்சிக்கிறேன். பாலியல் சீண்டலுக்காக இரு பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்வது அதிலும் சீண்டல் தொடர்வது போன்ற வதை கொடுமை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *