வலசைப்பறவைக்குத் திசைகள் கிடையாது

Art-direction-Haagen-Daazசெந்நிறமாக எங்களைச்சுற்றி ஒளி விழுந்துக்கொண்டிருந்தது. செந்நிறமான மண். வானெங்கும் கோடுகோடாக செந்தீற்றல்கள். கடல் தீயாக அலைகொண்டிருந்தது.

ஆலிஸின் கண்ணை என் மீது உணர்ந்தேன். அவள் முகமும் தீக்கொண்டதுபோல் சிவந்திருந்தது. கன்னங்கள் பழுத்திருந்தன. தோளில் பருக்கள் நட்சத்திரக்கோவையாக நடனமிட்டன.

அவள் என் பக்கமாக திரும்பிப் புன்னகைத்தாள். “மின், இந்த ஒளியில் ஒரு நொடிக்கு, நீ உன் அப்பாவைப்போலவே தெரிந்தாய்,” என்றாள்.

தொண்டையில் ஏதோ சிக்கியது. கண்களில் திடீரென்று ஓர் ஒளிக்கூச்சம். தூரத்தில் சிரித்துக் கூவும் குழந்தைக்குரல்கள். என் கண்ணைச்சுற்றி இருக்கமாக ஒரு கருப்புத்துணி கட்டப்பட்டிருந்தது. கைகளை வெளிநீட்ட சுற்றிச்சுற்றிப் பதறிக்கொண்டிருந்தேன். “பன் ஒ டௌ? பன் ஒ டௌ?” பதிலுக்கு வேறு குரல்கள் என் குரலை கீச்சாக கேலிசெய்தன. “பாண்டா. அதோ பார், இடுங்கிய-கண்-பாண்டா.” வார்த்தைகள் புரியவில்லையென்றாலும் கேலி புரிந்தது. சிரிப்பு. என்னைத் தீண்டிவிட்டு தீற்றலாக மறைந்தன குரல்கள். எனக்கு ஒன்பது வயது, அமெரிக்காவில் என் முதல் வாரம். மழைக்காட்டில் பிறந்த எனக்கு கால்களில் ‘ஸ்னீக்கர்’கள் அணிந்து பழக்கமில்லை. சுழன்று தடுக்கி சருக்குமரத்தில் இடித்துக்கொண்டு மண்ணில் விழுந்தேன்.

சிவந்து கிடந்தது கடல். அலைகள் எழுந்து அடங்கின. என் இடதுகை விரல்கள் மண்ணை அளாவிக்கொண்டிருந்தன. மணற்கடியையில் விழுவதுபோல் துளித்துளியாய் என் விரல்களுக்கிடையிலிருந்து மெல்ல பொழிந்துகொண்டிருந்தது மண். எல்லா மண்ணும் நிலத்தில் சேர்த்தி. எல்லா ஒளியும் கடலில் சேர்த்தி. ஒவ்வொன்றும் மூழ்கி தன்னையிழந்து ஒன்றுமில்லாமல் ஆகிக்கொண்டே இருக்கின்றன.

“கடைசி வரை அப்பா ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ளவே இல்லை,” என்றேன்.

“ஆம்,” என்றாள் ஆலிஸ்.

“இந்த வாழ்க்கைக்கு வியட்னமீஸ் ஒன்றே அவருக்கு போதுமாக இருந்தது,” என்றேன். “எப்போதும் பழைய கதைகள்.”

“அவர் சொல்வதை என்னால் எப்போதும் புரிந்து கொள்ள முடிந்தது,” என்றாள் ஆலிஸ்.

நான் கடலுக்குள் பார்த்துக்கொண்டிருந்தேன். மேலே விண்மீண்கள் வெளிவரத்தொடங்கியிருந்தன.

“அது என்ன திசை?” என்றேன்.

வெள்ளை நிற கோடுகளாலும் பச்சைக்குத்தல்களாலும் அலங்கரிக்கப்பட்ட கரிய முகத்தை கைகளில் ஏந்தியபடி போரி சற்று தூரத்தில் குந்தியிருந்தான். ஆலிஸ் அவன் பக்கம் திரும்ப தலை நிமிராமலேயே, “வடக்கு – வடமேற்கு” என்று ஆங்கிலத்தில் சொன்னான்.

நான் போரியைப் பார்த்தேன். அசையவேயில்லை அவன். மண்டை முழுவதும் சுருள்சுருளாக கரிய முடி, ஆங்காங்கே வெளுக்கத்தொடங்கியிருந்தது. பெரிய மூக்கு. மிளகாய்களாக பழுத்த கன்னங்கரிய கன்னங்கள்.

நான் பார்ப்பதை கண்டு அவன் கடலுக்குள் கைகாட்டினான். “குட்டிப்பயல் அங்கே மேற்குப்பக்கமாக திரும்பிக்கொண்டிருக்கிறான்,” என்றான். நான் அவனைப் புரியாமல் பார்த்ததைக்கண்டு “குட்டிப்பயல், மேற்கில்,” என்று மறுபடியும் சொன்னான்.

அப்படியென்றால் என்ன அர்த்தம் என்று நான் அன்றிரவு ஆலிஸிடம் கேட்டேன். எங்களுக்களிக்கப்பட்டிருந்த ஒற்றையரைக்குடிலின் தரையில் நாங்கள் படுத்திருந்தோம். என் விரல்கள் அவள் வயிற்றைக் கவனமில்லாமல் தடவிக்கொண்டிருந்தன. அறை ஓரமாக வைக்கப்பட்டிருந்த சிமினிவிளக்கைச் சுற்றிச்சுழன்ற பூச்சிகளை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். கடலொளி கேட்டது. வாயிலில் திரைச்சீலை படபடத்தது. இந்தத் தீவில் எல்லா வீடுகளும் ஒற்றையரைக்குடில்கள்தான், எவற்றுக்கும் கதவுகள் இல்லை.

“இரவைத்தான் சொல்கிறார்கள்,” என்றாள் ஆலிஸ். “சூரியன் இரவில் அங்கே மறுதிசையில் திரும்புவதாக அவர்களுக்கு ஒரு தொன்மம் இருக்கிறது…” அவள் திரும்பினாள். என் வயிற்றோடு ஒன்றினாள். “உன்னுடைய அப்பாவைப்பற்றி பேச்சை எடுத்தேனென்று வருத்தமா?” என்றாள். நான் அவள் விரல்களைக் கோதினேன். “இல்லை, பரவாயில்லை,” என்றேன். அவள் என் கழுத்தில் முத்தமிட்டாள். கடல்வாசம். அவள் பொன்னிற கூந்தலில் மணல் பருக்கை பருக்கையாக பதிந்திருந்ததை கண்டேன்.

காலையொளி முகத்தில் படர நான் விழித்தபோது ஆலிஸ் இல்லை. பதிவேடும் புகைப்படக்கருவியும் எடுத்துக்கொண்டு போரியின் துணையுடன் அவள் நேர்காணல்களை தொடங்க சென்றிருக்கவேண்டும். மண்ணெண்ணெய் அடுப்பில் எனக்கு ஒரு கோப்பைத் தேநீர் வடித்துக்கொண்டு குடில் வாசலுக்குச் சென்றேன்.

மழை இல்லாத காலங்களில் கைமூரிகள் இரவில் படுக்க மட்டும்தான் வீட்டுக்குள் செல்வது வழக்கம். மற்றநேரமெல்லாம் வெளியே வானுக்கடியில்தான் வாசம். நிலத்தில், அல்லது கடலில்.

நான் சென்றபோது நீள் காது மடல்களும் பழுத்த கன்னங்களும் கன்னங்கரிய உடல்களுடன் பெண்களும் சில ஆண்களும்  குடில்களுக்கு மத்தியிலிருந்த மணல் சதுக்கத்தில் அமர்ந்திருந்தார்கள். எந்நேரமும் சேர்ந்தே இருக்கும் குழந்தைகளும் முதியவர்களும் இன்னும் சற்றுத்தொலைவில் இருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் கடல் காலையொளியில் நீலமாக, அமைதியாக விரிந்திருந்தது. அங்கிருந்தவர்கள் கீரை ஆய்ந்தார்கள். கிழங்குமாவை சலித்தார்கள். ஜம்பூரி என்று இந்தப்பகுதியில் அதிகம் கிடைக்கும் செந்நிற மீனைக் கழுவி நறுக்கி வைத்தார்கள். சிறுமிகளும் பெண்களும் குடில்களின் வெளிச்சுவற்றில் சித்திரம் தீட்டிக்கொண்டிருந்தார்கள். அலைகள், நெளிவுகள், ஆங்காங்கே பெரிய சிவந்த வட்டங்கள்.

இரண்டு வாரங்களாக அவர்களுடன் புழங்கிக்கொண்டிருந்தேன், ஆகவே நான் சென்றதும் குழந்தைகள் என்னைச் சுற்றிக்கொண்டு வந்தன. என் கையிலிருந்த வாழைப்பழங்களை துண்டாக்கி பகிர்ந்தளித்தேன். அவர்கள் கண் ஓரங்களை மேலே இழுத்துவிட்டு கண்களை இடுக்கிக்கொண்டு என்னைச்சுற்றி குதித்துவந்தார்கள். நானும் பதிலுக்கு என் முகத்தை உப்பலாக வைத்துக்கொண்டு உதட்டைப் பிதுக்கி விரல்கணுக்களை மண்டையில் வைத்துக்கொண்டேன். பிள்ளைகள் விழுந்து விழுந்து சிரித்து ஓடி மறைந்து திரும்ப வெளிவந்தார்கள். குழுவில் ஒரு பெரியவர் எங்களைப் பார்த்து சிரித்தார். கைமூரி மொழியில், “மேற்கத்தியவனே!” என்றார். “மேற்கு” என்ற சொல் எனக்குப் புரிந்தது. நான் புன்னகைத்தேன்.

தொடைகளுக்கிடையே பலாப்பழத்தை இழுத்து பிளந்துகொண்டிருந்த செலாமி என் பக்கம் நோக்கி “மின், கீராட்!” என்று அலறினாள். ஒரு விஷப்பல்லியின் பெயர் அது.

“எங்கே!” நான் குதித்தேன்.

“அதோ, தென்கிழக்குக் காலில்,” என்றாள் செலாமி.

அந்த மொழியில் திசைகளுக்கான பெயர்கள் அனைத்துமே எனக்குத்தெரியும். இருந்தாலும், என் இரண்டு கால்களில் எது என்னுடைய தென்கிழக்குக்கால் என்று எனக்கு விளங்கவில்லை. எழுந்து பதறிச் சுற்றிவந்தேன். பிள்ளைகளில் ஒன்று ஓடிவந்து அந்த ஜந்துவை தட்டிவிட்டது.

நான் கால்களை மீண்டும் மீண்டும் உதறிக்கொண்டேன். போய்விட்டது என்ற உறுதிப்பாடு வந்ததும் செலாமியை நோக்கி “நன்றி,” என்றேன். அவர்கள் மொழியில் அந்தச்சொல் ஒரு முழு வாக்கியம். “எல்லா திசைகளின் அருளும் உனக்கு அமைவதாக”

செலாமி புன்னகைத்தாள். அவள் போரிக்கு உறவுக்காரப்பெண். சிரிக்கும்போது ஜாடை தெரிந்தது. என் பக்கம் ஒரு பலாச்சுளையை கொடுத்தனுப்பினாள். “வெயிலின் சிரிப்பு என்று அதற்கு பெயர்,” என்று ஆலிஸ் பிறகு ஒரு முறை சொன்னாள். அவளுடைய பதிவேட்டில் இப்படி பல சுவாரஸ்யமான துணுக்குகளை குறித்துவைத்திருந்தாள்.

நாங்கள் சியாட்டிலிலிருந்து தென் ஆப்பிரிக்கா – ஜொஹானஸ்பர்க் வந்து, அங்கிருந்து மடகாஸ்கருக்கு இன்னொரு விமானமேறி வந்து, அங்கிருந்து ஒரு படகில் ஏறி, ஒரு நாள் பயணத்தில் இந்தத் தீவுக்கு வந்திறங்கியிருந்தோம். இரண்டு வாரம் ஆகியிருந்தது, இன்னும் ஒரு வாரத்தில் கிளம்புவோம். நான் இத்திசையில் வந்தது இதுவே முதல் முறை. ஆலிஸ் முன்பு ஒரு முறை வந்திருக்கிறாள்.

இம்முறை என்னை அங்கே தனியாக விட்டுவருவதில் அவளுக்கு விருப்பம் இல்லை. “தனியாக உன் நினைவுகளுடன் இருந்தால் நீ மனம் வருந்திக்கொண்டே இருப்பாய். என்னுடன் வா. ஆய்வு முடிந்ததும் நாம் எங்காவது செல்லலாம். கென்யா… துருக்கி… பாலி… அல்லது வியட்நாமுக்கே போகலாமே? உன் அத்தை இன்னமும் அங்கே தானே இருக்கிறாள்? அவளைச் சென்று பார்க்கலாமே?”

இந்தத் தீவின் பெயர் கைமுரா. மக்களும் மொழியும் கைமூரி. சின்னத்தீவுதான். இரண்டாயிரம் பேர் இருந்தால் மிகுதி. தீவின் மேற்கு பக்கமாக ஒரு தேவாலயமும் ஓர் ஆங்கிலப்பள்ளியும் இருந்தது. கிழக்குப்பக்கமாக, இந்த வட்டத்தில் ஒரு சிறு குழுவினர் – சில நூற்றுவர் – பழைய வாழ்க்கைமுறையை பேணியபடி வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களே ஆலிஸின் ஆய்வுக்குரியவர்கள்.

இங்குள்ள மக்களுக்கு ஆப்பிரிக்க, எத்தியோப்பிய பழங்குடிச்சாயல் இருந்தது என்று ஆலிஸ் சொன்னாள். எழுத்துமுறை கிடையாது. தாய் வழிப்பாட்டு மதம். இப்படி பல பழங்குடிக்குழுக்கள் ஆப்பிரிக்காவிலேயே இருந்தன. இவர்களின் விசேஷ திசையறிவை ஒழிந்தால் இவ்வளவு தூரம் வந்து இவர்களை ஆய்வுசெய்ய பல்கலைக்கழகம் நிதி வழங்கியிருக்க வாய்ப்பேயில்லை என்றாள் ஆலிஸ்.

நான் இங்கே வந்த முதல் சில நாட்களில் குழந்தைகளுடன் நட்பானது இதன் மூலமாகத்தான். திசைகளின் பெயர்களை கற்றுக்கொண்டதும் அப்படித்தான். பிள்ளைகளை அழைப்பேன். என் கையில் திசைச்சுழலியை திறந்துவைத்துக்கொள்வேன். ஒன்றன்பின் ஒன்றாக, “மேற்கு! வடகிழக்கு! வடமேற்கு! தென்மேற்கு! தெற்கு-தென்கிழக்கு!” என்று திசைகளின் பெயர்களை சத்தமாக சொல்வேன்.

சுஜி

ஒற்றைநொடியில் பிள்ளைகள் ஒன்றுபோல கைகாட்டுவார்கள். ஒரே திசையில் அம்புகளைப்போல் அவர்களுடைய கைகள் நீளும். நான் மட்டும் வேறு திசையில் இருப்பேன். நானும் அத்திசையில் திரும்பும்போது திசைச்சுழலியின் முள்ளும் அது சரிதான் என்று காட்டும்.

ஒரு குழந்தையைப் பிடித்து கண்ணைக்கட்டி நான்கைந்து முறை சுழற்றிவிட்டு “வடக்கு – வடகிழக்கு!” என்பேன். அவளுக்குள் ஒரு முள் சுற்றியதுபோல ஐயமே இல்லாமல் குதிகாலில் திரும்பி கைநீட்டுவாள். சிலநேரங்களில் என் திசைச்சுழலிக்கு முன்னாலேயே அவள் கை எழுந்துவிடும். சில சமயங்களில் அதைவிடமும் கூர்மையான துல்லியத்துடன்.

கைமூரிக்குழந்தைகளுக்கு என்னைப்பார்த்து ஓர் இளக்காரம். ஏனென்றால் என்னால் எந்தத் திசையையும் சரியாக சொல்லமுடியாது. சூரியனைப்பார்த்து தோராயமாக நான் சொல்வதற்குள் அவர்கள் சிரிக்கத்தொடங்கிவிடுவார்கள். “இதுகூட தெரியவில்லையா,” என்று கிண்டலடிப்பார்கள். பெரியவர்கள் இன்னும் நயமானவர்கள். ஆனால் அவர்களுக்கும் அந்த ஆச்சரியம் இருந்தது.

“கைமூரி மொழியில் வலது, இடது என்ற சொற்கள் கிடையாது. மற்ற கலாச்சாரங்களில் நாம் நம் உடலை மையமாக வைத்துக்கொண்டு, நம்மைச்சார்ந்து வலது, இடது, மேல், கீழ் என்கிறோம். இவர்களோ வலசைப்பறவைகளைப்போல் புவியை மையமாக வைத்துக்கொள்கிறார்கள். புவியின் திசைகளுக்குள் தங்களை வைத்துப்பார்க்கிறார்கள்.

மேலாகி என்ற ஒரு கைமூரிப்பெண் ஒருமுறை என்னிடம் தன்னுடைய குழந்தை கிழக்கு முலையிலிருந்து பால்குடிப்பதாகச் சொன்னாள். நாம் அதை அவளுடைய வலது முலை என்போம், ஆனால் அவளைப்பொறுத்தவரை அது கிழக்கின் முலை. அப்படியென்றால் கைமூரிகளுக்கு உடல் நம்மைப்போல தங்களுடையதல்ல. அது திசைகளில் நங்கூரம் கொண்டது. ஆகவே புவியுன் உறுப்பு.”

“ஆனால் இவர்கள் வலசை போவதில்லையே?” அவளுடைய பதிவேட்டை வாசித்துவிட்டு நான் ஆலிஸிடம் கேட்டேன்.

“ஏன், வலசைப்போகும் மனிதர்களுக்கெல்லாம் இந்த ஆற்றல் வந்துவிடுமா என்ன?” என்றாள் ஆலிஸ். முகத்தை திருப்புகையில் அவள் கண்ணாடியில் என் முகத்தின் பிம்பம் ஒரு நொடிக்குத் தெரிந்து மறைந்தது.

“அப்படியென்றால் எப்படி?” என்றேன்.

அவள் தோள் குலுக்கினாள். “யாருக்கும் தெரியாது. பழைய வழிப்பாட்டு வழக்கத்தின் எச்சமாக இருக்கலாம். அல்லது கடல் பயணிகள் என்பதால் தலைமுறைதோரும் கடத்தப்படும் விசேஷ அறிவாக இருக்கலாம். அல்லது இவர்களுடைய உணவுப்பழக்கமே ஒரு காரணமாக இருக்கலாம். இவர்கள் சாப்பிடும் ஜம்பூரி மீன் இந்தப்பகுதியில் மட்டுமே விளைவது. இரும்புச்சத்து மிக்கது. அதான் அத்தனை சிவப்பு,” என்றாள். பிறகு சிரித்து, “அந்திச்சூரியன் இறப்பதற்கு முன்னால் தன்னுடைய விதையைக் கடலில் சிந்துவதால் தான் இந்த மீன் சிவப்பாக பிறக்கிறது என்று இவர்கள் அதற்கும் ஒரு தொன்மக்கதை சொல்வார்கள்,” என்றாள். “அதுவும் சரிதானே? சூரியனைப்பார்த்து தானே திசைகளை அறிகிறோம்? சூரியனைத்தான் இவர்கள் தொன்மத்தில் திசைகளுக்கெல்லாம் தந்தை என்கிறார்கள்.”

நாங்கள் கிளம்ப இரண்டு நாள் இருக்கையில், ஓர் அந்திவேளையில், ஆலிஸ் ஊர்சதுக்கத்தில் இருந்த என்னை நோக்கி ஓடி வந்தாள். அவளுக்குப் பின்னால் சூரியன் சிவந்து செம்பந்தாக இருந்தது. ஓடி வருகையில் அவள் கூந்தலும் செந்தீற்றல்களாக பறந்தன. அவள் நிழல் நீண்டு வந்து என்னை தொட்டது. ஏதோ மிகப்பெரிய ஒன்றை அடக்கிவைத்துக்கொண்டிருந்த பாவனை அவள் முகத்தில்.

“மின், மின், இதைப்பார்!”

அங்கிருந்த பெண்களும் குழந்தைகளும் திரும்பினார்கள்.

பையிலிருந்து ஐந்து புகைப்படங்களை எடுத்தாள். நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

அவற்றில் மூன்று என்னுடைய புகைப்படங்கள். நான்கு வயதில், பதினெட்டு வயதில், இப்போது இருபத்தெட்டு வயதில் எடுக்கப்பட்டவை. மீதி இரண்டும் என் அப்பாவின் புகைப்படங்கள். ஒன்று எடுக்கப்பட்டபொது அவருக்கு நாற்பது வயது இருக்கும். மற்றொன்று சில மாதங்களுக்கு முன்னால் எடுத்தது.

“என்ன பார்க்கிறாய். ஒரு அவசரத்திற்கு எடுத்துக்கொண்டேன், என்னிடம் இப்போது வேறு படங்கள் இல்லை…” என்றாள் ஆங்கிலத்தில். குழந்தை ஒன்று குனிந்து ஒவ்வொரு படமாக எடுத்துப்பார்த்தது.

“மின், இந்தப் படங்களை வயது வரிசைப்படி அடுக்கிவைப்பாயா?” என்றாள் ஆலிஸ்.

நான் அவள் முகத்தைப்பார்த்தேன். மீண்டும் படங்களை.

“ப்ளீஸ்?” என்றாள்.

நான் அடுக்கினேன். என் குழந்தைப்படம் இடது ஓரமாகவும், அப்பாவின் கடைசிப்படம் வலது ஓரமாகவும், சற்றே தொலைந்துபோனவன்போல் நான் இப்போதிருக்கும் முகம் நடுவிலும் இருந்தது. காலத்தில் மாட்டிக்கொண்ட வலசைப்பறவைப்போல.

ஆலிஸ் படங்களை கலக்கினாள். என் பின்னால் நின்ற ஒரு பெண்ணை அழைத்தாள். அவள் மொழியில் அவளிடம் படங்களை வயது வரிசைப்படி அடுக்கச்சொன்னாள். அவளும் அதே போல் என் குழந்தைப்படத்தை இடது ஓரமாகவும், அப்பாவின் வயோதிகப்படத்தை வலது ஓரமாகவும் வைத்தாள்.

இன்னொரு பெண்ணை அழைத்தாள். அவள் எனக்கு எதிராக வந்து உட்கார்ந்தாள்.
அவளையும் அடுக்கச்சொன்னாள்.

ஆனால் இவள் வரிசையை மாற்றி, அப்பாவின் படத்தை இடது ஓரமாகவும், என் குழந்தைப்படத்தை வலது ஓரமாகவும், வைத்தாள்.

நான் ஆலிஸை பார்த்தேன். “நீ சொன்னது அவளுக்குப் புரியவில்லையா?” என்றேன்.

ஆலிஸ் அவளிடம் மீண்டும் ஒரு முறை கேட்டாள். அந்தப்பெண் படங்களை வலதிலிருந்து இடம் சுட்டிக்காட்டி, குழந்தையிலிருந்து பெரியவர் வரை சரியாகத்தானே அடுக்கியிருப்பதாக சொன்னாள்.

ஆலிஸ் அங்கிருந்தவர்கள் அனைவரையும் அடுக்கச்சொன்னாள். எல்லோருக்கும் விளையாட்டு புரிந்தது. ஆனால் சிலர் இடமிருந்து வலமும், சிலர் வலமிருந்து இடமும் அடுக்கினார்கள். நான் புரியாமல் “என்ன நடக்கிறது?” என்றேன் ஆலிஸிடம்.

“திசைகளை கவனி,” என்றாள் ஆலிஸ்.

நான் வலதுபக்கம் திரும்பினேன். அந்திச்சூரியன். “ஓ,” என்றேன். “முகங்களை கிழக்கு-மேற்காக அடுக்குகிறார்களா?”

ஒரு குழந்தையை தோளோடு பிடித்து எங்களுக்கு எதிரே கைநீட்டி, “என்ன திசை?” என்றாள்.

“தெற்கு,” என்றது.

அவளைப்பிடித்து இடதுபக்கமாக, கடற்கரையை நோக்கித் திருப்பினாள் ஆலிஸ்.

குழந்தை கடலைப் பார்த்து நின்றது.

அவளுடைய நிழல் நீண்டு அவளுக்கு முன்னால் மணலில் படர்ந்தது.

“இந்தப் படங்களை வயதுபடி சின்னதிலிருந்து பெரியதுவரை அடுக்குவாயா?” என்றாள் ஆலிஸ்.

குழந்தை அவளை ஒரு கணம் பார்த்தது.

பின்பு யோசனையே இல்லாமல், அந்தப்படங்களை தன்னுடைய நிழல் விழுந்த பரப்பில் அடுக்கத்தொடங்கியது.

என் குழந்தைப்படத்தை முதலாவதாக வைத்தது.

அதற்கு அடியில் என் பதினெட்டு வயதான முகத்தை.

அதற்கடியில் இப்போதுள்ள முகத்தை. என்னை ஒரு கணம் திரும்பிப் பார்த்தது.

அதற்கடியில், தன் கால்களுக்கருகே, அப்பாவின் படங்களை ஒன்றின் அடியில் ஒன்றாக வைத்துவிட்டு குழந்தை நிமிர்ந்தது.

“படங்களை ஏன் மேலிருந்து கீழாக அடுக்கினாய்?” என்று ஆலிஸ் கேட்டாள்.

குழந்தை ஏதோ பதில் சொன்னது. என்னுடைய முதல் படத்தை கையில் எடுத்து காற்றில் ஆட்டியது. வரிசையை கலைத்து வயதுகளை முன்னுக்குப்பின் ஆக்கியது. மீண்டும்  அடுக்கியது.

ஆலிஸ் என்னை நோக்கித் திரும்பிச் சிரித்தாள்.

“என்ன சொன்னாள்?” என்றேன்.

ஆலிஸ் படங்களை அடுக்கி தன்னுடைய பையுள்ளே வைக்கத்தொடங்கினாள்.

“என்ன சொன்னாள்?” என்றேன் மீண்டும்.

ஆலிஸ் புன்னகைத்தாள். “குழந்தைகள் கிழக்கில் பிறக்கிறார்கள், மூத்தவர்கள் மேற்கில் மறைகிறார்கள், மேற்கில் மீண்டும் குழந்தையாக புரண்டு கிழக்கில் பிறக்கிறார்கள், இதுக்கூடத் தெரியாதா உனக்கு, என்றாள்.”

***

“நாம் காலத்தை நம்மை மையமாகக்கொண்டு புரிந்துகொள்கிறோம். ஆகவே நேற்று, இன்று, நாளை, என்று கட்டுக்கோப்பாக வரிசைபடுத்திக்கொள்கிறோம். நேற்று உதிர்ந்து சென்றுகொண்டே இருக்கிறது. நாளை பிறந்துவந்துகொண்டே இருக்கிறது. மையத்தில் நாம்.  இங்குமில்லாமல் அங்குமில்லாமல் ஊசிமுனையில் நின்றபடி நிலை தடுமாறுகிறோம்.

sujiஆனால் இவர்களுக்கு காலமும் திசைகளின் விளையாட்டு. புவியின் உறுப்பு. திசைகளுக்கிடையே சுழல்கிறது காலம். கிழக்கிலிருந்து மேற்குவழியாக வழிந்து மீண்டும் கிழக்கில் உதிக்கிறது. கிழக்கு கடந்தகாலம். மேற்கு வருங்காலம். கிழக்கு இளமை. மேற்கு வயோதிகம். கிழக்கிலிருந்து வயோதிகத்தை நோக்கிப் பயணிக்கிறார்கள். மேற்கிலிருந்து இளமையை நோக்கிப் பயணிக்கிறார்கள். சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களும் வலசைப்பறவைகளைப்போல். நிரந்தரமான வீடில்லாதவர்கள். திசைகளில் முடிவில்லாமல் திரிபவர்கள், ஆனால் திசையில்லாதவர்கள். சுழன்றுகொண்டிருக்கும் காலத்தில், பரந்துவிரிந்த திசைகளில், வெவ்வேறு புள்ளிகளில் மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு பெரிய சாபமா என்ன?”

என் மடிகணினியை மூடிவைத்தேன். விளக்கின் ஒளியை இலேசாக குறைத்துவிட்டு ஆலிஸ் பக்கத்தில் வந்து படுத்தேன்.

***

நாங்கள் அங்கிருந்து வியட்நாம் சென்றோம். அங்கே சூரியன் இங்கிருப்பது போல் ரத்தச்சிவப்பாக இல்லை. ஈரப்பதம் வழியாக எந்நேரமும் இலேசாக, கண்ணுக்கு இதமாக இளம் மஞ்சளாக வழிந்தது அதன் ஒளி. என் அத்தை இன்னும் அங்கேதான் இருக்கிறார். அவரும் பழைய கதைகளைத்தான் பேசினார். போர், வறுமை, வெளியேற்றம்.

நான் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதால், எனக்கு சலிப்பு வரவில்லை. நானும் என் கதைகளை சொன்னேன். சில பழையவை, சில புதியவை.

அங்கிருந்து நாங்கள் திரும்ப சியாட்டிலுக்கு வந்தோம். சியாட்டில் மேற்கில் இருக்கிறது. ஆனால் எங்களுக்கு அதுவும் கிழக்கு நோக்கிய பயணமாகவே இருந்தது.

எட்டு மாதம் கழித்து சோஃபி கிம் பிறந்தாள். அப்பாவினுடைய கண்களை கொண்டு வந்திருந்தாள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...