மலேசியத் தமிழ் சிறுகதை வரலாறும் புதிய அலைகளும்

முன்னுரை

பாலபாஸ்கரன்

மலேசிய இலக்கியச் சூழலில் சிறுகதைக்கான முக்கியத்துவம் தொடர்ச்சியாகவே இருந்து வருகிறது. மலேசியாவைத் தாண்டி தமிழர்கள் வாழும் வேறு நாடுகளில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் கவனம் பெறுவதுடன் பரிசுகளையும் பெற்றுள்ளன. நாவல் மற்றும் நவீன கவிதைகளைவிட சிறுகதை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனையை மலேசியப் படைப்பாளிகள் செய்துள்ளனர். விமர்சன மரபு இல்லாத இந்நாட்டில் எழுதப்படும் அனைத்துமே படைப்புதான் எனும் மனநிலையில் எழுத்தாளர்கள் திளைத்திருக்கும் சூழலில், மலேசியச் சிறுகதை இலக்கியத்தின் வரலாற்றை ஒரு கழுகுப் பார்வையில் அறிவதும் அதில் எவ்வாறான ஏற்றத்தாழ்வுகள் நடந்துள்ளன என ஆராய்வதுமே அடுத்தகட்ட நகர்வுக்கு வழி சமைக்கும்.

ந.பாலபாஸ்கரன் வகுத்த காலகட்டம்

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பலரும் மலேசியத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளனர். தனிநபர், நாளிதழ், இயக்கம் ஆகியவற்றின் இடைவிடாத முயற்சியால் மட்டுமே இன்றளவும் மலேசியாவில் சிறுகதை இலக்கியம் வேரூன்றியுள்ளது. இந்த முயற்சிகள் தொடர்ச்சியான இலக்கிய முன்னெடுப்புகளுக்குக் காரணமாக இருந்தாலும், சில காலகட்டங்களில் தொய்வையும் சில காலகட்டங்களில் புதிய எழுச்சியையும் காணமுடிகிறது. இதுபோன்ற காலகட்டங்களை ந.பாலபாஸ்கரன் தொடக்க காலம் (1930-1941), ஜப்பானியர் காலம் (1942-1945), கதை வகுப்பு முடியும் காலம் (1946-1952), முற்சுதந்திர காலம் (1953-1957) பிற்சுதந்திர காலம் (1958-1969), மறுமலர்ச்சிக் காலம் (1970-1978) எனப் பிரித்துக் காட்டுகிறார்.

மலேசிய – சிங்கப்பூர் தமிழ் இலக்கியம், வரலாற்று ஆய்வு ஆகியவற்றில் ந.பாலபாஸ்கரன் அவர்களின் பங்களிப்பு பிரதானமானது. பல மூலத் தரவுகளைக் கொண்டு நிரூபணங்களுடன் உரையாடக்கூடியது. 1978வரை அவர் வகுத்துத் தொகுத்து நூலில் (மலேசியத் தமிழ்ச் சிறுகதை, அரசி பதிப்பகம், புதுச்சேரி, 1995) வழங்கியுள்ள காலகட்ட வரிசைகளே இன்றும் பல கல்வியாளர்களால் ஒப்புவிக்கப்பட்டு வருகிறது. அதை ஒட்டிய மேற்கொண்டு ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அந்த ஆய்வை ஒட்டியோ மறுத்தோ புதிய கருத்துகளும் உருவாகிவிடவில்லை.

ந.பாலபாஸ்கரன் அவர்கள் வகுத்துள்ள காலகட்டத்தின் கட்டமைப்பை அடிப்படைச் சட்டகமாகக் கொண்டு, மா.இராமையாவின் ஆய்வுநூலின் தரவுகளையும் இணைத்து (மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் – 1996, வரலாற்றுத் தொகுப்பு) கடந்து வந்த அக்காலத்தை ஓரளவு அறியலாம். மேலும் ‘இலக்கிய வட்டம்’ போன்ற அதிகம் ஆராயப்படாத இதழ்களில் உள்ள தரவுகளையும் இணைத்து, மலேசியத் தமிழ்ச் சிறுகதை வரலாற்று பின்புலத்தையும் ஓரளவு உள்வாங்க இயலும்.

தொடக்க காலம் (1930 – 1941)

மலேசியாவின் சிறுகதை இலக்கியம் ஏறத்தாழ எண்பது ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. 1930-இல் பதிப்பிக்கப்பட்ட ‘நவரச கதாமஞ்சரி’ எனும் நூல்தான் மலேசியச் சிறுகதை வரலாற்றில் தொடக்கமாகக் கொள்ளப்படுகிறது. யாழ்ப்பாணம் வல்வை வே.சின்னைய்யா அவர்களால் வெளியிடப்பட்ட இத்தொகுப்பு ஐந்து சிறுகதைகளை உள்ளடக்கி நூறு பக்கங்களைக் கொண்டிருந்தது. ‘தமிழ் நேசன்’ (1932), ‘பாரதமித்திரன்’ (1934), ‘தமிழ் முரசு’ (1935), ‘தமிழ் கொடி’ (1939) போன்ற நாள், வார மற்றும் மாத இதழ்கள் அப்போது தொடர்ந்து வெளிவந்தாலும் பொருள் ஈட்ட வந்த தமிழ் நாட்டு மற்றும் இலங்கை நாட்டுத் தமிழர்கள் தாயகத்திற்குத் திரும்ப வேண்டும் என்ற நோக்கில் இருந்ததால் இலக்கியத்தில் அவர்கள் கவனம் முழுவதும் அவரவர் நாட்டையே சார்ந்திருந்தது. 1930 – 1950 வரை இந்திய தேசிய விடுதலையையும் தமிழ்நாடு மற்றும் இலங்கை சார்ந்த சமுதாயக் கதைகளுமே மலேசியாவில் எழுதப்பட்டுள்ளதாக முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. இதன்மூலம் இக்காலகட்டத்தில் மலேசிய இலக்கியம் புதிய போக்குகள் எதையும் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது.

ஜப்பானியர் காலம் (1942 – 1945)

இந்த நான்கு ஆண்டுகளை ஜப்பானியர் காலம் என ந.பாலபாஸ்கரன் குறிப்பிட்டாலும், மா.இராமையா மலேசிய இலக்கியத்திற்கான ‘இருண்ட காலம்’ என இந்த நான்கு ஆண்டுகளை வரையறை செய்கிறார். இலக்கியச் செயல்பாடுகள் அனைத்தும் 1941- இல் தொடங்கிய இரண்டாவது உலகப் போரினால் நிலைகுத்தின என்று அவர் கூறுகிறார். இலக்கியம் மட்டும் அல்லாது கல்வி, தொழில், பொருளாதாரம் போன்றவை சீரற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை, போராட்டத்தில் இருந்ததும் அவர் கூற்றின் வழி தெரியவருகிறது. அக்காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரை எதிர்க்க ஜப்பானியர் ஆசியுடன் வெளிவந்த சில இதழ்களில் கவிதை, சிறுகதை போன்றவை இருந்தாலும் 1946க்குப் பிறகே மலேசியாவில் சிறுகதை நுட்பங்களை அறியும் போக்கு உருவானது. அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் தமிழர்கள் வாழ்ந்த சூழலில் இலக்கியத்தில் புதிய போக்குகள் உருவாக வாய்ப்பில்லாமல் போனதை இதன்வழி அறிய முடிகிறது.

மா.இராமையா

கதை வகுப்பு முடியும் காலம் (1946 – 1952)

மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய எல்லைக்கோடாக 1946-ஆம் ஆண்டை மா.இராமையா குறிப்பிடுகிறார். 1945-இல் போர் நிறுத்தம் ஏற்பட்டு ஓராண்டு காலம் இராணுவ ஆட்சி (B.M.A) நடந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடந்த போரில் ஏற்பட்ட அவலமான வாழ்க்கையால் அதுவரை பெரிய இலக்கிய முயற்சிகள் நடக்காத சூழலில், 1946-இல் ஓரளவு நிலை சீரானவுடன் ஏறத்தாழ முப்பது கவிதை நூல்கள் வெளிவந்ததோடு சி.வீ.குப்புசாமியின் இரண்டு கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன.

1946-இல் ஏ.எம்.எம். இப்ராகிம் எழுதிய ‘கடைச் சிப்பந்திகளின் கண்ணீர்’ எனும் ஐந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பும், 1947-இல் அனுபூதிக்கையான் எழுதிய ‘மறக்க முடியாது’ என்ற, ஜப்பானியர் கொடுமையைச் சொல்லும் மற்றுமொரு சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது. 1947-இல் சிறுகதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தன் ஆண்டு மலரை வெளியிட்ட ‘தமிழ் முரசு’ 13 சிறுகதைகளை அதில் பிரசுரித்துள்ளது. இவற்றோடு, 1948-இல் ‘தமிழ்ச்சுடர்’ திங்களிதழ் சிறுகதைப் போட்டியையும் நடத்தி சிறுகதை வளர்ச்சிக்கு உரமூட்டியுள்ளது.

1950 களில் ‘தமிழ் நேசன்’ நாளிதழ் மூலம் சுப.நாராயணனும் பைரோஜி நாராயணனும் ‘கதை வகுப்பு’ நடத்தியுள்ளனர். ஏறத்தாழ ஆறு மாதங்களே இவ்வகுப்புகள் நடத்தப்பட்டன. இம்முயற்சியின் உச்சக்கட்டமாக 1951-இல் கதை வகுப்பில் கலந்துகொண்டவர்களுக்கு 11 மார்ச் 1951-இல் தேர்வும் வைக்கப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களில் 3 பேர் மேதை எழுத்தாளர்களாகவும் 23 பேர் சிறந்த எழுத்தாளர்கள் என்றும் 17 எழுத்தாளர்கள் தேர்ந்தவர்கள் எனவும், நல்ல எழுத்தாளர்களாக 14 பேரும், ஆர்வ எழுத்தாளர்கள் பட்டியலில் 18 எழுத்தாளர்களையும் தரம் பிரித்து அறிவித்தார்கள்.

ந.பாலபாஸ்கரன் அவர்களது கூற்றின் அடிப்படையில் இந்தக் காலகட்டத்தை மலேசியச் சிறுகதைச் சூழலில் ஏற்பட்ட முதல் அலையாகக் குறிப்பிடலாம். இதில் தங்களை இணைத்துக்கொண்ட பலர், பின்னர் தீவிரமாக சிறுகதை புனைவதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். மேற்சொன்ன வகுப்புகளின் தாக்கத்தில் வளர்ந்தவர்களாக மா.செ.மாயதேவன் மற்றும் மா.இராமையா ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களின் கூட்டுக்கற்பனை முயற்சியில் வெளியான ‘இரத்ததானம்’ (1952) எனும் தொகுப்பு, அக்கால சிறுகதை வளர்ச்சிக்குத் தக்கசான்றாக உள்ளது. தமிழ் இலக்கியத்திற்கென தனித்த அக்கறையுடன் முன்னெடுக்கப்பட்ட செயல்பாடுகள் அதற்கு முந்தைய காலத்தில் நடைபெறவில்லை. மலேசியாவில் இலக்கிய வளர்ச்சிக்கென முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளால் ‘கதை வகுப்பு முடியும் காலம்’ New Wave – எனப்படும் புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அலை ஏற்பட, கதைகள் குறித்து இரு நாரயணன்களும் செய்த கலந்துரையாடல்களும் அக்காலகட்டத்துப் படைப்புகளின் தரம் குறித்த விமர்சனமும் காரணமாக உள்ளன.

கு.அழகிரிசாமி

முற்சுதந்திர காலம் (1953 – 1957)

தமிழ் நேசனில் 1952-இல் பொறுப்பாசிரியராகப் பதவியேற்ற பிரபல எழுத்தாளர் கு.அழகிரிசாமியும் மலேசியாவில் சிறுகதை இலக்கியம் வலுப்பெற உழைத்தவர்களுள் ஒருவர். எழுத்தாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, காதல் இல்லாத சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1957-இல் அவரை மையமாகக் கொண்டு கோலாலம்பூரில் ’இலக்கிய வட்டம்’ ஒன்று அமைந்தது. ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைகளில் இந்த ‘இலக்கிய வட்டம்’ கலந்துரையாடலை நடத்தி சிறுகதைக் கலை வளர ஊக்குவித்தார். தலைநகர் தவிர கிள்ளான், சிரம்பான், கோலாசிலாங்கூர் போன்ற பல ஊர்களில் இருந்தும் எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். மா.செ.மாயதேவன், பெரி.முத்தையா, சி.அன்பரசன், செ.குணசேகர், மா.இராமையா, மு.தனபாக்கியம் போன்ற எழுத்தாளர்கள் அப்போது தீவிரமாக இணைந்து செயல்பட்டனர். கு.அழகிரிசாமி சிறுகதை எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த மலாயாவில் சிறுகதைகளுக்கென பரிசு கொடுக்கும் திட்டத்தை ‘மலாயா தமிழ்ப் பண்ணை’ அமைப்பின் மூலம் முதலில் தொடங்கினார் என சி.வேலுசாமி (1973) இலக்கிய வட்டம் சிற்றிதழில் “பரிசுத் திட்டங்களும் இலக்கிய வட்டங்களும்” எனும் கட்டுரையில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 1952-ஆம் ஆண்டு மலேசியா வந்துசென்ற அந்தக் காலகட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் மறைந்தபோது அவர் நினைவாக கு.அழகிரிசாமியே சிறுகதைப் போட்டியை முன்நின்று நடத்தியுள்ளார். அப்போது, ஆனந்த விகடன் ஆசிரியரின் நண்பர் மூலம் 150 ரிங்கிட் பரிசுப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

1953-இல் தமிழ் முரசு நாளிதழ் ‘மாணவர் மணிமன்ற மலர்’ என்ற வார இணைப்பு ஒன்றைத் தொடங்கியது. இந்த இணைப்பு, பள்ளி மாணவர்களும் சிறுவர்களும் இலக்கிய அறிமுகம் பெற வழியேற்படுத்திக் கொடுத்தது. மாணவர் மணிமன்றத்தில் ஈடுபட்ட பலர் பின்னர் ‘தமிழ் இளைஞர் மணிமன்றம்’ அமைத்து இலக்கியம் வளர உழைத்தனர். பல பிந்தைய எழுத்தாளர்களுக்கு இதுவே பயிற்சிக்களமாகவும் இருந்துள்ளது. ரெ.கார்த்திகேசு, சை.பீர்முகம்மது, க.கிருஷ்ணசாமி, சா.ஆ.அன்பானந்தன், மு.அப்துல் லத்திப், ம.முருகையன், கே.எம்.யூசுப், எம்.குமாரன், மு.அன்புச்செல்வன், வி.தீனரட்சகி ஆகியோர் மாணவர் மணிமன்ற மலர் மூலம் உருவானவர்கள் ஆவர்.

இதே சமயத்தில் 1952-இல் எழுத்தாளர்களை ஊக்குவிக்க உருவான சிங்கப்பூர் ‘தமிழ் முரசு எழுத்தாளர் பேரவை’ மற்றும் 1953-இல் தமிழ் முரசு தொடங்கிய ‘ரசனை வகுப்பு’ ஆகியவை அக்கால சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றின. நாளிதழ்களைத் தவிர, பல வார, மாத இதழ்கள் இக்காலகட்டத்தில் மலேசியாவில் காத்திரமான இலக்கியச்சூழலை உருவாக்கியே வந்துள்ளன. ‘திருமுகம்’, ‘மலைமகள்’, ‘நவரசம்’, ‘வெற்றி’, ‘மனோகரன்’, ‘கலைமலர்’, ‘மாணவர் பூங்கா’ ஆகிய இதழ்களும் இலக்கிய ஆர்வலர்களால் நடத்தப்பட்டதை அறியமுடிகிறது.

இதன் அடிப்படையில் ஆராயும்போது முற்சுதந்திர காலத்தில் நாளிதழ்கள், நாளிதழ்களில் பொறுப்பு வகித்தவர்கள் மலேசியச் சிறுகதை இலக்கியத்திற்கு முக்கியப் பங்களித்துள்ளதைக் காணமுடிகிறது. இக்காலகட்டத்தில் பல எழுத்தாளர்கள் தீவிரமாகச் செயல்படத் தேவையான புறச்சூழல் உருவாகியிருந்ததையும் அறிய முடிகிறது. கு.அழகிரிசாமியின் வருகை, இரசனை வகுப்பு முதலானவை சிறுகதையின் வடிவம் சார்ந்த மாற்றங்களில் அக்கறை செலுத்தியுள்ளது.

பிற்சுதந்திர காலம் (1958 -1969)

5.7.1958-இல் சி.வடிவேலு அவர்களின் முயற்சியில் ‘மலாயா தமிழ் எழுத்தாளர் சங்க’ அமைப்புக்கூட்டம் கோலாலம்பூரில் உள்ள பங்சார் தமிழ்ப்பள்ளியில் நடந்தது. 1959-இல் இதற்குப் பதிவு கிடைத்து, சங்கம் செயலிழந்த காரணத்தால் அதன் பதிவு ரத்தாகியது. சி.வேலுசாமியின் முயற்சியில் 1962ல் நடந்த அமைப்புக் கூட்டத்தால் 26.3.1963-இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பதிவானது.

கோ.சாரங்கபாணி

இதேபோல, கோ.சாரங்கபாணியும் தமிழர்களை ஒருமுகப்படுத்தும் முகமாக தமிழ்மொழிப் பண்பாட்டு எழுச்சியை ஊட்டும் நோக்கில் தமிழர் திருநாளை 1950-களின் மத்தியில் தொடக்கி சிறுகதை எழுதும் போட்டி உட்பட பல இலக்கியப் போட்டிகள் மூலமாக எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் கோ.சாரங்கபாணி போன்றவர்களின் ஊக்குவிப்பால் 1960 முதலே மலேசியச் சூழலை மையமாகக் கொண்ட படைப்புகள் வெளிவரத் தொடங்கின. அவர் முன்னெடுத்த தமிழர் திருநாள் இயக்கத்தின் போட்டிச் சிறுகதைகளை ‘தமிழ் முரசு’ நாளிதழ் பிரசுரித்தது. அவர் ஆசிரியராக இருந்த சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’ நாளிதழ் இலக்கியப் போட்டிகள் நடத்தி உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவித்தது. ‘தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலர்’ மூலம் உருவான எழுத்தாளர்கள் ‘தமிழ் இளைஞர் மணிமன்றம்’ நடத்திய மாநாட்டை ஒட்டி சிறுகதைப் போட்டிகள் நடத்தி, பரிசும் வழங்கினர். 1968-இல் ‘மணிக்கதைகள்’ எனும் பெயரில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் தொகுப்பு ஒன்றினை வெளியிட்டனர். மலேசியச் சிறுகதை இலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சியை அந்தத் தொகுப்பு தெளிவாக எடுத்துக்காட்டியது.

1961-ஆம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியத்துறைத் தலைவராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றிய தனிநாயகம் அடிகள் நடத்திய முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இலக்கியத்தின் புதிய பரிணாமங்களை உணர்ந்துகொள்வதற்கு உதவி புரிந்ததாக எழுத்தாளர் சை.பீர்முகம்மது குறிப்பிடுகிறார். இதுபோன்று இயக்கங்களின் தொடர் செயல்பாடுகளால் ஊக்கமடைந்து, எழுத்தாளர்கள் தங்களது எழுத்துப்பிரதிகளை நூல் வடிவமாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மலாயா தமிழ் எழுத்தாளர் சங்க அமைப்பு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழர் திருநாள் உருவாக்கம், உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான நகர்ச்சியில் கலை இலக்கிய ஈடுபாடு உள்ளவர்கள் உற்சாகமாகச் செயல்பட்டாலும் அதில் சிறுகதை ஓர் அங்கமாக இடம்பிடித்ததே தவிர அதன் வளர்ச்சிக்கென தனித்த முன்னெடுப்புகள் எதுவும் இக்காலத்தில் நடைபெறாததால் சிறுகதையில் புதிய அலை எதுவும் இக்காலப்பகுதியில் உருவாகவில்லை எனத் திட்டவட்டமாகக் கூறமுடிகிறது.

மறுமலர்ச்சிக் காலம் (1970 -1979)

இக்காலகட்டத்தை மலேசியத் தமிழ்ச் சிறுகதையின் மறுமலர்ச்சிக் காலமாகக் குறிப்பிடும் ந.பாலபாஸ்கரன் அதற்கான சான்றுகளையும் விரிவாகவே முன்வைத்துள்ளார். நாட்டில் நடந்த பொதுத்தேர்தலும் (1969) அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட ‘மே கலவரமும்’ இந்தியர்களின் சமகாலப் பிரச்சினைகள் குறித்து எழுத்தாளர்களைச் சிந்திக்க வைத்தது. குடியுரிமைப் பிரச்சினை, வேலை பெர்மிட், வேலையில்லாத் திண்டாட்டம், குடியிருப்பு, இவற்றின் மையச் சரடாக இருக்கும் வறுமை ஆகியவற்றின் பாதிப்பை உணர்ந்து எழுத்தாளர்கள் அவற்றைத் தொட்டு அதிகமாக எழுத ஆரம்பித்த காலமும் இதுதான்.

1970-களில் இரா.தண்டாயுதம் அவர்கள் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் புத்திலக்கிய விரிவுரையாளராக வந்து இணைந்தது மலேசியச் சிறுகதைச் சூழலில் முக்கியமான நிகழ்வு. அவர் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்குப் பலவகையில் பங்காற்றியது இந்தக் காலகட்டத்தில்தான். மலாயாப் பல்கலைக்கழக இந்தியல் ஆய்வியல் துறை நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கு சிறுகதைத்துறையின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்ச்சி என்றும் கூறலாம். மலேசியாவில் தேசிய அளவில் நடத்தப்பட்ட முதல் சிறுகதைக் கருத்தரங்காக அது அமைந்திருந்தது அதற்கு முக்கியமான காரணம். முதன் முதலாக மலேசியச் சிறுகதைகளைப் பற்றிய ஒரு விரிவான ஆராய்ச்சியாக இக்கருத்தரங்கு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இரா.தண்டாயுதம்

பேராசிரியர் இரா.தண்டாயுதம் பல்கலைக்கழகத்துடன் மட்டும் தம்மைச் சுருக்கிக்கொள்ளாமல் சக எழுத்தாளர்களுடனும் இணைந்து ஓர் இயக்கமாகவே செயல்பட்டுள்ளார். அவரது ஆலோசனையில் ரெ.கார்த்திகேசு அவர்கள் முன்னின்று உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’ குழுவும் அதன் மூலம் உருவான ‘இலக்கிய வட்டம்’ எனும் சிற்றிதழும் அதற்குத் தக்க சான்று. எழுத்தாளர்களிடம் கேட்டுப் பெறப்படும் படைப்புகளை நகல் எடுத்து அடுத்தடுத்து வரும் கூட்டத்தில் வழங்கி விவாதித்துள்ளனர். இலக்கிய வட்டம் இதழ் எந்த விளம்பரத்தையும் எதிர்பாராமல் எளிய முறையில் நவீன இலக்கியத்தின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இலக்கிய இதழாக செயல்பட்டுள்ளது. மேலும், இவ்விதழ் அக்காலத்தில் இருந்த இலக்கியப் போக்கிலிருந்து மாறுபட்டு, புதிய முறையை அறிமுகப்படுத்தும் குழு முறையிலான நகர்ச்சியைக் கொண்டிருந்தது. இதனை அவ்விதழில் பிரசுரிக்கப்பட்ட கதைகள் வழி அடையாளம் காண முடிகிறது. நவீன இலக்கியத்தின் அடிப்படைக் குணமான தனிமனிதனின் நியாயங்களை நோக்கும் போக்கு இவ்விதழில் எழுதப்பட்ட சிறுகதைகளில் முயற்சி செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

அதன் பின்னர் 1970-களின் இறுதியில் நவீன இலக்கியம் சார்ந்த முயற்சிகள் மலேசியாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. முக்கியமாக, கெடாவில் ‘நவீன இலக்கியச் சிந்தனை’ என்னும் அமைப்பு இளஞ்செல்வன், சீ.முத்துசாமி, நீலவண்ணன் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த முருகு சுப்ரமணியன் சிறுகதை வளர்ச்சிக்காகச் சில ஊக்குவிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. சிறுகதைக்கான மாதாந்திரக் கருத்தரங்குகளைக் கூட்டி ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு கதைக்கு 50 ரிங்கிட் பரிசு வழங்கப்பட்டது. மேலும், முருகு சுப்ரமணியன் தமிழ் நேசனில் ஆசிரியராக இருந்த காலத்தில் நாளிதழ்களில் வெளிவந்த சிறுகதைகளுக்குப் பணமும் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் 1972-இல் தமிழ் நேசன் மூலம் பவுன் பரிசுத் திட்டத்தைத் தொடங்கி, தரமான சிறுகதைகள் உருவாக ஊக்குவித்துள்ளதும் கவனிக்கத்தக்கதாகும். இந்தப் பவுன் பரிசுப் போட்டி எழுத்தாளர்களை அதிகம் கவர்ந்ததோடு பல நல்ல சிறுகதை எழுத்தாளர்களை இனங்காண வழி செய்திருக்கிறது.

மலேசிய எழுத்தாளர் சங்கத்தில் சி.வடிவேலு தலைவராக இருந்தபோது சிறுகதைத் திறனாய்வு தொடக்கி வைக்கப்பட்டு பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளைத் திறனாய்வு செய்து பரிசுக்குரிய கதையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எழுத்தாளர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். பின்னர் இவ்வாறு தேர்வு பெற்ற சிறுகதைகள் 1974-ஆம் ஆண்டு ‘பரிசு’ எனும் தலைப்பில் நூல் வடிவமும் பெற்றுள்ளது. புதிய சமுதாயம், வானம்பாடி, உதயம் போன்ற இதழியல் முயற்சிகளும் சிறுகதைகள் வளர்ச்சிக்கு உரமூட்டின.

இதன் அடிப்படையிலேயே இக்காலகட்டம் மறுமலர்ச்சிக் காலமாகக் கருதப்படுகிறது. அதன் உச்சமாக மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை நடத்திய மலேசியத் தமிழ்ச் சிறுகதை கருத்தரங்கைக் குறிப்பிடலாம். ந.பாலபாஸ்கரன் குறிப்பிடும் இம்மறுமலர்ச்சி காலம் மலேசியச் சிறுகதை இலக்கியத்தில் நிகழ்ந்த இரண்டாவது அலை எனலாம். மலேசியச் சிறுகதை இலக்கியம் நவீனத்துவத்தை உள்வாங்கத் தொடங்கியதையும் தீவிரத் தளத்தில் பயணிக்கத் தொடங்கியதையும் அக்கால முயற்சிகள் காட்டுகின்றன. ‘இலக்கிய வட்டம்’ இதழ் மற்றும் ‘நவீன இலக்கியச் சிந்தனை’ ஆகிய முயற்சிகள் சிறுகதையில் புதிய போக்குகள் உருவாக முக்கியக் காரணிகளாக இருந்துள்ளன. இவை நடப்பு இலக்கியச் சூழலில் இருந்து மாறுபட்ட போக்கை உருவாக்கியுள்ளதை அக்காலப்பகுதியின் பெரும்பாலான படைப்பிலக்கிய முயற்சிகளின்வழி அறிய முடிகிறது. நவீன இலக்கியம் குறித்த பிரக்ஞை, இக்காலத்தில் ‘புதிய அலை’ உருவாகக் காரணியாக இருந்துள்ளது.

80களுக்குப் பிறகு

எனது முதுகலை ஆய்வு பணிக்காக, 80களுக்குப் பிறகான சிறுகதை வளர்ச்சியைப் பற்றி புரிந்துகொள்ள முனைந்தபோது அதை மேலும் சில பகுப்புகளாகச் செய்யத் திட்டமிட்டேன். 2015 வரை அவ்வாறு மூன்று காலகட்டமாக வகுத்தேன். ஆய்வுலகில் இது ஒரு எளிய வரையறையே. தேவைக்கு ஏற்ப இது இன்னும் உடைத்தும் வகுத்தும் தொகுக்கப்படலாம் என அறிகிறேன்.

இயக்கங்களின் காலம் (1980 – 1997)

1980 முதல் 1997 வரை அதிகமான இலக்கியச் செயல்பாடுகள் நடந்துள்ளன. எழுபதுகளில் காணப்பட்ட வேகம் எண்பதுகளின் துவக்கத்திலிருந்து சற்றுக் குறைந்தே காணப்பட்டது. தொடர்ந்து, இளைஞர்கள் இலக்கியத்தில் ஈடுபடவும் புதியவகை இலக்கிய முயற்சிகள் மலரவும் பல்வேறு இயக்கங்கள் முனைப்புடன் பட்டறைகள் போட்டிகள் போன்றவற்றை நடத்தின. படைப்பூக்க முயற்சிகள் அக்காலத்தில் தொடர அவை வழிவகுத்தன.

1980-களில் மலேசிய இலக்கியம் குறிப்பாக சிறுகதை இலக்கியம் எனும்போது அனைவராலும் தவறாமல் குறிப்பிடப்படுவது மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவையின் ‘பேரவைக் கதைகள்’ சிறுகதைப் போட்டியாகும். பேரவைக் கதைகள் நூலின் முதல் தொகுப்பு முயற்சி 1982-1983ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. சிறுகதை இலக்கியத்திற்கு ஊன்றுகோலாய் நின்று மலேசிய மண்ணையும் மனிதர்களையும் வடிக்க மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையினர் முன்னெடுத்திருந்த இப்பெருந்திட்டத்தின் முதல் பேரவைக் கதைகளின் சிறுகதை நூல் தொகுப்பு 1982-ஆம் ஆண்டு பத்து சிறுகதைகளுடன் வெளிவந்தது. இதில் முழுவதுமாக மலாயாப் பல்கலைக் கழக மாணவர்களே பங்கெடுத்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். அடுத்தவணையில் (1982-1983) பேரவைத் தலைவராக இருந்த டத்தோ ஆ. தெய்வீகன் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் பரிசுக்குரிய சிறந்த மூன்று சிறுகதைகளுடன் மேலும் ஏழு சிறுகதைகளையும் தேர்ந்தெடுத்து நூல்வடிவம் தரப்பட்டது. 1985-இல் இப்போட்டி பொதுமக்களும் பங்குபெறும் வகையில் விரிவாக்கப்பட்டு பரிசு பெற்ற படைப்புகள் தொகுப்பாக வெளிவரத் தொடங்கின. மலேசியாவில் சிறுகதைத்துறையில் தீவிரமாக இயங்கும் பெரும்பாலான எழுத்தாளர்கள் இப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளனர் என்று கூறுமளவுக்கு மலேசியச் சிறுகதை நகர்ச்சியில் இப்போட்டி முக்கியத்துவம் வகிக்கிறது. பல ஆளுமை மிக்க தமிழ் ஆசிரியர்களை உருவாக்கிய பெருமை ஸ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு உண்டு. அந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிபெறும் வருங்கால ஆசிரியர்கள் மத்தியில் இலக்கிய ஊக்கத்தை ஏற்படுத்த ‘தளிர்’ என்ற இதழ் உருவாக்கப்பட்டு, 1992 முதல் 1994 வரை சில இதழ்கள் வெளிவந்தன.

டத்தோ தெய்வீகன்

இதைப்போலவே மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்தியப் பிரதிநிதித்துவ சபையும் உயர்கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்களுக்காக 1997 முதல் சிறுகதை மற்றும் கவிதைக்கான போட்டிகளையும் நடத்தி, தொகுப்புகள் வெளியிட்டு வரும் மற்றோர் இயக்கம் .

ஓர் இலக்கிய அமைப்பாக இல்லாத நிலையிலும் ‘தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம்’ இலக்கியத்துக்கு ஆற்றிவரும் பங்கு முக்கியமானது. 1994-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை சிறுகதைப் போட்டிகளை நடத்தி, பரிசளித்து, எழுத்தாளர்களை ஊக்குவிப்பதுடன் பரிசுபெற்ற படைப்புகளைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டு வருகிறது. மேலும் இந்தக் கூட்டுறவுச் சங்கம் கலை இலக்கியத்திற்கென தனி வாரியத்தை அமைத்து கடந்த 2012 முதல் புத்தகப்போட்டி ஒன்றையும் நடத்தி வருகிறது. இதனுடன், மலேசிய பாரதிதாசன் இயக்கமும் 1993 முதல், மலேசியச் சிறுகதைத்துறைக்குத் தனது பங்களிப்பை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் ’தமிழ் எழுத்தாளர் தின விழா’வுக்காகச் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளித்து சிறப்புச் செய்துள்ளது.

சிறுகதைத்துறையை மேம்படுத்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மாதாந்திர சிறுகதைத் திறனாய்வுக் கருத்தரங்கை முன்னெடுத்தது. அக்காலகட்டத்தில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதை வளர்ச்சிக்கான ஒரு முக்கியத் திட்டமாகவும் இதைக் குறிப்பிடலாம். ஆதி குமணன் மலேசிய நண்பன் நாளிதழின் ஆசிரியராகவும் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தபோது முதன் முதலாக இக்கருத்தரங்கு 1994-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மலேசியாவில் அக்காலகட்டத்தில் வெளிவந்த எல்லாத் தமிழ் ஏடுகளிலும் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்ட சிறுகதைகளையெல்லாம் திரட்டி அவற்றைத் திறனாய்வுக்கு உட்படுத்தி சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பவுன் பரிசு வழங்கி சிறப்புச் செய்யும் திட்டமாக இது செயல்பட்டது. ஏறத்தாழ பத்தாண்டுகள் நடைபெற்ற இச்சிறுகதைக் கருத்தரங்குகள் நல்ல சிறுகதைகள் உருவாக எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தை அளித்து வந்துள்ளன.

முனைவர் கிருஷ்ணன் மணியம்

டேவான் பகாசா டான் புஸ்தகா: மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர். கிருஷ்ணன் மணியம் அவர்கள் 1989-ஆம் ஆண்டில் ‘டேவான் பகாசா டான் புஸ்தகா’ எனும் அமைப்பின் (மொழி வளர்ப்பு நிறுவனம்) திட்டத்தின்கீழ் சில மலாய்க் கதைகளைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்தக் கதைகள் ‘தமிழ் நேசன்’, ‘மயில்’ மற்றும் ‘தினமணி’யில் பிரசுரம் கண்டன. அதேபோல, தமிழ்ச் சூழலில் எழுதப்படும் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம் போன்றவற்றைப் பற்றிய மலாய்மொழிக் கட்டுரைகள் டாக்டர். இரா.தண்டாயுதம், விரிவுரையாளர். திரு.பழனியப்பன் மற்றும் டாக்டர். ச.சிங்காரவேலு ஆகியோர் முயற்சியில் 1984-ஆம் ஆண்டில் ‘டேவான் சாஸ்த்ரா’ இதழில் தொடர்ந்து வெளியீடு கண்டது.

அகம்: டாக்டர்.சண்முகசிவா முயற்சியில் உருவான ‘அகம்’ என்னும் புத்திலக்கியம் சார்ந்த அமைப்பு மலேசியச் சிறுகதை இலக்கியம் வளரக் காரணமாக இருந்தது.

டாக்டர்.தண்டாயுதம் நினைவிலக்கியப் பேரவை: டாக்டர். தண்டாயுதம் தமிழகம் திரும்பி மரணம் அடைந்த நிலையில் மலேசியாவில் ‘டாக்டர்.தண்டாயுதம் நினைவிலக்கியப் பேரவை’ தொடங்கப்பட்டு, அப்பேரவையின் மூலம் எழுத்தாளர் வீ.செல்வராஜ் ஆண்டுதோறும் ‘மலேசியத் தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்பில் சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றைத் தொகுப்புகளாக 1988 முதல் 1994 வரை வெளியிட்டது முக்கியமான பணியாக இருந்துள்ளது. இயக்கங்களும் அமைப்புகளும் இக்காலகட்டத்தில் சிறுகதை இலக்கியத்தை, போட்டிகள், கலந்துரையாடல்கள், மொழிபெயர்ப்புகள் மூலம் முன்னெடுத்து, தொடர்ந்து இந்நாட்டில் சிறுகதை உருவாக்கத்துக்கு வழிவகை செய்துள்ளனவேயன்றி புதிய அலை உருவாவதற்கான சூழலை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவு.

தனிநபர் காலம் (1998 – 2005)

இயக்கங்கள் வழமையான பணிகளைச் செய்துகொண்டிருந்த அதேசமயம் தனி நபர்களும் மலேசியச் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கான பணிகளைச் செய்துகொண்டே இருந்தனர். 1998 முதல் 2005 வரை தனி நபர்கள் இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்ற போக்கினை அதிகமாகவே காண முடிகிறது.

சை.பீர்முகம்மது

சை.பீர்முகம்மது : ‘வேரும் வாழ்வும்’ என்ற தலைப்பில் 1950 – 2001 வரை எழுதப்பட்ட முக்கியமான மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளை மூன்று தொகுதிகளாக (தொகுதி 1- 1999, தொகுதி 2 – 2001, தொகுதி 3-2001) வெளியிட்ட சை.பீர்முகம்மதுவை, ரெ.கார்த்திகேசு மலேசியத் தமிழ் எழுத்துலகின் கிரியா ஊக்கியென வர்ணிப்பது குறிப்பிடத்தக்கது. இப்பெரும் முயற்சி வெகுமக்கள் மத்தியில் பரவ அவர் அக்காலத்தில் மாபெரும் இலக்கிய ஆளுமையான ஜெயகாந்தனை மலேசியாவுக்கு அழைத்து வந்து வெளியீட்டு விழாக்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மாத்தளை சோமு: இலங்கை எழுத்தாளரான மாத்தளை சோமு, மலேசியச் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து 1995-இல் ‘மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள்’ என்னும் தலைப்பில் தமிழ்நாட்டில் பதிப்பித்தார். இந்தத் தொகுப்பு, பின்னர் மலேசிய இடைநிலைப் பள்ளிகளில் பாடப் புத்தகமாகவும் வைக்கப்பட்டது .

கீழாம்பூர்: அதேபோல தமிழகத்தின் கலைமகள் இதழ் ஆசிரியர் கீழாம்பூர் 2003-இல் 32 மலேசியச் சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புகளை ‘மலேசியச் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

மா.சண்முகசிவா: 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகான புதிய போக்குகளையும் புதிய பாதைகளையும் வகுத்துக்கொண்டு, டாக்டர் மா.சண்முகசிவா இளைஞர்களை நோக்கி மீண்டும் ‘அகம்’ இலக்கியக்குழுவை முடுக்கினார். சில மூத்தபடைப்பாளிகள் இதில் பங்கெடுத்தாலும் சு.யுவராஜன், சிவா பெரியண்ணன், பா.அ.சிவம், ம.நவீன் போன்ற இளம் எழுத்தாளர்களும் அதில் கலந்துரையாடினர்.

மா.சண்முகசிவா

மாற்று ஊடகக் காலம் (2006 – 2012)

Downing, J., மாற்று ஊடகமானது உள்ளடக்கம், தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் வெகுஜன ஊடகச் செயல்முறையிலிருந்து வேறுபடுவதாகக் குறிப்பிடுகிறார். வெகுஜன ஊடகங்கள், பெருநிறுவனங்கள், அரசு ஆகியவற்றின் நலனைப் பிரதிநிதித்து இயங்கும் வேளையில், மாற்று ஊடகம், ஏழைகள், சிறுபான்மையினர், தொழிலாளர் நலன் கருதி இயங்கும் வணிக நோக்கமில்லா ஊடகமாகவும் இதனை வகைப்படுத்துகிறார். Chris Alton, அதன் தயாரிப்பு சிறிய அளவிலானது என்பதாகவும் மேலாதிக்க, வெகுஜன, தனிநபர்களை நோக்கி எதிர்வினையாற்றுவதாகவும் விளக்குகிறார்.

1940-களில் இருந்து மலேசியாவில் வெகுமக்கள் ஊடகங்களே சிறுகதை இலக்கியத்தை வளர்த்து வந்தன. இவ்வூடகங்கள் பெரும் மக்கள்திரளைச் சென்று அடைவதால் அவை கடுமையான தணிக்கை முறையைப் பின்பற்றியே மலேசியாவிலும் நடத்தப்பட்டன. கருத்துகளை முன்வைப்பதே சிறுகதைகளின் பிரதான நோக்கமாக இருந்தது. சமூக ஒழுக்கங்களைக் கேள்வி எழுப்பும், பொதுவாசிப்புக்கு ஒவ்வாத உரைநடையைக் கொண்டிருக்கும் சிறுகதைகள் பெரிய ஊடகங்களில் பிரசுரமாவதோ, ஒலிபரப்பாவதோ முற்றிலும் மறுக்கப்பட்டிருந்தது. அனைத்து கேளிக்கைகளையும் உள்ளடக்கி வைத்திருந்த நாளிதழ்களும் வார மாத இதழ்களுமே சிறுகதை இலக்கியத்திற்காகத் தங்கள் பக்கங்களை ஒதுக்கின. ‘இலக்கிய வட்டம்’ போன்ற மாற்று ஊடக முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் பெரிய வணிகப்பரப்பைக் கொண்ட வெகுஜன இதழ்களே சிறுகதை இலக்கியத்தை பொதுவாசிப்புக்கு முன்னெடுத்தன. இந்த இடைவெளியை நிறைவு செய்யும் வண்ணம் பிப்ரவரி 2006-இல் காதல் எனும் இலக்கிய இதழ் மாற்று இலக்கிய ஊடகமாக மலேசியாவில் வெளிவரத் தொடங்கியது.

புதிய அலை

ஆங்கிலத்தில் ‘New Wave’ – புதிய அலை என்ற சொற்பதம் 1950களின் பிற்பகுதியிலும் 1960 களின் தொடக்கத்திலும் பிரெஞ்சுத் திரைப்படத் தயாரிப்பாளர்களை நோக்கி விமர்சகர்கள் உருவாக்கி வைத்ததாகும். திரைத்துறையில் மரபாக இருந்துவந்த பாணியை உதறித்தள்ளி ஒலி, ஒளி, கதை, களம், கூறுமுறை என அனைத்திலும் புதிய முறையைக் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிக்கு ‘French New Wave’ எனும் சொற்பதம் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் இச்சொற்பதம் அனைத்து கலை, இலக்கிய, அரசியல், பொதுச் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படத் தொடங்கியது. ‘இருக்கின்ற சூழலிலிருந்து மாறுபட்ட புதுமையான சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் முன்னெடுக்கும் ஆக்ககரமான குழு முயற்சி’ என இதைப் பொருள் கொள்ளலாம்.

கலை, சினிமா என குறிப்பிட்ட ஏதாவது ஒரு துறையில் நவீன பாணியிலான, வித்தியாசமான அல்லது அசாதாரணமான முயற்சியை அதிர்ச்சியூட்டும்படி மேற்கொள்ளும் முறையாக இச்சொற்பதம் ஆய்வாளர்களால் விளக்கப்படுகிறது. அவ்வகையில் இலக்கியச் சூழலில் ‘புதிய அலை’ என்பதனை வழமையான இலக்கியச் சூழலிலிருந்து மாறுபட்டு, புதிய இலக்கியப்போக்கு உருவாவதைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளலாம். அதிகமான புனைவிலக்கிய உற்பத்தியாலும் அதிகமான இதழியல் முயற்சியாலும் புதிய அலை உருவாவதில்லை. ஏற்கனவே இருக்கின்ற இலக்கியச் சூழலிலிருந்து மாறுபட்டு உள்ளடக்கம் சார்ந்தோ, வடிவம் சார்ந்தோ புதிய போக்குகள் உருவாகி அது சமகால இலக்கியச் சூழலை உசுப்பினால் அதைப் ‘புதிய அலை’ எனக் கொள்ளலாம். அதுபோலவே, புனைவிலக்கியத்தின் உள்ளடக்கத்தால் மட்டுமே ‘புதிய அலை’ உருவாவதில்லை. இலக்கியத்தை முன்னெடுக்கும் ஊடகப்போக்கும் இயக்கங்களின் போக்கும் மாற்று முறையில் இயங்கும்போது இவ்வாறான புதிய அலை ஏற்பட வாய்ப்புள்ளது.

அ. காதல் (2006)

‘காதல் இதழ்’ சமகால இளம் படைப்பாளிகளின் இணைவில் நடத்தப்பட்டது. அதன் ஆசிரியராக வீ.அ.மணிமொழி, இணை ஆசிரியராக ம.நவீன், ஆசிரியர் குழுவைச் சேர்ந்த சு.யுவராஜன், பா.அ.சிவம் என முற்றிலும் இளைஞர்களின் எண்ணத்தில் உதயமான இம்மாத இதழ் அனைத்தையும் ஆராயும்போது காதல் இதழ் நான்கு முக்கியமான பணிகளை மலேசிய இலக்கியச் சூழலில் செய்துள்ளதைக் கணிக்க முடிகிறது.

  1. இளம் படைப்பாளிகளின் புதிய புனைவிலக்கிய (சிறுகதை, கவிதை) முயற்சிகளை அங்கீகரித்து அதனைத் தணிக்கையின்றி செறிவு செய்து பிரசுரித்தல்.
  2. சமகாலத்தில் தமிழகத்தில் நிகழும் இலக்கிய முயற்சிகளோடு மலேசிய இளம் எழுத்தாளர்களையும் இணைத்துக்கொள்ளல்.
  3. அவர்களுடன் உரையாடலை ஏற்படுத்துவதோடு அவர்கள் எழுத்தை காதல் இதழில் மீள் பிரசுரம் செய்தல்.
  4. சமகால எழுத்தின்மேல் விமர்சனங்களை முன்வைத்தல்.
  5. நவீனத்துவம் என்பதை இலக்கிய வகையாக மட்டும் இல்லாமல் அதன் முழுமையை அறிதல்

மே 2006-இல் காதல் இதழ் மூலமாக மனுஷ்ய புத்திரன் மலேசியாவுக்கு வரவழைக்கப்பட்டதும் நாடு முழுவதும் அவரது பயணங்களையும் உரையாடல்களையும் காதல் இதழ் ஒழுங்கு செய்ததும் இந்நாட்டில் நவீன இலக்கியம் குறித்த அறிமுகத்துக்குத் தூண்டுகோலாயின. நவீன சிந்தனை என்பது புதியவகை எழுத்துப்போக்காக மட்டும் இல்லாமல் அதற்கேற்ற மொழியும் சிந்தனையும் எவ்வாறு உருப்பெறுகிறன என இளைஞர்கள் அறிந்ததை அவர்களது படைப்புகளில் பார்க்க முடிந்தது.

ஜெயமோகன்

ஆகஸ்ட் 2006-இல் தமிழகத்தின் மற்றுமொரு முக்கிய நவீன இலக்கியவாதியான ஜெயமோகன் ‘காதல்’ இதழ் மூலம் மலேசியாவுக்கு வரவழைக்கப்பட்டதும் பின் அவருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடல்களும் இக்காலகட்டத்தில் ‘புதிய அலை’ உருவாவதற்குத் துணை நின்றன. சமூகப் பார்வையிலிருந்து விடுபட்டு வாழ்வைத் தனித்துவமாகப் பார்ப்பதும், படைப்புகளை விமர்சனத்துக்குள்ளாக்குவதும், இனத்தையோ, மொழியையோ வைத்துப் பார்க்காமல் தனிமனிதனை வைத்துப் பார்ப்பதும் சமூக விழுமியங்களை விமர்சிப்பதுமே நவீன இலக்கியம் என்பதான புரிதலை இளம் எழுத்தாளர்களின் மத்தியில் எழுத்தாளர் ஜெயமோகன் விதைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த முன்மாதிரியை உள்வாங்கிக்கொண்டே ஜூன் 2007-இல் வல்லினம் எனும் இலக்கிய இதழ் உதயமானது.

ஆ. வல்லினம் அச்சு இதழ் (2007 – 2015)

2007-ஆம் ஆண்டு தொடங்கி 35 வயதிற்கும் குறைவான இளைஞர்கள் இணைந்து நடத்திய வல்லினம் எட்டு இதழ்கள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டிருந்தாலும் 28 சிறுகதைகள் பிரசுரமாகியிருப்பதும் அவை, வடிவ ரீதியிலும் உள்ளடக்க ரீதியிலும் மாறுபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. வல்லினம் இதழ் ம.நவீனை ஆசிரியராகவும் பா.அ.சிவத்தை துணை ஆசிரியராகவும் கொண்டு வெளிவந்தது. முதல் இதழ் வெளியீட்டுக்குப் பின் மஹாத்மன், யுவராஜன், தோழி, யோகி, சந்துரு என அன்றைய இளம் எழுத்தாளர்கள் சிலர் ஆசிரியர் குழுவில் இணைந்தனர்.

மலேசியாவில் அருகிப்போயிருந்த விமர்சனப்போக்கை ‘காதல்’ இதழ் போலவே வல்லினமும் முன்னெடுத்தது. அதே காலகட்டத்தில் மலேசியாவில் வருகை தரும் பேராசிரியராக இருந்த எம்.ஏ.நுஃமான் அவர்கள் வல்லினம் குழுவினரிடம் காட்டிய இணக்கமான போக்கு வல்லினம் மேலும் காத்திரமாகச் செயல்பட வகை செய்திருந்தது.

இ. அநங்கம் அச்சு இதழ்

ஜூன் 2008-இல் உதயமான அநங்கம் இதழும் மாற்று ஊடகமாகவே செயல்பட்டது. கே.பாலமுருகனை ஆசிரியராகக் கொண்டு உருவான இவ்விதழ் மலேசிய தீவிர எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் வாசகர்களையும் இணைப்பது என்ற அடைமொழியுடன் பிரசுரமானது. தமிழகத்தின் எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணனின் விமர்சன உரையுடன் முதல் இதழ் வெளிவந்துள்ளது.

ஈ. முகவரி

01.06.2010-இல் வல்லினம் குழுவினரின் மற்றுமொரு மாத இருமுறை அச்சுப்பத்திரிகை என ‘முகவரி’ வெளியீடு கண்டது. தன்னை இடைநிலை ஏடு என பிரகடனப்படுத்திக்கொண்ட அப்பத்திரிகை ‘வெகுமக்களின் மாற்று முகம்’ என்ற அடைமொழியில் 8 இதழ்கள் மட்டுமே பிரசுரிக்கப்பட்டது. நவீன இலக்கியத்தை எளிய வடிவில் வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க இப்பத்திரிகை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உ. செம்பருத்தி

2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு முக்கியமான இலக்கிய நிகழ்வாக செம்பருத்தி சார்பாக அதன் ஆசிரியரான கணபதி கணேசனால் முன்னெடுக்கப்பட்ட ‘கவிராத்திரி’யைச் சுட்டலாம். இது பெரும்பாலும் கவிதையை மையமாகக் கொண்டே நடத்தப்பட்ட உரையாடல் ஆகும். 2011-இல் வல்லினம் ஆசிரியர் குழுவில் இருந்த சு.யுவராஜன் செம்பருத்தி இதழின் ஆசிரியர் ஆனபின் சிறுகதை இலக்கியம் சார்ந்த பதிவுகள் அதில் சற்றுக்கூடுதலாகப் பிரசுரமாகத் தொடங்கின.

ஊ. வல்லினம் இணைய இதழ்

வல்லினம் அச்சு இதழாக வருவது நின்றபின்னர் செப்டம்பர் 2009-இல் வல்லினம் இணைய இதழாக வெளிவரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அச்சு இதழைவிட வல்லினம் இணைய இதழ் அரசியல், சமூக, இலக்கியப் பரப்பில் அதிக தீவிரத்துடன் விமர்சனங்களை முன்வைத்தது.

இணைய இதழாக வெளிவந்த வல்லினம் மலேசிய இலக்கியச் சூழலில் பெரும்பாய்ச்சலை நிகழ்த்த அதில் பங்குகொண்ட எழுத்தாளர்களும் காரணமாக அமைந்தனர். ஜெயமோகன், அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி, எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஆதவன் தீட்சண்யா, எம்.ஏஃநு·மான், லதா, சிங்கை இளங்கோவன், லீனா மணிமேகலை போன்ற மலேசியாவுக்கு வெளியில் இருந்த முக்கியமான தமிழ் இலக்கியவாதிகளும் சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, மா.சண்முகசிவா போன்ற மலேசிய இலக்கியவாதிகளின் பங்களிப்பும் ஒருங்கே கிடைக்கப்பெற்ற இதழாக வல்லினம் திகழ்கிறது.

காதல் இதழ் போலவே வல்லினம் இணைய இதழ் மூலமாகவும் தமிழகத்திலிருந்து பல எழுத்தாளர்கள் அழைத்து வரப்பட்டனர். குறிப்பிட்ட தலைப்புகளை ஒட்டி இந்த எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களிடமிருந்து கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. வல்லினம் வகுப்புகள் என்ற பெயரில் இளம் படைப்பாளர்களுக்கு வகுப்புகளும் இக்காலப்பகுதியில் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எ. பறை

அநங்கம் இதழ் நின்ற பின் கே.பாலமுருகன் மீண்டும் பறை என்ற பெயரில் இதழ் ஒன்றை நடத்தினார். ஒரு இதழ் மட்டுமே ‘பறை’ பிரசுரமானது. (2014-இல் வல்லினம் குழுவினரால் பறை எனும் பெயரில் தொடங்கப்பட்ட ஆய்விதழுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.)

ஏ. களம்

பின்னர் கே.பாலமுருகன் களம் எனும் இதழை ஆரம்பித்தார். இது ஒரு இதழுடன் நின்றுபோனது.

ஐ. வலைப்பூக்கள்

வல்லினம் வலைதளம் போலவே பலரும் தங்களுக்கான சுய வலைப்பூக்களை உருவாக்கத் தொடங்கினர். ம.நவீன், கே.பாலமுருகன், சு.யுவராஜன், தயாஜி, பூங்குழலி வீரன், அ.பாண்டியன், சிவா பெரியண்ணன், கங்காதுரை, முனிஸ்வரன் குமார், அகிலன் என இளம் எழுத்தாளர்களோடு மா.சண்முகசிவா, கோ.புண்ணியவான், ரெ.கார்த்திகேசு போன்ற மூத்த படைப்பாளிகளும் தங்களுக்கான வலைப்பூக்களை உருவாக்கி சுதந்திரமாக படைப்பிலக்கியங்களில் ஈடுபடத் தொடங்கினர். நாளிதழ்களில் பிரசுரமான தங்கள் படைப்புகளைப் பதிவு செய்தனர். சமகால இலக்கியம் குறித்து காத்திரமாகப் பதிவிட்டனர்.

2006-இல் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட மாற்று ஊடகங்கள் படைப்பாளிகளைச் சுதந்திரமாகச் செயல்படத் தூண்டியதுடன் தீவிர இலக்கியச்சிந்தனை உள்ளவர்கள் ஒன்றிணைவதற்கான களத்தையும் உருவாக்கித் தந்தது. மாற்று ஊடகங்கள் பெரும்பான்மை மக்களுக்கான ஊடகமாகச் செயல்படாததாலும் அவற்றின் நோக்கம் மாற்று முயற்சிகளை வரவேற்பதாகவும் இருந்ததால் இக்காலகட்டத்தில் இளம் எழுத்தாளர்கள் மத்தியில் புதிய அலை தோன்றியது. தங்களுக்கான இதழைத் தாங்களே நடத்திக்கொள்ளவும், இணையத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதை விரிவான வாசகர்பரப்புக்கு எடுத்துச்செல்லவும் தணிக்கையற்ற வெளியில் புனைவிலக்கியங்களை உருவாக்கவும் அவர்கள் முழுவீச்சுடன் செயல்படத்தொடங்கினர். இந்த அலை புனைவிலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்ததோடு படைப்பாளிகள் பத்திரிகையின் தேவை, அதன் தணிக்கைமுறை, போன்றவற்றை கவனத்தில் வைக்காமல் தங்கள் ஆளுமையை வெளிப்படுத்தச் சாதகமான சூழலையும் உருவாக்கியது.

மலேசிய சிறுகதை வளர்ச்சியின் இறங்கு முகம்

மலேசிய சிறுகதை வளர்ச்சி தனித்த ஒரு பாதையில் பயணித்தாலும் அதன் இறங்கு முகம் உருவாக சிலர் முக்கியப் பங்காற்றியுள்ளனர். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மலேசியத் தமிழ் இலக்கியத்தை முன்னெடுக்கும் இருக்கைகளில் இருந்தவர்கள், முன்வைத்த தமிழக ஆளுமைகள் வழி இங்குத் தவறான முன்மாதிரிகள் உருவாகின. கல்விக்கூடங்களில் டாக்டர்.இரா.தண்டாயுதம் நாவல் இலக்கியத்திற்கு மு.வரதராசனை முக்கியப் படைப்பாளியாக முன்னெடுத்ததைப் போல ஆதி.குமணன், வைரமுத்து மற்றும் சிவசங்கரியை முக்கிய இலக்கியப் பிம்பங்களாக்கி மலேசிய எழுத்து ஆர்வலர்களிடம் எடுத்துச்சென்றார். அப்போது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், வானம்பாடி போன்ற இளைஞர்களைக் கவர்ந்த இதழ் அவர் பொறுப்பில் இருந்த காரணத்தால் வெகுஜன இலக்கியங்களே இங்குப் பரப்பப்பட்டன. அவரைத் தொடர்ந்து தலைவரான இராஜேந்திரன் அந்தப் பணியை இன்னும் திறம்படச் செய்தார்.

இராஜேந்திரன் காலகட்டத்தில் எழுத்தாளர் சங்கம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. அதிகமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதால் அவை ஆரோக்கியமான நிகழ்வுபோலக் காட்டப்பட்டாலும் அவை பெரும்பாலும் கொண்டாட்ட மனநிலைக்கென உருவாக்கப்பட்டன. கவிதைக்கு சினேகன், பா.விஜய் போன்றவர்கள் அழைத்து வரப்பட்டதைப் போல நாவல் இலக்கியத்திற்கு வைரமுத்து போன்ற சினிமா பாடல் ஆசிரியர்களும் 2000-க்குப் பின் மாலன் போன்ற ஊடகக்காரர்களும் அழைத்துவரப்பட்டு அவர்கள் மூலம் பட்டறைகள் நடத்தப்பட்டன. தரமில்லாதவர்களின் வழிகாட்டலில் தரமற்ற படைப்புகள் தொடர்ந்து வரத்தொடங்கின. உண்மையில் அந்தந்த காலகட்டத்தில் மிதமாக ஆனால் மிகச்சரியாக மலேசியத் தமிழ் இலக்கியம் பயணித்துக் கொண்டிருந்த சூழலில் இராஜேந்திரன் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றதும் மிக வேகமாக ஆனால் மிகத்தவறான பாதையில் தன் பயணத்தை மாற்றிக்கொண்டது. அதற்குமுன் இலக்கிய ஆளுமைகள் ஏற்றிருந்த தலைமைப் பொறுப்பின் நாற்காலியை ஊடகக்காரரான ராஜேந்திரன் நிரப்பியதும் வெகுசனப் பாதையில் மலேசிய இலக்கியத்தை எடுத்துச்செல்ல அரும்பாடுபட்டார். திலீப்குமார், பிரபஞ்சன் போன்ற தீவிர எழுத்தாளர்களையும் வைரமுத்துவையும் ஒரே மேடையில் வைத்து அழகு பார்த்தார். மலேசியாவில் ஜனரஞ்சக இலக்கியங்களுக்கு, ஜனரஞ்சக இலக்கியவாதிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியதும் அவர்களை ’முன்மாதிரி ஆளுமை’களாக்கி கல்விக்கூடங்களுக்குக் கொண்டு சென்றதிலும் எழுத்தாளர் சங்கத்துக்கு நிறைய பங்களிப்பு உண்டு.

முடிவு

80 ஆண்டுகளுக்கும் மேல் வரலாறு கொண்ட மலேசியச் சிறுகதை உலகில் மொத்தம் மூன்று காலகட்டங்களில் புதிய அலைகள் உருவாகியுள்ளன.

முதல் அலை கதை வகுப்பு முடியும் காலம் (1946 – 1952) – மலேசிய வாழ்வைச் சொல்லத் தொடங்கியதில் இந்தக் காலகட்டம் புதிய போக்கை உருவாக்கியது. இது உள்ளடக்க ரீதியில் நடந்த மாற்றம்.

இரண்டாவது அலை மறுமலர்ச்சிக் காலம் (1970 -1979) – மலேசியாவில் நவீன இலக்கியம் குறித்த பிரக்ஞை ஏற்பட்ட காலம் இது. வடிவ ரீதியிலும் கருத்தியல் ரீதியிலும் இக்காலத்தில் புதிய போக்குகள் உருவாயின.

மூன்றாவது அலை மாற்று ஊடகக் காலம் (2006 – 2012) – இக்காலத்தில் பெரும்போக்கான பத்திரிகைகளில் இருந்து மாறுபட்டுப் புதிய இதழ்கள் உருவாயின. அதற்கு ஏற்ப நவீனத்துவம், பின் நவீனத்துவம், மாய எதார்த்தம் போன்ற வடிவங்களில் சிறுகதைகள் எழுதப்பட்டன. விளிம்புநிலை மனிதர்கள் குறித்து இக்காலகட்ட கதைகளில் அதிகம் பேசப்பட்டது. எழுத்தாளர்களைச் சுதந்திரமாகச் செயல்படத்தூண்டிய காலமும் இதுதான்.

இன்று நாம் கடப்பது எவ்விதமான காலம் என்பதை இப்போது தீர்மானிக்க முடியாவிட்டாலும் நான் இதை விமர்சன காலமாக உத்தேசிக்க விரும்புகிறேன். அதற்கான அறிகுறிகள் 2013இல் உருவானது எனலாம்.

மலேசிய இலக்கியச் சூழலில் புதிய அலை மீண்டும் உருவாக, விமர்சனப் போக்கு அதிகரிக்க வேண்டியிருந்ததை மலேசியாவில் நடந்த ஓர் அபத்தமான சம்பவமே உணர வைத்தது. 2013-இல் எழுத்தாளர் தயாஜி எழுதிய ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதை வல்லினம் இணைய இதழில் பிரசுரமானது. Oedipal Complex உளவியல் சிக்கலால் பாதிக்கப்பட்டவன் தாய், தோழி எனத்தொடங்கி காளி தெய்வம் வரை காமம் கொள்வதாக எழுதப்பட்ட கதையைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கைகள் பறந்தன. காவல் நிலையத்தில் அக்கதை குறித்து விமர்சனம் செய்யப்பட்டது. அறிவுபூர்வமான தர்க்கங்கள் நிராகரிக்கப்பட்டு உணர்ச்சியின் அடிப்படையில் வசைகள் ஒன்று சேர்ந்தன. விளைவாக தயாஜியின் வானொலி அறிவிப்பாளர் பணி பறிபோனது. ஒரு படைப்பிலக்கியத்தை விமர்சன ரீதியில் அணுகத் தெரியாமல் அதனோடு விவாதிக்க முடியாமல் வசை பாடுதலே விமர்சனம் எனும் நிலைப்பாட்டில் தொடர்ந்த அறியாமையை வல்லினம் குழுவினர் அறிந்தனர். அறிவார்ந்த பகிர்வும் ஆய்வும் இந்நாட்டில் நடைபெற வேண்டும் என ‘பறை’ இதழைத் தொடங்கினர். மொத்தம் 6 இதழ்கள் வெளிவந்த ‘பறை’ ஓர் ஆய்விதழாகவே செயல்பட்டது. ‘பறை’ மூலம் நிறைய விமர்சனங்களும் மாற்றுக்கருத்துகளும் விரிவான முறையில் வைக்கப்பட்டன.

வல்லினம் அப்போக்கை மாற்றும் நிலையை நோக்கியே தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. அதன் தொடக்கமாக 2016 ரவாங் நகரில் இருநாள் விமர்சன அரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது. மலேசியப் படைப்பாளர்களின் படைப்புகளை நேரடியாகவே விமர்சனம் செய்து அதை உரையாடலாக மாற்ற இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன் மலேசியாவுக்கு அழைத்துவரப்பட்டு இளம் எழுத்தாளர்கள் மத்தியில் சிறுகதைக்கான அடிப்படை விதிகள் குறித்த ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது.
அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக ‘புனைவு நிலை உரைத்தல்’ எனும் நூலை வெளியீடு செய்தது. மலேசியாவில் நவீன இலக்கியத்தில் பங்களிப்புச் செய்த படைப்பாளர்களின் சிறுகதைகளை, கறாரான விமர்சனத்துக்கு உட்படுத்தி அவற்றில் முக்கியமான எட்டு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பொதுவாசிப்புக்கு எடுத்துச்செல்வதோடு அவர்கள் கதைகளைக் குறித்த உரையாடலும் இங்கு நடக்க வேண்டும் என்ற நோக்கில் அந்நூல் தயாரானது.

2016 முதல் 2020 வரை மலேசியாவில் இரசனை விமர்சன மரபு எவ்வாறான மாற்றங்களை நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் உண்டாக்கியுள்ளது என்பது ஆய்வுக்கு உட்பட்டது. அந்த ஐந்து ஆண்டு கால வளர்ச்சியைத் தக்கத் தரவுகளோடு அணுகுவது அடுத்து வரக்கூடிய காலக்கட்டத்தை வடிவமைக்கத் துணைப்புரியலாம்.

  • இக்கட்டுரை புனைவு நிலை உரைத்தல் எனும் நூலில் இடம்பெற்ற எனது முன்னுரை மற்றும் எனது முதுகலை ஆய்வின் தரவுகள் அடிப்படையில் உருவானது.
(Visited 2,577 times, 1 visits today)