கடந்த பல வருடங்களாகத் தொடர்ந்து உலக சினிமாக்களையும் மலேசிய சினிமாக்களையும் பார்த்துக் கவனித்தும் வருகிறேன் என்பதைவிட இப்படங்களை விமர்சிப்பதற்கு வேறேதும் விஷேசமான தகுதிகள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஒரு திரைப்படத்தை விமர்சிக்க திரைப்படத்தை இயக்கியவரால்தான் முடியும் என்றால் உலகில் அகிரா குரோசாவா தன் சக இயக்குனர்களின் திரைப்படங்களுக்குச் சினிமா விமர்சனம் எழுதியிருக்கக்கூடும் அல்லது வங் கார் வாய் தன் சக ஹங் காங் சினிமாக்களுக்குச் சினிமா விமர்சனம் எழுதியிருக்கக்கூடும். ஆனால் உலக அளவிலேயே அப்படி நடக்காதபோது, கலையை விமர்சிக்க அதன் தீவிரமான இரசிகனாக இருப்பதே சிறப்பு எனத் தோன்றுகிறது.
மலேசிய மலாய் சினிமா, சீன சினிமாவோடு தமிழ்ச்சினிமாவின் வருகையையும் அடைவையும் ஒப்பிட்டே பேச வேண்டியுள்ளது. ஒரு நிலத்தின் வெவ்வேறு படைப்பு வெளிப்பாடுகளை விமர்சனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. யஸ்மின் அமாட், அமீர் போன்றவர்கள் மலாய் சினிமாவின் ஆளுமைகளாக அறியப்பட்டதோடு அவர்களின் படங்கள் உலகத் திரைப்பட விழாக்களில் கவனமும் பெற்றுள்ளன. யஸ்மின் அமாட் அவர்களின் திரைப்படமான செப்பேட் 2009ஆம் ஆண்டிலேயே உலகத் திரைப்பட விழாக்களில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரது சினிமா அரசியல் ரீதியில் கட்டியெழுப்பப்பட்ட புனிதங்களை உடைத்து மீண்டும் அதையே இன்னொரு புனித செயல்பாடாக மாற்றுவதால் தீவிர விமர்சனத்திற்கும் உள்ளாகின்றது.
அதே போல சீன சினிமாக்களும் தொழில்நுட்ப ரீதியிலும் கதைத் தேர்வுகளிலும் பல மாற்றங்களை அடைந்துள்ளது என்றே சொல்லலாம். சமீபத்தில் வெளிவந்த ‘The journey’ திரைப்படம் மலேசிய சினிமா வசூலை முறியடித்திருக்கிறது. பொதுமக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்ததோடு வெற்றியும் அடைந்திருக்கிறது. சீனக் கலாச்சார வாழ்வைக் காட்டியிருப்பதோடு அதனை உடைத்து மீறி வெளிப்பட முடியும் என்ற சாத்தியத்தையும் படம் பேசுகிறது. யஸ்மின் அமாட் உருவாக்கி வைத்திருக்கும் கலைப்படம் என்கிற மாயையை இப்படம் தன்னுடைய நுண்ணரசியலால் மிஞ்சி நிற்கிறது என்றே சொல்ல முடிகிறது.
மூன்று வகையில் மலேசிய சினிமாவை புரிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். முதலாவதாக அம்மொழியில் இதற்கு முன் வந்த திரைப்படங்களை அப்படம் அரசியல் ரீதியிலும் கதை ரீதியிலும் மிஞ்சுவது, அடுத்ததாக தமிழ்நாட்டு சாயலைக் கொண்டிருப்பது மற்றும் கலைப்படம் என்கிற மாயையில் சிக்கிக்கொண்டு வெளிப்படுவது. இந்த மூன்றும் மலேசிய சினிமாவை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவக்கூடும். முதலில் இந்த மூன்றைப் பற்றியும் தனித்தனியாகப் பேசலாம்.
அரசியல் / கதை
மலேசியாவின் நிலத்தையும் வாழ்வியலையும் கூர்மையாகப் பார்க்கும் ஒரு விமர்சனப் பார்வை எல்லாம் படைப்பாளிகளுக்கும் இருக்கின்றதா? மலேசிய வாழ்வின் ஆழத்தைக் கவனிக்கும் விமர்சன அணுகுமுறை இருக்கும் படைப்பாளிகளால்தான் மலேசியத்தனமிக்க படைப்பைக் கொடுக்க முடியும். மலேசியாவில் எடுக்கப்படும் ஒரு தமிழ்ச்சினிமாவில் தமிழ் வாழ்க்கையையும் தமிழர்களையும் மட்டும் காட்டுவது போலித்தனமானதுதான். நம் அன்றாட வாழ்வில் ஒரு மலாய்க்காரரோ ஒரு சீனரோ கட்டாயம் இடம் பெற்றிருப்பர். ஒரு பன்முக கலச்சார சூழலோடு பிணைந்திருக்கும் மலேசிய வாழ்வு இப்படியாகத்தான் அமைந்திருக்கிறது.
பாலியில் வாழும் இந்துக்களைக் காட்ட நினைக்கும் ஒரு படைப்பு அங்குள்ள Konghucu, Protestan போன்ற இனங்களை மறைத்துவிட்டோ ஒளித்து வைத்தோ காட்டுவதில் ஒரு படைப்பு நேர்மை இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு நிலப்பரப்பை நாம் எப்படி ஒளிக்க முடியும்? ஓர் இனம் இன்னொரு இனத்தைச் சுரண்டி வாழ்கிறது என்றால் அதைத் தன் படைப்பில் சொல்ல நினைப்பதுதானே படைப்பு அரசியல்?
‘வெண்ணிற இரவுகள்’ படம் மலேசியாவையும் மியான்மாரையும் முக்கிய கதைக்களமாகக் கொண்டிருக்கிறது. மலேசியாவில் பிறந்து வளர்ந்த இரண்டு மனிதர்களில் ஒருவரான கதாநாயகன் மியான்மாரில் தனது வாழ்வின் ஒரு பகுதியை அங்கு வாழத் துவங்குகிறார். அவரைத் தேடி பழைய நினைவுகளுடன் மலேசியாவிலிருந்து கதாநாயகி போகிறார். இரண்டு நிலத்தையும் இயக்குனர் பிரகாஷ் மிகவும் நேர்மையுடனே படைத்திருக்கிறார். மியான்மாரை மையமாகக் காட்டும்போது மியான்மரிஸ்டுகளை உள்ளே கொண்டு வர அவர் தவறவில்லை. மேலும் அவர்களை அவர்களின் நிலத்தின் ஒரிஜினால்டியுடன் காட்டியிருப்பதுதான் சிறப்பு. அவர்களின் நிலத்திலேயே அவர்களை அந்நியர்களாகக் காட்டும் எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை.
கதாநாயகனுக்காக அந்த நில மக்கள் இப்படத்தில் இழிவாக்கப்படவில்லை; கேலிக்குள்ளாக்கப்படவில்லை ; சேர்ந்து குழு நடனம் ஆடவில்லை. ஆகவே மியான்மர் நிலத்தில் வாழும் தமிழர்களை ஓரளவிற்குக் காட்டியிருக்கிறார் என்பதற்காகப் பிரகாஷ் அவர்களைப் பாராட்டலாம். மெனக்கெட்டு ஒரு நிலத்தைப் படத்தில் காட்டும்போது சமூக அக்கறைமிக்க ஒரு இயக்குனர் வேறு என்ன செய்திருக்கலாம்? தன் கதைக்காக வேண்டி வெண்ணிற இரவுகள் படம் மியான்மாரைப் பயன்படுத்தியிருந்தாலும், அந்த நிலத்திலுள்ள சேவல் சண்டையையும் கொஞ்சம் காட்டியிருப்பதைக் கவனிக்கலாம். மியான்மாரின் வெக்கை மிகுந்த சாலையோரங்களையும், கீழ்த்தட்டு மக்களின் வாழ்விடங்களையும், நெரிசல்மிக்க சந்தையையும், படகுத்துறையையும் அவர் தன் படத்தில் காட்டியிருக்கிறார். வெறும் சுற்றுலா தளங்களாகச் சென்று இறையாண்மைமிக்க அழகியல் காட்சிகளை மட்டும் காட்டும் அயோக்கியத்தனம் அவரிடம் இல்லை. மக்களோடு மக்களாகி அவர்களின் முகங்களையே படத்தில் முதன்மையாக்கியிருக்கிறார். சேவை சண்டையை மேலோட்டமாகக் கதையோடு காட்டியிருப்பது அவ்வளவாகக் கவனம் பெறவில்லை. அதே சமயம் அதனை அதிகமாகக் காட்டுவதும் ஒரு National Goegraphy தன்மையை அடைந்திருக்கக்கூடும். கதைக்குக் கச்சிதமாக வந்திருப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்றாலும் எல்லாம் படைப்புகளும் அந்த நிலத்தின் மீது அக்கறை கொண்டிருக்க வேண்டும் என நினைப்பதையும் தவிர்க்க இயலவில்லை.
அதேபோல மலேசியாவிலுள்ள பல்கலைக்கழக வாழ்க்கையை அதன் நிதர்சனங்களோடு காட்டியிருக்கிறார். அதில் எந்தக் கலாச்சார/ஒழுக்க சமரசமும் இல்லாமல் அந்த உலகின் யதார்த்தங்களோடு அவ்வாழ்க்கையைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். அவர்களின் உடல்மொழி, பேச்சு, கிண்டல் கேலி என அனைத்துமே மலேசியப் பல்கலைக்கழக சூழலை நெருக்கமாகக் கொண்டு வருகின்றன. இந்த இரண்டு வகையிலுமே கதைக்களத்தை மிகவும் நேர்மையாக இயக்குனர் படத்தின் மூலம் முன்னெடுத்துள்ளார். திரைக்கதை அதன் அரசியலை விட்டு அதிகம் விலகாமல் நகர்வதற்கு இதுவே ஏதுவாக அமைந்துள்ளது. இதுவே இப்படம் அரசியல் ரீதியில் ஒரு மலேசியத்தனமிக்க படைப்பாக மற்ற படைப்புகளை மிஞ்சி நிற்கிறது.
தமிழ்நாட்டுச் சாயல்
மலேசியாவில் வரக்கூடிய சில பாடல்களில்கூட தமிழ்நாட்டுச் சாயல் இருப்பதைப் பரவலாகக் கவனித்து வருகிறோம். மலாய் சொற்கள் சிலவற்றை சேர்த்துவிடுவதனால் மட்டுமே அவை மலேசியத்தன்மையை அடைந்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மலேசிய வாழ்வியலோடு அதன் மொழியும் இணைந்து வெளிப்படுவதுதான் அப்படைப்பிற்கு ஒரு மலேசியத்தன்மையைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.
எடுத்துக்காட்டாக, ‘கிராமத்துப் பொண்ணுனு சொன்னியே…’ கிராமம் என்ற பயன்பாடே மலேசியாவிற்கான சொல்லாடல் கிடையாது. இங்குத் தோட்டப்புறம் மற்றும் கம்பம் என்பதே வழக்கில் உள்ள சொல்லாகும். அதுவே மலேசிய அடையாளமாகும். கிராமம் என்பது தமிழ்நாட்டிலுள்ள குடியிருப்புகளைச் சுட்டுவதாகும். ‘மாமன்காரன் , தாவனி’ போன்ற அனைத்துமே மலேசியாவைக் காட்டும் சொற்கள் அல்ல. இது சிறுக சிறுக தமிழ்நாட்டுச் சூழலிலிருந்து கொண்டு வரப்பட்டவையாகும். அதனையே இந்தத் தலைமுறையும் பின்பற்றுவது அந்நியத்தன்மையை உருவாக்கிவிடும் என்பதே என் கவலை.
அடுத்ததாக, ‘நான் ஒரு மலேசியன்’ திரைப்படத்திலேயே தமிழ்நாட்டுப் படங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்ட கதாநாகயத்தனம் வெளிப்பட்டிருக்கிறது. அதன் பிறகு வந்த பல மலேசியப் படங்களில் இதுபோன்ற தமிழ்நாட்டுக் கதாநாயக வழிபாட்டைக் காண முடிகிறது. மலேசிய சூழலில் ஒரு தமிழன் அரசியலால் காயடிக்கப்பட்டவனாகவே வலம் வருகிறான். அவன் சமூகம் கொண்டாடும் எந்தக் கதாநாயக சலூகைகளையும் பெறக்கூடியவன் அல்ல. மேலும் நம் மலேசிய சமூகமும் இங்கு அதுபோன்ற கதாநாயகர்களைப் பூஜிப்பது கிடையாது. அப்படி நம் திரைப்படங்கள் கதாநாயகத்துவத்தை முன்னெடுக்குமானால் அதுவொரு அந்நியத்தனத்தை அடைகிறது என்றே சொல்ல வேண்டும்.
ஆனால், ‘வெண்ணிற இரவுகள்’ எந்த வகையிலுமே தமிழ்நாட்டுச் சாயலைக் கொண்டிருக்கவில்லை என்பதே அதன் மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறேன். பாடலிலோ இசையிலோ அப்படம் தனக்கான புதிய தேடலை புதிய மலேசியப் போக்கை அடையாளங்கண்டு வெளிப்பட்டிருக்கிறது. மியான்மாரில் பாதிப்படம் நகர்ந்தாலும் வேறொரு அந்நிய நிலத்திலும் மலேசியத்தன்மையை இழக்காமல் திரைக்கதையை நகர்த்தியிருக்கும் சாமர்த்தியம் மலேசியத் தமிழ்ச்சினிமா சூழலுக்குப் புதியது என்றே நினைக்கிறேன். இயக்குனர் செந்தில் குமரன் முனியாண்டி அவர்களின் ‘ஜெராந்துட் நினைவுகள்’, சஞ்சய் குமாரின் ‘ஜகாட்’ போன்ற படைப்புகளின் வரிசையில் அடுத்தக்கட்ட மலேசியக் கலை பரிணாமமாக ‘வெண்ணிற இரவுகளை’ உணர முடிகிறது.
கலைப்படம் என்கிற சாயல்
இப்பொழுதுள்ள பெரும்பாலான இயக்குனர்கள் கமர்சியல் ரீதியிலான முயற்சிகளிலிருந்து விடுப்பட்டு கலைப்படத்திற்கான ஒரு முயற்சியில் இறங்கியுள்ளனர். உலகத் திரைப்பட விழாவிற்காகவே படம் எடுப்பது, ஈரான் சினிமாக்களின் ஒளிப்பதிவு தந்திரங்களுக்காகவே படம் எடுப்பது, புரியாத்தன்மையின் மூலம் பார்வையாளனைக் குழப்பி உயர்ந்த கலைப்படைப்பு எனக் காட்டிக் கொள்வதற்காகப் படம் எடுப்பது போன்ற மாயயைகளில் சிக்கி உள்ளனர். இது ஒரு புதிய வருகை.
நம் நிலத்தையும் நம் வாழ்க்கையும் சொல்ல நினைப்பதே கலை என்கிற போது அதனை ஒரு கலையாக மெனக்கெட்டுக் காட்டுவதற்காக வேண்டி நம் வாழ்வைப் போலியாக்கிவிடக்கூடாது என்பதில் சமீபத்திய இயக்குனர்கள் அக்கறை செலுத்த வேண்டும். எப்படியிருப்பினும் ஒரு படைப்பாளியிடம் இச்சமூகம் மிகுந்த அக்கறையையே எதிர்ப்பார்க்கின்றது. வெகுஜன மக்களைப் போய் அடையும் கலைத்தொழிலைச் செய்யும் ஒரு படைப்பாளியிடம் வைக்கப்படும் நியாயமான எதிர்ப்பார்ப்புத்தான் அது.
காதலை மையமாகக் கொண்டிருப்பதில் சிக்கலில்லை, ஆனால் அதனூடாக அந்த நிலத்தின் வாழ்வை, பிரச்சனையைக் கொஞ்சமாவது அவர் பேசியிருக்கலாமே என இச்சமூகம் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு பிரச்சனையை எப்படி எந்த அளவிற்கு தன் படைப்பிற்குள் நுழைக்க வேண்டும் என்கிற முடிவை இயக்குனர்தா தேர்வு செய்கிறார். அந்த வகையிலும் இயக்குனர் பிரகாஷ் தனித்துவமாகவே செயல்ப்பட்டிருக்கிறார் எனச் சொல்ல முடியும். தன்னுடைய ‘வெண்ணிற இரவுகள்’ படத்தில் மலேசிய தமிழ்ச்சூழலில் மிகவும் மேலோட்டமாக அதிகம் வெளிப்படையாக விவாதிக்கப்படாத மேல்தட்டும் வர்க்கத்தின் மனச்சிக்கலாக இருக்கும் சாதியைப்பற்றி அவர் பேசியிருக்கிறார். ஆனால், படத்தில் அதன் நெடி தூக்கலாக இல்லாமலும் கதையோடு மிகவும் இரகசியமாக வந்து அழுத்தமான திருப்பத்திற்குப் பின்னால் தமிழ்ச்சூழலின் மனசாட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டுப் போகும் வகையில் அமைத்துள்ளார்கள். உதவி இயக்குனரான சிவா பெரியண்ணன் அவர்களிடம் இதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவேளை சாதியைப் பற்றி அதிகம் உரையாடியிருந்தாலும் அதுவொரு மெனக்கெட்டு திணிக்கப்பட்ட பிரச்சாரமாகிவிடும் என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம் எனக் குறிப்பிட்டார்.
ஆக, நான் குறிப்பிட்ட அந்த மூன்று வகையிலுமே மலேசியப் படைப்பான ‘வெண்ணிற இரவுகள்’ தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளது எனச் சொல்லலாம். ஒரு தமிழ்ச்சினிமாவை முதலில் தமிழ்நாட்டுச் சாயல் இல்லாமல் எடுப்பதே வரவேற்கத்தக்க சிறந்த முயற்சியாகும். அதனைப் பாராட்டியே ஆக வேண்டியுள்ளது.
மகேன் கதாபாத்திரத்தின் சில வசனங்கள் அவர் அவசரமாக உச்சரிக்கும் இடத்தில் சட்டென பிடிப்படாமல் நழுவி போய்விடுவதும், அவருடைய பல்கலைக்கழக நண்பராக வருபவர் பேச்சுக்கும் உடல் மொழிக்கும் தொடர்பில்லாமல் இருப்பதும், ஏண்ட்ரியாவை அழைத்து ஒரு பாடலைப் பாட வைத்தது (மலேசியாவில் அவரையும் மிஞ்சக்கூடிய பாடகிகள் இருந்திருக்கக்கூடும்), என்பதைத் தவிர படம் பாராட்ட வேண்டிய அற்புதமான முயற்சி ஆகும். திரைக்கதையைப் பற்றி தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம் காரணம் ஒரு படம் எத்தனை வலிமையான கதையைக் கொண்டிருந்தாலும் அதனை மக்களிடையே கொண்டு போய் சேர்ப்பது அதன் திரைக்கதை அமைப்புத்தான். அந்தத் திரைக்கதைக்கு வலு சேர்ப்பதுதான் ஒளிப்பதிவும் இசையும் ஆகும். அவ்வகையில் இயக்குனர் பிரகாஷ் மிகவும் சாமர்த்தியமாகத் திரைக்கதையை அமைத்துள்ளார். பார்வையாளன் எங்கேயும் சலிப்படையாமல் படத்தோடு பயணிக்கத் திரைக்கதை உதவியுள்ளது.
படக்குழுவிற்கு என் பாராட்டுகள். இப்படத்தை அனைவரும் தயவு செய்து திரையரங்கில் சென்று காணவும். மலேசிய இயக்குனர் பிரகாஷ் அவர்கள் இப்படத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு வருவதற்காகப் பெரும் பாடுப்பட்டிருக்கிறார். மலேசியத் தியேட்டர் முதலாளிகளின் தமிழ்நாட்டுச் சினிமா மோகத்தைத் தாண்டி மலேசியஹ் தமிழ்ச்சினிமாவின் மீது ஒரு நம்பிக்கை உருவாகும்வரை கடுமையாக உழைத்திருக்கிறார். அவர் உழைப்பிற்கு நாம் வெற்றியைக் கொடுக்க முடியாவிட்டால் இனியொரு தரமான மலேசியப்படைப்பு வெளிவராது என்றே நினைக்கிறேன். காலத்தைத் தாண்டி இயக்குனர் பிரகாஷ் அவர்களின் வெண்ணிற இரவுகள் மலேசியாவின் சினிமா சூழலில் புதிய போக்கை அறிவிக்கும் படைப்பாக மாறும் என்பதில் குழப்பமில்லை.