கடந்த டிசம்பர் முதல் ‘வல்லினம்’ மலேசிய நாளிதழ்களில் ஓர் அபத்தத்தின் குறியீடாக வெளிப்படுத்தப்பட்டதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். ‘வல்லினம்’ ஆபாசத்தைத் திணிக்கிறது என்றும், ‘வல்லினம்’ மதத்தை அவமதிக்கிறது என்றும் , ‘வல்லினம்’ மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறதென்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள்.
வேடிக்கை என்னவென்றால், தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதை மற்றும் ம.நவீனின் ‘கடவுளின் மலம்’ என்ற படைப்பிலக்கியம் தொடர்பாக அவதூறுகளும் வசைகளும் மட்டுமே பொதுபரப்பில் வைக்கப்பட்டதே தவிர வல்லினம் முன்வைத்த உரையாடலுக்குக் கருத்து ரீதியில் எதிர்வினையாற்ற யாரும் முன்வரவில்லை. மாறாக சொல்லப்பட்ட பதில்களை முழுமையாக வாசிக்காமல் அல்லது புரிந்துகொள்ளாமல் மீண்டும் மீண்டும் மொண்ணையான கேள்விகளே சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன.
பொது மக்கள் அல்லது பத்திரிகையாளர்கள் மனநிலையை இவ்விடயத்தில் நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இலக்கிய பரிட்சயம் இல்லாத பட்சத்தில் அவர்கள் முன்வைக்கும் மாற்றுக்கருத்துகளும் வசைகளும் உணர்ச்சி அடிப்படையானவை என நாம் பெரிதுபடுத்த வேண்டியதில்லைதான். அவர்களை மன்னித்தும் விடலாம். ஆனால், தங்களை இலக்கியவாதியாகச் சமூகத்தில் காட்டிக்கொள்பவர்களில் கருத்துகள் முற்றிலும் பிற்போக்கானதாக இருந்ததே அதிசயம். கலையில் சுதந்திரம், பொதுபுத்தியிலிருந்து விலகி சிந்திப்பது என எது குறித்தும் கவலை இல்லாமல் அதிகார மனநிலையுடன் ஒன்றித்திருத்தலையே அவர்கள் தங்கள் கொள்கையாகக் கொண்டிருந்தனர்.
இந்து கடவுளின் உருவப்படங்கள் அடங்கிய சூடம், சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட பொருள்கள் வணிக வீதிகளில் விற்பனையாவதையும் அவை பயன்படுத்தப்பட்டுவிட்ட பின் குப்பைக்கூடைகளுக்குப் போவதையும் பொருட்படுத்தாத இவர்கள், பணத்துக்காக உத்திராட்சை, தகடுகள் , ஹோம பொருள்கள் என எளிய மக்களை ஏமாற்றும் வாணிகர்களைத் தட்டிக்கேட்க திரணியற்ற இவர்கள், சாதிய அமைப்புகளை அமைக்கும் செல்வந்தர்களிடமும் அதற்கு கௌரவ ஆலோசகர்களாக இருக்கும் அரசியல் தலைவர்களின் முன்பும் கூனி குறுகி நிர்க்கும் இவர்கள் தங்களைப் படைப்பாளியாகக் காட்டிக்கொள்ள அதிக பட்சம் பயன்படுத்துவது நாட்டில் ஆங்காங்கே நடைபெறும் புனைவிலக்கியத்திற்கான போட்டிகளில் மட்டுமே. சமூகத்தில் ஆபத்தான பிற்போக்குத் தனங்களுக்கு மூலமாக இருப்பவர்களிடம் கைக்குலுக்கிக்கொண்டே அதை எதிர்க்கும் படைப்பாளர்களிடம் தங்கள் வற்றிப்போன சொற்களைப் பயன்படுத்துவதுதான் முரண்நகை.
இரு கவிதை நூல்கள் வெளியீடு
இச்சூழலில் ‘வல்லினம்’ தன் நிலைபாட்டிலிருந்து ஓர் அங்குலம் கூட பின்வாங்காது. படைப்பிலக்கியத்திற்கான அத்தனைச் சுதந்திரத்தையும் அது பயன்படுத்திக்கொள்ளும். அந்த வேட்கையோடு இம்மாதம் 16ல் இரு கவிதை நூல் வெளியீடு நடைபெறுகிறது. புத்தகச் சிறகுகள் ஆதரவுடன் கே.பாலமுருகன் மற்றும் ம.நவீனின் கவிதை நூல்கள் ஒரே சமயத்தில் வெளிவருவதுடன் கவிதை குறித்த உரையாடலுக்கும் இந்நிகழ்வு ஒரு தொடக்கமாக இருக்கும்.
மேலும் கவிதை நூல்களைக் குறித்து உரையாட பூங்குழலிவீரன், யோகி, அ.பாண்டியன், விஜயா, தினகரன் என முற்றிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் இந்நிகழ்வுக்குத் தேர்வு செய்யப்பட்டது ‘வல்லினம்’ யாரை நோக்கி தனது பயணத்தை நிறுவுகின்றது என்பதற்கான சான்று.
புத்தகச் சிறகுகளும் ஜெயமோகனும்
தயாஜி தொடங்கி நடத்திவரும் புத்தகச் சிறகுகள் இன்று நாட்டில் தீவிர வாசகர்களுக்கான ஊடகமாக உள்ளது. எழுத்தாளர்கள் நூல்களை எழுதுவது ஒரு புறம் இருக்க அதை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தங்கள் சக்தியை அதிகம் இழக்கின்றனர். இந்நிலையில் வல்லினத்தின் வெளியீடாக வரப்போகும் இரு கவிதை நூல்களின் முழு விற்பனை உரிமையையும் புத்தகச் சிறகு நிறுவனமே பெற்றுள்ளது. வருங்காலத்தில் அது வாசகர்களிடம் நல்ல நூல்களைக் கொண்டுச்சேர்ப்பதில் மிக முக்கியப்பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.
இந்த நூல் வெளியீடு வழக்கமான நூல் வெளியீட்டுச் சடங்காக அமையாமல் கவிதை குறித்த புதிய சிந்தனைகளை வாசகர்கள் பெற வேண்டுமென்ற நோக்கில் எழுத்தாளர் ஜெயமோகனையும் சிறப்புப் பேச்சாளராக புத்தகச் சிறகுகள் நிறுவனம் அணுகியுள்ளது. 16.3.2014ல் நடைபெறும் இந்த நிகழ்வை ‘கவிதை மாலை’ என்ற தலைப்பில் இந்நிறுவனம் வழிநடத்தும்.
‘காலம் தோறும் கவிதைகள்’ என்ற தலைப்பில் இந்நிகழ்வில் ஜெயமோகன் உரையாற்றுகிறார். ஒவ்வொரு காலத்திலும் கவிதை எனும் வடிவம், அதன் பேசும் பொருள், அதன் அரசியல், தத்துவம் அனைத்தும் எவ்வாறு மாற்றம் கண்டுள்ளன என்று ஜெயமோகன் பேசுவார். அதோடு புனிதங்களை புனைவுகள் எவ்வாறு கேள்விக்குள்ளாக்குகின்றன எனவும் ஜெயமோகன் கலந்துரையாடலை நகர்த்துவார்.
வாசகர்களுக்கு ஓர் இன்ப தகவல்
வல்லினம் குழு தனது அடுத்த இலக்கை மிக நேர்த்தியாக நகர்த்தி வைத்துள்ளது. 16.3.2014 நடைபெறும் ‘கவிதை மாலையில்’ மலேசிய இலக்கிய வாசகர்களுக்கு அந்த உற்சாகமான செய்தி வல்லினம் குழுவினரால் பகிரப்படும். எல்லா அவதூறுகளுக்கும் பதிலாக வல்லினமும் புத்தகச் சிறகுகள் நிறுவனமும் தங்கள் புனைவு சார்ந்த முயற்சிகளையே பதிலாக வைக்கின்றன.
நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி.
நாள் : 16.3.2014
நேரம் : மாலை மணி 6.30
இடம் : கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி
அனைத்து தொடர்புக்கும் / முன்பதிவுக்கும் : 0149005447
neengal verum padaipalikal maddum eruntal maddum pothatu tunintu unggal padaipukal velivaravendum
வாழ்த்துகள்,வல்லினம் அச்சில் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறான்….