“நம்ம அடையாளங்கள தக்க வச்சிக்கிற முயற்சியா நம்ம திரைப்படங்கள் இருக்கனும்” – ஆர்.பிரகாஷ்

pragash6 மார்ச் நாடு முழுவதும்  திரையரங்குகளில் வரவிருக்கும் மலேசிய திரைப்படமான ‘வெண்ணிற இரவுகள்’ படத்தின் இயக்குனர் ஆர்.பிரகாஷ் அவர்களை ஒரு மாலையில் சந்தித்தோம். வெண்ணிற இரவுகள் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு வல்லினம் குழுவினரும்  அழைக்கப்பட்ட போது அதன் திரைக்கதையில் ஈர்ப்பும் பிரகாஷின் மேல் அழுத்தமான நம்பிக்கையும் ஏற்பட்டது. அந்த மாலை பிரகாஷிடம் கேள்விகள் மட்டுமின்றி கருத்துகளைச் சொல்லவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

கேள்வி : நீங்கள் மலேசியாவில்  ஒரு தமிழ்த்திரைப்படத்தை இயக்குவதற்கான காரணம்தான் என்ன? டெலிமூவியாகவும், நாடகங்களாகவும் பலர் லாபகரமாக  இத்துறையில் இயங்கிகிட்டு இருக்காங்க. இந்த சூழலில் ஆபத்தென்று தெரிந்தும் நீங்க திரைப்படத்தில் காலடி வைக்க  என்ன காரணம்?

 ஆர். பிரகாஷ் : ஆர்வம்தான் முதல் காரணம். இந்தச் சினிமாதுறைக்கு வரவேண்டும் என சின்ன வயதில் இருந்து ஒரு கனவு இருந்தது. அதே சமயம் இந்தத் துறைக்கு வந்த பிறகு, படம் செய்துதான் ஆகனுமான்ற தயக்கத்துக்குறிய கேள்விகளும் வரவே செஞ்சது. முன்பு இந்த நாட்டில் வந்த படங்கள் கொடுத்த அனுபவமும், இங்குள்ள படைப்பாளிகள் திரைப்படம் குறித்து என்ன யோசிக்கறாங்கன்னு குழப்பமா இருந்தது. ஆனால், காலம் கடக்கும் போது நாம இயங்குற கலைத்துறையில ஒரு திருப்தி இருக்கனுமே. அது எந்த கலைஞனையும் சவால்களை மீறி செயல்படவே தூண்டும்.

கேள்வி : ‘சமூதாயத்துக்கு இதை சொல்லனும்னு இருக்கேன்’… ‘சமூதாயத்தை மாத்தப்போறேன்’…. ‘இந்த படத்துல இப்படி ஒரு கருத்து வச்சிருக்கேன்னு’ன்னு  பெரும்பாலும் படம் எடுக்கறவங்க ஏதாவது ஒன்னு சொல்லுவாங்க, அப்படி ஏதும் காரணம் இருக்கா இந்தப் படத்தை இயக்க?

ஆர். பிரகாஷ் : கருத்து சொல்றதுக்கு நான் யாரு? திரைப்படங்கறது கருத்து சொல்றதுக்கு இல்ல. நான் இந்த வாழ்க்கையப் பற்றி என்ன உணர்றேன்னு  உங்களுக்கு காட்டி உங்களுக்கும் என் உணர்வுகளோட பாதிப்ப உணரவச்சா அதுதான் என் திரைப்படத்தோட வெற்றி. அதனால, திரைப்படத்தில் கருத்து சொல்ல நான் இயங்கமாட்டேன். சொல்லவும் கூடாதுன்னு நினைக்கிறேன்.

கேள்வி : கலைத்துறையில் உங்களின் தொடக்கம் எப்படி இருந்தது. திரைதுறைச்சார்ந்துதான் பல்கலைக்கழகத்திலும் நீங்க படிச்சீங்களா?

ஆர். பிரகாஷ் : தொடக்கம்னு சொன்னா அப்பாதான். அப்பா ஒரு எழுத்தாளர், பெயர் கே.கே.ராஜாராம். எண்பதுகளில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர். வானொலிகளுக்கு நாடகம் எழுதுவார்.  சிறுகதைகள் எழுதுவார். மேடை நாடக குழு வச்சிருந்தார். அப்பாவின் கதைகளை ஆரம்பத்தில் இருந்தே படிச்சி வந்திருக்கேன். மேடை நாடகங்களுக்கும் சின்ன வயதில் இருந்தே அப்பா கூட நடிக்கப் போயிருக்கேன். அப்ப நான் சின்ன பையன். அதோடு பல்கலைக்கழகம் போன பிறகும் மேடை நாடக துறைதான் படிக்கனும்னு விடாப்பிடியா இருந்து படிச்சேன். U.S.M- ல அந்தத் துறையில் நான் ஒரே தமிழன்தான் இருந்தேன். அங்க நடிப்பு குறித்து ரொம்பவே கத்துகிட்டேன். படித்த பிறகு தலைநகருக்கு வேலைக்கு வந்தேன். ஆனா நான் படிச்ச படிப்பு எனக்கு உதவியா இல்ல. ஆனால், வாழ்க்கை எனக்கு நிறைய கத்துக்கொடுத்துச்சி. முதலில் இருந்து மீண்டும் ஆரம்பிச்சேன்னு சொல்லனாம். எல்லாம் ஆர்வம்தான். 2004-ல் தலைநகர் வந்தேன். 2006-ல் எல்லாம் தொலைக்காட்சி நாடகங்கள் இயக்கத்துல பணி புரிய ஆரம்பிச்சிட்டேன்.  2014-ல் ‘வெண்ணிற இரவுகள்’ படம் இயக்கியிருக்கேன். ஏறக்குறைய இந்த படத்தை இயக்க பத்து வருட அனுபவம் எனக்கு தேவைப்பட்டிருக்கு. அதுக்கான காலத்தை நான் எடுத்துக்கிட்டேன். பொறுமையா காத்திருந்தேன்.  இதுக்காக நிறைய படிச்சிருக்கேன். அனுபவிச்சிருக்கேன். கத்துக்கிட்டு இருக்கேன். ஆனாலும் இப்பவும் இத்துறை எனக்கு பல புதிய அனுபவங்களைக் கொடுத்துக்கிட்டே இருக்கு.

கேள்வி : மலேசிய படத்தைpragash 04 பார்க்க இங்கு ஒரு சலிப்பு வரக்காரணம், அது மலேசிய திரைப்படமா இல்லாததுதான். இந்திய திரைப்படத்தின் அல்லது தமிழ்த்திரைப்படத்தின்  சாயல்தான் இங்க வெளியாகுற படங்கள்ள அதிகமா இருக்கு. இந்த சமயத்துல, அம்மாதிரியான சாயல் இருகக்கூடாதுன்னு நினைக்கறதே ஒரு நல்ல விசயம்தான். இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது.

ஆர்.பிரகாஷ் : வெறுப்புதான். சின்ன வயதில் இருந்தே தமிழ்ப்படங்களிடம் ஏமாந்துகிட்டு இருக்கோம்ற வெறுப்புதான். நானும் தமிழ்படம் பார்த்து வந்தவன்தான். சில காலகட்டங்களுக்குப் பிறகு இந்த துறையில் இருக்கிறதால சில கேள்விகள் வருது. தமிழ்படங்கள் என்றாலே தென்னிந்திய தமிழ்படங்கள்தானா? ஏன் வேற நாடுகள்ள வாழும் தமிழர்களால அவர்கள் வாழ்வை சொல்லும் ஒரு தனித்துவமான படத்தை இயக்க முடியல? ஒவ்வொரு இடத்தில் வாழும் தமிழனுக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கு. அதை அவங்களாலதான் கொடுக்க முடியும். ஆனா தென்னிந்திய திரைப்படங்கள் மிக நாசுக்கா இது நசுக்குது. இதைதான் நீ பாக்கனும், இதுதான் நம்ம கலாச்சாரம்னு  ஒன்றை நம்ம மேல திணிக்கிறாங்க. ஏன் மற்ற தமிழர்கள் யாரும் அவர்கள் அசலான வாழ்க்கைய சொல்ல முடியாதான்ற கேள்வி என்னைத் துளைச்சது. என் சமூக கதைகளை நான் சொல்லாம  யாரு சொல்றது? நம்ம அடையாளங்கள தக்க வச்சிக்கிற முயற்சியா நம்ம திரைப்படங்கள் இருக்கனுமுன்னு நினைச்சேன். தொடர்ந்து நினைப்பேன்.

கேள்வி : அதைதான் கேட்கறேன். சினிமாவில் மட்டுமல்ல, சில எழுத்தாளர்களும் தமிழ்நாட்டு சாயலில்தான் எழுதுறாங்க. நீங்க அப்படி வேணான்னு நினைச்சி செயல்பட அடிப்படை  காரணம் என்ன?

கே. பிரகாஷ் : அப்பாவின் கதைகளை வாசித்த அனுபவத்தைச் சொல்லலாம். அவரின் கதைகள் இந்த மண்ணோட வாழ்வ சொன்னுச்சி. ரப்பர் தோட்டங்களில் உயிருடன் இருக்கும் நம்ம கதைகளா அவை எழுதப்பட்டுச்சி. அதோடு நாம தனிச்சி நிர்க்க கலப்படம் இல்லாத  நம்ம கதைகளை நாம சொல்லிதான் ஆகனும். நமக்கு என்ன குறைச்சல்?  தமிழக சினிமாவுக்கே இங்கிருக்கும் தொழில்நுட்பம் தேவைப்படுதுன்னா நம்மால ஏன் இங்க ஒரு தரமான படத்தை கொடுக்க முடியாது. நம்மகிட்ட நல்ல மொழி இருக்கு, திறைமைசாலிகள் இருக்காங்க ஆனாலும் ஏன் நல்ல படம் கொடுக்க முடியலைன்னா… நாம அசலா யோசிக்கல.. நாம் ஒரு மலேசியனா முதலில்  யோசிக்கனும்… அது மட்டும் நடந்தா தமிழ்த்திரை உலகத்துக நாமதான் மத்தவங்களுக்கு முன்னோடியா இருப்போம். மியன்மாரில் இதுவரைக்கு வெளியில் இருந்து யாரும் போய் படம் எடுக்கல. நாம்தான் போயிருக்கோம். இன்னும் தமிழன் எங்கெல்லாம் வாழ்றானோ அங்கெல்லாம் அவன் வாழ்வு பதிவாக்கப்படனும். நாம மத்தவங்களுக்கு முன்னோடியா இருப்போம்.

pragash 02கேள்வி : மலேசிய சினிமா துறையில் இருக்கிங்க. உங்களுக்குன்னு ஓர் அரசியல் பார்வை இருக்கு. இங்க இருக்கும் படங்களில் இருக்கும் குறைகளை விமர்சனம் செய்வீங்களா? 

ஆர்.பிரகாஷ் : முதலில் அவர்களிடம் நல்ல படம் எதுன்னு நான் காட்ட வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். ஒன்று சரியில்லன்னு சொல்லனும்னா எது சரின்னு ஒரு நல்ல படத்தை நான் காட்டிதான் சொல்லமுடியும். உதாரணங்கள் இல்லாம  அவங்களுக்கும் எப்படி தெரியும். நல்ல படைப்புகள் மூலமாதான் இருக்கின்ற சூழலை மாற்றியமைக்க முடியும்.

கேள்வி : மலேசியத் திரைப்படத்தில் நடிப்பு, தொழில்நுட்பம் போன்றவை முன்னேறியிருக்கிறதா தெரிஞ்சாலும், சொல்லப்படும் கதையில் வலு இல்ல. தமிழகத்துல எடுத்துகிட்டா எழுத்தாளர்களின் பங்களிப்பு சினிமாவுக்கு முக்கியமா இருக்கு. நீங்க என்ன நினைக்கறிங்க.?

ஆர். பிரகாஷ் : சினிமா பல திறமைகள் ஒன்று சேர்கிற இடம். எனக்கு தொடர்பில்லாத ஒன்றை நான் எப்படி சினிமாவுல காட்டுவேன். எனக்கு இலக்கியவாதியின் தேவை ரொம்ப முக்கியம். என்னால சொல்ல முடிந்த, நான் வாழ்ந்த கதைன்னா நான் செய்யலாம். தோட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்காத ஓர் இயக்குனர் எப்படி அந்த வாழ்வைச் சொல்லுவார். அப்போ அந்த வாழ்க்கையைத் தெரிந்த இலக்கியவாதி முக்கியமாகிறார். திரைப்படம்னாலே கதைதான் முக்கியம். பல திறமைகள் ஒன்னா சேரனும். அப்பதான் எதார்த்தம் அங்கே இருக்கும்.

கேள்வி : அப்படி மலேசியாவில் உங்களுக்கு தேவையான கலைஞர்கள் இல்லாத போது, தமிழகத்துல இருக்கின்றவர்களை பயன்படுத்தறீங்க, அதற்குண்டான விமர்சனங்களுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க? உதாரணத்துக்கு வெண்ணிற இரவுகள்ள ஆண்டரியா பாடியிருக்காங்க. ஏன் நீங்க மலேசிய பாடகிக்கு வாய்ப்பு கொடுக்கலைன்னு கேட்ட என்ன பதில் சொல்லுவீங்க.

பிரகாஷ் : இங்க நிச்சயம் நல்ல பாடகிகள் இருக்காங்க. ஆனா,  பட்ஜெட்ன்னு ஒன்னு இருக்கு, முதலில் ஒரு பிரபலமான மலேசியப் பாடகியைதான் பாட கேட்டோம். எங்க பட்ஜெட்டுக்கு அவங்க ஒத்துவரல. என் முதல் படம். நானே தயாரிப்பாளரா இருக்குற சூழல்ல எனக்கு தரமும் அதே சமயம் பட்ஜெட்டும் அவசியமா இருந்துச்சி. திறமைசாலிகளை வெளியில் இருந்து கொண்டுவருவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

pragash 03கேள்வி : இந்த திரைப்படத்தில் மலேசியாவில் உள்ள கலைஞர்களைத் தவிர்த்து யாரெல்லாம் வேலை செய்திருக்காங்க?

ஆர். பிரகாஷ் : இந்தப்படத்தோட ஒளிப்பதிவாளர் மனோ வி.நாராயணன் தமிழகத்தில் உள்ளவர்தான்.  அவர தவிர, சிங்கப்பூர் மற்றும் மியன்மார் நடிகர்கள் நடிச்சிருக்காங்க.

கேள்வி : இந்தத் திரைப்படத்தின் மையமே ஜாதிய சிக்கல்தான். அதுதான் கதை திருப்பத்துக்கு மூலக்காரணமா இருக்கு. ஆனா, அதை இன்னும் அழுத்தமா சொல்லாம ஏன் நாசுக்கா சொல்லிட்டு போய்ட்டிங்க?

ஆர். பிரகாஷ் : அந்தத் திரைப்படத்தை நாங்க கொண்டுபோன விதம் அப்படி.. மையம் ஜாதிய பிரச்னையா இருந்தாலும், காதல்தான் முதன்மையா இருக்கு. மலேசியாவில் ஜாதி குறித்து இப்படித் திரைப்படத்தில் பேசினதே பெருசுதான். மலேசியாவில இப்படி ஜாதி இருக்கான்னு கேட்கறவங்களுக்குக் கூட கல்யாணம்னு வரும்போது ஜாதிதான் முக்கியமா இருக்கு. அதோட சில விடயங்கள நச்சுன்னு சொன்னாதான் மனதில் பதியும். திரும்ப திரும்ப  சொல்லிக்கிட்டே இருந்தாலும் சரியா இல்லாம போய்டும். படத்தில் அவங்க இருவரின் பிரிவுக்கான காரணம் கேள்வியா வந்துகிட்டே இருக்கும். அந்த பதில கடைசியா நச்சுன்னு சொன்னாதான் பார்க்கறவங்க மனதில் பதியும். இப்ப இந்த கேள்வியை நீங்க கேட்கிறதுக்கு அந்தத் தாக்கம்தான்  காரணமா இருக்கும்.

கேள்வி : பர்மாவைக் காட்டும் போது பர்மாவின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் போன்றவை முழுமையா காட்டப்படாதது போல இருக்கு. ஒரு பார்வையாளனா திரைக்கதையில் வரும் நிகழ்கால சம்பவங்கள் பர்மாவை தவிர்த்து எங்கு நடந்திருந்தாலும் பொருத்தமாதான் இருந்திருக்குமோன்னு தோணுது.

ஆர்.பிரகாஷ் : இந்த கதை மிக நுட்பமா இருவரைச் சுற்றி வருது. நாயகன் நாயகியை தவிர்த்து வேற எதை அதிகமா காட்டினாலும் பார்ப்பவர்களின் கவனத்தை திசை திருப்பிவிடுமோன்ற அச்சம் இருந்தது. ரசிகர்களுக்கு எதையும் அதிகமா காட்டி திகட்ட வச்சிடக்கூடாது. அதுவுமில்லாம இப்பதான் நாம் நம் நாட்டு சினிமாவுக்கான மார்கெட்டை சோதிக்கறோம். மக்கள் எப்படி பார்க்கறாங்க… ஆதரவு எந்த அளவுக்கு இருக்கு… இப்படி நிறைய முன் அனுபவங்கள் மூலமா பெற வேண்டியது நிறையவே இருக்கு. ஆக, அடுத்த படத்தில் நீங்க சொல்றதையும் கவனத்தில் எடுத்து முயற்சிக்கலாம்.

கேள்வி : இப்படத்தில் நீங்க எதிர்ப்பார்த்த திருப்தி கிடைச்சதா..?

ஆர். பிரகாஷ் : திருப்தின்னு பார்த்தா அடுத்த படம் கொடுக்க முடியாது. எங்ககிட்ட இருக்கற முழு திறமையும் காட்டணுமுன்னோ எங்களின் மிக சிறப்பான ஒன்றை முன் வைக்கனுமுன்னோ நாங்க இதை உருவாக்கல. மலேசியாவில் திரைத்துறைய ஒரு மாற்றுப்பாதையில் பயணிக்க வைக்க வேண்டும் என்பதே எங்கள் தலையாய நோக்கம். மலேசிய படத்தை சந்தேகிக்காம உக்கார்ந்து பார்க்கலாம் என்ற எண்ணம் எல்லாருக்கும் வரணும்.

கேள்வி : மலேசியாவில் ஓர் இயக்குனருக்கு என்ன மாதிரியா சிக்கல்கள் இருக்குன்னு நினைக்கறீங்க?

ஆர். பிரகாஷ் : சுதந்திரம் இல்லாததுதான் சிக்கல். இந்த படத்திலேயே சில காட்சிகளை நீக்கிட சொன்னாங்க. கதைக்கு தேவையான ஒன்றை நீக்க வேண்டியதா போச்சி. அதோடு ஒரு படைப்பாளி இந்நாட்டில் வியாபாரியாகவும் மாறவேண்டியிருக்கு. இயக்கிய நானே திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது.

கேள்வி : இந்தப் பிரச்சனைக்கு என்னதான் காரணம்?

ஆர். பிரகாஷ் : நம்ம மக்கள் தமிழ்நாட்டு ஹீரோக்களை சொந்த பிள்ளைகள் போல பாக்கறாங்க. விஜய், அஜித் இவங்களுக்கு அவர்கள் வீட்டுப் பிள்ளைகள். தமிழகப் படத்தை நம்மோட படைப்பா பாக்கறாங்க. இங்கயும் கலைஞர்கள் இருக்காங்க. இங்கிருந்தும் கலை வரணும்னு நினைக்க மாட்டறாங்க. இங்குள்ள படைப்பாளிகளும் தமிழ்நாட்டை அப்படியே பின் தொடர்ந்து வராங்க. ஒரு படத்துல மூனு சண்டை நாலு பாட்டு இருக்கனும்னு இவங்களே நினைச்சிக்கிறாங்க. ஆக, தமிழ்நாட்டு சாயல்ல இருக்குற ஒன்றுக்கு இங்குள்ள மக்கள் ஆதரவு எப்படி இருக்கும்? அப்படி மக்கள் ஆதரவு இல்லாத படங்களை எப்படி தியேட்டர் உரிமையாளர்கள் திரையிடுவார்கள்.

கேள்வி : தணிக்கைக் குழு தமிழ்ப்படங்களுக்குத் தனியாகவும் மலாய்க்கு தனியாகவும் இருக்கா? ஏனென்றால், சில மலாய் படங்களில் பார்க்கும் போது காட்சிகள் எல்லை மீறியே இருக்கு…அப்படி இருக்க இப்படத்தில் இந்தச் சிக்கல் வர என்னதான் காரணம்?

ஆர். பிரகாஷ் : எல்லோருக்கும் ஒரே தணிக்கை கட்டுப்பாடுதான். மலாய் படங்களை மலாய்காரர்கள் பார்த்து தணிக்கை செய்றாங்க. தமிழ்படத்தை தமிழர்கள் பார்க்கறாங்க. தமிழர்களிடம் கடமையுணர்ச்சி அதிகம் அல்லவா.

கேள்வி : சினிமா தொடர்பான அமைப்புகள், சங்கங்கள் இங்கே தமிழ் சினிமாக்கு இருக்கா? அவை எவ்வாறு செயல்படுகின்றன.

ஆர். பிரகாஷ் : எக்கச்சக்கமா இருக்கு. எல்லாம் தனித்தனியே தலைவரா இருக்க ஆசை படுறாங்க. மத்தபடி இயங்கங்கள் பொதுநலத்துக்காகச் செயல்படுதான்னு தெரியல.

கேள்வி : அப்படி இத்தனை அமைப்பு இருக்கிற பட்சத்தில், நிறைய விசயங்கள் செய்யலாமே. குறிப்பா, தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் மோசமான  படங்களை  தடைசெய்தாலே இங்குள்ள சினிமா வாழுமே.

ஆர். பிரகாஷ் :  தடை செய்தா இங்குள்ளவங்க தீக்குளிச்சாலும் குளிச்சிடுவாங்க. கமலின் விஸ்வரூபம் படம் வெளிவரலைன்னு மந்திரிவரைக்கும் மனு கொடுத்தவங்க இந்த நாட்டுல இருக்காங்க என்பதை மறக்க வேண்டாம். இது போல மக்கள்கிட்டயும் சில குறைகள் இருக்கு. இது எல்லாம்  மாறனும். இங்குள்ளவங்க மேல நம்பிக்கை வைக்கனும். அப்பதான் நல்ல படைப்புகள் வரும்.

கேள்வி : விருதுக்காக படம் இயக்கும் யோசனை இருக்கா..?

ஆர். பிரகாஷ் : இல்ல, விருதுக்காக படம் எடுத்தா சரியா வராது. நீதிபதிகளுக்கு எது பிடிக்கும் புடிக்காதுன்னு படம் எடுத்தா அது கலை இல்லை. உண்மையை, உள்ளதை உள்ளவாரு சொன்னாலே போதும் . விருதுக்கு அது தகுதியா இருந்தா தானா தேடி வரும்.

கேள்வி : உங்களுக்கு பிறகு வரக்கூடிய இளம் இயங்குனர்களைப் பற்றி என்ன நினைக்கறிங்க?

ஆர். பிரகாஷ் : தொழிநுட்பத்தில் ரொம்ப முன்னேறியிருக்காங்க. எல்லா விஷயத்தையும் தெரிஞ்சி வச்சிருக்காங்க. கதை சொல்ற விதம்தான் சரியில்லன்னு நினைக்கறேன். கதை சொல்லும் ஆற்றல் குறைஞ்சிருச்சி. நம்ம காலத்தில் புத்தகம் படிப்போம், நாளிதழ்கள் படிப்போம், நாவல்களைத் தேடி வாசிப்போம். அதனால கதை சொல்லும் திறன்ல நம்ம தலைமுறை கொஞ்சம் திறமையா இருந்தது. இப்போ கதையை மறந்துட்டு நல்லா அலங்காரம் செய்றாங்க… அது எந்த அளவுக்கு திரைப்படத்துக்குப் போதும்னு தெரியல.

கேள்வி : ‘வெண்ணிற இரவு’களில் தனியே நகைச்சுவை நடிகர்கள் இல்லாமலிருந்தாலும் சிரிக்காம படத்தை பார்க்க முடியல. பொதுவாகவே மலேசிய திரைப்படங்கள்னா மலேசிய விவேக், மலேசிய சரத்குமார் என இருப்பாங்க.. அடுத்தவரை கேலி செய்து தமிழ் திரைப்படத்தில் இருக்கும் வசனத்தை பயன்படுத்துவது போல உருவாக்கப்படும். அதை பத்தி என்ன நினைக்கறீங்க..

ஆர். பிரகாஷ் : கதைக்கு தேவையில்லாததை கதையில் எதையுமே புகுத்துவது ஏற்புடையது அல்ல. கமெர்சியல்னு சொல்லிட்டு கண்டதையும் சேர்க்கும் படங்களில் எனக்கு ஈடுபாடு இல்ல. அதனாலதான் பாடல்கள், சண்டைன்னு படத்தில் தனியா எதுவும் இல்ல. கதைக்கு என்ன தேவையோ அது போதும்.

கேள்வி : பர்மாவில் படம் எடுத்திருங்க, பர்மா தமிழர்கள் பற்றி சொல்லுங்கள்?

ஆர் .பிரகாஷ் : நம்ம அப்பா காலத்தில் இருந்தவங்கதான் தமிழ் பேசறாங்க. இப்போ, நாம பேசினா பதிலுக்குத்  திக்கி திக்கி தமிழ் பெசறாங்க. தமிழ் இல்லாம போற சூழல் அங்க இருக்கு. மதத்தை அப்படியே வச்சிருங்காங்க. அவங்க பர்மீஸ் கூட கலந்ததால பர்மீஸ்தான் பேசறாங்க. அங்குள்ள அரசியல் சூழலும் அப்படிதான். பர்மீஸ் மொழிதான் பேசனும்ன்னு விதி இருக்கு. இதனால அங்க தமிழ் படம் எடுக்ககூடிய வாய்ப்பு இல்ல. ஏன்னா அவங்க இப்போ பர்மீஸ் படம் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதோட தொழில்நுட்பத்தில் நம்மைவிட 20 வருடம் அதிகம் பின் தங்கியிருக்காங்க.

கேள்வி : உங்கள் திரைப்படத்தில் பணி செய்திருக்கும் தொழிநுட்ப கலைஞர்கள் குறித்து சொல்லுங்க.

ஆர். பிரகாஷ் : செந்தில், சஞ்ஜெய், சிவா, தினேஸ், டேவிட், குமரன் இப்படி எல்லோருமே இயக்குனர்கள்தான்னு சொல்லுவேன். அவங்கவங்க தனித்தனியே ஒரு படத்தை இயக்க முடியும். பல வருடங்களா இந்த துறையில் இவங்க இருக்காங்க. மலேசிய திரை உலகத்துல மாற்றம் ஏதும் செய்யனும்னு முயற்சியோடிருக்காங்க. நாங்களெல்லாம்  ஒன்னா சேர்ந்ததுனாலதான் நல்ல படம் கொடுக்க முடிஞ்சது.

கேள்வி : நீங்களும்  உங்க நண்பர்களும் எதிர்ப்பார்த்த மாற்றத்தை இந்தப் படம் கொடுக்கும்னு நினைக்கறிங்களா?

ஆர் . பிரகாஷ் :அது எனக்கு சொல்ல தெரியல, முதலில் மக்கள் திரையரங்கு வரனும்.. பாதி பேரு மலேசிய படம்னா எதுக்கு பாக்கனும்ன்னு  நினைக்கறாங்க. மலேசிய படங்களை ரசிக்கறவங்க இந்தப் படத்தைப் பார்த்த பிறகு உங்களுக்கு பிடிச்சிருந்தா மத்தவங்களிடம் சொல்லி கூட்டிவரணும். மற்ற எல்லா விளம்பரங்களைவிடம் ஒரு எளிய ரசிகனின் வாய்வழி விமர்சனம்தான் ஒரு படம் வெற்றியடைய உதவும்னு நம்புறேன்.

நேர்காணல் : தயாஜி

இத்திரைப்படம் குறித்து இயக்குனர் பாலாஜி சக்திவேலின் பார்வை:

1 comment for ““நம்ம அடையாளங்கள தக்க வச்சிக்கிற முயற்சியா நம்ம திரைப்படங்கள் இருக்கனும்” – ஆர்.பிரகாஷ்

  1. ஸ்ரீவிஜி
    March 4, 2014 at 4:20 pm

    சிறப்பான நேர்காணல். கேள்விகளும் அதற்குத்தோதான பதில்களும் மிக யதார்த்தமாக, பாமர ரசிகர்களும் புரிந்துகொள்கிற நிலையில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது..

    என் மனதில் பட்டதைச் சொல்கிறேன்..; உள்ளூர் திரைபபடங்கள் கவராமல் இருப்பதற்கு முக்கியக் காரணம், நடிப்பு, திரைக்கதை என்று வருகிறபோது, தமிழ்நாட்டின் எதாவதொரு சினிமா அல்லது சீரியலை ஞாபகப்படுத்திற்குக் கொண்டுவந்துவிடுகிறது.

    திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழிநுட்பக்கலைஞர்களை விட, அதிகமான தமிழ்நாட்டு மற்றும் உலக சினிமாப்படங்களில் திளைத்துவிட்ட ரசிகர்கள் நிறையபேர் இங்கே இருக்கின்ற பட்சத்தில், மிகமேலோட்டமாக சொல்லப்படுகிற கதைக்கருவிற்குவும் நாடகத்தன்மை மிகுந்த நடிப்பாற்றலுக்கும் முழுமையான ஆதரவு கிடைக்காமல் போய்விடுகிற துர்ப்பாக்கியம் தவிர்க்கவியலாததுதான். சில படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.. இங்கே வேண்டாம்.. ஒரு சினிமா முயற்சியைப் பாராட்டி மற்றவரின் முயற்சியை மட்டம்தட்டுவதைப்போல் ஆகிவிடும்.

    புத்தக வாசிப்பில் ஏற்படுகிற இலக்கிய அனுபவத்தை, மனதில் பட்டதை தங்குதடையில்லாமல் சொல்லிவிடலாம். அது தனியொருவரின் கலைப்படைப்பு. வாசிப்பு அனுபவத்தில் எழுத்தாளருக்கும் வாசகருக்குமிடையே நடபெறுகிற உரையின் போது, வாசகன் தோற்றுப்போக நேர்ந்தால், அங்கே அவனுக்கான விமர்சன உரை தயாராகிவிடுகிறது. ஆனால் சினிமா என்பது அப்படியல்ல. அவ்வளவு சுலபமாக உதாசினப்படுத்திவிட்டுச் சென்றுவிட முடியாது. அதனின் வெற்றிதோல்வி என்பது தனிநபரின் பிரச்சனையல்ல. அது பலரின் உழைப்பும். பல லட்ச பண முதலீட்டும் சம்பந்தப்பட்டது.

    ஆக, வெந்நிற இரவுகள் என்கிற உங்களின் படத்தைப் பார்த்தால்தால் மேலும் கருத்து கூற முடியும். சிறப்பாக இருந்தால், நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.. ஜாதிதான் கரு என்றால், ஏற்கனவே இக்கருவைத் தொட்டு பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் சொன்னால் என்ன இங்கே சொன்னால் என்ன..? பிரச்சனையின் பின்விளைவுகள் மற்றும் அதனைக் களைகின்ற யுக்திகள் அனைத்தும் ஒரே மாதியாகத்தான் அமையும்/அமையலாம்.. ! அப்படி இருக்கின்ற பட்சத்தில் ரசிகனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு சோர்வு வருவது இயல்புதான். ! பார்ப்போம்..

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...