பகுதி 1
ஒரு கிராமத்தில் வசிக்கும் தன் இளைய சகோதரியைப் பார்க்க வந்திருந்தாள் அவளின் மூத்த சகோதரி. மூத்தவள் நகரில் வசிக்கும் ஒரு வணிகனை மணமுடித்திருந்தாள், இளையவளோ கிராமத்தில் ஒரு விவசாயிக்கு மனைவியாக இருந்தாள். மாலை தேநீர் வேளையில் மூத்தவள் பட்டணத்தின் தன் வசதியான வாழ்க்கையைப் பற்றி தற்பெறுமையோடு பேசிக்கொண்டிருந்தாள். நகர்ப்புறத்தில் அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கையைப் பற்றியும், தங்கள் குழந்தைகள் அணியும் விலை உயர்ந்த ஆடைகள் பற்றியும், தாங்கள் உண்ணும் உணவின் தரம் பற்றியும், சினிமா பார்க்கக்கூடிய மகிழ்ச்சியான தருணங்கள் பற்றியும், திருவிழா ஊர்வலங்கள் மற்றும் உல்லாச நிகழ்ச்சிகளில் கலந்து மகிழ்வது பற்றியும் விதந்தோதிக் கொண்டிருந்தாள்.

தாங்கள் வாழும் கிராம வாழ்க்கையைச் சிறுமைப்படுத்திப் பேசிக்கொண்டிருக்கும் அக்காளின் மீது தங்கைக்கு எரிச்சல் வந்தது. ஆனாலும் கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்வதைப் பற்றிய உயர்வான எண்ணத்தையே கொண்டிருந்தாள் தங்கை.
“நான் உன்னைப்போல நகர வாழ்க்கையை விரும்பவில்லை. எங்கள் வாழ்க்கை சிரமமானதாக இருந்தாலும் பட்டணத்தின் பரபரப்பும், ஆடம்பரமும் எனக்கு எப்போதுமே பிடிப்பதில்லை. உங்களின் வாழ்க்கை முறை எங்களை விடவும் மேலானதுதான், உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பும் உண்டுதான், ஆனால் கிடைக்கும் பணத்தை உடனே செலவு செய்துவிடக்கூடிய துரதிர்ஷ்டமும் உண்டுதானே? வருமானம் ஈட்டுவதும் போவதும் இரட்டை சகோதரர்கள் போலத்தானே. முன்னர் பெரும் செல்வந்தர்களாக இருந்தவர்கள் ஒரு வாய் உணவுக்காக பின்னொரு நாளில் தெருவில் பிச்சையெடுப்பதை நீயும் கேள்விப்பட்டிருப்பாய்தானே? எங்கள் வாழ்க்கை பாதுகாப்பானது. விவசாயிகள் சுகபோக வாழ்க்கை வாழ முடியாதுதான். நாங்கள் செல்வந்தர்களாக ஆகவும் வாய்ப்பில்லைதான், ஆனால் அன்றாடம் எங்களுக்கு வயிறார உண்ண உணவு கிடைத்துவிடும்.” என்றாள்.
அக்காள் ஏளனமாகச் சொன்னாள்.
“போதும். பன்றிகளைக் கன்றுக்குட்டிகளோடு ஒப்பிடாதே. கௌரவத்தைப் பற்றியும் மரியாதையைப் பற்றியும் உனக்கென்ன தெரியும்? நீ என்னதான் சொல் ஒருநாள் பிறருக்கு அடிமையாக வாழ்ந்து, சாணக்குழியில் விழுந்து கிடக்கப் போகிறாய், உன் குழந்தைகளின் வாழ்வும் அப்படித்தான் அமையப் போகிறது.”
தங்கை பதில் சொன்னாள், “நல்லது… நாங்கள் சிரமமான வேலைதான் செய்கிறோம், ஆனாலும் யாரிடமும் எதற்காகவும் கையேந்த மாட்டோம், ஆனால் உங்கள் பட்டண வாழ்க்கை பேராசையால் நிறைந்தது. பணக்காரர்களைப் போல வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டது. இப்போது நீங்கள் சுகபோக வாழ்க்கை வாழலாம், நாளை உன் கணவரின் பேராசையால், மது மாது என்று தடம் புரண்டு சூன்ய நிறைந்த எதிர்காலம் அமைந்து உங்கள் வாழ்க்கை சீரழியும். பேராசைக்காரர்களின் வாழ்க்கையில் இப்படி நடந்ததே இல்லை என்று மட்டும் சொல்லாதே!”
கனப்படுப்புக்குச் சற்று மேலே படுத்துக்கொண்டு, இரு சகோதரிகளும் உரையாடிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த குடும்பத் தலைவன், பஹோம் தனக்குள் சொல்லிக்கொண்டது, “இவள் சொல்வது முற்றிலும் உண்மை”
“சிறு பிராயத்திலிருந்தே விவசாயத்தில் ஈடுபட்டுவிட்டதால் பேராசை எண்ணங்கள் எங்கள் மூளைக்குள் நுழைய அனுமதியில்லை. எங்கள் நினைவெல்லாம் விவாசயம் செய்ய போதுமான நிலம் இல்லையென்பது மட்டும்தான். எனக்கு விவசாயம் செய்ய போதுமான நிலம் இருந்திருந்தால் என் எண்ணம் முழுதும் உழைப்பதிலேயே நிலைத்திருக்கும், பொல்லாத பேராசைக்கு இடமிருக்காது.”
அந்த இரு பெண்களும் தேநீர் அருந்திவிட்டு, சிறுது நேரம் உடைகளைப் பற்றி பேசிவிட்டு, தேநீர் மேசையைச் சுத்தம் செய்த பின்னர் உறங்கச் சென்றனர்.
கனப்படுப்புக்குப் பின்னால் அமர்ந்து அவர்கள் உரையாடல் முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்தது விதி. ‘போதுமான நிலமிருந்தால் எங்கள் வாழ்க்கை பேராசைக்கெல்லாம் இடம் கொடுக்கும் அளவுக்கு தடம் புரளாது’ என்றல்லவா இளைய சகோதரி சொன்னாள்.
”சரி பார்ப்போம்! இதனையே ஒரு பெரும் பிரச்சனையாக உருவாக்கப் போகிறேன். அவர்கள் விவசாயம் செய்ய போதுமான நிலம் கொடுத்து, அந்த நிலத்தின் வழி என் திருவிளையாடலைத் தொடங்கப் போகிறேன்,’ என்று சங்கல்பம் எடுத்துக்கொண்டது விதி.
பகுதி 2
அதே கிராமத்தில், சிறு நிலத்துக்குச் சொந்தகாரியான ஒருத்தி குடியிருந்தாள். அவள் நிலம் முந்நூறு ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. அவளிடம் வேலை செய்யும் விவசாயிகளிடம் அவள் நல்லுறவு பேணி வந்தாள். ஆனால், சமீபமாக அவள் நிலத்தைப் பேணிக்காக்க ஒரு முன்னாள் ராணுவ வீரனைக் கங்காணியாக நியமித்ததிலிருந்து, அவன், அந்த நிலச் சொந்தக்காரியின் நிலத்தைக் குத்தகை எடுத்தவர்களிடம் அதிகமான அபராதம் விதித்துத் தொல்லை கொடுத்து வந்தான். பஹோம் எவ்வளவோ கவனமாக இருந்தும் அவருடைய குதிரை அம்மாதுவின் நிலத்தில் வளர்ந்த ஓட்ஸ் பயிர்களையும், மாடுகள் விளைந்த பயிர்களையும் நாசம் செய்தன, அவரின் கன்றுக்குட்டிகளோ அவளுடைய நிலத்தில் விளைந்த பயிரை மேய்ந்தன. தன் கால்நடைகளின் அத்துமீறலால் அவர் அடுத்தடுத்து அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் உண்டானது.
அதிக அபராதம் விதிக்கப்பட்ட பஹோம் அந்த இராணுவ அதிகாரியோடு வாதம் செய்துவிட்டு கோபத்தோடு வீடு திரும்பி அந்தக் கோபத்தைக் குடும்பத்தின் மீது காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார். இவ்வாறே அந்தக் கோடை காலம் முழுதும் அந்தக் கங்காணியோடு அவர் பிரச்னைக்குள்ளாகி பொருத நேரிட்டது.
குளிர் காலத்தில் நில உடமையாளர் அந்த நிலத்தை விற்கப்போவதாகவும் அந்நிலத்தை வாங்க ஒரு விடுதியின் சொந்தக்காரர் அவரோடு பேரம் பேசிக்கொண்டிருப்பதாகவும் பரவிய தகவலால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
அந்த விடுதி உரிமையாளர் நிலத்துக்கு உடமையாளராகிவிட்டால் அந்தக் கங்காணியைவிடவும் மோசமான அபராதங்கள் விதிப்பவாராக இருப்பார் என்று எண்ணிக் கவலைப்பட்டனர். ‘இந்த நிலத்தை நம்பித்தான் எங்கள் குடும்பத்தின் பிழைப்பு நடக்கிறது.’
எனவே குத்தகையாளர்களில் ஒருவர் அந்நில உரிமையாளரைச் சந்தித்து நிலத்தை விற்க வேண்டாமெனவும் அந்த விடுதி உரிமையாளர் கொடுக்கும் பணத்தைவிடவும் கூடுதலாகக் கொடுத்து வாங்கிக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கேட்டுக் கொண்டார். அம்மாது அவர்கள் கோரிக்கைக்கு இணங்கினார். குத்தகையாளர் அக்கிராமத்து மக்களிடம் பேசி முடிவெடுத்து அந்நிலத்தைப் பொதுவாக எல்லாருக்கும் சொந்தமானதாக ஆக்க முடிவெடுத்தார். அதற்காக அச்சமூகத்தினரை இருமுறை சந்தித்துப் பேசியும் எந்த இணக்கமான முடிவும் எடுக்க இயலவில்லை. விதி அந்த மக்கள் நல்ல முடிவை எடுப்பதற்குப் பெரும் தடையாக இருந்தது. எனவே அவரவர் தகுதிக்கு ஏற்ப அந்நிலம் துண்டுபோடப்பட்டு வாங்கப்பட்டது.
அவருடைய அண்டை நிலத்தார் அந்நிலத்தில் ஐம்பது ஏக்கர் நிலப் பகுதியை வாங்கப்போவதாக பஹோம் கேள்விப்பட்டார். அந்நில கிரயத்தில் ஐம்பது விகிதம் முன்பணமாகக் கொடுக்கப்போவதாகவும், எஞ்சியதை ஓராண்டு கழித்து கட்டி முடித்துவிடப்போவதாக அறிந்ததும் பஹோம் காழ்ப்புணர்ச்சிக்கு ஆளானார்.
“இப்படி எல்லாவற்றையும் அவரிடமே விற்றுவிட்டால் நமக்கு எஞ்சப்போவது ஒன்றுமில்லையே,” என்று தன் மனைவியிடம் சொல்லி அங்கலாய்த்தார்.
“மற்றவரகள் நிலத்தை வாங்கும்போது நாமும், இல்லை இல்லை என்றாலும் இருபது ஏக்கராவது வாங்கவிட வேண்டும். அந்தக் கங்காணி அபராதம் விதித்தே நம்மைச் சுரண்டிக்கொண்டிருக்கிறார்.”
எப்படி நிலத்தை வாங்குவது என்று இருவரும் குழம்பித் தவித்தனர். அவர்களிடம் நூறு ரூபில்சே கைவசம் இருந்தது. அதற்காக அவர்களிடமிருந்த திடகாத்திரமான குதிரையை விற்றனர். தாங்கள் வளர்த்த பாதி தேனீக்களை விற்றனர். தன் பிள்ளையையே ஒரு நிலக்கிழாரிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு கூலியாக அமர்த்தினர். தன் சொந்த மைத்துனரிடம் கடன் வாங்கினர். இப்போது அவர்களிடம் நிலத்தை வாங்க பாதிப்பணம் சேர்ந்திருந்தது.
அந்நிலத்தின் மரங்கள் அடர்ந்த 40 ஏக்கர் நிலப்பகுதியை வாங்க அந்நில உரிமையாளரிடம் பேரம் பேசினார். இரு தரப்பும் பரஸ்பரமாக ஒத்துக்கொண்ட பிறகு இருவரும் கைகுலுக்கிக்கொண்டனர். நிலம் கைமாறியது. மேற்கொண்டு நிலப்பட்டா சட்டப்படி கைமாற பட்டணத்துக்குச் சென்று பாதிப்பணம் இப்போது கட்டுவதாகவும் எஞ்சிய பனத்தை இரண்டு ஆண்டுகளில் கட்டிமு டித்து விடுவதாகவும் , ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
இப்போது பஹோம் சொந்த நிலத்தின் உரிமையாளர். அவர் விதைகளை இரவலாகப் பெற்று தான் சொந்தமாக வாங்கிய நிலத்தில் விதைக்கத் தொடங்கினார். மகசூல் சிறப்பாக அமைந்தது. தன் நில உரிமையாளரின் கடனையும் தன் மைத்துனரின் கடனையும் ஒரே ஆண்டில் கட்டி முடித்தார். பஹோம் இப்போது உறுதியாக ஒரு நிலச்சொந்தக்காரர் என்பதில் பெருமைகொண்டார். விதைப்பதும், அறுவடை செய்வதும், களையெடுப்பதும், சொந்த நிலத்திலேயே தன் கால்நடைகளை மேய்ச்சலுக்கும் விடுவதுமாக அவர் சுதந்திரமாக உழைத்தார். நிலத்தை உழுவதும், சோளம் பயிரிடுவதும், மேய்ச்சல் புற்களை வளர்ப்பதுமாக அவரின் விவசாய வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக அமைந்தது. பிறர் நிலத்தைவிட தன் சொந்த நிலமே அதிக விளைச்சல் தருவதாக அவர் நினைத்தார். முன்னர், இதே நிலத்தில் உழைத்து வந்தபோது பிறர் நிலம் என்ற அபிப்பிராயமே உண்டானது. ஆனால் இந்நிலம் தற்சமயம் தனக்குச் சொந்தமானது என்று எண்ணும்போது அந்த நினைப்பு அவருக்குப் பெருமிதத்தை உண்டுபண்ணியது.
பகுதி 3
பஹோமுக்கு அவனுடைய புதிய வாழ்க்கையில் பரம திருப்தி உண்டான நிலையில், அண்டை நிலத்துக்காரர்கள் தன் கொல்லைக்கும், புற்கள் விளைந்த இடத்துக்கும் அனுமதியின்றி நுழைவதுமாக இருந்ததை விரும்பவில்லை. அவர்களிடம் மிக நாகரிகமாகச் சொல்லிப் பார்த்தார். ஆனால் வரம்பு மீறல்கள் மீண்டும் மீண்டும் நடந்தன. அவர்களின் மாடுகள் தன் விவசாய நிலத்துக்குள் மேய வந்துவிடுகின்றன. அவர்கள் பாதுகாப்பில் இருக்கும் குதிரைகள் இரவு வேளையில் சோளக்கொல்லைக்குள் புகுந்து நாசம் செய்தன. பஹோம் அவைகளை வெளியே விரட்டி விரட்டி களைத்துவிட்டான். பலமுறை அதற்காக கால்நடை உரிமையாளர்களை மன்னிக்கவும் செய்தான். ஒருநாள் பொறுமையிழந்து மாவட்ட நீதி மன்றத்தில் புகார் அளித்தான். “அவர்கள் வேண்டுமென்றே கால்நடைகளைத் தன் கொல்லைக்குள் விடவில்லை என்று தெரியும். அதுபோன்ற தீய நோக்கம் அவர்களிடம் இல்லை! நான் அவற்றை கண்காணித்துக்கொண்டே இருக்க முடியாது. நான் இல்லாத நேரத்தில் அவை என் பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன. அவர்களுக்கு அவர்களின் கவனமின்மையை உணர்த்தியாக வேண்டும்.”
அவர்களுக்கு அந்தப் புகார் பாடம் கற்பித்தன. ஒரிரு முறை அல்ல பலமுறை. விவசாயிகள் அபராதங்கள் செலுத்த வேண்டி இருந்தது. அதனால் அந்த விவசாயிகள் பஹோமின் மீது வெறுப்பும் கோபமும் கொண்டிருந்தனர். அவர்கள் இப்போதெல்லாம் வேண்டுமென்றே தங்கள் வளர்ப்புப் பிராணிகளை பஹோமின் கொல்லைக்குள் நுழையவிட்டனர். அவர்களில் ஒருவன் இரவு நேரத்தில் பஹோமின் தோட்டத்துக்குள் புகுந்து எலுமிச்சை மரங்களை வெட்டி வீழ்த்தியிருக்கிறான். தன் தோப்பைக் கண்காணிக்கும்போது பஹோமுக்கு ஏதோ வெண்மை நிறத்தில் ஒன்று தென்பட்டது. அருகில் சென்று பார்த்தபோது அவை வெட்டித் துண்டாக்கப்பட்ட எலுமிச்சை மரத் தண்டுகள். அந்த இடத்தை உற்று கவனித்தபோது அவை அடியோடு வெட்டப்பட்டு, மண்ணிலிருந்து எட்டிப்பார்க்கும் எலுமிச்சை மர அடிப்பாகங்கள். அதைப் பார்த்தவுடன் பாஹோமுக்குச் சூடேறியது.
‘மரங்களில் ஒன்றோ இரண்டோ வெட்டியிருந்தால்கூடப் பரவாயில்லை. அந்த ராஸ்கல் ஒரு தோப்பையே வெட்டிச் சாய்த்திருக்கிறான். இந்த நாச காரியத்தை செய்தவர் யாரென்று தெரிந்தால் அவர்களுக்குச் சரியான பாடம் கற்பிப்பேன்.’
‘இந்த வேலையைச் செய்தவன் யாராக இருக்கும்?’ என்று மூளையைக் கசக்கிப் பிழிந்தான். ‘வேறு யாரும் செய்திருக்கமாட்டார்கள், கண்டிப்பாகச் சைமனாகத்தான் இருக்கும்!’ என்று அவன் உள்ளுணர்வு சொல்லிற்று. எனவே பஹோம் அங்கிருந்து சைமன் வீட்டருகே சென்று நோட்டமிட்டான். அவனுக்கு அங்கே எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அவனுக்குச் சினம்தான் தலைக்கேறியது. இருப்பினும் அவனுக்கு சைமன்தான் செய்திருப்பான் என்று திட்டவட்டமாகத் தெரிந்தது. அவன் மீது புகார் கொடுத்தான். சைமன் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டான். புகார் பலமுறை விசாரணைக்குப் போனது. கடைசியில் எந்த ஆதாரமும் இல்லாததால் சைமன் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. பஹோம் மிகுந்த பதட்டத்துக்குள்ளானான். இப்போது அவன் கோபம் நீதிபதியின் மீது திரும்பியது.
“திருடர்கள் உங்களுக்கு உபகாரம் ஏதும் செய்வார்களோ?” என்றான் பஹோம். “நீங்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால் அவனைக் குற்றமற்றவன் எனத் தீர்ப்பளித்து விடுதலை செய்திருக்க மாட்டீர்கள்.”
பஹோம் நீதிபதிகளிடம் மட்டுமல்ல, தன் அண்டைவீட்டார்களிடமும் தன் கோபத்தைக் காட்டினான். நீதிமன்றக் கட்டடத்தையே கொளுத்துவிடுவேன் என்று சூளுறைத்தான். பஹோமின் அந்த ஆவேசப் பேச்சு அச்சமூகத்தில் பரவியது. அதனால் அம்மக்களிடத்தில் அவன் மதிப்பு முன்பைவிடக் குறைந்தது.
அந்தத் தருணத்தில்தான் அந்த நிலத்தைவிட்டு எல்லாரும் வேறு புது இடத்துக்குப் புலம் பெயர்ந்துகொண்டிருக்கும் வதந்தி பரவியது.
“இந்த இடத்திலிருந்து போக வேண்டிய அவசியம் எனக்கில்லை.” என்று எண்ணினான் பஹோம். இந்த இடத்தை எல்லாரும் காலி செய்துவிட இங்கே நிலம் மிஞ்சும், இதனால் என் தோட்டம் விரிவடையும். நான் காலியான இடத்தைக் கையகப்படுத்துவேன். இப்போதுள்ளது போல மனித நெருக்கடியில்லாமல், வசதியாக வாழ முடியும்.
ஒரு நாள் பஹோம் வீட்டில் அமர்ந்திருந்தபோது, அவ்வழியில் போன ஒரு விவசாயியை வீட்டுக்குள் அழைத்தார். தன் வீட்டில் இரவு உணவளித்து அன்றிரவு தங்கவும் வைத்தார். அவர் யார், எங்கிருந்து வருகிறார் போன்ற விபரங்களைக் கேட்டறிந்தார். தான் வேலை செய்யும் வோல்கா என்ற ஊரிலிருந்து வருவதாகச் சொன்னார். அவர்களுடைய உரையாடல் நீண்டது. அவர் வாழும் ஊரில் மக்கள் தனித்தனியே இருபத்தைந்து ஏக்கர் நிலத்துக்கு உடமையாளர்களாகி அங்கேயே நிரந்தரமாக குடியிருக்கிறார்கள் என்று சொன்னார் அந்த விருந்தாளி. தான் அங்குள்ள சமூகத்தோடு பழகி அவர்களில் ஒருவராகி ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும் சொன்னார். அவர்களுக்குச் சொந்தமான நிலம் நல்ல விளைச்சல் தரக்கூடிய நிலம் என்றும் குறிப்பிட்டார். தானிய வகை செடிகள் குதிரை உயரத்துக்கு வளர்கிறது என்றும் ஐந்து முறை அறுத்தெடுத்தாலே ஒரு பெருங்கட்டு அளவுக்குத் தேறும், ஒரு செழிப்பான நிலம் அது என்று பஹோமை வியப்புக்குள்ளாக்கினார். “ஒருவர் அந்த நிலத்தில் உழைப்பதற்கு முன்னர் வெறுங்கையோடுதான் வந்தார் ஆனால் இப்போது அவர் ஆறு குதிரைகளுக்கும் இரண்டு கரவை மாடுகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.” என்றார்.
அந்த விருந்தினர் பேசப் பேச பாஹோமுக்கு உற்சாகம் தூண்டப்பட்டு, பேராசைத் தீ பற்றிக் கொண்டது.
‘’பிறர் நிலபுலத்துடன் மகிழ்ச்சியாக வாழும்போது, நான் மட்டும் ஏன் இந்த நெருக்கடியான வாழ்க்கையை வாழ வேண்டும்? என்னுடைய நிலத்தையும் கால்நடைகளையும் விற்றுவிட்டு அதில் வரும் பணத்தில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினால் என்ன? இந்த மனித நெருக்கடியிலும் பல்வேறு பிரச்சனைக்கிடையிலும் வாழ்வதைவிட, நானே நேரடியகப் போய் அங்குள்ள நிலவரத்தைத் தெரிந்துகொண்டு வந்தால் என்ன?” என்று பஹோம் யோசித்தார்.
கோடைகாலம் நெருங்கும் வேளையில் அவர் தன் பயணத்தைத் தொடங்கினார். புகைவண்டியின் மூலம் சாமாராவை அடைந்து அங்கிருந்து முன்னூறு மைல் தொலைவிலுள்ள வோல்காவை நடந்தே போயடைந்தார். அந்த இடம் விருந்தினர் சொன்னது போலவே இருந்தது. விவசாயிகள் அகன்ற நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட இருபத்தைந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். நிறைய வருமானம் பெற்றுத் திளைத்தார்கள். மேலும் சுயமாக நிலத்தை வாங்கி அவற்றைச் சொந்தமாக்கிக்கொண்டு மேலும் மேலும் இருபது ஏக்கர் நிலத்தைப் பெற்று வளமாக இருப்பதைப் பார்த்தார்.
அங்கே தனக்குக் கிடைத்த விபரங்களோடு அவர் வீடு திரும்பினார். இலையுதிர்காலத்தில் தன் நிலபுலன்களை அதிக லாபத்துக்கு விற்றார். தான் வளர்த்த கால்நடைகளையும் விற்றுத் தீர்த்துவிட்டு அந்த ஊரின் தொடர்பை அறுத்துக்கொண்டு, வசந்த காலத்தில் தன் குடும்பத்தோடு அந்த புதிய இடம் நோக்கிப் புறப்பட்டார்.
பகுதி 4
அந்தப் அகன்ற நிலத்தை அடைந்த பஹோம் அந்த ஊரில் குடியிருப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டார். அந்தக் கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இதர வசதிகளைப் பயன்படுத்த அதற்காக விதிக்கப்பட்ட கட்டணத்தையும் அச்சமூக நிர்வாகத்தினரிடம் செலுத்தினார். அவர் குடும்பத்தின் ஐந்து உறுப்பினருக்கான நில உடமை பத்திரம் வெவ்வேறு நிலப்பகுதிகளில், மொத்தம் 125 ஏக்கர் நிலம் அவரிடம் வழங்கப்பட்டது. தன் குடும்பத்துக்கான புதிய வீட்டை அவர் கட்டிக்கொண்டார். வளர்க்கக் கால்நடைகளையும் வாங்கிக்கொண்டார். அவர்களில் ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட நிலப்பகுதி முன்னர் அவரிடம் இருந்த நில அளவைவிட மூன்று மடங்கு பெரியது. அது மட்டுமல்ல சோளம் நன்றாக விளையக்கூடிய செழித்த நிலம் அது. அந்த நிலப்பகுதியில் அவர் அனுபவிக்கும் வாழ்க்கைத் தரம் முன்பு அனுபவித்ததைவிட பத்து மடங்கு அதிகம். ஏராளமான கால்நடைகளுக்கான புல்வெளியை உண்டாக்கி மேய்ச்சலுக்காக அகன்ற நிலப்பகுதியும் இருந்தது.
தொடக்கத்தில் அங்கு தன் வாழ்க்கையைத் தொடங்க சில இடைஞ்சல்களை எதிர்கொண்டாலும் நாளாவட்டத்தில் அது பழகிப்போய் மகிழ்ச்சியானதாக மாறியது. ஆனால் அந்த விரிந்த நிலப்பகுதியும் தனக்குப் போதவில்லை என்றே எண்ணினார். முதல் ஆண்டில் அவர் கோதுமை பயிரிட்டார். அது நல்ல விளைச்சலைக் கொடுத்தாலும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. அதே இடத்தில் திரும்பத் திரும்ப ஒரே வகை பயிர் செழித்து வரவில்லை. வேறு நிலப் பகுதிக்கு மாற வேண்டியிருந்தது. அவற்றையும் ஓரிரு ஆண்டுகாலம் வெறுமனே மேய்ச்சல் நிலமாக வைத்திருக்க வேண்டியிருந்தது. எனவே பயிரிட மேலும் விரிந்த நிலம் தேவைப்பட்டது. அங்குள்ள எல்லா விவசாயிகளிடமும் இதே பிரச்சனைதான் நிலவியது. எனவே பெரும்பாலானோருக்கும் பயிரிட நிலம் அவசியம் தேவைப்பட்டதால் அந்த வகை நிலத்துக்காக அவர்களுக்குள்ளே போட்டி எழுந்தது. யாரிடமெல்லாம் வசதி இருந்ததோ அவர்களெல்லாம் கோதுமை பயிரிட்டார்கள். வழி இல்லாதவர்கள், நில வரி செலுத்த வாடகைக்கு விட்டுப் பணம் சேர்த்தார்கள்.
பஹோமுக்குக் அதிக கோதுமை விளைவிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதற்காகப் போதுமான பரப்பளவு கொண்ட நிலம் தேவைப்பட்டது. அதன் காரணமாக அவர் கூடுதலாக நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தார். அதில் அவர் கோதுமை பயிரிட்டுப் போதுமான வருமானத்தை ஈட்டினார். ஆனால், அந்நிலம் வெகுதூரத்தில் அமைந்திருப்பதே அவர் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சனை. கோதுமையைப் பத்து மைல் சதுர அடி அளவிற்குப் பயிரிட வேண்டிய சிரமமும் இருந்தது. அறுவடை செய்த கோதுமையைப் பத்து மைல் தூரத்துக்குக்கொண்டு செல்ல வேண்டிய இக்கட்டும் இருந்தது. சிறிது காலத்தில் அங்குள்ள நிலத் தரகர்கள் சொந்த நிலத்தை வாங்கி வீடு கட்டிக் குடியேறி அங்கேயே வசதியோடு வாழ்ந்தனர். பஹோம் அவர்களைப் போலவே சொந்த நிலத்தில் குடியேறி சொந்த வீடு கட்டி நிம்மதியாக வாழ எண்ணங்கொண்டார். ஒப்பீட்டளவில் இப்போதுள்ள வாழ்க்கையைவிட அவர் கனவு காணும் வாழ்க்கை சற்றே மேம்பட்ட வாழ்க்கை. அது கண்டிப்பாய் நெருக்கடியற்ற அழகான வாழ்க்கையாக அமையும்.
அவரின் சொந்த வீட்டுநிலக் கனவு அவரை அடிக்கடி தொந்தரவு செய்த வண்ணம் இருந்தது.
மூன்று வருடங்கள் அவரின் வாழ்க்கை எந்த மாற்றங்களும் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. நிலத்தைக் குத்தகை எடுப்பதிலும் கோதுமை பயிரிடுவதிலுமே அந்த மூன்றாண்டுகள் கடந்தன. அவரின் அந்த உழைப்பு நல்ல விளைச்சலைக் கொடுத்து வருமானமும் அதிகரித்துக்கொண்டிருந்தது. அந்த வாழ்க்கையை ஏற்று மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அந்தத் தேய்வழக்கான வாழ்க்கையின் மீது அவருக்கு நாளடைவில் வெறுப்பே எஞ்சியது. புதிய நிலங்கள் விற்பனைக்கு வரும்போது விவசாயிகள் முந்திக்கொண்டு அதனை வாங்கி உடமையாக்கிக்கொண்டிருந்தனர். கொஞ்சம் கவனக் குறைவாக இருப்பின் விற்பனைக்கு வரும் நிலங்கள் விற்றுத் தீர்ந்துவிடும். மூன்றாண்டுகளுக்குப் பின்னர், ஒரு தரகரோடு கூட்டுச் சேர்ந்து பஹோம் விவசாயிகளிடமிருந்து உழுது சீர்படுத்திய ஒரு நிலத்தை வாங்கினான். அந்த நில விவகாரத்தில் பிரச்னை எழ சம்பந்தப்பட்டவர்கள் வழக்குத் தொடுத்து தோற்றும் போனார்கள்.
“அந்நிலம் எனக்குச் சொந்தமாக இருந்திருந்தால், இதுபோன்ற தொல்லையெல்லாம் நேராமல் ஒரு சொகுசான வாழ்க்கை அமைந்திருக்கும் அல்லவா?” என்று நினைத்தார் பஹோம்.
பஹோம் விற்பனைக்கு வரும் ஒரு நிலத்தை வாங்கிவிடும் வாய்ப்புக்காகத் தேடி அலைந்தார். அந்த நேரத்தில்தான் மிகுந்த கடன் தொல்லையில் சிக்கிக்கொண்ட ஒரு விவசாயி நூற்றுமுப்பது ஏக்கர் நிலத்தை மிக மலிவாக விற்க முன்வந்திருந்தார். அவரின் நெருக்கடியான நிலையைப் பயன்படுத்தி அந்த நிலத்தை இரு தவணைகளில் கட்டிவிடுவதாகப் பேரம் பேசி 1500 ருபில்ஸ்களை முன்பணமாகக் கொடுத்து வாங்கிக்கொண்டார். அது சுமூகமாகவே நடந்தேறியது.
ஒருநாள் பஹோமிடம் தன் குதிரைகளுக்கு வைக்கோல் வாங்க வந்திருந்தார் ஒரு நில உரிமையாளர். தேநீர் அருந்திக்கொண்டே இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். தான் வெகு தொலைவில் இருக்கும் பஷ்கிர்கள் நிலச்சமூகத்திடமிருந்து வருவதாகவும், 1000 ருபில்ஸ்களுக்கு முப்பதாயிரம் ஏக்கர் நிலத்தை வாகிவிட்டதாகவும் சொன்னார். பஹோமுக்கு உள்ளூர ஆசை கிளர்ந்தது. அந்த நில விற்பனையின் மீதான தன் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள மேலும் மேலும் வினாக்களைத் தொடுத்த வண்ணம் இருந்தார். “முக்கியமாக அந்த நில உடமை சமூகத்தின் தலைவர்களை நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டும். நான் 100 ரூலில்ஸ்களைச் செலவு செய்து விலை உயர்ந்த ஆடைகள், விலை உயர்ந்த தரை விரிப்பு, ஓர் அழகிய தேநீர் செட், மற்றும் மதுப் பிரியர்களாக இருந்தால், நல்ல வைன் புட்டியை வாங்கிப் பரிசாகக் கொடுத்து நிலத்தின் கிரையத்துக்கு ஒரு ஏக்கருக்கு 2 பௌன்ஸ் விலை குறைத்து வாங்கி விட்டேன்,” என்று சொல்லி அதற்கான ஆதார பத்திரங்களைக் பஹோமிடம் காட்டினார். ”அந்த நிலம் ஆற்றங்கரையில் அமைந்த புதிய விளைச்சல் நிலம்,” என்றார் விருந்தினர்.
பஹோம், அவரிடம் மென்மேலும் கேள்விகளால் துளைக்க, அவர் சொன்னார் “அந்த நிலம் எவ்வளவு அகன்றது என்றால், நீங்கள் ஒரு வருட காலம் இடைவிடாமல் நடந்தாலும் அந்த நில அகலத்தைக் உங்களால் நடந்து கடந்துவிட முடியாது, அந்த மொத்த நிலமும் பஷ்கிர்களுடையது,” என்றார். அவர்கள் செம்மறி ஆட்டைப் போல எளிமையானவர்கள், (பைபில் செம்மறி ஆடுகளைப் பொறுமைக்கு உருவகமாகச் சொல்கிறது) அந்த நிலத்தை இலவசமாகக்கூடப் பெற்றுவிட முடியும்.”
“நான் ஏன் 1000 ரூபில்ஸ் கொடுத்து 13000 ஏக்கர் நிலத்தை வாங்கி உழைப்பதோடு, பெருங்கடனுக்குள் போய் விழ வேண்டும்? இதே தொகையில் நான் அங்கே பத்து மடங்கு அதிகம் நிலத்தைப் பெற முடியும்.” என்று நினைத்தார் பஹோம்.

பாகம் 5
அந்த விருந்தினர் கிளம்புவதற்கு முன்னர், அந்த ஊருக்கு எப்படிப் போவது என்று கேட்டறிந்துவிட்டு, அங்கே போவதற்கான ஆயத்த வேலைகளில் உடனடியாக ஈடுபட்டார். அவர் மனைவியிடம் எல்லாப் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு தன் உதவியாளரோடு அவ்வூரை நோக்கிப் புறப்பட்டார். இடையில் ஓர் ஊரில் நிறுத்தி, அந்தத் தரகர் அறிவுறுத்தியது போல ஒரு புட்டி வைன், தேனீர் பொட்டலம், தரை விரிப்பு, மேலும் சில பரிசு பொருள்களை வாங்கிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார். சுமார் 300 மைல்களை ஏழு நாட்கள் தொடர் பயணத்துக்குப் பின் அந்த விருந்தினர் குறிப்பிட்ட பஷ்கிர்ஸ் ஊரை அடைந்தார். அங்கே நிலம் வாங்குவோர் தங்குவதற்காகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அக்கூடாரங்கள் பரந்த புல்வெளியிலோ ஆற்றங்கரையிலோ அமைந்திருந்தன. அவர்கள் பெரும்பாலும் உணவுக்காக, ரொட்டி வகைகளையும், விவசாயத்தையுமே நம்பியிருந்தனர். ஆடுமாடுகளும் குதிரைகளும் புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்தன. குதிரைகள் சில கூடாரத்தின் அருகே கட்டிப் போடப்படிருந்தன. ஒரு நாளைக்கு இருமுறை பெண் குதிரைகள் அவற்றோடு இணைய அனுப்பப்பட்டன. சில பெண் குதிரைகளிடமிருந்து பால் கறக்கப்பட்டது. அவற்றின் பாலிலிருந்து பெண்கள் ஒரு வகை மதுவையும் பாலாடைக் கட்டிகளையும் தயாரிக்கவும் செய்தார்கள். ஆண்கள், அம்மதுவை அருந்தியும், ஆட்டிறைச்சியை உண்டும், சுங்காவை புகைத்தும், தேநீர் அருந்தியும் பொழுதை இன்பமாகக் கழித்தார்கள். கோடைகாலம் முழுதும் வேறெந்த சிந்தனையுமற்று வேலையுமற்று அதே கதியாகக் கிடந்தார்கள். அவர்கள் திடகாத்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள். அவர்களுக்கு ரஷ்யர்களை அறிமுகம் செய்துகொள்ள அக்கறையின்றியும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இயல்பாகவே நல்லவர்களாகக் காணப்பட்டார்கள்.
அவ்வூருக்குப் புதியவரான பஹோமைப் பார்க்கக் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து குழுமி நின்றார்கள். ஒரு மொழிபெயர்ப்பாளர் அவர் நிலம் வாங்க வந்திருப்பதன் செய்தியைச் சொன்னார். மகிழ்ச்சி அடைந்த பஷ்கிர்ஸ் அவரை வரவேற்று ஒரு சிறந்த கூடாரத்துக்கு அழைத்துச் சென்று கார்ப்பெட் விரிக்கப்பட்ட தரையின், மெத்தை இருக்கையில் அமரச் செய்தனர். தேனீரும் மதுவும் ஆட்டிறைச்சி கறியையும் பரிமாறினர். பஹோமும் தான் கொண்டு வந்திருந்த பரிசுகளைப் பஷ்கிர்களிடம் பகிர்ந்து கொடுத்தார். பஷ்கிர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. அவர்கள் சொன்ன விபரங்களை மொழிபெயர்ப்பாளரை மொழிபெயர்த்துச் சொல்லச் சொன்னார்கள்.
“தாங்கள் வழங்கிய பரிசு பொருட்களுக்காகவும், காட்டிய அன்புக்கான பிரதி உபகாரமாக, இங்கே உங்களுக்குத் தேவையானவற்றை திருப்பிச் செய்துகொடுத்து உங்களை மகிழ்ச்சிப்படுத்த இவர்கள் கடமைப்பட்டிருப்பதாகச் சொல்லச் சொன்னார்கள், சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தேவை? அவர்கள் தங்களிடம் உள்ளதை உங்களுக்குப் பரிசாகக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.” என்றார் மொழிபெயர்ப்பாளர்.
பஹோம் சொன்னார்,” எனக்கு மிக உவப்பானது உங்கள் நிலம், நான் இப்போது வாழும் இடம் நெருக்கடிமிக்க நிலப்பகுதி, விவசாய மண் தன் உற்பத்தித் திறனை இழந்துவிட்டது. உங்களிடமோ செழிப்பான மண் விரிந்து கிடக்கிறது, நான் இது போன்ற செழுமை நிறைந்த பகுதியை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.”
மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துச் சொன்னார். பஷ்கிர்கள் சிறிது நேரம் அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள். பஹோமுக்கு அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. ஆனால் அவர்கள் புன்னகை முகத்தோடு மகிழ்ச்சியோடு உரையாடுவதை உணர முடிந்தது. மொழிபெயர்ப்பாளர் அவர்கள் முடிவெடுத்ததை மொழிபெயர்த்தபோது அவர்கள் சலனமற்றுக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். “நீங்கள் அளித்த பரிசுக்காக உங்களுக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ அவ்வளவு நிலத்தையும் தரச் சித்தமாய் இருப்பதாகச் சொல்கிறார்கள், உங்களுக்கு விருப்பமான இடத்தைக் சுட்டிக் கட்டினால் மட்டும் போதும்! என்கிறார்கள்,” என்றார்.
பஷ்கிர்கள் மீண்டும் விவாதம் செய்யும் தொனியில் பேசினார்கள். “எதைப் பற்றி விவாதிக்கிறார்கள்?” என்று பஹோம் வினவினார். “இந்தச் சமூகத் தலைவரிடம் அனுமதி பெறாமல் உங்களுக்கு உத்ரவாதம் அளிப்பது தவறு என்று சிலரும், இன்னும் சிலர் தலைவர் ஊர் திரும்பும் வரை காத்திருக்க வேண்டிய அவசிமில்லை என்றும் விவாதிக்கிறார்கள்,” என்றார்.
பகுதி 6
பஷ்கிர்கள் விவாதம் செய்துகொண்டிருந்தபோது ஒநாய் உரோமத்தால் செய்யப்பட்ட தொப்பி அணிந்து ஒருவர் அங்கே தோன்றினார். எல்லோரும் மௌனமாகி மரியாதையோடு எழுந்து நின்றனர். மொழிபெயர்ப்பாளர் சொன்னர், “இவர்தான் எங்கள் சமூகத் தலைவர்,” என்று.
பஹோம் உடனடியாக நல்ல ஆடையையும் ஒரு ஐந்து பவுண்டு தேநீர் பொட்டலத்தையும் எடுத்துப் பணிவோடு கொடுத்தார். தலைவரும் அதனைப் பெற்றுக்கொண்டு தனக்கே உரித்தான இருக்கையில் அமர்ந்தார். பஷ்கிர்கள் உடனடியாக அவரிடம் ஏதோ சொன்னார்கள். தலைவர் சுற்றியிருப்பவரை அமைதியாக இருக்கச் சைகை செய்து தலைவர் தலையை ஆட்டிக்கொண்டே கவனமாகக் கேட்டார். பின்னர் பஹோமிடம் ” உங்களுக்கு எந்த இடத்தில் நிலம் வேண்டுமோ அதனைத் தாராளமாகப் பெற்றுக்கொள்ளலாம், இங்கே எண்ணற்ற ஏக்கரில் நிலம் அகன்றிருக்கிறது.,” என்றார்.
‘அது எப்படி என் விருப்பத்திற்கேற்ப அவ்வளவு நிலத்தையும் எடுத்துக்கொள்வது?’ என்று உள்ளுக்குள் எண்ணினார் பஹோம். ‘நான் சட்டப்படிதான் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது அவர்களுடைய சொத்து, பிற்காலத்தில் இந்நிலம் அவர்களுடையது என்று மீட்டெடுத்துக்கொண்டால்?’ என பஹோம் நினைத்தார்.
“உங்கள் கனிவான கருத்துக்கு நன்றி. உங்களிடம் மிக அகன்ற நிலம் உள்ளது, எனக்கு வேண்டியது சிறிய பகுதிதான். என்னுடைய பகுதி எது என்பது மட்டுமே எனக்கு உறுதியாகத் தெரிய வேண்டும். நிலத்தை அளந்தபின் கொடுப்பதே நல்லது. வாழ்வும் இருப்பும் இறைவனின் கையில் உள்ளது. உங்களின் பெருந்தன்மையினால் அந்நிலம் என் கைக்குச் சேரலாம், ஆனால் உங்கள் பிள்ளைகள் அதனை உடமையாக்க விருப்பப்பட வாய்ப்புண்டு அல்லவா?”
“நீங்கள் சொல்வது ஏற்புடையதே, அதற்கான ஏற்பாடுகள் செய்வோம்” என்றார் தலைவர்.
“சொத்தை முறைப்படி கைமாற்றும் அதிகாரி இங்கே இருப்பதாக அறிகிறேன், அவரின் சேவைக்காக நீங்கள் சிறிது நிலம் அளித்திருப்பதாகவும் அறிகிறேன். நில விற்பனைக்கான ஒப்பந்தப் பத்திரத்தை அவரே தயார் செய்யட்டும், அவ்வாறு செய்வதைத்தான் நானும் விரும்புகிறேன்.” என்றார் பஹோம்.
தலைவர் புரிந்துகொண்டார்.
ஆமாம், அவ்வாறு எளிதாக செய்து முடித்துவிடலாம். அதிகாரி நம்மிடம் உண்டு, நாம் பட்டணத்துக்குப் போய் சட்டவிதிப்படி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு முத்திரையிட்டுக்கொள்வோம்,” என்றார் தலைவர்.
“நிலத்தின் விலை என்ன?” என்று வினவினார் பஹோம்.
“எங்கள் விலை எப்போதும் போலத்தான். ஆயிரம் ரூபில்ஸ்.
பஹோமுக்குப் புரியவில்லை.
பஹோம் விளக்கமாகக் கேட்டார், “நில அளவு என்ன? எத்தனை ஏக்கர்?
”திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அன்றன்றைக்கான விலை. உங்களால் எவ்வளவு தூரம் நடந்து போகமுடியுமோ அந்த நடந்துபோன தூர அளவுக்கான நிலம் உங்களுடையது, அவ்வளவுக்கும் விலை ஆயிரம் ரூபில்ஸ்தான்.”
பஹோமுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.
“ஆனால்….. ஒரு நாளைக்கு எவ்வளவோ தூரம் நடக்க முடியுமோ? அவ்வளவு பெரிய நிலமா?” பஹோம் ஆச்சரியத்தோடு கேட்டார்.
தலைவர் சிரித்தார்.
“ஆம் அவ்வளவு அகன்ற நிலமும் உங்களுடையதுதான், ஆனால் அதில் ஒரு நிபந்தனை உண்டு. நீங்கள் நடையைத் தொடங்கிய இடத்துக்கே அன்று இரவு சாய்வதற்குள் வந்து சேர்ந்துவிட வேண்டும். அப்படிச் சேரவில்லையென்றால் கட்டிய பணத்தை மீட்டுக்கொள்ள முடியாது.” என்றார் தலைவர்.
“ஆனால் நான் எவ்வளவு நிலத்தைக் கடந்தேன் என்று எப்படி அளவிட்டுக் கொள்வது?”
“உங்களுக்குத் திருப்தி தரும் எல்லை வரை போய் நின்று கொள்ளுங்கள், நீங்கள் அடைந்த புள்ளியிலிருந்து மீண்டும் சுற்றி ஒரு வட்டம் நடந்து, தொடங்கிய இடத்தில் வந்து சேருங்கள். உங்களோடு ஒரு மண்வெட்டியை எடுத்துச் சென்று நீங்கள் அடைந்த புள்ளியை அடையாளம் இடுங்கள். போதும் என்று நீங்கள் முடிவெடுத்தால் அந்த இடத்தில் மண்ணை வெட்டி குழி தோண்டி குச்சியை நட்டு அடையாளம் வையுங்கள். ஒவ்வொரு வளைவின் போதும் இந்த அடையாளம் தேவை. பின்னர் நீங்கள் தோண்டி அடையாளமிட்ட குழிகளைச் சுற்றி எல்லை வகுத்துத் தருவோம். எவ்வளவு பெரிய வட்டத்தை வளைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு பெரிய வட்டத்தை நீங்கள் வளைத்து உங்களுடையதாக்கிக்கொள்ளலாம். ஆனால் சூரிய அஸ்தமனத்துக்கு முன் நீங்கள் ஆரம்பித்த புள்ளிக்கே கண்டிப்பாய் வந்து சேர்ந்துவிட வேண்டும். நீங்கள் சுற்றி வளைத்த நிலப்பரப்பு முழுவதும் உங்களுக்கே சொந்தம்.”
பஹோமுக்கு அளவற்ற மகிழ்ச்சி. அவர் மறுநாள் அதிகாலையிலேயே தொடங்க முடிவெடுத்தார். அன்று இரவு போதுமான அளவு மதுவும் ஆட்டிறைச்சி கறியும் உண்டு, சிறிது நேரம் கழித்து தேநீரையும் அருந்திவிட்டு படுக்கச் சென்றார். பஹோமுக்கு இறகு மெத்தை போடப்பட்டிருந்தது. பின்னர் அடுத்த நாள் காலை குறிப்பிட்ட இடத்தில் கூடப்போவதாகச் சொல்லிவிட்டு பஷ்கிர்ஸ் கலைந்து சென்றுவிட்டார்கள். மறுநாள் அதிகாலை சூரிய உதயத்தில் குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதாகத் திட்டம்.
பகுதி 7
பஹோம் இறகு மெத்தையில் கால் நீட்டிச் சாய்ந்தாரே ஒழிய தூக்கம் தட்டவில்லை. மனம் நிலத்தைப் பற்றியே சிந்தித்து அலைபாய்ந்துகொண்டிருந்தது.
‘எவ்வளவு அகன்ற நிலத்தை என் உடமையாக்கிக்கொள்ள முடியும்? என்னால் ஒருநாளைக்கு எளிதில் 35 மைல் தூரம் நடக்க முடியும். இப்போதெல்லாம் நீண்ட பகல்வேளை வேறு. முப்பத்தைந்து மைல் தூரமென்பது எத்தனை ஏக்கர் சுற்றளவு? நான் என் மோசமான நிலத்தை விற்றுத் தொலைத்து அல்லது குத்தகைக்கு விட்டுவிட்டு, மிகச் செழிப்பான நிலப்பகுதியைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன். நூற்றைம்பது ஏக்கர் நிலத்தை விவசாயத்துக்கும், கால்நடைகளுக்குப் புல் வளர்ப்பதற்கும் என்னால் எளிதாகப் பெற்றுவிட முடியும்.’
பஹோம் இரவு முழுதும் கொட்டக் கொட்ட விழித்திருந்தார். விடியும் வேளையில்தான் சில மணித்துளிகள் கண்ணயற முடிந்தது. சின்ன கனவு காணும் நேரம் மட்டுமே தூங்கியிருப்பார். அவர் இதே கூடாரத்தில் படுத்திருக்கும்போது வெளியே யாரோ சிரிப்பது கேட்டது. அவர் யாராக இருக்கும் என்று யோசித்தார். எழுந்து போய் பார்த்தால் பஷ்கிர்களின் தலைவர். கூடாரத்தின் முன்னால் அமர்ந்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கிறார். அருகே போய், “எதற்காக இப்படிச் சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று விசாரித்தார். ஆனால் அவர் தலைவரல்ல என்று தெரிகிறது! பஹோமை முதலில் அவர் ஊரில் சந்தித்த தரகர். “நீங்கள் இங்கே வந்து ரொம்ப நேரம் ஆயிற்றா?” என்ற கேட்டவுடன் பார்க்கிறார் அது அவரும் அல்ல! வோல்காவிலிருந்து வந்து பஷ்கிர்களின் நிலம் பற்றி தன்னிடம் தெரியப்படுத்திய விவசாயி. பிறகு உற்றுப்பார்க்கிறார் அது அவர்கூட அல்ல. அது இரு கொம்புகளும், கால்களில் நீண்ட குளம்புகளும் வளர்ந்த விதிதான் அடிவயிறு வலிக்கச் சிரித்துக்கொண்டிருந்தது.
அந்தப் விதி தரையில் படுக்கப்போட்டிருந்த மனிதரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது. அந்த மனிதர் வேறு யாருமல்ல பஹோமேதான். செத்துப்போய்ப் பிணமாகப் படுத்துக் கிடந்தார். மிகுந்த அச்சத்தோடும் பதற்றத்தோடும் அவர் மிரண்டு எழுந்தார்.
“இப்படிப்பட்ட கனவா நான் காண வேண்டும், கடவுளே!”
திறந்த கதவுகளுக்கு வெளியே பொல பொலவென்று விடிந்துகொண்டிருந்தது.
“அவர்களை எழுப்ப வேண்டும். உடனே நிலப் பகுதிக்குப் போய் துவங்க வேண்டும்.” என்று பரபரத்தார். எழுந்து மாட்டு வண்டியில் படுத்திருந்த தன் உதவியாளரை எழுப்பிப் கிளம்ப வேண்டும். சேணத்தைக் கட்டச் சொல்லி. பஷ்கிர்களிடம் போனார்.
“நேரமாயிற்று நிலத்தை அளக்கப் போக வேண்டும்! நடந்து அளந்து எனக்கான நிலத்தைப் பெற வேண்டும்” என்றார்.
பஷ்கிர்கள் எழுந்து ஒன்று குழுமினர். தலைவரும் கூட இருந்தார். அவர்கள் மது அருந்தியவாறு பஹோமுக்கும் பரிமாறினர். ஆனால் பஹோமுக்கோ அதில் ஆர்வமற்று நிலத்துக்குப் பக்கம் போவதிலேயே குறியாக இருந்தார்.
“போவதாயிருந்தால் இப்போதே கிளம்பியாக வேண்டும், தாமதமாகிக்கொண்டிருக்கிறது அல்லவா?” என்றார் பொறுமையிழந்த பஹோம்.
பகுதி 8
பஷ்கிர்களில் சிலர் குதிரையிலும், மேலும் சிலர் மாட்டு வண்டியிலும் கிளம்பத் தயாரானார்கள். பஹோம் தன் உதவியாளரோடு சொந்த மாட்டு வண்டியில் கிளம்பினார்; கையோடு மண்வெட்டியையும் எடுத்துக்கொண்டார். அவர்கள் அங்கு அடைந்தபோது காலை இளம் சூரியன் பொன்னொளி வீசிக்கொண்டிருந்தான். அது உற்சாகமளிப்பதாக இருந்தது. அவர்கள் தங்கள் குதிரைகளையும் மாட்டுவண்டிகளையும் தாழ்வான பகுதியில் நிறுத்திவிட்டு ஓரிடத்தில் குழுமினார்கள். தலைவர் கையை நீட்டிச் சுட்டிக்காட்டி, “இதோ தெரிகிற தூரம் வரைக்குமான இந்த நிலமெல்லாம் எங்களுடையதுதான். உங்களுக்கு எந்தப் பகுதியில் எவ்வளவு தேவையோ அவ்வளவையும் எடுத்துக்கொள்ளல்லலாம்.”
பஹோம் கண்கள் ஒளி வீசின. எல்லாம் இதுவரை பாவிக்கப்படாத உள்ளங்கை போல விரிந்த சமதரை நிலம். புற்கள் ஒரு ஆள் உயரம் ஆரோக்கியமாக வளர்ந்திருப்பதைப் பார்த்தால் நிலத்தின் கன்னித்தன்மை புலனாகிறது.
தலைவர் தன் நரி உரோம தொப்பியைக் கழற்றி தரையில் வைத்துவிட்டு, “இதுதான் தொடங்கும் இடம். இங்கிருந்து ஆரம்பித்து, இங்கேயே வந்து சேர்ந்துவிட வேண்டும். நீங்கள் சுற்றி வளைக்கும் நிலம் முழுதும் உங்களுடையதுதான்.”
பஹோம் தன் பையிலிருந்து பணத்தை எடுத்து தொப்பியில் வைத்தார். தன் மேல் கோட்டை கழற்றி காலரற்ற தன் உள் பனியனோடு நின்றார். தன் கால்சாட்டையின் இடுப்புப் பகுதியை இறுகக் கட்டிக்கொண்டார். பசித்தால் உண்பதற்கு ரொட்டியை தன் பையில் வைத்துக்கொண்டார். உடன் தண்ணீர் புட்டியையும் கைவசம் வைத்துக் கொண்டார். காலணியைப் சரியாகப் பொருத்திக்கொண்டு கிளம்புவதற்குத் தயாரானார். எந்தத் திசையில் தொடங்குவது என்ற சிறிய குழப்பம் மனதில். எங்கு நோக்கினாலும் ஆர்வத்தைக் கிளர்த்துவாதாகவே இருந்தது நில அமைப்பும் செழிப்பும்.
“பரவாயில்லை நான் சூரியோதயத் திசையை நோக்கித் தொடங்குகிறேன்.“ என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.
சூரியன் உதிக்கக் கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு கிழக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“நான் நேரத்தை வீணாக்கக் கூடாது, தட்பவெப்ப நிலை இதமாக இருக்கும்போதே கிளம்பினால்தான் சரியாக இருக்கும்.” என்று நினைத்தார்.
காலை கதிர்கள் மெல்ல மெல்ல மண்ணைத் தழுவிக்கொண்டிருந்தது. பஹோம் மண்வெட்டியைத் தோளில் சுமந்துகொண்டு கிழக்கு நோக்கி நடந்தார்.
அவர் வேகமாகவும் நடையைப் போடவில்லை, அதே வேளையில் மெதுவாகவும் செல்லவில்லை. ஆயிரம் அடிகளுக்கு மேல் நடந்த பிறகு ஒரு குழியைத் தோண்டி ஒரு குச்சியை நட்டு அடையாளமிட்டுக்கொண்டார். பார்வையில் படும்படி அழுத்தமான அடையாளமாக இருக்கட்டுமே என்று இன்னொரு குச்சியையும் நட்டு வைத்தார். முன்பைவிட இப்போது வேகமாக நடையைப் போட்டார். சிறிது தூரம் கடந்த பின்னர் மண்ணை வெட்டி இன்னொரு குச்சியைப் பதித்தார்.
பஹோம் திரும்பிப் பார்த்தார். தன் பார்வைக்கு எட்டிய சிறு மேட்டில் பஷ்கிர்கள் தெளிவாகத் தெரிந்ததார்கள். அவர்கள் வண்டி சக்கரங்கள் சூரிய வெளிச்சத்தில் எதிரொளித்தன. அவர் மூன்று மைல்தூரம் நடந்துவிட்டதாகக் கனித்து திருப்திக்கொண்டார். அவர் உடலில் சூடு மெல்ல ஏறியது. போட்டிருந்த உள் பனியனையும் கழட்டித் தோளில் போட்டுக்கொண்டு தொடர்ந்து நடந்தார். இப்போது வெப்பம் மேலும் ஏறியது. கதிரவனை அண்ணாந்து நோக்கினார். காலை உணவு பசியாறும் நேரம்.
‘எதிர்பார்த்த மாதிரி முதல் சுற்று பூர்த்தியானது. ஆனால் இன்னும் பொழுது மிச்சமிருக்கிறது. இப்போது தொடங்கிய புள்ளிக்குத் திரும்புவது அறிவுப்பூர்வமானதல்ல! காலணியைக் கழற்றி பாதங்களில் காற்று படரவிடலாம்,’ என்று எண்ணினார்.
மண்ணில் அமர்ந்து காலணிகளைக் கழற்றி வெறுங்காலோடு நடந்தார். அவ்வாறு நடப்பது சௌகரியமாக இருந்தது.
“இன்னொரு மூன்று மைல் தூரம் நடந்துவிட்டு இடது திசைக்குத் திரும்பி நடக்கலாம் என்று முடிவெடுத்தார். செழித்த நிலம் முன்னே விரிந்துகொண்டிருந்தது. இதனை இழப்பது அறிவீனம். முன்னோக்கி நடக்க நடக்க நிலம் முன்பைவிட வளமானதாக இருந்தது.
மேலும் சிறிது தூரம் நடந்தார். மேட்டு நிலத்தில் இருக்கும் மனிதர்கள் இப்போது தெளிவாகத் தெரிந்தார்கள். அங்கு ஏதோ ஒன்று சூரிய வெளிச்சத்தில் எதிரொளித்தது.
“ஹா நான் இத்திசையில் வெகுதூரம் வந்துவிட்டிருக்கிறேன். இப்போது திரும்பிவிடலாம். மேலும் எனக்கு வெகுவாக வியர்த்துக் கொட்டிக்கொண்டிருக்கிறது, நாவும் வரண்டுவிட்டது.”
அந்த இடத்தில் நிறுத்தி, ஒரு ஆழமான குழியைத் தோண்டி, சில குச்சிகளை நட்டு அடையாளமிட்டுக்கொண்டார். கையோடு கொண்டுவந்த தண்ணீர் குடுவையின் நீரால் தாகத்தைக் குறைத்துக்கொண்டு நேர் இடது திசைக்குப் பயணத்தைத் தொடர்ந்தார். இடைவிடாமல் நடந்துகொண்டே இருந்தார். கண் முன்னால் உயர்ந்து வளர்ந்த புற்புதர், தகதகக்கும் சூரியன்.
பஹோம் மிகுந்த களைப்படைந்திருந்தார். நண்பகல் சூரியக் கணைகள் கண்களைப் பதம் பார்த்தன.
“நல்லது நான் கண்டிப்பாய் ஓய்வெடுக்க வேண்டும்” .
கீழே அமர்ந்து கொண்டுவந்த ரொட்டித் துண்டுகளை உண்டு தாகம் தீர்த்துக்கொள்ள நீரும் அருந்தினார். ஆனால் சாய்ந்து ஓய்வெடுக்கும் எண்ணம் வரவில்லை. அப்படியே உறங்கிவிட்டால் காரியம் கெட்டுவிடும. அயற்சி தீர்வதற்கு முன்னால், மீண்டும் எழுந்து விரைந்து நடையைப் போட்டார். உண்ட உணவு அவருக்குச் சற்று வலிமையைக் கொடுத்திருந்தது தொடக்கத்தில். ஆனால் வெப்பம் தகிக்கத் தகிக்க உறக்கம் கண்ணைக் கட்டியது. புத்துணர்ச்சியை வலிந்து வரவழைத்துக்கொண்டு தொடர்ந்தார். எதிர்கால வாழ்க்கையைச் சுகிக்க, இப்போதைக்குச் சில மணி நேரம் வதைப்பட்டால் குறையொன்று நிகழ்ந்துவிடப் போவதில்லை.”
அதே திசையில் வெகுதூரம் நடந்துகொண்டே இருந்தார். மீண்டும் இடது பக்கம் திரும்பினார். அங்கே அவர் பார்த்த நிலப்பகுதி அவரை ஈர்த்தது. இந்த வளம் மிகுந்த நிலத்தைக் கைவிட்டுவிடலாகாது. ஆளி விதை இந்த மண்ணில் செழிப்பாக விளையும். தொடர்ந்து நடந்து அங்கே மண்வெட்டியால் ஒரு குழியை ஆழமாக வெட்டி அடையாளமிட்டு கிழக்குத் திசையில் நடக்கலானார். பஹோம் மீண்டும் மேட்டு நிலத்தைப் பார்த்தார். வெப்பம் காற்று வெளியைச் சாம்பல் திரையாக்கியிருந்தது. கடுமையான உஷ்ணத்தால் மேட்டுப் பகுதியில் தெரிந்த மனித உருவங்கள் தகிப்பின் கணகணப்பில் கட்டெறும்புகள் போல அசைவது கண்ணில் பட்டது. சற்று முன்னர் தெரிந்தது போல அவர்களைத் தெளிவாகக் காண முடியவில்லை!
“ஹா, நான் அகன்ற நிலத்தை வளைத்து எனதாக்கியிருக்கிறேன். நான் நிலக் கையகப்படுத்தும் பயணத்தை இனி சீக்கிரம் முடித்துக்கொள்ள வேண்டும். நான் நேர்க்கோட்டில் நடந்து தொடங்கிய இடத்தை அடைய வேண்டும். என்னால் இன்னும் போக முடியும், ஆனாலும் இப்போதே என்னிடம் போதுமான நிலம் சேர்ந்துவிட்டது.”
பஹோம் விரைவாகக் குழியைத் தோண்டி, பஷ்கிர்கள் காத்திருக்கும் மேட்டு நிலத்தைப் பார்த்தார்.
பகுதி 9
பஹோம் மேட்டு நிலத்தை நோக்கி நடந்தார். ஆனால் இப்போது நடப்பதற்குச் சிரமமாக இருந்தது. வெப்பம் அவரைத் தின்றுகொண்டிருந்தது. பாதங்கள் வெடித்துப் புண்ணாகிக் கிடந்தன. அவரின் கால்கள் வலுவற்றுத் தடுமாறின. ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும் என்று உடலும் மனமும் கெஞ்சியது. ஆனால், பொழுது சாய்வதற்குள் போய்ச் சேர்ந்தாக வேண்டும். சூரியன் யாருக்கும் காத்திருக்க மாட்டான். அவன் மேற்குத் திசையின் அடிவானத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கிக்கொண்டிருந்தான்.
“கடவுளே நான் இவ்வளவு பெரிய நிலப்பரப்புக்கு ஆசைப் பட்டிருக்கக்கூடாது.. நான் போய்ச்சேரத் தாமதானால் என்னாவது?” என வருந்த ஆரம்பித்தார்.
அவர் மேட்டு நிலத்தையும் கீழிறங்கும் கதிரவனையும் பார்த்தார். மனம் பதறியது. தன் குறிக்கோளை அடைய முடியவில்லையே என்பதில் அவருக்கு ஏமாற்றம் இருந்தது. கதிரவன் சற்றும் இரக்கமே இல்லாமல் சரிந்துகொண்டிருந்தான்.
பஹோம் மேலும் மேலும் நடந்துகொண்டே இருந்தார். நடப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டார். அவர் நடையை விரைவுபடுத்தினார். அவர் தன் காலணியையும், மேல் சட்டையையும், தொப்பியையும், தண்ணீர்க் குப்பியையும் உதறிவிட்டு, மண்வெட்டியை மட்டும் ஊன்றுகோலாக்கிக்கொண்டு, தன் ஆற்றலை மீறியும் ஓடத் தொடங்கினார்.
‘நான் இப்போது என்ன செய்யலாம்? நான் போதுமான நிலபரப்பைக் கையகப்படுத்திக்கொண்டேன். ஆனால் என்னை நானே இழந்துகொண்டிருக்கிறேன். நான் இலக்கை அடைவதற்குள் சூரியன் அஸ்தமித்து விடும்.’
அந்தப் பயமே அவரை மூச்சுப் பதறச் செய்தது. பஹோம் ஓட முயன்றார். வியர்வை வெள்ளத்தில் ஆவரின் கால்சட்டை தொப்பரையாக ஊறி உடலில் ஒட்டிக் கிடந்தது. வாய் உலர்ந்து போனது. இரும்புப் பட்டறையில் ஓங்கி ஓங்கி அடிப்பது போல அவர் நெஞ்சு ஏறி இறங்கியது. இரும்பை அறையும் சுத்தியல் போல அவர் இருதயம் அடித்துக் கொண்டது. தன் கால்கள் தன்னுடையவை அல்ல என்பது போல இயல்பை மறந்தன. பஹோம் பேயறைந்தார் போலாகி உயிரே போவது போன்ற உணர்வை அடைந்தார்.
சாவுக்குப் பயந்தாலும், அவரால் நிறுத்த முடியவில்லை. ‘நான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு முயற்சி செய்துவிட்டு இப்போது நிறுத்தினால் என்னை முட்டாள் என்பார்கள்!’ என்று முடிவெடுத்து மீண்டும் ஓடத் தொடங்கி பஷ்கிர்கள் காத்திருக்கும் புள்ளியை நெருங்கியதும், அவர்கள் உரக்கக் கத்தி உற்சாகப்படுத்தினர். அவர்களின் கூச்சல் அவருக்குள் தெம்பூட்டியது. அவர் பலம்கொண்ட மட்டும் வேகத்தைக் கூட்டினார்.
சூரியன் தன் இலக்கைத் தொட்டுக்கொண்டிருந்தது. பனிமூட்டம் கனத்துச் சூழ்ந்துவிட்டிருந்தது. ஆம் நான் என் இலக்கைத் தொடப் போகிறேன். சூரியன் மறையப் போகிறது. நானும் வந்தடையப் போகிறேன். மேட்டு நிலத்தில் காத்திருக்கும் பஷ்கிர்களின் கையசைத்து அவரை விரைந்து வந்து சேரும்படிச் கூச்சலிட்டனர். அவருக்குத் தரையில் போடப்பட்டிருக்கும் நரி உரோமத் தொப்பியும் அதிலிருக்கும் பணமும், தலைவர் மண்ணில் அமர்ந்திருப்பதும் மங்கலாகத் தெரிந்தது. அப்போது பஹோமுக்கு தன் நோக்கம் நினைவுக்கு வந்தது.
போதுமான நிலத்தைச் சேர்த்துக்கொண்டேன், ஆனால் அவற்றை அனுபவிக்க என்னைக் கடவுள் அனுமதிப்பாரா? நான் என்னை இழந்துகொண்டிருக்கிறேன். நான் என்னை, என் வாழ்க்கையை, உயிரை, இழந்துகொண்டிருக்கிறேன். என்னால் கண்டிப்பாக எல்லையை அடைய முடியாது! அவர் மனம் ஒடிந்து வீழ்ந்துகொண்டிருந்தது.
கதிரவன் பூமியைத் தொடுவதைப் பார்த்தார். அதன் ஒரு பகுதி மறைந்துகொண்டிருந்தது. சிதைந்த மனம் கண நேரத்தில் துளிர்த்தெழுந்தது. தன்னிடம் எஞ்சியுள்ள சிறிதளவு சக்தியைக் கொண்டு, எப்பாடுபட்டாவது கால்களைச் செலுத்த, குனிந்து உடம்பை முன்செலுத்தி சிரமப்பட்டு நகரப் பார்த்தார். கால்கள் நகர மறுத்தன. எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அவர் தலை நிமிர்ந்து பார்த்தார். இரவு சூழ்ந்துவிட்டிருந்தது. அவர் கதறி அழுதார். ‘என் முயற்சி, உழைப்பு அனைத்தும் வீண். இனி ஓரங்குலம் கூட நகர முடியாது’ என்று எண்ணி பாஹோமின் மனம் ஒடிந்து வீழ்ந்துகொண்டிருந்தபோது, பஷ்கிர்கள் கூச்சலிட்டுக்கொண்டுதான் இருந்தனர். என்னதான் இரவு சூழ்ந்துவிட்டிருந்தாலும் உற்சாகமூட்டும் பஷ்கிர்கள் மேட்டுப்பகுதியில் நின்றுகொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. அவர் ஒரு நீண்ட மூச்சிழுத்து பஷ்கிர்கள் பக்கம் ஓட முயன்றார். அங்கே சிறிது வெளிச்சம் தென்பட்டது. மேட்டின் உச்சியை முட்டி மோதி அடைந்தபோது தொப்பியைப் பார்த்தார். தலைவர் வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார். தன் நோக்கத்தை நினைவு கூர்ந்த பஹோம் கதறி அழுதார். தலைவரின் காலடியில் வீழ்ந்தார். பஹோமின் கால்கள் முற்றிலும் செயலிழந்திருந்தன. கைகளை நீட்டித் தொப்பியைத் தொட்டார்.
“அருமை நண்பரே’ நீங்கள் போதுமான நிலப்பரப்பைச் சொந்தமாகப் பெற்றுக்கொண்டீர்கள்.” என்றார் பஷ்கிர்களின் தலைவர்.
பஹோமின் உதவியாளர் ஓடிப்போய் அவரைத் தூக்க முயன்றார். ஆனால் பஹோமின் வாயிலிருந்து குருதி கொட்டிக்கொண்டிருந்தது. அவர் இறந்து கிடந்தார்.
பஷ்கிர்கள் உச்சுக்கொட்டி தன் சோகத்தை வெளிப்படுத்தினர்.
பஹோமின் உதவியாளர் அவரிடமிருந்த மண்வெட்டியால் ஓர் ஆழமான சவக்குழியைத் தோண்டி அவரைப் புதைத்தார்.
அவர் தலைமாட்டிலிருந்து பாதம் வரையில் ஆறடி நிலம் அவருக்குப் போதுமானதாக இருந்தது.
How much land does a man need
தமிழில்: கோ.புண்ணியவான்