தாளம் தவறிய நாள் – ஜாகிர் ஹுசைன்

19.12.2024, சான் பிரான்சிஸ்கோவில் நுரையீரல் சிக்கலால் (Idiopathic Pulmonary Fibrosis) பாதிக்கப்பட்டிருந்த உஸ்தாத் ஜாகிர் ஹுசைன், தனது 73வது வயதில் இறந்தார் என்ற செய்தியை இணையத்தில் படித்ததும், மனம் கனத்தது. யாரிடமாவது இந்தக் கடும் செய்தியைப் பகிர்ந்தால், கண்களில் வரும் கண்ணீரை வார்த்தைகளாக மாற்றிவிடலாம். தொலைப்பேசியை எடுத்து, திரையில் விரலைத் தேய்த்தபோதுதான் தெரிந்தது அதிகாலை மணி மூன்று என்று.

உலகமே உறங்கிக் கிடக்கும் நேரம். ஜன்னலைத் திறந்தேன். அதிகாலையின் குளிர்ந்த காற்று வெறுமை நிறைந்த மூச்சை மெல்லக் கடத்தியது. காற்றின் மிருதுவான தொடுதல் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. தனிமையும் இழப்பும் ஒன்று சேரக் கூடாதவை. அது மனதின் ஓர் ஆழ்ந்த வெற்றிடத்தை உருவாக்கும். இனி அந்த வெற்றிடத்தை ஜாகிரின் இசையைக் கொண்டுதான் நிரப்ப வேண்டும். இல்லையென்றால் அடுத்த சில நாட்களுக்கு உறக்கம் இருக்காது.

என் இரு உள்ளங்கையை ஒன்று சேர்த்து மடித்து, ‘உஸ்தாத்…’ என்று, கடைசியாக ஒருமுறை ஜாகிரைக் கூப்பிட்டுப் பார்த்தேன். பாரசீக மொழியில் இஸ்லாமிய இசைக் கலைஞர்களை உஸ்தாத் என்றுதான் மரியாதையாக அழைப்பார்கள். உஸ்தாத் என அழைத்தால் ஜாகிருக்குப் பிடிக்காது, ஆனால் அனைத்து இந்திய இசைக் கலைஞர்களுக்கும் அவர்தான் உஸ்தாத்.

ஒரு தபேலா இசை கச்சேரி முடிந்து, மண்டபத்திலிருந்து வந்து கொண்டிருந்த ஜாகிரை, அவரின் இசை ரசிகர்கள் “உஸ்தாத்! உஸ்தாத்!” என அழைத்து ஆரவாரம் செய்தனர். உடனே, ஜாகிர் அனைவரையும் அமைதிப்படுத்தி, “நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நான் இன்னும் மாணவன் தான்,” எனச் சொன்னார். ஒரே விழாவில் மூன்று கிராமி விருதுகளை (Grammy Awards) வென்ற முதல் இந்திய இசைக் கலைஞராக உயர்வை அடைந்த பிறகு, ஜாகிர் ஹுசைன் இந்த வார்த்தைகளைச் சொன்னார். பத்மஸ்ரீ, பத்ம பூஷண், சாகித்ய அகாடமி எனப் பல முக்கிய விருதுகளைப் பெற்றவர். பணிவும் மரியாதையும் இருக்கும் இடத்தில்தான் உண்மையான கலை வளர்கிறது என்பதற்கான சிறந்த உதாரணம் ஜாகிர்.

“Tabla starts with ‘A’ for Alla Rakha and ends at ‘Z’ for Zakir Hussain”, எனும் பிரபல புல்லாங்குழல் கலைஞரான ராகேஷ் சௌராசியா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

இந்திய இசை கலையின் வரலாற்றில் இன்றும் பிரகாசிக்கும் தபேலா கலைஞராக மறைந்த உஸ்தாத் அல்லா ரக்காவின் மூத்த மகனாக ஜாகிர் ஹுசைன் பிறந்தார். உஸ்தாத் அல்லா ரக்காவின் ரத்தத்தில் ஊடுருவிய இசை அறிவு, ஜாகிருக்குச் சிறு வயதிலிருந்தே பெருகத் தொடக்கியிருக்கலாம். தன் தகப்பனாரோடு, உலக புகழ் பெற்ற சித்தார் கலைஞரான பண்டிட் ரவி சங்கருடன் இணைந்து நிகழ்த்திய இசைக் கச்சேரிகளில் சிறு வயதிலேயே ஜாகிரும் பங்கேற்றிருந்தார். அந்த இசையின் துளிகள், ஜாகிரை உலகளாவிய மேடைகளில் சந்திக்க வைத்தது. நாளடைவில் ஜாகிர் ஹுசைன் என்ற பெயர், இந்திய இசைக்கே ஒரு பெரும் சகாப்தமாக மாறியது.

அப்படி ஒரு மாபெரும் இசைக் கலைஞரை, கமலஹாசன் நடித்த இந்தியன் 1 திரைபடத்தில் வரும் ‘ஜாகிர் ஹுசைன் தபேலா இவள் தான…’ எனும் பாடல் வரியின் மூலம் தான் பலருக்கும் தெரியும்.

மெல்ல மெல்ல நினைவில் படிந்திருக்கும் ஜாகிரின் நினைவுகள், ஒவ்வொன்றாக தன் மடிப்புகளைத் திறந்தது. எங்கள் வீட்டில் ஜாகிரின் தபேலா இசையில்லாத மாலை பொழுதே இருந்ததில்லை. எனக்கும் அண்ணனுக்கும் ஜாகிரை அறிமுகம் செய்து வைத்தவர் எங்கள் தாத்தா.

தாத்தாவுக்குச் சொந்த ஊரான நாமக்கலுக்குச் சென்று வரும்போதெல்லாம், தாத்தாவின் பை நிறைந்திருக்கும். தாத்தா பயணம் முடிந்து வீடு திரும்பும் நாள் திருவிழா போல களைக்கட்டும். ஆனால் ஒரு தடவை, தாத்தா பயணம் முடிந்து வீடு திரும்பியதும், எப்போதும் போல பைகளைத் திறந்து எனக்கும் அண்ணனுக்கும் பரிசுகள் ஏதும் கொடுக்கவில்லை.

“கொண்டுபோன காசு எல்லாம் முடிஞ்சிருச்சு. இந்த தடவை உங்களுக்கென்று எதுவும் வாங்கி வர முடியல. ஆனா… ஒரு ஸ்பெஷல் இருக்குது. ரொம்ப முக்கியமானது. விஜயதசமிக்குக் காட்டறேன்,” என்று சொல்லி, தாத்தா பூஜை அறையில் ஒரு பையை எடுத்து வைத்தார். நாங்கள் ஆச்சரியத்துடன் விஜயதசமிக்குக் காத்திருந்தோம்.

தாத்தாவுக்கும் பாட்டிக்கும், விஜயதசமி என்பது வெறும் பண்டிகை மட்டும் அல்ல; அது அறிவையும், கலையையும் தொடங்கும் ஒரு புனித நாள். அந்நாளில் தொடங்கிய எந்தக் கலையும், சரஸ்வதி தேவியின் அருளுடன் வளரும் என்ற உறுதியான நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. அது வேறும் நம்பிக்கையாக மட்டுமில்லாமல், ஒரு தலைமுறையின் கனவுகளையும், அர்த்தமுள்ள பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கும் இனிய நாள் என்றும் கூறுவார்கள். அந்த வகையில் பாட்டியும் தாத்தாவும் பல கலைகளை எங்களுக்கு ஒவ்வொரு விஜயதசமியிலும் விட்டுச் சென்றுள்ளனர்.

“ஜாகிர் ஹுசைன் போல நீயும் தபேலா வாசிக்கனும்,” எனச் சொல்லி விஜயதசமி அன்று தாத்தா அண்ணனுக்குத் தபேலாவைக் கொடுத்தார். நாங்கள் இருவரும் ஆச்சரியத்தில் நெகிழ்ந்து போனோம். தாத்தா அண்ணனிடம் தபேலா கொடுத்தபோதே, எனது கையில் சில ஜாகிர் ஹுசைன் இசை கேசட்டுகளை ஒப்படைத்தார். கேசட்டின் முகப்பில், ஜாகிரின் முகம் பிரகாசித்தது. ஜாகிரைப் பார்த்ததும் பிடித்துப் போனது. அவரின் கண்கள் ஈர்த்தன.

“இசை என்னவென்று புரிந்துகொள்ள, முதலில் அதை உணர வேண்டும். ஜாகிரின் இசையைக் கேள். ஒவ்வொரு தாளத்தையும் உணர்ந்து உள்வாங்கு… அதுதான் உண்மையான பயிற்சி, பின்னர் தபேலாவைத் தொடு…” என தாத்தாவின் வார்த்தைகள் எங்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது.

ஒரு கலை என்பது புதிதாக இறக்கை முளைத்துப் பறக்கத் துவங்கும் பறவை அல்ல; அது பல நூற்றாண்டுகளாக பறந்துகொண்டிருக்கும் பறவை. நாம் அதனுடன் சேர்ந்து பறக்க முயல்வதற்கு முன்னர், அது எங்கே சென்றது, யார் வழிநடத்தினர், எவ்வளவு உயரம் தொட்டது என்பதைத் தெரிந்து கொள்வதே உண்மையான ஆரம்பம். அந்தச் சிந்தனையுடன்தான் தாத்தாவும் பாட்டியும் எங்களுக்குப் பல கலைஞர்களின் உச்சத்தைக் காட்டி வளர்த்தார்கள். நாட்டியம் கற்கும் முன், பத்ம சுப்பிரமணியம், அலர்மேல் வள்ளி, யாமினி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சிகளைக் காட்டினார்கள். சங்கீத வகுப்பில் சேரும் முன்பே, M.L. வசந்தகுமாரி, M.S.சுப்புலட்சுமி, D.K.பட்டம்மாள் ஆகியோரின் பாடல்கள் அனைத்தும் எங்களுக்குத் தெரியும்.

இந்த மாதிரியான போதனைகளைதான் தாத்தாவும் பாட்டியும் தொடர்ந்து எங்களுக்கு நடத்திக் கொண்டே இருந்தார்கள். அதுவே எங்கள் வீட்டின் சூழலாகவே மாறியது. எங்களுக்குக் கலைகள் சொல்லிக் கொடுக்கப்படவில்லை; விதைக்கப்பட்டது. மெல்ல மெல்ல இசையும் நடனமும் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றின. ஜாகிரின் தபேலாவும் அப்படிதான்.

தபேலாவைக் கைகளில் ஏந்திய அந்நாளிலிருந்து, அண்ணனன் அதனுடன் வாழ ஆரம்பித்தான். பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் ஜாகிரின் தபேலா இசை கேசட்டை வானொலியில் போட்டப் பிறகுதான், வேறு வேலைகளைப் பார்ப்பான். சாப்பாடு, படிப்பு, குளியல், உரையாடல் என எங்கள் வீட்டில் எல்லாவற்றிலும் ஜாகிரின் தபேலா இசை கலந்திருந்தது. ஜாகிரின் தபேலா தாளத்திற்கேற்பதான் வீட்டில் எங்களின் நடமாட்டமும் இருக்கும். அண்ணனின் மூளை தபேலா இசையில்லாமல் இயங்காது. இன்னமும் அப்படிதான். ஜாகிரின் தபேலா இசையுடன்தான் நாங்கள் வளர்ந்தோம் எனலாம்.

இந்தப் பிரபஞ்சம் அவரவர் செய்யும் தவத்திற்கேற்ப வரத்தைக் கட்டாயம் வழங்கிவிடும். அந்த வகையில், 1998-ஆம் ஆண்டு நாளிதழில் வந்த செய்தி எங்களின் நீண்ட நாள் தவத்தின் வரம் போல அமைந்தது. ஜாகிர் ஹுசைன் மலேசியாவுக்கு வருகிறார் என்ற செய்தி எங்கள் வீட்டையே குலுக்கியெடுத்தது. ஜாகிர் வாசிக்கும் தபேலா இசையை நேரில் கேட்பது என்பது, உள்மனதுக்குள் ஒளிந்திருந்த ஆயிரம் ராகங்களை ஒரே சமயத்தில் எழுப்புவது போலிருக்கும்.

கோலாலம்பூரில் நேரடி கச்சேரியைக் காண்பது வாழ்வில் அதுவே முதன் முறை. ஜாகிர் மேடைக்குள் நடந்து வந்த அந்தத் தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. ஜாகிரின் முகத்தில் தேஜஸ் அலைகள் பரவியிருந்தன. மெதுவாக மேடையின் மையத்தில் உட்கார்ந்தார். அவரின் பணிவு அவர் உட்காரும் தோரணையிலே தெரிந்தது. அவர் கையிலிருந்த தபேலாவைச் சிறிது தடவினார். ஒரு சிறிய சிரிப்புடன், பார்வையாளர்களைப் பார்த்தார். அதில் ஆழமான நிதானம் இருந்தது. அவர் தன் கைகளைப் தபேலா மேல் வைத்த அந்த நொடி, மெல்லிசையாய் ஓர் ஒலி பிறந்தது. மிகச் சாதாரணமான ஒரு தாளத்தில்தான் கச்சேரியைத் தொடங்கினார். ஆனால் நொடிகள் நகர்ந்தபோது, அந்த மெல்லிசை மெல்ல மெல்ல விண்வெளி வரைக்கும் பரவின.

ஜாகீர் தபேலாவை வாசிக்கவில்லை; அதனுடன் உரையாடினார். அவருடைய ஒவ்வொரு ‘தா’, ‘தீன’, ‘தனா’, ‘திகனா’ போன்ற ஜதி எனும் தாளமொழிகள் என் உள்ளத்தில் எழும் ஒர் இனிய உரையாடலாகவே உருமாறின.

‘தக தா திட தானா’ எனும் ஜதிகளை உச்சரித்து, பிறகு அந்த ஜதியைக் கைகளால் வாசிக்கும் அந்த நொடி, ஜாகிரின் தபேலா இசை ஒரு புதிய பரிணாமத்தை எடுத்ததை என்னால் உணர முடிந்தது. வாய் சொல்லும் ஜதியும், கை வாசிக்கும் தாளமும் இடையே உருவாகும் அந்த நுண்ணிய இடைவெளியில், இசையின் அதிர்வுகள் பிறக்கின்றன. ஜாகிர் உருவாக்கியதாளத்தின் ஒலி முடிந்த பிறகும், மனதில் விட்டுச் செல்லாத நிலையை அண்ணன் போதைக்குச் சமம் என்பான்.

ஜாகிரின் இசையை நேரில் கேட்டதிலிருந்து, இசை என்பது காற்றில் கரைந்த ஓசை அல்ல, அது உணர்வுக்கும் ஆன்மாவிற்கும் இணைக்கும் பாதை எனத் தோன்றியது.

1998-க்குப் பிறகு ஜாகிரீன் இசை பயணம் மேலோங்கியது. பாரம்பரிய தபேலாவை மட்டுமல்ல, ‘Shakti’, ‘Remember Shakti’, ‘Tabla Beat Science’, ‘ஜுகல்பந்தி(Jugalbandi)’ போன்ற புதுமையான இசைத் தொகுப்புகள் மூலம் ஜாகிர், இந்திய இசையை மேற்கத்திய நாடுகளின் Jazz, Funk, Electronica பாணியுடன் சேர்த்து, ஒரு புதிய இசை பிரபஞ்சத்தை உருவாக்கினார். அதில் ஒரு விதமான சுதந்திரத்துடன் இசை வரம்புகளை உடைத்துப் புதிய பாதைகள் அமைத்தார். கலைஞராக தந்தையின் நிழலிலிருந்து வந்தவர் என்ற புகழைத் தாண்டி, தனக்கே ஓர் அடையாளத்தைத் தானே செதுக்கிக் கொண்டார். அவரின் இசையின் தாக்கம் சினிமாவிலும் பிரதிபலித்தது. இசை அமைப்பாளராகப் பல திரைப்படங்களுக்கு ஜாகிர் இசையமைத்துள்ளார். அவரது சினிமா இசையில், எனக்கு மிகவும் பிடித்தப் படம் ‘வனப்பிரஸ்தம் (Vanaprastham)’ எனும் ஒரு மலையாளப் படம்.

‘வனப்பிரஸ்தம்’ கேரளத்தின் கதகளி நடன கலாச்சாரத்தைப் பின்னணியாக வைத்து இயக்கியப் படம். நிருத்தம் (நடனம்) மற்றும் கதை சொல்லல் (நாடகம்) என கதகளி பாணியில் எடுக்கப்பட்ட படம். நான் என் வாழ்வில் பல முறை பார்த்தத் திரைப்படம் இதுதான். கதகளி நடனம் என்பதைத் தாண்டி, ஜாகிரின் இசைக்காகப் பார்த்தது அதிகம். படம் வெளியாகும் முன்னரே ஜாகிரின் இசையால் படம் பிரபலமானது. பாரம்பரிய கேரள இசையைப் பின்பற்றி, தபேலா, செண்டா (Chenda),இடக்க (Idakka), உடுக்கு (Udukku), வீணை போன்ற கருவிகள் படம் நெடுகிலும் ஜாகிர் பயன்படுத்தியிருப்பார். சோக, கோபம், தனிமை, ஆழ்ந்த காதல் அனைத்தையும் இசையால் ஜாகிர் உணர்த்திருப்பார். சினிமா பயணத்தில் இந்தப் படம் அவருக்கு ஒரு பெரிய அடையாளமாகவே மாறியது. இசை அமைப்பாளராக மட்டுமல்லாது, ஜாகிர் ஹுசைன் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். “Heat and Dust” எனும் படத்தில் அவர் காட்டிய இயல்பு அபாரமானது.

இசைக்குப் பிறகும் ஒரு கலைஞன் தன்னை இசையின் ஓட்டத்திற்கேற்ப எவ்வாறு மாற்றிக் கொண்டான் என்பதை, ஜாகிர் ஹுசைன் தன் இசை நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி, பங்கேற்ற அனைத்து கலைகளிலும் இசையைக் கொண்டு நிரப்பியுள்ளார்.

காற்றினிலே வரும் கீதம் 

கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம் 

கல்லும் கனியும் கீதம்

என பாட்டி சதா முணுமுணுக்கும் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது.

காற்றில் கரைந்து வரும் இசை, கல்லையே கனிய வைக்கும். பிறகு ஏன் ஜாகிரின் நுரையீரல் சிக்கலைக் கரைய வைக்கவில்லை? காற்றில் ஊடுருவி வரும் இசைக்குக் கரைய வைக்கும் சக்தி இருந்தால், அதை உருவாக்கும் கலைஞனின் உள்ளத்திலும் சிந்தனையிலும் எத்தனை மடங்கு சக்தி இருந்திருக்கும்? பிறகு, ஏன் அவர் உடலை அந்தச் சக்தி காப்பாற்றவில்லை? என வெறுமை நிறைந்த மனதுடன் ஜன்னல் ஓரம் நின்றுக் கொண்டிருந்தேன். மனதில் எழும் வெற்றிடத்தை மூளை உணர தொடங்கியது.

தேவலோகத்தில் தேவர்களுக்காக இசை வாசித்து மகிழ்விக்கும் கந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதா? அப்சராக்கள் நடனமாடும் வேளையில், அவர்களுடன் வாசிக்க வாத்தியக் கலைஞர்கள் இல்லாமல் போனதா? இல்லையென்றால், ஜாகிரின் இசை தேவர்களையே ஈர்த்துவிட்தா? அதனால்தான், அவரை அழைத்து சென்றுவிட்டார்களா? என மனதில் எழுந்த புலம்பல் தொண்டை குழியை அடைத்தது.

“I Eat, Sleep, Drink… whatever it is, Tabla.” என ஜாகிர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். 73 வருடங்களாக ஜாகிருக்கு தபேலாவைத் தவிர வேறு ஒன்றும் தெரிந்திருக்காது. கலைஞர்கள் அவர்களின் கலையைத் தொடராமல் போகும் தருணம் மரணத்தை விட கொடுமையானது. ஒவ்வொரு நாளும் நரகமாக மாறியிருக்கும். நுரையீரல் சிக்கலைவிட, தபேலாவை வாசிக்க இயலாத நிலைதான் அவரை மெல்ல மெல்ல சிதைத்திருக்கும். உயிரைக் கொல்லவில்லை என்றாலும், உள்ளத்தைக் கொன்றுவிடும் இயலாமைக்கு எடை அதிகம்.

அதன் விளைவு இன்று உலகத்திற்கே தெரிந்ததது. முதன் முறையாக, தபேலா தனது தாளத்தைத் தவறவிட்டது. இனிமேல் அது பழையபடி ஒலிக்காது.

3 comments for “தாளம் தவறிய நாள் – ஜாகிர் ஹுசைன்

  1. July 1, 2025 at 2:34 pm

    இசைக் கலைஞன் ஜாகிர் ஹுசைன் பற்றி அவ்வளவாக அறிந்ததில்லை.. இந்தக் கட்டுரை அதற்கு அஸ்திவாரம் இட்டுள்ளது.
    நீங்கள் அஞ்சலி கட்டுரை படைத்திருப்பினும், இதில் உங்களின் அற்புத கலாரசனையும் அதன் சூழலில் நீங்கள் வளர்ந்திருப்பதும் அதற்காக உங்களின் குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக இருந்திருப்பதையும் நன்கு உணர முடிகிறது.
    கட்டுரை வாசிப்பிற்குப் பிறகு நான் கேட்டுக் கொண்டிருப்பது அவரின் இசையை… நன்றி வாணி நல்ல கலை அறிமுகத்திற்கு.
    இசையால் அவர் வாழ்வார். நல்ல கலைஞனுக்கு மரணமில்லை.

    ஶ்ரீவிஜி

Leave a Reply to கோகி Cancel reply