
இயக்குநர் சஞ்சய் பெருமாள் மலேசியத் திரையுலகச் சூழலில் ‘ஜகாட்’ படத்தின் வழி நன்கு அறியப்பட்டவர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 28வது மலேசியத் தேசியத் திரைப்பட விருது விழாவில் ‘ஜகாட்’ படம் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றதோடு சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருதையும் சஞ்சய்க்குப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து, இவர் இயக்கிய ‘ப்ளூஸ்’, ‘மாச்சாய்’ ஆகிய இரண்டு படங்களும் உலகளவில் முக்கியமான International Film Festival Rotterdam(IFFR) எனப்படும் அனைத்துலக ரோட்டர்டம் திரைப்பட விழா உள்ளிட்ட பல முக்கிய விழாக்களில் திரையிடப்பட்டுப் பரவலான திரைப்பட விமர்சகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. 2025ஆம் ஆண்டில் ரோட்டர்டம் விருது விழா திரையிடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மலேசியப்படமாக ‘மாச்சாய்’ படம் திகழ்கிறது. இவ்விரண்டு படங்களின் திரையரங்கத் திரையிடலுடன் ‘ஜகாட்’ படத்தின் மறு வெளியீட்டுக்கான முயற்சிகளிலும் சஞ்சய் பெருமாள் தற்போது ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வல்லினம் இதழுக்காக சஞ்சய் பெருமாளை நேர்காணல் ஒன்று செய்தோம்.
வெளிவரப்போகும் உங்கள் திரைப்படங்கள் குறித்த இறுதித் தகவலைப் பகிர முடியுமா?
சஞ்சய்: ‘நீர் மேல் நெருப்பு’ எனும் தலைப்பிட்டிருந்த திரைப்படம் சில காரணங்களுக்காக ‘ப்ளூஸ்’ எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது. அதுபோல எனது முதல் திரைப்படமான ஜாகட் ஆகஸ்டு 29 ஆம் திகதி மறுபடி திரையீடு காண்கிறது. அப்படம் 2015இல் வெளிவந்தபோது திரையில் பார்க்கவில்லை என ரசிகர்கள் பலரும் கேட்டுக்கொண்டதால் இம்முடிவு. அதைத் தொடர்ந்து ‘மாச்சாய்’ திரைப்படம் செப்டம்பர் 18ஆம் திகதியும் ‘ப்ளூஸ்’ நவம்பர் 6 ஆம் திகதியும் திரைக்கு வருகின்றன.

பத்தாண்டுகளுக்குப் பின் இரண்டு படங்களை ஒருசேர இயக்கவும் வெளியிடவும் எப்படி எண்ணம் உருவானது?
சஞ்சய்: 2018ஆம் ஆண்டு ஒரே வாரத்தில் ‘மாச்சாய்’ படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தேன். அதுவும் அப்பொழுது திரைக்கதை சார்ந்த பட்டறை ஒன்றிருந்த காரணத்தால் ஐந்து நாட்களில் முதல் வரைவை எழுதிப் பின்னர் செறிவுப்படுத்தினேன். ‘ப்ளூஸ்’ படக்கதையை 2012 ஆம் ஆண்டே எழுதி வைத்திருந்தேன். இவற்றுடன் ஒரே காலக்கட்டத்தில் ‘ஜெராந்தூட் நினைவுகள்’ தொடரின் மலாய் திரைக்கதையும் மற்றொரு கதையையும் கூட தயார் செய்து வைத்திருந்தேன். 2020 ஆம் ஆண்டில் ‘ப்ளூஸ்’ படத்தையும் பின்னர் ‘மாச்சாய்’ படத்தையும் தொடங்கினேன்.
‘ஜகாட்’ படம் வெளிவந்து பத்தாண்டுகளானப் பின்பே உங்களின் அடுத்த படங்கள் வெளியிடப்படக் காத்திருக்கின்றன. இந்தப் பத்தாண்டுகள் இடைவெளி என்பது பொருளாதாரச் சூழலிலும் உங்களிடம் இருக்கும் கலைஞனைத் தக்கவைப்பதிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடியது. அவ்வாறான நெருக்கடிகளை எவ்வாறு கையாண்டீர்கள்?
சஞ்சய்: ‘ஜகாட்’ படத்துக்குப் பிறகு எனக்கு நிறைய திரைப்படங்கள், நாடகங்கள், விளம்பரங்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வந்தபடியே இருந்தன. அப்படியான, ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட வாய்ப்புகளையாவது தட்டிக்கழித்திருந்தேன். 3 மலாய் திரைப்படங்கள், 3 மலாய் தொடர்கள், தீபாவளி விளம்பரங்கள் எனப் பலவற்றை இயக்கும் வாய்ப்பை மறுத்திருக்கிறேன். மலேசியத் தொலைக்காட்சிகளில் தமிழ்த் தொடர்களை இயக்கும் வாய்ப்புகளை ஏற்றிருக்கலாம். இருக்கும் இயக்குநர்களில் இன்னுமொரு இயக்குநர் எனும் வரிசையில் எவ்வித மாற்றமுமின்றி நின்றிருப்பேன். ஏனென்றால், திரைப்படங்களில் கிடைக்கும் வெற்றி உடனே பல கதவுகளையும் திறந்துவிடும். அந்தச் சூழலில் உடனடியாக எடுக்கும் தவறான முடிவுகளால் அடுத்த ஐந்து, பத்தாண்டுகளை இழக்க வேண்டியிருக்கும். அப்படியிருக்க, குறைந்தது இன்னும் இரண்டு படங்களையாவது தமிழில் இயக்க வேண்டுமென்ற பிரக்ஞைப்பூர்வமான முடிவை எடுத்தேன். அதற்கடுத்தே மற்ற வாய்ப்புகள் குறித்து சிந்திக்கலாம் என முடிவெடுத்தேன்.
அதே காலக்கட்டத்தில் ‘ஜகாட்’ படத்திலிருந்து கிடைக்க பெற்ற தொகையைக் கொண்டு எளிமையான வாழ்வொன்றை அமைத்துக் கொண்டேன். அடிப்படைத் தேவைகளை மட்டுமே நிறைவு செய்யும் வகையில் வாழ்வை அமைத்துக் கொள்வதென முடிவெடுத்திருந்ததால் அந்த வாழ்க்கை முறை எனக்குச் சிரமமாக இருக்கவில்லை. என்னுடைய முடிவுகளைப் புரிந்து கொண்டு எனது மனைவியும் துணைநின்றார். பினாஸ் ஏற்பாடு செய்த இளம் இயக்குநர்களுக்கான பட்டறைகளை சபா, சரவாக், பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் நடத்தியிருக்கிறேன். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இயக்கம், திரைக்கதை குறித்து பட்டறை நடத்துவதென என்னுடைய திரையறிவைப் பகிர்வதற்கான களங்களும் அமைந்தன. அவ்வாறுத்தான் என்னால் அந்தப் பத்தாண்டு காலத்தைக் கடக்க முடிந்தது.

உங்களின் முதல் படமான ‘ஜகாட்’ வெளிவந்து பத்தாண்டுகளாகின்றன. இப்பொழுது அந்தப் படம் குறித்து உங்களுக்கு எம்மாதிரியான எண்ணங்கள் இருக்கின்றன?
சஞ்சய்: நிச்சயமாக ‘ஜகாட்’ படம் குறித்து என்னிடம் விமர்சனங்கள் இருக்கின்றன. முதலாவதாக முதல் படமென்பதால் காமிராவின் கோணங்கள், புறக்காட்சிகள் ஆகியவற்றில் மோகம் அதிகமாகவே இருந்தன. அதனைக் குறைத்துக் கொண்டு, படத்தின் அகவய அம்சங்களான நடிப்பின் நுட்பம், அதன் வழி உருவாகும் நாடகீயத் தருணங்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அடுத்ததாக, ‘ஜகாட்’ படத்தின் திரைக்கதையிலே விரிவான நாடகீய அம்சங்களுக்கான இடம் இருந்தது. ஆனால், அதனைக் கையாளும் முதிர்ச்சியை அப்போது நான் பெற்றிருக்கவில்லை. இப்பொழுது, அவ்வம்சங்களை விரிவாக்கித் திரைக்கதையை இன்னுமே முழுமை பெறச் செய்யும் முதிர்ச்சியைப் பெற்றிருக்கிறேன் என எண்ணுகிறேன்.
‘ஜகாட்’ படத்துக்குப் பிறகான பத்தாண்டுகள் இடைவெளியில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
சஞ்சய்: இந்தப் பத்தாண்டுகளை அதிகமும் படங்களைப் பார்க்கவும் வாசிக்கவும் பயன்படுத்திக் கொண்டேன். அதனுடன் என்னுடைய அடுத்த படத்துக்கான திரைக்கதையை எழுதவும் பயன்படுத்திக் கொண்டேன்.
கலை என்பது மொழி எல்லையைத் தாண்டியது என்ற தெளிவு உங்களுக்கு இருக்கிறது. இருந்தபோதிலும் ‘ஜகாட்’ படத்துக்குப் பின்னர் வந்த மலாய் மொழிப்பட வாய்ப்புகளை நீங்கள் மறுத்ததன் காரணமென்ன?
சஞ்சய்: ‘ஜகாட்’ படத்துக்குப் பின்னர், தமிழில் செந்தில் குமரன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜெராந்தூட் நினைவுகள்’ தொடரை மலாயில் மறு ஆக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால், அதன் திரைக்கதையில் வெகுஜன ஈர்ப்புக்கான அம்சங்களுடன் சேர்ந்து கலைபூர்வமாக பார்வையையும் இணைப்பதில் சிக்கலை எதிர்நோக்கினேன். ஒரு வேளை, அதன் திரைக்கதை இன்னும் முதிர்ச்சியடையாமல் இருந்திருக்கலாம். அதனை வெகுஜன ஈர்ப்புக்கான படமாகவோ கலைபடமாகவோ அடையாளப்படுத்த முடியாத குழப்பமும் இருந்தது. இப்படித் திரைக்கதை உருவாக்கத்திலே குழப்பத்தைக் கொண்டிருக்கும் படத்தை இயக்கியிருந்தால் பலரின் நேரமும் உழைப்பும் வீணடிக்கப்பட்டிருக்குமென்பதால் அந்தக் கதையைப் பின்னர் இயக்கலாம் என ஒதுக்கி வைத்தேன். மலாய் மொழிப்படங்களுக்குத் தேசியத் திரைப்படக் கழகம் (Finas Malaysia) தரும் 1 மில்லியன் நிதியுதவியுடன் மலாய் படத்தை இயக்கும் வாய்ப்பும் இருந்தது. ஆனால், அதை விட சற்று குறைவாக ஆறரை லட்சம் நிதியுதவியைப் பெற்று இரண்டு தமிழ்ப்படங்களை இயக்கிவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். ஏனென்றால், மலேசியத் தமிழ்ச்சூழலில் இயங்கும் திரைத்துறையினர் பலரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களில் பணியாற்றிய பின்னணியைக் கொண்டிருந்தனர். தொலைக்காட்சித் துறையும் திரைப்படத் துறையும் முற்றிலும் வெவ்வேறு பணி ஒழுங்கு சூழலைக் கொண்டவை. அவர்கள், தொலைக்காட்சி சூழலையே திரைப்பட உருவாக்கத்திலும் கடைபிடித்து வந்தனர். இந்தச் சூழலில், நானும் எனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பயணிக்கின்ற சிவா பெரியண்ணனும், பினாஸ் தரும் குறைந்த நிதியுதவியைப் பெற்று மலாய், சீனப்படங்களில் கடைபிடிக்கப்படும் பணி ஒழுங்கைத் தமிழ்ப்படங்களில் கொண்டு வருவதென முடிவெடுத்தோம். இதன் மூலம், என்னுடைய படத்தில் பணியாற்றும் துணை இயக்குநர்கள், திரைப்படங்களுக்கான பணி ஒழுங்கையும் கட்டமைப்பையும் கற்றுக் கொள்ள முடியும். பின்னாளில், அவர்களுடைய சொந்தப்பட இயக்கத்துக்கு இந்த அனுபவம் துணைபுரியும். எனக்கு இம்மாதிரியான நுணுக்கங்களைக் கற்றுத் தருவதற்கான தகுந்த முன்னோடிகள் இல்லை. நானே படங்களை எடுத்து அதன் முயற்சிகளின் வழியேத்தான் நுணுக்கங்களைக் கற்றிருக்கிறேன். அந்தச் சூழலில்தான், தமிழ்த் திரைப்படத் துறைக்கான பங்களிப்பாகவும் என்னிடமிருக்கும் இரண்டு கதைகளை இயக்கிவிட வேண்டும் என்ற காரணத்துக்காகவும் மலாய் மொழிப் படங்களை இயக்கும் வாய்ப்பை நிராகரித்தேன்.
நீங்கள் இயக்கியிருக்கும் ‘ப்ளூஸ்’ , ‘மாச்சாய்’ ஆகிய இரண்டு படங்களும் பினாஸின் நிதியுதவியைப் பெற்றிருக்கின்றன அல்லவா?
சஞ்சய்: ஆமாம். ஆனால், பினாஸின் தலையீடுகள் இல்லாமல் இயக்குநரின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டே படங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதால் அவை இரண்டையும் சுயாதீனப்படங்களென்றே சொல்ல முடியும்.
அப்படியென்றால் உங்களுடைய படங்களை சுயாதீனப்படங்களென்றே நீங்கள் அடையாளப்படுத்துவீர்களா?
சஞ்சய்: ஆம். நிச்சயமாக. சுயாதீனப்படங்கள் இரண்டு அடிப்படைகளில் தயாரிக்கப்படுவதைப் பரவலாகக் காணலாம். முதலாவதாக, திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளைப் பெறும் நோக்கத்துக்காக மட்டுமே எடுக்கப்படும் படங்கள். அடுத்ததாக, திரையரங்கில் பரவலான ரசிகர்களைச் சென்றடைந்து வணிக வெற்றியைப் பெற எடுக்கப்படும் படங்கள். நான் பயணிப்பது இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வழியில் எனச் சொல்லலாம். என்னுடைய படங்கள் கலைதன்மை கொண்டிருப்பதோடு வெகுஜன மக்களைச் சென்றடைவதற்கான அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கிறன. ‘ஜகாட்’ படம் குற்றக்குழுவுக்குள் நடக்கும் மோதல்களை மையப்படுத்திய படம். ‘மாச்சாய்’ படம் திரில்லர் கிரைம், ‘ப்ளூஸ்’ அங்கதமும் காதலுணர்வும் கலந்த நாடகீயப்படம் என வகைமையை ஒட்டிய படங்கள். இந்த மாதிரி வெகுஜனத்தை ஈர்க்கின்ற அம்சங்கள் இருந்தாலும், அதற்குள்ளாக வகைமை ஒட்டிப் பதிவாகியிருக்கிற கதைகளின் மாதிரிகளைத் தகர்க்கின்ற வகையிலே படங்களை இயக்குகிறேன்.

Independent film making அல்லது சுயாதீனப்படங்கள் என்பதை எவ்வாறு வரையறை செய்வது?
சஞ்சய்: பொதுவாக சுயாதீனப்படங்கள் என்பவைத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வெளியில் தயாரிக்கப்படுபவை என வரையறைப்படுத்தலாம். தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் படங்களில் பெரும்பாலும் அவர்களே படங்களின் நடிகர்கள், தொழிற்நுட்பக்கலைஞர்கள் என படத்தில் பணியாற்றும் கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். உதாரணத்துக்கு, நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகிய ஒ.டி.டி தளங்கள் இன்ன நடிகர், தொழிற்நுட்பக்கலைஞர்கள் பங்களிக்கின்ற படங்களுக்குக் கிடைத்திருக்கும் பார்வையாளர் எண்ணிக்கை சார்ந்த செய்யறிவு தரவுகளைக் கொண்டிருக்கும். அந்தத் தரவுகளின் அடிப்படையில், அதிகமான பார்வையாளரை ஈர்க்கக்கூடிய கலைஞர்களைத் தெரிவு செய்யும் நடைமுறையைக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலும் கூட, வணிக வெற்றி அடிப்படையில் இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு படம் தயாரிக்கப்பட்டு வியாபாரம் செய்து முடிக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த மொத்தச் செயல்முறையிலும் படத்தின் இயக்குநருக்கோ, கதையாசிரியருக்கோ எவ்விதப் பங்களிப்பும் இருக்காது. தயாரிப்பு நிறுவனங்களின் வணிகம், செயல்படும் முறை ஆகியவற்றுக்கு மாற்றாக திரைக்கதைக்கான முக்கியத்துவத்தைத் தந்து இயக்குநர்கள், கதையாசிரியர்கள் ஆகியோருக்கான முக்கியத்துவத்தைக் கொண்டு செய்யப்படுகின்ற படங்களே சுயாதீனப்படங்கள் என அழைக்கப்படுகின்றன.
சுயாதீனப்படங்கள் என்பவை இயக்குநரின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்துத் தயாரிக்கப்படும் படங்கள் என வகைப்படுத்தலாம் என உங்கள் பதில் வழி புரிந்துகொள்கிறேன். அதனைத் தாண்டி, பொருளாதார ரீதியாக சிறு முதலீட்டில் எடுக்கப்படும் படங்கள், யூடியுப் ஆகிய தளங்களில் வெளியிடப்படும் படங்களையும் சுயாதீனப்படங்கள் எனலாமா?
சஞ்சய்: அப்படியும் வகைப்படுத்தலாம். ஆனால், உலகம் முழுவதுமே சுயாதீனப்படங்கள் என்பதற்கான தெளிவான வரையறை கோடுகள் அழிந்து வருவதாகப்படுகிறது. கடந்த இருபதாண்டுகளில் எடுக்கப்பட்ட மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட சுயாதீனப்படமாக ‘Lord of The Rings’ படம் சொல்லப்படுவதுண்டு. பெரும் வணிக முதலீட்டில் எடுக்கப்பட்ட அப்படமும் கூட தயாரிப்பு நிறுவனங்களுக்கு வெளியேதான் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
மலேசியாவில் சுயாதீனப்படங்களின் சூழல் எப்படி இருக்கிறது?
சஞ்சய்: கடந்த இருபதாண்டுகளில் மலேசியா மட்டுமின்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுயாதீனப்படங்களில் போதுமான நிதியாதரவால் வலுவான கதையம்சத்துடன் சிறந்த தொழிற்நுட்பமும் கைகூடிய படங்கள் வெளிவருவதைக் காண முடிகிறது. உதாரணத்துக்கு, மலேசியாவில் Amanda Nell Eu இயக்கிய ‘Tiger Stripes’ எனும் படத்துக்கு ஐந்து மில்லியன் ரிங்கிட் நிதியுதவி கிடைத்தது. ஆனால், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வெளிவந்த சுயாதீனப்படங்களில் இருந்த கலகக்குரல் மெல்ல அடங்கிவருவதையும் காண முடிகிறது. சமீபத்தில், நான் ரோட்டர்டம் திரைப்பட விழாவுக்குச் சென்றிருந்தப்போது குறும்படப் பிரிவில் திரையிடப்பட்ட பத்து படங்களில் ஆறு படங்களில் A.I (செயற்கையறிவு தொழிற்நுட்பம்) பயன்படுத்தப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. சுயாதீன முறையில் எடுக்கப்படுகின்ற தரமான குறும்படங்களுக்குக் குறைந்தது ஐம்பதாயிரம் வெள்ளி பட்ஜெட் தேவைப்படும். அப்படிப் படம் எடுக்கச் செலவிடப்படுகின்ற தொகையும் திரும்பக் கிடைக்காது. இந்தச் சூழலில், உங்களுக்கு வேண்டியது சுயாதீன முறையில் உங்களின் பார்வையை, குரலைப் பதிவு செய்யும் ஒர் ஊடகம். அதனை, செயற்கையறிவு தொழிற்நுட்பம் எளிமைப்படுத்தி அளிக்கிறது. இப்படியான மாற்றங்களும் சுயாதீனப்படங்களில் நிகழ்ந்து வருகின்றன.
‘ஜகாட்’ படத்துக்கு முன்னர் சுயாதீனமான முறையில் மலேசியத் தமிழ்ப்படங்கள் தயாரிக்கப்பட்டுப் பரவலான கவனம் கிடைத்ததில்லை. ஜகாட்டுக்குப் பிறகு அம்மாதிரியான முயற்சிகள் அதிகரித்ததாக நினைக்கிறீர்களா?
சஞ்சய்: அம்மாதிரியான முயற்சிகள் அதிகம் நடக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். இயக்குநர்கள் ஹரன் – ஷோபன் இயக்கத்தில் வெளிவந்த ‘மேட்ரோ மாலை’, ‘சிம்பிள் மனுசன்’ போன்ற படங்கள் அம்மாதிரி தயாரிக்கப்பட்ட படங்கள். அதை தவிர்த்து, 2024 ஆம் ஆண்டு ‘பி.எம்.டபுள்.யு(BMW)’ குறும்படப் போட்டியில் வென்ற கிரித்திஷா, கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘கத்து’ எனும் குறும்படத்தை இயக்கிய ஆனந்த் சுப்ரா, ‘காளி’ எனும் படத்தை இயக்கி வரும் கோகுலராஜன் என மலேசிய அடையாளத்துடன் படங்களை எடுக்கும் முனைப்பு கொண்டவர்கள் எனச் சில இளம் இயக்குநர்கள் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அம்மாதிரியான முயற்சிகள் தொடராததற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?
சஞ்சய்: முதலில், மலேசியத் தமிழ்த்திரைத்துறையின் பொது புத்தியில் ஊறிப்போயிருக்கும் வணிக வெற்றி குறித்த நம்பிக்கைகள்தான் அம்மாதிரியான முயற்சிகள் தொடரப்படாததற்கான காரணம். ‘ஜகாட்’ படம் மலேசியாவின் தமிழ்த் திரைத்துறைக்குள் ஊறிப் போயிருந்த சில மரபுகளைத் தகர்த்தெறிந்தது. முதலாவதாக, நடிப்புப் பயிற்சி தந்து யாரையும் திரைப்படத்தில் நடிக்க வைக்க முடியும் என்பதை ‘ஜகாட்’ படத்தில் பன்னிரண்டு வயது சிறுவனின் தேர்ந்த நடிப்பால் நிரூபித்தோம். அதை போல தமிழ்நாட்டுப் படங்களைப் போலி செய்யாமல் மலேசிய அடையாளத்துடன் படத்தை எடுக்க முடியுமெனவும் செய்து காட்டினோம். தமிழ்த் திரைப்படங்களின் சாயலில் படம் தயாரித்தவர்களுக்கு ‘ஜகாட்’ படத்தின் வெற்றி அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ‘ஜகாட்’ படத்தைப் போல யதார்த்தவாதப் படங்கள் வெளிவந்தால் தங்களது வணிக வெற்றி பாதிக்கப்படும் என அச்சமடைந்தனர். அதன் காரணமாக, ‘ஜகாட்’ படத்தின் வணிக வெற்றியைப் பின்னுக்குத் தள்ளி அம்மாதிரியான படங்கள் எடுத்தால் வணிக வெற்றி கிடைக்காது என்ற பேச்சை உருவாக்கினார்கள். நான் அடுத்த படத்துக்கான முயற்சிகளுக்கு நீண்டகாலம் எடுத்துக் கொண்டதைக் காரணமாக்கி ‘ஜகாட்’ போன்ற படங்கள் எடுத்தால் வணிக வெற்றி கிடைக்காதென்பதுடன் அடுத்த முயற்சியும் தாமதமாகும் என்ற எண்ணத்தை விதைக்க முயல்கின்றனர். ஆனால், 2015ஆம் ஆண்டில் வெறும் பத்து திரையரங்கில் மட்டுமே திரையிடப்பட்டு பத்து வெள்ளி டிக்கெட் கட்டணம் கொண்டிருந்த ‘ஜகாட்’ படம் மூன்று லட்ச ரிங்கிட்டை வசூல் செய்தது வணிக ரீதியாகப் பெரும் வெற்றித்தான். இவ்வுண்மையை மறைக்கும் பேச்சுகள் வழி புதியவர்களுக்கு அச்சமூட்டப்பட்டதால் அம்மாதிரியான முயற்சிகள் பரவலாகச் சென்றடையவில்லை.
பொதுவாகவே மலேசியத் தமிழ்க் கலையுலகத்துக்குள் தங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்றும் ஒடுக்கப்படும் துறை என்ற எண்ணம் வலுவாக இருப்பதைக் காண முடிகிறது. ஆனால், ‘ஜகாட்’ படத்துக்கும் உங்களுக்கும் தேசிய அளவில் அளிக்கப்பட்ட விருதுகளின் வழி அந்த எண்ணம் தகர்த்தெறியப்பட்டது. இந்தச் சூழல் மலேசிய தமிழ்த்திரையுலகத்துக்குள் எம்மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வந்தது?
சஞ்சய்: தமிழ் கலையுலகத்துக்குள் பெரிய மாற்றங்கள் எதையும் கொண்டு வரவில்லை என்றே எண்ணுகிறேன். தாங்கள் ஓரங்கட்டப்படுகின்றோம் என்ற எண்ணம் இன்னுமே மலேசிய தமிழ்க் கலையுலகத்துக்குள் வலுவாக இருக்கிறது. ஆனால், தங்களுக்கான வாசல்கள் விரிவாக இருக்கின்றன என்ற எண்ணம் இளம் இயக்குநர்களைத் தீவிரத்துடன் செயற்பட ஊக்குவித்திருக்கிறது எனலாம். எனக்குக் கிடைத்த அங்கீகாரத்தின் வழி தங்களுக்கான பாதை எளிமையாகியிருக்கிறது என இளம் இயக்குநர் கோகுலராஜன் கூறுவதுண்டு. ஆனால், கலைத்துறைக்குள் இருக்கும் முறையிடல் குரல் குறைந்தபாடில்லை. அவர்களின் திறமையின்மையை மூடி மறைக்க சமூகம் தங்களைக் கண்டுகொள்வதில்லை, வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன எனப் புலம்பல்களைப் பயன்படுத்துகின்றனர். என்னுடைய வெற்றியைக் கூட உங்களுடைய நேரம், ஜாதகம் சரியாக இருந்தது ஆகிய சால்ஜாப்புகளால் மழுங்கடிக்கப் பார்க்கின்றனர். அவர்களின் இயலாமை, திறமையின்மையைப் புலம்பல்களாலும் முறையிடல்களாலும் மறைத்துக் கொள்கின்றனர்.
‘ஜகாட்’ படம் வணிக வெற்றி பெறாததாலே நீங்கள் பத்தாண்டுகள் முடங்கிப்போனதைப் போன்ற தப்பெண்ணத்தைச் சிலர் திட்டமிட்டுப் பரப்புவதாகக் குறிப்பிட்டீர்கள். உங்களைப் பின் தொடர எண்ணியிருக்கும் இளம் இயக்குநர்களுக்கு நிச்சயம் அது ஒரு எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கியிருக்கும். ஏன் உங்களை நாடி வந்த வாய்ப்புகளை நிராகரித்துப் பத்தாண்டுகள் இடைவெளி விட்டீர்கள்?
சஞ்சய்: ‘ஜகாட்’ படத்துக்குப் பின்னர் ஏற்கனெவே கைவசம் இருந்த கதைகளைக் கொண்டு ஆண்டுக்கொரு படம் இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். நான் விலகியிருக்க விரும்பிய ‘ப்ளூஸ்’ பட கதை நன்றாக இருப்பதாகச் சொல்லி இயக்கும் யோசனையை நண்பர் சிவா பெரியண்ணன் ஏற்படுத்தினார். அந்தச் சமயத்தில்தான், ஆஸ்ட்ரோவிலிருந்து ஒரு தொலைக்காட்சிப் படத்தை இயக்க என்னை அணுகினார்கள். அதில் எனக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. ஏனென்றால், மலேசியாவில் தமிழ்த் திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்களின் தரத்தில் எடுக்கப்படும்போது, திரைப்படத்தைத் தொலைக்காட்சி சூழலுக்கேற்ப இயக்குவதில் எனக்கு எந்தச் சிக்கலுமில்லை. ஆனால், தொலைக்காட்சிப் படங்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ஜெட்டிலே படத்தை முடித்துத் தருமாறு கேட்டபோதுதான் அந்தப் பணியிலிருந்து விலகினேன். ‘ப்ளூஸ்’ படத்தை எப்படியும் தயாரித்துவிடலாம் என்ற முடிவில் இருந்தேன். அந்தப் பயணத்தில் ‘மாச்சாய்’ படத்தையும் இயக்கத் தொடங்கினேன். அந்தச் சமயத்தில் ஏற்பட்ட கோவிட் தொற்று படப்பணிகளைச் சற்று மெதுவாக்கி விட்டது. ஆக, பத்தாண்டுகளாக நான் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதானிருந்தேன்.
அடிப்படையில், ஒரு சினிமா கலைஞனின் பணியென்பது தன் முன்னால் இருக்கும் களங்களில் விதைகளைத் தூவி விட்டு முளைவிடுவதற்காக நீர் ஊற்றிக் காத்திருப்பது மட்டும்தான். அதில் எது முதலில் முளைத்து வருகிறது என்பது நம் கையில் இல்லை. நாம் எதிர்பார்க்காத விதையொன்று முளைவிட்டிருக்கும். ஆக, எந்தக் கரு முளைக்கிறதென்பது நம் கையில் இல்லை என்பதைச் சினிமா கலைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதையே இன்னும் விரிவாகச் சொன்னால், மேற்கொள்ளும் பணியில் தீவிரமானவனே சினிமா துறைக்கு வர வேண்டும். வெளியில் பரப்பப்படும் தப்பெண்ணங்களால் அலைக்கழிக்கப்படுபவன் சினிமா துறைக்கு வர வேண்டியதில்லை; அவனுக்கு அதற்கான தகுதியுமில்லை என்பதே என்னுடைய எண்ணம். ஏனென்றால், அந்த எண்ணங்களால் அலைக்கழிக்கப்படுபவன் துறைக்குள் வந்தாலும் நிச்சயமாக அவன் கஷ்டப்படுவதோடு அவனைச் சுற்றியிருப்பவர்களும் துன்பமடையக்கூடும். சினிமா துறை என்பதை சமுராய் வீரனின் பாதை அல்லது துறவியின் பாதை என்று சொல்வேன். அந்தப் பாதைக்குத் தங்களை ஒப்புக் கொடுக்க தயாரானவர்களே சினிமா துறைக்கு வர வேண்டும். இந்தச் சவால்களை அறிந்து சினிமாவுக்குள் அடியெடுத்து வைப்பவன் நிச்சயமாக சினிமா துறைக்குள் நீண்ட தூரம் பயணிக்க முடியுமென நினைக்கின்றேன்.
‘ஜகாட்’ படத்தின் இயக்கப்பணி, அதன் வெற்றி ஆகியவைத் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு அளித்த மாற்றங்கள் என்ன?
சஞ்சய்: ‘ஜகாட்’ படம் இயக்கும்போதே ஒரு முக்கியமான படைப்பை இயக்குகிறோம் என்பதும் அது தேசிய அளவில் விருதுகளைப் பெற வாய்ப்புள்ளது என்பதை ஓரளவு ஊகித்திருந்தேன். இருந்தப்போதிலும், படம் இயக்கும்போது என்னிடம் இளங்கன்று பயமறியாது என்பதைப் போல எந்த அச்சமும் இருக்கவில்லை. குறைந்த பட்ஜெட்டில் படத்தை இயக்க வேண்டிய சூழலில் ஒரு காட்சி சரியில்லையென்றால் கூட தயங்காமல் அதை விட்டு வேறொன்றை இயக்கிச் சேர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தது. இம்மாதிரியான எண்ணங்களையே விளையாட்டுத்தனம் என்கிறேன். படத்தை இயக்கி வெளியிட்டுத் தேசிய விருதுகள், பரவலான கவனத்தைப் பெற்ற பின்பு பொறுப்புணர்ச்சி அதிகரித்திருப்பதை உணர முடிந்தது. அடுத்த படைப்பை இன்னும் தீவிரமாகவும் பொறுப்புடனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அளித்தது.

2015 ஆம் ஆண்டு ‘ஜகாட்’ படம் வெளிவந்த சமயத்தில் ஒ.டி.டி போன்ற தளங்கள் பெரிதும் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. ஆனால், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகான காலக்கட்டங்களில் உலகின் சிறந்த படங்களை உடனுக்குடன் ஒ.டி.டி தளங்களில் பார்க்கும் வாய்ப்பு இன்னுமே பரவலாகியிருக்கிறது. அதைப் போல தமிழ்ப் படங்களிலும் தொழிற்நுட்பத் தேர்ச்சி இன்னும் கூடியிருப்பதைக் காண முடிகிறது. இந்த மாதிரியான மாற்றங்களால் ரசிகர்களின் பொதுவான ரசனை மனநிலை மாறியிருக்கிறதா?
சஞ்சய்: பெரிதாக மாறவில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் பார்க்கும் உள்ளடக்கம் என்பது ஒன்றாகத்தான் இருக்கிறது. உதாரணத்துக்கு ஹாலிவுட் திரைச்சூழலில் இயங்கும் ‘நெட்பிளிக்ஸ்’ போன்ற ஒ.டி.டி தளங்கள் ஹாலிவுட்களில் பின்பற்றப்படும் கதை உத்தியை இன்னும் குறைவான பட்ஜெட் தேவைப்படும் இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் எடுத்து ரசிகர்களுக்கு அளிக்கின்றனர். அதைப் போல கொரியா திரைச்சூழலும் பெரிதும் ஹாலிவுட்டையே பின்பற்றுகிறது. படத்தின் மொழி, தொழிற்நுட்பத் தேர்ச்சி ஆகியவை மாறியிருக்கிறதே தவிர உள்ளடக்கத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. நான் இயக்கும் ‘ப்ளூஸ்’ படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் குவாய் லோ நாம் இயக்கும் இந்தப் படத்தை ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் நடிகர்களின் சம்பளம், தயாரிப்புச் செலவுகள் என எல்லாவற்றையும் சேர்த்து பத்து மில்லியன் அமெரிக்கா டாலர்கள் செலவாகியிருக்கும் என்றார். ஆக, படத் தயாரிப்புக்கு ஆகும் செலவைக் குறைக்கவே ஹாலிவுட்டில் முன்வைக்கப்படும் அதே உள்ளடக்கத்தைக் கொண்டு மற்ற நாடுகளில் படங்களை இயக்குகின்றனர். உதாரணத்துக்கு, இன்றைக்கு ‘கொய் தியோ’ போன்ற உணவைச் சாப்பிடும் ஒருவருக்கு ‘பாஸ்டா’ புதிய சுவையைத் தரலாம். ஆனால், அடிப்படையில் இரண்டின் ஊட்டமும் ஏறக்குறைய ஒன்றுத்தான். தமிழ் ரசிகர்கள் குறைந்தப்பட்சம், இதுவரையில் தமிழ் சினிமா நட்சத்திர மதிப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தரம் குறைந்த படங்களைத் தந்து தங்களை ஏமாற்றியிருக்கிறது என்ற தெளிவினை வேண்டுமானால் ஒ.டி.டி படங்களின் வழி அறிந்து கொள்ள முடியும். மெல்ல ஒ.டி.டி தளங்களும் நட்சத்திர மதிப்பைக் குறி வைத்து பெரிய ரசிகர்களும் பார்வையாளர்களும் கொண்ட கலைஞர்களை வைத்துபடங்களைத் தரத் தொடங்கியிருக்கின்றன. ஆகவே, ரசனை, சிந்தனை மாற்றம் பெற நிஜமான உலகச் சினிமாக்களையே பார்க்க வேண்டியிருக்கிறது.
மலேசியத் தமிழ்ப்படங்களின் தொழிற்நுட்ப வளர்ச்சி எந்த மாற்றத்தையும் உண்டாக்கவில்லையா?
சஞ்சய்: தொழிற்நுட்ப மாற்றமென்பது எல்லா காலக்கட்டத்திலும் வரக்கூடியதுதான். இருபதாண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த ஒரு காமிராவை விட இன்றைக்கு ஒரு ஐ போன் காமிரா இன்னும் துல்லியத்துடன் இருக்கிறது. அப்படித்தான் இருபதாண்டுகளுக்கு முந்தைய தொழிற்நுட்பமும் தற்காலத் தொழிற்நுட்பத்துடனான ஒப்பீடும். அதனால் எல்லாம், படத்தில் மாற்றங்கள் வந்துவிட்டது என எப்படிச் சொல்வது. அடிப்படையில் திரைப்படக் கலையைத் திரைமொழி எனலாம். தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கதையைச் சொல்லும் ஊடகம். ஆக, தொழிற்நுட்பத்தைக் கொண்டு நாம் கதை சொல்லலில் எப்படி முன்னகர்ந்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் இன்னுமே புதிய தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்திப் பழைய கதையையே சொல்லி வருகிறோம்.
ஆனால், தொலைக்காட்சித் தொடர்களில் மாற்றங்கள் வந்திருப்பதைக் காண முடிகிறது. கடந்த நான்கைந்து ஆண்டுகளில் ஆஸ்ட்ரோவில் ஒளிப்பரப்பாகும் தொடர்களில் கதை சொல்லல் முறையில் மாற்றங்கள் வந்திருப்பதைக் காண முடிகிறது. ஆனால், திரைமொழியான திரைப்படங்களில் மலேசியத் தமிழ்ச்சூழல் இன்னுமே பின் தங்கித்தான் இருக்கிறது.
உலக சினிமாக்களிலும் சரி தமிழ்நாட்டுப் படங்களிலும் கூட ஓவியர்கள், எழுத்தாளர்கள் போன்ற துறைசார்ந்த வல்லுநர்களைப் படங்களில் பங்களிக்க வைக்கின்றனர். நீங்கள் அம்மாதிரியாக மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களைப் படங்களில் பங்களிக்க வைக்கின்றீர்களா?
சஞ்சய்: ‘ப்ளூஸ்’ , ‘மாச்சாய்’ ஆகிய இரண்டு படங்களிலும் ஸ்பெயினைச் சேர்ந்த டேவிட் யானேஸ் (திரைப்பெயர் Gwai Lou) ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவுத் துறையில் தேர்ச்சியும் ஸ்பானிய மொழிப்படங்களை இயக்கிய அனுபவமிக்க Gwai Lou இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். உலகளவில் கவனம் பெற்ற மலாய் திரைப்படங்களுக்குத் தயாரிப்பு மேற்பார்வை செய்த அனுபவம் உள்ள சமாட் என்பவரே இரு படங்களுக்கும் தயாரிப்பு நிர்வாக மேற்பார்வை செய்தார். படத்தின் பணியாற்றிய line producerகள் அனைவரும் வணிக ரீதியாக வெற்றி பெற்ற வெகுஜனப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். ஒரு திரைப்படத்தின் கட்டமைப்பையும் பணி ஒழுங்கையும் கற்றுக்கொள்ள அவர்களின் பங்களிப்பு தேவையானதாக இருந்தது. நானே தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்ச்சிகளில் பணியாற்றிய அனுபவத்திலே திரைப்படங்களை இயக்கத் தொடங்கினேன். மற்றப்படியாக, எந்த ஒரு இயக்குநரிடமும் துணை இயக்குநராக இருந்து பட இயக்கத்துக்கான ஒழுங்கைக் கற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, திரைப்படங்களுக்கான ஒழுங்கு கட்டமைப்பில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களை என்னுடைய படங்களில் பணியாற்ற வைப்பதன் மூலம் நானும் திரைப்படத் தொழிற்நுட்பம் குறித்து இன்னும் கற்றுக் கொள்ள முடிந்தது. அந்த அனுபவத்தைக் கொண்டு ‘மாச்சாய்’ படத்தை இன்னும் சிறப்பாக அணுக முடிந்தது.
‘ஜகாட்’ படத்தின் வசனங்களில் எழுத்தாளர் சு. யுவராஜன் பங்களித்திருந்தார். அவ்வாறாக, இந்த இரண்டு படங்களில் எதாவது இலக்கியவாதிகள் பங்களித்திருக்கின்றனரா?
சஞ்சய்: இல்லை. ஆனால், இதற்குப் பிறகு அப்படி எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்டு படம் எடுக்கும் எண்ணமிருக்கிறது. ஒரு இயக்குநருக்குத் தன்னுடைய நேரடி அனுபவங்களிலிருந்தும் தான் அவதானித்த சூழலை ஒட்டியும் மூன்று கதைகளாவது இருக்கும். ‘ப்ளூஸ்’ படம் நான் அவதானித்த திரைப்படச் சூழலை ஒட்டி உருவானது. ‘மாச்சாய்’ படத்தின் கதை இளவயதில் நான் கேட்ட அனுபவக்கதைகளிலிருந்து உருவானது. அதனுடன், இந்த மூன்று படங்களிலும் திரைக்கதையில் இணைக் கதை ஆசிரியராக இருக்கும் சிவா பெரியண்ணனுக்கு வலுவான இலக்கிய வாசிப்பு இருந்தது. கதையிலும் காட்சிகளிலும் அவர் முன்வைக்கின்ற பல ஆலோசனைகளை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
மலேசியா மட்டுமின்றி உலகின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களிலும் உங்களில் படங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன. உலக அரங்குகளில் உங்கள் படங்களுக்கு எம்மாதிரியான வரவேற்பு இருந்தது?
சஞ்சய்: ‘ப்ளூஸ்’ படத்தைப் பார்த்த ஒரு திரை விமர்சகர் ஒரு பாத்திரத்தின் வார்ப்பை மிகச் சிறப்பாகப் படத்தில் அணுகியிருப்பதாகப் பாராட்டினார். மலேசியக் கலைத் துறையைப் பின்னணியாகக் கொண்டிருப்பதால், மலேசியக் கலைத் துறையைப் பற்றியும் உறவுகளுக்குள் இருக்கும் முரண்களையும் ‘ப்ளூஸ்’ படம் காட்டியிருப்பதாகப் பார்வையாளர்கள் குறிப்பிட்டனர். இன்னொரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இந்தியப் படத் தயாரிப்பாளரும் விமர்சகருமான நண்பரொருவர் ‘ப்ளூஸ்’ படத் திரையிடலுக்கு முன்னர் மலேசியத் தமிழ்த் திரையுலகின் சூழல் எவ்வாறு இருக்கிறதெனக் கேட்டார். படத் திரையிடல் அவசரத்தில் சுருக்கமாகப் பதிலளித்துவிட்டுச் சென்றேன். படம் முடிந்து வெளியேறியப் பின்னர், மலேசியாவில் மாற்றுச் சினிமா எடுப்பதற்கான முயற்சியும் அதன் நெருக்கடிகளும் எனக் கலைச்சூழலின் ஒட்டுமொத்தச் சித்திரத்தையும் படம் காட்டிவிட்டதெனச் சொன்னார். அந்த எதிர்வினையை மிக முக்கியமானதாக எண்ணுகிறேன்.
பொதுவாக, தமிழ்நாட்டுச் சூழலில் மலேசியத் தமிழ்ப்படங்கள் குறித்து இரண்டே அபிப்பிராயங்கள்தான் இருக்கும். முதலாவதாக, தமிழ்நாட்டுப் படங்களைப் போலிச் செய்து தயாரிக்கப்படுகின்ற மோசமான படங்களைப் பார்த்து ஏற்பட்டிருக்கும் தப்பெண்ணம் அல்லது அப்படி ஒன்று இயங்குவதையே அறியாமல் இருப்பது. இந்த இரண்டு போக்குக்கு இடையில் மலேசியாவில் மாற்று சினிமா என ஒன்று வலுவாக உருவாகி வருவதை ‘ப்ளூஸ்’ படம் காட்டியிருக்கிறது.
அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதால் படங்களுக்குத் தேர்ந்த சினிமா ரசிகர்களிடமிருந்து பரவலான கவனம் கிடைக்கிறது. அதைத் தாண்டி திரைப்பட விழாக்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததவை?
சஞ்சய்: இதற்கான பதில் மிக எளிது. திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர்களில் சிலர் அரசியல் சூழலில் உடனடி எதிர்வினை தரக்கூடிய மத அடக்குமுறை, பெண்ணியச் சிக்கல், அரசியல் சிக்கல் போன்ற கருக்களில் படம் இயக்கி விமர்சகர்களின் கவனத்தைப் பெறுவதற்கான உத்திகளில் ஈடுபடுவதுண்டு. எனக்கு அந்த முறையில் உடன்பாடில்லை. அந்தக் கலைப்படைப்பு உணர்த்தும் விஷயமே முக்கியமானது. திரைப்பட விழாக்கள் என்பது இரண்டாம் பட்சமே. ஒரு வகையில் அந்தக் கலைப்படைப்பே அதற்கான திரைப்பட விழாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பதாகவே கருதுகிறேன்.
ஆனால், அந்தக் கலைப்படைப்பின் வழி நாம் உணர்த்த விரும்பும் கரு, உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுடன் தொடர்புறுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். திரைப்படம் என்பது காட்சி ஊடகம். மொழி இல்லாதவர்களால்கூட புரிந்து கொள்ளப்பட முடிந்ததாகவே திரைப்படங்கள் இருக்க வேண்டும். அப்படி மொழி புரிதல் இல்லாமல் படத்தின் உணர்வை நெருங்க முடிந்தால் அது உலக சினிமாவாக மாறிவிடுகிறது. இரண்டாவதாக, கலைப்படைப்பின் வாயிலாக நாம் மெய்யான உணர்வொன்றைக் கடத்த முயன்றால் அது எல்லாரையும் சென்றடையும். உதாரணத்துக்கு, ‘ஜகாட்’ படம் வியட்நாமில் திரையிடப்பட்டபோது அங்கிருந்த மொழிபெயர்ப்பாளர் தானும் வறுமை சூழ்ந்த கிராமமொன்றில் கல்வியொன்றினாலே வாழ்வில் உயர முடியுமெனக் கண்டிப்பு காட்டிய தன்னுடைய தந்தையைப் படம் நினைவுப்படுத்துவதாகச் சொன்னார். அதைப் போல ஜப்பானிலும் தன் தந்தையை நினைவுப்படுத்துவதாக இன்னொரு பெண் குறிப்பிட்டார். ஒருவேளை ஆசிய நாடுகளின் வாழ்க்கைச் சூழல், பண்பாட்டு ஒற்றுமையால் இப்படி இருக்குமென நினைத்தேன். ஆனால், போலாந்துக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த பெண் ஒளிப்பதிவாளரும் தன் வாழ்வையும் தந்தையையும் நினைவுப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். அப்படி உணர்வுத்தளத்தில் உலகம் முழுவதும் இருப்பவர்களைப் படங்களால் தொடர்புறுத்த முடிகிறது.

மலேசியாவில் பிற இன ரசிகர்களின் இடையே உங்கள் படங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?
சஞ்சய்: மற்ற இன ரசிகர்களுக்கு என்னுடைய படங்களை ரசிப்பதிலும் அறிந்து கொள்வதிலும் எந்தத் தடையுமில்லை. மலேசிய அடையாளம் கொண்ட படங்களாக அவர்களால் என்னுடைய படங்களை அணுக முடிகிறது.
முன்னர் நீங்கள் கலை என்பது மொழி, இன அடையாளத்தைத் தாண்டியது எனக் குறிப்பிட்டீர்கள். ஆக, கலையில் எதை அடைய முயல்கிறீர்கள்?
சஞ்சய்: கலையைக் கொண்டு உலகை அல்லது சமூகத்தை மாற்றலாம் என்பது ஆரம்பநிலை அறிதல். என்னைப் பொறுத்தளவில், கலையைக் கொண்டு என்னை மாற்ற முயல்கிறேன். கலை எனக்குள் இரு வழிகளில் பயணப்படுகிறது. ஒன்று, கலையைக் கொண்டு என்னை அறிதல். மற்றொன்று, என்னை அறியும்போது சினிமா படைப்பையும் செய்கிறேன். இவ்வாறாக, ஒன்றைத் தந்து இன்னொன்றைப் பெற்றுக் கொள்வதைப் போல என்னை அறிந்து கொள்ளும்போது சினிமாவையும் கற்றுக் கொள்கிறேன். என்னுடைய கலையால் மக்கள், சமூக மாற்றம் போன்ற புறமாற்றங்கள் என்பவை எனக்கு அப்பாற்பட்டவை. கலை எனக்குள் நிகழ்த்தும் மாற்றங்களையே முக்கியமானவையாகக் கருதுகிறேன்.
உங்களுடைய படங்களை மொழி அல்லது நாடு என இரண்டில் எதனுடன் அடையாளப்படுத்துவீர்கள்?
சஞ்சய்: என்னுடைய படைப்புகளை ஆன்மீகத்துடன் தொடர்புப்படுத்தவே நான் முயல்வேன். ஆன்மீகம் என்பது மிகப் பெரிய பொருள் தரும் சொல். அதனைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். என் பார்வையில், என்னுடைய படைப்புகளைப் பார்க்கும் ரசிகன், நேற்றிருந்ததைக் காட்டிலும் இன்றைக்குச் சற்றே மேம்பட்டவனாகத் தன்னை உணர வேண்டும் என எண்ணுகிறேன். அந்த உணர்வை அவன் அடைவதே என்னுடைய கலைக்கான அடையாளம். அந்த உணர்வை அவனுக்கு கலை, என் வழியாகக் கடத்தியிருக்கிது என்றே எண்ணுவேன்.
மலாய் மொழியில் திரைப்படங்கள் இயக்கும் எண்ணம் இருக்கிறதா?
சஞ்சய்: நிச்சயமாக இருக்கிறது. மலாய் மொழி திரைத்துறை என்பது மலேசியாவில் தன்னளவில் முழுமை பெற்ற திரைத்துறையாகவே இயங்கி வருகிறது. தனிப்பட்ட முறையில் நான் திரைத்துறையில் மேலும் தேர்ச்சி பெற நிச்சயமாக மலாய் மொழி திரைத்துறையில் இயங்கித்தான் ஆக வேண்டும். மலேசியத் தமிழ் சினிமாத்துறையில் பலவற்றைச் சுயமாக உருவாக்க வேண்டியிருக்கும். வெளிநாடுகளிலோ அல்லது மற்ற மொழி திரைத்துறைகளில் இருப்பதைப் போல வேண்டுகிற தொழிற்நுட்பங்களும் வாய்ப்புகளும் உடனுக்குடன் கிடைப்பதில்லை. மலேசியச் சூழலில் ஒரு தமிழ்ப்படத்தை இயக்குவதென்பது பெரிய கற்களை நகர்த்துவதைப் போல இயக்கத்துடன் சேர்ந்து அதற்கான களத்தையும் தானே அமைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கும். ஒரு பட இயக்கமென்பது மூன்று கற்களை நகர்த்துவதைப் போல இருப்பதாக நானே வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஆக, தனக்கான வாய்ப்புகளையும் தொழிற்நுட்பங்களையும் கொண்டிருக்கிற மலாய் மொழி திரைத்துறைக்குள் இயங்க வேண்டும்.

உங்களின் அடுத்தடுத்த படங்களான ‘ப்ளூஸ்’ , ‘மச்சாயும்’ ‘ஜகாட்’ படத்துடன் தொடர்புடையவை என அறிகிறோம். அதைப் பற்றி குறிப்பிடுங்கள்?
சஞ்சய்: ‘ஜகாட்’ படத்தின் நாயகனான அப்போய் தேர்ந்தெடுக்கும் இரண்டு வெவ்வேறு பாதைகளின் பயணம்தான் ‘ப்ளூஸ்’, ‘மச்சாயும்’. ஒருவேளை வன்முறைக்கான பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தால் அவனுடைய உலகம் என்னவாக இருந்திருக்கும் என்பதை ‘மாச்சாய்’ படத்தின் வழியாகக் காட்டியிருக்கிறேன். அதைப் போல படைப்பூக்கமான திரைத்துறையில் ஈடுபட்டிருந்தால் அவனுடைய உளவியல் எதை நோக்கி நகர்ந்திருக்குமென்பதை ‘நீர் மேல் நெருப்பு’ படத்தில் காட்டியிருக்கிறேன்.
இந்த இரண்டு படங்களையும் இயக்குவதற்கு எத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டீர்கள்?
சஞ்சய்: ‘ப்ளூஸ்’ படத்தின் தொகுப்புப் பணிகளின்போதே ‘மாச்சாய்’ படத்தைத் தொடங்கிவிட்டேன். இரண்டையும் ஏறக்குறைய ஓராண்டு காலக்கட்டத்துக்குள் இயக்கினேன்.
உங்களின் படங்களுக்கான திரைக்கதை பின்னணியைப் பற்றிகுறிப்பிடுங்கள்?
சஞ்சய்: ‘ப்ளூஸ்’ படத்தின் கிளைமக்ஸ் காட்சி ஒரு பியானோ இசையின் துணுக்கிலிருந்து உருவானது. அந்த கிளைமக்ஸ் காட்சிக்கு முன்பிலிருந்த கதையை எழுதினேன். நான் அவதானித்த திரைப்படச் சூழலை ஒட்டியே நீர் மேல் நெருப்பு படத்தின் கதை அமைந்திருக்கிறது. ‘மாச்சாய்’ படத்தின் கதையென்பது பிறர் சொல்ல கேட்ட அனுபவக் கதையொன்றிலிருந்து உருவானது. ‘ஜகாட்’ படம் என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து உருவானது.
இந்த மூன்று பட உருவாக்கத்தின்போதும் மலேசியத் தமிழ்ச் சினிமா சூழலுக்குள் தொழிற்நுட்பம் தொடங்கி பலவற்றையும் முன்மாதிரி இல்லாமல் நீங்களே உருவாக்கியிருப்பதை அறிய முடிகிறது. அப்படி நீங்கள் கண்டடைந்தவை என்ன?
சஞ்சய்: முதன்மையாக என்னுடைய கதைகளின் அசல்தன்மையைத்தான் குறிப்பிட வேண்டும். இதற்கு முன்னர் வெளிவந்த மலேசியத் தமிழ்ப்படங்களில் கணிசமான தமிழ்நாட்டுப்படங்களின் தாக்கம் இருந்திருக்கிறது. என்னுடைய மூன்று படங்களும் எந்தப் படத்தையும் தழுவாமல் மலேசியாவை ஒட்டிய அசல் கதைகளை ஒட்டி எடுக்கப்பட்டவை. முன்னரே இருக்கும் கதையை அல்லது படத்தை ஒட்டித் திரைக்கதையை அமைக்கும்போது அதற்குள் புதிதாகக் கண்டடைவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், ஒரு திரைக்கதையைத் தானே உருவாக்கும்போது தொடங்கியப்போதிருந்த மனநிலைக்கு மாறானதாக முடிவு வேறொன்றுக்கு அழைத்துச் சென்றிருக்கும். உதாரணத்துக்கு, நான் கோபத்துடன் எழுதத் தொடங்கிய ‘ப்ளூஸ்’ கதை முடியும்போது சுமூகமான முடிவை எட்டியிருந்தது. இவ்வாறாக, படக்கதை என்பது நாமே அறியாத ஒன்றை நோக்கிய பயணமாக இருக்கும். ஆனால், படத்துக்கான பட்ஜெட் போன்ற கட்டுப்பாடுகள் முன்னரே தெரிந்திருக்கும். ஆக, எழுதிய கதையைக் குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் அடக்க வேண்டியிருக்கும். திரைக்கதை உருவாக்கம் தொடங்கி பட்ஜெட்டுக்குள் படத்தின் கதையைச் சிதைக்காமல் கொண்டு வருவதையே நான் முதன்மையாகக் கண்டடைந்திருக்கிறேன்.
‘ஜகாட்’ படத்துக்கு அளிக்கப்பட்ட விருதுகளின் வழி மலேசியாவில் கவனிக்கப்படும் இயக்குநராக ஆகியிருக்கிறீர்கள். உங்கள் அடுத்த படங்களுக்கான அறிவிப்புகளுக்கு மற்ற சமூகங்களிலிருந்து எம்மாதிரியான வரவேற்பு இருக்கிறது?
சஞ்சய்: மலாய் சமூகத்திடமிருந்துதான் அதிகமான வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. மலாய் திரைத்துறையில் நன்கு அறியப்பட்ட இயக்குநர்கள், நடிகர்கள் கூட ‘உன்னுடைய திரைப்பயணத்தைக் கவனித்து வருகிறோம்’ எனச் சொல்வது ஆச்சரியமளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதே மாதிரியாக, தமிழ்ச்சூழலில் இன்னொருவரின் திரைப்பயணத்தை அறிந்து கொள்வதையோ அல்லது அதனைத் தெரியப்படுத்துவதையோ காண முடியாது. அதற்கு முதன்மை காரணமாக இருப்பது, தமிழ்நாட்டுப் படங்களை முதன்மையாக எண்ணி மலேசியத் தமிழ்ப்படங்களை இரண்டாம் தரத்தில் அணுகும் தமிழ் ரசிகர்களின் மனநிலைத்தான். இசை, சினிமா என எல்லாவற்றிலும் இப்படியான பாரபட்சமான அணுகுமுறை இருக்கிறது. மாறாக, மலாய் ரசிகர்களுக்கு அம்மாதிரியான மனநிலை இல்லை. அதனாலே, அவர்களால் மலேசியாவில் இருக்கும் திறமையாளர்களை அடையாளங் காணவும் அவர்களைப் பின் தொடரவும் முடிகிறது.
இந்த இரண்டு படங்களும் உங்களுக்கு எம்மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது?
சஞ்சய்: ஒரு வகையில், இந்த இரண்டு படங்களும் என்னைச் சோர்வாக்கிவிட்டது அல்லது என் ஆற்றலை உறிஞ்சிவிட்டது எனலாம். இன்னொரு வகையில், இந்த இரண்டு படங்களும் எனக்குள் இருந்த நிறைய காயங்களை ஆற்றியிருக்கிறது எனலாம். ‘ப்ளூஸ்’ படம் முடிக்கும்போது எனக்கும் திரைத்துறைக்கும் இருந்து வந்த விருப்பும் வெறுப்பும் கலந்த உறவை முற்றிலும் கடந்திருந்ததை உணர்ந்தேன். அந்தப் படத்தின் இயக்கப் பணிகள் முடிந்தவுடன், முகநூலில் நான் கடுமையாக நடந்து கொண்டவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் நீண்ட பதிவொன்றை எழுதியிருந்தேன். எனக்கும் இந்தத் துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் எனக்கான வழியில் பயணிக்கிறேன். நீங்களும் அவ்வாறே உங்களுக்கான பாதையில் பயணியுங்கள் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தேன். அதன் பிறகே பெரிய விடுதலையுணர்வை அடைந்தேன். அதற்கு முன்னர் மலேசியத் தமிழ்ச்சினிமாவை நான் தான் காப்பாற்றப் போகிறேன் என்ற ஆணவம் கலந்த நம்பிக்கை ஒன்று எனக்குள் இருந்தது. ‘ப்ளூஸ்’ படம் முடிந்ததும் அந்த உணர்வு எனக்குள் இருந்து அகன்றது. அந்த விடுதலையால் எவ்வித சுமையுமற்று ‘மாச்சாய்’ படத்தை இயக்க முடிந்தது. ஆக, ஒரு பக்கம் என் ஆற்றலை உறிஞ்சி சோர்வுறச் செய்தாலும் என்னுடைய இடைவிடாத கனவுகள், இலக்குகள் ஆகியவற்றிலிருந்து என்னை நிதானப்படுத்திச் சரணடையச் செய்திருக்கிறது. இப்பொழுதுதான், என்னுடைய நாற்பத்து ஐந்து ஆண்டு கால வாழ்வில் மிகப் பெரும் விடுதலை உணர்வை உணர்கிறேன். கல்வி, தொழில், கலையுலக இலக்கு என இடைவிடாத இலக்குகளால் ஆன வாழ்வில் எல்லாவற்றையும் மீள்பரிசோதனை செய்து எல்லாவற்றுக்கும் என்னை ஒப்புக்கொடுக்கும் விடுதலை உணர்வைப் பெற்றிருக்கிறேன்.
நேர்காணல்: அரவின் குமார்
படங்கள்: ம. நவீன்
நல்ல ஆழமான நேர்காணல், மலேசிய. திரைத்துறை குறித்த விரிவான ஆவணமாக கொள்ளலாம்