அப்பாவுக்குச் சென்னை பிடிக்கவில்லை

அலுவலகம் முடிந்த பின் எல்டாம்ஸ் ரோட்டிலும் நுங்கம்பாக்கம் ஹைவே டிராஃபிக்கிலும் முக்கால் மணிநேரம் லோல்பட்டு, இதற்கு நடுவில் ஒன்வேயில் மேலே ஏறிவந்த ஒரு பைக்காரனைத் திட்டிவிட்டு ஒருவழியாக அண்ணாநகர் வந்துசேரும்போது ஏற்கெனவே ஆறு முப்பது ஆகியிருந்தது. குறுகலான மாடிப்படியில் ஏறினால் குளிரூட்டப்பட்ட ஹால். சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வுக்கான கோச்சிங் வகுப்பில் சேர்ந்திருந்தேன். வரலாறு வகுப்பு. ஏற்கெனவே தொடங்கிவிட்டிருந்தது. டீயாவது குடித்துவிட்டு வந்திருக்கலாம். வயிறு கொஞ்சம் சத்தமாகவே இரைச்சலிட்டது. பக்கத்தில் அமர்ந்திருந்த சிவநேசன் திரும்பிப் பார்த்தான்.  “வகுப்பை கவனி” என்றேன். சீரியஸான முகபாவனையைத் தரித்துக்கொண்டேன்.

காலையிலிருந்தே எதுவும் சாப்பிடவில்லை. காப்பி குடித்துவிட்டு முன்னறையில் தேர்வுக்காக வேண்டி செய்தித்தாளிலிருந்து நடப்புச் செய்திகளைக் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தபோது கூப்பாடு கேட்டது. ஒரு தனிவீட்டை ஒட்டி நீண்டிருந்த போர்ஷன் எங்களுடையது. இரண்டு குட்டி அறைகள், அதில் ஒன்று ஹால், அதைத் தாண்டிச் சமையலறை. அதையொட்டி டின் ஷீட் போடப்பட்டிருந்த பாத்ரூமுக்கு வெளியிலிருந்துதான் சத்தம். 

வீட்டுக்காரம்மா இரைந்துகொண்டிருந்தாள். ”ஒரு வேட்டி துவைக்க அஞ்சி பக்கெட் தண்ணியா?” ஒரு கையில் சாம்பார் கரண்டி. வீட்டுக்காரர்களின் மெயின் போர்ஷனுக்கும் எங்களுடைய சைட் போர்ஷனுக்கும் ஒரே கொல்லைப்புறம்தான். அங்கே விரைந்த என்னிடம் கடுகடுத்தாள்.

“குடிவரப்பவே சொன்னோம். ஒரு நாளைக்கு பதினஞ்சி பக்கெட்தான்னு. அப்ப தலைய தலைய ஆட்டீனீங்க. இப்போ ஒரு துண்டத் தொவைக்க ஆறு வாளி பிடிச்சி ஊத்தறீங்க.”

”என்ன சொல்றாங்க” என்றார் அப்பா. அவருக்குச் சில காலமாகக் காது சரியாகக் கேட்பதில்லை. அவர் காதருகே வாயை வைத்துக் கேட்க வேண்டியிருந்தது. “தண்ணியை பிடிச்சி கீழே ஊத்தினீங்களா?”

“ஒரு பக்கெட்ல குளிச்சேன். இன்னொரு பக்கெட் தோய்க்கப் பிடிச்சேன்.” அப்பாவின் சன்னக் குரல் இன்னும் சன்னமானது.

வீட்டுக்காரம்மா திரும்ப வாயைத் திறப்பதற்குள் “அப்பாட்ட நான் சொல்றேங்க” என்று முடித்தேன். பேச்சை வளர்த்தினால்  வீட்டுக்காரம்மா கணக்கில் ஏற்கெனவே ஒரு வேட்டிக்கு ஐந்து பக்கெட்டிலிருந்து துண்டுக்கு ஆறு பக்கெட் ஆக மாறியது, ஒரு கர்சீப்புக்கு ஏழு பக்கெட் என்று கூடிவிடும்.  வீட்டுக்காரம்மா முட்டைக் கண்களால் முறைத்தபடி தன் போர்ஷனுக்குள் போனாள்.  

“ரெண்டு வாளி தண்ணிக்கு இத்தனை பிரச்சினையா?” அப்பா அரிசியைக் களைந்தபடி முணுமுணுத்தார். பெண்கள் இல்லாத குடும்பம். என் அம்மா போனதிலிருந்து சம்பிரதாயமான சமையல், சாப்பாடு எனக்கும் அப்பாவுக்கும் வாய்க்கவில்லை.  ஆனால் என்னை மாதிரி இல்லாமல் அவருக்குச் சமைக்கத் தெரியும்.

எனக்கு அப்பா விழுப்புரத்திலிருந்து நகர்ந்து இங்கே வந்து என்னுடன் இருப்பதைவிட வீடு என்று ஒன்று வேண்டியிருந்தது. வீட்டுச் சாப்பாடு வேண்டியிருந்தது.  மூன்று வேளையும் வெளியில் சாப்பிட்டால் என் பர்ஸுக்குச் சரிப்படுமோ சரிப்படாதோ என் அல்சர் வயிற்றுக்குச் சரிப்படாது. வயிறு தகராறு செய்தால் என்னுடைய இலக்கை அடையும் வழியில் பிரச்சினையாகிவிடும். என்னுடைய இலக்கு எப்பாடுபட்டாவது அரசாங்க வேலையில் சேர்வது. நான் வளர்ந்த சிறுநகரச் சூழலில் ஏற்பட்ட அனுபவங்கள், அவமானங்கள் அரசு வேலையை, அது தரும் அந்தஸ்தை பிரம்மாண்டமாக்கிக் காட்டியிருந்தன. சிவில் சர்விஸஸ் தேர்வை நான் எழுத நினைத்தது அதனால்தான். மற்றபடி நாட்டுக்கான பணி, சேவை எல்லாம் என் லட்சியமில்லை.

அந்தக் காலகட்டத்தில் நான் நகரத்தின் சில பேட்டைகளுக்குள் மட்டும் பெயர் தெரிந்திருந்த ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற வாசனைப் பொருட்களைப் பிற மாநிலங்களுக்குப் பிரதானமாக சப்ளை செய்யும் நிறுவனம். மலேசியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் இரண்டு மூன்று ஆர்டர்கள் கிடைத்திருந்தன.  மட்டிப்பால் வத்திக்கும் கப் சாம்பிராணிக்கும் உலகளாவிய கிராக்கி இருந்தது எங்களுக்கே ஆச்சரியம்தான்.  

சிங்கப்பூர் ஆர்டரைப் பற்றிக் கிளை மேலாளர் கொஞ்ச நாட்களுக்கு முன் உணவு இடைவேளையில் அறிவித்திருந்தான்.  மேனேஜரின் ரூம் கதவு திறந்தபோது, என்னுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த நடேசன் பழக்கதோஷத்தில் கையில் சோற்றோடு எழுந்து நின்றான்.  ஆல்பர்ட் எழுந்திருக்கப்போவதைப் போல யத்தனத்தைக் காட்டினான். அதிகாரத்துக்குப் பணிகிறோமோ இல்லையோ பணிகிறோம் என்று காட்டும் சைகையை அது எதிர்பார்க்கிறது.

நான் அசையவில்லை. அதிகாரத்துக்கு எதிராக நிற்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். கோச்சிங் வகுப்பில் நண்பர்கள் பேசிக்கொள்வதுண்டு. அதைக் கடைப்பிடிக்கும் விதமாகச் சாப்பாட்டிலிருந்து நான் கண்ணை நகர்த்தவில்லை. அதிகாரத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை எல்லாம் கவனிக்காமல் மேஜைக்கு அருகே வந்து சிங்கப்பூர் ஆர்டரைப் பற்றி முகம் மலர்ந்து தெரிவித்தான் மேனேஜர்.  நடேசனும் ஆல்பர்ட்டும் அவர்கள் பங்குக்கு நிறுவனத்தையும் மேனேஜரையும் பாராட்டினார்கள். நான் ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன்.

ஊழியர்கள் சாப்பிடும்போது வேலையைப் பற்றி நினைவூட்டக் கூடாது என்ற அறிவுகூட அந்த மேனேஜருக்கு இல்லை.  இதெல்லாம் எத்தனை நாள் என்று எண்ணிக்கொண்டேன்.  ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வில் எப்படியாவது கஷ்டப்பட்டு பாஸ் செய்துவிட்டால் அதற்குப் பிறகு நேர்காணல் மட்டும்தான். அதையும் நல்லபடி முடித்துவிட்டால் அதன்பின் வாழ்க்கை வெண்ணெய் தடவிய சாலையாகிவிடும். அதில் எனக்கே பொருத்தமான லட்சணமான பெண் ஒருத்தி அருகில் அமர்ந்திருக்க ஒரு  பெரிய காரை ஓட்டிச் செல்வேன்.

லட்சணமான பெண் என்றவுடன் புவனப்ரியாதான் அப்போதெல்லாம் மனதில் வருவாள். என்னுடன் கோச்சிங் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். என்னுடைய அந்தந்த மனநிலைக்கு ஏற்றபடி அவளைப் புவன் என்று செல்லமாகவோ ப்ரியா என்று பொது இடத்தில் அழைப்பதாகவோ கூப்பிடுவேன். கற்பனையில்தான். அவளிடம் நேரில் பேச எனக்குக் கூச்சம்.  வகுப்பில் கூடப் படிக்கும் சிவநேசன் புவனப்ரியாவுடன் உரையாடும் சமயமாகப் பார்த்து நானும் இணைந்துகொள்வேன். அந்தச் சமயத்திலும் என்னுடைய ஈர்ப்பை அவள் கண்டுபிடித்துவிடுவாளோ, அலையும் கண்ணால் மாட்டிக்கொள்வோமோ என்று பயம்.  தவிர, அவள் கவனமெல்லாம் மோகன்ராஜன் மீதுதான். எங்கள் எல்லாருக்குமே அது தெரிந்திருந்தது என்றாலும் எனக்குத்தான் அதில் ரொம்ப வருத்தம். மோகன்ராஜன் அப்படியொன்றும் அழகன் இல்லை. ஆனால்   புத்திசாலி. முதல் அட்டெம்ப்டிலேயே மெயின் தேர்வில் பாஸ் செய்திருக்க வேண்டியவன். ஆனால் இரண்டு மார்க்கில் போயிற்று. இந்த முறை அடித்துத்தூக்கிவிடுவான் என்று வகுப்பு நண்பர்கள் பேசிக்கொள்ளும்போது எனக்கு வந்த எரிச்சல் சொல்லி மாளாது. இரண்டு மார்க்காக இருந்தாலென்ன, இருநூறாக இருந்தாலென்ன தவறியது தவறியதுதானே?

ஆனால், நான் பந்தயத்துக்கே இன்னும் போகவில்லை என்பது உறுத்தாமல் இருந்ததில்லை. அதுவரையிலும் நான் சிவில் சர்வீஸஸ் தேர்வுக் களத்தில் நுழைந்ததில்லை. அப்புறம்தானே பரிசுக் கோப்பை எல்லாம். கோப்பை இல்லை, கோப்பைகள் என்று இருக்க வேண்டும். புவனப்ரியாவின் முலைகள் அத்தகையவை. அவை எனக்கானவை. புவனப்ரியா ஐ.ஏ.எஸ்.ஸின் முலைகள் எனும்போது கூடுதல் கிளர்ச்சி. சர்வ நிச்சயமாக அவை எனக்கானவை.

அன்று வகுப்பு முடிந்த பின் கட்டட வளாகத்தில் இருந்த ஜூஸ் கடையில் வழக்கம்போல சக மாணவர்கள் சிறிய கூட்டங்களாக அளவளாவத் தொடங்கியிருந்தார்கள். புவனப்ரியாவையும் கடையில் பார்க்க முடிந்தது. மோகன்ராஜனையும்தான். அங்கே போனால் நேரமாகிவிடும்.  சோர்வுடன் பைக்கை உதைத்தேன்.

அப்பாவைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டே வண்டியை ஓட்டினேன். என் முன்னால் போய்க்கொண்டிருந்த ஒரு பஸ் அதன் நிறுத்தத்தைத் தாண்டி திடீரென்று பிரேக் போட்டு நின்றது. சிலர் இறங்கினார்கள். கடைசியாக ஒருவர் இறங்கி முடிவதற்குள் கண்டக்டர் விசிலை ஊதினார். அந்த நபர் கீழே கிட்டத்தட்ட விழுந்து எழுந்து தட்டுத் தடுமாறி நின்றார். திரும்பி பஸ்ஸை ஒரு தரம் பார்த்துவிட்டு நகர்ந்தார்.

முந்தைய வாரம் அப்பா பஸ்ஸிலிருந்து இறங்கும்போதும் பஸ்காரன் அப்படித்தான் அவசரமாகக் கிளப்பிக்கொண்டு சென்றிருப்பான். அப்பாவுக்குச் சென்னையில் வசிக்கப் பிடிக்காததற்குக் காரணங்கள் இருந்தன. அதில் ஒன்று, பஸ்.  அவர் சென்னைக்கு வந்து சேர்ந்த ஒரு வாரத்திலேயே அவர் முன்பு வேலை பார்த்த கம்பெனியின் தலைமையகத்துக்குப் போக வேண்டியிருந்தது. மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து இரண்டு பஸ் மாறிப் பெரம்பூருக்குப் போக வேண்டும். துணையாகச் செல்ல எனக்கு விடுமுறை கிடைக்கவில்லை.  குழந்தைக்குச் சொல்வதைப் போல எங்கே இறங்க வேண்டும், அடுத்த பஸ்ஸுக்கு பக்கத்தில் எந்த நிறுத்தத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அப்பாவின் பயம் வேறொன்றாக இருந்தது, “சரி, எப்படி இந்தக் கூட்டத்தில் பஸ்ல நுழைஞ்சி ஏறி எறங்கறதுப்பா? நீயும் வா” என்று வற்புறுத்தினார்.  எனக்கு எரிச்சலாக இருந்தது.  நகரத்தில் அவர் டூவீலரை எடுக்கக் கூடாது, அவரால் ஓட்ட முடியாது என்று நான் சொல்லாமலிருந்தால் தானே தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பாரோ? ஆனால் இங்கே வந்த பின் அவருக்கு அடிக்கடி தலைசுற்றல் வருகிறது. கீழே விழுந்து வைத்தால் யாருக்குக் கஷ்டம்?

அப்படியும் அவர் பெரம்பூருக்குச் சென்று திரும்பும்போது பிரச்சினையாகிவிட்டது.  கோவிந்தன் சாலையில் இறங்கும்போது பஸ்ஸை கிளப்பிவிட்டதால், தடுமாறிக் கீழே விழுந்திருக்கிறார்.  பக்கத்தில் தள்ளுவண்டியில் பழம் விற்றுக்கொண்டிருந்த தம்பதி ஓடிவந்து அவரைத் தூக்கியிருக்கிறார்கள். வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து நான் வந்த பின் “அவங்க கள்ளக்குறிச்சிக்காரங்களாம்.  நம்மூர் பக்கம்தான், நல்ல கொணம். ”அப்பா தெரிவித்தார். “ஊர்ப்பெருமை விடாது” சிரித்தேன். “அப்டியில்லப்பா, நீ இங்கதானே இருக்க, இதுவும் நம்ம ஊருதான்.” அப்பா சமாளித்தார்.  

ரத்த காயத்திலிருந்து அன்று தப்பித்தாலும் இன்னொரு முறை அவர் காய்கறி வாங்க நடந்துபோகும்போது அடிபட்டுவிட்டது. பலமான அடி. மேட்லி சாலை சுரங்கப்பாதை அருகில் ஒருவன் வேகமாகத் திரும்பும்போது ஓரமாகச் சென்றவரின் காலில் ஒரு பைக்காரன் சக்கரத்தை ஏற்றிவிட்டான். கட்டைவிரல் நகம் பிய்ந்து பாதத்தில் பெரிய காயத்துடன் யாரோ கொண்டுவந்து வீட்டில் விட்டார்கள். “காட்டானுங்க, இல்ல எனக்குத்தான் இங்க நடக்கத் தெரியலயானு தெரியல.” என்னிடம் காயத்தைக் காட்டினார்.

பக்கத்தில் காய்கறி வாங்கத்தானே போகிறார் என்று நான் அசிரத்தையாகக் கூடப் போகாமல் இருந்ததனால் வந்த வினை. குழந்தையைக் கவனித்துக்கொண்டிருப்பதைப் போல அவரைச் சதா சர்வநேரமும் என்னால் கவனித்துக்கொள்ள முடியுமா? அம்மா உயிரோடு இருந்தால் அவருக்குத் துணையாக இருந்திருப்பாளோ? ஆனால் அம்மா அப்படியொன்றும் அப்பாவைக் கவனித்துக்கொண்டிருக்க மாட்டாள். இருவரையும் நான்தான் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்திருக்கும். அப்பாவுக்குச் சென்னையின் சாலைகள் பழக வேண்டும். அவர் பழக்கிக்கொள்ள வேண்டும்.  

அப்பாவை எப்படிச் சமாதானப்படுத்தலாம் என்று யோசித்துக்கொண்டே வீட்டுக்குள் நுழையும்போது மணி பத்து. பத்தரை மணிக்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்பது வீட்டுக்காரம்மாவின் பத்து கட்டளைகளில் ஒன்று.  இல்லாவிட்டால் வெளிக்கதவு பூட்டியிருக்கும்.  மாடியின் குடித்தனம் இருந்த ஒரு ஆண் நர்சுக்கு டியூட்டி பல நாட்களில் நள்ளிரவில்தான் முடியும். அவன் காம்பவுண்ட் சுவரை ஏறிக் குதித்து வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்திருக்கிறேன். மூன்றடிச் சுவர்தான். எனக்கு அப்படிச் செய்ய சங்கோஜம். அதனாலேயே பத்தரைக்குள் வந்துவிடுவேன்.

ஆனால் அந்த ஆண் நர்ஸ் அப்படிச் சுவர் ஏறிக் குதிக்கத் தேவையுமில்லை. வீட்டுக்காரம்மா அவனுடன் ஒட்டி உறவாடிப் பேசுவதை, ஏன் ஒருமுறை தற்செயல் என்பதுபோலக் கைகள் உரசிக்கொண்டதைக்கூட நான் பார்த்திருக்கிறேன். அவன் தன் பணியிடத்துக்குக் கிளம்பும்போது யாரையோ தேடுவதைப் போல வீட்டுக்காரம்மாவின் வீட்டுக்குள் பார்ப்பான். குடித்தனக்காரர்களுக்கு அவள் விதித்திருந்த பத்துக் கட்டளைகளில் ஒன்றிரண்டையாவது அவனுக்காக அவள் குறைத்திருப்பாள். பத்தரைக்குள் வந்துவிட வேண்டும் என்பது ஒருவேளை அவனுக்காக அவள் நீக்கியிருந்த கட்டளைகளில் ஒன்றாக இருந்திருக்காதோ? ஒருவேளை, அவன் மட்டும் தினமும் இருபது பக்கெட் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம் என அனுமதித்திருப்பாளோ?

கூடத்தில் அப்பா படுத்திருந்தார். ரேடியோவில் ஏதோ ஒரு பாடல் மெலிதாக ஒலித்தது. கேட்டபடியே தூங்கிவிட்டிருப்பார். அவர் டிவி பார்ப்பதில்லை. கைகால் கழுவிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தேன். சோற்றில் சின்ன சிவப்பெறும்புகள் படையாக ஏறியிருந்தன. தண்ணீரில் சோற்றை வைக்க வேண்டும் என்றுகூட அப்பாவுக்குத் தோன்றவில்லை. அல்லது ஃப்ரிட்ஜிலாவது வைத்திருக்கலாம்.  அப்பா சாப்பிட்டதாகத் தெரியவில்லை.  சோறு வடித்துவைத்த மேனிக்கு இருந்தது. அப்பாவை எழுப்பலாம் என்று நினைத்தேன். ஆனால் மீண்டும் சோறு வடிக்க வேண்டும்.  மில்க் பிக்கிஸ் பிஸ்கட் இருந்தது. இரவுக்குப் போதும்.

அப்பாவைச் சென்னைக்கு ஏன் அழைத்துக்கொண்டு வந்து  வருத்துகிறோம் என்று எப்போதாவது தோன்றும் வருத்தம் அப்போதும் தோன்றியது. அவருக்குக் கடைசிவரை கிளம்பிவர விருப்பமே இல்லாமலிருந்தது. “வேணா நீ ஒரு வீடு பாத்துக்க. நான் அப்பப்ப வந்து இருக்கேன்.” நகரத்தில் பேச்சிலருக்கு, அதுவும் சாதாரண வேலையில் இருப்பவர்களுக்கு, வீடு பார்ப்பதில் இருக்கும் சிரமம் அவருக்குத் தெரியாது. “கணேசன் பையன் சென்னைல தனியாத்தானே இருக்கான்?” என்றார். கணேசன் அவருடைய உருப்படாத ஒன்றுவிட்ட அண்ணன். ஆனால் அவர் மகன் உருப்பட்டுவிட்டான்.  “அவன் ஐடில வேலைபார்க்கறான்பா. நான் ஐடிலயா இருக்கேன்?”  அவரைச் சென்னைக்கு வரவழைத்து வைத்துக்கொள்ள விழுப்புரத்துக்குச் சென்று மணிக்கணக்காக உட்கார்ந்து பேசினேன். நகர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார்.  இனி விழுப்புரம் பக்கமே வர மாட்டேன் என்று கடைசியாக ஒரு மிரட்டல் விட்ட பின் அவர் தானாக இறங்கி வந்தார்.

நடேசன்தான் கோவிந்தன் சாலைக்கு இரண்டு தெருக்கள் தள்ளி இந்த வீட்டைப் பார்த்துக்கொடுத்தது. அப்போது இந்த ஏரியாவுக்கு அடுத்த மேற்கு மாம்பலத்தில்தான் நடேசன் குடியிருந்தான். செய்தித்தாள் விளம்பரங்களிலிருந்து குறித்துவைத்த சில போர்ஷன்கள், பிளாட்களைப் பார்த்துவிட்டுத்தான் இந்தத் தெருவுக்கு வந்தார்கள். பெயர்தான் ஜோதிமாணிக்கம் தெரு. ஆனால் குப்பைகள் எப்போதாவதுதான் எடுக்கப்படும் குறுகலான தெரு. எந்த ஆளுங்க என்று விசாரித்துவிட்டுக் குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள் வீட்டுக்காரம்மா. அப்பா, பிள்ளை இரண்டு பேர்தான் என்றதும் வீட்டுக்காரம்மா முதலில் தயங்கினாள். “அப்ப உங்க வீட்டு முறை வாரத்துக்கு மொறவாசலுக்கு யாரு கூட்டி கோலம் போடறது?” நடேசன் அதற்குப் பதில் வைத்திருந்தான். “எப்படியிருந்தாலும் மேல்வேலைக்கு ஆள் வைக்கப்போறாங்க. அவங்களயே இதையும் செய்யச் சொல்லிரலாம்மா.”

கண்டிஷன்களை ஒவ்வொன்றாகத் தெரிவித்தாள் வீட்டுக்காரம்மா. வாடகையைப் பணமாகத்தான் தர வேண்டும், ஒன்றாம் தேதிக்கு மேல் ஒருநாள்கூடத் தாமதிக்கக் கூடாது. வீட்டுக்கு விருந்தாளி வந்தால் அதிக நாள் தங்கக் கூடாது. குடித்தனங்களுக்குத் தனி மீட்டர் வைக்க முடியவில்லை, ஈபிகாரர்கள் லஞ்சம் கேட்கிறார்கள், தனி மீட்டர் இல்லாததால் ஒரு யூனிட்டுக்கு இத்தனை என்று பயன்பாட்டைப் பொறுத்துக் கணக்கு பண்ணித் தர வேண்டும். இரவு பத்தரைக்குள் வந்துவிட வேண்டும்.  மாடி போர்ஷனில் முன்பு குடித்தனம் இருந்த கணவனும் மனைவியும் தினமும் எங்கேயோ சுற்றிவிட்டு லேட்டாகத்தான் வருவார்கள். வாரத்துக்கு ஒருமுறை வெளி கேட் சாவியைத் தொலைத்து வீட்டுக்காரம்மாவின் உயிரைத்தான் வாங்குவார்கள். அப்படி நடந்துகொண்டால் சரிப்பட்டுவராது என்று தன் தரப்பு நியாயங்களுடன் நிபந்தனைகளைத் தெரிவித்தாள் வீட்டுக்காரம்மா. கடைசியாக தண்ணீர்ப் பிரச்சினைக்கு வந்தாள். போர்வெல் தண்ணீர்தான் வரும். மோட்டார் அடிக்கடி போட்டால் கரண்ட் கட்டுபடியாகாது. அது ரிப்பேரும் ஆகிவிடும். ஆகவே தினப்படி எல்லா வேலைகளையும் அவர்கள் பதினைந்து பக்கெட்களுக்குள் முடித்துவிட வேண்டும்.  

இத்தனை சட்டதிட்டங்களா என்று நான் தயங்கி நின்றுகொண்டிருந்தபோது சட்டென்று நடேசன் ஒத்துக்கொண்டுவிட்டான்.  ”ஓகேம்மா, அட்வான்ஸ் தந்துர்ரோம்.”  வீட்டுக்காரம்மா என்னைப் பார்த்து “தம்பி, நல்லா யோசிச்சி முடிவுபண்ணிக்கங்க. அட்வான்ஸ் கொடுத்துட்டா திரும்ப கிடைக்காது” என்று எச்சரித்தாள். 

நடேசன் என்னை கேட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றான். ”பதினஞ்சி பக்கெட்டுக்குள்ளனா எப்படிடா?” நடேசன் சென்னையில் ஒவ்வொரு இடத்திலும் தண்ணீருக்கு எவ்வளவு லோல்படுகிறார்கள் என்று பெரிய லெக்சர் அடித்தான். ”என்னோட மேன்ஷனிலேயே தண்ணி பிரச்சினை இல்லையே” என்றேன். நடேசன் ஒரு பெரிய எழுத்தாளரின் பெயரைச் சொல்லி அவர் இருபதாண்டுகளுக்கு முன்பே நகரத்தின் இந்தப் பகுதிகளின் தண்ணீர்ப் பிரச்சினைகளை ஒரு நாவலில் எழுதியிருப்பதாகச் சொன்னான். அந்த நாவலை என்னைப் படித்துப்பார்க்கவும் சொன்னான். “உன் இலக்கிய வியாபாரத்தை அப்புறம் பாரு. அவரு எப்போவோ எழுதியிருந்தா இப்ப என்னடா?” என்று எரிச்சல்பட்டேன். “மாம்பலம், சைதாப்பேட்டை எல்லாம் இன்னிக்கும் இப்டித்தான். இது விழுப்புரம் இல்ல, ஒனக்கு இந்த ஊரைப் பத்தி நிறைய விஷயம் தெரில,” அவனும் கடுகடுத்தான். ”இங்க பாரு, நாம நோட் பண்ணி வச்சிருந்த லிஸ்ட்டில் இதான் லாஸ்டு. உனக்கு பிடிக்காட்டி நாம ப்ரோக்கர்ட்ட போகலாம்.” ப்ரோக்கர் என்றவுடன் எனக்கு பக்கென்றது. யார் ஒரு மாச வாடகையை அந்த ஆளுக்கு அழுவது? அந்த வீட்டுக்கு நாங்கள் குடித்தனம் வந்தது அப்படித்தான்.

விழுப்புரத்திலிருந்து என்னுடைய அம்மா, அப்பாவின் முப்பத்தைந்து வருடக் குடும்ப வாழ்க்கையின் முக்கால் லாரி தட்டுமுட்டுச் சாமான்களோடு இறங்கினோம். இரண்டு பெரிய இரும்பு பீரோக்கள், ஒரு மர பீரோ, இரண்டு கட்டில், ஒரு மேஜை, இரண்டு பெரிய பித்தளை தவலைகள், ஒரு பெரிய அண்டா. தவலைகளையும் அண்டாவையும் விழுப்புரத்திலேயே எடைக்குப் போட்டுவிட்டு வந்திருக்கலாம். ஆனால் அப்பா ஏற்றுக்கொள்ளவில்லை. அம்மா போன பின்னர் அப்பா சமைக்கத் தொடங்கியிருந்தார். அம்மாவைப் போல அவருக்கும் பாத்திரங்களோடு ஒட்டுதல் வந்துவிட்டதோ என்னவோ. ஆனால் தவலைகளையும் அண்டாவையும் வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார் என்று எனக்குப் புரியவில்லை.  அவற்றை நானும் நடேசனும் பரணில் ஏற்றினோம்.

கொஞ்ச காலம் புது வீட்டில் பிரச்சினையில்லாமல் போனது. நாங்கள் வந்து இறங்கிய அன்று வீட்டுக்காரம்மா டீகூடப் போட்டுத்தந்தாள். ஆனால் அதன் பின் ஏனோ அவள் சுபாவம் மாறிவிட்டது. சிடுசிடுக்கத் தொடங்கினாள்.  குடிவந்த முதல் மாதம் எங்கள் வீட்டு முறைவாயில் வாரத்தில் மேல்வேலைக்கு ஏற்பாடு செய்த ஆள் ஒரு நாள் வரவில்லை.  “அது வரலனா நீங்கதான் வேற ஏற்பாடு பண்ணனும்.” வீட்டுக்காரம்மா அலுத்துக்கொண்டாள். அவள் வீட்டில் வேலை செய்யும் ஆயாவிடம் சொல்லி வாசல் தெளித்துக் கோலம் போட்டிருக்கலாம். ஆனால் எங்களுக்கு உதவக் கூடாது என்கிற மாதிரி ஏனோ இருந்தாள்.  எங்கள் வீட்டில் பெண்கள் யாராவது இருந்திருந்தால் ஒட்டுறவைக் காட்டியிருப்பாளோ?

அடுத்த மாதம் வாடகையை வீட்டுக்காரர்களிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு நான் அலுவலகத்துக்குச் சென்றேன். ஆனால் அப்பா மறந்துவிட்டார். அடுத்த நாளும் அவர் மறதி நீடித்தது. மூன்றாம் தேதி வீட்டுக்காரம்மா கதவைத் தட்டி வாடகையைக் கேட்டாள்.  “வாடகைக்கு விடறப்பவே ஒன்னாந்தேதி தரணும்னு சொன்னோமே?” அருகில் நின்றுகொண்டிருந்த அப்பா என்னிடம் கேட்டார், “என்ன சொல்றாங்க?”

வீட்டுக்காரம்மா குத்திக்காட்டியது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவளிடம் காட்ட முடியாத எரிச்சலை என் அப்பாவிடம் காட்டினேன். அன்றைக்குத்தான் அப்பாவுக்கு முதன் முதலாகத் தலைச்சுற்றல் வந்தது. சோற்றை வடித்துவைத்துவிட்டுப் படுத்துவிட்டார்.  அதன் பிறகு அடிக்கடி வர ஆரம்பித்தது.

“உங்க அப்பா காலம்பறவே சத்தமா ரேடியோ வைக்கிறாரு. படிக்க முடியல.” வீட்டுக்காரம்மாவின் மகன் ஒரு நாள் காலையில் வந்து சொன்னான்.  “என்ன சொல்றாரு?” என்று என்னிடம் கேட்டார் அப்பா. ரேடியோ வால்யூமை குறைத்துவைக்க வேண்டும் என்று அவர் காதருகே சென்று கூறினேன்.  அப்பா, இனிமேல் ரேடியோ வால்யூமைக் குறைத்துவைக்கிறேன் என்றார் வந்தவனிடம். பின்னாலேயே வீட்டுக்காரம்மா வந்து அப்பா ரேடியோவைச் சத்தமாகவைப்பது பற்றி கோபமாகக் குறை கூறினாள். “ஒரு தரம் சொன்னா தெரிய வேணாமா? அடுத்தவங்களப் பத்தி அக்கறை வேணாமா?”

அப்பா என் முகத்தைப் பார்த்தார், “என்ன சொல்றாங்க?”  

வீட்டுக்காரம்மா காட்டிய ஆத்திரத்தை அப்பாவிடம் அப்படியே நான் காட்டினேன். அவள் வார்த்தைகளை அவரிடம் சொன்னேன். சக மனிதர்களைப் பற்றி அவருக்கு அக்கறையே இல்லை, அம்மாவிடமும் அப்படித்தான் இருந்தார், அவள் இருந்தவரை அவளுக்குக் கஷ்டம் தந்தார், இப்போது எனக்குக் கஷ்டம் தருகிறார். இப்படி அவர் இருந்தால் நான் எப்படி வேலைக்குப் போவது, தேர்வு எழுதுவது, அதெல்லாம் தொலையட்டும், அவருக்கு முன்னால் அம்மா போய்ச்சேர்ந்துவிட்டாள், இப்படி அவரால் தினம் ஒரு தொல்லை என்று வந்தால் ஸ்ட்ரெஸ்ஸில் நானும் போய்ச் சேர்ந்துவிடுவேன், அப்புறம் அவர் தனியாகக் கிடந்து அல்லாட வேண்டியதுதான். நான் பேசியது அவர் காதில் விழுந்து புரிந்ததோ இல்லையோ, அப்பா என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். பல்லைக் கடித்தபடி அவர் முகத்தில் அறைவதைப் போல ஹால் கதவை அடித்துச் சாத்தி அறைக்குள் நுழைந்துகொண்டேன்.

அதற்குப் பிறகு அவர் காலையில் ரேடியோ வைப்பதையே நிறுத்திக்கொண்டார். இரவில் மட்டும் காதருகே வைத்துக்கொள்வார். முன்னறையில் இருக்கும் எனக்கே என்ன பாடல் என்று கேட்காது. தூக்கம் வருவதற்காக ஒரு பழக்கத்தில் காதுக்கு அருகில் ரேடியோவை வைத்துக்கொள்கிறார்; அவ்வளவுதான். அன்றுவரைக்கும் என்னால் அவரை டாக்டரிடம் அழைத்துச் செல்ல முடியவில்லை. ஒரு ஹியரிங் எய்ட் வாங்கித்தர முடியவில்லை. அவர் தலைச்சுற்றலுக்கு ஒரு வழி செய்ய முடியவில்லை. அலுவலகமும் கோச்சிங்கும் என்னைப் பக்கத்துக்கு ஒன்றாய்ப் பிடுங்கித் தின்றன.

அன்றிரவு எனக்குப் படிக்க ஓடவில்லை. பசி ஒருபுறம். காலையிலாவது அப்பாவைக் கொஞ்சம் சமாதானப்படுத்த வேண்டும் என்ற யோசனை இன்னொரு புறம். அன்றும் வழக்கம் போல கனவில் மோகன்ராஜன் வண்ணக் காகிதங்கள் ஒட்டப்பட்ட தக்கை போன்ற சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தான். என்னை ஏதோ வேலை செய்யச் சொல்லி ஏவிக்கொண்டிருந்தான். கனவில் புதிய வரத்தாக அவன் பக்கத்தில் வீட்டுக்காரம்மா கையில் ஒரு கரண்டியுடன் உட்கார்ந்திருந்தாள். இல்லை, அது புவனப்ரியா. அவள் கையில் ஒரு பரிசுக் கோப்பை. நான் ஏதோ சொல்ல புவனப்ரியா கோப்பையை என் மேல் விட்டெறிந்தாள். அப்பா அப்போது அங்கே வந்தார். பதினைந்து வாளி பிடித்தவுடன் சிங்கப்பூர் போகிறோம், மன்னித்துவிடுங்கள் அரசே என்றார் அப்பா. மோகன்ராஜன் பதில் சொல்வதற்குள் பொழுது விடிந்துவிட்டது.

காலையில் அப்பா எதையும் காட்டிக்கொள்ளவில்லை. வழக்கம்போலக் காப்பி போட்டு எடுத்துக்கொண்டுவந்து தந்தார். உருளைக்கிழங்கு வறுக்கட்டுமா என்று கேட்டார். அவர் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. அலுவலகத்துக்குக் கிளம்பும்போது அவரிடம் உரக்கச் சொன்னேன்.  ”வடபழனி கோயிலுக்குப் போகணும்னீங்களே. நாளைக்குப் போயிரலாம். லீவுதான்.” அவர் முகம் சற்று மலர்ந்தது.

அந்த வாரக் கடைசியில் நடேசனும் நானும் ஒரு படத்துக்குப் போகத் திட்டமிட்டிருந்தோம். சிம்ரன் நடித்திருந்த ஜோடி. நடேசனுக்கு அசோகமித்திரன் எந்த அளவுக்குப் பிடிக்குமோ அதே அளவுக்கு சிம்ரனையும் பிடிக்கும். ஆனால் வெளியே காட்டிக்கொள்ள மாட்டான். கௌரவக் குறைச்சலாம். எனக்கு ஐஏஎஸ் மெயின் தேர்வு நெருங்கிவிட்டிருந்தது என்பதால் சினிமா வேண்டுமா என்று முதலில் தயங்கினே.  “இருக்கட்டும்டா, ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் வேணும்,” என்றான் நடேசன்.

எங்கள் திரைப்படத் திட்டம் எங்களிடம் வீட்டுக்காரம்மா நடந்துகொண்ட விதத்தால் ரத்தானது. என் அப்பா வீட்டுக்காரம்மாவைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் என்னிடமாவது குறை சொல்லியிருந்திருக்கலாம். அவரோ எதுவும் நடக்காததுபோல அட்ஜஸ்ட் செய்துகொண்டிருந்தார். அது எனக்குத் தாங்க முடியாமல் இருந்தது. அவர் மனதுக்குள் நொந்துபோயிருப்பார், அவருக்குக் கொஞ்சமாவது ஆறுதலாக இருக்கட்டும் என்று அந்த வாரம் வடபழனி கோயிலுக்கு முதன் முறையாக அப்பாவை அழைத்துச் சென்றேன். அப்பாவுக்கு ஏக திருப்தி.  “நல்ல தரிசனம்டா” என்று சிலாகித்தார். 

கோயிலுக்குச் சென்றது பலன் கொடுத்தது போலத்தான் இருந்தது. அந்த வாரம் நன்றாகவே தொடங்கியது. அலுவலகத்தில் சிங்கப்பூர் ஆர்டர் கிடைத்ததில் என்னுடைய பங்களிப்புக்காகச் சொற்பச் சம்பள உயர்வை அறிவித்தார்கள். வகுப்பில் ஒரு கேள்விக்கு விளக்கமாகப் பதிலளித்தபோது என் பக்கமாகத் திரும்பி புவனப்ரியா புன்னகையைப் பரிசளித்தாள். அன்று வகுப்பு முடிந்தவுடன் என் அலுவலகத் தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கிக்கொண்டாள்.  மோகன்ராஜனும் அப்போது இருந்தான். அவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.  இருவரும் சாதாரணமான நண்பர்கள்தானோ என்ற சாத்தியம் சந்தோஷமாக இருந்தது.

சனிக்கிழமை காலை மீண்டும் பின்கட்டிலிருந்து கூப்பாடு.  வாசலில் நின்றுகொண்டிருந்த நான் ஓடிச் சென்றேன். அப்பா ஈரத்துண்டுடன் நின்றுகொண்டிருந்தார். “நேத்திதான் மோட்டார வேற ரிப்பேர் செஞ்சோம். நீங்களானா போர்வையைத் தொவைக்க பத்து பக்கெட் பிடிக்கறீங்க. தண்ணி சும்மா வருதா.” அப்பா தன்னுடைய மெல்லிய காட்டன் போர்வையைத் தோய்த்துப் பிழிந்து குழாயின் மேல் தொங்கப் போட்டிருந்தார். நிறுத்தாத குழாயிலிருந்து தண்ணீர் சிந்தியது.

அப்பாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.   அப்பாவை விட்டுத்தரக் கூடாது. அதுவும் இவளிடத்தில்.  அப்பாவுக்கும் காதில் விழ வேண்டும் என்று உரக்கக் கேட்டேன், “போர்வை தொவைக்கக் கூடாது என்று நீங்க சொல்லலியே.”

“அதை வேற தனியா சொல்லணுமா? பதினஞ்சி பக்கெட்ல போர்வையை எப்படி தொவைக்க முடியும்? அதெல்லாம் சலவையில போடணும். ஒண்ணொண்ணையும் சொல்வாங்களா?”

“நீங்க போட்ட கண்டிஷனே அதிகம். இங்கு வந்து நிம்மதியே போச்சு.”

என் வாய் அசைவைப் பார்த்த அப்பா “சும்மா இருடா” என்றார்.

”இங்க நிம்மதி இல்லனா எதுக்கு இருக்கீங்க? வேணும்னா வேற வீடு பாத்துட்டு போலாமே.”

”உங்க ஒரே வீடுதான் சென்னைல இருக்கா?”

“அப்ப போயிருங்க. ஒங்கள யாரு தடுத்தாங்க?”

சட்டென்று வீட்டுக்காரம்மா பாத்ரூமுக்குள் நுழைந்தாள். குழாயின் மேல் தொங்கவிட்டிருந்த போர்வையை எடுத்துக் கீழே விசிறினாள். குழாயை மூடினாள். பாத்ரூமிலிருந்து வெளியே வரும்போது நிலைப்படிக்கருகே அப்பாவின் அடிபட்ட கால் விரலை மிதித்துவிட்டிருப்பாள்போல. அப்பா வலியில் கத்தினார்.

“பொம்பளையா நீ?” ஆத்திரத்தில் ஏதோதோ கூறினேன்.  ”போதும்பா” அப்பா என்னை உள்ளே அழைத்துச் சென்றார்.

என் பொறுமை எல்லை கடந்துவிட்டிருந்தது. அந்த வீட்டிலிருந்து போய்த் தொலைந்துவிட வேண்டும். அன்றும் அடுத்த நாளும் பிசாசாக அலைந்து  வீடு பார்த்தேன். நடேசனும் கூடவே அலைந்தான். தான் பார்த்துக்கொடுத்த வீட்டில் இப்படி நடந்துவிட்டதே என்று அவனுக்கு வருத்தம். துரதிர்ஷ்டத்திலும் எப்போதேனும் தென்படும் அதிர்ஷ்ட ரேகையாக ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் கே.கே. நகரில் ஒரு அபார்ட்மெண்ட் கிடைத்தது. நல்லவேளை, வீடு காலியாக இருந்தது. வாடகை அதிகம்தான். ஆனால் வீட்டுக்காரர்கள் அருகில் இல்லை, பெங்களூரில் வசிக்கிறார்கள் என்பதே போதுமானதாக இருந்தது. நானும் நடேசனும் வீட்டுக்காரர்களுக்கு ஃபோன் போட்டோம். அப்பாவிடம்கூடத் தெரிவிக்காமல் அவர்கள் சாவி கொடுத்திருந்த வீட்டுக்குப் போய் அட்வான்ஸ் கொடுத்தோம். அதில் பாதிப் பணம் நடேசன் வட்டிக்கு ஏற்பாடு செய்தது. அன்றிரவே புது வீட்டுக்குக் குடிபோக ஏற்பாடு செய்தோம்.

இரவு ஒன்பது மணிக்கு வீட்டு வாசலில் லாரி வந்து நிற்கும்வரை வீட்டுக்காரம்மாவுக்கு நாங்கள் வீட்டைக் காலிசெய்யப்போவது தெரியாது. அவள் எங்கள் போர்ஷனுக்குள் வந்து அரை மணிநேரம்,  வீட்டு வாசலில் சற்று நேரம், பின் நடுத்தெருவில் நின்று நீண்ட நேரம் கத்தினாள். “ஒரு வார்த்தைக்குக் கிளம்பிருவீங்களா?” “வேற வீட்டுக்குப் போனாத்தான் அருமை தெரியும்” “அட்வான்ஸ் எல்லாம் திரும்பக் கிடைக்காது, போ, போ.”   நடேசன் பக்கபலமாக நின்றான். அவன் மேற்பார்வையிட லாரியில் வந்த ஆட்கள். சாமான்களை ஏற்றி வைக்கத் தொடங்கினார்கள்.

அப்பாவை என் வண்டியில் ஏற்றிக்கொண்டு புதுவீட்டில் விட்டுவிட்டு வந்தேன். வரும் வழியில் ஒரு கடையில் நின்று க்ரேயான் குச்சிகளையும் வாங்கிக்கொண்டு வந்தேன். ”அவட்ட மல்லுக்கு நிக்காம சாவியக் கொடுத்துட்டு வா” என்றான் நடேசன். லாரிக்கு முன்னால் வழிகாட்டுவதற்காக அவனும் கிளம்பினான்.

நாங்கள் இருந்த போர்ஷனில் சுவரில் கிறுக்குவதற்குப் பத்து நிமிடங்களுக்கு மேல் நேரம் பிடிக்கவில்லை. கூதிமுண்ட என்பது அங்கே ஒரு பெண் படத்தை வரைந்து அதற்கு அருகே எழுதிய பல வார்த்தைகளில் சற்று நாகரீகமான வார்த்தைகளில் ஒன்று. அந்த ஆண் நர்ஸ், பாவம்தான் ஆனால் ஊதா நிறக் கிரேயானில் அவன் நிர்வாணக் கோமாளியாக அழகாகவே இருந்தான்.

போர்ஷனைப் பூட்டிவிட்டுச் சாவியை ஒப்படைக்க அவர்கள் வீட்டு வாசலில் நின்றபோது திரும்பவும் கத்த ஆரம்பித்தாள் வீட்டுக்காரம்மா. அவள் கணவன், “அதான் போறாங்க இல்ல, விடு” என்றபடி சாவியை வாங்கிக்கொண்டார். அங்கிருந்த நாட்களில் அவர் பேசி நான் கேட்டது அதுதான் முதன் முறை. ”போர்ஷனை செக் பண்ணிட்டு வாங்க, குப்பையா நாசம் பண்ணியிருப்பாங்க.” அவரை பதிலுக்கு அதட்டினாள்.

நான் எதிர்பார்த்ததைப் போலவே வீட்டுக்காரம்மா பன்னிரண்டாயிரம் அட்வான்ஸைத் திரும்பத் தரவில்லை. அது திரும்ப வராது என்று எனக்குத் தெரியும். ”ஒழைச்ச காசு, நம்மள விட்டு போயிராது” என்றார் அப்பா நம்பிக்கையுடன்.  ”ஆனா தயங்காம நீ போயிக் கேக்கணும்” என்று என்னை வற்புறுத்தினார். நான் போக விரும்பவில்லை. அதற்குக் காரணம் இருந்தது.

புதுவீட்டை ஒழுங்குபடுத்த ஒரு மாதம் பிடித்தது. அதற்குள் மெயின் தேர்வு வந்துவிட்டது. ஆனாலும் நன்றாகத்தான் எழுதினேன். அல்லது அப்படி நினைத்துக்கொண்டேன்.  எத்தனை மதிப்பெண்ணில் நேர்காணல் வாய்ப்பைக் கோட்டைவிட்டேன் என்றுதான் தெரியவில்லை. யு.பி.எஸ்.சி. மார்க் ஷீட் முன்பு குடியிருந்த வீட்டு முகவரிக்குத்தான் போயிருந்திருக்கும். “கிழிச்சிப் போட்டிருப்பாங்க, மனுஷங்களா அவங்க!” அப்பாதான் என்னைவிடவும் வருத்தப்பட்டார்.  “நீதான் போயி லெட்டர் வந்திருக்கான்னு கேளேன். என்ன மார்க் எடுத்திருக்கேன்னு தெரிஞ்சா அடுத்த தரம் நல்லா எழுதி பாஸ் பண்ணலாம்லே.” பேசாமல் இருந்தேன். சிவில் சர்விஸில் என் ஆர்வம் வற்றிவிட்டிருந்தது.

அப்பாவுக்குச் சென்னை, அதன் பஸ்கள் பற்றிய பயம் கொஞ்சம் குறைந்திருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் அடுத்த மாதமே ஏன் அவராகவே அந்த வீட்டுக்குப் போய் எனக்கு வந்திருக்க வேண்டிய  தபாலைக் கேட்கப்போகிறார்?  முன்கூட்டி என்னிடம் சொல்லியிருந்தால் அவரை நிச்சயம் தடுத்திருப்பேன்

அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தபோது ”அங்க போனேன், உன் பேருக்குத் தபால் எதுவும் வர்லனு சொன்னாங்க” என்றார். “அங்க ஏன் போனீங்க?” என்று கேட்டேன். இல்லை, முணுமுணுத்தேன். கல்லாக உறைந்திருந்த அவர் முகம் மேற்கொண்டு என்னைப் பேசவிடவில்லை.

அடுத்த நாள் அப்பா இரண்டு பைகளோடு என் முன்னால் வந்து நின்றார். “சென்னை பிடிக்கலப்பா, ஊருக்கே போயிடறேன்” என்றார். எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.  ஆனால் அடுத்த வினாடியில் பைகளுடன் வாசலுக்குப் போய் நின்றுவிட்டதில் அவர் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தது புரிந்தது. அவரை பஸ் ஏற்றிவிட கோயம்பேடுக்குச் சென்றேன். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தவரிடம் ”எங்க போய் தங்குவீங்க” என்றேன். “பாத்துக்கலாம்” என்றார் எங்கோ பார்த்தபடி. பஸ் கிளம்பும்வரை அவரிடமிருந்து மற்றொரு வார்த்தை வரவில்லை.

பெருந்தேவி 

2 comments for “அப்பாவுக்குச் சென்னை பிடிக்கவில்லை

  1. September 3, 2025 at 10:04 pm

    தன் மீது இவ்வளவு பெரிய பிழையை ஏந்திக்கொண்டு வீட்டுக்காரம்மா வாடகைக்கு வந்தவர்களிடம் இப்படியெல்லாம் பாய்ந்திருக்கக் கூடாது. மல்லாந்து துப்பிக் கொள்வது போலத்தான் அது. கதைசொல்லிக்குக் கிரயோன் வாங்கிவந்து சுவரில் வரையும் அளவுக்குத் தொந்தரவு கொடுத்திருக்கிறாள். அவளின் கணவன்தான் என்ன பாவம் செய்தார். அந்த அஜந்தா ஓவியத்தைக் கண்ணால் பார்க்கவேண்டி வந்துவிட்டது.

  2. September 3, 2025 at 10:10 pm

    எல்லா உபரிக் காரணங்களையும் தாண்டி அப்பாவுக்குச் சென்னையைப் பிடிக்காமல் போனதற்கு முக்கிய காரணம் அவர் மகள் பெயரில் ஏதும் தபால் வந்திருக்கிறதா என்று வீட்டுக்காரம்மாவைப் பார்க்கப் போனதுதான்.

Leave a Reply to கோ.புண்ணியவான்Cancel reply