வெறி நாய்களுடன் விளையாடுதல் : குழந்தை மனமும் மனிதமும்

பூங்குழலி கட்டுரைம.நவீனின் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பத்து ஆண்டுகளுக்கு மேல் நவீனின் கவிதைகளுடன் எனக்கு பரிச்சயம் இருக்கிறது. தொடர்ந்து நான் கவிதைகளோடு பயணிப்பதற்கு நவீனும் நவீனுடைய கவிதைகளும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் நான் எப்போதும் உணர்ந்தே வந்திருக்கிறேன். அந்த வகையில் நவீனின் நட்புக்கு எனது அன்பினைத் தெரிவித்துக் கொண்டு இந்த தொகுப்பில் என்னைக் கவர்ந்த சில கவிதைகள் குறித்து பேசவிருக்கின்றேன்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் நவீனின் கவிதைகள், சமகால இலக்கிய புரிதலை வெளிகாட்டுபவையாக அந்த காலகட்டத்தின் சிக்கலைப் பேசுபவையாக இருந்திருக்கின்றன. இந்தத் தொகுப்பும் இன்றைய சமகால சிக்கலையே பேசுகின்றன. நவீனோடு தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு அந்த சிக்கல்கள் மிகத் தெளிவாக விளங்கும். புதியவர்களுக்கு அந்தச் சிக்கல்கள் புதியதாய் இருக்கலாம். ஆனால் எல்லாம் விளங்கிக் கொள்ள கூடிய சிக்கல்களாக மிக எளிய மொழியிலேயே சொல்லப்பட்டிருக்கின்றன.

இத்தொகுப்பில் என்னை அதிகம் கவர்ந்தவள் மாயாதான். அவள் குறித்த ஒவ்வொரு கவிதையும் மிக நெருக்கமாக நம் அருகே நின்று நம்மிலிருந்து தொலைந்துபோய்விட்ட மாயாவை ஒரு சில நொடிகள் மீண்டும் நம்முள்ளே நிறுவிக் காட்டுகின்றன. யார் இந்த மாயா? இதே கேள்வியைத்தான் பாலமுருகனும் இந்த கவிதை நூலின் முன்னுரையில் கேட்டிருக்கிறார்.

எல்லார் மனதிலும் மாயா வெறும் பிம்பமாக மட்டுமே இருக்கிறாள். எல்லாருக்கும் குழந்தைகளைப் பிடிக்கும். ஆனால், எப்படி பிடிக்கிறது என்பதுதான் இப்போது இருக்கிற ஒரே ஒரு சிக்கல். கணினி திரைகளில், அறைச் சுவர்களில் வெள்ளை கொழு கொழு குழந்தைகளின் படங்களை வைத்திருப்பவர்களுக்குக் குழந்தைகளை அதிகம் பிடிக்கும், அவர்கள் குழந்தைகளை புரிந்து வைத்திருப்பவர்கள் என்கிற புரிதல் மிக அபத்தமானது. இவர்களால் படங்களில் உள்ள குழந்தைகளை இரசிக்க முடிவதுபோல் நேரில் நடமாடித் திரியும் குழந்தைகளை இரசிக்க முடிவதில்லை.

என்னைப் பொறுத்தவரை மாயா என்பவள் நம்மால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும்,  குழந்தைமையை தொலைத்துவிட்டு சீக்கிரம் பெரிதாகும்படி வளர்க்கப்படும் குழந்தைகளின் பிரதிநிதி என்பேன். ஒரு குழந்தையை ஒரு குழந்தையாக கொண்டாட பழக வேண்டும் என்பதை மாயா குறித்த கவிதைகள் நமக்கு மீண்டும் மீண்டும் சொல்கின்றது. குழந்தையும் கடவுளும் ஒன்றென்பவர்கள்தான் குழந்தைகளை குழந்தைகளாக வாழ விடாமல் தொடர்ந்து இம்சிக்கிறார்கள். தங்கள் கனவுகளை, துயரங்களை, நிறைவேறாத ஆசைகளை குழந்தைமீது திணிக்கிறார்கள். குழந்தை என்பது தனியொரு பிரதி என்பதை உணராமல் தங்கள் பிரதியாக மட்டுமே அவர்கள் வளர வேண்டும் என்பதில் முழு முனைப்புடன் இருக்கிறார்கள்.

ஆனால், குழந்தைகளின் உலகம் என்பது வேறு என்பதை நவீன் நிறுவுகிறார். இன்றைய காலகட்டத்தில் அந்த உண்மையை எல்லார் செவிகளிலும் அறைந்து சொல்ல வேண்டியிருக்கிறது. குழந்தைகளின் பிரதேசத்தில் குழந்தைகளின் மனதோடு பயணித்து அதனை மொழியாக்கி நவீன் நமக்கு தந்துள்ளார். குழந்தைகளின் மனதை மொழியாக்குதல் அத்தனை எளிதன்று.

சிறிதினும் சிறிதான துவாரத்தின் வழி காண்கின்ற பொழுது துவாரத்தின் அப்பால் விரிந்திருக்கும் ஓர் ஏகாந்த வெளியில் மாயா நம்மை உலவ விடுகிறாள். டைனோசர் சுறா மீன்கள் வளர்வதாக கூறுகிற பொழுது அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நம்மையும் ஏங்க வைக்கிறாள். நீ என்ன தான் பெரிய படிப்பெல்லாம் படித்தாலும் தான் ஏபிசிடிக்கு இறங்கி உங்களால் வர முடியுமா என சவால் விடுகிறாள். மிட்டாய் வாங்காமல் பணத்தைத் திருப்பி தருகிற மனிதநேயம் போதிக்கிறாள். ‘நம்ம வீடு கட்டுன இடத்தில் முன்ன எத்தன மரங்கள் இருந்ததென்று’ கேட்கின்ற பொழுது குற்றவாளியாகி நம்மை தலைகுனிய வைக்கிறாள். அதிர வைக்கிறாள். அசர வைக்கிறாள். எல்லாம் செய்கிறாள் மாயா.

நவீனின் கவிதை மொழி செய்யும் அற்புதம் இதுவென நான் நினைக்கிறேன். ஆனால் மாயா கொஞ்ச தூரமே வருகிறாள் என்பதில் எனக்கு வருத்தம் இருக்கிறது. மாயா குறித்து இன்னும் பேசியிருக்கலாம்.

நமது பல தவறுகள்குற்றவுணர்வுகளுக்கிடையில் மிக மோசமானது குழந்தைகளை கைவிடுதலாகும் – அவர்களின் வாழ்விற்கான தேவையைப் புறக்கணிப்பதாகும். நமக்கான தேவை என்பவை காத்திருக்கலாம். குழந்தையால் அது இயலாது. அவர்களின் எலும்புகளும் இரத்தமும் சிந்தனையும் இப்போது உருபெறுகின்றன. அதற்கு நாம் நாளை என்று சொல்ல  முடியாது.அதன் பெயரோ இன்று”  என்கிறார் கேப்பிரியல் மிஸ்டிரல். இவர் நோபல் பரிசு பெற்ற கவிஞர் ஆவார். குழந்தைகள் எந்தளவிற்கு முக்கியமானவர்கள் என்பதை இந்த கவிதை உணர்த்துகிறது.

நவீனின் இந்தத் தொகுப்பு வாசிப்பனுவத்திற்கு ஏற்றது. சிக்கலற்ற மொழியால் ஆனது. நவீன் நம்முன் கொண்டு வந்து நிறுத்தும் மாயாவைப் படிக்கிற பொழுதாவது நாம் குழந்தைகளாக மாற வேண்டும். அப்போதும் நமது மனமும் மனிதமும் துருப்பிடிக்காமலும் துயர் பிடிக்காமலும் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

1 comment for “வெறி நாய்களுடன் விளையாடுதல் : குழந்தை மனமும் மனிதமும்

  1. mini
    April 8, 2014 at 9:05 am

    ஜெயமோகன் மூலம் வல்லினம் நுழைந்தேன். அற்புதமான கட்டுரையைக் கண்டேன் . மகிழ்ச்சி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...