கே.பாலமுருகன் கவிதைகள்: நசுக்கப்பட்டவர்களின் அழகியல்.

07நாவல், சிறுகதை, கட்டுரைகள் போன்ற இலக்கிய படைப்புகளை விமர்சிக்கும் அதே பாணியில் கவிதையையும் அணுக முடியும் என்பது எனக்கு சரியாக படவில்லை. காரணம் சிறந்த கவிதைகள் யாவுமே பன்முகத்தன்மை கொண்டனவாகவே உள்ளன. இதன் காரணமாகவே நமது பண்டை கவிதைகளும் கால மாற்றத்திற்கு ஏற்ப புதுப்புது விளக்கங்களை தந்த வண்ணம் உள்ளன. தமிழ் இலக்கிய மரபிலும் கவிதைகளுக்கு பதவுரையும் பொருளுரையும் எழுதுவது, வாசகன் கவிதையின் பொதுவான கருத்தை அல்லது விளக்கத்தை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தோடுதான். ஆயினும் அந்த விளக்கங்கள் முடிவானவை அல்ல என்பதும் வாசகனின் அனுபவத்திற்கும் அறிவிற்கும் ஏற்ப அவை அமைபவை என்பதும் உண்மை. சங்க இலக்கியப் பாடல்கள் முதல் திருக்குறள் வரை இதுவே பொதுவான நிலையாக இருக்கின்றது.

நான் கே.பாலமுருகனின் கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகளையும் விமர்சனம் என்ற பூதக்கண்ணாடியை வைத்து ஆய்ந்து அறிந்து கூறி ஆகப்போவது ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன். மாறாக, ‘தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்’ என்னும் இந்த கவிதை தொகுப்பில் பயணம் செய்ததால் எனக்கு ஏற்பட்ட உணர்வுகளையும் அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதே சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு கவிதை நூலை வாசிப்பதன் நோக்கம், அக்கவிதைகள் முன்வைக்கும் அரசியலையும் அழகியலையும் கவித்துவ தளத்தில் நின்று உரையாடப்படுவதிலேயே நிறைவடைகிறது.

ஆகவே இக்கட்டுரை, கே.பாலமுருகனின் ‘தூக்கில் இடப்பட்டவர்களின் நாக்குகளிலால்’ எனக்கு ஏற்பட்ட தாக்கங்களையும் புரிதல்களையும் அடிப்டையாக கொண்டவை மட்டும்தான். இக்கவிதைகள் பற்றி பேசுவதற்கு முன் மலேசிய தமிழ் கவிதை துறை குறித்த எனது பார்வையை சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.

யாப்பை அடிப்படையாக கொண்ட மரபு கவிதைகளின் தாக்கத்தில் இருந்து மலேசிய கவிதைகள்  வெளிவந்து நீண்ட நாட்கள் ஆகின்றன. இலக்கிய மறுமலர்ச்சி காலம் புதுக்கவிதை வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வளர்த்து விட்டது. கவிதைகளுக்காக வகுக்கப்பட்ட சட்டகங்களை மறுத்து வெளியே வந்தாலும் புதுக்கவிதைகள், வாசக சமூகத்தின் பொதுபுத்திக்கு  உட்பட்ட கருத்துகளையும் உணர்ச்சிகளையும் மட்டுமே பேசக்கூடியவையாக இருந்து வந்துள்ளன. அன்பு, நட்பு, காதல், தாய்மை, பெண்ணியம், புனிதம், தெய்வீகம் போன்ற சமுதாய அறங்களை அவை கேள்விக்கு உட்படுத்துவதில்லை. மாறாக பல்வேறு உவமைகளின் வழி அவற்றை மறு உறுதிபடுத்தவும் வளர்க்கவும் முயல்கின்றன.

புதுக்கவிதைகளின் வளர்ச்சி காலத்தின் மத்தியில் தோன்றி வளர்ந்த ஹைக்கூ கவிதைகள் கடுமையான சொல் சிக்கனத்தையும் உலக இயல்புகளை மீள்பார்வை செய்வதன் வழி வாசகனுக்கு திடீர் அதிர்வை கொடுப்பனவாகவும் இருந்தன. ஹைக்கூ கவிதைகள்,  ஜென் தத்துவ மரபிலிருந்து தோன்றியதால், இக்கவிதைகள் மனித வாழ்க்கையை எதிர் கேள்வி கேட்பனவாக அமைந்திருந்தன. இக்கவிதைகளின் அழகியலே அதன் திடீர் பாய்ச்சலில்தான் இருந்தது.

தொடந்து தமிழ் கவிதை பரப்பில் நவீன கவிதைகள் புலக்கத்திற்கு வந்தன. பல்வேறு படிமங்களின் வழி உணர்வுகளையும் மனவெழுட்சிகளையும் நவீன கவிதைகள் வெளிப்படுத்தின. புதுக்கவிதையில் காணப்படும் ஒலி சீர்மையையும் குறியீடுகளையும் நவீன கவிதைகள் மறுத்தன. தெளிந்த வார்த்தைகளில் வெளிப்படப்படும் ஒரு பொருள் சொற்களை விட கலங்கிய வார்த்தைகளின் வழி பல அடுக்கு பொருள் தரும் சொற்களே நவீன கவிதைகளில் நிரம்பி இருந்தன. ஆனால் நவீன கவிதைகளின் வெளிப்பாடு பெரும்பாலும், கவிஞனின் உள்முகதேடல்களாக இருப்தாலும் தத்துவார்த்த தேடல்களை நோக்கி வாசகனை நகர்த்துவதாலும் பெரும்பான்மை வாசகர்கள் நவீன கவிதைகள் ‘புரியவில்லை’ என்னும் குற்றச்சாட்டை முன்வைப்பதை மறுக்கமுடியாது.

மலேசிய கவிதைகளின் இன்றைய போக்கு ஒரு கலவை நிலையில் நகர்வதை காணமுடிகிறது. வடிவ அழகை விட கவிதை வெளிப்படுத்தும் கருத்து அடர்த்திக்கு முக்கியத்துவம் தரும் சிந்தனை பலருக்கும் இருந்தாலும், கவிதைகளின் உள்ளீட்டில் ஆரம்பகால புதுக்கவிதைகளின் தரத்தை தாண்டாத கவிதைகளே இன்றைக்கும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவ்வப்போது தோன்றும் கொண்டாட்டங்களையும் துயரங்களையும் பதிவு செய்வதையும் பல்லாண்டுகாலமாக பலமுறை கூறப்பட்டுவரும் பாடுபொருளை மீண்டும் கூறுவதுமே கவிதையின் தற்போதைய நிலையாக உள்ளது. பிரதியில் உள்ள தகவல்களைத் தாண்டி அடுத்த தளத்திற்கு மலேசிய கவிதைகள் செல்வது அரிதாகவே உள்ளது.

இந்நிலையில் ‘தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகளில்’  தொகுக்கப்பட்டுள்ள கவிதைகளின் பாடுபொருள், வடிவம் ஆகிய இரண்டு நிலைகளிலும் காணப்படும் தனித்துவம் மலேசிய கவிதைத் துறையில் காணப்படும் புதிய பரிணாமம் என்று கூறலாம். இத்தொகுப்பை நான் ‘தனித்துவம்’ என்று குறிப்பிட சில அடிப்படை காரணங்கள் உள்ளன.

இக்கவிதைகளில், காதல், தாய்மை, நட்பு, சகோதரத்துவம், இன நல்லிணக்கம், இயற்கை அழகில் மயக்கம், மொழிப் பற்று,  போன்ற வழக்கமான உட்பொருள் எதுவும் இல்லை. இக்கவிதைகள் பேசுவன முற்றிலும் வேறு தளத்தில் வாழும் மனிதர்களின் உணர்வுகளையே.  அரசியலாலும் சமுதாய கட்டமைபினாலும் நசுக்கப்பட்டு வாழும் ஒரு சிறுபான்மை கூட்டத்தாரின் குரலாகவே இக்கவிதைகள் அமைந்திருக்கின்றன. மேலும் தீவிர அரசியல் விமர்சன கவிதைகளாகவும் இவை அமைந்திருக்கின்றன.

பொதுவாக இத்தொகுப்பில் உள்ள பெரும்பான்மை கவிதைகள் தீவிர அரசியலை கவித்துவத்தோடு முன்வைக்கின்றன. சமுதாயமும் தனிமனிதர்களும் அதிகார பீடங்களும் பல்வேறு படிவங்களின் வாயிலாக காட்டப்படுகின்றன. ஆங்காங்கே எள்ளலும் வெறுமையும் கலந்த கலவையாக இக்கவிதைகள் அமைந்துள்ளன.

ஆகவே, இக்கவிதைகளின் நோக்கம் குறித்து சிந்திக்கும் போது அதற்கான விடையாக நூலின் முன்பக்கத்தில் காணப்படும் சிறு குறிப்பும் ‘வக்கற்றவர்களுக்கு’ என்னும் கவிதையும் (இக்கவிதையை கவிஞரின் வாக்குமூலமாகவும் எடுத்துக் கொள்ளலாம்) தெளிவாக உணர்த்துகின்றன.

அதோடு, ஹைக்கூ கவிதைகளின் சாயலை பாலமுருகன் தன் கவிதைகளின் வழி முற்றாக மறுக்கிறார் என்றே நினைக்கிறேன்.      காரணம், இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் நீளமானவை. சில மிக நீளமானவை.  சில மூன்று பக்கங்கள் நீளுகின்றன. முற்றுப்புள்ளிகளைத் தவிற மற்ற நிறுத்தற்குறிகள் மிகக் குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளன. கவிதைகளில் பொருள் நேரடியாக வெளிப்பட்டு தெரியும் சொற்கள் மிகக் குறைவு. மாறாக அனைத்து சொற்களையும் இக்கவிதைகள் படிமமாக்கிக் கொள்கின்றன. உதாரணமாக, முதல் கவிதையில் வரும் ‘பூட்டு’ என்ற சொல்லும் இரண்டாம் கவிதையில் வரும் ‘காற்று’ என்ற சொல்லும் மூன்றாம் கவிதையில் காணப்படும் துர்நாற்றம், கழிவறை போன்ற சொற்களும் இந்நாட்டு அரசியலை குறிக்கும் படிமங்கள். அவற்றின் பொருள் அறிய ஓரளவு இந்நாட்டு அரசியலை அறியவேண்டும்.

அதே போன்று இக்கவிதைகளுக்கு சூட்டப்பட்டிருக்கும் தலைப்புகள் நீளமானவைகளாகவும் வாசிக்க ஆவலூட்டுபவனாகவும் உள்ளன. மேலும், பாலமுருகன் தன் கவிதைகளில் பயன்படுத்தும் சொற்கள் அதிர்வு நிரம்பியதாகவும் வாசகனை அதிர்ச்சிப்படுத்தி கவிதைக்குள் இழுத்துப் போகக் கூடியனவாகவும் உள்ளன. மென்மையான ‘வாசனை மிகுந்த’ சொற்களை விட எதிர்மறையான கூர்மையான சொற்களையே கவிதைகளின் பல்வேறு இடங்களில் பார்க்க முடிகிறது. உதாரணமாக, தூக்கிலிடுதல், பிணவாடை, குசு, மூத்திரம் போன்ற சொற்கள் கவிதைகளின் காந்தாரத்தை முழுமையாக வெளிப்படுத்தக் கூடியதாகவே இருக்கின்றன. படைப்பாளியின் சமரசமில்லா மனநிலையை அறிய அவன் பயன்படுத்தும் சொற்களே போதுமானது என்று நினைக்கிறேன்.

கடும் வீச்சுகளுக்கிடையிலும் சில நையாண்டிகளையும் நகைச்சுவை துணுக்குகளையும் காணமுடிகிறது. உதாரணமாக, ‘காற்றைச் சேமிக்கும் திட்டம்’ ‘ஆண்களின் கழிப்பறை’ போன்ற கவிதைகளை குறிப்பிடலாம். அரசு, சமுதாயம் போன்ற கட்டமைப்புகளில் காணப்படும் போலித்தன்மைகளை எள்ளலுடன் விமர்சிக்கும் கவிதைகள் இவை.

மேலும் இந்த நவீன கவிதைகள் கருத்துகள் எதையும் சமுதாயத்தை நோக்கி வீசவில்லை. இக்கவிதைகள் யாருக்கும் அறிவுரை கூறும் நோக்கில் படைக்கப்பட்டன அல்ல என்பது என் புரிதல். இக்கவிதைகளின் மிகப்பெரிய போராட்டம் சூழல்களையும் அவஸ்தைகளையும் வாசகனை உணரவைப்பதுதான். உதாரணமாக தலைப்பு கவிதையாகிய ‘தூக்கிலிடப் பட்டவர்களின் நாக்குகள்’ நமக்கு இந்நாட்டு தமிழர்களின் ஒடுக்கப்பட்ட அரசியல் வாழ்க்கையை கொஞ்சமும் பிரச்சாரமின்றி உணர்த்திச் செல்கின்றது. அதே போன்று ‘ஊனமுற்ற பூச்சிகளின் தற்கொலை’ யும், ‘செத்த இறைச்சி’யும் சமுதாய புறக்கணிப்பிற்கு ஆளாகி அடிப்படை வாழ்வுக்கு போராடும் சிறுபான்மையினரை புதுவித கற்பனைகளின் வழி மையப்படுத்திக் காட்டுகிறது.

அரசியல் தவிற, ஒரு ஆசிரியரான பாலமுருகன் கல்வி தேர்ச்சியை ஒப்பீடாக்கி ஒரு மாணவனின் தன்மானத்தை சிதைக்கும் சமுதாய வழக்கத்தை ‘உனதும் எனதுமான மூத்திரம்’ என்னும் கவிதையின் வழி மிக காட்டமாக விமர்சிக்கிறார். அதேப்போன்று, நவீன கவிதைகளுக்ககே உரிய பாணியோடு, சில கவிதைகள் ஏகாந்த பார்வையையும் தந்துவார்த்த பார்வையையும் முன்வைத்தாலும் அவற்றுக்குள்ளும் மறைந்திருக்கும் அரசியல் பகடிகளை அடையாளம் காணமுடிகிறது. உதாரணமாக ‘இத்தனை நாள் தங்கி இருந்த கதை’ யும் ‘தேவதைகளைக் கொன்றவர்கள்’ ளையும் சுட்டலாம்

மேலும் சிறுவர் நட்பு, சாதி வெறி போன்றவை குறித்த பார்வைகளையும் சில கவிதைகள் முன்னிருத்துகின்றன.

முடிவாக, கே. பாலமுருகனின் பெரும்பான்மை கவிதைகள் இதுவரை மலேசிய கவிதைகள் வெளிப்படையாக குறிப்பிட்டு எழுதாத ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரின் அரசியல் அவலங்களையும் ஒடுக்குமுறைகளையும் பல்வேறு படிமங்களின் வழி வெளிச்சப் படுத்துகின்றன. சட்டத்தாலும் சமுதாய கட்டுகளாலும் நசுக்கப்பட்டவர்களின் குரலை வெளிப்படுத்த முனையும் இக்கவிதைகள் சடங்குபூர்வமான அழகியலையும் வெளிப்பூச்சுகளையும் கலைந்துவிட்டு, சமரசமின்மையையும் உண்மையுமே அழகியலாக கொண்டு மிளிர்கின்றன.

1 comment for “கே.பாலமுருகன் கவிதைகள்: நசுக்கப்பட்டவர்களின் அழகியல்.

  1. ஸ்ரீவிஜி
    April 9, 2014 at 2:09 pm

    அருமையான பார்வை. ரசித்தேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...