ஒரு கவிதைப் படைப்பானது எப்போது உணர்வுகளை ஊடுருவிச் செல்கின்றதோ அப்போதே அது ஒரு வெற்றிபெற்ற படைப்பாகிறது. அப்படியானதொரு படைப்பினை வெறுமனே கற்றுக் கொள்வதாலோ அல்லது அனுபவத்தாலோ உருவாக்கிவிடமுடியாது. ஒரு நிகழ்தலின் உண்மையை உணர்ந்து, உணர்ச்சிகளால் ஊடுருவி பார்க்கும் பார்வை யாருக்கு வாய்கிறதோ, அந்த பார்வையில் ஒரு அழகியல் கலந்து உணர்வுகளை தளம்பச்செய்யும் வகையில் யாரால் வெளிவிட முடிகிறதோ அவரால் மட்டுமே வெற்றிபெற்ற ஒரு கவிதையை பிரசவிக்க முடியும்.
அந்தவகையில் “நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்” என்ற காரண கரியத் தொடர்புகளை தன்னிலை சார்ந்து வெளிக்கொண்டுவந்துள்ளார் பூங்குழலி வீரன். அவர் தன்னிலை சார்ந்து அவற்றை வெளிக்கொண்டு வந்த போதிலும் ஒவ்வொருவரையும் தன்வயப்படுத்தி ஒருமுறை தம் சொந்த நினைவுகளுள் மூழ்கிப் போக வைக்கிறது. கடந்துபோனவைகளை நினைத்து ஒரு பெருமூச்சினை வெளிவிடத்தூண்டுகிறது. கழிந்த மற்றும் வரப்போகும் நாட்களின் மறு பக்கத்தை எளிமையாக வெளிக்கொண்டுவந்து வாசிப்பவர்களை உணர்ச்சிகளின் திரளுக்குள் ஆழ்த்தி வைப்பதனூடாக தன்னை வெளிக்கொண்டுவரும் அவரை ஒரு காத்திரமான கவிஞராக அடையாளப்படுத்த முடியும்.
எதையோ வென்று முடித்த
ஒரு மர்ம புன்னகையுடன்
அந்தப் படம் அத்தனை அழகு…. என்று
ஒரு அண்ணனின் புகைப்பட்டத்தை பற்றி பேசுகையில் ஒவ்வொருவரையும் தங்களின் எதோ ஒரு கால புகைப்பட நினைவுக்குள் மூழ்கிப் போக வைக்கிறது. வீட்டின் முகப்பில் மாட்டப்பட்டு இருக்கும் புகைப்படங்களை நினைவுக்கு அழைத்து வருகிறது.
மரணத்தின் கோப்பை என்ற கவிதையில்,
மரணங்கள் நட்பு பாராட்டுவதில்லை
சிரித்துக்கொள்வதுமில்லை
கோப்பைகளில் மிதந்துகொண்டிருந்தாலும்
அவை தேநீர் அருந்தவில்லை
யாருமற்ற பிரதேசத்தில் தனித்திருப்பது போல
மரணங்கள் தனித்திருந்தன.. என்று முடிக்கிறார்.
இதில் மரணம் என்ற பதம் வெறுமனே உடல் அழிவை மட்டும் காட்டவில்லை ஒரு நேசத்தின், பிரியத்தின், அன்பின், பரிவின் நீங்குதலை இயல்பாக வெளிக்கொண்டு வருகிறது.
துவக்கின் குண்டுகள்
உன்னைநோக்கி வருகின்றன
உலகம் முடிகிறஓசைகள் கேட்கின்றன
உனக்கான உலகம் விழித்துக் கொள்கிறது
மோதி வெடித்து
தீப் பிழம்புகள் உன்னை
நோக்கிப் பாய்கின்றன
உன் மொழியை நோக்கி
உன் இனத்தை நோக்கி …
என்று நீளும் கவிதை மூலம் அடக்கப்படும் இனங்களுக்கான தன் ஆதங்கத்தினை பாடுகிறார். எங்கெல்லாம் அடக்குமுறைகள் நீள்கிறதோ அங்கெல்லாம் பொருந்திப்போகும் வரிகளை சுமக்கும் இவருக்குள் ஒரு பொதுவுடைமைவாதி உறங்கிக்கிடக்கிறான். மனிதர்களின் வலியை,ஏமாற்றங்களை கண்டு துவண்டு போகாமால் அவற்றை தட்டிக்கேட்கும் தன் பாடலுடன் எழுகிறான்.
வேரோடு பிடுங்கி எறியப்பட்ட போதும்
இன்னும் பால் மரக்காட்டில் எஞ்சி இருக்கின்றன
எங்களின் காலடித் தடங்கள்…
காயடிக்கப்பட்டது எங்களூர் காளைகள் மட்டுமல்ல
எங்கள் கனவுகளும் தான்…..
பர்மாவில், இலங்கையில், மொறிசியசில் …இன்னும் இன்னும் எத்தனையோ நாடுகளில் தூக்கி வீசப்பட்ட என் மூதாதைகளின் நினைவுகளை மீட்டி செல்லும் இந்த கவிதையில்
மறு நடவுகள் பல நடந்துவிட்டன
நாங்கள் மட்டும் மரித்தபடியேதான் இருக்கிறோம்..
என்று முடிக்கிறார். நூற்றாண்டு காலவெளிகளை கடந்த பின்னும் இன்னும் மாறாத அந்த வாழ்வியலை சுமக்கும் ஒரு சோகம் என் இனத்தை தவிர வேறு இனத்துக்கு இருக்காது . ஈழத்தில் இருந்து உலகின் ஒவ்வொரு திசைகளுக்கும் இரையாகிப் போன என் சந்ததியின் நாளைய குரலும் இப்படித்தான் இருக்குமோ என்று ஏங்கவும் வைக்கிறது.
ஏக்கங்களை கவலைகளை தனிமைகளை இயலாமைகளை அழகாகப்பாடி வந்த கவிதாயினி காதலைப் பாடும் போதில் இன்னும் இன்னும் அழகாக வசீகரிக்கிறார். இளமையின் தாபங்களை இனிமையாக எடுத்தாளுகிறார்.
அந்தரவெளிகளில் பறக்கின்ற
பறவைகள்
சிலவேளை நீ
தந்துபோன முத்தங்களாகவும்
இருக்கலாம்..//என்ற போதிலும்,
உன் காதலுக்கு பரிசாக
என் காதல்
தருவதைத் தவிர
வேறு
எதைத் தரமுடியும்
என்னால்…. என்று கேட்கும் போதிலும்…
நாம்
சிந்திச்செல்லும்
வார்த்தைகளைத்
தின்று பார்க்கின்றன
புறாக்கள்.
வார்த்தை தின்று
கொழுத்த புறாக்கள்
நம் மௌன வெளியெங்கும்
கடந்து போகின்றன
நம்மை வியந்தபடி…./////காதலை சுமக்கும் இரு இதயங்களையும் உணர்ந்த காலம், காதலர்களுக்கிடையில் நிகழும் மௌனத்தை வியந்து பார்க்கும் அழகியலை உணர்வுபூர்வமாக கொண்டுவருகிறார்.
வாசிப்பு அனுபவங்கள் குறைந்த மக்களையும் கவர்ந்துகொள்ளும் திறன் வாய்ந்த மிக எளிமையான நடையொன்றினை கைக்கொள்ளும் இவரிடம் உற்பத்தியாகும் மொழிநடை வியந்து பார்க்க வைக்கிறது. பல்லின சமூக கட்டமைப்புக்குள் அதுவும் முதன்மை மொழியாக இன்னொரு மொழி இருக்கும் சூழலில் தமிழை இவ்வளவு அழகாக கைக்கொள்ளுதல் என்பது உண்மையிலேயே ஆச்சரியமான விடயம். அதைவிட எந்த ஒரு உச்சரிப்பிலும் மலேசியப் பாணியோ அல்லது தமிழ் நாட்டின் பாணியோ காணப்படாமை குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.
எளிமைத்தன்மையும் சராசரி வாழ்வியலின் கருவும் இவரது கவிதைகளுக்கு எந்த அளவுக்கு பலமாக இருக்கிறதோ அதே அளவிற்கு பலவீனமாகிவிடவும் கூடும். அவரே முன்னுரையில் சொல்லி இருப்பது போல, “நான் பதிவு செய்திருக்கும் விடயம் உங்களுக்கு மிகச்சாதரணமாக தோன்றலாம்…ஆனால் அது எனக்கு அப்படியன்று..அந்த நிகழ்வு ஏற்படுத்திய தாக்கம் அளவில்லாது அந்த அளவுகளை நானே தீர்மானிக்கிறேன்.” இவருக்கே உரித்தான அந்த பதிவுகளை இன்னும் இன்னும் அழகியலின் உச்சங்களை தொடும் வகையில் படைப்பாக வேண்டும். அதற்கான தேடலை இவர் தொடரவேண்டும் காலமும் தேடலும் சந்திக்கும் ஒரு புள்ளியில் நிலைபெறும் கவிஞராக இவர் விளங்குவார் என்பது வெளிப்படையானது.
நெற்கொழு தாசன்
சிறப்பான பார்வை…