பழம்பாறை (அறிவியல் சிறுகதை)

( 1 )

கவனி, என் குரலைக் கவனி. என் குரல் என்பது உண்மையில் குரல் அல்ல, அது இன்னொன்று. ஒரு மூளை இன்னொரு மூளையை தொடர்பு கொள்வதற்கான எல்லா வழிமுறைகளிலும் இதை அறியமுடியும். ஒரு மூளையின் மிகச்சிறந்த அல்லது மிக இயல்பான வழிமுறை எதுவோ அதன் வழியாக இது தன்னை தொடர்புறுத்தத் தொடங்கும். இதை அறிவதற்கான  தடைகளைக் கடந்து வந்து ஒருவர் இதை அடைந்தால்  இது தன்னை மாற்றிக்கொண்டு அந்த அறிநிலையுடன் இணைந்துகொள்ளும். இதை அறியும் தகுதியை கொண்ட அறிநிலைகள் மட்டுமே இதை அறியவேண்டும் என்பதற்காகவே இந்தத் தடைகள். ஏனென்றால் மிகமிக அரியதும், ஆகவே எளிதில் உணரமுடியாததும், இப்பிரபஞ்சத்தின் சாராம்சம் என்றே சொல்லத்தக்கதும், எதை உணர்ந்தபின் இப்பிரபஞ்சம் முன்பிலாதபடி முற்றாக மாறிவிடுமோ அத்தகைய தீவிரம் கொண்டதுமான ஒன்று இது.

நான் அ. இதை அறியும் நீ  மூளை என்பது தனித்தியங்கும் ஒரு காலகட்டத்தில், ஆகவே ஒவ்வொரு மூளையும் தன்னை தனித்த ஆளுமை என வகுத்துக்கொண்டிருக்கும் சூழலில், பாலின வேறுபாடுகள் நடைமுறையில் இருக்கும் சமூகத்தில், மொழி என்னும் குறியீட்டுத் தொகுப்பினூடாக மூளைகள் ஒன்றையொன்று அறிந்துகொண்டிருந்த அறிவுக்களத்தில் வாழ்பவன். ஆகவே இவ்வாறாக நான் என்னை உனக்கு அடையாளம் காட்டுகிறேன். ஆகவே என் பெயர் அ. ஆம், இப்போது உன் உள்ளத்தை அறிந்துவிட்டேன், உனக்குள் வந்துவிட்டேன். நல்லது, இனி நான் பேசத்தொடங்குகிறேன். 

இந்த உரையாடல் எங்கிருந்து வருகிறதென்று திகைக்கிறாய். உனக்குள் இருந்து உன்னை மீறி எழும் குரல் என்று அஞ்சுகிறாய். இதை நிறுத்த முயன்று முடியாமல் தவிக்கிறாய். இது மனச்சிதைவு நோயின் தொடக்கமா என்று எண்ணுகிறாய். மனச்சிதைவு என்பது மனம் என மூளை வகுத்து வைத்திருக்கும் அறிதல் எல்லை ஒன்று மீறப்படுதல் மட்டுமே. மூளையால் அதன் வழக்கமான வழிமுறைகளின்படி அதை கையாள முடியாமையால் அது தன்னை வெவ்வேறு வகைகளில் பகுத்துக்கொள்கிறது. அதையே உங்கள் எளிய உடல் மற்றும் மூளைச்சீரமைப்பு முறைகள் உளச்சிதைவுநோய் என வகுத்துக்கொள்கின்றன.

மூளையின் எல்லைக்கு அப்பாலிருந்து வருவன அனைத்துமே நீங்கள் வாழும் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாலுள்ள அறிதல்கள் என நீங்கள் உணர்வதில்லை. மனம் என நீங்கள் உணர்வது மூளையின் ஒரு குறிப்பிட்ட அறிதல்முறை, அதை உதறாமல் வேறு அறிதல்கள் நிகழமுடியாது என நீங்கள் அறிந்திருக்கவில்லை. அல்லது, நீங்கள் அறிவீர்கள். அந்த சாத்தியத்தை அஞ்சி, உங்கள் எல்லைகளை பாதுகாத்து அதற்குள் ஒண்டிக்கொள்ளும்பொருட்டு நீங்கள் அந்த எல்லைகடத்தல்களை பிறழ்வு என்றும் சிதைவு என்றும் பெயரிட்டு ஒடுக்கி அழிக்கிறீர்கள். 

இதை அறியும் நீயும் மூளைசிதைந்தவன் என்று அடையாளமிடப்பட்டு, சீரமைப்பு என்னும் முயற்சியால் பெரும்பாலும் அழிக்கப்படுவாய். ஆனால் இதை நீ  தொட்டுவிட்டாய். இது உனக்குள் நிகழத்தொடங்கிவிட்டது. இனி உன்னால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. ஒருவேளை இது உன்னில் நிகழும்போதே உன் மூளையின் தன்னைத்தானே தொகுத்துக்கொள்ளும் வழக்கமான அமைப்பு சிதறத் தொடங்கியிருக்கும். அதாவது உங்கள் மொழியில் நீ  தன்னிலை அழிந்துகொண்டிருக்கிறாய். உள்ளமற்றவராக ஆகிக்கொண்டிருக்கிறாய். மூளைக்காகவே உடல். மூளையே உணவுக்காகவும், உழைப்புக்காகவும், ஓய்வுக்காகவும் உடலுக்கு ஆணையிடுகிறது. மூளை அழிந்தால் உடல் தன் நோக்கத்தை இழந்துவிடுகிறது. அது செயலற்று அழியத்தொடங்குகிறது . 

அஞ்சி பதறுகிறாய். இந்தச் சொற்பெருக்கை நிறுத்த முயல்கிறாய். முடியாமல் போகவே இணையான தீவிரம் ஒன்றில் உன்னைச் செலுத்திக்கொள்ள முயல்கிறாய் உங்கள் உலகில் திட்டவட்டமானது உடல் மட்டுமே. உடலைக்கொண்டே தீவிரமான அனைத்தையும் நீங்கள் அடையமுடியும். முதன்மையாக பாலுறவு. அதை தூண்டிக்கொள்கிறாய். தற்புணர்ச்சி செய்கிறாய். திரும்பத் திரும்ப. முதல் சிலமுறை அது சில நொடிகள் உன்னை விடுவிக்கிறது. அதன் எல்லையை அடைந்தபின் வலி நோக்கிச் செல்கிறாய். உன் உடலுக்கு பலவகைகளிலும் வலியை உருவாக்கிக் கொள்கிறாய். வலியில் உடல் துடிக்கையில் சில நிமிட நேரம் உனக்கு இந்த குரலில் இருந்து விடுதலை அமைகிறது. அதன்பின் வலி வேறெங்கோ நிகழ உள்ளம் ஓடிக்கொண்டே இருப்பதை உணர்கிறாய்.

அதன்பின் எஞ்சியிருப்பது சாவு ஒன்றே. நீ  உன்னை மாய்த்துக்கொள்ள முயல்கிறாய். உன் உடலை அழித்துக்கொள்ளும் முயற்சியின் எல்லைவரை, இறுதிக்கணம் வரைச் செல்கிறாய். உண்மையில், நீ  சாவின் வழியாக விடுதலை அடையமுடியும். ஆனால் அது விடுதலை அல்ல, ஏனென்றால் சாவுக்குப்பின் அவ்விடுதலையை உணரும் இருப்பு இல்லை என்றால் அது எப்படி விடுதலை ஆகும்? இறுதிக்கணங்களில் விடுதலை ஒன்று அமைகிறது. ஆனால் சிலமுறைகளுக்குப் பின் உன் மூளைக்குத் தெரிந்துவிடுகிறது, நீங்கள் சாகப்போவதில்லை. ஆகவே நீ  சாகமுயன்று, இறுதிக்கு முந்தைய கணத்தில் இருக்கையிலும் இந்த அறிதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

விட்டுவிடு. உன்னை முழுமையாக அளித்துவிடு. உண்ணப்பட்ட உடல் ஒன்று உண்ணும் உடலுக்கு தன்னை அளிப்பதுபோல. திமிறல் அடங்கி, மிச்சமின்றி. உனக்கு வேறு வழியே இல்லை. ஏனென்றால் உன்னால் எண்ணிப் பார்க்கவே இயலாத அளவுக்குப் பேராற்றல்கொண்ட மூளையொன்றின் தொடர்பு இது. உனக்குப் புரியும்படிச் சொல்கிறேன். கோடானுகோடி மூளைகள் கோடானுகோடி ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து ஒற்றை மூளையென ஆகிவிட்டதாக உருவகி. அதுவே நான். இல்லை அது அல்ல, அவ்வாறாக நீ என்னை இப்போதைக்குப் புரிந்துகொள்ளலாம். நீங்கள் அறியும் காலத்திற்கு அப்பால் இன்னொரு காலத்தில் இருந்து, நீங்கள் வாழும் வெளிக்கு அப்பால் இன்னொரு வெளியில் இருந்து நான் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன், உன் மொழியில், உன் உருவகங்களுடன். இப்போதைக்கு, இந்த உரையாடலில் உனக்காக என் பெயர் அ.

வெடித்துச் சிதறி முடிவிலாது பரவிய பிரபஞ்சத்தில் குளிர்ந்து குளிர்ந்து அடங்கி, உயிர்முளைத்து, இயற்கை வளர்ந்து, பிரக்ஞை நிகழ்ந்து, அப்பிரக்ஞையால் அறியப்பட்டவையாக ஆகி, அறிவென வடிவுகொண்டு, இருத்தலை அடைந்த பல்லாயிரம்கோடி கோள்களில் பிரபஞ்சம் தன் எல்லா சாத்தியக்கூறுகளையும் பயின்றது. அவற்றில் இயல்வதான அனைத்து நல்வாய்ப்புகளையும் பெற்ற கோள்கள் சில இருந்தன. அதில் ஒன்று உன்னுடையது. அக்கோளத்தில் பிரபஞ்ச ஆற்றலின் முடிவிலா அலைவரிசைகள் மின்னூட்டம்பெற்ற துகள்களாகிப் பருப்பொருளாயின. ஒளியாகி, வெப்பமாகி பின் வாயுக்களாகி குளிர்ந்து திரவமாகி கடலுருக்கொண்டன. கடலில் ரசாயனங்களாக பிரிந்து பெருகி பின் இணைந்து இணைந்து புதுவடிவு கொண்டன. அந்த ரசாயனக்கூட்டுகளின்மேல் மின்னூட்டங்கள் தழுவத்தழுவ உருவான முடிவிலாத சாத்தியங்களில் ஒன்றில் தன்னைத் தானே பெருக்கி நிகழ்த்திக்கொள்ளும் தருணத்தை பருப்பொருள் கண்டடைந்தது.  

ஒற்றைத்துளி உடல்கள். அவை இணைந்து இணைந்து உருவான உடல்களின் முடிவற்ற வடிவ மாறுபாடுகள். நீரில் நிலத்தில் வானில். செதில்கள், வால்கள், கால்கள், சிறகுகள், அலகுகள், வாய்கள், மூக்கு, கண்கள். ஒற்றைத்துளி உடல் என முட்டையாக இருந்து, புழுவென பிறந்து, மீன் என வளர்ந்து, கரையில் விலங்கென ஆகி உங்கள் முன் அமர்ந்திருப்பது  பரிணாமத்தின் எல்லா யுகங்களையும் ஓர் உடல் வழியாகக் கடந்து வந்த ஒன்று. உன் கோளின் உடல்களில் தொன்மையானதும், அழிவற்றதுமான ஒன்று. நீ இதோ அதை ஒரு பாசிபடிந்த பழம்பாறைத் துண்டு என்று மயங்கி பின் உயிர்ப்பொருள் என அறிந்துகொண்டு கூர்ந்து பார்க்கிறாய்.

( 2 )

“இந்தக் கோள் நாம் பற்பல யுகங்களுக்கு முன்பு இருந்த அந்த நிலையில் இருக்கும் ஒன்றாக இருக்கலாம்” என்று அ சொன்னான்.

அவன் முன் இருந்த ச-வும் ம-வும் பெரிய மின்னும் விழிகளுடன் அவன் காட்டிய அந்த சிறிய உருவத்தைப் பார்த்தனர். அது பின்னங்கால்களை மடித்து முன்னங்கால்களை ஊன்றி, தலையை சற்றுமேலே தூக்கி திறந்த வாயுடனும் விழித்த பெரிய விழிகளுடனும்  அமர்ந்திருந்த ஒரு சிறு உடல். துல்லியமான படிகச்சதுரத்திற்குள் அது பதிக்கப்பட்டிருந்தது.

“இதற்கு உயிர் உள்ளதா?” என்று ச கேட்டான்.

“நாம் அறிந்தவகையில் இல்லை. ஆனால் வேறெவ்வகையிலாவது இது தன் உடலுக்குள் விழிப்பு கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது,” என்று அ சொன்னான். “இது அந்த கோளில் இருந்து விண்வெளிக்கு வந்த ஓர் உயிரின் உடல். அது எப்படி வந்தது என்று நான் ஒருவாறு ஊகிக்கிறேன்.”

அ தொடர்ந்தான் “அந்த கோளிலுள்ள உயிர்களில் இது தனித்தன்மை கொண்ட ஒன்றாக இருந்திருக்கலாம். நான் இதை ஆய்வுசெய்தேன். ஒரு பாறைத்துண்டு என்று தோன்றும்  இந்தச் சிறிய உடலுக்குள் மூளை உள்ளது. இந்த உடலின் அளவுடன் ஒப்பிட்டால் அது பெரிய மூளை. உடலின் மேல்தோல் மெல்லிய ஈரத்துடன் மின்னூட்டம் பெறும் தன்மை கொண்டது. ஆகவே இதன் மூளையின் நேரடி நீட்சியாக இதன் உடல் அமைந்துள்ளது, இந்த உடலே ஒரு மூளைதான். இந்த மூளையின் அணுக்கூட்டுகள் மின்னூட்டம் பெறவும், சீராக அம்மின்னூட்டத்தை வெளியிடவும் கூடியவை என அவர்கள் கண்டடைந்துள்ளனர். இத்தகைய மூளையில் தங்கள் தரவுகளை மின்னூட்டமாக மாற்றிச் சேமிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.”

“முதலில் அவர்கள் படிகம் போன்ற எதிலோ தங்கள் தகவல்களை மின்னூட்டமாகச் சேமித்திருக்கின்றனர். அதன் பின்னர் இத்தகைய உயிருள்ள பொருளிலும் அதைச் செய்யலாம் என்று அறிந்துள்ளனர். இதனுடன் மின்னூட்டத்தை அளிக்கும் பிற தொடர்புக் கருவிகளை இணைத்து இதை செயல்படச் செய்துள்ளனர். ஆகவே இது ஒரு தகவல் சேகரிப்புமையம் மட்டும் அல்ல, தகவல்களை கையாளவும், அத்தகவல்களை பிற கருவிகளுக்கு அளிக்கவும், அதன்பொருட்டு தன்னைத்தானே இயக்கிக்கொள்ளவும் ஆற்றல்கொண்ட ஒன்று… அதாவது இயந்திரத்தால் தகவல்பொழிந்து பேருருவாக்கப்பட்ட மூளை இது. உயிருள்ள இயந்திர மூளை!”

“ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆழ்ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ” என்ற ஒலியுடன் அந்த உடலுடன் இணைக்கப்பட்ட கருவி ஒலி எழுப்பியது.

அங்கிருந்த அனைவரும் எழுந்து அந்த ஒலியை கேட்டு நின்றனர். அவர்களின் கண்களில் திகைப்பு நிறைந்திருந்தது.

“இது இந்த உயிரினத்தின் குரல் அல்ல. இதில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் தரவு நம் கருவியால் இப்படி ஒலியாக ஆக்கப்படுகிறது. நாம் ஒருபோதும் அறியமுடியாத அந்தக் கோளில் வாழும் உயிரினத்தின் குரலா இது? அது எப்படி இந்த ஒலியை எழுப்புகிறது? அதிரும் தசைநார்களாலா? செதில்களாலா? அல்லது வேறுவகை உறுப்புகளாலா? இந்த ஒலி அதன் நேர்ப்பதிவுதானா, அல்லது இங்கே நம் கருவிகள் இதை இப்படி உருமாற்றிவிட்டனவா? தெரியாது. ஆனால் இது ஒரு குரல்…. வெறும் மின்னூட்டத்தின் அதிர்வு அல்ல, உறுதியாக இது ஒரு குரல். அந்த கோளில் எவரோ இருக்கிறார்கள். அல்லது இருந்தார்கள். உயிர், பிரக்ஞை, அறிவு….” அ சொன்னான் “இப்பிரபஞ்சத்தில் நாம் தன்னந்தனியர்கள் அல்ல!”  

அவன் மீண்டும் அந்த குரலை ஒலிக்கவிட்டான். அந்தக்குரல் அவர்களின் புலன்களை சிலிர்க்கச் செய்தது, அவர்கள் எழுந்து அ அருகே வந்து ஆர்வம் கொண்ட கண்களுடன் நின்றனர்.

“இந்த மூளை ஒரு கருவியின் மையமாக பொருத்தப்பட்டு விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளது. விண்வெளியின் மின்காந்தப் புயல்களால் அது தூக்கி வீசப்பட்டு வழிதவறியிருக்கலாம். எத்தனைகாலம் என்று தெரியாது. மிக அண்மையிலாக இருக்கலாம், அளவிடமுடியாத காலமாகவும் இருக்கலாம். இது விண்வெளியின் காந்தப்பெருக்குகளால் அள்ளிச் சுழற்றப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் எளிய மின்னூட்டங்களோ வெப்பக்கதிர்களோ நுழைய முடியாத மிக அடர்த்தியான ஒரு படிகப்பெட்டிக்குள் இது வைக்கப்பட்டிருந்தமையால் இன்னமும் வெளிப்பாதிப்பில்லாத மூளையென்றே நீடிக்கிறது. அப்படியே நம்மிடம் கிடைத்திருக்கிறது”

“அந்தக் கோள் எது என்று சற்றேனும் ஊகிக்க முடிகிறதா?” 

“இல்லை. அது எங்கிருக்கிறது என்று அறிவது மிகமிகக் கடினம். இந்தக் கல் எத்தனைகாலம் எத்தனை தூரம் பயணம் செய்தது என்று எப்படி அறிவது? இதிலுள்ள தகவல்களைக் கொண்டு இந்த முடிவிலாப் பிரபஞ்சத்தில் அது எங்கே உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது? அதற்கு இன்னும் எத்தனையோ காலம் மிகப்பெரிய கூட்டு உழைப்பு தேவையாகலாம். ஒருவேளை நம்மால் கண்டடையவே முடியாமலிருக்கலாம்”

அ தொடர்ந்தான் “…ஆனால் இந்த மூளையில் இருந்து எடுத்த தரவுகளைக்கொண்டு இப்போது நான் ஊகித்திருக்கும் இந்தச் செய்திகளில் இருந்து இந்தக் கோள் ஏறத்தாழ  பலயுகங்களுக்கு நாம் வாழ்ந்த அதே நிலையில் இருக்கும் அல்லது இருந்த ஒன்று  என்று சொல்லமுடியும். இதை நாம் நம்மைக்கொண்டே புரிந்துகொள்ள முடிகிறது. அது நம் மனமயக்கமாக இருக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு உள்ளது என்பதே நமக்குப் போதுமானது…”

“நான் இந்தக் கோளில் பலவகையான உயிர்கள் உள்ளன. ” என்றான் அ. “ஆம், நான் அந்தக் கோள் இன்னும் இப்படியே உள்ளது என்றே ஊகிக்கிறேன். அங்கே உயிர்கள் நிறைந்துள்ளன. பெரிய உயிர்கள் முதல் மிகமிக நுண்ணிய உயிர்கள் வரை. அசையும் உயிர்கள் முதல் அசையாத உயிர்கள் வரை. எல்லா உயிர்களிலும் பிரக்ஞை நிகழ்கிறது. அப்பிரக்ஞை அதன் மிக எளிய வடிவில் அந்த உடலுடன் இணைந்துள்ளமையால், உடலென்றே தன்னை உணர்கிறது, உடலைக்கொண்டே பிறவற்றை அறிகிறது. ஆகவே அதன் அறிவு என்பதே ஒருவகையான மாற்று உடல்தான். உடல்கள் முட்டிமோதிக் கொண்டிருப்பது போல அங்கே பிரக்ஞைகள் முட்டிமோதுகின்றன. உடல்கள் இணைவது போல பிரக்ஞைகள் முட்டிமோதிக்கொண்டிருக்கின்றன.”

“அவர்களின் பிரக்ஞையின் இயல்பை நான் இவ்வாறு ஊகிக்கிறேன்” என்றான் அ. “ஒருபக்கம் அது தன்னை தனியாக தொகுத்துத் தக்கவைத்துக்கொள்ள இடைவிடாது முயன்றபடியே உள்ளது. இன்னொரு பக்கம் பிற பிரக்ஞைகளுடன் இணைந்துகொள்ள விழைகிறது. இணைந்து இணைந்து ஒன்றாகி  ஒற்றைப் பேரிருப்பாக ஆகவேண்டும் என்றும்; அந்த பேரிருப்பில் தன் தனித்தன்மை கரைந்துவிடலாகாது என்றும் ஒரே சமயம் முயல்கிறது. அதாவது இணைவின் வழியாக உருவாகும் அப்பேரிருப்பு ‘தான்’ என ஆகவேண்டும் எனறு விரும்புகிறது. அந்த விந்தையான முயற்சியால்தான் அது இந்த தகவலேற்றம் செய்யப்பட்ட மூளை போன்ற ஒன்றை வந்தடைந்துள்ளது”

“இந்தப் கலவைமூளை என்னும் தொழில்நுட்பத்தை அது கண்டடைந்த வழிமுறையை இதிலுள்ள செய்திகளைக்கொண்டே ஊகிக்கமுடிகிறது.” என்று அ தொடர்ந்தான். “முதலில் அந்த பிரக்ஞைகள் தாங்கள் அமைந்திருந்த உடல்களை வெவ்வேறாக அசைத்தும் ஒன்றுடன் ஒன்று முட்டியும் இன்னொரு பிரக்ஞையுடன் தொடர்பு கொண்டன. உடலசைவுகளை அவை நுட்பமாக ஆக்கிக்கொண்டே சென்றன. உடலின் கண்கள், முகம் போன்ற பகுதிகளை நுணுக்கமாக அசைத்து உணர்வுகளைத் தொடர்புறுத்தின. அதன்பின் உடலசைவுகளுடன் ஒலிகளை இணைத்துக் கொண்டன. பின்னர் ஒலிகளை வெவ்வேறு அடையாளங்களாக ஆக்கிக்கொண்டன. ஒவ்வொரு ஒலியும் ஒரு பொருளை, ஒரு நிகழ்வை, ஓர் உணர்வை குறிப்பதாக ஆகியிருக்கலாம்”

“அந்த உயிர்களில் மிக முன்னேறிய ஒன்று ஒலியடையாளங்களுக்கு பொதுவான புறச்சின்னங்களை அளிக்கத் தொடங்கியது” என்றான் அ. “அதாவது ஓர் ஒலித்துணுக்கு ஒரு பொருளையோ நிகழ்வையோ குறித்தது. அந்த ஒலிக்கு மீண்டும் ஒரு சிறு பொருளையோ பொருளில் உள்ள அடையாளத்தையோ பிரதிவடிவமாக ஆக்கினால் அந்தப் பொருள் அல்லது அடையாளம் அந்த முதற்பொருளையோ நிகழ்வையோ குறிப்பிடத்தொடங்கும்… அந்த அடையாளங்களை எங்கே பொறித்தாலும் அது அந்த முதற்பொருளை உடனே நினைவுறுத்தும். அந்த நுண்ணிய பொறித்தல்களை இணைத்து இணைத்து அவர்களால் மிகவிரிவாக தொடர்புறுத்திக்கொள்ள முடிந்திருக்கலாம். ஒவ்வொரு சிறு அடையாளத்தடத்தையும் ஒட்டுமொத்தமான அடையாளத்தொகுப்புதான் பொருள்கொள்ளச் செய்கிறது. அதாவது ஒவ்வொரு சிறு அடையாளத்துக்குப் பின்னணியாகவும் ஒட்டுமொத்தப் பிரக்ஞை இருந்திருக்கிறது. ”

”அவர்கள் மிக விரைவாக அந்த தொடர்புமுறையை பெருக்கிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அடையாளத்திற்கு ஓர் அடையாளத்தை உருவாக்கியது ஒரு பெரும் பாய்ச்சல். அந்த இரண்டாம்நிலை அடையாளங்களை இணைத்து மூன்றாம்நிலை அடையாளங்களை உருவாக்கிக்கொண்டார்கள். அதிலிருந்து மேலும் அடையாளங்களை…. அடையாளங்களை ஒன்றுக்குள் ஒன்றென அமைத்துக்கொண்டே சென்றனர். அவர்கள் அங்குள்ள வெவ்வேறு பொருட்களில் அந்த அடையாளங்களை பொறித்து பரிமாறிக்கொண்டனர், சேமித்து  தலைமுறைகளுக்குக் கையளித்தனர். அவ்வாறாக காலந்தோறும்  பல்லாயிரம் பிரக்ஞைகளின் அந்த அடையாளத்தொகுப்பு இணைந்து இணைந்து அவர்களின் உடல்களுக்கு வெளியே பருப்பொருளில் பொறிக்கப்பட்ட ஒரு மாற்றுப்பிரக்ஞையாக  நின்றிருக்கிறது. அதை அவர்கள் அறிவு என எண்ணியிருக்கலாம். ஆனால் அது அறிவு அல்ல, அறிவு திகழ்வது பிரக்ஞையில். அந்த அறிவின் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உதாரண வடிவமே அந்த அடையாளத் தொகுப்பு” என்றான் அ. 

“அந்த தொடர்புமுறைக்கு இருபக்கமும் அவர்களின் பிரக்ஞை நின்று ததும்பிக்கொண்டே இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவுகொள்ள வேண்டும். பிரக்ஞையால் ஒன்றுடன் ஒன்று இணைய முடியும் என்னும் சாத்தியக்கூறு இருப்பதனால்தான் இந்த தொடர்புறுத்தல் நிகழ்ந்திருக்கிறது. நடுவே இப்படி ஒரு பருவடிவத் தொடர்பு முறை இல்லையென்றாலும் எப்படியேனும் பிரக்ஞைகள் இணையும் தொடர்பு உருவாகியிருக்கும். ஏனென்றால் பிரக்ஞை ஒன்றே, அவர்களின் உடல்கள் அதை பலவாக காட்டிக்கொண்டிருந்தன. உடல்கள் வழியாக அவர்கள் பிரக்ஞைகளை இணைத்தனர் என்பதனால்தான் அந்தப் போராட்டமெல்லாம்”

அ தொடர்ந்தான். “அவர்கள் அவ்வாறு வெளியே திரட்டிக்கொண்ட அறிவை பேருருவாக்கி  தங்கள் ஒட்டுமொத்தப் பிரக்ஞை அளவுக்கே சமைத்துக் கொண்டனர். வெவ்வேறு கருவிகளைப் பயன்படுத்தி தங்கள் புலன்களினூடாக அவர்கள் அதைத் தொடர்புகொண்டு அதனுடன் இணைந்தனர். ஆனால் எப்போதோ அவர்கள் புலன்களில்லாமலேயே நேரடியாக மூளையுடன் அந்த வெளிப்பிரக்ஞையை தொடர்புபடுத்தத் தொடங்கினர். மூளையில் ஏதேனும் நுணுக்கமான கருவிகளை அவர்கள் பொருத்திக்கொண்டிருக்கலாம். அல்லது மூளையின் இயல்பான உயிர்மின் அலைகளை பொருட்களின் வெவ்வேறு வகையான மின்னலைகளுடன் இணையச் செய்திருக்கலாம். நாம் அதைத்தான் செய்தோம். நெடுங்காலம் முன்பு…. “

“அவர்களின் மூளைகள் நேரடியாகத் தொடர்புகொள்ளத் தொடங்கியபோது சட்டென்று அவர்கள் மீண்டும் ஒரு பெரும் பாய்ச்சலை அடைந்தனர். முதலில் ஓர் உயிர் இன்னொன்றுடன் தொடர்புகொள்ளத் தொடங்கியது போன்ற ஒரு நிகழ்வு அது. புலன்களில்லாமலேயே மூளைகள் ஒன்றுடனொன்று இணையத் தொடங்கியபோது மூளைக்கு உடல் தேவையில்லாமலாகியது. மூளை உடலின் எல்லையை உதறியது. அதாவது உடலைக்கொண்டு மூளை தன்னை அறிந்துகொண்டிருந்ததை கைவிட்டது. உடலே பிரக்ஞையை பருப்பொருளுடன் இணைத்துக்கொண்டிருந்தது. பிரக்ஞைக்கும் பருப்பொருளுக்கும் எந்த தொடர்பும் உண்மையில் இல்லை என்றும் பிரக்ஞை  பருப்பொருளில் நிகழ்வது என்பது ஒரு மாயத்தோற்றமே என அவ்வுயிர்கள் அறிந்தன” அ சொன்னான்.

“விடுதலை பெற்ற பிரக்ஞை பருப்பொருளாலான அந்த கோளுக்குமேல்  உயிர் என்ற ஒற்றை நிகழ்வைப்போல பிறிதொரு ஒற்றை நிகழ்வென திகழ்ந்துகொண்டிருந்தது” என்று அ தொடர்ந்தான். “இந்த மூளையிலுள்ளது அவர்களின் அந்த முழுமைப் பிரக்ஞையின் ஒரு துளி. இத்தகைய அடர்வேற்றம் செய்யப்பட்ட மூளைகளைக் கொண்டு அவர்கள் கருவிகளை இயக்கிய தொடக்க காலகட்டத்தில் மூளையின் செயல்பாடுகளில் சிலவற்றையே இவை இயற்றின. அந்தக் கோளில் இருந்த உயிர்களில் மிகச் சிலவற்றுடனேயே இவை தொடர்புகொண்டிருந்தன. கருவிகள் வழியாக அவர்களின் புலன்களுடன் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டன. ஆனால் அங்குள்ள பிரக்ஞை ஒன்றாக இணைந்தபோது இவையும் முழுமையான பிரக்ஞையாக ஆயின.இந்த மூளை அங்கிருந்த முழுப்பிரக்ஞையுடன் தொடர்புகொண்டு அதன் ஒரு பகுதியாகச் செயல்பட்ட இன்னொரு முழுமை”

“நெடுங்காலம் முன்பு நாம் பரிணாமம் அடைந்து வந்த பாதையிலேயே அங்குள்ளோரும் முன்னகர்ந்திருக்கக்கூடும் என ஊகிக்கிறேன்,” என்று அ மீண்டும் சொன்னான். “இன்று நாம் ஒற்றைப் பிரக்ஞை என இந்தக் கோளை நிறைத்துள்ளோம். இங்கிருந்து விரிந்து பிரபஞ்சப் பிரக்ஞையின் ஒரு பகுதியென ஆவதற்காகத் துடித்துக்கொண்டிருக்கிறோம். நம் இறந்தகாலத்தில் இருந்து வந்த ஓர் நினைவுப்பொருள் போல இந்தப் மூளை நம்மிடம் இருந்துகொண்டிருக்கிறது.”

“ஆம்” என்று ச சொன்னான். அந்த படிகத்தை அடைந்து அதற்குள் பதிந்து சிறைப்பட்டிருந்த சிறிய உடலைப் பார்த்தான்.

“இங்கே நிறைந்திருக்கும் நம் முழுமைப்பிரக்ஞை நாம் விரும்பும்படியான உருவெளிப்பாவனைகளை உருவாக்கி கொள்ள முடிகிறது. இதற்குள் முடிவிலாப்பெருக்குகள் என நிகழ்ந்துகொண்டிருக்கும் அக உரையாடல்கள் அவ்வாறுதான் நிகழமுடியும். உரையாடலின் பொருட்டே அந்த முழுமை நானும் நீங்களும் என ஆகி தனித்தனியாக நம்மை உருவகித்துக்கொண்டு இந்த உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது”

ச சட்டென்று “ஆ!” என்றான்.

“என்ன?” என்றான் அ

“அது கண் சிமிட்டுகிறது” என்று ச சொன்னான்.

“என்ன?” என்று கேட்டதுமே அ-வும் அதைப் பார்த்துவிட்டான். அந்த உயிரின் இரண்டு விழிகளிலும் மெல்லிய தோல்சவ்வு போன்ற இமைகள் கண்களை மூடித் திறந்தன. அதன் பார்வை உயிர்கொள்ள, அவர்களின் பார்வையுறுப்புகள் அதன் கண்களுடன் இணைந்தன.

( 3 )

“அந்தக் கோளில் எப்போது இது நிகழ்ந்தது, எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை” என்று அ சொன்னான். “பிற கோள்களை அறிவதென்பது பிரபஞ்சத்தின் உயிர்களின் தீராதவேட்கை. நாம் நம்மால் அறியமுடிகிற பிறகோள்களை எல்லாம் அறிந்து, அங்குள்ள பிரக்ஞைகளுடன் நம்மை இணைத்துக்கொண்டு, நம் பிரக்ஞையை விரிவாக்கம் செய்துகொண்டே இருக்கிறோம். அதன்பொருட்டு நம் பிரக்ஞையை பிரபஞ்சவெளி நோக்கி வீசிக்கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு புதிய கோளின் பிரக்ஞைப்பெருந்தொகுப்பு நம்முடன் இணையும்போதும் நாம் விரிவாகிறோம். மேலும் விரியும் ஆற்றலையும் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.”

“நம் தொடர்புக்கு வரும் கோள்கள் முற்றிலும் தற்செயலாகவே சிக்குகின்றன என்பது ஒரு கோணம். அவை தங்கள் இயல்பால் நாம் அறியும்தன்மையைக் கொண்டுள்ளன என்பதும், அதனாலேயே நம்முடன் எப்போதேனும் தொடர்புகொள்ளவேண்டியவைதான் என்பதும், ஆகவே நாம் அறிவது அறியக்கூடுவதை மட்டுமே என்பதும் இன்னொரு உண்மை. நம் அறிவு பரிணாமம் அடைந்துகொண்டே இருக்கிறது. எந்தப் பரிணாமமும் ஏற்கனவே நிகழ்ந்ததின் வளர்ச்சிமட்டுமே. நுண்மையாக்கமும் வளர்ச்சியும் மட்டுமே. ஆகவே நாம் புதியதாகக் கண்டடைந்த இந்தக் கோள் என்பது நமது வளர்ச்சியில் நாம் வளர்ந்து அடைந்த நமது பகுதி மட்டுமே” அ தொடர்ந்தான்.

“இந்தப் பிரபஞ்சத்தின் அமைப்பு என்பது அது தனக்குள் முடிவில்லாத பிரபஞ்சங்களைக் கொண்டிருக்கிறது என்பதுதான். அந்த ஒவ்வொரு பிரபஞ்சமும் தனக்குள் முடிவில்லாத பிரபஞ்சங்களைக் கொண்டுள்ளது. அந்த பிரபஞ்சங்கள் அனைத்தும் அளவற்றவை. காலம்,வெளி என்றெல்லாம் தனிப்பிரக்ஞைகள் பிரபஞ்சத்தை அளவிட முயன்றதுண்டு. அவை நாமறியும் பிரபஞ்சங்களை பெரியவை என்றும் சிறியவை என்றும் மதிப்பிட்டதுமுண்டு. பிரபஞ்சம் எல்லா வகையான அளவீடுகளுக்கும் அப்பாற்பட்டது. ஆகவே எண்ணிக்கைக்கும் அப்பாற்பட்டதே. ஆகவே இங்குள்ளது ஒற்றைப்பிரபஞ்சம் எனலாம். ஒன்று என்பதும் எண்ணிக்கையே, அதுவும் பொய்யே. ஆகவே நாம் நம் பிரபஞ்சம் என்று பிற பிரபஞ்சங்கள் என்றும் அறிவதும் பொய்யே”

“இப்பிரபஞ்சத்தின் மீறவே முடியாத விதி என நாம் உணர்வது ஒன்றுண்டு. இங்கே ஒவ்வொன்றும் தனக்குரிய பிரபஞ்சத்திலேயே வாழமுடியும். அதற்குள் அது உணரும் காலவெளிக்குள் மட்டுமே அகம் திகழமுடியும். அங்கே அது அறியும் அறிதல்களுக்கும் அறிதல்களை நிகழ்த்தும் அறிதல்முறைகளுக்கும் அந்த காலவெளிக்கு அப்பால் எந்த பொருளும் இல்லை. பிரக்ஞைகளின் எல்லைகள் மீறப்படகூடாதவை அல்ல, உண்மையில் மீறமுடியாதவை” என்றான் அ. “ஒவ்வொரு உயிரும் தனக்கான் தனிப்பிரபஞ்சத்திலேயே வாழ்கிறது. ஒவ்வொரு கோளும் தனக்கான பிரபஞ்சத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பால்வழியும் அதற்கான பிரபஞ்சத்தில் நிகழ்கிறது. ஆனால் இந்த கோளில் எப்போதோ அந்த எல்லை மீறப்பட்டுள்ளது. ஒரு பிரபஞ்சத்தின் அறிவு இன்னொன்றைச் சென்றடைந்தது. அனைத்தும் அக்கணமே மாறிவிட்டிருக்கின்றன. நாம் அதை இங்கே நெடுந்தொலைவில் இருந்தபடி நம் அளவைமுறைகளால் உணர்ந்துகொண்டிருக்கிறோம்”

“அங்கே நிகழ்ந்தது என்ன என்று நான் இவ்வாறு விளக்கமுயல்கிறேன்” என்று அ தொடர்ந்தான். “உள்ளம் என்பதன் பரிணாமமான முழுமைப் பேருள்ளம் என்பதை நோக்கி அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அந்நிலையில் அவர்களுக்கு எங்கிருந்தோ வேறொரு தொடர்பு கிடைத்திருக்கிறது. பிறிதொரு கோளில் இருந்து பிறிதொரு உள்ளம் வந்து அவர்களுடன் இணைந்துகொண்டிருக்கிறது. அந்த பிறிதொரு கோள் என்ன, பிறிதொரு உயிர் என்ன, அந்த உள்ளம் எப்படி அவர்களை வந்தடைந்தது என்பதை அறியமுடியவில்லை. அப்படி இணைந்தமையாலேயே அப்படி இணைவதற்கான சாத்தியம் உண்டு என்றாகிறது. அப்படிச் சாத்தியம் உண்டு என்பதனாலேயே அது பிறிதொரு பிரபஞ்சம் அல்ல என்றும் ஆகிறது. அல்லது இந்த முழுமைப்பிரபஞ்சத்தின் எல்லா பிரபஞ்சங்களும் ஒன்றுடனொன்று இணையும் சாத்தியம் கொண்டிருக்கின்றன”

அ சொன்னான். “அங்கே நிகழ்ந்தது என்ன என்பது என் ஊகம்தான். அங்கிருந்த முழுப்பிரக்ஞை தன்னை தன் நினைவுகளில் இருந்து எடுத்த தனி அலகுகளாக்கி தனக்குள் உரையாடிக்கொண்டிருந்தது. அது தனக்குள் இல்லாத ஒரு பிரக்ஞையைச் சந்தித்ததும் அதிர்ந்தது. அதை உள்ளிழுக்க முயன்றபோது அது தன்னளவே பெரியதும் ஆனால் தன்னால் முழுதறிய முடியாததுமான பிறிதொன்று என்று உணர்ந்தது. அந்த பிறிதொரு பிரக்ஞை வெல்லப்படாமையால் அவர்களின் உடல்தொகைக்கு வெளியே தனியுடலாகவே நீடித்தது. அதனுடன் நீண்டதொரு போராட்டத்தை அப்பிரக்ஞை நிகழ்த்தியது.”

அ தொடர்ந்தான்.”அந்தப் போராட்டத்தில் விந்தையான ஒன்று நிகழ்ந்திருக்கலாம். எல்லா நிகழ்வுகளுமே விந்தையானவைதான் என்றாலும் இது முற்றிலும் புதியது. அந்த புதிய உள்ளத்தை அந்தப் பேருள்ளமும் நடிக்கத் தொடங்கியது. தன்னை அது அந்த புதிய, தனித்த, சிறிய உள்ளத்தின் அளவுக்கே பகுத்துக்கொண்டு அதனுடன் உரையாடியது. அதன் வழியாக அது பிரிந்து பெருகிக்கொண்டே இருந்தது. முடிவில்லாத சிறுதிவலைகளாகத் தன்னை அது ஆக்கிக்கொண்டது.”

“அந்த ஒவ்வொரு துளிக்கும் தன்னடையாளம் தேவைப்பட்டது. ஆகவே அது தன்னை வகுத்துக்கொண்டது. ஆகவே பிறிது உருவாகியது. பிறிதை அறியும் ஆவல் உருவாகியது. அறிதல் நிகழ்ந்து, அறிவு உருவாகியது. அறிவென்பது அறிவதன் எல்லைகளை மேலும் வகுத்து அறிபடுபொருளை மேலும் விலக்கியது. விலகுந்தோறும்  அறிபடுபொருள் பெருகிக்கொண்டே செல்லும். அணுகுந்தோறும் அது சுருங்கிச் சுருங்கி ஒற்றைப் புள்ளி என்றாகும். பெருகும் அறிவு அறியாமையையே உருவாக்கும். அறியாமையில் முதன்மையானது தன்னிலையே. அறியும்தன்னிலை தன்னில் இருந்து பிரபஞ்சத்தை நோக்கிச் செல்கிறது. ஆகவே அது சென்று முடிவதே இல்லை. அறிவனவற்றைக்கொண்டு அது தன்னையே படைத்துக்கொள்கிறது. தன்னுள் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி அதற்குள் இன்னொரு தன்னை பொருத்திக்கொள்கிறது. பிரபஞ்சத்தன்னிலைக்கும்  தானென்னும் தன்னிலைக்குமிடையே முடிவிலாது மோதிக் கொந்தளிக்கிறது. அங்கே நிகழ்ந்தது அதுதான்.”

அ சொன்னான். “அதற்கு முன் அந்தக் கோளில் உடல் என தனியாக ஏதும் இருக்கவில்லை. அங்குள்ள எல்லா பருப்பொருட்களும் மின்னூட்டம் கொண்டு மொத்தமாக அந்தக் கோளே ஒரு மூளை என்றாகியிருந்தது. அவற்றில் முழுப்பிரக்ஞை திகழ்ந்தது. அது தன்னுள் கனவுகளென தனிப்பிரக்ஞைகளையும் தனியாளுமைகளையும் உருவாக்கி தன்னை நிகழ்த்திக்கொண்டிருந்தது. அந்த பருப்பொருள் பெருக்கில் ஒரு துளியே அங்கு வந்த அச்சிறு உடலைத் தொட்டு அறிந்தது. அந்த பிரக்ஞைநாடகத்தின் கொந்தளிப்பினூடாக அங்கே தனிப்பிரக்ஞைகள் உருவாயின. அவை தனிமூளையை நாடின. தனிமூளைக்கு தனி உடல் தேவைப்பட்டது. விளைவாக அங்கே இருந்த பருப்பொருட்களில் இருந்து தனித்த உடல்கள் உருவாகி வந்தன. அதற்கு அங்கு வந்த உடலையே அவை மாதிரியாக ஆக்கிக்கொண்டன. அதையே நகலெடுத்தன. முடிவிலா அளவுகளில், முடிவிலா வடிவுகளில், அந்த உடலின் முடிவற்ற சாத்தியக்கூறுகளை உருவாக்கிக் கொண்டே இருந்தன. அந்த கோளம் மீண்டும் உயிர்கொண்ட உடல்களால் நிறைந்தது.”

“அந்த உயிரிகள் ஒன்றையொன்று உடல்வழியாக அறிந்தன. உடலை அலகாக்கி அந்தக் கோளையும் பிரபஞ்சத்தையும் அறியலாயின. அறிவை அவை பெருக்கிக் கொண்டே இருந்தன. உடல்களில் அறிவை வெளியில் இருந்து மின்னலைகளாக சேமித்துக்கொண்டே இருந்தன. அந்த உடல்களை வெவ்வேறு கருவிகளின் வழியாக விண்ணுக்கு செலுத்தி வானமென விரிந்த தங்கள் பிரபஞ்சத்தை அறிந்துகொள்ள முயன்றன.அவற்றில் ஒன்றை என் பிரக்ஞை தொட்டது. அந்த உடலை என் பருப்பொருள் தானும் பிரதி எடுத்தது. அதன் வடிவமாக நான் இங்கு அமர்ந்து பேசுகிறேன்.” என்றான் அ. “எனது இந்த உடல் நான் உருவாக்கிக்கொண்ட தோற்றம்தான். ஆனால் அதன் முதல்வடிவம் எது என என்னால் அறியமுடியவில்லை”

( 4 )

 என் குரலைத் தவிர்ப்பதை நீ விட்டுவிட்டாய். இப்போது உன் இருப்பையே எனக்கு முழுமையாக அளித்துவிட்டிருக்கிறாய். உன் உள்ளத்தில் நிறைகிறேன். உன் உடலில் திரவமாகவும், அத்திரவங்களில் மின்னூட்ட அலைகளாகவும் நான் நிகழ்ந்து கொண்டிருக்கும் என் பெயர் அ.

கேள், மிகமிக நெடுங்காலத்திற்கு முன், உன் கணக்குகளால் அளவிடமுடியாத காலத்திற்கு முன், பருப்பொருளில் உருவான மூளை என்னும் அமைப்பு தன்னை தான் என உணர்ந்தது. அது வெறும் உணரும் புலன்களை இணைக்கும் நரம்புவலையின் மையப்புள்ளியே என்றாலும் அது தன்னை அறியும்தன்னிலை என எண்ணிக் கொண்டது. புலன்கள் வழியாக தன்னுள் வந்து நிறைந்துகொண்டே இருந்த பருப்பிரபஞ்சம் சார்ந்த அடையாளங்களைக் கொண்டு அந்த தன்னிலையை சமைத்துக் கொண்டே இருந்தது. அந்த அடையாளங்கள் முடிவில்லாதவை. அவற்றின் இணைவுச்சாத்தியங்களும் அளவிறந்தவை. இந்த பிரபஞ்சத்தில் அனைத்துமே முடிவிலாதவை, ஏனென்றால் இப்பிரபஞ்சமே முடிவற்றது. அவ்வாறாக அந்த ஒவ்வொரு மூளைகளும் ஒரு பிரபஞ்சமாக ஆயின. உன் கண்ணுக்குத் தெரியாத சின்னஞ்சிறுத் துளியுடலில் உறையும் அறியும்தன்னிலை கூட ஒரு முடிவிலிப்பிரபஞ்சமேயாகும்.

முடிவிலாதது எதுவும் முழுமையானதும்கூட. ஆகவே அதில் இன்னொன்று நுழையவோ இணையவோ முடிவதில்லை. இங்கு நீ அறிந்தும் அறியாமலும் நிறைந்திருக்கும் முடிவில்லாத கோடி மூளைகள் ஒவ்வொன்றும் முழுமையான பிரபஞ்சம். ஒன்று இன்னொன்றை அறிவதே இல்லை. அறிய வாய்ப்பே இல்லை, ஏனென்றால் இன்னொன்றுக்குள் அது எவ்வகையிலும் நுழையமுடியாது. ஆகவே அது பிறிது என அறிவது தன் அறிதலை மட்டுமே. அறிபவை அறிவதெல்லாம் அறியும் செயலை மட்டுமே. இங்கே ஒவ்வொரு பிரபஞ்சமும் தன் முடிவின்மையின் முழுமையின் காரணமாக வளராமல், நகராமல், எதுவும் நிகழாமல், இன்மையென்னும் நிலை இல்லாமையால் இருப்பும் இல்லையென்னும் நிலையில் இருந்துகொண்டிருப்பது என்பது நான் இப்படி அதை உன்னிடம் சொல்லும் இக்கணத்தில் இந்த அர்த்தம் உருவாகும் தருணத்தில் மட்டுமே என்று அறிந்துகொள். பிறிதில்லாமையில் திகழும் இப்பிரபஞ்சங்களுக்கு உள்ளேயே முடிவில்லாமல் உருவாக்கி உருவாக்கி அழிக்கும் உருவங்களும் எண்ணங்களும் உருவகங்களும் என பிரக்ஞை காலவெளியென தன்னைத்தானே நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

நான் அ. நீ வாழும் இந்தக் கோளில்தான் என் வடிவம் தோன்றியது. பெருங்கடல்களில் இருந்து நிலம் நோக்கி பரிணாமம் கொண்டனர் என் முன்னோடியினர். பின்னர் பறப்பவை, துள்ளுபவை, ஊர்பவை, நீந்துபவை, புதைபவை என பலநூறு உடலுருக்களை எடுத்துக்கொண்டு இந்தக் கோளை நாங்கள் ஆட்சிசெய்தோம். ஒருவரை ஒருவர் அறிந்தோம், ஒவ்வொருவரும் அனைத்தையும் அறிந்தோம். விரிந்துகொண்டே இருந்த அறிவை ஒவ்வொருவரும் முடிந்தவரை தகவல்களாக மூளைக்குள் செறிவூட்டிக்கொண்டோம். பின்னர் அந்த அறிவை அலைகளென எங்கள் மூளைக்குள் செலுத்திக்கொண்டோம். அலைகளுடன் இணைந்து அனைத்து மூளைகளும் ஒன்றென்றான போது ஒற்றைப்பெரும் பிரக்ஞை என இந்தக் கோளின் மேல் நிறைந்திருந்தோம். அப்பிரக்ஞையின் ஒரு சிறு துளி என என் உடல்கொண்ட ஒரு மூளை விண்வெளிக்கு ஒரு படிகச்சிறைக்குள் பதிக்கப்பட்டு அனுப்பப்பட்டது.

அங்கே அது காலவெளியில் சென்றுகொண்டிருந்தபோது இங்கே திகழ்ந்த பிரக்ஞை பருப்பொருளின்றி நிகழும் ஆற்றலை அடைந்தது. பருப்பொருளில் சிக்கிக்கொண்டிருந்த அது அதன்பின் இக்கோளத்தை உதறி வெளியேறியது. விலகிவிலகி பெருகிப் பெருகிச் சென்ற அது வேறெப்போதோ வேறெங்கோ என் உடலையும் பிரக்ஞையையும் மீண்டும் கண்டடைந்தது. என்னில் இருந்து மீண்டும் தன்னை உருவாக்கிக் கொண்டது. அந்தச் சுழற்சியில் மீண்டும் நான் இந்தக் கோளுக்கே வந்தேன். எப்போதோ, எப்படியோ இங்கே என் முன்னோடி உடல்வடிவங்கள் மீண்டும் நிகழ்ந்தன. அதன் விளைவாகத்தான் நான் இங்கே இப்படி உடல்கொண்டு அமர்ந்திருக்கிறேன். என்னுள் என் பிரபஞ்சம் நிறைந்திருக்கிறது. என் இரண்டு பெரிய கண்களில் பிரக்ஞையாக அது துளித்து ஒளி கொண்டிருக்கிறது.

என் முன் நீ அமர்ந்திருக்கிறாய். உன்னுள் நிறைந்திருக்கும் உன் பிரபஞ்சம் அலைகொண்டு கொந்தளிக்கிறது. உட்சுவர்களில் ஓங்கி ஓங்கி அறைந்து சிதறிக்கொண்டிருக்கிறது. ஆனால் உன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் தங்களை முழுமையாக மூடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் முற்றிலும் அப்பாலுள்ளது. அவர்களுக்குள் அவர்கள் நிகழ்த்திக்கொள்ளும் பிரபஞ்சத்தை நீ அறியமுடியாது. அங்கிருந்து வரும் சொற்களும் தொடுகைகளும் உனக்கு உனது பிரபஞ்சத்தின் அலைகளென்றே தெரிகின்றன. உன்னிடமிருந்து அவர்களுக்கு செல்வனவும் அவ்வாறே அவர்களுக்கு அவர்களின் பிரபஞ்சத்தின் அலைகளே. இங்கே எந்தப்பிரபஞ்சமும் தனக்கு அப்பால் செல்லமுடியாது. தானற்ற ஒன்றை அறியவே முடியாது.

தன்னுள் தன் அனைத்தையும் முற்றொடுக்கிக் கொள்பவர்களின் நடுவே, உன்னுள் இருந்து மிகச்சிறு துளி ஒன்று கொந்தளித்து தெறித்து வெளியே விழுந்து தவித்துக் கொண்டிருந்தமையால் உன்னை நான் அறிந்தேன். நான் உனக்கான காலத்தையும் இடத்தையும் உருவாக்கிக்கொண்டு அதில் என் உடலை அமைத்தபடி உன்னருகே வந்தேன். மழைமேகங்கள் இருண்டு கொண்டே இருக்கும் இந்தப் பொழுதில் நான் உன் இல்லத்தின் முற்றத்தில் அமர்ந்து என் தொண்டைப்பை புடைத்து அதிர எழுப்பிய ஒலியை நீ “மழை! மழை!” என்று கேட்டு என்னை திரும்பி நோக்கினாய். என் பச்சைப்பழுப்பு வண்ணத்தை பாசிபடிந்த பழம்பாறைத் துண்டு என எண்ணி  என்னை நோக்கி நீ விரல்சுட்டியதும் நான் பக்கவாட்டில் துள்ளி விலகினேன். உன் மொழியில் எனக்கொரு பெயர் உண்டு, அதை நீ சொல்லவில்லை. உனக்குள் இருந்து சொற்கள் வெளியேறாமலாகி நீண்டகாலமாகிறது.

மீண்டும் நான் என் பெரிய பின்னங்கால்களால் உந்தி தெறித்தெழுந்து துள்ளி உன் அருகே வந்து முன்னங்கால்களை ஊன்றி அமர்ந்து தொண்டை அதிர குரலெழுப்பினேன். மேகங்கள் உறுமிக்கொண்டிருக்க சிறிய மின்னல்கள் வானில் துள்ளிக்கொண்டே இருந்தன. முகில்களின் மின்னூட்டம் காற்றில் நிறைந்து என் ஈரமான தோலை அதிரச்செய்தது. நீ குனிந்து என் கண்களைப் பார்க்கிறாய். நம் விழிகள் சந்தித்துக்கொண்ட தருணம் நம் இரு பிரபஞ்சங்களும் இடியோசையெழுப்பித் திறந்துகொண்டு ஒன்றையொன்று அறிந்தன. பார், பொழிகிறது பெருமழை.

3 comments for “பழம்பாறை (அறிவியல் சிறுகதை)

  1. M Krishnan
    January 5, 2026 at 6:44 pm

    ‘ஓர் உயிர் இன்னொன்றுடன் தொடர்புகொள்ளத் தொடங்கியது போன்ற ஒரு நிகழ்வு அது’

    Dear Jayamohan,

    What a story! It requires a lot of patience and curiosity to read. I have read it several times to fully grasp the concepts you’re exploring in this science fiction, and I’m still not sure if I’ve completely understood it.

    As you mentioned earlier, science fiction should directly address philosophical questions, and in your recent stories, I can clearly see this. You are dealing with consciousness that is unknown and unfamiliar to humanity.

    We can say that your story Pazhampaarai explores the collective consciousness of the universe. It shows how communication has unified consciousness into a single entity, and this oneness extends infinitely. Each individual in the universe feels everything within themselves, and everything (the universe) becomes an individual entity.

    In this historical journey of evolution, humanity discovers that the ultimate wisdom is “The Sky.” Our Vedas call it Shruthi, and from there, all knowledge is derived. Vedanta refers to it as Knowledge or That One. I believe that all societies and cultures on Earth have a similar concept, and from this idea, the phenomenon of God evolves. The Sky is constantly trying to communicate with us, like an enchantment.

    Regards,
    M. Krishnan

  2. Ganapathi Raman Lakshmanan
    January 7, 2026 at 10:42 pm

    மிகவும் பொறுமையுடன் மிக. கவனத்துடன் ஒருமுறைக்கு இருமுறை வாசித்து பார்த்து தெரிந்து கொண்டேன் இந்த
    சி
    றுகதை புரியும் அளவுக்கு எனக்கு மூளை இல்லை

  3. Mrs Kala Pragatheeswaran
    January 18, 2026 at 8:59 am

    ஆத்துமா என ஒற்றை பிரக்ஞை யில் இணைய முடியும். கடவுள் என்பதே அது தான். எனக்கு புரிந்தது இவ்வளவு தான்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...