முன்னோடிகளின் வரிசையில்

2026 ஜனவரி தமிழாசியா சந்திப்பில் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளின் வரிசையில் எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி மற்றும் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களான வ. ராசரத்தினம் மற்றும் தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் சிறுகதைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மூன்றாம் ஆண்டாகத் தொடரும் தமிழாசியா சந்திப்பில் சிறுகதைகள் குறித்து முன்வைக்கப்படும் வாசகப் பார்வையின் மீதும் காத்திரமான விமர்சனப் பார்வை முன்வைக்கப்படுவது அவசியமென எழுத்தாளர் ம.நவீன் குறிப்பிட்டார். ஒரு வாசகனாக இரண்டாண்டுகள் போதுமான வாசகப் பயிற்சியைச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அடைந்திருக்கின்றனர். அடுத்தக் கட்டமாக, வாசகப் பார்வையை ஒட்டி முன்வைக்கப்படும் விமர்சனப்பார்வை இன்னும் வாசிப்பை விரிவுப்படுத்துமென்றார். இவ்வாண்டு தொடங்கி ஒவ்வொரு சந்திப்பிலும் தமிழின் முக்கியமான நாவலொன்றைப் பற்றிய வாசிப்பனுபவப் பகிர்வும் இடம்பெறும் என்றார். அந்த வகையில் தமிழில் நவீனத்துவ நாவல்களில் முதன்மையானதாகக் கருதப்படும் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ எனும் நாவலைப் பற்றி அரவின் குமார் தன் வாசிப்பனுபவப் பகிர்வை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’ சிறுகதை குறித்து சுதாகர் தன் பார்வையைப் பகிர்ந்து கொண்டார். பிராமணக் குடும்பத்துப் பின்புலத்தில் நிகழும் கதையில் மிகத் தெளிவாகவே மாமியார் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மருமகள் வாழ்வதைக் காண முடிந்தது. அந்தச் சமூகக் கட்டுப்பாடுகளின் அழுத்தமே மருமகளை மாற்றி வாக்களிக்கச் செய்வதாகச் சொன்னார். ஒட்டுமொத்தமாக, மாமியார் வழியாக சமூக அழுத்தத்துக்கு ஆளாகும் மருமகளின் நிலையையே கதையில் காண முடிந்ததாகச் சொன்னார். தொடர்ந்து, அந்தக் கதையை ஒட்டிப் பேசிய புஷ்பா, மாமியாரின் பிடியிலிருந்து விடுபட்டு வாக்களிக்க வரிசையில் நிற்கும் போதும் தோன்றும் மனச்சித்திரங்கள் நன்றாக இருந்ததாகக் குறிப்பிட்டார். எழுத்தாளர் கனகலதாவின் ‘சீனலட்சுமி’ சிறுகதையிலும் வாக்களிப்பு வரிசையில் நிற்கும் போது ஆசுவாசத்தை உணரும் பாத்திரத்துடன் ‘மருமகள் வாக்கு’ சிறுகதையைத் தொடர்புபடுத்த முடிந்ததாகக் குறிப்பிட்டார்.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் முடிவெடுத்தப் பின்னரும் வாக்களிப்பு மையத்துக்குச் சென்ற பின்னால் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி ஏற்பட்ட குழப்பத்தை இளம்பூரணன் பகிர்ந்து கொண்டார். தனிப்பட்ட முடிவுகளைத் தாண்டி சூழலின் அழுத்தமும் முடிவெடுப்பதில் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார். அடுத்துப் பேசிய, அரவின் குமார் கதையின் இறுதிப் பகுதியே கதையைப் புரிந்து கொள்ள உதவியதாகக் குறிப்பிட்டார். கதையின் இறுதியில் மருமகளான ருக்குமணி மூடிய அறைக்குள் வாக்களிக்கும் போது நிச்சயமாக அது மாமியாருக்குத் தெரிய சாத்தியமில்லை. இருந்தப்போதும் அவளை மாற்றி வாக்களிக்க உந்தும் சூட்சுமக் கையைப் பின் தொடர்ந்து பார்த்தால் கதையின் மையம் புலப்படும் என்றார். கதையின் தொடக்கம் முதலே மாமியார் தன் மீது செலுத்தும் அதிகாரத்தை உணர்ந்தவளாகவே மருமகள் இருக்கிறாள். மாமியாரின் அதிகார வெளிக்கு அப்பால் அவள் ஆசுவாசத்தை உணரக் கூடிய மாட்டுத் தொழுவத்தில் மாட்டுடனான உரையாடல் என்பது தன்னுரையாடல் போலவே நிகழ்கிறது. தன்னிடம் சொல்லிக் கொள்ள வேண்டியவற்றை ருக்குமணி மாட்டுக்கு அசட்டுத்தனமாகச் சொல்கிறாள். அப்படியிருக்க உள்ளூர தன்னைத் தானே அஞ்சக்கூடியவளாகத்தான் மருமகள் விளங்குகிறாள். சொந்த முடிவுகளை எடுக்காமல் மாமியாரின் கட்டுப்பாட்டுக்கும் அதிகாரத்துக்கும் இணங்கிப் போவதன் வழியே தன்னைச் சிறைப்படுத்திக் கொள்கிறாள் என அரவின் குறிப்பிட்டார்.

அடுத்து பேசிய அபிராமி, ருக்குமணி தன்னை ஒரு செளகரியமான வெளிக்குள் இருத்திக் கொள்வதையே விரும்புவதாகக் குறிப்பிட்டார். கிளிக்கு வாக்களிக்கும் முடிவை மாற்றிக் கொள்வதே கூட தன்னுடைய செளகரிய வளையிலிருந்து வெளிப்பட விரும்பாததனாலே என்றார். மாமியார் பழக்கிய கட்டுப்பாடுகளுக்கு இணங்கிப்போக ருக்குமணி பழக்கமாக்கிவிட்டாள். அதிலிருந்து விடுபடுவதென்பது எளிமையானதன்று என்றும் அபிராமி குறிப்பிட்டார். அடுத்து பேசிய எழுத்தாளர் ம. நவீன் ஒரு நல்ல கதையின் மையமான சாரத்தை வாசகன் கண்டுகொள்ளும் போதுதான் கதை எழுப்பும் தொடர்ந்த விவாதத்தையும் அடைய முடியுமென்றார். இந்தக் கதையைப் பொறுத்தளவில் யாருக்கு வாக்களிப்பதென முடிவெடுத்தப் பின்னரும் முடிவை மாற்றிக் கொள்ளச் செய்வது என்ன என்பது கதை முன்வைக்கும் மையமான வினா. மனிதர்களிடம் நான் என்ற தன்னுணர்வு மிகுந்திருக்கிறது. ஆனால், மனமென்பது வெவ்வேறு விசைகளால் தொடர்ந்து அலைகழிந்து கொண்டே இருக்கிறது. ஒருகணம் தன்னுணர்வினால் உந்தப்பட்டு ஒரு முடிவை எடுப்பவன், அடுத்த கணத்திலே தான் என்ற உணர்வு நீங்கி வேறு முடிவை எடுப்பான். மன்னிப்புக் கேட்டுவிடலாமென்ற எண்ணத்தில் இருக்கும் மனம் அடுத்த கணமே அதற்கு மாறான முடிவை எடுத்திருக்கும். தன்னுணர்வில் நிலைகொள்ளாமல் அலைகழிப்பதாகவே மனம் இயங்குகிறது. இந்த இரண்டு விசைக்குமான போராட்டமென்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடியது. மனித மனத்தை அலைகழிக்கும் இந்த இருவிசைக்குமான போராட்டத்தை இலக்கியம் வெவ்வேறு வகையில் முன்வைத்துக் கொண்டே இருக்கிறது. அண்மையில் வல்லினம் இதழில் வெளிவந்த அறிமுக எழுத்தாளர் தன்யாவின் ‘சாதகம்’ எனும் சிறுகதையும் இந்த மையத்தைத்தான் தொட்டுப் பேசுவதாக நவீன் குறிப்பிட்டார். நான் என்ற விசையும், நான் என்ற தன்னுணர்வை அழிப்பதும் என்ன என்ற ஆன்மீகமான கேள்வியொன்றை எழுப்பும் கதையாக ‘மருமகள் வாக்கு’ சிறுகதையை அணுகலாமென்றார். அந்தக் கதை உணர்த்தும் ஆன்மீகமான சாரத்தையொட்டித் தான் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியிடம் மேற்கொண்ட உரையாடலொன்றை எழுத்தாளர் சர்வின் பகிர்ந்து கொண்டார். நேரில் வெளிப்படுவதும் கனவில் வெளிப்படுவதுமான இரு வேறு தன்னுணர்வு நிலைகளைச் சுட்டி எது உண்மையான நான் என்ற கேள்வியைச் சுவாமியிடம் தான் முன்வைத்ததாகக் குறிப்பிட்டார். அந்த வினாவுக்கு, இரண்டு தன்னிலைகளும் மெய்யானதென்றும் அதனை நாம்தான் வேறுப்படுத்திப் பார்க்கிறோம் என்ற பிரம்மத்தை வலியுறுத்தும் கோட்பாட்டைச் சுவாமி விளக்கியதாக சர்வின் குறிப்பிட்டார்.

அடுத்ததாக, இக்கதையைப் போலவே கிருஷ்ணன் நம்பியின் மற்றொரு சிறுகதையான ‘விடுதலை’ சிறுகதையும் ஆன்மீகமான கேள்வியொன்றை முன்வைப்பதாகக் குறிப்பிட்டு அந்தக் கதையையும் ம. நவீன் விளக்கிச் சொன்னார். பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் விடுதலை நாளின் நிறைவில் வரைந்து எடுத்துச் சென்ற காகிதக் கொடிகளின் வண்ணங்கள் மழையில் கரைந்த பின்னர் கைகளைக் கோர்த்துக் கொண்டு மாணவர்கள் வீட்டுக்குத் திரும்பும் கதை நிறைவைச் சுட்டிக் காட்டி உண்மையான விடுதலையின் பொருளைச் சுட்டிய கதையென்றார்.

அடுத்த கதையான கிருஷ்ணன் நம்பியின் ‘தங்க ஒரு’ சிறுகதையை வாசிக்கும் போதே மாய யதார்த்தவாதக் கதை என்பதைக் கண்டுகொண்டதாக சர்வின் குறிப்பிட்டார். இந்தக் கதையில் வெளிப்படும் குள்ள மனிதனின் வாழ்க்கை சரிதம் என்பது முற்றிலும் யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டது. அந்தக் குள்ள மனிதனின் வாழ்க்கை என்பது அதிகாரத்தால் அழுத்தப்பட்ட மனிதர்களைக் காட்டும் உருவகமாகப் புரிந்து கொண்டதாக சர்வின் குறிப்பிட்டார். அடுத்ததாக பேசிய அரவின், சாகசக் கதைகள், வேடிக்கைக் கதைகள் ஆகியவற்றில் சித்திரிக்கப்படும் கற்பனை உலகில் மனிதர்கள் தங்கள் இயல்புக்கு மீறியவர்களாகச் சித்திரிக்கப்படுவதுண்டு. அந்த இயல்பைத்தான் எழுத்தாளர் 1970களிள் சென்னை போன்ற பெருநகரத்துடன் பொருத்திப் பார்க்கிறார். அன்றைய சென்னை நெருக்கடிகளும், விலை வாசி உயர்வு, தூய்மையற்றப் பகுதிகள் என நிறைந்திருக்கிறது. இப்படியான அழுத்தமிகுந்த சூழலில்தான் ஒருவன் தன் உயரம் குன்றி காலணியில் வாழப் பழகிக் கொள்கிறான் எனும் போதுதான் கதை பேசும் மாய யதார்த்தவாதம் அழுத்தமானதாவதாகக் குறிப்பிட்டார். இந்தச் சூழலைத்தான் தன்னுடைய மனைவிக்கு இயலாமையுடன் கணவன் எழுதும் கடிதமாக கதையில் அமைந்திருக்கிறது. அடுத்ததாக பேசிய எழுத்தாளர் நவீன், மாய யதார்த்தவாதம் என்பது வேடிக்கைக்குரிய பாணி அல்ல. மாறாக, வாழ்வின் ஓர் இக்கட்டை, சோகத்தை இன்னும் அழுத்தத்துடன் முன்வைப்பதற்கான கருவி என குறிப்பிட்டார்.

வாழ்வியல் சிக்கல்களினால் ஒரு மனிதனால் தன் வாழ்வை எவ்வளவு சுருக்கிக் கொள்ள முடியும் என்பதற்கான கேள்வியைத்தான் மாய யதார்த்தவாதப் பாணியில் கதை அணுகுவதாக நவீன் குறிப்பிட்டார்.  இந்தக் கதை முன்வைக்கும் வாழ்வியல் நெருக்கடிகளை யதார்த்தவாதப் பாணியிலே முன்வைத்திருக்கலாமே என்ற கேள்வியை இளம்பூரணன் எழுப்பினார். கதை பேசும் பெருநகர நெருக்கடிகள் யதார்த்தவாதக் கதையில் இன்னும் துலக்கமாகியிருக்குமே என்றார். வாழ்வின் நெருக்கடிகள் கூடும் போது வாழ்வைச் சுருக்கிக் காலணிக்குள் ஒடுங்கி போவதாகச் சித்திரம் அமைக்கப்படுவது இன்னுமே அந்தச் சூழலை அழுத்தப்படுத்தியிருப்பதாகவே தான் உணர்வதாக நவீன் குறிப்பிட்டார். அதிலும் காலணியில் மகிழ்ச்சியாகவே வாழ்வதாக சொல்லும் பாத்திரம் தரும் அழுத்தத்துடன் குடிசையில் துயருடன் வாழ்வதாகச் சொல்லும் பாத்திரம் தரும் அழுத்தமும் வெவ்வேறானது என்பதையும் உதாரணத்தின் வழி சொன்னார்.  மேலும் பேசிய சல்மா, ஒரு நெருக்கடியான சூழலை மிக இயல்பாக முன்வைக்க மாய யதார்த்தவாத பாணி உதவியிருப்பதாகக் குறிப்பிட்டார். பெருநகரத்தின் மேம்பாடு என்பது மனிதர்களின் வாழ்வைச் சுருக்கிப் போடுவதைப் பற்றிய விமர்சனத்தைக் கதையில் காண முடிந்ததாக அபிராமி குறிப்பிட்டார்.

அடுத்த கதையான, ‘மீன்கள்’ சிறுகதையைப் பற்றி பேசிய தயாஜி மலையக மக்களின் வாழ்க்கை துயரைப் பேசுவதாகக் குறிப்பிட்டார். இந்தக் கதையில் தலைப்பு கதை பேசும் வாழ்வியல் சோகத்துக்கு நன்கு பொருந்திப் போவதாகக் குறிப்பிட்டார். தங்களுடைய வாழ்க்கை தேவைக்காக இன்னொருவனை மிதித்து மேலேற மனிதன் தயங்குவதில்லை என்ற உண்மையைத்தான் கதை பேசுகிறது. அந்த வாழ்க்கை உண்மையைத்தான் தன்னைவிட எளிய மீனை உண்ணும் மீன்களைப் பற்றி கதையில் குறிப்பிடுவதன் மூலமும் ‘மீன்கள்’ எனக் கதைக்குத் தலைப்பிட்டதன் வாயிலாகவும் ஆசிரியர் விளக்குகிறார் என்றார். அடுத்து, மையக் கதைப்பாத்திரம் அடையும் குற்றவுணர்ச்சியையும் தொட்டுக் காட்டிப் பேசினார். அடுத்து பேசிய சல்மா, கதையில் பேசப்படும் மக்கள்தான் மீன்களைப் போல வாழ்க்கையில் தத்தளிப்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர் என்றார்.  மையக் கதைப்பாத்திரம் தான் அடையும் குற்றவுணர்விலிருந்து விடுபட காரணங்களை மனதுக்குள் தேடித்தேடி வாழ்க்கை அவலத்தையும் சேர்த்துச் சொல்வதாகக் கதை அமைந்திருப்பதாகச் சொன்னார். கதையில் பேசப்படும் சில வரிகள் கதை பேசும் தளத்தை நேரடியாகத் திறந்து காட்டுவது போல இருந்ததாக இளம்பூரணன் சொன்னார். அதைத் தொட்டுப் பேசிய ம. நவீன், பல சமயங்களில் கதை பேசும் தளத்தை இன்னும் துலக்கப்படுத்த சில உவமைகள் உதவி புரியக்கூடும். அதனைக் கதைக்குள் பேசப்படும் பிரச்சாரம் என எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு சிக்கலைக் கதைக்குள் நிறுவ கருத்துப் பிரதிநிதிகளாகக் கதைப்பாத்திரங்களை உருவாக்கிக் கருத்துகளைக் கதையில் நேரடியாகத் திணிக்கும் போதுதான் கதை பிரச்சாரமாகிறது. ஆனால், ‘மீன்கள்’ சிறுகதை ஒரு தனிமனிதனின் அகச்சிக்கலைப் பேசி ஒரு மானுட அவலத்தை முன்வைப்பதாலே கலையாகிறது என்றார்.

அடுத்த கதையான வ.ராசரத்தினத்தின் ‘தோணி’ சிறுகதையைப் பற்றி சாலினி பேசினார். ‘தோணி’ கதை நிகழும் காலக்கட்டமான 1950களின் முற்பகுதியில் இலங்கையில் ஹர்த்தால் போராட்டம் நிகழ்ந்திருக்கிறது.  முதலாளித்துவ எதிர்ப்பைப் பின்னணியாகக் கொண்டே ஹர்த்தால் போராட்டம் நிகழ்ந்திருக்கிறது. இந்தக் கதை பேசும் தளமும் அதனுடன் ஒத்துப்போவதாகக் குறிப்பிட்டார். இந்தக் கதை உழைப்பிலிருந்து அந்நியப்படுகின்ற மனிதனைப் பற்றி பேசுவதாகவும் சொன்னார். கதையின் மையப்பாத்திரம் தொடக்கம் முதல் இறுதி வரையில் தன் உழைப்பிலிருந்து கிடைக்கும் எதற்கும் உரியவனாக இல்லை. தோணி, மீன்கள், காதலி என எதையுமே அவனால் சொந்தம் கொண்டாட முடியவில்லை. ஆகவே, உழைப்பிலிருந்து அந்நியப்படுகின்றவனின் கதையைத்தான் தோணி கதை பேசுவதாக சாலினி குறிப்பிட்டார். உழைப்பவனுக்கு எதுவும் சொந்தமாக இல்லை என்ற வரி கதையிலே நேரடியாகச் சொல்லப்படுவதைச் சாலினி சுட்டிக்காட்டி இந்த வரிகளால் கதையில் பிரச்சாரம் இருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியுமா எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த எழுத்தாளர் நவீன், புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’, ஜெயகாந்தனின் கதைகளிலும் இந்த மாதிரியான பிரச்சாரம் தொனிக்கும் வரிகள் இருப்பதைக் காண முடியும். அவற்றை அக்கதைகளின் பலவீனமாகக் குறிப்பிடலாமே ஒழிய அதனால் அந்தக் கதையை முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது என்றார். இந்தக் கதையில் தலைமுறை தாண்டி தொடர்கின்ற வறுமையின் கொடுமையைக் காண முடிவதாக சிவரஞ்சனி பகிர்ந்து கொண்டார். அதோடு, பொருளாதாரத்தை முன்வைத்தே வாழ்க்கை முடிவுகளை எடுக்கக்கூடியவனாக மையக்கதைப் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது என்றார். அடுத்து பேசிய அபிராமி, வாழ்க்கையின் எல்லாவற்றையும் தோணியுடன் பொருத்திப் பார்க்கக்கூடிய மையக் கதைப்பாத்திரத்தை அடையாளச் சிக்கல் கொண்டவனாக அணுக முடிந்ததாகக் குறிப்பிட்டார். இறுதியாகப் பேசிய எழுத்தாளர் ம.நவீன் அடிப்படையில் விடுதலையை அடைய எண்ணும் ஒருவனின் கதையாக ‘தோணி’ கதையைக் காணலாம் என்றார். பொருளாதார விடுதலை, சமூக விடுதலை என அவன் அடைய நினைக்கும் விடுதலைகளின் பின்னால் தோணியே இருக்கிறது. அவனுடைய மண உறவு, வாழ்க்கை, மகிழ்ச்சி எல்லாவற்றுக்குமே தோணியே ஆதாரமாக இருக்கிறது. அந்தத் தோணியை விடுதலை எனப் பொருள்படுத்திக் கொண்டால் கதை அளிக்கும் திறப்பு இன்னும் விரிவானதாக இருக்கும். அவன் அடைய நினைக்கும் அகவிடுதலை, சமூக விடுதலை என எல்லாவற்றையும் வாசிப்பில் அடையமுடியுமெனக் கூறி சந்திப்பை நிறைவு செய்தார்.

நவீனத் தமிழ் இலக்கிய உலகத்துக்குக் குறைவான படைப்புகளையே தந்திருந்தாலும் குறிப்பிடத்தகுந்த படைப்புகளை எழுதிய முன்னோடி எழுத்தாளர்களை அறிந்து கொள்ளும் வகையில் சந்திப்பு நடைபெற்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...