மெய்போலுமே மெய்போலுமே

2019-இல் நான் வல்லினத்தில் ‘தையும் பொய்யும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். பிறகு 2021-இல் மலேசிய தமிழ்ச்சூழலில் நடந்த சில அதீத செயல்பாடுகள் காரணமாக அக்கட்டுரையை மீள் பார்வைக்குக் கொண்டுவந்தேன். அக்கட்டுரையின் மைய கருத்து, பொதுவாக தைப்புத்தாண்டு எனும் கருத்தைப் பரப்பும் தரப்பினர் தங்கள் முதன்மை ஆதாரமாக முன்வைக்கும் ‘மறைமலையடிகளின் தலைமையில் 1921ஆம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரியில், ஒன்றுகூடிய 500 தமிழறிஞர்கள் தை முதல் நாளை தைப்புத்தாண்டின் (திருவள்ளுவர் தொடராண்டு) முதல் நாள் என்று ஒருமனதாக ஏற்றனர்’   எனும் தகவலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதாகும்.  

அதே சமயம் மறைமலையடிகள் முன்மொழிந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு பற்றிய கணிப்பை (ஏசு கிருஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார்) மிக நுட்பமாக தை முதல் நாளில் வைத்ததில் இருந்த அரசியல் தாக்கம் பற்றியும் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.  

எனது நோக்கம் மதச்சார்போ, அரசியல் நோக்கமோ கொண்டதல்ல. மாறாக, வரலாற்று தகவல்களையும் பண்பாட்டு சிறப்புகளையும், அரசியல் நோக்கத்திற்காக புனைவதோடு போலி வரலாற்று தகவல்களை அறிவார்த்த உரையாடல்களில் பயன்படுத்துவதில் இருக்கும் அபத்தம் குறித்து உரத்து பேசுவதாகும். சமூக ஊடகங்கள் அதிக செல்வாக்குப் பெற்றுள்ள இக்காலத்தில் இளைஞர்களின் அசலான சிந்தனையை இவ்வாறான கருத்து திரிபு பரப்புரைகள் முடக்கிவிடக் கூடாது என்ற நோக்கமும் எனக்கு இருந்தது. 

அக்கட்டுரையை மிக கவனமாக, தக்க ஆதாரங்களுடன்தான் எழுதினேன். காரணம் மேற்கண்ட தகவல்கள் தமிழ்ச்சூழலில் தமிழ்மொழி, தமிழர் வரலாறு போன்ற சிந்தனைக்குரிய விடையங்களை அதிகம் பேசும், எழுதும் தரப்பினரிடமிருந்து வெளிப்படுவதாகும்.

தமிழ்ச்சூழலில் உயரிய மதிப்பு பெற்ற பலரும் சித்திரை புத்தாண்டு, தைப்பொங்கல் ஆகிய சமூக விழாக்களின் போது தை முதல் நாளே, அதாவது பொங்கல் தினம்தான், தமிழர்களுக்கான சிறப்பான புத்தாண்டு என்றும் வரலாற்று காலம் தொட்டு அது வழங்கி வந்தது என்றும், ஆகவே அந்நிய தாக்கமும் மதச்சார்பும் கொண்ட சித்திரை புத்தாண்டை தமிழ்ப்புத்தாண்டு என கொள்வது பிழை என்றும் வாதிடும் போது, மறைமலையடிகளை முன்வைத்த மேற்கண்ட தகவல்களை ஒரு ஆவணப்பதிவு போல மிக நம்பிக்கையுடன் முன்வைத்து பேசுவதைக் காணலாம். மலேசியாவில் தைப்புத்தாண்டு பரப்புரை மாநாடுகளில் அத்தகவலே முக்கிய மேற்கோளாக பயன்பட்டது. தமிழ்நாட்டு அரசு 2008-இல் தைப்புத்தாண்டு சட்டம் இயற்றிய போதும் அத்தகவல் மேற்கோளாக பயன்பட்டது.  ஆகவே கற்றோர் தரப்பால் உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தகவலை மறுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். என் கட்டுரையில் தெளிவான விளக்கங்களுடன் அத்தகவல் நம்பகத்தன்மையற்றது என விளக்கியிருந்தேன்.

ஆனால் அக்கட்டுரை, முனைவர் குமர வேலுவை, அதிகம் சீண்டியது என்பதை அவர் தொடுத்த எதிர்வினைகளின் வழி புரிந்துகொள்ள முடிந்தது. முதலில் மறைமலைகளின் தலைமையில் நடந்த கூட்டம் என்பது போலியான தகவல் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘அப்படியெல்லாம் இருக்காது. அத்தகவல் நாள்காட்டி குறிப்பில் விடுபட்டிருக்கலாம் அல்லது வேறு எங்கோ மறைந்திருக்கலாம்’ என்ற வாதங்களை முன்வைத்து பேசினார். பிறகு அப்படி ஒரு மாநாடு நடக்காவிட்டால்தான் என்ன, தைப்பொங்கலை வரலாற்றுகாலம் தொட்டு தமிழர்கள் புத்தாண்டாக கொண்டாடியதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன என மறுப்பு வாதம் செய்தார். ஆனால் நான் முன்வைத்த அடிப்படையான கேள்வி மறைமலையடிகளை முன்நிறுத்தி சொல்லப்படும் தகவலின் நம்பகத்தன்மை பற்றியது என்பதால், ஆதாரம் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் ஏற்றுக் கொள்கிறேன் என்பதோடு நிறுத்திவிட்டேன். அதன் பின், தைப்பொங்கல், திருவள்ளுவர் ஆண்டு, தைப்புத்தாண்டு ஆகிய மூன்று சமூக விழாக்களைப் பற்றியும் விரிவாக எழுதினேன். தனி தனி நிகழ்வுகளாக சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அவை எவ்வாறு ஒரே தினமாக ஆக்கப்பெற்றன என்பது பற்றியும் அதில் உள்ள அரசியல், வரலாற்று தெளிவின்மை ஆகியன பற்றியும் தொடர்ந்து சில கட்டுரைகள் எழுதினேன். 

இந்த ஆண்டு முனைவர் குமரவேலு, ‘தையும் மெய்யும்’ எனும் ஒரு நூலை வெளியிட்ட போது அதன் தலைப்பே நான் எழுதிய கட்டுரைக்குப் பதில் உரைப்பதாக இருந்ததால் மிக்க ஆர்வத்துடன் அந்த நூலை வாங்கி வாசித்தேன். நூலில் பல இடங்களில் என் கட்டுரையைச் சுட்டிக்காட்டி ‘இவை ஊகம் மட்டுமே’ என மறுத்திருக்கிறார்.

என் எதிர்பார்ப்பு என்னவென்றால், ‘ஆதாரம் இல்லாத ஒரு தகவலை இத்தனை காலம் தமிழ் அறிவுசார் கூட்டம், பொது மக்களிடம் முன்வைத்து பிழை இழைத்துள்ளது’ என்ற என் குற்றச்சாட்டைத் தகர்க்கும் ஆதாரம் ஒன்று அவருக்குக் கிடைத்திருக்ககூடுமோ என்பதுதான். மறைமலைடிகள் அவர்களின் பேரன் த. தாயுமானவன் வெளியிட்ட மறைமலையடிகளின் நாட்குறிப்பில் இடம்பெறாததோடு மறைமலையடிகள் வாழ்ந்த காலத்தில் எழுதிய எந்த நூலிலும் தைப்புத்தாண்டு பற்றிய குறிப்புகளையோ கட்டுரைகளையோ அவர் எழுதவில்லை என்பதையும் நான் முக்கியமாக குறிப்பிட்டுதான் அத்தகவல் போலியானது என எழுதினேன்.   ஆகவே நான் குறிப்பிட்டிருந்த காரணங்களைத் தகர்க்கும் ஒரு வலிமையான சான்றுடன் இந்நூல் எழுதப்பட்டிருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் என் எதிர்பார்ப்பு பொய்த்து போய் விட்டது.

தைப்புத்தாண்டு விவாதம் குறித்து பல கோணங்களில் ஆய்வு செய்துள்ள முனைவர் குமரன் வேலு, மறைமலையடிகளின்  நாட்காட்டி குறிப்பில் அப்படியான தகவல் இல்லை என்பதைத் தன் நூலில் குறிப்பிடுகின்றார். மறைமலையடிகள் நேரடியாக தைப்புத்தாண்டு பற்றி எதுவும் எழுதவில்லை என்றும் அவர் கண்டுகொண்டிருப்பார் என்றே நம்புகின்றேன்.

ஆகவே, மறைமலையடிகளைத் தைப்புத்தாண்டோடு நேரடியாக தொடர்புப்படுத்துவதில் உள்ள முரணை அவர் அறிந்திருக்க வேண்டும்.  வரலாற்றின் பேரில் ஒரு போலி தகவலை வழிந்து சமூகத்தில் பரப்பும் வல்லமைதான் அரசியல் செயல்பாட்டின் உச்சம் என்பதையும் அவர் உணர்ந்திருக்க வேண்டும். ஆகவே முதன்மையாக அந்த நம்பகமற்ற தகவலை முன்னிறுத்தி தமிழ்ச்சூழலில் ஒரு தரப்பு தங்கள் வாதங்களை இத்தனை ஆண்டுகள் முன்வைத்துள்ளதை உணர்ந்து அவர் வருத்தம் தெரிவித்துக் கொள்வதே ஆய்வு நேர்மை.  

மறைமலை அடிகள்

ஆனால் முனைவர் குமரன் வேலு அப்படியான தார்மீக கேள்விகளைத் தனக்குள் எழுப்பிக் கொள்ளவில்லை. பழைய படியே கூட்டம் நடக்காமல் இருந்தால்தான் என்ன? பொங்கல்தானே தமிழர்களின் வரலாற்று கால புத்தாண்டு என்றும் அந்தக் கூட்டக்குறிப்புகளை எதிரிகள் மறைத்து வைத்திருக்கலாமே என்றும் ஊகத்தையே அவரும் எழுதியிருக்கின்றார்.

தைப்பொங்கலைத் தமிழர்கள் வரலாற்று காலம் முதல் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் எனும் தன் முன்முடிவை நிலைபடுத்தும் தகவல்களைத் திரட்ட முனைவர் குமரன் வேலு முயன்றிருக்கிறார். ஆனால் ஆய்வென்பது, தகவல் திரட்டல் அல்ல. அல்லது தன் முன்முடிவுகளுக்குச் சப்பைகட்டு கட்டும் தரவுகளைத் தொகுத்தளிப்பதல்ல. ஆய்வென்பது, திறந்த மனதுடன் தகவல்களுக்குப் பின்னால் இருக்கும் பல உண்மைகளை வெளிச்சப்படுத்துவது. கூரிய பார்வையின் வழி உண்மைகளை உய்த்துணர்ந்து சொல்வது. மைய நீரோட்டத்திலிருந்து விலகி நிற்கும் ஆதாரங்களை(outlier) விலக்கி வைத்துவிட்டுதான் தெளிவான ஆய்வு முடிவுகளை எட்ட முடியும். ஆனால் முனைவர் குமரன் வேலு, அங்கும் இங்கும் கிடைக்கும் பொங்கல் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது எனும் உதிரி தகவல்களையே பெரிதும் நம்பி நூலை எழுதியிருக்கின்றார்.   

அறிஞர் கருத்து

மறைமலையடிகள் காலத்தில் தைப்பொங்கலைப் புத்தாண்டாக ஏற்கும்  பேச்சு மற்ற சில அறிஞர்களிடம் இருந்ததற்கான ஆதாரம் இருக்கின்றது என்று கூறுகின்றார். அக்காலகட்டத்தில் பல அறிஞர்களுக்குப் பல தனிப்பட்ட கருத்துகள் இருந்தன. தங்கள் கருத்தை அடிப்படையாக கொண்டு அவர்கள் செயலூக்கத்துடன் செயல்பட்டார்கள். தமிழ்நாட்டைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும், லெமுரியா கண்டமே குமரி கண்டம் என்பன போன்ற பல கருத்துகளை நாம் பட்டியலிடலாம்.  ஆனால் அவை சமூக வழக்கத்தில் உள்ள ஒன்றல்ல. தமிழ் எழுத்து சீர்திருத்தம் போல அவை அறிவு விவாத கருத்துகள்.  ஆனால், பொங்கல் என்பதும் புத்தாண்டு என்பதும் பரந்த சமூகம் ஏற்றுக் கொண்டவை. அவற்றை புதிய கண்டுபிடிப்பாக புகுத்த வேண்டியதில்லை.  அதனால்தான் பிற கருத்துகளை விட்டுவிட்டு அரசே புத்தாண்டு நிலைபாட்டில் தலையிடுகின்றது.  சமூகத்தின் பரந்த ஏற்பின் வழி தங்கள் அரசியல் கொள்கைகளை வலிமைபடுத்திக் கொள்ள முடியும் என்ற தெளிவு அவர்களிடம் உள்ளது.

பண்டைய தமிழர்களின் புத்தாண்டு

தமிழர் வரலாற்றில் புத்தாண்டு எனும் ஒரு காலக் கணிதம் பரவலாக சிறப்பிடம் பெறவில்லை. பொழுது அல்லது காலம் பற்றிய தெளிவு அன்று இருந்தது.  ஆனால், புதிய ஆண்டு முதல் நாள் அல்லது ஆண்டு தொடக்கம் போன்ற சொற்களோ வழக்கங்களோ பண்டை இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. அரசர்கள் தங்கள் ஆட்சியாண்டையே கல்வெட்டுகளில் பதித்துள்ளனர்.  ஆகவே, தமிழர்கள் புத்தாண்டு தொடக்கம் என ஒரு நாளை முடிவாகப் பின்பற்றினார்கள் என்பதற்கு இதுவரையில் சான்றுகள் இல்லை. பிற்கால வானியல் அறிவும், சோதிடம் சார்ந்த கணிப்புகளும் சுழல் ஆண்டு முறைகளை உருவாக்கியிருக்கிறது. அது தமிழர் அல்லாதோரின் திணிப்பு என்பதையும் முற்றாக நிறுவும் சான்றுகள் இல்லை. சுழல் ஆண்டு முறையின் வழி வரலாற்றைப் பதிவிட முடியாது என்பதும் சரியல்ல.  சுழல் ஆண்டுமுறை என்பது பழங்காலத்தில் உலகின் பல நாடுகள் பின்பற்றிய கால கணிதம். சீனர்கள் 60 ஆண்டு சுழல் முறையைப் பயன்படுத்தியே அரசர்களின் பரம்பரை வரலாற்றைத் துள்ளியமாக எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

ஆவணியில் புத்தாண்டு

தொல்காப்பியத்தை அடிப்படையாக கொண்டு ஆவணி மாதம் தமிழர்களின் புத்தாண்டாக பண்டைய காலத்தில் இருந்தது என்ற கருத்து உள்ளது.  ஆனால் அதன் உண்மை தன்மையை தொல்காப்பிய மூல சூத்திரங்களை ஆய்ந்து தான் முடிவுசெய்ய வேண்டும்.

நிலங்கள்  நான்கு,  திணைகள் ஏழு என்பது போல, தொல்காப்பியம் காலத்தைப் பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாக பிரித்து கூறுகின்றது.  அதில் பெரும்பொழுது என்பது கார், கூதிர் என தொடங்கி ஆறு காலங்களாகக் காட்டப்படுகின்றன. இவை உலகின் வானிலை மாற்றங்களை அடிப்படையாக கொண்டவை என்பது தெளிவு.  மேலும், திணைகளுக்கேற்ற காலத்தைக் குறிப்பிடும் போது முல்லை திணைக்குக் கார் காலம், குறிஞ்சி திணைக்குக் கூதிர் காலம் என ஒரு வரிசையைத் தருகிறது.

இந்த வரிசையில் ‘காரும் மாலையும் முல்லை’  எனும் மூல சூத்திரமே, அதாவது ‘பெரும்பொழுதில் கார்காலமும், சிறுபொழுதில் மாலை நேரமும் முல்லை திணைக்கு உரியன’ எனும் பகுப்புமுறையையே தொல்காப்பியருக்குப் பின் வந்தவர்கள் ஓர் ஆண்டின் தொடக்கத்தை முடிவு செய்ய அடிப்படையாகக் கொண்டுள்ளனர். தொல்காப்பியத்தில், பெரும்பொழுதின் வரிசையில் கார்காலம் முதலில் குறிக்கப்படுவது மட்டுமே அம்முடிவுக்குக் காரணம். குறிப்பாக நச்சினார்கினியர் உரையில் மேற்கண்ட சூத்திரத்திற்கு

‘காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டு’

என்ற விளக்கம் சேர்த்துள்ளார்.

கார்காலத்தை முதல் பெரும்பொழுதாக கொண்டு (‘காரும் மாலையும் முல்லை’ என்பதற்கு இணங்க) ஆவணி மாதத்தை ஓர் ஆண்டின் தொடக்கம் என விளக்குகின்றார். நச்சினார்க்கினியரின் அந்த விளக்கத்தையே பிற்கால பல நூலாசிரியர்களும் பின்பற்றியுள்ளனர்.  ஆயினும் இந்த விளக்கம் தொல்காப்பிய மூல சூத்திரத்துக்குச் செய்யப்பட்ட கூடுதல் விளக்கம் என்றே கொள்ளலாம். காரணம் தொல்காப்பியம் விளக்கிய ஆறு பெரும்பொழுதுகளை நச்சினார்கியார் ஒரு பெரும்பொழுது இரண்டு மாதகாலம் எனும் அடிப்படையில் பன்னிரெண்டு மாதங்களாகப் பிரித்துள்ளார்.  ஆயினும்  12 மாத கால அளவு முறை பற்றியும் தற்போது நாம் பயன்படுத்தும் மாதங்களின் பெயரையும் தொல்காப்பியம் குறிப்பிடவில்லை.  மேலும்,  தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை எழுதிய இளம்பூரணர் அவ்வாறான கால விளங்களை அச்சூத்திரத்திற்குச் சேர்க்கவில்லை.  

தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் கி.மு 4-ஆம் நூற்றாண்டு என்பது பொதுவான கணிப்பு. இளம்பூரணர் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். நச்சினார்கினியரின் காலம் 14-ஆம் நூற்றாண்டு என ஏற்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் இளம்பூரணர் தொல்காப்பிய உரையைச் சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பிறகும் நச்சினார்கினியர் தொல்காப்பிய விளக்க உரையைச் சுமார் 1800 ஆண்டுகளுக்குப் பிறகும் எழுதினர் என கொள்ளலாம்.

மேற்கண்ட சூத்திரங்களுக்கு இளம்பூரணர் குறிப்பிடாத காலக் கணித விளக்கத்தை, 400 ஆண்டுகளுக்குப் பிறகு தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்கினியர் கொடுத்துள்ளார். அவர் சிங்கவோரை, கற்கடகவோரை போன்ற சோதிடம் சார்ந்த கலைச்சொற்களைக் கொண்டு விளக்குகிறார். இதன்வழி தொல்காப்பியர் காலத்தில் நடைமுறையில் இல்லாத வானியல் கணித முறைகள் நச்சினார்கியர் காலத்தில் வளர்ந்து வலிமையடைந்திருக்கக்கூடும் என்பது அறிஞர் கருத்து.   ஆகவே, ஆவணியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கூறப்படும் தகவல் தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டதல்ல. மாறாக பிற்காலத்தில் அதற்கு உரை எழுதிய நச்சினார்கினியர் வகுத்துச் சொன்ன மரபு, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நச்சினார்கினியர் ஆவணி மாதத்தைத் தொல்காப்பிய விளக்க உரையில் ஆண்டின் தொடக்கம் என கூறியிருந்தாலும், தமிழ்சமூகத்தில் அது புழக்கத்தில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.  கேரளத்தில் வழங்கும் கொல்லம் புத்தாண்டு ஆவணியில் தொடங்குகின்றது. ஆனால் கொல்லம் புத்தாண்டு கி.பி 7 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குவதாகக் கூறப்படுகின்றது.   

திருவள்ளுவர் ஆண்டும் மறைமலையடிகளும்

மறைமலையடிகள் திருவள்ளுவர் பிறந்த ஆண்டைக் கணிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்பதை அறிய முடிகின்றது. அவர் மாணிக்கவாசகர் காலத்தையும் சிலப்பதிகார காலத்தையும் கணித்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆகவே, அவர் தன் ஆய்வின் வழி, திருவள்ளுவர் பிறந்த ஆண்டை ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன், (கி.மு 31) என முடிவு செய்துள்ளார்.  இந்தக் கணிப்பு மட்டுமே மறைமலையடிகளின் செயல்பாடாக கொள்ள முடிகின்றது. தை முதல் நாளோ, புத்தாண்டு முயற்சியோ அவர் நோக்கம் அல்ல.

இதன் வழி திருவள்ளுவர் ஆண்டு என ஒரு ஆண்டு கணக்கை எளிமையாக வகுத்துக் கொள்ள முடியும். நடைமுறையில் உலகம் பின்பற்றும் ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டினால், திருவள்ளுவராண்டு கிடைத்துவிடும். அதை எந்த நாளிலிருந்து தொடங்க வேண்டும் என்பது பொதுவான ஆய்வுக்குரியது. காரணம் திருவள்ளுவர் ஆண்டு தொடக்கத்தை ஆங்கில புத்தாண்டு தொடக்கமான ஜனவரி ஒன்றிலேயே வைத்துக் கொள்ளலாம். 2026 ஜனவரி 1-ல், 31ஐ கூட்டினால் 2057 என்ற வள்ளுவராண்டு கிடைத்துவிடும். அல்லது தை முதல் நாள் பொங்கல் தினத்திலோ சித்திரை முதல் நாளிலோ கூட இதே போன்று 31-க் கூட்டி திருவள்ளுவராண்டுக்குச் சென்றுவிடலாம். இதனினும்,  அக்காலகட்டத்தில் திருவள்ளுவர் தினம் எனும் விழா வைகாசி மாதம் மரபாக கொண்டாடப்பட்ட பதிவுகள் உள்ளன.  மறைமலையடிகளே திருவள்ளுவர் திருநாளை வைகாசியில்தான் கொண்டாடியுள்ளார் என்ற தகவலும் உள்ளது. ஆகவே திருவள்ளுவரின் பெயரில் தொடங்கும் ஒரு ஆண்டை மரபான திருவள்ளுவர் திருநாளான வைகாசி அனுட்டத்தில் தொடங்குதல் சாலச்சிறந்ததாக இருக்கும். ஆனால் அவ்வாறான திட்டங்கள் வகுக்கப்படாமல் வைகாசி அனுட்டமே தை மாதத்திற்கு மாற்றப்பட்ட விந்தைதான் நிகழ்ந்துள்ளது.

மேலும் மறைமலையடிகள் வகுத்த திருவள்ளுவராண்டு என்பது முற்றிலும் தமிழ் மரபில் இல்லாதது. அதற்கு முன்மாதிரிகள் இல்லை. மேலும் அது தொல்காப்பியம் வகுத்த வானிலை அளவுகளையோ பிற இலக்கிய நூல்களில் சொல்லப்படும் விழாக்காலங்களோடோ தொடர்பற்றது. மறைமலையடிகள் வகுத்த திருவள்ளுவராண்டின் அடிப்படை, ஆங்கில ஆண்டு மட்டும்தான். ஆங்கில ஆண்டின் பக்க கோடாகவே திருவள்ளுவர் ஆண்டு பயணிக்கிறது.

மிகவும் தளர்வான கட்டமைப்பைக் கொண்டதே திருவள்ளுவர் ஆண்டு. அதன் தளர்வு தன்மைதான், மறைமலையடிகளுக்குப் பிறகு, பிறர் தங்கள் தேவைக்கேற்ப திருவள்ளுவராண்டைப் பயன்படுத்த இடம் கொடுத்தது. அரசியல் தலையீட்டால் பல நுணுக்கமான வரலாற்று திரிபுகள் நடத்தன. முதலாவதாக வைகாசி அனுட்டத்தில் மரபாக கடைபிடிக்கப்பட்ட திருவள்ளுவர் தினம், தை முதல் நாளுக்கு மாற்றப்பட்டது.  இதன் பின்னணியில் செயல்பட்டவர் கி.ஆ. பெ. விசுவநாதம்.

1935-ஆண்டு ‘திருவள்ளுவர் திருநாட் கழகம்’ என்ற அமைப்பை நிறுவி சில தமிழ் அறிஞர்கள் மரபாக திருவள்ளுவர் பிறந்த தினமாக அனுசரிக்கப்பட வைகாசி அனுட்டத்தைச் சிறப்பாக கொண்டாடினர். தொடர்ந்து சில ஆண்டுகள் நடைபெற்ற அவ்விழாவுக்கு மறைமலையடிகள் முதல்  ம.பொ.சி, ஈ.வெ.ரா, என பல தலைவர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். 1952-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் கா. பொ. இரத்தினம், தமிழ்மறை கழகத்தை உருவாக்கி  திருவள்ளுவர் தினத்தை மூன்று ஆண்டுகள் உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளில் முன்னெடுத்துள்ளார். அக்காலகட்டத்தில் வெளிவந்த திருவள்ளுவர் திருநாள் மலர்களில் குன்றக்குடி அடிகளார், ர.பி சேதுப்பிள்ளை, மு.வ என பல அறிஞர்களும் மிகத் தெளிவாக திருவள்ளுவர் தினம் என்பது வைகாசி அனுட்டம்தான் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, கி.ஆ.பெ. விசுவநாதன், திருவள்ளுவர் தினத்தை வைகாசி அனுட்டத்தில் இருந்து மாற்றி தைத்திங்கள் இரண்டாம் நாளுக்குக் கொண்டுசெல்லும் திட்டம் ஒன்றை முன்மொழிந்தார். இத்திட்டத்தின் பின்னணி வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும் இத்திட்டத்தை அன்றைய அறிஞர் பெருமக்கள் முற்றாக நிராகரித்து வைகாசி அனுட்டத்தையே திருவள்ளுவர் தினமாக நிலைநாட்டினர்.  அதன் பிறகு அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்றாலும்,  1971-இல் தமிழ் நாட்டு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு  அரசால் அதிகாரப்பூர்வமாக தை இரண்டாம் நாளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   

தைப்பொங்கலும் புத்தாண்டும்

தைபொங்கல் தமிழர்களின் தனித்துவமான விழாக்களில் ஒன்று. பழங்கால வாழ்க்கை முறைகளைப் பதிவு செய்து இன்றும் தொடரும் ஒரு நன்னாள். தமிழ் குடிகள் நிலவுடமைச் சமூகமாக நிலை கொண்டு விவசாய உற்பத்திகளிலும் கால்நடை வளர்ப்பிலும் தீவிரமாக ஈடுபட்ட காலம் தொட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டதற்கான முகாந்திரம் உள்ளது. மேலும், முல்லையும் மருதமும் பொங்கல் விழாவோடு அணுக்க தொடர்புடைய திணைகளாக நாம் புரிந்துகொள்ளலாம்.  பொங்கல் தினம் தமிழ் பஞ்சாங்க கணிப்பு முறையிலேயே உறுதிசெய்யப்படுகின்றது. இந்தியாவின் பிற இன மக்களும் பொங்கல் தினத்தை மகரசங்கராந்தி எனும் வழிபாட்டுக்குரிய நாளாகக் கொண்டாடுகின்றனர். பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தை முதல் நாள் வடசெலவு(உத்திராயணம்) தொடங்கும் நாள். ஆகவே ஒரு ஆண்டின் இனிய தொடக்கமாகும்.  அதே போல தென்செலவு தொடங்கும் நாள் ஆடிமாதம் முதல் நாள். தமிழர்கள் அயனநகர்ச்சியின் இரு தொடக்கங்களிலும் தைப்பொங்கல் மற்றும் ஆடிமாத விழா ஆகிய இரு விழாக்களைக் கொண்டாடினர். ஆனால் அவை புத்தாண்டு என்ற கணக்கைக் கொண்டவையல்ல. மாறாக அயனநகர்வில் சூரியன் உச்சத்தைத் தொடும் அல்லது பூமியிலிருந்து வெகு தொலைவில் நிற்கும் சித்திரை முதல் நாளே புத்தாண்டு என ஏற்கப்பட்டது. வானியல் நாட்கணிப்புக்குள் அமைத்தே இத்தினங்கள் முடிவு செய்யப்படுகின்றன.

தை முதல் நாளில் பொங்கலைச் சிறப்பாக கொண்டாடுவதால் அதை தமிழர்கள் பழங்காலம் தொட்டு புத்தாண்டாக வகுத்துக் கொண்டார்கள் என்பதற்கு ஏற்பான பொது சான்றுகள் இல்லை. தமிழர்களின் எல்லா விழாக்களுமே புதுதொடக்கமாக புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் தரவல்லனவே. அதே போல எல்லா மாதங்களிலும் ஒரு சிறப்பு நாள் வழிபாட்டு நாளாக அல்லது கொண்டாட்ட நாளாக அமைக்கப்பட்டுள்ளது.  பிறந்தநாளை நான் தீபாவளிபோல் கொண்டாடினேன் என்பதன் பொருள் என் பிறந்தநாள் தீபாவளியன்று வந்தது என்பதல்ல. பொங்கலை முன்னோர் புத்தாண்டு போல கொண்டாடினர் என்பதன் பொருள் அவர்கள், அந்நாளை அத்தனை சிறப்பாகக் கொண்டாடினர் என்பதுதான்.

தைப்பொங்கலைப் புத்தாண்டாக ஏற்பதில் என்னதான் சிக்கல்

தை முதல் நாளை, ஒரு ஆண்டின் முதல் நாளாக  கொள்ள எல்லா தகுதிகளும் உள்ளன. உலகின் பல்வேறு இனங்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்களின் இனம் சார்ந்த புத்தாண்டுகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர். பயன்பாட்டில் இருந்ததை மாற்றிக் கொண்டுள்ளனர்.    தைப்புத்தாண்டு எனும் கருத்தையும் அவ்வாறே சிந்திக்கலாம். ஆனால் அது வரலாற்று காலம் தொட்டு பின்பற்றப்பட்ட ஒன்றல்ல. நவீன கால தேவைகளைக் கருதி கடந்த நூறு ஆண்டுகளாக முன்வைக்கப்படும் ஒரு கருத்து. அறிவுப்பூர்வமாக அதன் தேவை, முறைமை போன்றவை ஆராயப்படுவதில் சிக்கல் இல்லை.  ஆகவே அதை நவீன கால சிந்தனையாகத்தான், சமகால தேவையாகத்தான் மக்களிடம் கொண்டு செல்ல முயன்றிருக்க வேண்டும். அரசியல் நோக்கமும் போலி வரலாறுகளையும் கொண்டு திரிக்க தேவையில்லை.   

சமூகத்தில் நிகழும் மாற்றங்களுக்குத் தமிழர்கள் எதிரானவர்கள் அல்ல. நேர்மையாகவும் அவசியம் கருதியும் முன்னெடுக்கப்படும் எல்லா மாற்றங்களையும் மக்கள் மெல்ல ஏற்றுக் கொள்வார்கள் என்பதே உண்மை. எழுத்து சீர்திருத்தம் முதல் திருமணம் போன்ற பலவற்றிலும் நாம் கால மாறுதல்களைக் கருத்தில் கொண்டு மாற்றங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் தைப்புத்தாண்டு என்பதில் மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்புகள் வருகின்றன என பொறுமையாக சிந்திக்க வேண்டும்.

தைப்புத்தாண்டு எனும் ஒரு நவீன கருத்தாக்கம் அரசியல்மயம் ஆக்கப்பட்டதுதான் காரணம். தமிழர்களின் ஒற்றுமையின் பொருட்டு என சொல்லும் அதே நபர்கள்தான் சித்திரை புத்தாண்டை ஏற்றுக் கொண்ட தமிழனை இழிவு படுத்துவதிலும் முணைப்பு காட்டுகிறார்கள் என்பதில் உள்ள முரண் வேடிக்கையானது.  பிரிவிணை பிரச்சாரங்களையும் மதக்காழ்ப்புகளையும் துரிதப்படுத்த தைப்புத்தாண்டை ஒரு கருவியாக மாற்றியவர்கள் அரசியல்வாதிகள்.  அதற்கு சில தமிழறிஞர்களும் உடன்பட்டார்கள்.   பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் எதையும் சொல்லி மக்களை நம்பச்செய்யலாம் எனும் கூற்றில் நம்பிக்கையுடைய  அரசியளாளர்களின் செயல்பாடுகளைத் தமிழறிஞர்கள் கண்டிக்காமல் இருந்தனர்.

முடிவில், திராவிடர் X ஆரியர் அரசியலில் தைப்புத்தாண்டு பலியிடப்பட்டுவிட்டது. இனி அதை தொடர நினைப்பது எல்லா தரப்பிலும் நிறைவின்மையையே உருவாக்கும்.  தமிழ்ப்புத்தாண்டு சித்திரையா, தையா எனும் வாதம் இன்று மலினப்பட்ட ஒரு வாதம். அது மதிப்பிழந்துவிட்டது. பொது ஊடகங்களில் சல்லித்தனமாக வாதிடுபவர்களின் கருப்பொருள்களில் அதுவும் ஒன்றாகி விட்டது.  

கூடுதலாக,  பொங்கல் விழா சமயம் சார்ந்ததா? சமயம் சாராததா? என்றொரு விவாதத்தையும் சிலர் நடத்திக் கொண்டிருக்கின்றானர். கால சூழலை நன்கு உள்வாங்கிக் கொண்டுதான் சமூகம் சார்ந்த கருத்துகளைப் பொதுவில் வைக்க வேண்டும். மலேசியாவிலும் பிற புலம்பெயர்ந்த இடங்களிலும் நம் நிலையை உணர்ந்தவர்கள் இது போன்ற உணர்ச்சிமிகு வாதங்களைத் தவிர்க்கவே விரும்புவர். அது ஆபத்தான எல்லைகளுக்குச் சமூகத்தைக் கொண்டுசெல்லும் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பர். மாறாக,  தங்களை அறிவுஜீவிகளாக காட்ட முனைவோர் மட்டுமே மக்களைக் குழப்பும் இது போன்ற சமூக விரோத வாதங்களால் ஈர்க்கப்படுவர்.  காரணம் தைப்பொங்கல் இயல்பிலேயே சமூக நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு விழா. ஆயினும், பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழரின் வாழ்வியலில் ஒன்றிவிட்ட ஆன்மிக கூறுகள் பொங்கல் பண்டிகையிலும் நிறைந்துள்ளன. எல்லா தொல்குடிகளின் பண்பாட்டு விழாக்களிலும் காணப்படும் கூறு இது.   இன ஒற்றுமையை மனதார விரும்புவோர் அதை முழுமையாக உணர்வர். எனவே அதன் நடைமுறைகளைக் கேள்வி கேட்க மாட்டார். மாறாக மத கவசத்தைக் கழற்ற விரும்பாதவர்களுக்கு எல்லாமே சந்தேகம்தான். எனவே, பிறரைக் கவர பொங்கல் விழாவின் தன்மையை மாற்ற வேண்டியதில்லை. ஒற்றுமையை நாடுவோர்தான் தங்கள் சிந்தனைப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்திய நாள்காட்டியில் தை முதல்நாள் மகரசங்கராந்தி என்ற சிறப்பு பெற்ற நாள். தமிழர்கள் தை ஒன்றில் பொங்கல் நாளைத் தனித்த அடையாளங்களுடன் கொண்டாடுகின்றனர். தை ஒன்று என்பது எவ்வாறாயினும் தனிச்சிறப்பு மிக்க ஒரு நாள்தான். அதற்கு புத்தாண்டு என்றோ திருவள்ளுவர் தினம் என்றோ புதுச் சாயம் பூசாவிட்டாலும் எப்போதும் போல தமிழர்களின் வாழ்க்கையில் அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

2 comments for “மெய்போலுமே மெய்போலுமே

  1. இராஜராஜன்
    January 1, 2026 at 2:06 pm

    மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரை மற்றும் பதில். திரு அ. பாண்டியன் அவர்கள் தெள்ளிய ஆய்வறிவும் மிக சார்பு நிலையற்ற மிக நேர்மையான ஆய்வாளர் என்பதையும் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். அவரை மனமாற வாழ்த்துகிறோம். ஆனால் ஒரு குறை.தைப்பொங்களை மிகப் பெரிய உடுகணிய காலகணிதத்தை வகுத்த பழந்தமிழர்கள் ஒரு காலும் கொண்டிருக்கவே மாட்டார்கள் என்ற வாதத்தை முன்னிருத்தி மலேசிய அறிவியல் பல்கலைக்கழக விறிவுரைஞர் முனைவர் இரா. சிவக்குமார் அவர்கள் மிகச் சிக்கலான பழந்தமிழர் உடுகணியத்தை மிகச் சிறப்பாக தற்கால வானியல் அறிவியல் கணிதத்தில் செய்து காட்டி நிரூபித்த ‘ தமிழர் கால ஏரண மெய்யறிவு’ நூலின் தொகுதி 1-ல் இயல் 10 – இயல் 18 வரையான 8 தலைப்புகளில் சுமார் 156 பக்கங்களில் விளக்கி இருப்பதையும் குறிப்பிடாமல் விட்டது ஏன் என்று தெரியவில்லை.

  2. Siva Durai
    January 31, 2026 at 1:20 pm

    நல்ல கட்டுரை…ஆனால் சிறுகதை என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.

Leave a Reply to Siva DuraiCancel reply