தி. அலியாஸ் தைப்பின் உதடுகள்

எங்கள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்துக்கு அந்த அழைப்பு திடீரெனதான் வந்தது எனலாம். “பிரபல கவிஞர் தி. அலியாஸ் தைப்பின் உதடுகளை விளம்பரப்படுத்தலாமென்று இருக்கிறேன்.”

எங்கள் அலுவலகத்தில் ஒருவருக்குக் கூட தி. அலியாஸ் தைப் யாரெனத் தெரிந்திருக்கவில்லை. மேலும், அவரைத் தெரிந்து வைத்திருப்பது ஒரு தொலைப்பேசி எண்கள் அடைவு நிறுவனத்திற்கு அவ்வளவு முக்கிய பணியுமில்லை. விளம்பரம் தொடர்பான தகவல்களைச் சேகரித்துப் பதிப்பிப்பது மட்டும்தான் எங்களின் பணி. நாங்கள் அதனை விளக்கப்படுத்துவதில்லை. மலேசியாவில் 600,000 மேற்பட்ட பதிவுபெற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. நாங்கள், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் நியாயமான நிறைவான சேவையை வழங்க வேண்டும். ஆகவே, குளிரூட்டி மாற்றுப்பாகங்கள் விற்கும் நிறுவனத்தையும் பிரபல கவிஞரின் உதடுகளை விற்பனை செய்யும் நிறுவனத்தையும் சமமாகவே நடத்துகின்றோம்.

தி. அலியாஸ் தைப்பின் உதடுகளை விளம்பரப்படுத்த பெம்புரு கோத்தா நிறுவனத்தாரிடமிருந்து அழைப்பைப் பெற்ற அதே நாளில் எங்களைத் தொடர்பு கொண்ட மற்ற வாடிக்கையாளர்கள் பின்வருமாறு;

அட்வான்ஸ்ட் போலிதெக் செண். பெர்

38, இண்டஸ்திரி சாலை யூ.எஸ்.ஜே 1/13 சுபாங்ஜெயா              

03-41080209

என்.பி.சி மேலாண்மை ஆலோசகர்கள்

470, ஈப்போ சாலை, கே.எல்                                                                                      

03-22737706

ரவாங் சுண்ணாம்பு தொழிற்சாலை

4999, ஈப்போ சாலை பத்து 15 1/12                                                              

03-60377877

வேங் லீ சமையல் எண்ணெய் நிறுவனம்

66, எஸ்பிசி 5 பத்து கேவ்ஸ் சாலை                                                                                        

03-78453206

சினார் கோத்தா நகலெடுக்கும் மையம்

938, 17/38 சாலை செக்சன் 17 பி.ஜே                                                     

03-40218079

பெம்பூரு கோத்தா செண்.பெர்

13/9சி தாமான் பெர்மாத்தா                                                                           

03-8002 4105

ஏ டூ ஸி ரெப்ரிகரேட்டர் மார்க்கேட்டிங் செண்.பெர்

பிளாசா உன்சாங் எமாஸ் கே.எல்                                                                  

03-8061 6666

பாருங்கள், பெம்பூரு கோத்தா நிறுவனத்துக்கு எவ்விதச் சிறப்பு சலுகையும் காட்டப்படவில்லை. அதன் தகவலையும் மற்ற நிறுவனங்களைப் போலவே பதிவு செய்திருக்கிறோம்.         

ஆனாலும், வாடிக்கையாளரின் தகவல்களை, கட்டுப்பாட்டாளர் குழு, தரவுச் சேகரிப்பு, பகுப்பாய்வு பிரிவுக்குக் அனுப்பி வைத்தபோது முதலில் சில சிக்கல்களை எதிர்கொண்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இந்த விநோதமான நிறுவனத்துக்கு எம்மாதிரியான முத்திரையை வழங்குவது என எங்களின் நிபுணத்துவம் மிக்க அதிகாரிகளிடையே ஐயமும் கருத்து வேறுபாடுகளும் எழுந்தன. எங்களின் தொலைப்பேசி எண் அடைவு நூலில் எவ்வித குழப்பமும் எழுந்துவிடக்கூடாது. ஆகவே, விற்பனைப் பொருள் குறித்த மேலதிகத் தகவலைப் பெறுவதற்காக பெம்பூரு கோத்தா நிறுவன உரிமையாளரையும் மேலாளரையும் தொடர்பு கொண்டோம்.

“நகர இளைஞர்களிடையே சந்தை மதிப்பும் அதிக வரவேற்பும் உள்ளவை என நான் நம்பும் பொருட்களை மட்டுமே விற்கின்றேன். அவர்கள் ஒரு புத்தகத்தை வெறுமனே வாசிக்க மட்டும் செய்வதில்லை; மாறாக அந்தப் புத்தகங்களின் எழுத்தாளர்களாகவும் மாற விரும்புகின்றனர். தங்களை அறிவார்ந்தவர்களாகவும் நாகரிகமானவர்களாகவும் தோற்றம் கொள்ளச் செய்யும் பொருட்களை அடைவதன் வாயிலாக சமூக ஊடகங்களில் நண்பர்களால் கொண்டாடப்படுவதையும் விரும்புகின்றனர். அம்மாதிரியான பொருளையே என் நிறுவனம் விற்பனை செய்கிறது.

வான் நோர் அஷ்ரிக்

இளைஞர்களின் அகக்குரலுக்கு நெருக்கமான சொற்களைக் கொண்ட கவிஞரின் உதடுகளையே லாப நோக்குடன் விற்கின்றோம். எங்களின் தயாரிப்பு உயர் தரமானது, பாதுகாப்பானதென சான்றளிக்கப்பட்டதோடு பன்னாட்டு இலக்கியவாதிகளின் ஏற்பையும் பெற்றிருக்கிறது. மேலும், வயது, பால் பேதமின்றி எல்லா வாடிக்கையாளரின் வாயுடனும் பொருந்துகின்ற மாதிரியாக தி. அலியாஸ் தைப்பின் உதடுகள் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

சந்தையில் இருக்கும் மற்ற எழுத்தாளர்களின் உதடுகளைப் போல தி. அலியாஸ் தைப்பின் உதடுகள் பயனர்களின் அசல் குரலின் தொனியைப் பாதிக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முயலாது. கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகன் அலியாஸ் தைப்பின் உதடுகளை என்னிடமிருந்து வாங்குகிறான் எனக் கொள்வோம். அவன் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயியைப் போலத்தான் பேசுவான். ஆனால், அவனுடைய கருத்துகள் மட்டும் புகழ்பெற்ற கவிஞருடையதாக இருக்கும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், தி. அலியாஸ் தைப்பின் கருத்துகளாக அவை இருக்கும்”

விளம்பரத்தை எப்படி வடிவமைப்பது என்பது எங்களின் இரண்டாவது சிக்கலாக இருந்தது. பெம்பூரு கோத்தா நிறுவனம் வண்ணத்திலான முழுப்பக்கத்தை எதிர்பார்க்கிறது. முதலில் இந்தச் சிக்கலுக்கான எளிய தீர்வாக தி. அலியாஸ் தைப் என்பவரின் முழு உருவபடத்தை வைத்துவிடுவதென யோசித்திருந்தோம். ஆனால், எங்களுடைய எண்ணத்துக்கு வடிவமைப்பாளர்கள் மற்றும் சந்தைப்பிரிவு அதிகாரிகள் சிலரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

“யார் இந்த தி. அலியாஸ் தைப்?”

“அவருடைய முகத்தை யாராவது அறிந்திருக்கிறார்களா?”

“நாமொன்றும் கேளிக்கை இதழை நடத்தவில்லை. தொலைப்பேசி பயனர்களுக்கான வழிகாட்டியைத் தருவதே நம்முடைய பணி”

“நிறுவனத்தின் தகவல்களையே நாம் முதன்மைப்படுத்த வேண்டும்; தயாரிப்புப் பொருட்களை அல்ல,”

அதற்கு அடுத்த நாள், பழைய கிள்ளான் சாலையிலிருக்கும் மலிவு விலை தங்கும் விடுதியில் எப்பொழுதும் நடக்கும் எங்களின் மாதாந்திரக் கூட்டத்துக்கு இச்சிக்கல் கொண்டு வரப்பட்டது. நிர்வாகிகளுக்குப் போதுமான உணவும் ஓய்வும் அளிக்கப்பட்டது. காரோக்கே பாட விரும்புவர்கள் லிப்ட் ஏறி எட்டாவது மாடிக்குச் செல்லலாம். பன்னிரண்டு மணிக்கு மேல் புகைப்பதையும் மது அருந்துவதையும் நாங்கள் ஊக்குவிப்பதில்லை. கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கும் விடயத்தை நன்கு புரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு அறையிலும் தி. அலியாஸ் தைப்பின் கவிதைப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன.

குளிரூட்டிப் பொருத்தப்பட்ட மூடிய மண்டபத்தில் ஐந்து மணி நேரமாக சுறுசுறுப்பான கருத்துப் பரிமாற்றங்களும் உரையாடல்களும் நிகழ்ந்தன. எங்களுடைய நிர்வாகிகளில் ஒருவர், மண்டபத்திலிருந்த எல்லாரும் பயன்படுத்தி பார்ப்பதற்காக தி. அலியாஸ் தைப்பின் உதடுகளை வாங்கி வந்தார் என ஒரு வதந்தி பரவியது. கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளின் குறிப்பேட்டில் இருக்கும் சிறுகுறிப்புகளைக் கொண்டே கூட்டம் எட்டிய முடிவை விளங்கி கொள்ள முடியும்: இவ்வுதடு உட்புறத்தை நோக்கிச் செல்லும் திரெங்கானு ஆறாகும்// இவ்வுதடு பல்லாயிரக்கணக்கான பிங் போங் பந்துகளாகும்// இவ்வுதடு மழை சொட்டும் பியானோவாகும்// இவ்வுதடு மீனவரொருவரின் சவப்பெட்டியாகும்// இவ்வுதடு வறட்சிக் காலத்தின் தகிக்கும் சூரியனாகும்// இவ்வுதடு எதிர்காலத்தைக் கட்டி இழுக்கும் ரிக்ஷா ஆகும்// இவ்வுதடு படுகையின் சதுப்பும் தோற்றமும் ஆகும்// இவ்வுதடு கவிதையின் உள்ளும் புறமுமாகும்// இவ்வுதடு கம்பத்துக்கு நடுவில் உள்ள கிணறு ஆகும்// இவ்வுதடு எரிந்து போன வரைப்படத்தின் துண்டாகும்// இவ்வுதடு படிக்கட்டின் மீதிருக்கும் உடைந்த கண்ணாடித்துண்டுகளாகும்.

* * *

நான் தான் தி. அலியாஸ் தைப் உதடுகளின் திருடன். நான் 1978 ஆம் ஆண்டு கோலாலம்பூருக்கு வந்தேன். கெடாவை சேர்ந்த பழைய நண்பனொருவனின் அறையில் குடியிருந்தேன். அது செளகிட்டில் இருந்த மினாங் உணவகமொன்றின் மேல்தளத்தில் இருந்தது. பகலில் தட்டுகளைக் கழுவுவேன்; குப்பை வீசும் வேலையைச் செய்தேன். இரவில் திருடவும் பெண்களுடன் சல்லாபிக்கவும் நண்பன் தூண்டினான். “தாயையும் தந்தையையும் தவிர மற்ற எல்லாவற்றையும் செளகிட் பகுதியில் தேடிக் கொள்ளலாம்,” என்றான் நண்பன். அவன் வாயிலாகவே பெரும்பாலும் கெடாவிலிருந்தும் கிளாந்தானிலிருந்தும் வந்திருந்த குண்டர்களிடம் நட்பு கொள்ளத் தொடங்கினேன். ஆனால், நான் பொருள் ஈட்டவோ பெண் சுகம் தேடவோ கோலாலம்பூருக்கு வரவில்லை. லத்திப் மொகிடினைப் போல தெருக்கலைஞனாக ஆக வேண்டுமென்கிற கனவில்தான் கிராமத்தில் இருந்த என்னுடைய குடும்பத்தைப் பிரிந்து வந்தேன்.

எனக்கு எழுத வராது. மாறாக, களவைத் தவிர வேறெந்தத் தனித்திறமையும் என்னிடம் இருப்பதாகவும் தோன்றவில்லை. கெடாவிலிருந்து எடுத்து வந்திருந்த காற்சட்டைப் பையிலிருந்த சுங்கை மெக்கோங் புத்தகத்தைக் கூட பள்ளி நூலகத்தில்தான் களவாடினேன். ஆனால், எனக்குக் கவிதை வாசிப்பதில் விருப்பமிருந்தது. யாருடைய கவிதை என்ற பேதமில்லை. இரவு பகலாக வாசிப்பேன். அலோர் ஸ்டாரிலிருந்த சமயத்தில் காலஞ்சென்ற என்னுடைய தாத்தாவின் நூல் அடுக்கிலிருந்து எப்பொழுதும் நூல்களைத் திருட்டுத்தனமாக எடுத்து வாசிப்பேன். செபராங் பேராக் இடைநிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றிய அவரின் வீட்டில் இந்தோனேசியவைச் சேர்ந்த புத்தகங்கள் நிறைய இருந்தன. பள்ளிக்குச் செல்லச் சோம்பலாக இருக்கும் நாட்களில் தாத்தாவின் வீட்டுக்குச் சென்று அவரின் அறைக்குள் நுழைய என்னை அனுமதிக்குமாறு பாட்டியிடம் கெஞ்சுவேன். அங்குதான் சைரில் அன்வார், அமிர் ஹம்சா, சுபாகியோ சஸ்தரோவர்டாயோ மற்றும் சித்தோர் சித்துமோரோங் ஆகியோரின் கவிதைகள் எனக்கு அறிமுகமாயின.

செளகிட்டிலிருந்த என்னுடைய நண்பர்களுக்கு நான் லத்திப் மொஹிடினைப் போல ஆக எண்ணம் கொண்டிருந்தது தெரியும். அவர்கள் எப்பொழுதும் என்னைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள்: “காது கூட சரியாக கேட்பதில்லை, உனக்கு கலைஞனாகும் எண்ணம் வேறா.” அது நிச்சயமாக உண்மைத்தான். கோலாலம்பூருக்கு வந்ததிலிருந்தே என்னுடைய காதுகள் சரியாகக் கேட்பதில்லை. அதனாலே, நீண்ட நேரம் பேசினால் என்னுடைய உதடுகள் திக்கத் தொடங்கிவிடுகின்றன. ஆனால், அவர்களின் வார்த்தைகளை நான் பொருட்படுத்தியதில்லை. நான் நிச்சயமாக ஒரு கலைஞனாகத்தான் போகின்றேன்.

லத்திப்பையும் அவரின் நண்பர்களையும் பெலாண்டா சாலையில்தான் முதல் முறையாகச் சந்தித்தேன். எனக்கு வேலை முடிந்திருந்த அச்சமயம் வானிலை சற்று மந்தமாக இருந்தது.   என்னுடைய காற்சட்டைப் பையிலிருந்த சுங்கை மெக்கோங் புத்தகம் நைந்து போய் மக்கிய நெடி வீசத் தொடங்கியிருந்தது. காட்டில் வழிதவறிய சிறுவனைப் போல அவர்களைத் தொலைவிலிருந்து பார்த்தேன். என்னுடைய இதயம் படபடத்தது. லத்திப்பைச் சுற்றிலும் அமர்ந்திருக்கும் ஆட்கள் யாவர்? ஒரு வேளை அ. கபார் இப்ராகிம், ஹத்தா அசாட் கான் அல்லது காலிட் சாலேவாக இருக்கலாம். எனக்கு அவர்களைத் தெரிந்திருக்கவில்லை. எனக்கு லத்திப் ஒருவரின் கவனத்தை மட்டும் பெற்றுவிட வேண்டும். ஆனால், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? திடீரென எனக்குள் கிறுக்குத்தனமான எண்ணமொன்று தோன்றியது. நான் லத்திப்பிடம் சென்று ஒரு கவிதையை வாசித்துக் காட்டப்போகிறேன். அவர் என்னைக் கடிந்து கொண்டாலும் பரவாயில்லை. ஏனென்றால், ஒருவேளை நான் முயலவில்லையென்றால் பிறகு கடுமையாக வருந்துவேன்.

அமர்ந்திருந்தவர்கள் நடுவே துணிவுடன் முன் அடியெடுத்து வைத்து சென்று நின்று கொண்டேன். லத்திப்பின் தெளிந்த முகம் ஒரு சீலாட் மகாகுருவைப் போல என்னை நோக்கியது. “நா… நா… நான் ஒரு கவிதை வாசிக்க போகிறேன்…” என புத்தகத்தை நடுக்கத்துடன் புரட்டியப்படிச் சொன்னேன்.

திடீரென மழை தூறத் தொடங்கியது. எல்லாரும் எழுந்து நின்றார்கள். லத்திப் என்னருகே வந்து “பரவாயில்லை தோழரே வேறொரு தடவை முயலலாம்” என்றார். அப்படியே எல்லாரும் கலைந்து சென்றார்கள்.

இச்சம்பவம் என்னுடைய செளகிட் நண்பர்களுக்கு அவ்விரவில் கேலிப்பொருளானது. “லத்திப் ஆக ஆசைதான்… ஆனால் அப்படி ஆக முடியலையே ” எனச் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.

அதன் பிறகே, செளகிட்டை விட்டு நிரந்தரமாக விடைபெற்றுக் கொள்வதெனும் முடிவுக்கு வந்தேன். அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்தால், எனக்கான வாழ்க்கைப் பாதையை நானே அமைத்துக் கொள்வேன். ஆனால், அச்சமயத்தில் பணப்பைகளையும் அடுத்தவர் மனைவியர்களின் தங்க வளையல்களையும் களவாடி களவாடி சலிப்புற்றிருந்தேன். என்னுடைய நெஞ்சுக்கு நெருக்கமான பொருட்களை அடைய வேண்டுமென எண்ணினேன். அப்போதெல்லாம் கோலாலம்பூரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கலைஞர்களால் அப்படியப்படியே கைவிடப்பட்ட பல  கலை பொருட்கள் தெருவோரங்களிலும் இருண்ட சந்துகளிலும் கிடந்தன. வீட்டில் வைப்பதற்குச் சோம்பல்பட்டோ அல்லது நகரவாசிகளுக்கு நினைவுச்சின்னங்களாக இருந்துவிட்டுப் போகட்டும் என்றோ அவர்கள் அப்படிச் செய்திருக்கலாம். பேங்கோக் வங்கிச் சுவரில் பறக்கும் கறுப்பு வண்ண எழுத்துகளைப் பார்த்திருக்கிறேன்:

கா      கா      கா      கா      கா      கா      கா      கா    கா      கா

கா      கா      கா      கா      கா      கா      கா      கா    கா      கா

கா      கா      கா      கா      கா      கா      கா      கா    கா      கா

பங்கோங் சாலையின் பின்புறத்தில் நியோன் விளக்கின் வெளிச்சத்தில் மானொன்று மல்லாந்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். எடின்பர்க் சாலை வட்டத்தில் நீல நிற பேருந்தொன்று காணாமற்போன தன்னுடைய பயணிகளைத் தேடுவதைப் போல இடைவிடாமல் வட்டமடிப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் பொருட்களின் உயர்ந்த கலை மதிப்பைப்  புரிந்து கொண்டவர்கள் போல யாரும் அதனைச் சேதப்படுத்தியிருக்கவில்லை. ஆனால் என்னுடைய நெஞ்சம் பேராசை கொண்டது. நான் அதனைக் காண மட்டும் விரும்பவில்லை; மாறாக என்னுடையதாக்கவும் விரும்பினேன்.

என்னுடைய முதல் முயற்சி உஸ்மான் அவாங்கின் மூக்கைக் களவாடுவது. அது நிச்சயமாக முட்டாள்தனமான புத்தி குறைவான செயல்தான். கடும் பசியில் உடலெல்லாம் நாற்றம் வீசும் சூழலில் ஹாங் துவா சாலையில் நடந்து கொண்டிருந்தப்போதுதான் ஓர் ஒட்டுக்கடையில் உஸ்மான் அவாங்கின் மூக்கு காப்பி அருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நடு இரவு கடந்து சாலை வெறிச்சிட்டு இருந்தது. புத்தி சுவாதீனமற்றவனைப் போல அந்த மூக்கை நோக்கி “உஸ்மான்!” எனக் கத்தினேன். என் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டதைப் போல அது திரும்பிப் பார்த்தது. நான் சிரித்துக் கொண்டேன். அவ்வளவு பெரியதாக இல்லாத உஸ்மானின் மூக்கைச் சிறிய சாடியிலோ அல்லது குப்பைப் பையிலோ வைத்துவிடலாமென்ற வேடிக்கையான எண்ணம் என் மூளையில் உதித்தது. நான் உடனே அதனை ஓடித் தாவிப்பிடித்தேன். உஸ்மானின் மூக்கு பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த ஒட்டுக்கடையிலிருந்த மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் உடனே என்னைத் தரையில் தள்ளி நன்கு நையப்புடைத்துவிட்டனர். நல்லவேளையாக நான் தப்பித்துக்கொண்டேன்.

நான் தொடர்ந்து வீடற்றவனாகவே வாழ்ந்தேன். ஆனால், என்னுடைய களவுத்திறனைப் பட்டைத் தீட்டிக் கொள்வதை மட்டும் விடாதிருந்தேன். இந்தோனேசியா வரை அலைந்து மெல்ல மெல்ல திறமைசாலியானேன். சுஹாய்மி ஹாஜி முகம்மாட்டின் ‘பூரோங் உண்டானை’ களவாடினேன். சப்பார்டி டிஜோகோ டமோனோவின் ‘பெராஹு கெர்தாஸை’  களவாடினேன். தாமான் பலேகம்பாங்கில் ஜோக்கோ பினுர்போ நடந்து கொண்டிருந்ததைக் கண்டு அவரின் ‘செலானாவைத்’ திருடினேன். என்னுடைய வாழ்வொன்றும் வளமாக இருக்கவில்லை. மாறாக, உள்ளூர உழன்றுகொண்டுத்தான் இருந்தேன். நான் களவாடியப் பொருட்களனைத்தும் என்னில் ஓரங்கமாயிற்று. இரவும் பகலும் அவர்களின் குரல்கள் என்னுடைய கவனத்தைப் பறித்துவிட முயன்றதில் என்னுடைய மெய்யான குரலையே அறியாது போனேன்.

ஆக, நான் முன்பு குறிப்பிட்ட தி. அலியாஸ் தைப்பின் உதடுகள் கதைக்கு வருகிறேன். சப்பார்டியின் ‘பெராஹு கெர்த்தாஸை’ நேர்த்தியாக மடித்துக் காற்சட்டைப் பையில் வைத்தபடி இந்தோனேசியாவிலிருந்து திரும்பிய ஒருவாரத்துக்குப் பின் தி. அலியாஸ் தைப்பைக் கண்டேன். பிரிக்பீல்ட்ஸில் அமர்ந்து தேநீரைச் சுவைத்துக் கொண்டிருந்தப்போது தி. அலியாஸ் தைப் வருவதைக் கண்டேன். அவரருகே அப்துல் அஜிஸ் யஹ்யாவும் அரிஸ் அஸிஸும் உடன் நடந்து வந்தனர். எனக்கருகிலிருந்த மேசையில் அவர்கள் அமர்ந்தனர். அவர்களின் உரையாடல் மிகத்தெளிவாகக் கேட்டதால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதனை ஒட்டுக்கேட்டேன். தி. அலியாஸ் தைப்தான் அதிகமும் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய குரல் கரகரப்பாகவும் அதிர்ந்தும் ஒலித்தன. அவருடைய வலப்பக்கச் சட்டைப் பையில் இரண்டு பேனாக்கள் செருகப்பட்டிருப்பது என் கண்களில் பட்டுவிட்டது. அவர் தோற்றம்பள்ளி ஆசிரியரைப் போல இருப்பதாக எண்ணிக் கொண்டேன். 

“பாலைவனத்தில் ஒரு சொட்டு நீரைத் தேடுவதைப் போன்றது கவிதை எழுதுவது” என்றார் தி. அலியாஸ் தைப். நான் வியப்பில் நிலைகுத்தி அமர்ந்திருந்தேன். இரண்டு மணி நேரம் அவ்வாறே கடந்தது. அவருடைய உதடுகள் ஓயாமல் அறிவார்ந்த, கவித்துவமானதுமான சொற்களைப் பொழிந்து கொண்டிருந்தன; நான் அதனைப் பெற வேண்டும். அதை என்னுடையதாக்கிக் கொள்ள வேண்டும். நான் தி. அலியாஸ் தைப்பின் உதடுகளைக் களவாடிய முறை மிக எளிமையானது. மாறாக, அது களவென்று கூட சொல்ல முடியாது. அவருடைய உதடுகளை இலவசமாகவே எனக்கு அளித்துவிட்டார் என்றுகூட நான் பிறகு எண்ணிக்கொண்டதுண்டு. அவர்கள் உரையாடி முடிக்கும் வரையில் பொறுமையுடன் காத்திருந்தேன். பிறகு, தி. அலியாஸ் தைப் எழுந்து உணவகத்தின் பின்னால் இருந்த கழிப்பறைக்குச் சென்றார். இதுதான் எனக்கான வாய்ப்பு. நானும் அவரைப் பின் தொடர்ந்தேன். கழிப்பறைக்குச் சென்றதும் தன்னுடைய உதடுகளை நீர்த்தொட்டியருகே கழற்றி வைத்ததைக் கண்டேன். நான் உடனே அதனைக் களவாடிக் கொண்டு பிரிக்பீல்ட்ஸை விட்டு ஓடினேன்.

அதன் பின் என்னுடைய வாழ்வு வெகுவாக மாறிவிட்டது. நான் திருடுவதை நிறுத்திக் கொண்டு ஊடகத்துறையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். செய்திகளையும் புறணிகளையும் திருடும் என்னுடைய திறமையைப் பத்திரிகை ஆசிரியர் நன்கு பயன்படுத்திக் கொண்டார். இருபதாண்டுகள் கடந்துவிட்டன. இப்பொழுது நான் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறேன். இளவயதில் நான் களவாடிய பொருட்களை இன்னுமும் கூட வீட்டிலிருக்கும் பெட்டியில் வைத்திருக்கிறேன். அவற்றை, ஒவ்வொன்றாக இலக்கிய ஆர்வலர்களுக்கும் அரும்பொருள் சேகரிப்பாளர்களுக்கும் விற்று வருகிறேன். ஒரு நாள் தி. அலியாஸ் தைப்பின் உதடுகள் பெட்டியின் அடியில் கிடப்பதைப் பார்த்தேன். உடனே, நகரத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு அவருடைய உதடுகளை விற்கலாமென்ற நற்சிந்தனை எனக்கு உதித்தது.

இதுதான் பெம்பூரு கோத்தா நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட கதை. முதல் மாதம் தி. அலியாஸ் தைப்பின் ஐம்பது உதடுகளைப் பதிப்பித்தேன். அவை சுடச்சுட விற்றுத்தீர்ந்தன. இரண்டாம் மாதம், பல இடங்களில் என்னுடைய நிறுவனத்தை விளம்பரப்படுத்தத் தொடங்கினேன். அதிலொன்றுத்தான் வண்ணத்தாள்களில் அச்சாகும் தொலைப்பேசி அடைவு புத்தகம். நான் அவர்களை ஒரு காலை வேளையில் அழைத்து “நான் பிரபல கவிஞர் தி. அலியாஸ் தைப்பின் உதடுகளை விளம்பரப்படுத்தப் போகிறேன்” என்றேன்.

***

21 பிப்ரவரி 2016 அன்று மிங்குவான் மலேசியா நாளிதழில்  பிரசுரிக்கப்பட்டது அதன் பின் Mana Dadu Darjeeling? (எங்கே டார்ஜிலிங்   தாயம் சிறுகதைத் தொகுப்பில் இணைக்கப்பட்டது. இச்சிறுகதை 2016 ஆம் ஆண்டுக்கான உத்துசான் குழும இலக்கியப் பரிசுப் போட்டியில் ஆறுதல் பரிசினை வென்றது.

  • பூரோங் உண்டான்: சுஹாய்மி ஹாஜி முகம்மாட்டின் கவிதை
  • பெராஹு கெர்தாஸ்: (காகிதப்படகு) இந்தோனேசியக் கவிஞர் சபார்டி ஜோக்கோவின் கவிதை
  • செலானா: ஜோக்கோ பினுர்போவின் கவிதை

மலாய் மூலம்: வான் நோர் அஷ்ரிக்

தமிழில்: அரவின் குமார்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...