
“சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று” என்று பாதிரியார் தாமஸ், பிராத்தனையில் கூடியிருந்த மக்களைப் பார்த்துச் சொல்ல, இறைவனுக்கு நன்றி கூறி மணலில் அமர்ந்திருந்த மக்கள் எழுந்தனர். கடற்கரை காற்றில் பறந்த அவரவர் ஆடைகளைக் கவனமாகப் பிடித்தபடி கலைந்து சென்றனர்.
கூட்டத்தில் இருந்த தேநீர் கடைக்காரர், “சாமி!” என்று தாமஸை நோக்கிக் கத்தினார்.
ஆலயத்திற்குள் செல்ல எத்தனித்த தாமஸ் திரும்பிப் பார்த்து, “என்னலேய்” என்றார்.
“ஆலயத்துக்க பணி எப்ப முடியும் சாமீ. பூச எப்ப ஆலயத்துக்க உள்ள நடக்கும்?” என்று வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே கத்தினார்.
“ஏலே! நீ எத்தற காணிக்க குடுத்தலே?”
“ரெண்டு ரூவா சாமீ!” என்று பெருமிதமாகக் கத்தினார்.
“படுக்காளி” என்று முனகிய தாமஸ், “அங்கன ரெண்டு ரெண்டு பைசாவாக் குடுல, ஒரு இருநூறு வருசத்துல ஆலயத்துக்க பணி முடியும் பாத்துக்க,” என்று கூறிவிட்டு சாப்பிடும் அறைக்குச் சென்றார்.
தெரசம்மா உணவைப் பரிமாறத் தயாராக இருந்தாள்.
“அலெக்ஸூ சாப்பிட்டானா?” என்று கேட்டுக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்.
“ஆலயத்துக்குப் பெயிண்ட்டு வாங்கப் போனவன் இன்னும் காணயில்ல கேட்டவுளா,” என்றாள்.
“ஓ… அது சரி! அப்போ நான் இன்னைக்கு நிம்மதியாட்டு செபிக்கலாம்,” என்று வேகமாக உணவருந்திவிட்டு ஆலயத்திற்குள் சென்றார்.
கட்டைகளை அறுக்கும் ரம்பத்தின் சத்தம் உடல் முழுவதும் கூச, தன் கரம் கொண்டு காதுகளை இறுக மூடியபடி ஆராதனைக் கூடம் நோக்கி ஓடினார். மூடியிருந்த ஆராதனைக் கூடத்தின் கனமான கதவினைச் சத்தம் வராதபடி மெல்லத் திறந்து உள்ளே சென்று, பிறகு கதவுகளை மீண்டும் மூடிக் கொண்டார். அந்த அறையில் இருந்த நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்தன. மதிய வேலை ஆகையால் செபிக்க மக்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என்பது தாமஸ்ஸிற்கு நன்கு தெரியும்.
முற்றிலும் அமைதி சுமந்த காற்றின் தழுவலில் அப்பமாக வீற்றிருந்த நற்கருணை இயேசுவின் உடலின் முன் மெழுகுவர்த்தியை ஏற்றினார். பிறகு மண்டியிட்டு இமைகளை மூடி, திருப்பாடல்களில் 51 ஆம் பாடலை மனதிற்குள் உச்சரிக்கத் துவங்கினார் தாமஸ்.
அதில் பத்தாம் வரியைச் சொல்லத் துவங்கினார்.
“கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்”
“ஆ… ஆஆ… அச்சூ” என்று பலத்த தும்மல் ஓசை கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்த தாமஸ்,
“என்ன அமைதியாட்டு செபிக்க விடுறவன்னில்லலேய் நீ” என்று கோபமாக எழுந்து திரும்பிப் பார்த்தார்.
நாற்காலிகளின் இடையே தரையில் படுத்திருந்த அலெக்ஸாண்டர்,
“சாமீ! மெழுகுப் பொக மூக்குல ஏறி தும்மல் வந்திருச்சுங்க,” என்று தனது கைலியின் முனையால் மூக்கைத் துடைத்துக் கொண்டே எழுந்து நின்றான்.
“லேய் நீ பெயிண்ட்டு வாங்கப் போனவனல்லா. இஞ்ச என்னலே செய்யுத?”
“சாமீ பெயிண்ட்டு வாங்கக் காசு குடுக்கலியே நீங்க,” என்று கையை நீட்டினான்.
“ஓ… அதாக்கும் கத… இந்நா” என்று தனது காற்சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்தவாரே அவனது அருகில் வந்து அவனது கையில் கோபமாகத் திணித்தார் தாமஸ்.
“சரி சாமீ!” என்று பணத்தை வாங்கிச் சட்டை பையில் போட்டுக் கொண்டே, “உண்மையான பக்தின்னா எது தெரியுங்களா சாமி?” என்று கேட்டான்.
“ஓ… எனக்கு வேதம் படிப்பிச்சுக் கொண்டுக்கான் வேண்டி விண்ணிலிருந்து இறங்கி வந்ந தேவதூதன்னுல்லா நீ. செல்லு செல்லு… நீ செல்லுதத கேக்குதது எனக்க விதியாக்கும்.” என்று கூறிக்கொண்டே அருகில் இருந்த ஒரு நாற்காலியல் அமர்ந்தார் தாமஸ்.
“புதுசா நான் என்னத்தச் சாமி சொல்லீறப் போறனுங்க.” என்று தனது இடது கையை முதுகிற்குப் பின்னால் வைத்துக் கொண்டு, வலது கையின் நான்கு விரல்களை தாமஸ்ஸின் முன் காட்டி, “நாப்பது நாளு யேசுவுக்கு நடந்த சோதன உங்களுக்குத் தெரியாததா?” என்றான்.
“அதுக்கென்ன லேய்?”
காற்றில் ஒரு வட்டம் வரைந்தபடி, “எல்லா வகயான ஆசாபாசங்களுக்கும் தூண்டப்பட்டாருள்ளங்க சாத்தான்னால.”
“லேய் அது எனக்குத் தெரியும்பல. நீ என்னத்தலே செல்ல வாரா ? அதச் செல்லு.”
“யேசப்பா அத எல்லாம் எதுத்துப் போராடினது மாதிரி நீங்களும் எதுத்துப் போராடோனும்முன்னு சொல்றேனுங்க.”
“யாரலே எதிர்த்துப் போராடனம்?”
கால் வரை இருந்த தனது கைலியை மடித்துக் கொண்டே, “ரோசியத் தான்.” என்றான்.
“யாருலே ரோசி?” என்று தாமஸ் எழுந்தார்.
“அத நீங்க தான் சொல்லோனும், நேத்து தூங்கும் போது பெணாத்துனீங்களே,” என்று கூறிக்கொண்டே ஓட ஆரம்பித்தான் அலெக்ஸாண்டர்.
“எனக்கக் கையில அடி வாங்கிச் சாவ தாம்பலே நீ கோயமுத்தூருல இருந்து வந்து சேந்திருக்குறவன் எனக்க கிட்ட.” என்று அவனை எட்டிப் பிடிக்க முயன்றார். ஊனமான அவரது வலது காலினால் அலெக்ஸாண்டரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
“பயந்து ஓடுறியாலே?” என்று சிரித்தார்.
“பெயிண்ட்டு வாங்கப் போறேன்” என்று கத்திக் கொண்டே தாமஸ்ஸின் பார்வையில் இருந்து ஓடி மறைந்தான்.
இரண்டு வருடங்களாக ஆலயத்தைச் சீரமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. கட்டுமானப் பணிகளுக்காக பிஷப்பின் ஒப்புதல் கையொப்பம் வேண்டி விண்ணப்பித்த பணம் தவணை முறையில் தாமதமாக வந்தடைகின்றன. அதனால் கட்டுமானப் பணிகள் இரண்டு வருடங்களாக இழுத்துக் கொண்டிருக்கின்றன. சித்தாள் வேலைக்கு வந்தவர்களில் அலெக்ஸாண்டர் மட்டும் கோயமுத்தூரைச் சார்ந்தவன். மற்ற அனைவரும் உள்ளூர் கிராம வாசிகள். அலெக்ஸாண்டரின் கள்ளம் இல்லா குணம் தாமஸ்ஸிற்கு மிகவும் பிடித்துப் போக, ஆலயத்தின் பணிகள் முடியும் வரை தன்னோடு தங்கிக் கொள்ளச் சொல்லி இருந்தார்.
அலெக்ஸாண்டர் வெளியே ஓடி மறைந்ததும் ஆலயத்திற்குள் சென்றார் தாமஸ். ஆலயம் முழுக்க ஏணிகளும் கட்டைகளுமாக இருந்தன. ஆட்கள் மும்மரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். சிலுவையில் அரையப்பட்ட இயேசுவின் பிம்பம் திரையொன்றால் மூடப்பட்டு இருந்தது. ஆலயத்தின் பணிகள் முடிந்த பின்னரே திரை விலக்கப்பட்டு பிராத்தனைகள் தொடரும். அதுவரையில் தினசரி திருப்பலி கோவிலின் வெளியே தான் நடக்கின்றன.
காலை நேரத்து இரண்டு திருப்பலிகளையும் ஒரு ஞானஸ்தானத்தையும் முடித்து விட்டு அயர்ச்சியாக இருந்தது தாமஸ்ஸிற்கு. தெரசம்மா கையால் உண்ட மதிய உணவின் மயக்கமும் சேர்ந்து கொண்டது. அதனால் தன்னுடைய அறையில் ஓய்வெடுக்கச் சென்றார் தாமஸ்.
தனது ஆலயம் முழுக்க தேவதைகள் ஏணிகளுக்கு இடையே பறந்து கொண்டிருந்தனர். அனைத்து தேவதைகளும் பறந்து கொண்டே ஆலயத்திற்குச் சாயம் அடித்துக் கொண்டிருந்தனர். சாம்பிராணி மணத்திற்கும் புகைக்கும் நடுவே ஞானஸ்தானத்திற்கான புனித நீரோடு வெண்ணிற அங்கி அணிந்து தாமஸ் நின்று கொண்டிருந்தார். மேரியும் ஜோசப்பும் தங்கள் பிள்ளையை ஞானஸ்தானத்திற்காகக் கொண்டு வந்தனர். குழந்தையைச் சுற்றி இருந்த துணியை விலக்கும் பொழுது கண்கள் கூசும்படி ஒளி பரவியது. ஆலயத்தினுள் பறந்து கொண்டிருந்த தேவதைகள் அனைவரும் அலெக்ஸாண்டராக உருமாறி “சாமீ! சாமீ!” என்று கூச்சல் இட்டனர்.
திடுக்கென்று கண்விழித்து எழுந்து அமர்ந்தார் தாமஸ்.
“சாமீ! சாமீ!” என்று அலெக்ஸாண்டர் கத்திக் கொண்டே தாமஸ்ஸின் அறை கதவை மோதித் திறந்து உள்ளே நுழைந்தான். இரண்டு கைகளிலும் பெரிய பெயிண்ட்டு டப்பாக்களை தாங்கி இருந்தான்.
தன் இதயத்தைப் பிடித்துக் கொண்ட தாமஸ்,
“என்ன நிம்மதியாட்டு ஒறங்க விடுறியாலே நீ. இப்ப என்ன லேய், செல்லு?” என்று கத்தினார்.
“சாமீ, சூச குடுச்சுப் போட்டு மேரியப் போட்டு அடிச்சுட்டு இருக்குறானுங்க.”
“லேய், ஒறங்குனது நானல்லா. எனக்க கனவுல நான் கண்டது வேறயாக்கும். நீயும் ஒறங்குனியா லே?”
“ம்க்கும் நான் எங்க தூங்கினேன். நான் பெயிண்டு வாங்குறதுக்குல்ல போனேன்.”
“ஆமா… சரி தான்… பின்ன எந்த சூச மேரி?” என்று சற்று யோசித்த தாமஸ், “லேய் அவனா? எலே அவன் துபாயில ஒட்டகத்துக்கக் கால் அமுக்கிவிடான் போனவன்லா?”
“அட அவன் பொண்டாட்டிக்குப் பொண்ணு பொறந்துருக்குதுல்ல?” என்று பெயிண்ட்டு டப்பாக்களை கீழே வைத்தபடி சொன்னான்.
“ஓ! அதக் காண வந்தவனா!”
“இதென்ன ஊர்க் கௌவி திண்ணையில ஒக்காந்து பொறளி பேசுற மாதிரி கத கேட்டுட்டு இருக்குறீங்க? நீங்க இந்த ஊர்ச் சாமி. போயீ என்னன்னு கேக்க வேண்டாமா?” என்று தாமஸ்ஸின் அங்கியை எடுத்துக் கொடுத்து,
“இத மாட்டிக்குட்டு வெடுக்குன்னு வாங்க. நான் இந்த பெயிண்டக் குடுத்துப்போட்டு வாரேன்.” என்று பெயிண்ட்டு டப்பாக்களை எடுத்துக் கொண்டு ஆலயத்தை நோக்கி ஓடினான்.
தனது அங்கியை மாட்டிக் கொண்டு வெளியே சென்ற தாமஸ், அலெக்ஸாண்டரின் சைக்கிளின் அருகே போய் நின்று கொண்டார்.
“அய்யோ!” என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.
அலெக்ஸாண்டர் தனது லுங்கியை வாரிக் கொண்டு பட்டாப்பட்டி உள்ளாடை தெரிய ஓடி வந்து கொண்டிருந்தான்.
“என்னலே ஆச்சு?” என்று தாமஸ் கேட்கக் கேட்க தெரசம்மாள் கரண்டியோடு அலெக்ஸாண்டரின் பின்னே தத்தித் தத்தி ஓடி வருவது கண்டார்.
“சாமீ சிக்கொரம் ஏறுங்க சைக்கிள்ல” என்று மூச்சிரைக்கக் கூறிக்கொண்டே சைக்கிளில் ஏறினான் அலெக்ஸாண்டர்.
“ஏலேய்.. இன்ன அடுக்களைல என்னத்தலே களவாண்டு தின்ன?” என்று கேட்டுக் கொண்டே சைக்கிள் கேரியரில் ஏறி அமர்ந்தார் தாமஸ்.
“படுக்காளி! வதக்குன உள்ளிய எல்லாந் தின்னு தீத்தா நான் எங்கனல மீன் கொழம்பு வைக்க ஒக்கும்? ராத்திரி சாப்பாட்டுக்குக் கஞ்சிதாம்பல ஆக்கனும்.” என்று தெரசம்மா கரண்டியை ஓங்க சைக்கிள் முன் நகர, அலெக்ஸாண்டருக்கு விழ வேண்டிய அடி தாமஸ்ஸின் முதுகில் பொத்தென்று விழுந்தது.
“அய்யோ! ஆண்டவரே!” என்று கத்தினார் தாமஸ்.
“என்ன சாமீ?”
“ஏலே உனக்க பாவத்துக்கு தண்டன எனக்காலே?”
“ஹீ ஹீ ஹீ.. உலக மக்களோட பாவத்துக்காகத் தானுங்க சாமீ யேசப்பா சிலுவையத் தூக்கினது.” என்று சிரித்தான்.
“ஊருக்கே பிரசங்கம் செல்லுற எனக்கு நீ பிரசங்கம் வைக்குறவனாலே? மிதிலே வண்டிய வெரசா.” என்று அலெக்ஸாண்டரின் முதுகில் ஒரு அடி வைத்தார் தாமஸ்.
“சாமீ இது ஒன்னும் குதிரை இல்ல பாத்துக்கோங்க.”
“ஓ! எவம்பலே உனக்கு அலெக்ஸாண்டர்ன்னு பேரு வச்சது?”
“உங்களப் போல ஒரு பாதர் தேன். சரி சரி, என்னய கெட்டியாப் புடுச்சுக்கோங்க! வேகமா அழுத்தப் போறேன் வண்டிய.”
கண்களை இறுக மூடி அலெக்ஸாண்டரை இரு கைகளால் அணைத்துக் கொண்டார் தாமஸ். சைக்கிள் பெல்லை பலமாக அடித்துக் கொண்டு வழியில் செல்பவர்களை எல்லாம், ‘ஒத்து, ஒத்து’ என்று கத்திக் கொண்டே ஓட்டினான் அலெக்ஸாண்டர்.
இவர்களைக் கண்ட டீக்கடைக்காரர்,
“என்னலே ஆச்சு, சாமிக்கு நெஞ்சு வலியாலே?!” என்று கத்தினார்.
“எனக்க மரணம் எப்போண்ணு காத்திருக்காம்பலே அவன்.” என்ற தாமஸ் கண்களைத் திறந்து,
“ஏலேய்.. உனக்க பாவத்த எல்லாம் கூடி நீ அறிக்கை இடுற வர நான் சாவ மாட்டன் லே கேட்டியா!.” என்று கத்திவிட்டு திரும்பவும் கண்களை மூடிக்கொண்டார்.
சூசை-மேரியின் வீட்டின் முன் கூடியிருந்த மக்கள் கூட்டம் அலெக்ஸாண்டரின் சைக்கிள் பெல் ஓசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தனர். சைக்கிளின் வேகத்தைக் கண்டு அஞ்சி இரண்டாகப் பிரிந்து வழி விட்டனர். அலெக்ஸாண்டர் சைக்கிளை நிறுத்தியதும் கண் திறந்து பார்த்த தாமஸ் அதிர்ச்சியோடு கீழே இறங்கி நின்றார்.
சூசையின் பரட்டைத் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு வட்டம் சுற்றிக் கொண்டு அவனை அடித்துக் கொண்டிருந்தாள் மேரி.
தாமஸ்ஸை கண்டதும் மேரி அவளது பிடியைத் தளர்த்த, சூசை தாமாஸ்ஸின் காலடியில் தலை குப்புற வந்து விழுந்தான்.
“ஏலேய் அலெக்ஸ்ஸு, என்னலே இது, சூச மேரிய அடிக்கான்னுல்லலேய் நீ சென்னது!?” என்று தாமஸ் கேட்டார்.
“அதான! நான் பாக்கும்போது சூச தான் சாமீ மேரியப் போட்டு அடுச்சுட்டுக் கெடந்தான்.!”
“என்னத்த கண்டயோ.” என்று மேரியின் பக்கம் திரும்பிய தாமஸ், “மோளே! ஒரு பாவப்பட்ட சீவன இங்கன அடிக்கலாமா? நீ எந்திரி மக்களே.”
என்று தரையில் கிடந்த சூசையை எழுப்பி விட்டார் தாமஸ்.
குடி போதை அவனை நிற்க விடாமல் தள்ளியது.
“ஏலே அலெக்ஸ்ஸூ! இவனப் பிடிப் பிடிப் பிடி!!” என்றார் தாமஸ்.
சைக்கிளை விட்டுவிட்டு சூசையைத் தாங்கிக் கொண்ட அலெக்ஸாண்டர், “ஹீம்” என்று முகம் சுளித்து, “ஏன்டா, துபாயில இருந்து நல்ல சரக்கு கொண்டு வரலயாடா? சாராயங் குடுச்சுத் தொலச்சியா. யெலவு நாறுது.” என்றான்.
“எதுக்கு மோளே இவன இங்கன அடிக்குறவ?” என்று தாமஸ் கேட்டார்.
“அவனயே கேளுங்க.” என்று ஆத்திரத்தோடு மேலும் கீழும் மூச்சு வாங்கியது மேரிக்கு.
வாயில் ரத்தம் வழிய நின்றிருந்த சூசையைக் காண பரிதாபமாக இருந்தது தாமஸ்ஸிற்கு.
“அவனுக்க வாய் பொட்டி இல்லா மோளே. நீயே செல்லு.” என்று சாந்தமாகக் கேட்டார் தாமஸ்.
“பெத்த மோள அவனுக்க பிள்ள இல்லன்னு சண்டைக்கு வாரான். என்னப் போட்டு அடிக்கான். நீங்க செல்லுங்க சாமி, இந்தப் பிள்ள இவனுக்க சாடை இல்லயா?” என்று பெற்ற மகளைத் தூக்கிக் கொண்டு வந்தாள் மேரி.
குழந்தையைக் கண்டதும் தாமஸ்ஸின் மனம் நெகிழ்ந்தது.
“என்ன விடுலே” என்று அலெக்ஸாண்டரின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட சூசை,
“சாமீ, நீங்களே செல்லுங்க. எனக்க நெறத்தப் பாருங்க.” என்று கையைக் காட்டி, “அண்டக் கருப்பு. அவளுக்க நெறத்தப் பாருங்க, என்னயக் காட்டிலும் கருப்பு. அது எங்கன பிள்ள மாத்தரம் இத்தற நெறங் கொண்டு வெண்ண மாதிரி பெறக்க ஒக்கும்?” என்று தள்ளாடியபடி கேட்டான்.
“ஏய்!” என்று ஓடி வந்த மேரியை “இரு மோளே, நான் பேசுதேன்.” என்று தடுத்த தாமஸ்,
“எலேய் பேத்தலே… உனக்க அம்மய நீ கண்டதுண்டாலே?” என்று கத்தினார்.
“அது அவன் பிறந்த அடுத்த நொடியே மறிச்சுப் போயில்லாலோ!” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது.
அதைக் கேட்டதும் “ஓ” வென்று ஒப்பாறி வைத்து அழத் துவங்கிய சூசை,
“எனக்க அம்ம உயிரோட இருத்தெங்கில் நல்ல பெண்ணாட்டு பாத்து எனக்குக் கெட்டி வச்சிருப்பா. இந்தச் சில்லாட்டய நம்பி நான் ஏமாந்து போனதாக்கும் எனக்க விதி.” என்று அழுதான்.
“ஏலே… உனக்க அம்மயாக்கும் பிறந்திருக்குறது. உனக்க அம்மயுட நெறமாக்கும்பல உனக்க மவ.” என்றார் தாமஸ்.
கண்களைத் துடைத்துக் கொண்ட சூசை,
“சாமீ நெசமாவா சொல்லுதது?” என்று கேட்டான்.
“ஆமாலே… சத்தியம்.” என்றவுடன் அலெக்ஸாண்டர், “சாமீ சத்தியம் சொல்லக் கூடாது.” என்றான்.
தாமஸ் முறைத்துப் பார்த்தார்.
“பைபில்ல அப்படித்தாஞ் சாமி சொல்லி இருக்கு.” என்றான் அலெக்ஸாண்டர்.
சூசையின் பக்கம் பார்வையைத் திருப்பிய தாமஸ், “ஏலேய் உனக்க அம்ம மறுபடியும் பெறந்திருக்கா, ஊரக் கூட்டி விருந்து வைக்காம பெண்டாட்டியப் போட்டு அடிக்கிறவனாக்கும் நீ? போலே போயி மன்னிப்புக் கேட்டு சமாதானமாட்டு இரிலே.” என்று சூசையைப் பிடித்துத் தள்ள அவன் மேரியின் காலடியில் போய் விழுந்தான்.
“எலேய் அலெக்ஸூ! உனக்கக் குதிரைய எடுலே” என்றார் தாமஸ் கீழே கிடந்த அலெக்ஸாண்டரின் சைக்கிளைக் காட்டி.
சைக்கிளில் ஏறும் பொழுது சூசையிடம் திரும்பி,
“ஏலே சூசையப்பா… பாவத்த அறிக்கையிடனுமாக்கும் நீ. நாள சாயுங்காலம் ஆலயத்துக்கு வா கேட்டியா?” என்று உரக்கச் சொன்னார் தாமஸ்.
கடலோரச் சாலையில் மெதுவாக மிதிவண்டியைச் செலுத்தினான் அலெக்ஸாண்டர். அஸ்தமிக்கும் சூரியனின் வண்ணங்கள் விண்ணை நிறைத்துக் கொண்டிருந்தன. மாலை நேர உப்புக் காற்றின் மணம் அலாதியாக இருந்தது தாமஸ்ஸிற்கு.
“எலே அலெக்ஸே… வஞ்சர மீனுக்க சீசனாக்கும் கேட்டியா.” என்றார் தாமஸ்.
“சாமீ.. வஞ்சர மீனு கெடக்கட்டும். எனக்கு ஒரு டவுட்டு”
“என்னலே கோயம்புத்தூர் மாப்பிள. கேழு.”
“இல்ல… அதெப்புடி சூசயோட அம்மா செவத்த நெறமுன்னு உங்களுக்கு உறுதியா தெரியும்?”
அவனது முதுகில் ஒரு அடி வைத்த தாமஸ்,
“எலே.. நீ கோயமுத்தூரிலில் இருந்து தப்பிச் சாடி வந்நு ரெண்டு வருசம் இருக்குமாலே… நீ நாடோடியல்லா. இது எனக்க செறிய பங்குலே. இங்கன உள்ள எல்லா மக்களயுங் கூடி நான் அறியும்.. நான் இந்த கொளச்சல் மண்ணுல பிறந்தவனாக்கும், கேட்டியா? எனக்க வயசும் சூசையுக்க அம்ம வயசும் ஒன்னாக்கும். ரண்டு பேரும் இங்கன உள்ள கவுருமெண்ட்டு பள்ளியில் தான் ஒன்னா படிச்சது. நல்ல பிள்ளையாக்கும். அவளுக்க மண்டையில படிப்பு ஏறல. கெட்டினவன் மீனு பிடிக்கப் போயி புயலுல சிக்கி மறிச்சான் சூசை பிறக்குன்ன ஒரு மாசம் மும்பு. சூச பிறந்ந திவசம் அவளும் மரிச்சா. சூசையக்க பாட்டியாக்கும் அவன வளத்து ஆளாக்கியது.” என்று அவர் சொல்லி முடித்தார். பிறகு ஆழ்ந்த மௌனத்திற்குள் சென்று விட்டார் தாமஸ். வானில் சூழ்ந்த சூரியனின் கீற்றுகள் தாமஸ்ஸின் மனதை அழுத்தியது. தாமஸ்ஸின் இருப்பிடத்தின் முன் அலெக்ஸாண்டர் சைக்கிளை நிறுத்தினான். தாமஸ் அமைதியாக பைபிலோடும் ஜெபமாலையோடும் இறங்கி நேராக ஆராதனைக் கூடத்திற்குள் நுழைந்தார். அலெக்ஸாண்டரும் அவர் பின்னே சென்றான். அமைதியாகத் திருப்பாடல் 25ஐ மண்டியிட்டுச் சொல்லத் துவங்கினார் தாமஸ்.
“ஆண்டவரே உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.” என்று ஆரம்பித்தார்.
“ஆ… ஆ…” என்ற அலெக்ஸ்ஸாண்டரின் சத்தம் வர கோபமாக எழுந்து நின்ற தாமஸ்,
“இப்ப என்னலே உனக்கு வேணும். என்ன காரியத்துக்குலே எனக்க உயிர வாங்க வந்தவன் நீ?” என்று கத்தினார்.
இடுப்பில் மடித்துக் கட்டியிருந்த கைலியை இறக்கிவிட்டு, தன் பின் கழுத்தைத் தன் வலது கையால் நேய்த்துக் கொண்டே, தணிந்த குரலில் “சாமீ நான் ஆண்டவரோட கோயில சுத்தமாக்க வந்தேனுங்க. வேல முடிஞ்சதும் கெளம்பீருவனுங்க.” என்றான்.
அலெக்ஸாண்டரின் கண்கள் தன் ஆழ் மனதைக் களைப்பதைப் போல இருந்தது தாமஸ்ஸிற்கு. அதை ஏற்க முடியாமல் தவித்தார்.
“சாமீ… நம்ம கண்ணுல இருக்குற மரக்கட்டய எடுக்காம அடுத்தவங்க கண்ணுல இருக்குற துரும்ப எப்புடி எடுக்க முடியும் சொல்லுங்க?” என்று கேட்டான்.
அதற்கு மேல் பொறுமை இழந்த தாமஸ், “அப்போ பாவ மன்னிப்புக் கொடுக்க எனக்குத் தகுதி இல்லன்னு சொல்றவனாலேய் நீ” என்று அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து, “லேய்… உனக்க பிரசங்கத்தக் கேக்க எனக்கு நேரமில்ல கேட்டியா. எனக்கு புத்தி செல்ல நீ யாருலே? நாடோடிப் பயலே. போலே வெளிய. எனக்க கண்ணு முன்ன நிக்காத!” என்று அவனை ஆராதனைக் கூடத்தை விட்டு வெளியே தள்ளினார்.
அடி விழுந்தக் கன்னத்தைத் தடவிக் கொண்டே கண்கலங்கி வெளியே சென்றான் அலெக்ஸாண்டர்.
அலெக்ஸாண்டரை வெளியேற்றி விட்டு சுமார் ஒரு மணி நேரம் மண்டியிட்டு இருந்தார் தாமஸ். அலைபாயும் மனதை ஒருநிலைப்படுத்தி அவரால் ஜெபிக்க முடியவே இல்லை. உள்ளமும் உடலும் தளர்ந்து போக கூடத்தை விட்டு வெளியே வந்தவர் இருள் சூழ்ந்திருந்ததைக் கண்டார். நேராக சாப்பிடும் அறைக்குச் சென்றார்.
அலெக்ஸாண்டர் ஒரு ஓரமாக நின்றிருந்தான். நாற்காலியில் அமர்ந்தார் தாமஸ். அவருக்கு நேர் எதிரே இருந்த நாற்காலியில் அலெக்ஸாண்டர் வந்து அமர்ந்து கொண்டான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
தஞ்சாவூர் பொம்மை போல அசைந்து நடந்து வந்த தெரசம்மா இருவருக்கும் உணவைப் பரிமாறினாள். தாமஸ் உணவை முதலில் சாப்பிடாமல் அலெக்ஸாண்டர் சாப்பிட மாட்டான் என்பது தெரசம்மாவிற்கு நன்கு தெரியும். தாமஸ் சாப்பிடாமல் உணவையே பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அமைதியாக இருவரையும் பார்த்துக் கொண்டு தெரசம்மா நின்றாள்.
பிறகு தன் ஐவிரலும் பதியும்படி “பொத்” என்று அலெக்ஸாண்டரின் முதுகில் ஒரு அடி வைத்தாள். வலி பொறுக்காமல் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான் அலெக்ஸாண்டர்.
“லேய்.. எனக்க வயசு எத்தறன்னு தெரியுமாலே ஒனக்கு?” என்று கேட்டாள்.
முதுகைத் தேய்த்துக் கொண்டே, ‘இல்லை’ என்று இடமும் வலமுமாக தலை அசைத்தான் அலெக்ஸாண்டர்.
“எழுபத்தி ரெண்டாக்கும். இத்தற வயசுல உனக்க வயிர நெறைக்கான் வேண்டி நான் இத்தற உண்டாக்கிக் கொண்டாடியிருக்கு. மரியாதையாட்டு எடுத்து விழுங்கடே!. இல்லெங்கில் கரண்டியக் காய்ச்சி கொண்டு வந்நு உனக்கக் குண்டியில வச்சு இழுத்துறுவேன்!” என்று கூறிக்கொண்டே ஓரக்கண்ணால் தாமஸ்ஸை பார்த்தாள் தெரசம்மாள்.
அவர் பாதி உணவில் இருந்தார்.
இருவரும் வேகமாக உண்டுவிட்டு உறங்கச் சென்றார்கள்.
தாமஸ்ஸின் அறையின் மூலையில் எப்போதும் உறங்கும் இடத்தில் அலெக்ஸாண்டர் அவனது பாயில் படுத்துக் கொண்டான். தாமஸ் அவரது அங்கியைக் கழற்றி ஆணியில் மாட்டி விட்டு தனது மெத்தையில் படுத்துக் கொண்டார்.
கண்களை மூடினார். ஆழ்மனம் விழித்துக் கொண்டது. பெரிய ஆழம். இருட்டினூடே வரும் மெல்லிய வெளிச்சத்திற்குக் கண்கள் பழக சிறிது நேரம் எடுத்துக் கொண்டது.
“மோனே!” என்ற குரல் கேட்டது.
“அம்மா!” என்று தடுமாறினார் தாமஸ்.
“அம்ம சொல்லுதத ஒன்னு கேளு. நீ சாமியாராட்டு போக வேண்டா மக்களே! இந்த வீட்ட வித்து உனக்க அக்காவுக்க கல்யாணம் நடக்கட்டு.”
“ஆமாம் மக்களே” என்று சுவரில் புகைப்படமாகத் தொங்கிக் கொண்டிருந்த தாமஸ்ஸின் அப்பாவும் கூறினார்.
“என்ன ஓமாம் மக்களே. ஒன்பது மக்களப் பெத்துட்டு போயி போட்டோவுல அடஞ்சுக்கிட்டீரு சொகமாட்டு” என்று கோபம் வந்தது தாமஸ்ஸிற்க்கு.
வீட்டின் கதவைத் திறக்க முயன்றார் தாமஸ். ஆனால் முடியவில்லை. கதவின் ஓட்டை வழியாக ஒரு வெளிச்சம் தோன்ற அதன் வழியாகப் பார்த்தார். மிக பிரம்மாண்டமான ஆராதனைக் கூடம் தெரிந்தது. மிகப்பெரிய மெழுகுவர்த்தி பெரிய தீபத்தைத் தாங்கிக் கொண்டு நின்றது.
“இந்த வீட்ட விட்டுப் போகாண்டா மக்களே!” என்று தாமஸ்ஸின் அம்மா அவரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்.
“என்ன விடு அம்மா. எனக்க ஆண்டவருக்க கிட்ட என்னப் போக விடு அம்மா. விடு விடு… அம்மா… அம்மா!” என்று புலம்பியபடி கண் விழித்துப் பார்த்தார்.
ஜன்னல் வழியாக வெளிச்சம் அவரது அறைக்குள் மின்னிக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்தார் தலையணையும் பாயும் சுருட்டப்பட்டு ஓரமாக இருந்தது. தாமஸ் தனது அறையை விட்டு வெளியே சென்று ஆலயத்திற்குள் நுழைந்தார். அலெக்ஸாண்டர் ஆலயத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அவனிடம் ஏதோ சொல்ல முயன்றவர், அவனது பெயரைக் கூட அழைக்க முடியாமல் திரும்பிச் சென்றார். அன்றிலிருந்து இரண்டு நாட்கள் தானாகவே அவரது வேலைகளைச் செய்து கொண்டார். வழக்கறிஞர் அலுவலகம் சென்று வந்தார். அலெக்ஸாண்டருடன் ஏதும் பேசவில்லை.
மூன்றாம் நாள் மாலை தனது உடன் பிறந்த சகோதரர் சகோதரிகளை வரவழைந்திருந்தார் தாமஸ். பத்திரம் ஒன்றை எடுத்து அவர்கள் முன் வைத்து,
“நமக்க பிறந்த வீட்டிலில் இருந்த எனக்க பேர நீக்கிய பத்தரமாக்கும் மக்களே இது. சாமியாருக்க பேருல ஏது பொருளும் இருக்க ஒக்காது கேட்டவுளா.” என்று அப்பத்திரத்தை அவர்களது கையில் கொடுத்து அனுப்பி வைத்தார்.
பிறகு உற்சாகமாக ஆராதனைக் கூடத்தின் முன் வந்து நின்றார். ஆனால் உள்ளே நுழையும் பொழுது ஒரு வித தடுமாற்றத்தை உணர்ந்தார். மண்டியிட்டு மன்றாட விழிகளை மூடினார். இனம்புரியாத ஏதோ ஒன்று அழுத்தியது. அலெக்ஸாண்டரிடம் பேச வேண்டும் போல இருந்தது. அவன் அங்கு இல்லை என்று அவருக்குத் தெரியும். எழுந்து ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்தார். அதன் ஒளியைப் பார்த்தபடி நின்றிருந்தார். மெழுகு உருகி வழிய வழிய தாமஸ்ஸின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. மெழுகு முற்றிலுமாக கரைந்து போகும் வரை நின்றிருந்தார்.
“சாமீ” என்ற குரல் கேட்டுத் திரும்பினார்.
“சமயம் ஆயி. கஞ்ஞி தயாராட்டு இருக்கு.” என்று தெரசம்மாள் அழைத்தாள்.
உணவருந்தும் மேஜையில் அமைதியாகச் சாப்பிட்டார். அலெக்ஸாண்டரிடம் வீட்டுப் பத்திரத்தைப் பற்றி கூற வேண்டும் போல் தோன்றியது அவருக்கு. அவன் எங்கே என்று தெரசம்மாவைக் கேட்க நினைத்தவர் கேள்வியையும் சேர்த்து விழுங்கினார்.
கஞ்சியைக் குடித்து விட்டு தன் அறைக்குச் சென்றார். அலெக்ஸாண்டரின் பாயும் தலையணையும் சுருட்டிய நிலையில் ஓரமாகக் கிடந்தது. தனது அங்கியைக் கழற்றி ஆணியில் மாட்டி விட்டு உறங்கச் சென்றார்.
கப்பலில் மிதப்பது போல உணர்ந்தார். கடலா ஆறா என்று கணிக்க முடியவில்லை அவரால். எங்கும் இருள். அவ்வப்போது வானில் தோன்றிய மின்னல் ஒரு சின்ன ஆறுதல் அளித்தது. தன்னந்தனியாக உணர்ந்தார். அலெக்ஸாண்டரை பார்க்க வேண்டும் போல் தோன்றியது.
‘இங்க தானே இருக்குறேன் சாமி.’ என்று ஒரு மின்னல் கீற்றில் தோன்றி மறைந்தது அலெக்ஸாண்டரின் முகம்.
‘சாமியாருக்குப் படிக்கப் போகாண்டா மோனே!’ என்று தாமஸ்ஸின் அம்மா தோன்றி மறைந்தார்.
‘தாமஸ்ஸே’ என்ற குரல் கேட்டது
காதுகள் இரண்டையும் தனது இரு கரங்களால் மூடினார்.
‘தாமஸ்ஸே என்ன விட்டுப் போகாத தாமஸ்ஸே’. மீண்டும் அதே குரல். தாமஸ் கேட்க பயப்படும் குரல். ஆழ்மனதில் ஒழித்து வைத்திருந்த குரல்.
‘ஐயோ ஆண்டவரே எனக்கு ஏன் இந்த சோதனை.’ என்றழுதார்.
ஞானஸ்தானத் தளமாக மாறியது கப்பல். இடி ஓசைக்கும் மின்னல் ஒளிக்கும் இடையே மேரியும் சூசையும் தங்கள் குழந்தையைக் காட்டி பெயர் சூட்டச் சொன்னார்கள் தாமஸ்ஸிடம். சூசை வாயில் ரத்தத்தோடு நின்றிருந்தான். மேரி ஆத்திரம் பொங்க தாமஸ்ஸை பார்த்துக் கொண்டிருந்தாள். சுற்றிப் பறந்த தேவதைகள் அனைவரும் அலெக்ஸாண்டராக உருமாறி வட்டமிட்டனர்.
‘என்ன பெயர்?’ என்று தாமஸ் கேட்க,
‘ரோசி’ என்றனர் மேரியும் சூசையும்.
‘எனக்க தெய்வமே!’ என்று கத்திக் கொண்டே கீழே அமர்ந்தார் தாமஸ்.
‘தாமஸ்ஸே! என்ன விட்டுப் போகாத தாமஸ்ஸே’ என்ற குரல் அவர் முன் வந்து நின்றது.
சிரமத்தோடு அன்னாந்து பார்த்தார். ‘ரோசி!’ என்று அணைத்துக் கொண்டார்.
‘எனக்கு நீ இல்லாத்த வேற யாரயும் கல்யாணம் செய்ய ஒக்காது.’ என்றாள்.
‘ரோசி ரோசி’ என்று பிதற்றினார்.
இடி மின்னலுக்கிடையே அலெக்ஸாண்டர் தேவதைகள் வட்டமிட்டுப் பறந்து கொண்டே இருந்தனர்.
தனது அங்கியையும் ஆடைகளையும் களைந்தார் தாமஸ். ரோசியையும் அவளது ஆடைகளைக் களையச் செய்தார். சுற்றிக் கொண்டிருக்கும் தேவதைகளை நிமிர்ந்து பார்த்தார். அனைத்தும் ஒரே தேவதையாக பேருருவம் ஏற்று ஒற்றை அலெக்ஸாண்டராக மாறுவது கண்டார். கண்ணீரோடு ரோசியின் உடலோடு இசையத் துவங்கினார்.
‘என்ன விட்டுப் போகாத தாமஸ்ஸே’ என்றாள்.
‘இன்னோடு நீ என்ன மறக்கனும்’ என்று கூறிக் கொண்டே தாமஸ் எழுந்து தனது அங்கியைக் கையில் எடுக்கும் பொழுது மழைத்திரையின் நடுவே ஒளி நிறைந்த ரோசியின் தேகம் நிறைமாத கர்ப்பிணியாகக் காட்சி அளித்தது.
அலெக்ஸாண்டர் நற்கருணை அப்பத்தினைக் கையில் ஏந்தி நிற்பது கண்டார்.
‘என்ன விட்டுப் போகாத தாமஸ்ஸே’ என்றாள் ரோசி.
கப்பல் மூழ்கி எங்கும் இருள் சூழ்ந்து தன்னை அழுத்துவது போல உணர்ந்த தாமஸ் வலி தாங்காமல், “ரோசி!ரோசி!” என்று பிதற்றிக் கொண்டே கண் விழித்தார்.
உடல் முழுதும் வியர்வையால் நனைந்து இருந்தது. தனது தொடைகளின் இடையே பிசுபிசுப்பாக உணர்ந்தார்.
‘அலெக்ஸ்ஸே!’ என்று அழைக்க முயற்சித்தார். குரல் எடுக்க முடியவில்லை.
எழுந்து ஆலயத்திற்குள் ஓடினார். ஆலயம் முற்றிலும் சாம்பிராணியின் மணத்தால் நிரம்பி இருந்தது. புது சாயங்களால் ஆலயம் ஜொலித்தது. திரைகள் விலக்கப்பட்டு சிலுவை மரத்தில் ஆணிகள் துளைத்த தேகத்துடன் வலி மிகுந்த கண்களோடு முள்முடியைத் தாங்கியபடி இயேசு கிறிஸ்து காட்சியளித்தார். ‘அலெக்ஸ்ஸே!’ என்று மனதிற்குள் அள்ளாடினார் தாமஸ். இதயத்தைப் பிடித்துக் கொண்டு ஆராதனைக் கூடம் நோக்கி ஓடினார். மெழுகின் ஒளியால் நிரம்பி இருந்த கூடத்திற்குள் கண்கள் கூச உள்ளே நுழைந்தார்.
மிக பிரம்மாண்டமாகக் காட்சி அளித்த நற்கருணையின் முன்பு,
“என் ஆண்டவரே! என் தேவனே! என் பாவங்களை மன்னியும்.” என்று வீழ்ந்தார் தாமஸ்.

மிகச் சிறப்பாக இருந்தது. தாமஸ் மற்றும் அலெக்சாண்டர் இருவருக்கும் இடையேயான உறவின் ஆழம் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. பாதிரியாரான தாமஸ் சாதாரணமாக வெளிப்படும் இடங்கள் எல்லாம் அருமை. கதையோட்டமும் மொழி நடையும் சிறப்பு. இலகுவான நடையில் விறுவிறுப்பாக அமைந்த கதை இறுதியில் உணர்சி வயமாக முடிந்தது நன்று. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.