குரோதம்

சீடேக் நீண்ட காலமாகப் பொறுமையாக இருந்துவிட்டான். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகவே பொறுமை காக்கவும், கோபத்தை அடக்கவும், பழிவாங்கும் எண்ணம் எழாமல் இருக்கவும் தன்னைத் தானே பழக்கிக்கொண்டிருந்தான். ஆனால் இன்று அவன் தனக்குள் எழுப்பியிருந்த அந்தத் தடுப்புச் சுவரில் கசிவு ஏற்படும் நிலை நெருங்கிக்கொண்டிருந்தது. அவனுக்குள் கொந்தளித்த வெறுப்பு – நீண்ட காலமாக அழுகி, சீழ்படிந்த வெறுப்பு – வெள்ளமெனப் பெருக்கெடுத்து அவன் எழுப்பிய அணையை உடைத்து, அவனுடைய உடலில் ஓடிய ஒவ்வொரு நரம்பையும் இரத்த நாளத்தையும் நிரப்பியிருந்தது. விரிசல் விட்டு இறுகியிருந்த அவன் எலும்புகள் குரோதத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டிருந்தன. அவனுக்கு மூச்சுத் திணறியது, கைகள் நடுங்கின, கண்கள் சிவப்பேறின.

காலையிலிருந்து கூர்தீட்டிய லாவி அயாம்  கூர்வாள் தெருவிளக்கின் ஒளியைப் பிரதிபலித்து மின்னியது. சீடேக் தன்னை அமைதிபடுத்திக்கொள்ள மற்றொரு டன்ஹில்லை பற்ற வைத்து மெல்ல புகைத்தான். அதன் நச்சுப் புகை தன் நுரையீரலை நிரப்ப அனுமதித்தான். பின், அடர்ந்த இருட்டுக்குள் அதை வெளியேற்றினான். புகை அவனுக்குள்ளிருந்த வெறுப்பு உணர்வைச் சுமந்துகொண்டு இயற்கை காற்றோடு கலந்து வானத்தில் மறைந்தது. தன்னைத் தயார் படுத்திக் கொள்ளும் இத்தருணத்தில் இந்த சிகரெட்டையும் சேர்த்து, ஏறக்குறைய  இரண்டு பேக்கட்டுகளை அவன் தீர்த்துவிட்டிருந்தான்.

இரவு முடிய இன்னும் நேரம் இருந்தது. இப்போதுதான் அதிகாலை இரண்டு மணி என கடிகாரம் காட்டியது. டத்தோ யாசித்தின் மெய்க்காப்பாளர்கள் இன்னும் சுறுசுறுப்பாகத்தான் இருந்தனர். மொத்தம் மூன்று பேர். முற்றத்தின் காவலுக்கு ஓர் இளைஞன், நுழைவாயிலின் காவலுக்கு வயதும் அனுபவமும் வாய்ந்த இருவர்.  சீலாட் தற்காப்பு கலை கற்ற அவர்களிடம், குழல் துப்பாக்கிகளைத் தவிர்த்து பெலாத்தி கூர்வாள்களும் இருந்தன. பெரும் வர்த்தகரான தனக்கு மெய்க்காப்பாளராகப் பணிபுரிபவர்கள் சீலாட் தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது டத்தோ யாசித் விதிக்கும் அடிப்படை தகுதிகளில் ஒன்று. 

சீடேக் மெய்க்காப்பாளர்களை உற்று நோக்கினான். அவனுக்கும் அந்த ஆடம்பரமான மூன்று அடுக்கு பங்களாவிற்கும் இடையே 200 மீட்டர் இடைவெளி இருந்தது. சீடேக் தன் மனப்போராட்டத்தைத் தீர்த்துகொள்ளும் தகுந்த நேரத்திற்குக் காத்திருந்தான். இப்போதே செயல்பட வேண்டுமா அல்லது தனது அடுத்த அடியை எடுத்து வைக்க குறைந்தபட்சம் டத்தோ யாசித் தூங்கும் வரையிலாவது காத்திருக்க வேண்டுமா? அவனுக்குத் தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதி. அன்றிரவே எல்லாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்!

வரவேற்பறை விளக்கு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. அது டத்தோ யாசித் இன்னும் விழித்திருக்கிறார் என்பதன் அடையாளம். ஒன்று அவர் பத்திரிகை படித்துக் கொண்டிருப்பார் அல்லது தம் மகள்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார். வழக்கமாக இந்த நேரத்தில் அந்த மனிதர் தம் மனைவியுடன் மேல் மாடியில் தூங்கிக்கொண்டிருப்பார். நேர நிர்வாகத்தில்  அவர் கட்டொழுங்குமிக்க மனிதர். இரண்டு வாரங்கள் கண்காணித்ததின் பேரில் கீடேக்கிற்கு கிடைத்திருக்கும் முடிவு அது.  ஆனால், இன்றைய இரவு, முந்தைய இரவுகளைப் போல இல்லை. தாமதமாகிவிட்ட போதிலும் டத்தோ யாசித் இன்னும் தம்முடைய சொகுசு படுக்கையில் சாயவில்லை.

சீடேக் தனது லாவி அயாம்   கூர்வாளைத் தடவிப்பார்த்தான். அதன் கூர்மையும், வளைவும், பிரகாசமும் உண்மையிலேயே அசாதாரணமாக இருந்தன. அந்த ஆயுதத்தைக் கையில் பிடித்திருக்கும் போதே சீடேக்கால் தன் உணர்ச்சிகள் துடித்தெழுவதை உணர முடிந்தது. அது விஷமேறிய கூர்வாள். ஒரே ஒரு முறை உடலில் பாய்ச்சினாலே, எத்தகைய வலிமையான ஆணும் விழுந்து மடிந்துவிடுவான் என்பது உறுதி.

சீடேக்கின் தந்தையின் கூற்றுப்படி, அந்த லாவி அயாம் கூர்வாள் காலஞ்சென்ற அவனுடைய தாத்தாவால் உருவாக்கப்பட்டது. வெட்டறுவாள், கிரீஸ் போன்ற கருவிகளோடு இந்த லாவி அயாம்  கூர்வாள் போன்ற நுட்பமான ஆயுதங்களைச் செய்வதில் அவர் வல்லவர்.  குர்சானி இரும்பால் வார்க்கப்பட்ட அவ்வாயுதங்கள், கடல் ஆற்றலையும் பூமி ஆற்றலையும் போற்றும் விதமாக  தூப ஆராதனை செய்யப்பட்டு மாந்திரீக நீரில் மூன்று பகல் மூன்று இரவு மூழ்க வைக்கப்படும்.

பரம்பரை ஆயுதம்தான் பழிவாங்க சிறந்த கருவி,  சீடேக் முனகினான்.

சீடேக் மீண்டும் சிந்தனையில் மூழ்கினான். கண்கள் மூடியிருந்தன. கடந்த ஏழு ஆண்டுகளாக தான் சுமக்க வேண்டியிருந்த வேதனைகளையும் துன்பங்களையும் மீண்டும் நினைவு கூர்ந்தான். அக்காலகட்டத்தில் இழப்புகளென்றும் மரணங்களென்றும் துன்பம் அவனை இரக்கமின்றி சூழ்ந்தது. அவனுடைய ஆன்மா துளைக்கப்பட்டு உண்டான காயங்கள் ஆறியதே இல்லை. அந்த அனுபங்கள் அவன் இப்பூமியில் வாழும் காலம் வரை அவனை வதைத்துக்கொண்டிருக்கும் என்பதன் அடையாளமாக அவன் நினைவின் வடுக்களாகப் பதிந்துகிடக்கின்றன.  

அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இரவு மணி இரண்டே கால். டத்தோ யாசித் இன்னும் அசராமல் இருந்தார். நேரம் கடந்து கொண்டிருந்தது. சாலையின் ஓரத்தில் அதிக நேரம் காத்திருக்க முடியாது என்பது சீடேக்குக்குத் தெரியும். ஒரு மேட்டுக்குடி குடியிருப்புப் பகுதியில் ஒரு கஞ்ச்சில் கார் நின்றிருப்தே சந்தேகத்திற்குறியதுதான்.  பத்து நிமிடங்களுக்கு முன்பு கூட, “ஏழைகளுக்கு இங்கு இடமில்லை” என்பதைச் சுட்டிக்காட்டுவதுபோல  வெறுப்பைக் கக்கும் கண்கள் அவனைப் பார்ப்பதை அவன் கவனித்தான்.

“அஹ், சனியன்!”

சீடேக் காரிலிருந்து இறங்கி மீதமிருந்த சிகரெட்டை தரையில் போட்டு மிதித்தான். லாவி அயாம் கூர்வாள் அவன் இடுப்போரம் தொங்கிய உறையில் இருந்தது. சீடேக் ஒரு முடிவுக்கு வந்தான். அவன் நீண்ட காலமாகக்  காத்திருந்துவிட்டான்; ஏழு ஆண்டுகள். இதற்கு மேலும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் காத்திருக்க அவனால் இயலவில்லை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இப்போது செயலில் இறங்கியே ஆகவேண்டும். அரை நிலவு அந்தரத்தில் தொங்கியது. குளிர் காற்று வீசியது. இரவின் இருட்டு அவர்கள் ஐந்து பேரின் தோள்களின் மீது ஏறியது.

***

“இன்னும் கொஞ்ச நேரத்தில அப்பா திரும்பவும் கே எல்லுக்குக் கிளம்பணும். என் முதலாளி என்னைய வரச்சொல்லி கூப்பிட்டுட்டாரு.” உணவு மேசையில் உட்கார்ந்திருந்த திரு. நிஜாம் பொதுவாக அறிவித்தார். சீடேக் அவருக்கு எதிரே அமர்ந்திருந்தான். அவன் அருகில், அவனுடைய தங்கை அத்திரா ஒரு கோப்பையில் சூடான தேநீர்  தே ஓவை ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“என்ன? அதுக்குள்ளயா? அப்பா, நீங்க வந்து இன்னும் மூனு நாள்கூட ஆகல,” கடைகுட்டி அதிரா கடிந்தாள். “என் கூட கொஞ்ச நேரம்தான் இருந்திருக்கீங்க. இப்போ உடனே திரும்ப போணுங்கிறீங்களே.”

சமையலறையில், திரு நிஜாமின் மனைவி காக் கியா, கறிபாப் சுடுவதில் மும்முரமாக இருந்தார். அவ்வப்போது, ​​சட்டியில் இருந்து எண்ணெய் தெரிக்கும் ஓசை கேட்டது.

“அப்பாவோட வேலை பரபரப்பானது அதிரா. கவனிக்க வேண்டிய விஷயங்க நிறைய இருக்கு.  மத்தவங்க கிட்ட வேல செய்றவங்க நிலம அப்படித்தான் இருக்கும். சில நேரங்கள்ல அப்பாவால திரும்பி வர முடியும். சில நேரங்கள்ல கூடுதல் நேரம் வேலை செஞ்சே ஆகணும். அதுல அப்பா விளையாட்டுத்தனமா இருக்க முடியாது.” திரு நிஜாம் தேநீரை உறிஞ்சியபடி மெதுவாகப் பதிலளித்தார்.

சீடேக் இடைப்பட்டான். “கே எல்ல நீங்க என்ன வேல செய்றீங்க பா?”

“பெருசா ஒன்னுமில்ல, சீடேக். மத்தவங்களுக்கு உதவி செய்யிறது. அந்த வேல இந்த வேலன்னு செய்யிறது. அவ்வளவுதான். எல்லாமே சாதாரண எடுபுடி வேலதான். நல்லா வேல செஞ்சா சம்பளத்த ஏத்தித் தருறதா அப்பாவோட முதலாளி, டத்தோ யாசித் சொல்லியிருக்காரு. அதனால நான் கடினமா உழைச்சுதான் ஆகணும்.”

சீடேக்கின் தந்தை மெலிந்த உடலும் கருமையான சருமமும் கொண்டவர். கூர்மையான மூக்கு, அகன்ற நெற்றி, எதிர்பார்ப்புகள் நிறைந்து சோர்ந்த கண்கள். அவர் முகம் அவருடைய உண்மையான வயதைப் பிரதிபலிக்கவில்லை. அவருக்கு இப்போதுதான் நாற்பத்தைந்து வயது என்றாலும், அதை அறியாதவர்கள் யாராவது அவரைச் சந்திக்க நேரிட்டால், அவர்களுடைய தந்தையின் வயதை ஒத்தவர் என்று நினைத்துவிடுவார்கள்.

தலைநகரில் வேலை செய்ய தொடங்குவதற்கு முன்பு, திரு நிஜாம் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலிருந்த  துறைமுகக் கிடங்குகளில் கூலியாக உழைத்தார். கப்பல்களில் இருந்து துறைமுகக் கிடங்குகளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்வதே அவருடைய வேலை. பிறகு, நகரத்தில் ஆங்காங்கிருந்த சில்லறை விற்பனைக் கடைகளுக்கு பொருட்களைப் அனுப்ப  வேண்டியிருந்தது. அதுதான் அவருடைய வேலை முறை. அந்தக்  கடின உழைப்பின் காரணமாகத்தான், அவர் தசைகள் இறுகி உறுதியாகவும் வலிமையுடனும் இருந்தார். அவருக்குக் கிடைத்த ஊதியம் ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் அவர் வாழ்ந்த எளிமையான வாழ்க்கைக்கு அது போதுமானதாக இருந்தது.

ஆனால் அது பிரதமர் துன் அப்துல் ரசாக் புதிய நகர்ப்புற பொருளாதாரத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு. அப்போது, மலாய்க்காரர்கள் கிராமப்புறங்களில் நெல் அறுவடை செய்தும் வலைவீசி மீன் பிடித்தும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர். பிரிதொரு நாளில்,  தாங்கள் சட்டையணிந்து அலுவலகத்தில் வேலை செய்வோம் என்றோ, கல் கூரையின் கீழ் குளிர்சாதன வசதியுடன் தூங்குவோம் என்றோ அவர்கள் சிந்தனையில் ஒருபோதும் தோன்றியதே இல்லை.

மக்களின் பொருளாதாரத்தைச் சீர்படுத்தும் அந்த மாபெரும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு,  கம்பங்களிலிருந்து  மக்கள் நகரத்திற்குக் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்தனர். பல வகையான கல் வீடுகள் கட்டப்பட்டன. தேவைகளை நிரப்ப பரந்த அளவில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இளைஞர்களும் பெண்களும் தங்கள் கனவுகளை முன்னேறாத அந்த கம்பத்து மண்ணின் இடுக்குகளில் காணவிரும்பாததால்,   தலைநகரம் வேகமாக வளர்ந்த அதே நேரத்தில் கிராமங்களில் வெறுமை சூழ்ந்தது.

தொடக்கத்தில், சீடேக்கின் தந்தை தேசிய அளவிலான அந்த மாற்றங்களால் சிறிதும் ஈர்க்கப்படவில்லை. துறைமுகத்தில் அவருடைய பணி நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், ஒரு சில நாள்களில், காக் கியாவை புற்றுநோய் தாக்கியிருப்பது உறுதியாகி அவரை மருத்துவமனையில் வீழ்த்தியது.   விதி திரு. நிஜாமை ஒரு தெரிவு செய்ய கட்டாயப்படுத்தியது. அதிகப்படியான மருத்துவச் செலவுகள் ஒரு கூலி தொழிலாளியின் சக்திக்கு அப்பாற்பட்டவை என்பதை திரு நிஜாம் உணர்ந்தார். இறுதியில், 1980 ஜனவரியில், அதிகமான சம்பளம் கிடைக்கும் என்பதற்காக அவர் இடம்பெயர முடிவு செய்தார்.

ஏற்கனவே கோலாலம்பூரில் குடியேறி வேலை செய்துகொண்டிருந்த பல நண்பர்கள் அவருக்கு இருந்தனர். அவர்களுக்கு அவர் பல கடிதங்களை  அனுப்பி வேலை காலி இருக்கிறதா என விசாரித்தார். அவர் அனுப்பிய பல கடிதங்களில், ஒன்றுக்கு மட்டுமே பதில் கிடைத்தது. அது அவருடைய பள்ளி நண்பர் ரிதுவானிடமிருந்து வந்தது.

“நீ இங்க வரணும் நிஜாம். என் முதலாளிக்கு ஆட்கள் தேவை. அவரிடம் மலாய்காரர்கள் வேலை பார்க்கணும்னு விருப்பப்படுகிறார் அதுவும் இல்லாம, அவருடைய கம்பெனி பூமிபுத்ராக்களுக்கு மட்டுமானது. சம்பளமும் அதிகம்தான்,” அந்த கிராணி அப்படிதான் எழுதியிருந்தார்.

ஆகவே, இரண்டு நாட்களுக்குப் பிறகு, தமது மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு, ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புவதாக உறுதியளித்து, விதி காட்டிய பாதையில் அடியெடுத்து வைத்தார் திரு நிஜாம். தலைநகரத்தில் வாழ்க்கை செலவினம் மிகுதி என்பதாலும் பணத்தை மிச்சப்படுத்த விரும்பியதாலும் மனைவி குழந்தைகளை அவர் அழைத்துச் செல்லவில்லை. அதைவிட, கிராமத்தில் தம்முடைய தாத்தா வழி பரம்பரை நிலத்தை வசிப்போரின்றி விட்டுப் போக அவர் விரும்பவில்லை.

காக் கியா இன்னும் கம்பத்தில் வேலை செய்து வந்தார். முன்பு போல் கடினமாக உழைக்காவிட்டாலும், குடும்ப வருமானத்தை அதிகரிக்க மாலையில் பலகாரங்கள் செய்து விற்று வந்தார். ஓய்வு நேரம் இருந்தால், சீடேக்கும்  அதிராவும் அவற்றை விற்க உதவுவார்கள்.

தலைநகரில் நிஜாமுக்கு கிடைத்த முதல் வேலை அவர் நினைத்த அளவுக்கு எளிதாக இல்லை. வேலை நேரம் இறுக்கமாக இருந்தது, சம்பளமும் அவ்வளவு சிறப்பாக இல்லை. அவர் ஜாலன் இம்பியிலிருக்கும் ஒரு அலுவலகத்திலிருந்து ஜாலான் தெலாவியிலிருக்கும் இன்னொரு அலுவலகம் என ஒவ்வொரு வேலையாக தாவிக் கொண்டிருந்தார்.  இப்படியாக மாறி மாறி ஒரு நாள் அவர் தம்மைக் கவர்ந்த மலாய் தொழிலதிபரான டத்தோ யாசித்தைச் சந்தித்தார். அதன் பிறகு அவர் வேறு இடத்திற்குச் செல்லவே இல்லை.

காக் கியா கறிபாப்களை மேஜையில் கொண்டு வந்து வைத்தார். சீடேக்கின் சிந்தனை களைந்தது. பலகாரங்கள்  நிறைந்த தட்டைப் பார்த்தான். சூடான கறிபாப்கள் தங்க நிறத்தில் மணமாகவும், கொழுத்தும், வாயூரச் செய்தன.

அதிரா ஒரு கறிபாப்பை எடுத்து கடிக்க முற்பட அவளுடைய தந்தை அவளைத் தடுத்தார்.

“மெதுவா. சூடா இருக்கு.”

குறும்புக்கார அதிரா சிரித்தாள்.

“அப்பா,” சீடேக் ஆரம்பித்தான், “இந்த வருஷக் கடைசியில் எங்கள கே எல்லுக்கு சுத்திப் பார்க்கக் கூட்டீட்டுப் போறீங்களா? என்னோட கூட்டாளிங்க பல பேரு அங்க காத்து வாங்கப் போயிருக்காங்க. ராத்திரி நேரத்துல டத்தாரான் மெர்டேக்கா ரொம்பவும் அழகா இருக்கும்னு சொன்னாங்க. எனக்கும் போய் பார்க்கணும்னு ஆசையா இருக்கு.”

திரு நிஜாம் பதில் சொல்வதற்குள் காக் கியா குறுக்கிட்டார்.

“அதப் பத்தி இப்போ நீ பெருசா கவலப்படாத. அடுத்த மாசக் கடைசியில உனக்கு பரிட்சை இருக்கு. எப்பவோ நடக்கப் போறத விட்டுட்டு கிட்டத்துல உள்ளதுக்கு முன்னுரிம கொடுப்போம்.”

காக் கியா தன் பார்வையைத் தன் கணவரிடம் திருப்பினாள். “நீங்க எப்போ திரும்பி வருவீங்க? ரொம்ப நாள் ஆக்கீடாதீங்க. சரிங்களா?”

“எனக்குத் தெரியும். ஒரு வாரம் இல்லாட்டி ரெண்டு வாரம். நான் திரும்பி வந்துடுவேன். இப்போதைக்கு டத்தோ யாசித்தோட புது திட்டத்துக்கு நிறைய பேர் தேவப்படுறாங்க.”

காக் கியா புரிதலோடு தலையசைத்தார். இவ்வளவு காலமும், உணவுக்கான செலவு, அன்றாடச் செலவு, குழந்தைகளின் பள்ளிக்கூட செலவு, தண்ணீர் கட்டணம், மின்சாரக் கட்டணம் எல்லாவற்றுக்குமே கணவர் ஒருவரே பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார். தம்மை அவதிக்குள்ளாக்கிய கால் புற்றுநோய் தாம் நடமாடுவதை முற்றிலுமாக முடக்கிவிட்டிருந்தது.

ஜோஹன் ராட்ஸி

தம்முடைய கணவர், டாமன்சாராவை சேர்ந்த ஒரு மலாய் வர்த்தகப் பெரும்புள்ளியின் கீழ் பணிபுரிகிறார் என்பதைத் தவிர, அது எத்தகைய வேலை என்பதை காக் கியா எள்ளளவு கூட அறிந்திருக்கவில்லை. மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே திரு நிஜாம் வார இறுதியில், வீட்டிற்கு வருவார். சில நேரங்களில் வேலை பலு அதிகமாக இருந்தால் மாதத்திற்கு ஒரு முறைதான் வருவார். செய்யும் தொழிலைப் பற்றி கேட்டால் ​ஓர் அலுவலகத்தில் பொது விவகார உதவியாளராக இருப்பதாகக் கூறுவார். அவருடைய பணி கோப்புகளையும் அலுவலக நிர்வகிப்பு ஆவணங்களையும் ஒழுங்கமைத்தல் என்பார். பெரும்பாலான நேரங்களில் அவர் வீட்டிற்கு வரும்போது, ​​அதிக அளவு பணத்தைக் கொண்டு வருவார். ஒரு நாள் மாலை, அவர் வீட்டுக்கு வந்ததும் வாசலிலேயே காக் கியாவிடம் RM1500ஐ எடுத்து நீட்டினார்.  

“அம்மா, நான் தோக் அக்கியோட வீட்டுக்குக் கொஞ்ச நேரம் போயிட்டு வறேன்,” என்ற சீடேக்கின் கேள்வி காக் கியாவின் சிந்தனையைக் களைத்தது.

காக் கியா திடுக்கிட்டு கதவோரம் நின்று கொண்டிருந்த சீடேக்கை பார்த்தார்.

“நீ யாருகூட போக போற?”

“பாக் முத்தாலிப்போட மகன் இருக்கான்ல, அவன்கூட. கொஞ்ச நேரந்தான். சீலாட்டுல ஒரு புது விஷயத்த கத்துத் தரப் போறதா தோக் அக்கி நேத்து சொன்னாரு.”

“சரி. உன் இஷ்டம். தாமதிச்சி திரும்பாத. கொஞ்சம் கவனமா இரு.”

“சரி, சரி. நல்லது மா. நான் போய்ட்டு வறேன்.”

சீடேக் மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தை முடுக்கினான். சமையலறையிலிருந்து அவனுடைய தந்தை அவனை அழைத்தார்.

“சீடேக், பார்ப்போம். அடுத்த வாரம் அப்பா திரும்பி வருவேன். அப்போ உன்னையும், அதிராவையும், அம்மாவையும் கே எல்லுக்கு சுற்றுப் பயணம் கூட்டீட்டுப் போறேன். நாம சுல்தான் அப்துல் சாமாட் கட்டடத்த போய்ப்  பார்ப்போம்.” நிஜாம் ஜன்னல் வழியாக உறுதியளித்தார்.

அதனைக் கேட்டதும், சீடேக் அதிரா இருவரின் முகங்களும் பிரகாசித்தன.

“ஹையா, கே எல்லுக்கு போறோம்! கே எல்லுக்குப் போறோம்!” கடைக்குட்டி அதிரா துள்ளிக் குதித்தாள்.

“நல்லது பா,” சீடேக் புன்னகையுடன் பதிலளிதுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து புறப்பட்டான். அவனுடைய தந்தை ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து போவதற்கு முன்பு, அந்த மனிதரை அவன் பார்க்கும் கடைசி மாலைப்பொழுது அதுதான் என்பதையும் அவருடைய கடைசி வாக்குறுதி ஒருபோதும் நிறைவேற்றப்படப் போவதில்லை என்பதையும் அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

***

சீடேக் ஒரு நிமிடம் தன் மூச்சை அடக்கிக் காத்திருந்தான். அவனுடைய கண்கள் சுற்றும் முற்றும் மேய்ந்தன. டத்தோ யாசித்தின் வீட்டின் மரப்பலகைச் சுவரின் விரிசல்களினூடே இளம் பாதுகாவலனின் உருவம் தென்பட்டது. அவன் தோட்டத்தின் ஒரு மூலையில் சிகரெட் புகைத்தவாறு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அவனுடைய வாயிலிருந்து புகை சுருள் சுருளாக வெளிப்பட்டது. அந்த வாய்ப்பைப் புரிந்து கொண்ட சீடேக் சட்டென சுவரில் தாவி ஏறத்தொடங்கினான்.

அவன் பதுங்கி பதுங்கி மெல்ல முன்னே சென்றான். அவனுடைய கை விஷம் கொண்ட சிறிய ஆயுதத்தைப் பற்றியிருந்தது.

ஒரு மீட்டருக்கும் குறைவான தூரத்தைக் கடந்ததும் சீடேக் இளம் பாதுகாவலனின் பின்புறமாக நின்று அவனுடைய வாயை மூடி கழுத்தை அறுத்தான். ஆயுதத்தின் கூர்முனை கழுத்து நரம்பைக் கிழித்தது. இரத்தம் குபு குபுவென வெளியேறியது. பாதுகாவலன் அந்தத் திடீர் தாக்குதலை எதிர்த்து வளைந்து நெளிந்து போராடினான், ஆனால் அவனுடைய போராட்டம் பலனளிக்கவில்லை. அவன் உடல் தரையில் சரிந்தது. வாய் அகலமாகத் திறந்திருந்தது.

சீடேக் அந்த வெப்பம் தனியாத சடலத்தை லாவி அயாம் கூர்வாளால் குத்திக் கிழித்தான். இரத்தம் ஓயாமல் ஒழுகியது.

திடீரென்று ஒரு விசித்திரமான உணர்வு சீடேக்கின் இதயக் கதவைத் தட்டியது. தோக் அக்கியின் அறிவுரை மீண்டும் அவனுடைய செவிப்பறையில் அதிர்ந்தது. சீடேக் இடதும் வலதும் வேகமாகத் தலையை ஆட்டினான். செவியில் ஒலித்த குரல் வெகுதூரம் போய் விழுந்தது.

 ‘ஆஆஹ்! குரோதம் மாறாத குரோதம் !

***

“அப்படியென்றால், நீ உண்மையிலேயே போகப் போகிறாய்?” தோக் அக்கி அவன் உறுதியை அறிய முற்பட்டார்.

சீடேக் பதில் சொல்லவில்லை. சில்வண்டுகளின் ஒலிகளும் காட்டில் வசித்த பறவைகளின் கூக்குரல்களும் மட்டுமே அந்த முதியவரின் கேள்விக்குப் பதிலளித்தன.

தோக் அக்கி குடிசைக்கு அருகில் இருந்த சதுப்பு நிலத்தை நோக்கி தமது பார்வையைச் செலுத்தினார். அங்குச் சேற்று நீர் அசைவின்றி அமைதியாக இருந்தது. இடப்புறம் கிட்டிய தொலைவில், பாதி சுரண்டப்பட்ட குன்று ஒன்று நிமிர்ந்து நின்றது. அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்த நிலத்தை சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஒரு அயல்நாட்டு நிறுவனம் வாங்கிவிட்டதென்று ஒரு செய்தி உலவியது. விரைவில் ஒரு கோல்ஃப் மைதான ரிசோர்ட் அங்கே இடம்பிடிக்கும்.

தோக் அக்கி தலையை அசைத்துக் கொண்டார். 

“சீடேக், நான் உனக்குக் கற்றுக் கொடுத்த வித்தை சக மனிதர்களைக் கொல்வதற்கானது அல்ல. நீ சமீப காலமாக என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். ஒரு ரகசிய கும்பலில் சேர்ந்திருக்கிறாய். நாட்டு எல்லையில் போதைப்பொருள் கடத்துகிறாய். அடிதடியில் ஈடுபடும் குண்டர் கும்பலில் இருக்கிறாய். இதெல்லாம் எனக்குத் தெரியாதென்று நினைக்கிறாயா?”

சீடேக் சிறிது நேரம் மௌனம் காத்தான். பின்னர் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றான்.

“தோக் அக்கி, நான் என்னென்ன அனுபவித்தேன் என்று உங்களுக்குத் தெரியாது.”  

இதைக் கேட்டதும், தோக் அக்கி உட்கார்ந்திருந்த நிலையிலிருந்து எழுந்தார். தமது செருப்புகளை அணிந்துகொண்டு, தன்னால் புரிந்துகொள்ள முடியாத தம் மாணவனுக்குப் புறமுதுகு காட்டி, சதுப்பு நிலத்தை நோக்கி ஓரிரண்டு அடிகள் எடுத்து வைத்துவிட்டுத் திரும்பினார்.

“எனக்குப் புரிகிறது, சீடேக். உன்னுடைய துன்பங்கள் அனைத்தும் எனக்குப் புரிகிறது. ஆனால், நீ ஒரு ரகசிய கும்பலில் சேர்ந்து பிற மனிதர்களை உன் விருப்பப்படி தாக்க முடியாது. அதுவல்ல சீலாட் கலையின் குறிக்கோள். பின்பற்ற வேண்டிய  நன்னெறி பண்புகளை நமக்குள் வடிவமைப்பதுதான் சீலாட்.  நீ  ஏற்றுக்கொண்டிருப்பது பிசாசின் குணம். மனிதர்கள் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்யமாட்டார்கள்.”

“பிசாசின் குணமா?” சீடேக் குரலை உயர்த்தினான். “அப்பா செத்துப் போனதிலிருந்து நாங்க வறுமையில  வாடினோம். நான்தான் அம்மாவ கவனிச்சுக்கணும். குடும்பச் செலவுக்கான வருமானத்த நான் தான் தேடிக் கொண்டுவரணும். இதெல்லாம் அப்பாவுக்குத் துரோகம் செஞ்ச  அந்த முதலாளியால வந்தது. அப்பா செத்துப் போகலன்னா நான் இந்த வேலையெல்லாம் செய்ய வேண்டி இருந்திருக்காது!”

மரியாதை குறைவாகப் பேசிவிட்டதைத் திடீரென  உணர்ந்தவனாகச் சீடேக் தன் குரலைத் தாழ்த்தினான்.

“அதனால எனக்கு வேறு வழியில்ல, தோக் அக்கி. ஹலாலான வழின்னு உண்மையிலேயே ஒன்னு இருந்திருந்தா, நான் அதை என்னைக்கோ செஞ்சிருப்பேன். ஆனா இந்த உலகத்தில, மக்களுக்கு பணம் வேணும். நான் செய்யிற இந்த கறைபடிஞ்ச வேலையில கிடைக்கிற வருமானமும் இல்லைனா அம்மாவோடு மருத்துவ கட்டணத்த யார் கட்டுவா?”.

தோக் அக்கி சோகம் படர்ந்த  முகத்துடன் சீடேக்கைப் பார்த்தார். மௌனம் அவரை ஆட்கொண்டது.

“இப்போ, ​​அம்மாவும் செத்துப் போயிட்டாங்க. இனிமே இந்த கம்பத்துல எனக்குன்னு எதுவும் இல்ல, தோக்.” சீடேக்கின் குரல் மேலும் தாழ்ந்தது. “என் சொந்த தங்கச்சிய கவனிச்சுக்க வேறொருத்தரோட வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருக்கு, தோக். அதிராவோட பள்ளிப் படிப்புக்குச் செலவு செய்ய எங்ககிட்ட போதுமான பணம் இல்லை. நல்ல வேள, பாக்சிக் மாயிலுக்கு எங்க நெலம புரிஞ்சிருக்கு.”

“தோக், நாளைக்கு நான் தலைநகரத்துக்குப் போறேன். கே எல்லுக்கு… அந்த அயோக்கியனை நான் தேடிக் கண்டுபிடிப்பேன்.”

தோக் அக்கி ஏதையோ யோசிப்பது போல் நெற்றியைச் சுளித்தார்.

“கண்டு பிடித்து… என்ன செய்யப் போகிறாய்?”

“தோக், உயிரை எடுத்த கடனை உயிரால்தான் அடைக்கணும், கண்ணை பறிச்ச கடனை கண்ணால்தான் அடைக்கனும்.” சீடேக் இறுக்கத்தோடு பதிலளித்தான்.

தோக் அக்கி சீடேக்கை அணுகினார். கசந்த முகத்துடன் தரையைப் பார்த்தார். எதையோ சொல்ல வந்து தயங்கி நின்றார். ஆனால், சொல்ல நினைத்ததை உடனே அந்த இளைஞனிடம் சொல்லிவிட அவருடைய தெளிந்த அறிவு அவரை  உந்தியது.

“சீடேக், இங்கிருந்து புறப்படுவதிலிருந்து நான் உன்னை தடுக்கமாட்டேன். ஆனால் இதை நினைவில் கொள்: கண் போனதற்கு மாற்றாக கண் எடுக்க வேண்டும் என்றால், முழு உலகமும் குருடாகிவிடும்.”

***

சீடேக் பிடிவாதமாகவே இருந்தான். மறுநாள் காலையில், 45 என்ற எண் கொண்ட ஒரு சிறிய பேருந்து அவனை கோலாலம்பூருக்குக் கொண்டு சென்றது. வழிநெடுக்க, சீடேக் தனது பெற்றோரின் திருமண விழாவின் புகைப்படங்களைப் பார்த்த வண்ணம் பயணம் செய்தான். அவனுடைய கண்கள் பனித்தன.

டத்தோ யாசித் பற்றிய தகவல்களைத் தோண்டி எடுப்பது அவனுக்குக் கடினமாக இல்லை. அங்கே சட்டவிரோத நடவடிக்கைகளின் நெளிவு சுளிவுகளில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் அவனுக்கு இருந்தனர். அந்த நண்பர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, அவர்களும் ரகசிய சங்கங்களில் உறுப்பினர்கள்தான். சௌகிட் சாலை நெடுகில், பங்சார் நகர்பகுதிகளின் பின்புற வீதிகளில், பிரிக்ஃபீல்ட்ஸ் சாலையில் ரகசிய  சூதாட்டக் கடைகளில் என்று அவர்கள் எல்லா இடங்களிலும் இருந்தனர்.

பொது மக்களின் பார்வையில், டத்தோ யாசித் ஒரு வெற்றிகரமான மலாய் தொழில் முனைவராகத்தான் பெரும்பாலும் தென்பட்டார். அவருடைய கட்டுமான நிறுவனம் செழித்து வளர்ந்திருந்தது. அதன் துணை நிறுவனங்களின் பெயர்கள் அரசாங்கத்துடன் கூட்டாக நடத்தப்படும் செயல்திட்டங்களில் எப்போதும் இணைந்திருந்தன. அவருடைய முகம் அறிவார்ந்த சஞ்சிகைகளிலும், பொழுதுபோக்கு இதழ்களிலும் அடிக்கடி இடம்பெறும். வணிக உலகில் புதிதாக அடியெடுத்து வைக்கும் இளம் தொழில்முனைவர்கள் பின்பற்ற வேண்டிய ஓர் உதாரண மனிதராக அவர் சித்தரிக்கப்பட்டு வந்தார். மன்றங்களில், ‘ஒவ்வொருவரும்  மலாய் ஆண்மகன் எனும் பெருமிதத்துடன் வெற்றிபெருவோம்’ எனும் தலைப்பில் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்க வாடிக்கையாக அழைக்கப்பட்டார்.

ஆனால் இந்தச் செல்வாக்கு மிக்க ஆடவரைப் போர்த்திய செதில்களின் மறைவில் உள்ள கதையை வெகு சிலரே அறிந்திருந்தனர். அந்த மனிதனின் இதயத்தில் தீமையும் தந்திரமும் நிறைந்திருந்தன. பொய், லஞ்சம், பித்தலாட்டம், மிரட்டல் ஆகிய எதுவும் அவருக்குப் புதிதல்ல. விரும்பிய இலக்கை அடைவதற்கு அவர் கொலை செய்யவும் தயங்காத நபர். அவர் கைது செய்யப்படாமலிருக்கும் வகையில் பல செல்வாக்குமிக்க நபர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு பணத்தையும் பெண்களையும் லஞ்சமாக கொடுத்து வசப்படுத்தி வைத்திருந்தது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் அவர் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தார்.

அவர் மற்ற எல்லா மேட்டுக்குடியினரைப் போலவே புக்கிட் துங்குவில் தமது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். அவருடைய ஆடம்பரமான பங்களா குன்றுகளுக்கும் பசுமையான காடுகளுக்கும் பின்னால் அமைந்திருந்தது.

டத்தோ யாசித்தின் பின்னணியைத் தெரிந்து கொள்வதோடு நில்லாமல், சீடேக் அவருடைய அன்றாட வழக்கங்களையும் நகர்வுகளையும் உளவு பார்த்தான். தினமும் காலையில் டத்தோ யாசித் அலுவலகம் செல்வதற்கு முன்பு தம் மகள்களைப்  பள்ளிக்கு அனுப்புவார். ஐந்து மணிக்குப் பிறகு வீடு திரும்பி மீதமுள்ள நாளை வீட்டிலேயே ஓய்வில் கழிப்பார். சில சமயங்களில், தொழில்முறை நண்பர்களின் அழைப்பின் பேரில், ஷா அலாமில் உள்ள க்ளென்மேரியில் கோல்ஃப் விளையாடுவார்.

இப்படியாக, இரண்டு வாரங்கள் உளவு பார்த்து, விசாரித்து, தகவல்களைச் சேகரித்த பிறகு, சீடேக் செயல்பட முடிவு செய்தான். ஏப்ரல் 5 ஆம் தேதியை நடவடிக்கைக்கான நாளாகக் குறித்து வைத்தான்.

***

இரவு காரிருள் சூழ்ந்திருந்தது. காற்றின் வேகம் எலும்புகளைச் சில்லிடச் செய்தது.  தீயூழ் மிகுந்த இதயங்களின் செவிகளில் பிசாசுகள் கிசுகிசுத்தன. சீடேக் அந்தப் பிரேதத்தைப் புதருக்குள் தள்ளினான். ஒரு நீச்சல் குளத்தையும், பல்வேறு வகையான வாசனைகளைப் பரப்பும் மலர் தோட்டத்தையும் கடந்து நடந்தான். அவனுடைய கால்கள்  அந்த வீட்டின் சமையலறையை ஒட்டிய பின் வாசல் கதவின் முன் நின்றன.

அவனுடைய கை கதவின் கைப்பிடியைத் திருகின.  கதவு பூட்டப்பட்டிருந்தது. சீடேக் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். ஜன்னல்களில் ஏதாவதொன்று பூட்டப்படாமல் இருக்கும் என்ற நம்பிக்கையோடு அவற்றை நோக்கித் திரும்பினான். ஒவ்வொன்றாக திறக்க முயன்றான் பாப்! சலவை அறைக்குப் பக்கமாக, இறுக மூடியிருந்த ஜன்னல்  ஒன்று திறந்தது கொண்டது.

சீடேக்கின் கால்கள் தரையைத் தொட்டன. அவன் வீட்டின் உள்ளே நுழைந்துவிட்டான். லாவி அயாம் கூர்வாள் அவன் கையில் தயாராக இருந்தது. இந்த நொடி முதல் அவன் கவனமாக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும், குறிப்பாக, இது போன்ற இருண்ட சூழலில் ஒரு திடீர் தாக்குதல் நடந்தாலும் நடக்கலாம். சலவை அறை வெறிச்சோடி கிடந்தது. பாதி நிரப்பப்பட்ட கூடையும் ஒரு துணி துவைக்கும் இயந்திரமும் மட்டுமே அந்தச் சிறிய அறையில் இருந்தன.

சீடேக் எச்சரிக்கை கொண்ட இதயத்துடன் மெதுவாக அடி எடுத்து வைத்தான்.  கூரையிலிருந்து தொங்கிய சரவிளக்கு வரவேற்பறையின் ஒவ்வொரு மூலைக்கும் மங்கலான ஒளியைப் பாய்ச்சிக்கொண்டிருந்தது. இசைத்தட்டு கருவியின் ஒலிப்பெருக்கிக் குழாய் வழியாக ஜாஸ் இசை ஒலிப்பது கேட்டது. தரை விலையுயர்ந்த கம்பளத்தால் மூடப்பட்டிருந்தது. ஆடம்பரமான மெது இருக்கைககளும் சுவரை அலங்கரித்த எண்ணெய் ஓவியங்களும் மெல்ல மெல்ல தெளிவு பெற்று அந்த அறைக்குப் பின்னணியாகத் தென்பட்டன. சீடேக்கின் கண்கள் தான் வெறுக்கும் அந்த இலக்கைத் தேடி அலைந்தன. அவன் பார்வை மீன்தொட்டிக்கு அருகில் இருந்த ஒரு ஒற்றை மெது இருக்கையில் குத்திட்டது. அவனுடைய சுவாசத்தின் வேகம் அதிகரித்தது.

அந்த மெது இருக்கையில் மலாய் வணிக ஆளுமையும் இருண்ட உலகின் ஆண்டவரும், அவனுடைய தந்தையைக் கொன்றவரும், ஒரு பாவமும் அறியாத அவனுக்கும் அவன் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பேரழிவை ஏற்படுத்தியவருமான டத்தோ யாசித் அமர்ந்திருந்தார்.

***

சீடேக்குக்கு  தன் காதுகளை நம்ப முடியாதது போல் தோன்றியது. அவன் கண்கள் விரிந்தன. வாய் அகலத் திறந்தது. அவன் எதையோ சொல்ல துடித்தான். அவன் ஏதிரில் அமர்ந்திருந்த ரிதுவான் என்ற அந்த நபரை மறுக்கவும் வசைபாடவும் நினைத்தான். ஆனால் அவன் நாக்கு குழறியது. தந்தையின் நண்பரான அந்த நபர் கொண்டு வந்திருந்த செய்தியால் சீடேக் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தான்.

“சொல்லாம இருக்க என் மனசு இடம் தரல, கே எல்ல வேலை செஞ்ச காலம் முழுசும் நானும் நிஜாமும் நெருக்கமா இருந்தோம். அவனுடைய வேலை என்னன்னு எனக்குத் தெரியும். நாங்க ஒரே முதலாளிகிட்ட வேல செஞ்சோம்.”

சீடேக் தனது மனத்திடத்தைத் திரட்டினான்.

” மாமா, நீங்க என்ன சொல்றீங்க?”

ரிதுவான் பெருமூச்சு விட்டார்.  இளைஞனான சீடேக்குக்குத் தெளிவுபடுத்த பொருத்தமான சொற்களைத் தேடினார்.

“சீடேக், உன் அப்பா கொலை செய்யப்பட்டு செத்து போனான். டத்தோ யாசித் தான் உன் அப்பாவ தோட்டாவால துளைச்சாரு.”

ரிதுவான் சூடான காப்பியைப் பருகுவதை நிறுத்தினார்.

“உன் அப்பா சுடப்பட்ட இடத்திலேயே செத்துப் போனான். தலையில மூனு தோட்டா.”

சீடேக்கிற்கு அதன் பிறகு அவன் அரற்றியது  எதுவும் நினைவில் இல்லை. அதை நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவன் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான்.  அவனுடய அப்பா பல மாதங்களாக வீட்டிற்குத் திரும்பவில்லை. தொலைப்பேசி அழைப்புகளை எடுக்கவில்லை. கடிதங்களுக்கும் பதில் இல்லை. முதலில், அவனும் அவன் அம்மாவும் நல்லதை நினைக்க முயற்சி செய்தார்கள். ஒருவேளை அவர் வேலையில் மும்முரமாக இருக்கலாம் என்று எண்ணினார்கள். அவர்  அந்த அளவுக்கு நீண்ட காலம் வீட்டுக்கு வராமல் இருந்ததே இல்லை. ஆனால் காலப்போக்கில், அந்த நம்பிக்கை மங்கிப் போனது. மூன்று மாதங்கள் கடந்து சென்றன. வீட்டில் தண்ணீர் கட்டணும் மின்சாரக் கட்டணமும் செலுத்தப்படாமல் கிடந்தன. மருத்துவமனை கட்டணம் நிலுவையில் இருந்தது. சீடேக்கின் அம்மா மீளா சோகத்தில் மூழ்கினார்.

இதன் விளைவாக, சீடேக் அவருக்கு வியாபாரம் செய்ய அடிக்கடி உதவ வேண்டியதாயிற்று. அவனுடைய பள்ளிப்படிப்பு தடைபட்டு கல்வித்தரம் குறைந்தது. வகுப்புகளுக்குச் செல்வது பற்றி அவன் அக்கறை கொள்ளவில்லை. வருமானம் போதாததை உணர்ந்த சீடேக், துணிச்சலாக கம்பத்தில் இயங்கிய குண்டர் கும்பல்களில் இணைந்து செயல்பட தொடங்கினான்.  அவனைப் பொருத்தவரை, பாவத்தைச் சுமப்பதாயிருந்தாலும், குடும்பத்துக்குக் கிடைக்கும் வருமானமும் ஒரு வாய் சோறும் முக்கியமாக தோன்றியது.    பள்ளிக்கு வரும்படி வற்புறுத்துவதற்காக அவனுடைய ஆசிரியர்கள் அடிக்கடி அவன் வீட்டிற்கு வந்தனர் ஆனால், சீடேக் அவனுடைய நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்தான். தான் தியாகம் செய்து கடுமையாக உழைத்தாலும் பரவாயில்லை, தன் தங்கை கல்வி பெறும் வசதி பெற்றால் போதும். அவனுடைய எதிர்பார்ப்புகள் விடாமுயற்சியும் புத்திசாலித்தனமும் பொருந்திய அவனுடைய தங்கையை மட்டுமே சார்ந்திருந்தது.

“காரணம் எளிது சீடேக். உன் அப்பா அலுவலகத்த சுத்தம் செய்யுறப்போ டத்தோ யாசித்தோட  ரகசிய கோப்புகள தற்செயலா கண்டெடுத்தாரு. அந்தக் கோப்புகள்ல போலி வணிகப் பரிமாற்றங்க, காணாமப் போனதா சொல்லப்பட்டிருந்த பணம் சம்பந்தமான குறிப்புங்க, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருத்தரோட வங்கிக் கணக்குன்னு பல ரகசியமான விஷயம் மறைச்சு வைக்கப் பட்டிருந்திச்சு. எல்லாமே ஊழல் முயற்சிக்கான நடவடிக்கைன்னு தெளிவா தெரிஞ்சுச்சு. உன் அப்பா அதையெல்லாம் ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தப் போறதா  சொன்னாரு. சொன்னதோட நிக்காம அப்படியே செஞ்சாரு”

“அப்புறம்?”

“பாவம் அவரு!” ரிதுவான் தலையை ஆட்டினார், “காவல்துறைய சேர்ந்தவங்க அவரோட கதைய ஏத்துக்கல. டத்தோ யாசித் அந்த அளவு மோசமா செயல்படுவாருன்னு அவங்க நம்பல. அன்னைக்கு ராத்திரியே டத்தோ யாசித்தும் அவருடைய கூட்டாளிங்களும் அம்பாங்கில இருந்த உன் அப்பாவோட வாடக வீட்டுக்கு வந்தாங்க.”

“சீடேக், இந்த விஷயத்தை உன்கிட்ட சொன்னது எனக்குப் பெரிய ஆபத்த கொண்டு வரலாம். நான் வாய் திறந்திருக்கக் கூடாது, ஆனா நிஜாம் என் நண்பன். நீ, அவனுடைய மகன், உன் அப்பாவுக்கு என்ன நடந்ததுங்கிறத தெரிஞ்சுக்க உனக்கு உரிம இருக்கு.”

ரிதுவான் சீடேக்கின் உரைந்த தோள்களைப் பற்றினார்.

“சீடேக், நான் உனக்கு என் இரங்கலத் தெரிவிச்சுக்கிறேன்… என்ன மன்னிச்சுடு.”

தனிமையில் திகைத்து நின்ற சீடேக்கை தனியாக விட்டுவிட்டு காரில் ஏறி வேகமாகப் புறப்பட்டார் ரிதுவான்.

சீடேக் கலவையான உணர்வுகளுடன் வீடு திரும்பினான். தன் தந்தை இறந்திருக்க சாத்தியமில்லை என்று அவனுடைய சிறிய இதயம் சிணுங்கியது. அவர் இறந்துவிட்டார் என்பது உண்மை என்றால் அவருடைய கல்லறை எங்கே? ஆனாலும் அவன் மனத்தின் மறுபாதி அந்தச் செய்தியை நம்பவே செய்தது. அவன் தந்தை குடும்பப் பொறுப்புகளை மறந்துவிட்டு பெண் சுகம் தேடிச் செல்பவர் அல்ல. அவர் அப்படிப்பட்டவர் அல்ல.

சீடேக் தன் தாயிடமிருந்து இந்த ரகசியத்தை மறைத்தான். அந்த முதிய பெண் கண்டதையும் நினைத்து மன உளைச்சல் கொள்வதை அவன் விரும்பவில்லை.  கணவன் அருகில் இல்லையே என்ற ஏக்கத்தில் ஒவ்வொரு இரவும் அவள் அழுதுகொண்டிருப்பது போதுமானது. மேலும் மேலும் சுமையைச்  அவர் சுமக்க வேண்டியதில்லை.

இறுதியில், டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு காலை பொழுதில் சீடேக்கின் கவலைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்தது. அது பாக் அமீனின் அங்காடிக் கடையில்தான் நடந்தது. அவன் நாசி லெமாக் பொட்டலத்துடன் வீட்டிற்குச் செல்லவிருந்தபோது, ​​அவனுடைய கண்கள் மனச் சஞ்சலத்தை உண்டாக்கிய ஒன்றைக் கண்டன. கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் அவன் முன்னால் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளின் தலைப்புச் செய்தி அவனுடைய இரத்தத்தை உறைய வைத்தது: ‘ரிதுவான் எனும் கட்டுமானத்  தொழிலாளியின் உடல், கிள்ளான் ஆற்றில் மிதப்பது கண்டறியப்பட்டது. தலையில் மூன்று துப்பாக்கிச் சூடுகள்’.

***

சத்தமாகக் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்த டத்தோ யாசித்தை நோக்கி சீடேக் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறினான். தனது ஆன்மாவில் இவ்வளவு ஆழமான காயத்தை ஏற்படுத்திய ஆண் இவன்தான் என்பதை சீடேக்கால் இன்னும் முழுமையாக  நம்ப முடியவில்லை. நெருக்கத்தில் பார்த்தபோது அவன் ஒரு குள்ளமான மனிதன் என்பது தெரிந்தது. பெருத்த தொப்பை, வளைந்த மீசை.

பக்கவாட்டில் நின்று அவனைப் பார்வையால் அளந்தான். சீடேக்கின் இரத்தம் கொதித்தது.

“இந்த மனிதர்தான் என் குடும்பத்தை அழித்தவன்,” சீடேக்கின் உள்ளம் கிசுகிசுத்தது. “இந்த மனிதர்தான் என் அப்பாவின் தலையில் மூன்று தோட்டாக்களைப் பாய்ச்சியவன். இந்த மனிதர்தான் என் அம்மாவை மீளா துயரத்தில் ஆழ்த்தியவன். இந்த மனிதர்தான் என் சகோதரியை எங்கள் குடும்பத்திலிருந்து பிரித்தவன். இந்த மனிதர்தான் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரையும் தன்னுடைய அருவருப்பான பேராசைக்காகத் துன்பப்படச் செய்தவன். என் அப்பா கொல்லப்படாமல் இருந்திருந்தால், என் அப்பா எவ்வித அறிவிப்பும் இல்லாமல் மறைந்து போகாமல் இருந்திருந்தால், நிச்சயமாக இந்தத் தொடர் துன்பங்கள் எதுவும் நடந்திருக்காது.”

சீடேக்கின் பற்கள் இறுகின. ஆத்திரம் ஒரு மூர்க்க அலை போல பொங்கியது. முன்பு பட்ட காயங்கள் நிரம்பி வழிந்து, நீண்ட காலமாக அவனுள் எரிந்து கொண்டிருந்த குரோதத் தீயில் எண்ணெய் ஊற்றின. திடீரென்று அவனுடைய கோபம் உச்சத்தை அடைந்தது. அந்தக் கொடியவனின் கழுத்தை அறுத்து பழிதீர்த்துக்கொள்ளத் தயாரானான். கையிலிருந்த ஆயுதத்தை உயர்த்தினான். அந்த நொடியில் அருகிலிருந்த மெது இருக்கை ஒன்றில்  சிறு அசைவு ஓரக்கண்ணில் தெரிந்தது. அதுவரை அது அவன் பார்வையிலிருந்து தப்பியது எப்படி?

டத்தோ யாசித்தின் மகளான சிறுமி ஒருத்தி அந்த மெது இருக்கையில் படுத்திருந்தாள். அந்த வரவேற்பறையில் சீடேக்கின் வருகை அவளைத் தூக்கத்திலிருந்து எழுப்பியிருந்தது. ஓராயிரம் கேள்விகளைக் தாங்கிய முகத்துடன் அவள் சீடேக்கைப் பார்த்தாள். அச்சமும் அதிர்ச்சியும் கலந்து அவனை வெறித்தாள்,  ஆனால் அவள் கூச்சலிடவில்லை.

அவர்களின் கண்கள் சந்தித்தன. சீடேக் சிலையானான். அந்தச் சிறுமியின் கண்கள் அவனை என்னவோ செய்தன. அவை அவனுக்கு வெகுதூரத்தில் சென்று மறைந்துவிட்ட  ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்தின. வெதுவெதுப்பு அடங்கி சாம்பலாகிவிட்ட பழைய ஞாபகங்களுடன் சமாதியாகிவிட்டதாக அவன் நினைத்திருந்த ஒன்று அதில் தெரிந்தது.   

சீடேக் தன் தங்கையை நினைவு கூர்ந்தான். பள்ளி முடிந்து வீட்டிற்கு துள்ளிக் குதித்து ஓடி வரும் தனது துடிப்புமிக்க தங்கை அவன் கண்ணுக்குத் தெரிந்தாள். தன் தந்தை உயிருடன் இருந்தபோது, அவர்கள் கும்மாளமிட்ட நேரங்களில் அவள் பேசிய குறும்புப் பேச்சும் சிரிப்பும் அவன் செவிகளுக்குக் கேட்டன. ஆம், அவர்களுடைய தந்தை இல்லாமல் போனதிலிருந்து, சீடேக்கும் அவனுடைய தங்கையும் சிரிப்பதை மறந்துவிட்டிருந்தார்கள். தந்தை, தாய், தங்கை ஆகியோரின் உருவங்கள் சீடேக்கின் கண்களில் மாறி மாறி தோன்றி மறைந்தன.

சீடேக்கின் கண்கள் அந்தச் சிறுமியை விட்டு அகல மறுத்தன. அவன் சிறுமியின் முகத்தை உற்று நோக்கினான். பால்மனம் மாறாத முகம். வயது ஐந்து அல்லது ஆறுதான் இருக்கும். அவளுடைய குழப்பம் நிறைந்த முகம் சீடேக்குக்கு அன்றிரவு அவன் அங்கு வந்ததன்  நோக்கத்தைச் சீர்தூக்கிப்பார்க்கச் செய்தது. முதல் முறையாக அவன் கொண்டிருந்த திட்டத்தையும் பழிவாங்கும் உணர்வையும் செயல்படுத்த சீடேக் தயங்கினான். சற்று முன்பு வரை கொதித்துக் கொண்டிருந்த அவனுடைய மனத்தில் இப்போது சஞ்சலத்தின் விதைகள் முளைத்துக் கொண்டிருந்தன.

அந்தச் சிறுமியின் கண்களில் ஓர் அதிசய சக்தி இருந்தது. வசியம் செய்யப்பட்டவன் போல தன் முடிவில் அவன் தடுமாற்றங்கள் கொண்டான்.

அவன் மிகவும் வெறுத்த இந்த மனிதனைப் படுகொலை செய்யும் முடிவைத் தொடர வேண்டுமா? அல்லது அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட வேண்டுமா? தனக்கு நேர்ந்த வேதனைகளை மறந்து, ஓர் உன்னத நோக்கத்திற்காக அந்தக் கொடிய மனிதரின் உயிரை விட்டுவைக்க வேண்டுமா?

“ஐயோ, என் தந்தையின் இரத்தக்கறை இவனுடைய கைகளில் படிந்துள்ளதே!”

திடீரென்று, தோக் அக்கி சொன்னது சீடேக்கின் செவிப்பறையை மீண்டும்  மோதியது.

“சீடேக், கண் போனதற்கு மாற்றாக கண் எடுக்க வேண்டும் என்றால், முழு உலகமும் குருடாகிவிடும்.”

சீடேக்கின் விழிகளிலிருந்து அவனை அறியாமல் கண்ணீர் வழிந்தது. அவன் தலை குனிந்தான். தான் தோற்கடிக்கப்பட்டுவிட்டதை உணர்ந்தான்.

மீண்டும் சிறுமியைப் பார்த்தான். சிறுமி கண்ணிமைக்காமல் அவனைப் பார்த்தாள். அவள் சீடேக்குக்கு அதிராவை நினைவூட்டினாள்.

லாவி அயாம் கூர்வாள் அவன் பிடியில் இருந்தது. அவன் முடிவு செய்து விட்டிருந்தான். அந்த ஆயுதத்தை டத்தோ யாசித்தின் முன் இருந்த காப்பி மேசையில் வைத்தான். பழிவாங்குவதற்காகக் கொண்டு வந்த அந்தக் கருவியை திரும்ப எடுத்துச் செல்ல அவன் விரும்பவில்லை. ஜன்னலுக்குத் திரும்பினான். தந்தை மகள் இருவரையும் கடைசியாக ஒரு முறை பார்த்தான். அவனுடைய கண்களில் ஈரம் பனித்தது.

சீடேக் வீட்டு வளாகத்தை விட்டு வெளியே வந்தான். அவனுடைய உன்னதமான முடிவை வரவேற்பது போலவோ அவனது கோழைத்தனத்தைக் கேலி செய்வது போலவோ சாக்கடையில் இருந்த சில்வண்டுகளும் தவளைகளும் மர்மம் நிறைந்த ஓசைகளை எழுப்பின. டத்தோ யாசித்தின் பாதுகாவலர்கள் இன்னும் அங்கேயே இருந்தனர். அவர்கள் அந்த வளாகத்துக்குள் சீடேக் ஊடுருவி வெளியான காலகட்டத்தால் எள்ளளவும்  தீண்டப்படாதவர்கள் போல் இருந்தனர்.

சீடேக் தன் கடிகாரத்தைப் பார்த்தான். அதிகாலை இரண்டு மணி இருபத்தைந்து நிமிடங்கள். கடந்த பத்து நிமிடங்களாக காலச்சக்கரத்தின் ஓட்டம் நின்று போயிருக்குமா? சீடேக்கிற்கு உறுதியாக தெரியவில்லை. அதுவும் இப்போது அவனுக்கு ஒரு பொருட்டல்ல.

அவன் இருளுக்குள் அடியெடுத்து வைத்தான். காற்று மந்தமான இறைச்சலுடன் வீசிக் கொண்டிருந்தது. சீடேக் கண்களை மூடினான். அடர்ந்த மூடுபனி பல்வேறு திசைகளிலிருந்து அவனைச் சூழ்ந்தது. சீடேக் மூடுபனியில் மூழ்கி காரிருலுக்குள் மறைந்தான். அதன் பிறகு, சீடேக்கைப் பற்றியும் அவனுடைய பழிவாங்கும் கதைகளைப் பற்றியும் யாரும் கேள்விப்பட்டதில்லை.

***

இச்சிறுகதை ஜாலான் தெங்காஹ் (ROMAN, 2015) தொகுப்பில் முதன்முறையாக இடம்பெற்றது. பிறகு தின்ஜு & பெலுரு (Roman Buku, 2017) சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றது.

மலாய் மூலம்: ஜோஹன் ராட்ஸி

தமிழில்: ச. விஸ்வநாதன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...