
“உங்கள் இறுகிய முகம் அழகானது!” என்றேன் நான்.
“கல்முகன்! அப்படித்தான் எல்லோரும் என்னை அழைக்க விரும்புகின்றனர்” என்றார் பஸ்டர் கீட்டன்.
“அதுதான் உங்கள் பிரியமான புனைப்பெயர் என நீங்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீர்கள்” என்றேன்.
“உண்மை!” என ஆங்கிலத்தில் சொல்லி அருகே மேஜையிலிருந்த தொப்பியை தட்டி எடுத்து தலையில் பொருத்தி அப்பெயரை விரும்பியவர் போல் தொப்பியை கையில் தூக்கிக் காட்டி மீண்டும் தலையில் வைத்தார். அவருக்கு விருப்பமான போர்க் பை தொப்பி அது. திரையில் உணர்ச்சியற்ற முகத்துடன் தோன்றுவதற்காக தட்டை மேற்புரமும், குறுகிய விளிம்பும் கொண்டு அவரே பிரத்யேகமாக தயாரித்துக் கொண்டது.
‘நம் செயல் கொனஷ்டையாகும் போது உணர்ச்சி நிலையாக வேண்டும். அந்த முரணே பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்கிறது.’ என்பது கீட்டனின் பிரியப்பட்ட கோட்பாடுகளுள் ஒன்று. கீட்டனின் தொப்பி அத்தகைய கோமாளிதனங்களைத் திரையில் நிகழ்த்தும்போது முகம் தட்டில் அப்பிய பான் கேக் போல் இறுகியிருக்கும்.
நேரில் முதல் பார்வையிலேயே அவர் முகம் எனக்கு ஏன் பிடித்துவிட்டது? நான் என் நினைவு தெரிந்த நாள் முதல் தினமும் பார்த்து வரும் முகம் அவருடையது. பலர் விதவிதமாக அம்முகத்தைப் புனைந்து என்னுள் ஏற்றியிருந்தனர். சவமுகன், இறுகிய முகன், கல்முகன்… ஒரு முகத்திற்கு எத்தனை பெயர்கள். அனைத்தும் ஒன்றையே கூறின.
உணர்ச்சியற்றவன்… மகிழ்வற்றவன்… வலியற்றவன்.
“முகம் நம் அகத்தை வெளிக்காட்டும் ஒரே ஊடகம். அகத்தின் கண்ணாடி எனச் சொல்வார்கள். அதனைத் திறமையாக திரையிட்டு மூடிக்கொள்ள கற்றிருக்கிறீர்கள்” என்றேன்.
“இயற்கையாக…” என்றார் உடலை முழுதும் அசைத்துக் குலுக்கியபடி. அந்தக் கணம் வரை முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை. அப்போதுதான் அவர் அனைத்தையும் கேஹ்[i] ஆக மாற்றுகிறார் என்பது புரிந்தது. வித்தைக்காரன் ஒருபுறம் நம்மைப் போக்கு காட்டி மறுபக்கம் காற்றிலிருந்து பொருளை வரவைப்பது போல உடலை அசைக்கவும், முகத்தை இறுக்கவும் பழக்கியிருக்கிறார்.
நான் சொன்னேன், “கீட்டன், நீங்கள் உங்களை நன்கு புனைந்து கொள்கிறீர்கள். அந்தப் புனைவு பிறருக்காக நீங்கள் திரையில் பழக்கிய முகமூடி. திரையில் காட்டும் அதே வேஷத்தை வாழ்விலும் பழக்கப்படுத்தியிருக்கிறீர்கள்.”
என் சொற்களால் அவர் சீண்டப்படுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் எந்தச் சலனமும் இல்லாமல் பேசத் தொடங்கினார்.
“ஒருவர் திரையில் காட்டுவது தன்னைதான். நீங்கள் திரையில் கீட்டனை தானே பார்க்கிறீர்கள். எத்தனை வேஷங்கள். ஆனால் அத்தனைக்குள்ளும் ஒளிந்திருப்பது நான் தானே?” என்றார்.
கீட்டன் சொன்னார்,
“நீங்கள் என் முகம் புனைவு என்கிறீர்கள். ஆனால் நான் அதனைக் கற்றுக் கொண்டது குழந்தை காலால் நடை பழகும் வயதில். ஒன்றை கையால் எடுத்து வாயிலிட்டு சாப்பிடலாம் என மழலை அறியும் நாட்களில் நான் மேடையில் எப்படி பஸ்டராக வேண்டும் எனக் கற்றுக் கொண்டேன்.”
“சொல்லுங்கள்…” என்றேன்.
அவர் தொடர்ந்தார்,
“ஒருவன் காமிரா முன் செயற்கையாக எதையும் செய்ய முடியாது. கோரமான விதி விளையாட்டின் முன் என்னால் அழுது புலம்பி கதறும் படி நடிக்க இயல்வதில்லையே. அப்படி எனக்குச் செயற்கையாக தோன்றும் காட்சிகளை வெட்டிவிடுவேன். ஏனென்றால் செயற்கைக்கு மனிதர்கள் எதிர்வினையாற்றுவதில்லை. ஒரு கோமாளித்தனம் எந்த அளவிற்கு இயல்பானதோ அந்த அளவிற்குப் பார்வையாளர் ரசிப்பார்கள். நான் இயல்பிலேயே பஸ்டர். அதனை நான் உணர்ந்தது என் மூன்று வயதில்.
என் அப்பா ஜோசப் கீட்டன் ஒரு நாட்டு மருந்து வியாபாரி. ஆனால் அதனை கூவிக்கூவி விற்றால் வியாபாரம் ஆகாது என்பதை அறிந்து கொண்டார். அதற்கான உத்தியாக தெரு நாடகங்களைப் பயின்றார். கோமாளித்தனமாக நடித்துக் காட்டி மருந்தை விற்றுவிடுவார். நாளடைவில் மருந்து வியாபாரம் மறைந்து நாடகம் தொழிலானது. நான் பிறந்தபின் என்னையும் அதில் இணைத்துக் கொண்டார்.
என் முதல் அரங்கேற்றம் நிகழ்ந்தது 1899இல் என நினைவு. மேடையில் கையில் வைத்திருந்த என்னை அப்பா தவறுதலாக கீழே வீசிவிட்டார். சிறு அரங்கு என்பதால் பார்வையாளர்கள் சுற்றி குழுமியிருந்தனர். நான் அவர்களின் இருக்கையின் மத்தியில் பறந்து சென்று விழுந்தேன். ஆனால் பூனை தாவுவது போல் நான் இயல்பாக அடி படாமல் அவர்கள் மத்தியில் இருத்திக் கொண்டேன். அன்றிலிருந்தே பஸ்டர் என அழைக்கப்படத் தொடங்கினேன்.
அன்றே வேறொன்றையும் கவனித்தேன், தவறி விழும் போது யாரும் என் மேல் அனுதாபம் காட்டவில்லை. நான் பறக்கும் போது அனைவரும் சிரித்தனர். சுற்றி எங்கும் கை தட்டு. அதனை அவர்கள் நாடகத்தின் பகுதி என நினைத்து ரசித்தனர். கீழே விழுந்து எழுந்து சுற்றி பார்த்து கைதட்டல் பெற்ற பின் மேடைக்கு வந்து என் தந்தையின் அருகே நின்றேன். மேலும் சிரிப்பலைகளும், கைத்தட்டல்களும். எனக்கான முதல் அங்கிகாரம் கிடைத்தது அந்த அரங்கில் தான். சொன்னனே என் மூன்று வயதில்.
அரங்கினரின் அந்தச் சிரிப்பு என்பது குழந்தை அறியும் முதல் நகைச்சுவை என பின்னாளில் தெரிந்து கொண்டேன். நீங்கள் ஒரு வயது குழந்தையைக் கவனித்தால் தெரியும், மற்றவர் தவறி விழும்போதே முதலில் சிரிக்கக் கற்றுக் கொள்கிறது. விழும்போது எழும் கோமாளி தனத்தைக் கண்டு குழந்தைகள் சிரிக்கத் தொடங்குகின்றனர். அதனுடன் விழுந்தபடி நீங்களும் சிரித்துப் பாருங்கள். சற்று நேரத்தில் அவை அமைதியாகிவிடும். அந்த இயற்கையின் விதியைச் சிறு வயதிலேயே நான் கற்றுக் கொண்டேன். அதன் பின் மேடையில் இயல்பாக என்னை வெளிப்படுத்துவது ஒன்றே செய்தேன்.
நான் என் பத்தொன்பது வயதில் மேடை நாடகத்திலிருந்து திரைக்கு நேரடியாக வந்தேன். எனக்கான சிவப்பு கம்பலம் விரித்து வரவேற்பு இருந்தது. அமெரிக்காவில் மௌனப்படம் திரையில் வரத்தொடங்கிய காலம் அது. என்னைப் போல் அன்று திறமையாக ‘கேஹ்’ (Gag) எழுதுபவர்கள் யாருமில்லை. என்னைப் போல் பஸ்டர் பாயும் யாருமில்லை. இரண்டும் என்னை மேடையிலிருந்து நேரடியாக திரைக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. என் இயக்குனர் அர்பக்கிள் நான் எழுதிய கேஹ்களை வாசித்து பாராட்டினார். அதனைப் பல முறை நானே அவரிடம் நடித்தும் காட்டுவேன். ஒருமுறை அப்படிச் செய்து காட்டிய போது, ‘சரி, நீயே இதில் நடி’ எனச் சொல்லிவிட்டார்.
எனக்கு காமிரா முன் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அதுவரை மேடையில் மனிதர்களை, முகங்களைப் பார்த்தே நடிக்கப் பழகியவன். கைத்தட்டும், சிரிப்பலைகளும் என்னை வெளிகாட்ட தேவைப்பட்டன. ஆனால் அர்பக்கிள் என் மேல் நம்பிக்கைக் கொண்டிருந்தார். முதல் நாள் படப்பிடிப்பின் போதே என்னால் முடியும் என்பதையும் நான் அறிந்தேன்.
தயாரிப்பாளருக்கு, என்னுள் முரணாக வெளிப்பட்ட இறுகிய முகமும், உடல் வெளிக்காட்டும் பஸ்டர் பாயும் பிடித்திருந்தது.
1922 என நினைவு. நடிக்க தொடங்கிய முதல் ஆண்டிலேயே இரண்டு படங்கள். அன்றெல்லாம் ஓராண்டில் இரண்டு படங்கள் வெளிவர ஆண்டு முழுவதும் உழைக்க வேண்டும். இன்று போல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலம். எனவே எல்லாவற்றையும் முன் தயாரிப்புடன் படம் பிடிப்பர். ஒன்றைப் படப்பிடிப்பின் போது தவறவிட்டு பின்னால் தெரியவந்தால் படத்தை அப்படியே வெளியிட வேண்டியது தான்.
நாங்கள் ஓராண்டு உழைப்பில் என் முதல் இரண்டு படங்களை எடுத்து முடித்திருந்தோம். இரவு பகல் பாராத உழைப்பு முடிந்து இரண்டு படங்களும் வெளிவர தயாராக இருந்தன.
அனைத்தும் தயார் நிலைக்கு வந்து ஒரு வாரத்தில் படம் வெளிவரும் என்ற போது தான் தயாரிப்பாளர் என்னிடம் கேட்டார், ‘நீ படத்தில் எங்காவது சிரித்தாயா?’ என்று.
நான், ‘எனக்குத் தெரியவில்லை. நடிப்பின் போது நான் என்னைப் பார்ப்பதில்லை’ என்றேன்.
அந்த அலட்சிய பதில் அவரைச் சற்று கடுப்பாக்கியது. படம் வெளியாகும் முன் சோதனை ஓட்டம் நிகழ்த்த வேண்டும் என்றார். அன்று அனைத்து வேலைகளும் முடிந்து இரவாகியிருந்தது, நாங்கள் அனைவரும் வீட்டிற்குத் திரும்பும் மனநிலையில் இருந்தோம். ஆனால் தயாரிப்பாளர் விடவில்லை.
அவர் நான் சிரித்திருக்கும் காட்சிகளை மீண்டும் படம்பிடிக்க வேண்டுமென்றார். அர்பக்கிள் அவரைச் சமாதானம் செய்ய முயற்சித்தார். பெரும் பொருட்செலவு, நேர விரயமும் கூட. தயாரிப்பாளர் விடவில்லை. நான் அப்போது எதுவும் சொல்லவில்லை.
நாங்கள் இரண்டு படங்களையும் இரவு முழுவதும் பார்த்தோம். ஒரு முறையல்ல இரு முறையல்ல எட்டு முறை சோதனையோட்டம் நிகழ்த்தப்பட்டது. தயாரிப்பாளரும் எங்களுடன் இருந்தார். அனைவரின் ஆச்சரியத்திற்கும் இணங்க நான் ஒரு இடத்திலும் சிரிக்கவில்லை. சிரிக்கக் கூடாது என்பதில்லை. என் சுபாவத்தில் அது இல்லை என்பதே உண்மை.
அந்தச் சோதனை முடிந்த பின் அர்பக்கிள் தயாரிப்பாளரிடம் சொன்னார், ‘அவன் நடிப்பதில்லை, இயல்பாக தன்னை வெளிக்காட்டுகிறான்’ என்று.
அத்தருணத்தில் ‘கல்முகன்!’ என என் தயாரிப்பாளர் முதலில் அழைத்தார். பின் படம் வந்த பின் அனைவரும் சொன்னார்கள். அதுவே என் பெயராக நிலைத்தது” என்றார் கீட்டன்.
கீட்டன் இத்தனை ஆண்டுகளில் பல முறை அத்தருணத்தைச் சொல்லி பழக்கியிருக்கிறார். அதனால் எந்தச் சலனமும் இன்றி சொல்லிக் கொண்டிருந்தார். நானே அவரது பல நேர்காணல்களில் இக்கதையைக் கேட்டிருக்கிறேன்.
அவரைப் பார்த்தேன். தன் சிகர் பைப்பில் சிகரெட் பற்றவைத்து புகையை விதவிதமான வடிவங்களில் வெளியேற்றிக் கொண்டிருந்தார்.
உணர்ச்சி வெளிக்காட்டாத முகம். அந்தப் பாறை என்னைச் சீண்டியது.
நான் சொன்னேன், “அதன் பின் நீங்கள் திரையில் ஜொலித்தீர்கள். தொடர்ந்து நீங்கள் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி. திரையில் தோல்வி காணாத மனிதர். ஆனால் தனி வாழ்வில் அனைத்து தோல்விகளையும் சந்தித்தீர்கள். திரையில் உங்கள் சுதந்திரம் பறிபோனது. திரையில் நடிக்க முடியாமல் ஆனது. நீங்கள் நிர்மூலமானீர்கள். அந்தத் தருணத்தில் கூட நீங்கள் இப்படிக் கற்பாறையாக இருந்திருக்க மாட்டீர்கள்.”
அவர் சீண்டப்படுகிறாரா? எனப் பார்த்தேன். எதுவுமில்லை.
நான் சொன்னேன் “எம்.ஜி.எம் நிறுவனத்துடன் நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம். உங்கள் தோல்வியின் முதல் படி. ஆனால் நீங்கள் வாழ்வில் மறக்க முடியாத பெயர் மேயர்ஸ்… லூயிஸ். பி. மேயர்ஸ்.”
அப்பெயரைச் சொன்ன கணம் என்னுள் ஒரு வேகம் எழுந்தது. கீட்டன் அக்கணத்தில் நிலைகுலைய வேண்டும். நான் அவரைக் கூர்ந்து நோக்கினேன். பதற்றப்படக்கூடாது என எனக்கே சொல்லிக் கொண்டேன். ஆனால் அவர் தன் சிகர் பைப்பை விட்டு கவனத்தை எங்கும் திருப்பியதாகத் தெரியவில்லை. அந்தப் புகை வளையங்களை ஒரு தற்காப்பென பயன்படுத்துகிறாரா?
“சொல்லுங்கள் அப்பெயர் உங்களுக்கு நினைவிருக்கிறது தானே?”
என் குரல் தழுதழுத்து உடைய தொடங்கியது. இனி பேச முடியாது என்பது போல் தொண்டை அடைத்தது. ஆனால் அவர் தன்னுள்ளே ஆழ்ந்து இருப்பவர் போல் சலனமில்லாமல் இருந்தார். அதே வேளையில் என்னைக் கூர்ந்து கவனிப்பது தெரிந்தது.
உடைக்கவே முடியாத பாறை. எரிமலையில் பல ஆண்டுகள் இறுகி உருவான கரும்பாறை. இத்தனை இறுக்கம் கொள்ள எத்தனை எரிந்திருக்க வேண்டும். நான் என்னைத் திரட்டிக் கொண்டு பேசினேன்.
“நிச்சயம் நினைவிருக்கும், மேயர்ஸ்! உங்களின் வஞ்சம் அப்பெயர். உங்கள் முகத்தில் ஏற்பட்ட தீரா வடு அவர். அவரை நீங்கள் மறக்க சாத்தியமில்லை.”
“மேயர்ஸ்! உங்கள் முகத்தைப் பார்த்த கணம் அப்பெயர் நினைவிற்கு வந்தது,” என்றார் கீட்டன்.
என்னை யாரென்று தெரிந்தே இத்தனை நேரம் பேசிக் கொண்டிருக்கிறார். அவரைப் பேசவைக்க விரும்பினேன். மனிதர்கள் பேச பேச தங்கள் இயல்பை வெளிக்காட்டுவார்கள். அப்போது அவர்களின் இச்சையை, குரூரத்தை, வஞ்சத்தை முழுதும் மூடி மறைக்க முடியாது.
நான், “சொல்லுங்கள், உங்கள் எம்.ஜி.எம் நாட்களைப் பற்றி” என்றேன்.
அவர் சொல்லத் தொடங்கினார்,
“நான் திரையில் வென்று கொண்டிருந்தேன் உண்மை தான். ஆனால், அன்று திரைத்துறை நிறுவனமயம் ஆகிக் கொண்டிருந்த காலகட்டம். நாங்கள் சிறு குழுவாக எங்கள் படங்களை நாங்களே எடுத்துக் கொண்டிருந்தோம். எம்.ஜி.எம் போன்ற பெருநிறுவனம் முன் நாங்கள் எடுக்கும் படமெல்லாம் சிறுதொழில் வியாபாரம்.
ஆனால், எனது திரை வெற்றி எனக்கான அனைத்து சுதந்திரங்களையும் தேடி தந்தது. கேமராமேன் தொடங்கி எலெக்ட்ரீசியன் வரை எனக்கென பிரத்யேகமாக இருந்தனர். அது என் வேலையைச் சுலபமாக்கியது. நான் ஒரு கேஹ் உருவாக்குகிறேன் என்றால் உடனே அதனை எடுப்பதற்கான அரங்க உருவாக்க வேலைகள் தொடங்கிவிடும். எனக்கு அப்படியொரு வேகம் தேவைப்பட்டது. இல்லையென்றால் நான் எடுக்கும் கேஹின் மீது சந்தேகம் வந்துவிடும். அதனைத் தூக்கிவிடுவேன். ஒரே டேக்கில் காட்சியில் நிகழ்த்த முடியவில்லை என்றாலும் அதனைத் தூக்கிவிடுவேன். ஏனென்றால் அது அவ்வண்ணம் நிகழவில்லையென்றால் அரங்கில் யாரும் சிரிக்கப்போவதில்லை. எனவே என் படங்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தன்னிச்சையாக ஒழுகும் தன்மை கொண்டிருந்தது. அதுவே என் படங்களின் வெற்றிக்குக் காரணம். நான் கொண்டாடப்பட்டதும் அதற்காகவே.
என்னுடைய ‘தீ ஜெனரல்’ படத்தை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். பார்த்திருக்கவில்லை என்றாலும் பாதகமில்லை. அது இன்று மிகப்பெரிய வெற்றி படம். அன்றும் தான். படம் வெளிவந்த போதே அனைவராலும் கொண்டாடப்பட்டது. ஆனால் அப்படம் பொருளாதார ரீதியாக சோபிக்கவில்லை. காரணம் நான் மேற்சொன்ன என் கட்டற்ற தன்மையே.
‘தீ ஜெனரல்’ படம் அமெரிக்க சிவில் வார் பற்றியது. அதன் இறுதியில் ஒரு காட்சி வரும். வடக்கு பகுதியினர் தெற்கு பகுதியைச் சேர்ந்த என்னை ரயிலில் துரத்திக் கொண்டு வருவர். அப்போது ஒரு பாலத்திற்கு நான் தீ வைக்க வேண்டும். பின்னால் வரும் ரயில் பாலத்தைக் கடக்கும் போது மொத்த பாலமும் ரயிலுடன் இடிந்து விழ வேண்டும். அதனை நான் சொன்ன போது செட்டில் முழு அமைதி.
தயாரிப்பாளர் அந்தக் காட்சி வேண்டாமென்றார். நான் பிடிவாதமாக எடுத்தே ஆகவேண்டும் என்றேன். அவர் மறுக்கவில்லை. அந்தக் காட்சி பகுதி மௌனப்பட வரலாற்றில் அதிக பொருட்செலவில் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. அன்றைய கணக்கில் ஐம்பதினாயிரம் டாலர் என்றார்கள். எனக்குத் தனிப்பட்ட முறையில் திருப்திகரமாக அமைந்த காட்சி.
ஆனால் தயாரிப்பாளருக்கு அல்ல. படம் வெளிவந்த போது எதிர்பார்த்த வருமானத்தை அது ஈட்டவில்லை. தயாரிப்பாளரை அது திவாலாக்கியது. என்னுடன் அடுத்த படத்திற்கான ஒப்பந்தமும் ஏற்படவில்லை. நானும் தனிப்பட்ட வாழ்க்கையில் மனைவியால் பெரும் பொருட்செலவிற்கு ஆளாகியிருந்த காலகட்டம். என் வாழ்வில் முதல் அடி விழுந்தது அங்கே தான். அனைத்தும் என் கையை விட்டு போகத் தொடங்கிய நாட்கள் அவை.
நான் மிகுந்த வெற்றி களிப்பில் இருந்தேன். ஆனால் எந்த முடிவும் என்னால் தன்னிச்சையாக எடுக்க முடியாது என்பதை வாழ்க்கையில் முதல் முறை உணர்ந்த நாட்கள் அவை. என் பொருளாதார ஆலோசகர் எம்.ஜி.எம் நிறுவனத்துடனான ஓர் அறிமுகத்தை ஏற்படுத்தினார். என் நண்பர் சார்லி சாப்ளின் அதனை வேண்டாம் என்றார். அது என் தனிப்பட்ட படைப்பு சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றார். ஆனால் எனக்கு அப்போது சம்மதிக்க, மறுக்க என தனிப்பட்ட சொல் எதுவும் இருக்கவில்லை.
நான் உள்ளே சென்ற முதல் நாளே எனக்கு அனைத்தும் முன்பே பதப்படுத்திக் கொடுக்கப்படும் உணவு போலானது. என் வருமானம் தொடங்கி ஒவ்வொரு நாளின் படப்பிடிப்பும் முன் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. நான் செட்டில் எந்த மாற்றம் சொன்னாலும் அது மறுக்கப்பட்டது.
எளிய விஷயம், மௌனப்படத்தில் அன்று சராசரியாக 240 டைட்டில் கார்ட் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. நிறுவனத்தின் தயாரிப்பு குழு டைட்டில் கார்ட்களை எழுதி தள்ளியது. நான் என் படங்களில் அதிகம் பயன்படுத்தியது ஐம்பத்தியாறு. ஒன்றை காட்சியில் சொல்ல முடியாவிட்டால் திரையில் எழுதிக்காட்டி எந்தப் பயனும் இல்லை என்பது என் எண்ணம். ஆனால் அதனை நான் சொன்ன போது முதல்முறையாக படப்பிடிப்பில் என் சொல் மறுக்கப்பட்டது. அன்று நான் என்னை எல்லாம் தெரிந்த முட்டாள் போல் உணர்ந்தேன்.
நிறுவனமயமாக்கியதின் முதல் சிக்கலை அன்றே சந்தித்தேன். எம்.ஜி.எம் நிறுவனர் லூயில். பி. மேயர்ஸ் என்னை அவர் அறைக்கு அழைத்தார்.
‘கதையில் நிங்கள் மாற்றமேதும் செய்ய வேண்டாமே’ என்றார் பணிவாக.
‘மாற்றம் செய்ய வேண்டாமென்றால் நான் எதற்கு?’ நான் எரிச்சலானேன்.
அவர் நிதானம் இழக்காமல் மறுமொழி சொன்னார், ‘மிஸ்டர் கீட்டன் அனைத்தும் நம் ஒப்பந்தத்தின் படியே நிகழ்கிறது. நம் ஒப்பந்த படி உங்களுக்கான பேசப்பட்ட சம்பளம் வரவில்லை என்றால் நீங்கள் தாராளமாக எங்கள் மேல் வழக்குத் தொடுக்கலாம். ஆனால் நடிகராக நீங்கள் பிற துறையில் தலையிட அனுமதியில்லை’ என்றார்.
‘ஸோ, கீட்டன் என்ற முகம் தான் வேண்டும், நான் வேண்டாம் அல்லவா?’ என்றேன். அவர் ஆமோதிப்பது போல் தலையசைத்தார். கசப்பின் அமிலத்தில் உடல் எறிய அங்கிருந்து வெளியேறினேன்.
நேராக சென்று எம்.ஜி.எம் இன் இணை தயாரிப்பாளரான தால்பெர்க்கை சந்தித்தேன். மொத்த நிறுவனத்திலும் எனக்காக பேசக் கூடியவராக அவர் ஒருவரே இருந்தார். அவருக்கு என் நடிப்பின் மேல் நம்பிக்கையும் என் திறனில் மேல் பெருமிதமும் இருந்தது. நாட்கள் செல்ல செல்ல நாங்கள் பரஸ்பர நண்பர்கள் ஆகத் தொடங்கியிருந்தோம். ஆனால் அவரும் என்னை அணுசரித்துப் போகும்படி சொல்லும் நாள் வந்தது.
நான் கொஞ்சம் கொஞ்சமாக திரையிலிருந்து வெளியேறிக் கொண்டே இருந்தேன். எனக்கான உடைமை கட்டுப்பாடுகள், நேர கட்டுப்பாடுகள், என் தனிப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் கூடிக் கொண்டே சென்றன.
மேயர்ஸ் ஒரு சர்வாதிகாரி. அனைத்தும் அவர் இஷ்டபடி சொன்னது போல் நடக்கவேண்டுமென எதிர்பார்ப்பார். எனவே ஒவ்வொரு சிறு சிறு விஷயத்திலும் தலையிடுவார். அன்று செட்டில் ஒரு நாளில் பத்து வெவ்வேறு படங்கள் நடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். பத்திலும் மேயர்ஸின் சொல் இருக்கும். அவரது முத்திரையில்லாமல் ஒரு சிறு விஷயம் கூட அங்கே நிகழாது.
நான் செய்யும் ஒவ்வொன்றிலும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நாட்கள் செல்ல செல்ல என் நடிப்பிலும் தலையிடத் தொடங்கினர். காமிரா முன் நான் எங்கே நிற்க வேண்டும், எப்படி நடக்க வேண்டுமென எனக்கு மறைமுகமாக சொல்லப்பட்டது. மொத்த செட்டே முன் தயாரிப்பானது. அதில் நிற்பதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு என வழி பாதைகள் அமைக்கப்பட்டன. அவ்வழியே நான் சென்று மீண்டேன். நான் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் முடிவிலும் சோர்ந்திருந்தேன்.
நான் செட்டிற்கு செல்வதைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கினேன். ஆனால், அங்கே அதுவே ஒரு மீறலாகப் பார்க்கப்பட்டது. மேயர்ஸ் அதனை அவரது கௌரவத்திற்கு எதிரான வன்முறையாக கருதினார்.
நான் வரும் நாட்கள் கண்காணிக்கப்பட்டது. வராத நாட்களுக்குச் சம்பளம் பிடிக்கப்பட்டது. ஒரு முறை சனிக்கிழமை வரும்படி திடீரென அழைப்பு வந்தது. அதனை நான் மறுத்தேன். அன்று எனக்கு வேறு திட்டங்கள் இருந்தன. மேயர்ஸ் என்னை நேரடியாக தொடர்பு கொண்டு உடனே வரும்படி சொன்னார். நான் சம்மதித்தேன், ஆனால் போகவில்லை. அன்றிலிருந்து நான் நிறுவனத்தின் நேரடி கண்காணிப்பிற்கு ஆளானேன். மேயர்ஸின் கண்களுக்கும்.
அவர் அகங்காரம் முற்றிலுமாக சீண்டப்பட்டது. என்னைத் தன் தனிப்பட்ட எதிரி என எண்ணினார். அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் நான் அவரைச் சென்று சந்தித்து என் சம்பளத்தைப் பெற வேண்டுமென சொன்னார். நான் சம்பளம் வேண்டாமென மறுத்தேன். தால்பெர்க் என்னை அமைதி காக்கும் படி சொன்னார். இந்தப் படத்தை மட்டும் முடித்துக் கொடுக்கும் படி கேட்டார். சம்பளத்தைப் பற்றி இறுதியில் பேசிக்கொள்ளலாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். நான் சம்மதித்தேன்.
‘வாட்! நோ பியர்’ படப்பிடிப்பு நிகழ்ந்து கொண்டிருந்த நாட்கள் அவை. ஒரு நாள் என் அனுமதியில்லாமல் மேயர்ஸ் என் தனியறைக்கே வந்துவிட்டார்.
நான் அப்போது என் நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தேன் கொஞ்சம் மதுவும்.
என்னிடம், ‘படப்பிடிப்பின் போது இங்கே என்ன செய்கிறாய்?’ என்றார் மேயர்ஸ். என்னைச் சுற்றி கட்டியிருந்த அனைத்து கட்டுகளும் அகன்ற தருணம் அது. நான் சங்கிலி உடைப்பட்ட மிருகம் போலானேன்.
‘பெருத்த பன்னியே…’ என அவரை நோக்கி கூவினேன்.
‘பெருத்த பன்னி… என் அறையிலிருந்து வெளியேறு’ என்றேன்.
என் குரல் என்னுள் புதிய அட்ரீனலனை உருவாக்கியது. நான் அதனை உரக்க மீண்டும் மீண்டும் சொன்னேன்.
‘பெருத்த பன்னி’ அந்த வார்த்தை அத்தருணம் போல் வேறெப்போதும் அழகாக இருக்கவில்லை. சொல்ல சொல்ல அவ்வார்த்தை மேலும் வெறிக் கொண்டு எழுந்தது. செட்டிலிருந்த அனைவரும் கேட்கும் படி ‘Fuck you fat pig’ என்றேன். அனைவருக்கும் கேட்டது. அந்த நிறைவு என்னை மேலும் செலுத்தியது. அவர் அங்கிருந்து வெளியேறும் வரை அவர் பெயரைச் சொல்லிக் கூவினேன்.
நான் எதிர்பார்த்தது போலவே மேயர்ஸிடமிருந்து நோட்டீஸ் வந்தது. நான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன். ஆனால் அதற்கு முன்னரே நான் அங்கிருந்து சென்றுவிட்டிருந்தேன்.”
கீட்டன் அதிகம் பேசத் தொடங்கியிருந்தார். தன் புண்ணைத் தானே நினைவுபடுத்தும் தருணங்கள் அவை. அதனைச் சொறிந்து மேலும் புண்ணாக்காமல் இருக்க முடியாது.
நான் சீண்டினேன், “அதன் பின் நீங்களும் அவரை எதிரியாக நினைத்தது உண்மை. ஏனென்றால் உங்களுக்கான திரை வாய்ப்பு முழுதும் மறுக்கப்பட்ட நாட்கள் அவை.”
“ஆம், ஆனால் அந்த வாய்ப்பின்மை எல்லாம் மேயர்ஸ் எனக்காக உருவாக்கிய தடைகள் என பின்னாளில் அறிந்தேன். அவர் நான் திரைக்கே மீளக்கூடாது என்னும் வஞ்சம் கொண்டிருந்தார் என ஒரு நண்பர் சொல்லி அறிந்தேன்” என்றார் கீட்டன்.
“சொல்லுங்கள்…” என்றேன்.
”நான் அந்தக் கட்டுகளிலிருந்து என்னை விடுவிக்க விரும்பினேன். என் மனைவி என்னிடம் விவாகரத்து வாங்கியிருந்தாள். திரையிலும் வாய்ப்பில்லாமல் இருந்தேன். நான் தனியன் ஆனேன். ஆனால் வெளியேற விரும்பினேன். எனக்கான புதிய களங்கள் நோக்கி.
புதிய படம் ஒன்றை தொடங்க பல வழிகளிலும் முட்டி மோதினேன். எதுவும் கைக்கூடவில்லை. நான் ஆறாண்டுகள் எந்த நடிப்பு வாய்ப்பும் இல்லாமல் இருந்தேன்.
முதலில் என் திறனுக்கான வாய்ப்பு வருமென காத்திருந்தேன். அது இல்லாது ஆன போது அதனை எனக்கான சவாலாக எடுத்துக் கொண்டேன். திரைத்துறையில் கடைநிலை ஊழியன் வேலையையும் செய்ய துணிந்தேன். அனைத்து வேலையையும் செய்தேன். அதில் எனக்குப் பிடித்த கேஹ் எழுதும் வாய்ப்பு அரிதாக கிடைத்தது, நடிப்பு அரவே இல்லை. திரைத்துறை பேசும்படங்களுக்கு மாறியிருந்த காலம் அவை. உடல் மொழி கொண்டு நடிக்கும் என்னால் பேசும் படங்களில் சோபிக்க முடியாது என விமர்சகர்களால் சொல்லப்பட்டது. அதனை மேயர்ஸ் காசுக் கொடுத்து பரப்பியதாக பின்னாளில் அறிந்தேன்.
நான் மேலும் சோர்ந்தேன். மீளவே முடியாத கீழ் எல்லை என ஒன்றுண்டு; அதனைத் தொட்டேன். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அதிலிருந்து மீண்டு வந்தேன். என்னை அமெரிக்காவிலிருந்து விலக்கிக் கொண்டேன். பாரீஸ் சென்றேன். அங்கே கல்வி நிறுவனங்களுக்காக ஒரு காமிக் படம் எடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மந்தையில் தொலைந்த ஆட்டைத் தூக்கி அனைத்த ரட்சன் என்றே அவ்வாய்ப்பை எண்ணிக் கொண்டேன்.
என் பழைய மேடை நாடகத்திலிருந்து ஒரு கதையை மீண்டும் திரைக்காக உருவாக்கினேன். பேசும் குறும்படம் ‘பெஸ்ட் ஃப்ரம் தீ வெஸ்ட்’.
அந்நாளில் அனைத்து வகையிலும் வெற்றி படம். கொலம்பியா பிட்சர்ஸ் வெளியீடாக வந்தது. அப்படம் தந்த பொருளாதார வெற்றி அந்நிறுவனத்தை மலைக்க வைத்தது. அதை மீண்டும் மீண்டும் வெளியீடு செய்தனர். இந்நாள் வரை ஆறு முறை மறுவெளியீடு கண்டது. ஆறு முறை பாக்ஸ் ஆபிஸ் வெற்றி. எனக்கான வாய்ப்பு மீண்டும் மெல்ல உருவானது. கொலம்பியா பிட்சர்ஸ் தொடர்ந்து பதினெட்டு படங்களை என்னுடன் இணைந்து இயக்கியது. அதில் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது எலினோர் என் துணையானாள், ‘எலினோர்’ என் அன்பிற்குரியவள்.
தொடர்ந்து படங்கள் நடிக்கத் தொடங்கினேன். எம்.ஜி.எம் நிறுவனத்துடனே பல படங்கள் செய்து கொண்டிருக்கிறேன்.”
கீட்டன் பேசி முடிக்கும் வரை நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் எந்தச் சலனமும் இல்லை, அவர் இயல்பாக யாருக்கோ நிகழ்ந்தது போல் ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். பல தருணங்களை நடித்தும் காட்டினார்.
ஆனால் அந்த முகம் சலனமே இல்லாத கற்பாறையென இருந்தது. சிகர் பைப்பை மீண்டும் பற்றவைத்துக் கொண்டார்.
“நீங்கள், படப்பிடிப்பிலிருந்து மேயர்ஸை திட்டிவிட்டு வெளியேறியது ஒரு மீறல். அதுநாள் வரை அவர் அந்த மீறலைக் கண்டதில்லை. அவர் உருவாக்கிய நிறுவனத்தில் அவர் சொல் ஒன்றே செயலாகிக் கொண்டிருந்தது. நீங்கள் வெளியேறி அதை இல்லாமல் ஆக்கினீர்கள். அதன்பின் அவர் ஒவ்வொரு நாளும் அந்த மீறலை அங்கே சந்தித்துக் கொண்டே இருந்தார். அங்கிருந்து அனைவராலும் வெளியேற்றப்படும் வரை.” என்றேன்.
அவர் ‘அறிந்தேன்’ என்பது போல் தலையசைத்தார். வேறு ஏதாவது சொல்லுவார் என எதிர்பார்த்தேன். ஏமாற்றம்.
நான் என் கைப்பையிலிருந்து ஒரு பழைய காகிதத்தை எடுத்து அவரிடம் நீட்டினேன்.
“Keaton is getting suspended for a good and sufficient cause”
- Louis B. Mayers
என எழுதப்பட்டு எம்.ஜி.எம் முத்திரையிடப்பட்டிருந்தது.
நான் சொன்னேன், “அவர் இறக்கும் தருணம் வரை இந்தக் காகிதம் அவருடனே இருந்தது. அதனை நீங்கள் வாங்கி வெளியேறியிருந்தால் அவரது ஆத்மா நிறைவு கொண்டிருந்திருக்கும்”
“இப்போது வாங்கிவிட்டேனே” என்றார். அவர் அதில் கர்வம் கொள்கிறாரா? எனப் பார்த்தேன். இதுவும் கீட்டனின் வெற்றியே. இறுதி வெற்றி. இதற்கு மகிழ்ச்சி கொள்கிறாரா? ஒருவன் தன்னாலே வீழ்ந்தான் என்பது கொண்டாடப்பட வேண்டியது.
அவர் அதற்கும் அமைதியாக இருந்தார். கற்பாறைகள் இறுக்கமன்றி நெகிழ்வு கொள்வதில்லை.
நான் கீட்டனிடம் கைகுலுக்கினேன்.
ஒருவித வெறுமையை என்னுள் உணர்ந்தேன். நான் ஏன் இத்தனை தொலைவு பயணம் செய்து வந்து இதனை இவரிடம் பேசி தெரிந்து கொள்ளவேண்டும். இவர் ஒருகணம் கண்ணீர் விட்டிருந்தால், மகிழ்ந்திருந்தால் நான் வந்த பயன் நிறைவேறியிருக்கும். இங்கே எதுவும் நிகழாத வெறுமை என்னை நிறைத்தது. என்னை நானே முட்டி புண்ணாக்கிக் கொண்ட வெறுமை.
இந்த அபத்த செயலை ஒருவர் தன் வாழ்நாளெல்லாம் செய்திருக்கிறார். மேயரஸ்… மூடன்… மேயர்ஸ் ஒவ்வொரு நாளும் முட்டி மோதி தன் அச்சைப் பதிக்க முயன்றது இந்தக் கற்பாறையின் மேல். எத்தனை வீண் செயல்.
நான் கீட்டனின் முகத்தை மீண்டும் நிமிர்ந்து பார்த்தேன். நான் திரையில் பார்த்து பார்த்து சிரித்த முகம். இப்போது ரொம்ப அழகாக தெரிந்தது. இறுகிய முகங்கள் அழகானது. கல்முகன்.
எழுந்து, “நான் வருகிறேன்” என்றேன்.
அவர் முன்பு போல் மேசையைத் தட்டி தொப்பியை கையில் தூக்கிக் காட்டினார்.
செல்லும் போது அவரைத் திரும்பி பார்த்தேன், அவர் தன் சிகர் பைப்பில் வெளியேறும் புகையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
[i] கேஹ் – Gag (உடல், சைகை, காட்சி மூலம் வெளிப்படுத்தும் நகைச்சுவை முறை. பஸ்டர் கீட்டன் Slapstick Gag என்றழைக்கப்படும் உடல் அசைவால் ஏற்படுத்தும் நகைச்சுவையில் மாஸ்டர் எனக் கருதப்படுபவர்.)

அற்புதமான கதை சொல்லல். எழுத்தாளரின் உழைப்பு அழகாக தெரிகிறது. நான் வாசிக்க ஆரம்பித்த உடனே அந்த refercne மூலமாக கீட்டரின் ஒரு வீடியோ பார்த்து விட்டு வாசிக்க ஆரம்பித்தேன். அந்த reference சரியான இடத்தில் அழிக்கப்பட்டு இருந்தது.
அதற்கு பின்பு நான் வாசித்தது, நான் ஏதோ ஒரு கருப்பு வெள்ளை படக் காட்சியை பார்த்தது போல் இருந்தது. அபாரமான கதை ஓட்டம்.
ஒவ்வொரு கேள்வியின் இறுதியிலும் அவரின் முக வேறுபாட்டை அறிவதற்கு நானும் அந்த பேட்டி எடுப்பவர் போல் முயற்சித்தேன். எவ்வாறு இருந்தாலும் அவரின் கல் முகம் வென்று விட்டது என்று தான் சொல்லவேண்டும்.
மிக பெரிய இரண்டு ஆளுமைகளின் மோதல்களும் வீராப்பும் கண் முன்னே விரிந்தது.
கடைசிவரை அந்த பேட்டியாளர் யார் என்று ஊகித்து கொண்டே இருந்தேன்.
அருமையான நடை. வாழ்த்துக்களும் நன்றியும்.
நன்றாய் இருந்தது. அயல் நாட்டு திரைப்படத்துறையின் ஒரு உண்மைத்துளி. எங்கிருந்தாலும் எந்த மொழி பேசினாலும் கலைஞர்கள் கலைஞர்களே. நம் செயல் கொனஷ்டையாகும்போது உணர்ச்சி நிலையாக வேண்டும் என்ற வார்த்தை யோசிக்க வைத்தது. இவரைப்போன்ற இறுகமூடிய ஏர்டைட் டப்பாக்களைப்போன்ற உன்னத கலைஞர்களை கையாளுவது எல்லோருக்குமானது அல்ல. நாகேஷ் பற்றி படிக்கும்போதுகூட பாலசந்தர், கமல் போன்ற சிலர்களைத்தவிர மற்றவர்கள் அவர்களோடு இணைந்து பணியாற்றுவது கடினமானது என்றே குறிப்பிடுவார்கள். இறுகிய முகம் என்றாலும் எரிமலையில் வெந்து வெந்து உறைந்த பாறை என்பது இன்னும் கடினமானவராக உணரவைத்தது. உள்ளத்தை முகம் பிரதிபலிக்கும் என்றால் அவரைப்போன்றவர்களின் உள்ளமும் கல்லாய்தான் இருக்குமோ?
கதை அற்புதமாக வந்திருக்கிறது. கீட்டன் மீண்ட இடமும்
மேயர்ஸ் சருக்கிய இடமும் இறுதியிலிருந்து விரித்துக் கொண்டு விட முடிகிறது. வறட்டு நிர்வாகத்தின் அல்லது கோட்பாட்டின் முடிவாகவும் vs கலையின் மீட்பாகவும் விரித்துக் கொள்ளலாம்.
கடைசியில் அந்த இயக்குனருக்கு கீட்டனை வெல்ல இருந்த விழைவின் வரிகளை சொல்லாமல் விட்டிருந்தாலும் நேர்காணல் செய்பவனின் வழி மேலதிகமாக சிந்திக்க வைப்பதாகவே இருந்திருக்கும்.
Naveen [with loads of initials :)],
Kalmugan explores the dialectic between the stoic face and the buster body. Keaton is a world-renowned figure, and you challenge yourself by bringing him into a story, skilfully plotting his personality and behaviour to explore your quest.
In this story, the central issue arises not from the interaction between the Mayors and Keaton, but from the contrast between Keaton’s face and his body. This is how the story captures three distinct periods in Keaton’s life, each showing how a stoic face reacts in its various shades of grey.
It’s true that we can’t shake a stoic face because, even beneath it, the heart remains stoic. It might “bust” in its own way, but it’s not emotional, and therefore, it’s not egoistic either. After reading Kalmugan, I found myself reflecting on the faces in cinema, Keaton, Chaplin, Laurel & Hardy, and our legend Nagesh. They all share this unique nature, and each of them is a superstar.
Keaton once said in an interview that he had a contented cinematic life, and with all the hurdles he faced, he could never have stayed true to his words without being stoic. But personally, I’d call him Kalmugan, as it feels more poetic in Tamil. Kalmugan (I love the title as much as the story itself).
A brilliant piece, and I’m thrilled that it revolves around the life of my favourite, Buster Keaton.
M. Krishnan
மிக நேர்த்தியான அதே சமயம் மிக எலுமியான நடை. ஒரு எளிய வாசகனையும் கூட எந்த வித சிக்களும் குழப்பமும் இல்லாமம் இலகுவாக அழைத்து போகும் கதை சொல்லியின் நேர்த்தி இன்னும் சிறப்பு.ஒரு விதத்தில் கீட்டனின் கல்முகம் சோர்ந்து தோயிந்த மனதுக்கு ஒரு விதத்தில் சிறு ஊக்கம் தருவதாக கூட உள்ளது.
அனைத்தையும் கடந்து வந்து அந்திம காலத்திலும் பேட்டி காணும் விதத்தில் பெயர் தெரியாத ஒருவர் மூலும் வந்து ஒருவனை குத்தி ரணம் ஆக்குவதை.
இவ்வுழுக நடை முறையில் இன்னும் நிகழ்ந்து கொண்டு இருப்பதை சுட்டிக்காடியது இன்னும் சிறப்பு.
மூன்று வயதில் ஒரு பொதுநிகழ்வில் தந்தையால் தவறுதலாக வீசப்பட்ட போது உறைந்த முகம் இறுதி வரை மாறவே இல்லை. மேடைகளில் அரங்குகளில் உறைந்தே இருகிறது. வீசப்பட்ட போது இயல்பாக எழுந்து மெதுவாக அப்பாவிடம் வந்து நின்று கொள்ளும் பையன் போலவே வாழ்வின் சிக்கலான எல்லா தருணங்களிலும் மெல்ல எழுந்து வந்து தன்னுடன் நின்று கொள்கிறார். அகநக..முகநக என்ற குறளின் சொற்கள் கதையை வாசிக்கும் போது மனதை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. ஆனால் இறுதியில் புகையுடன் விளையாடினார் என்ற இடத்தில் கதை தந்த தொந்தரவு மாறி புன்னகைத்தேன். கல்முகனிற்கு ஏனோ மனிதர்கள் முன்பு மட்டும் தான் புன்னகை இல்லை. மற்ற யாவற்றின் மீதும் கனிவு உண்டு. அந்த மூன்று லயது குழந்தை புகையுடன் விளையாடக்கூடியது தான்.
* கலைஞனின் தன்னிச்சை தன்மைக்கும் நிறுவனமான ஒன்றுக்கும் இடையில் உள்ள அசையாத இசையாத தன்மைக்கு குறியீடாகவும் கல்முகனை வைக்கலாம்.
வாழ்த்துகளும் அன்பும் நவீன்.
சலனமற்ற ; வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு , என் கடன் பணி செய்வதென்று வாழ்ந்த ஒரு அகத்தின் அழகை முகமாய் உருவக படுத்தி,
அதற்கு ஏற்ப சம்பவங்களை கோர்த்து கதை வடிவில் தந்த அழகில் படைப்பாளி திரு.நவீன் மிளிர்கிறார்.
வெற்றியை குறி வைத்தால் தோல்வி சாத்தியம் அதிகம் தானே? என்று மேயர்ஸ் வழியே ஒரு கருத்தும் ;
வாதியின் எதிர்ப்பு தோற்கும் தருணம் பிரதிவாதியின் வெற்றி என்றாகி விடுகிறது என்ற இன்னொரு புரிதலும் தருகிறார் கதாசிரியர்.
Moral:
கையறு நிலை காலத்தும் மாண்பும் அறமும் ஒழுகி வாழ்ந்தால், வாழ்கையில் திருப்தி நிச்சயம்.
வல்லினத்துக்கும் நன்றி
நான் கீட்டனின் ரசிகை, அவர் என்னுள் ஒரு படிமமாகவே உள்ளார். மொத்த வீடும் இடிந்து விழும் போது அவர் இறுகிய முகத்துடன் நின்றிருக்கும் காட்சி. பலருக்கும் கீட்டனை அந்த காட்சி வழியாகவே அறிமுகம் இருக்கும்.
இக்கதை அப்படிமத்தை கீட்டனின் வாழ்க்கை வழியாக துலங்கி காட்டுகிறது. மொத்த ஹாலிவுட்டும் அவரை மெதுமெதுவாக வெளியே தள்ளுகிறது. ஆனால் அந்த கல்முகம் எந்த சலனமும் இல்லாமல் அதனிடையே நின்றிருக்கிறது. நல்ல கதை.
அன்புள்ள நவீனுக்கு வணக்கம்
நல்ல கதை. கதைசொல்லி கீட்டனுக்குச் சங்கடங்கள் தரக்கூடிய நினைவுகளைக் குறிப்பிட்டு நிலைகுலைய செய்ய முயல்கிறார். மகிழ்ச்சி, குற்றவுணர்வு, சினம் எனக் கதைசொல்லி எனக் கொண்டு வர எண்ணும் எல்லா உணர்வுகளுக்கான நினைவுகளின் போதும் கிட்டன் தன்னுடைய இறுகிய முகத்துடனே வெளிப்படுகிறார். அதன் வழியே திரையிலும் நேர்வாழ்விலும் அவர் கட்டியெழுப்பியிருக்கும் இறுகிய முகம் எனும் பிம்பத்தைத் தகர்க்கப் பார்க்கிறார். திரையாளுமையும் நேர் வாழ்வு ஆளுமையும் வேறாகத்தான் இருக்குமெனக் கதைசொல்லி எண்ணுகிறான். ஆனால், தன் உடல் அசைவை மட்டுமின்றி உணர்வையும் முழுமையாகக் கையாளத் தெரிந்த முழுமையான கேக் கலைஞனாக கீட்டன் உருமாறுகிறார். அவருடைய உணர்ச்சி சலனங்களைச் சிறு அசைவுகளாக மாற்றிக் கொண்டு முகத்தை நிலைக்கச் செய்ய முடிந்தவராக மாறுகிறார். உடலிலிருந்து மனத்துக்கும் உடலுக்குமாக இப்படி அவருடைய கலை பயணப்படுவதை மிக அழகாகக் கதை காட்டுகிறது.
வாழ்த்துகள்
அரவின் குமார்