
இந்தச் சிறிய நிறுவனத்தின் மேல் தளத்தில், இடமோ வலமோ சன்னல்கள் இல்லாத சுவரை ஒட்டி வளைந்து செல்லும் பதினைந்து படிகளில் ஏறிச் சென்றால் சாம்பல் நிற கதவின் முன் சென்று நிறுத்தும். அந்தக் கதவைத் திறந்து சென்றால், சட்டென நிறுவனத்தின் பரபரப்புகளிலிருந்தும், பெருநகரின் கூச்சல் குழப்பங்களிலிருந்தும் வெகுதூரம் விளகியிருக்கும் அகண்ட மொட்டை மாடி, எங்களை இன்னொரு உலகத்திற்குக் கூட்டிச் செல்லும்.
அதனால்தான், நானும் என் உதவியாளரும், இந்த அலுவலக கட்டடத்திற்கு வந்ததிலிருந்தே, எங்களின் ஜீவாதாரமான கட்டடக் கலை தொழிலுக்கு முரணானது என உணர்ந்தாலும், மேலே அமைந்த அந்த மொட்டை மாடியை எவ்வித பொருட்களையும் வைத்து நிறைக்க வேண்டாம் என முடிவெடுத்தோம். கரடுமுரடான அந்த காண்கிரிட் தரையில் பாசி படராமலும், எங்கிருந்தோ பறந்து வரும் சருகுகள் குவியாமலும் நீரோட்டம் தடைபடாமலும் பார்த்துக் கொண்டால் போதும். மூன்று மூலைகளிலும் தொடை உயரம் எழுப்பப்பட்டிருந்த மதில்களில் மங்கியிருந்த சாயத்தையும் நாங்கள் புதுப்பிக்கவில்லை. சுவர்களுக்கு மேல் தலைநீட்டிக் கொண்டு வளரும் மரக்கிளைகளைக் கூட நாங்கள் வெட்டி வீசவில்லை. கொழுந்துகளையும் கொம்புகளையும் மட்டும் கத்தரித்து சீர்படுத்துவோம். கூரைக்கு மேல் அமைந்த அந்த வெளி எங்களுக்கு வாய்த்த நிறைவான ஆகாய பூங்கா என நினைத்துக் கொள்வோம்.
இச்சிறிய நிறுவனத்தின் இடமும் வலமும் அமைந்த இரண்டு அண்டை கட்டடக்காரர்களும் அந்த மொட்டை மாடியைப் பங்கிட்டுக் கொள்வதோடு அது தரும் அமைதியால் பயனும் அடைந்தார்கள். எங்களின் வலது பக்க கட்டடத்தில் இருப்பவர், மொட்டை மாடியில் அவருக்குச் சொந்தமான இடத்தில் ஒரு ஹைட்ரோ போனிக் காய்கறி தோட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். சிறப்பு உர கரைசல் கலக்கப்பட்ட தெளிந்த நீர் தேங்கியிருக்கும் சின்டேடிக் தொட்டிகள், நிழலில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். தாவரங்கள் நிலத்தைத் தொடாமலேயே, முலைவிட்டு இலை பரப்பி செழித்து வளர ஏதுவாக துவாரங்கள் இட்ட மூடிகளால் அத்தொட்டிகள் மூடப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு முறையும் மொட்டை மாடியில் சந்தித்துக் கொள்ளும்போது அந்த வலதுபுற கட்டடக்காரர் தாராளமாகப் புன்னகைக்க தவறியதில்லை. இளைஞர். நேர்த்தியான தோற்றம் கொண்டவர். ஆனால் சட்ட நிறுவனம் ஒன்றுடன் செயற்கை நுண்ணறிவு செயலி வடிவமைப்பு நிறுவனத்தையும் எனது சிறிய நிறுவனத்திற்குப் பக்கத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார் என்ற தகுதியைக் காட்டிக் கொள்ளாமல் மிக எளிமையாக இருப்பதாக சில நேரங்களில் எனக்குத் தோன்றும்.
நட்பாகப் பேசுவார். ஆனால் உரையாடலில் தொடர்பற்ற தகவல்களுக்குத் தாவி தாவி செல்வதைப் பலமுறை கவனித்துள்ளேன். அவருடன் பழகியதில், தரவுகள், எண்கள், நிரலாக்கம் போன்றவை முக்கிய பங்குவகிக்கும் நுட்ப கல்வியில் அவர் தகுதியான கல்வி பின்னணி கொண்டவர் என்பதை அறிந்து கொண்டேன்.
சில நேரங்களில், அவர் தன் பயிர்களை அறுவடை செய்யும்போது, மொட்டை மாடியில் எல்லை அமைக்கும் தொடை உயர தடுப்பு சுவரைக் கடந்து எனக்கும் சில காய்கறிகளைக் கொடுப்பதுண்டு. அவை பெரும்பாலும் மிதமான குளிரில் வளரும், அளரி, முட்டைகோஸ், அஸ்பரகுஸ் போன்ற கீரை வகைகளும், பாசில், ரோஸ்மேரி, தைம் போன்ற மூலிகை வகைகளுமாக இருக்கும். பெருநகர் வெப்ப சீதோஷண நிலையில் அவை செழித்து வளர்வதுதான் வியப்பு.
இதில் விஷேசம் என்னவென்றால், எங்கள் இடது புற குடியிருப்பாளரும், மொட்டை மாடியை இதே போன்றுதான் பயன்படுத்தினார். ஆனால் சட்ட வல்லுனரைப் போல் அல்லாமல், இவர் நீள் சதுர களிமண் பூச்சாடிகளில் செம்மண்ணும் தோட்டமண்ணும் கலந்த கலவையில் இயற்கை உரத்தைக் கலந்து நிரப்புவார். பிறகு அதில் கடுகு விதைகள், வெண்டைக்காய், கங்கோங் குச்சிகள், பச்சை மிளகாய், மஞ்சள் , கத்தரிக் கன்றுகள் போன்ற செடிகளை நட்டு தினமும் அக்கறையுடன் கவனிப்பார்.
இடது பக்க குடியிருப்பாளர், ஒரு பழம்பொருள் காட்சி கூடத்தை, குறிப்பாக பண்பாட்டு கலைப்பொருள் சேமிக்கும் கூடத்தை நிர்வகித்து வந்தார். அந்தக் கலைக்கூடம், மிக நீண்ட காலமாக, இந்தக் கட்டட வரிசை கட்டப்படும் முன்பிருந்தே, இயங்கி வருகின்றது. நானும் என் உதவியாளரும் இந்த இடத்தைக் கண்ணோட்டமிட வந்த போதே அந்தக் கலைக்கூடம் மிகச்சிறப்பாக இயங்குவதைப் பார்த்தோம். சொல்லப்போனால், இத்தனை ஆண்டுகளில் இந்த வட்டாரத்தில் தாக்குபிடித்து இயங்கும் ஒரே நிறுவனமாகவும் கடையாகவும் அது ஒன்றே இருக்கின்றது.
அதன் உரிமையாளர் பாதி வயதைக் கடந்துவிட்டார். என்றாலும், பண்பாட்டிலும் மரபுகளிலும் தீராத காதல் கொண்டதாலோ என்னவோ இன்றும் ஆற்றல் குன்றாமலே இருக்கின்றார். ஆகவே, வியாபாரம் செய்வதோடல்லாமல், அந்தப் பழம்பொருள் கலைக்கூடத்தைத் தன் சேகரிப்பில் இருக்கும் அரியவகை பொருட்களைக் காட்சிபடுத்தவும், இன்றைய கலை நுட்பங்களின் ஆதாரமாக இருக்கும், பண்டைய மக்களின் நுண்திறன்களைப் பற்றிய தனது தீவிர ஆய்வுகளை விரிவுபடுத்தவும், கூரிய பார்வையை முன்வைப்பதற்கான மையமாகவும் பயன்படுத்தி வந்தார்.
அவர்களின் செயல்பாடு எதுவாக இருந்தாலும், எங்களின் சின்னஞ்சிறிய ஆகாயப்பூங்காவை முழுமை படுத்தியதற்காக, அந்தத் தனித்துவமிக்க இரண்டு அண்டை குடியிருப்பாளர்களுக்கு நானும் என் உதவியாளரும் நன்றிக் கடன் பட்டிருப்பதாக நிம்மதி கொண்டிருந்தோம். அனால், அந்தச் செயலி வடிவமைப்பாளர் ஒரு நாள் எங்களுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, எங்களால் நிறைவேற்ற இயலாத ஒரு வேண்டுகோளை முன்வைத்த பின்னர் முன்னர் இருந்த நிம்மதி முற்றாக குழைந்தது.
அவர் ஒரு பசுமை இல்லம் அமைக்கத் திட்டமிட்டிருந்தார்.
அந்தச் செயலி வடிவமைப்பாளர் மிகுந்த மனவெழுச்சியுடன் பேசியதால் எங்களால் இடைமறிக்க முடியவில்லை. அவர் தன் தோட்டத்தின் அளவை விரிவுபடுத்தி காய்கறிகளின் வகைகளையும் அதிகரிக்க நினைத்தார். தற்போது அவர் பயிர் செய்யும் காய்கறிகள் வெப்ப மண்டல காலநிலைக்கு ஏற்ப வெகு சிறப்பாக தங்களைப் பொருத்திக் கொண்டிருந்தன.
ஆனால் அவர், நான்கு பருவகால பிரதேசங்களைப் போன்ற சீதோஷண நிலையும், ஈரப்பதமும், மிதமான குளிரும் தேவைப்படும் சில புதிய வகை தாவரங்களைப் பயிர் செய்ய முடிவெடுத்திருந்தார். இணையத்தில் அவர் பகிரும் குளிர் பிரதேச காய்கறிகளின் படங்களைப் பார்த்து அவற்றால் ஈர்க்கப்பட்டு அவரைத் பின்தொடரும் இணைய நட்பு வட்டங்கள் அதிகம். மேலும் அந்த வகை காய்கறிகளுக்கு, நகர்புறவாழ்வில் மூழ்கிக்கிடக்கும் இளைய சமூகத்தினரிடையே நல்ல வரவேற்பு உருவாகியிருந்தது.
இருந்தபோதும், அந்த வழக்கறிஞர் நிறுவன மொட்டை மாடி மறைவின்றி திறந்தே கிடந்தது. ஆகவே அந்தச் செயலி வடிவமைப்பாளருக்குத் தனது கனவு தாவரங்களின் பொருட்டு, நிழலான இடம் தேவைப்பட்டது. தனது பசுமை இல்லம், வெறும் இரும்பு கிராதிகளாலும் ஒளி ஊடுருவும் நெகிழி திரைகளாலும் ஆனதாக அல்லாமல், கூரையும் சுற்று சுவர்களும் கண்ணாடியால் ஆனதாக, ஆறடி உயரத்துக்கும் மேல் இருக்க வேண்டும் என்ற திட்டம் அவருக்கு இருந்தது. மேலும், தாவரவியல் பூங்காக்களில் காணப்படும் பசுமை இல்லங்கள் போல, அது மொட்டை மாடி முழுவதையும் ஆக்கிரமிக்கும் அளவு பெரியதாக, சரியான காற்றோட்டமும் நீரோட்டமும் உள்ளதாக இருக்க வேண்டும் என விரும்பினார்.
அவரின் கோரிக்கை அடிப்படையில் ஏற்பானதாக இருந்ததோடு எங்கள் நிறுவனத்தின் தொழில் விருத்திக்கு ஒரு வாய்ப்பாகவும் இருந்தது. ஆனால் எனது உதவியாளர் தனது ஒவ்வாமையை மறைக்க விரும்பவில்லை. அவர் எச்சரிக்கை போல சொன்னார் ”ஐயா, நமது நிறுவனம் வீடுகளை திருத்தியமைக்கும் பணிகளை மட்டும்தான் செய்து வருகின்றது. புதிய வீடுகளை, அது காய்கறிகளுக்கான வீடாக இருதாலும், நாம் கட்டுவதில்லை”. எனக்கு வாய்த்த இந்த உதவியாளரின் விசுவாசம் வியப்பளிக்ககூடியது என்பதோடு, அவர் முன்வைக்கும் கருத்துகளும் அலட்சியப்படுத்த முடியாதவை. ஆனால் அவர் வாய்திறப்பதற்கு முன்பாகவே அவர் சிந்தனையில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. காரணம் அதே சிந்தனைதான் என் ஆள் மனதையும் அரித்துக் கொண்டிருந்தது.
நாங்கள் எங்கள் புதிய நிறுவனத்தை அமைத்து, புதுப்பித்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, இக்கட்டத்தைச் சுற்றிலும் காற்றின் திசைகள், சூரியனின் இருப்பு போன்ற விபரங்களைத் ஆராய்ந்தறிந்த பழைய தகவல்களை இன்னும் மறக்கவில்லை என்றாலும், அந்தத் தரவுகளை மீண்டும் தேடி எடுத்து ஆராய்தேன். செயலி வடிவமைப்பாளரின் காய்கறி தோட்டம் கிழக்கு திசையிலும், பழம்பொருள் சேகரிப்பாளரின் தோட்டம் மேற்கு திசையிலும் அமைந்திருப்பதை உறுதி செய்து கொண்டேன்.

ஒவ்வொரு நாள் காலையும் சூரிய ஒளி, இரு தோட்டங்களுக்கும் சம நீதியுடன் தன் கொடையை வழங்கியபடி, வலது புறமிருந்து இடது புறமாக நகரும். மேலும், சில சமயங்களில் இரண்டு தோட்டங்களுக்கும் நடுவில் அமர்ந்து காப்பி குடித்தபடி அன்றைய பரபரப்பான நாளை தொடங்க காத்திருக்கும். எனக்கும் அதன் சாரல் பட்டுச் செல்வதைக் கவனித்துள்ளேன். ஆகவே செயலி வடிவமைப்பாளரின் லட்சிய திட்டமான பசுமை இல்லம் இந்த இசைவை நிச்சயம் சீர்குழைக்கும். பசுமை இல்லம், தன் பிரம்மாண்ட உருவத்தால், சூரிய ஒளி படருவதைத் தடுப்பதோடல்லாமல், இயற்கை சத்துகள் அனைத்தையும், வழக்குறைஞரின், குளிர் பிரதேச காய்கறிகளின் நன்மைக்காக மட்டுமே உரிஞ்சிக் கொண்டுவிடும்.
ஆகவே, நான் அந்தச் செயலி வடிவமைப்பாளரையும் பழம்பொருள் சேகரிப்பாளரையும் எங்கள் நிறுவனத்தில் சந்திக்கச் செய்யலாம் என முடிவெடுத்தேன். ஆனால் நான் எந்தச் சார்பும் அற்றவனாக இருந்துவிட முடியாது. காரணம், எவ்வித சூழலிலும் நான் ஒரு தரப்பைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்றே போதிக்கப்பட்டிருந்தேன். அது நிச்சயமாக அழியா பேருண்மையின் தரப்பாக இருக்க வேண்டும்.
இருவருமே சந்திப்புக்கு மலர்ந்த முகத்துடன் வந்திருந்தனர். சுவைபானங்களைக் குடித்து, தின்பண்டங்களைச் சுவைத்து முடித்து பல கதை அளப்புகளுக்குப் பின் நான் அந்தச் சந்திப்பின் நோக்கம் குறித்து மெல்ல பேசத் தொடங்கியதும் இருவரின் முகமும் மாறின.
”அது என் உரிமை,” செயலி வடிவமைப்பாளர் அடித்துப் பேசினார்.
”இயற்கை வளங்களைப் பெறுவது அனைவரின் உரிமை,” நான் இயன்ற அளவு மென்மையாக இடைமறித்தேன். எங்களின் முன்னைய அரட்டையும் கெக்களிப்பும் முற்றாக மறைந்து எங்கிருந்தோ ஊடுருவிய இறுக்கம் நிறைந்தது. நான் பழம்பொருள் சேகரிப்பாளரைப் பார்த்தேன். மத்திம வயதைக் கடந்த அவர் எதையும் சொல்ல விரும்பாதவர் போல இருந்தார். ஆனால் அவர் கண்களில் கடும் கசப்பு ஊருவதை என்னால் உணர முடிந்தது. அவர் ஆழமாக பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.
இந்தக் கட்டட வரிசையின் ஆக முன்னோடி குடியிருப்பாளர் என்றாலும், அந்தப் பழம்பொருள் சேகரிப்பாளார், அவரின் அண்டை குடியிருப்பாளராக பின்னார் மாறிய எங்கள் சுதந்திரத்தில் ஒருபோதும் தலையிட்டதில்லை. மாறாக எங்கள் வருகையை அவர் முழு மனதுடன் வரவேற்றார். அந்தப் புதிய சூழலை நாங்கள் பழகிக் கொள்ள அவரே துணையாக இருந்தார். எல்லா சூழல்களிலும் அவர் முன்வந்து செய்த உதவிகள் வெற்று பாவனையாக இல்லாமல், முழு மனதுடன் எங்களைச் சககுடியிருப்பாளராக ஏற்றுக் கொண்டு விரும்பி செய்தனவாக இருந்தன. அமைதியான அந்தச் சமூக சூழல் அக்கட்டடத் தொகுதியின் மதிப்பை உயர்த்தியதோடு பல புதிய தொழில் முனைவர்கள் அங்கே தங்கள் நிறுவனத்தையும் கடைகளையும் தொடங்க வழியமைத்தது.
முன்பொருநாள் மாலையில், அவரை மொட்டை மாடியில் சந்தித்துக் கொண்டபோது, நான் எதார்தமாக, புதியவர்கள் பலர் அங்கே குடியேறி மெல்ல மெல்ல அந்த இடத்தைத் தன்வசம் செய்து கொண்டிருப்பதால் அவருக்கு அசௌகரியமோ அச்சமோ எழுந்ததுண்டா எனக் கேட்டேன். “ஒரு நாள் இவ்விடத்தை முழுதும் ஆக்கிரமித்து உங்களை இங்கிருந்து துரத்தக்கூடும் என அச்சம் எழுந்ததுண்டா?” என்றேன்.
அந்தப் பழம்பொருள் சேகரிப்பாளர் என் கேள்விக்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் சிரிப்பையே பதிலாகத் தந்தார். ஒருவேளை அது போன்ற சந்தர்ப்பம் இணக்கப்போக்கு மிக்க அவரின் கலங்கமற்ற சிந்தனையில் தோன்றாமல் இருக்கலாம். நான் தொடர்ந்து என் சந்தேகங்களைக் கேட்கலாம் என நினைத்தேன். ஆனால் சூரியன் மேல்வானத்தைத் தொட்டுவிட்டதால் எங்கள் உரையாடல் தடைபட்டுவிட்டது.
”இது உரிமை பிரச்சனை அல்ல, தேவை சார்ந்த பிர்ச்சனை.” செயலி வடிவமைப்பாளர் சட்டென தன் நிலைபாட்டை மாற்றிக் கொண்டார். அவர் தன் கருத்தை வேறு கோணத்தில் முன்வைக்க முயல்வதை அவர் கண்களின் அசைவுகள் காட்டின. ஆனாலும் இளைஞர் அல்லவா, தன் வாதத்தைத் தொடரவே செய்தார்.
”கம்பத்து காய்கறிகளுக்குச் சந்தையில் மதிப்பு இல்லை. இப்போது யாருமே அந்தக் காய்கறிகளை விரும்பி உண்பதில்லை. அவற்றை வளர்ப்பதும் சிரமம், அங்கும் இங்கும் படர்ந்து செல்லும். தோட்டம் போட நிலம் வேண்டும். அழுக்கு பிடித்த வேலை. தாவரம் செழிப்பாக வளர இயற்கை உரம் தேவை. அது துர்நாற்றம் அடிக்கும்.
மாறாக, நான் பயிர் செய்யும் தாவரங்களும் பயிர் செய்யப் போகின்றவையும் எல்லாவகையிலும் மிக சுத்தமாகவும் எல்லா கோணத்திலும் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டதாகவும் இருக்கும். அதனால்தான் எனக்கு நவீன தொழில்நுட்பமும் மின்னியல் கண்காணிப்பு முறைகளும் கொண்ட ஒரு பசுமை வீடு தேவைப்படுகின்றது. தினம் மாறும் வானிலையின் பாதிப்பிலிருந்து விடுபட்ட சம தரம் கொண்ட காய்கறிகளாக அவை இருக்கும்.
ஆகவே அவை அனைத்துலக உணவு தர நிபுணர்கள் சொல்லும் ‘சூப்பர்ஃபூட்’ தரத்தில் அதீத சத்து நிறைந்த உணவாக இருக்கும். இவை இன்றும் நாளையும் மிக முக்கிய காய்கறிகள். உண்மையில் இன்று நான் முயன்றுகொண்டிருக்கும் விவசாய முறையில், வெகுதூரம் பின்தங்கி இருக்கின்றேன். ஆகவே நான் என் விவசாய முறையைப் புரட்சிகரமாக மாற்ற தொடங்காவிடில் தொடர்ந்து பின் தங்கிவிடுவேன்.”
அப்போது, நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்த அறை சுருங்கிவிட்டதாக எனக்குத் தோன்றியது. காட்சிகள் ஒரு நொடி பிரகாசித்தன. எங்கோ ஆழத்திலிருந்து எழுந்து வரும் புயலால் என் மனம் கொந்தளித்தது. ஆனால், நெருப்பை நெருப்பு கொண்டு அணைக்க முடியாது என்பதும் எனக்குப் போதிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றது இறுதியில் சாம்பலாகவே எஞ்சும். தோல்வி கண்டதும் கரித் துண்டுகளாக மாறும். நல்ல வேளை. அந்தத் தெளிவு என்னைக் கட்டுப்படுத்தியது.
பழம்பொருள் சேகரிப்பாளர் நிதானமாகக் கேட்டார், ”நீங்கள் எதிலிருந்து பின் தங்கி விடுவீர்கள் என அஞ்சுகிறீர்கள் என நான் தெரிந்து கொள்ளலாமா? அதே போல யாருக்கு பின்னால் இருக்க வேண்டிவரும் என தயங்குகிறீர்கள் என்பதையும் விளக்க முடியுமா?”
செயலி வடிவமைப்பாளர் திடுக்கிட்டார். அந்தக் கேள்விகளை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் போலும். பழம்பொருள் சேமிப்பாளர் நிதானமாக தன் பேச்சைத் தொடர்ந்தார்.
”ஐயா, சத்துள்ள காய்கறிகள் என ஆராய்ந்தால், என் தோட்டத்தில் விளைபவை உங்கள் தோட்டத்து காய்கறிகளைவிட எந்த வகையிலும் குறைந்தவை அல்ல. அவற்றில் அதிக ஊட்டசத்துகள் உள்ளன. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற சிறப்பு கூறுகள் இருப்பதால் அரியவகை தாவரங்களாக அவை அடையாளப்படுத்தப்பட்டுள்ள. மேலும், நோயின்றி இளமையுடன் நீண்டநாள் வாழ பல நூற்றாண்டுகளாக நம் மூதாதைகளின் ரகசிய சூத்திரமாக இவை பயன்படுகின்றன.
ஐயா நீங்கள் மண்ணைப் பயன்படுத்தும் விவசாய முறையை, பழங்கால வழக்கம் என்றும், அதிக பயன் தராத, இன்றைய காலத்திற்குப் பொருந்தாத முறை என்றும் விமர்சனம் செய்கிறீர்கள். உண்மையில் காய்கறிகளை மாற்று முறைகளில் நடவு செய்வதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் அது என் தேர்வு என்பது மட்டும்தான் என் கருத்து.
மண்ணில் விவசாயம் செய்வது சிக்கனமானது. நான் பயன்படுத்தும் மண்ணை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும், அதனால் ஒரு பயிரை அறுவடை செய்த பின்னர் அதே மண்ணில் புதிய செடிகளை நட முடியும். விதைக்கும் போதும், எறுவிடும் போதும், பாதுகாக்கும் போதும், நானும் மண் கட்டிகளிலிருந்து வந்தவன்தான் என்பதை நினைவூட்டுகின்றன.
ஒவ்வொரு முறையும் மண்ணில் எறுவை கலக்கும் போது, என் உடலும் ஒரு நாள் இப்படிதான் இறுதியாக, எலும்பிலிருந்து உதிர்ந்த சதைகளைப் புழு பூச்சிகள் மென்று செரித்து, மண்ணில் கலக்கும் என்பதை நினைத்துக் கொள்கிறேன். முடிவில் நானும் எறுவாவேன்.”
அமைதி. செயலி வடிவமைப்பாளர் அமர முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். ஒருவேளை, பழம்பொருள் சேகரிப்பாளரின் அந்த நீண்ட விளக்கம், செயலி வடிவமைப்பாளரின் கவனத்தைச் சிதரடித்திருக்கலாம். அதன் பின் நாங்கள், எந்த முடிவும் எடுக்காமலே அன்றைய சந்திப்பை முடித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தோம். ஆனால் என் ஆழ்மனதில், செயலி வடிவமைப்பாளரின் கோரிக்கையை ஏற்பதில்லை என முடிவு செய்து கொண்டேன்.
சில நாட்களுக்குப் பிறகு, என் உதவியாளர் பரபரப்பாக என் அலுவலகத்துக்குள் நுழைந்தார். மேல் மூச்சு வாங்க, நாங்கள் அஞ்சிய ஒரு தகவலைச் சொன்னார். வரைந்து கொண்டிருந்த வரைபடங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு வேகமாக மொட்டை மாடிக்கு ஓடினேன்.
எங்கள் வலது புறத்தில், ஒரு தொழிலாளர் குழுவினர் தரையை அளவெடுத்துக் கொண்டிருக்க இன்னொரு குழுவினர் வேலை செய்ய தேவையான பொருட்களைக் கொண்டுவந்து அடுக்கிக் கொண்டிருந்தனர். அறுவடை முடிந்த ஹைட்ரோ போனிக் தொட்டிகள் ஓரமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அந்தத் தொழிலாளர்கள் அணிந்திருந்த சீருடை பாக்கேட்டில் தெரிந்த சின்னம் எனக்கு மிகவும் பரிட்சையமானது. இந்த வட்டாரத்துக்கு வெளியே இயங்கும் பிரபல கட்டட வடிவமைப்பு நிறுவனத்தின் சின்னம் அது. செயலி வடிவமைப்பாளர் அந்த நிறுவனத்தைத் தனது லட்சிய பசுமை இல்லத்தை நிர்மானிக்க பணித்திருந்தார்.
நான் வலதுபக்க மதிலுக்குச் சற்று தள்ளி நின்று, இடது புற சுவரைத்தாண்டி நோட்டம் விட்டேன். பழம்பொருள் சேகரிப்பாளரும் கவனித்துக் கொண்டிருந்தார். எங்கள் பார்வைச் சந்தித்துக் கொண்டது. அவர் முந்திக் கொண்டு புன்னகைத்தார். ஆனால் அவர் புன்னகையில் ஆழ்ந்த சோகம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. அவர் கைகள் செழித்து வளர்ந்திருந்த கங்கோங்கையும், கத்தரியையும், வெண்டையையும், மிளகாயையும் வருடிக் கொண்டிருந்தன.
அவரை ஆறுதல் படுத்தும் வகையில் ஏதாவது ஒரு சொல் கிடைக்குமா என தேடிக் கொண்டிருந்தேன். வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, இந்தப் போராட்டத்தில் என் ஆதரவு என்றும் உங்களுக்குத்தான் எனச் சொல்லத் தோன்றியது. ஆனால் இப்போது நிலமை எல்லை மீறி போய்விட்டது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
ஆகவே, அவரைத் திரும்பவும் தன் காய்கறிகளுடன் நேரம் செலவழிக்க விட்டுவிட்டு, கூர்ந்து கவனித்த படி நின்றிருந்தேன். மிக கவனமாக, சில வளர்ந்த செடிகளின் அடியில் குழி செய்தார், முற்றிய காய்களைப் பறித்தார். சில நேரங்களில் அவர், தன் காய்கறிகளுடன் குதூகலமான கதைகளைக் கிசுகிசுத்துக் கொண்டிருப்பது போல, மிக உற்சாகமாக தனக்குள் பேசிக்கொள்வதைக் கவனிக்க முடிந்தது.
அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. தன் வாழ்விடத்தில் பல்லாண்டுகளாக பின்பற்றப்பட்ட பண்பாடொன்று, தொடர்ந்து தாக்கப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகள் நடப்பதை, மிக துணிச்சலுடனும் நிமிர்வுடனும் எதிர்கொள்ள அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார்.
எத்தனையோ நாட்கள் எனக்குள் அடக்கிவைத்திருந்த நீண்ட பெருமூச்சொன்று வெளிப்பட்டது. அந்தத் திறந்த வெளியை விட்டு மெல்ல வெளியேறினேன்.
நானும் அதே நிமிர்வை அடைய நினைத்தேன்.
***
மிங்குவான் மலேசியா நாளிதழில் (7 ஜனவரி 20218) வெளிவந்தது. பிறகு, பெரெம்புவான் பாலிங் சூன்ஞி (நூசா சென்டர் 2018) சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றது.
மலாய் மூலம்: ரெபெகா இல்ஹாம்
தமிழில்: அ. பாண்டியன்
