படகு

சில நாட்களாகவே நான் மிகாலை கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். அறை சுவரில் மாட்டியுள்ள சீன லூனார் நாள்காட்டி தாள்களை ஒவ்வொரு முறையும் நான் கிழித்ததை வைத்துப் பார்த்தால் ஏறக்குறைய 2 மாதங்களாக என்னுடைய பார்வை முழுவதும் மிகால் மேல்தான் பதிந்துள்ளது. ஒவ்வொரு முறையும் நாள்காட்டி தாள்களின் எண்ணிக்கை குறைய குறைய நான் மிகாலை நேருக்கு நேர் சந்திக்கக்  காத்திருந்த பொறுமையும் தேய்ந்து கொண்டே வந்தது.

ஒவ்வொருநாள் காலையும் புகையிலை தரும் மயக்கத்தில் திளைந்தபடி ருவாயில் வேண்டுமென்றே அமர்ந்திருப்பேன். மிக்காலின் அறைக்கு எதிரிலுள்ள ருவாய் என் அறையின் ருவாயிலிருந்து பத்து கதவு தூரம்தான் இருக்கும்.   அதிகாலையில் பள்ளிக்குச் செல்லும் முன் பள்ளி காலணிகளை அணிந்து செல்லும் 12 வயது, மிக்காலின் உருவத்தைத் தெளிவாகவே பார்க்க முடியும். சில நேரங்களில் அவனின் அம்மா கதவின் ஓரம் நின்று அவன் பள்ளிக்குக் கிளம்பிச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

அத்தருணத்தில் அவனின் தாய் எதையோ சொல்வார். ஆனால், அச்சொற்கள் எதையும் என்னால் தெளிவாகக் கேட்க இயன்றதில்லை. அப்போதெல்லாம் மிகால் தன் தாயின் சொல் பேச்சைக் கேட்பதில் இணக்கம் காட்டுகின்றான் என்பதனை அவனின் தலையசைவிலிருந்தே அறிந்துகொள்ள முடிந்தது. சிறிது நேரம் கழித்து, தன் தாயின் சொற்கள் அனைத்தும் துச்சமானவை என்பது போல மிகுந்த கர்வத்தோடு நடைபோட்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்வான்.

சில சமயங்களில், அடுப்பறையில் வேலை செய்துகொண்டிருக்கும் தன் தாயிடம் வெளியே செல்வதைச் சொல்லிக்கொண்டு செல்லும் அவனுடைய உரத்தக் குரலை என்னுடைய ருவாயிலிருந்து நான் கேட்டதுண்டு. ஏன் கேட்காது? அப்படிப்பட்ட குரல் அவனுடையது. நல்ல கணீரென்ற குரல். எங்களுடைய நீண்ட வீட்டில் உள்ள சிறார்களை விட மிகால் உயரமாகவும் வலிமையான உடல் வாகுவையும் கொண்டிருக்கின்றான். அவனுடைய உயரத்திற்கும், வலிமையான உடல் வாகுவிற்கும் ஏற்ற குரல்தான் அவனுக்கு.

என்னைப் பொறுத்தவரையில் மிகாலின் உடல் அமைப்பு 12 வயதுக்குறிய சிறுவனுக்குரியது அல்ல.  ஒரு வேலை மிகால் தாமதமாக முதலாம் ஆண்டு பதிந்திருக்கக் கூடுமோ? ஆனால், அவனின் தந்தை மிகாலின் பிறந்த தினமும் இப்போது 12 வயதாகும் எங்களின் துவாய் ரூமாவின் பிள்ளை பிறந்த தினமும் ஒரே ஆண்டு என்று கூறுவார். மிகாலின் வயது குறித்த சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள அங்குள்ள பலர் துவாய் ரூமாவிடமே நேரடியாகக் கேள்விகளை எழுப்பியதுண்டு. துவாய் ரூமாகூட மிகாலுக்கும் தனது மகனுக்கும் ஒரே வயது என்றுதான் சொன்னார்.

அப்படியென்றால் மிகால் தன் தந்தையைப் போல் உயரமாகவும் வலிமையான உடல் அமைப்பு கொண்டவனாகவும் இருக்கக்கூடும் என அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டனர். மிகாலை போல் அவனின் தந்தையும் உடல், நடை, பாவனை, குரல் என அனைத்திலும் அவனை ஒத்தே இருந்தார். மிகாலின் தந்தை தூரமாக வேலைக்குச் செல்லக் கூடியவர் என்பதால் நான் அவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. அவர் வருடத்தில் நான்கு முறை அல்லது இரண்டு முறைதான் வீட்டிற்கே வருவார்.

நாங்கள் வசிக்கும் நீண்ட வீட்டிலிருந்து பள்ளி மிக அருகில்தான் அமைந்துள்ளது. 15 குதிரை ஆற்றல் கொண்ட எஞ்சின் பொருத்திய படகில் சென்றால் வெறும் 10 நிமிடத்திலே பள்ளியை அடைந்துவிடலாம். ஒவ்வொரு நாளும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லவும் மீண்டும் அவர்களைப் பள்ளி முடிந்து வீட்டில் வந்து விடவும் ஒரு படகு எங்கள் நீண்ட வீட்டில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை பொழுதில் மிகாலை கவனிப்பது போலவே மீண்டும் மதியம் மற்ற பிள்ளைகளோடு இல்லம் திரும்பும் அவனை நான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன்.

தற்பொழுது நான் ஒரு நீண்ட படகை என் கைப்பட உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன். சூரியன் உதித்தது முதல் அந்தி சாயும் வரை என் முழு பொழுதையும் ஆற்றங்கரையிலேயே கழித்துவிடுகின்றேன். ஆற்றோரத்தில் காற்றோட்டமான கூடாரம் ஒன்றை படகு கட்டுவதற்கான பட்டறையாக உருவாக்கி வைத்திருக்கின்றேன். உண்மையில் சொல்லப்போனால், நான் மட்டுமல்ல எங்கள் நீண்ட வீட்டில்  உள்ள பெரும்பாலானோர் இப்படிப்பட்ட கூடாரங்களை உருவாக்கி வைத்துள்ளனர். வலைகளை உலரவிடுவதற்கும், பயன்படுத்தப்படாமல் இருக்கும் படகையும் பழைய பொருட்களையும் வைக்கவும் இவ்விடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பள்ளி முடிந்து பிள்ளைகளை ஏற்றி வரும் படகின் இயந்திரச் சத்தம் கேட்டவுடனே நான் படகு செய்வதை நிறுத்திவிட்டு, கொண்டு வந்த உணவைச் சுவைக்கத் தொடங்கிவிடுவேன். அதே நேரம் என் கவனம் முழுவதும் மிகாலின் மீதே குவிந்திருக்கும்.  இதுநாள் வரையில் மிகால் தனது புத்தகப்பையைச் சுயமாக சுமந்து செல்வதை நான் கண்டதேயில்லை. அவனைவிட சிறிய தோற்றம் கொண்ட பிள்ளைகளைத்தான் தன்னுடைய கனமான புத்தகப்பையைச் சுமக்கச் சொல்லிக் கட்டளையிடுவான். அவன் ஆறாம் ஆண்டு மாணவன் என்பதனால் அவனின் புத்தகப்பையில் அதிக நூல்கள் இருப்பதாக எனக்குத் தோன்றும்.

சிறிய உருவம் கொண்ட அந்த நண்பன் முதுகு வளைய மிகாலின் பையைச் சுமந்து செல்வான்.  மிகால் வழக்கம் போல கர்வத்துடன் முரட்டுத்தனமாக நடை பயில்வான்.

இன்று மிகால் சில கற்களை அவனின் புத்தகப்பையில் போட்டு  அந்தப் பையைப் பிற பிள்ளைகளிடம் கொடுத்து சுமக்க வைப்பதை .நானே என் கண்பட கண்டேன். அதை சுமக்க மறுத்த சிறுவனை மிகால் அதட்டி கீழே தள்ளிவிட்டான். அச்சிறுவன் கிட்டத்தட்ட பாலத்தின் கீழே வீழ்ந்திருப்பான். நல்ல வேலை அச்சிறுவர்களை அழைத்துச் செல்லும் படகு ஓட்டியான முதியவர், அவர்களின் சண்டையில் தலையிட்டு மிகாலை கட்டுபட்டுத்தினார். இல்லையேல் மிகால் தள்ளிவிட்டதோடு நிறுத்தியிருக்க மாட்டான்.

மிகாலின் இந்த முரட்டுத்தனமான நடத்தை எங்கள் நீண்ட வீட்டில் இருப்பவர்களுக்குப் புதியதல்ல. இதனால்தான் மிகாலை கண்டால் நீண்ட வீட்டில் வாழும் சிறுவர்கள் அஞ்சுகின்றனர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அச்சிறுவர்கள் அவனிடமிருந்து விலகிக் கொள்வது ஒரு புறமிருக்க அங்குள்ள பெற்றோர்கள்கூட அந்த முரடனிடம் வம்பு செய்துவிடாதீர்கள், நேருக்கு நேர் பார்ப்பதைக் கூட தவிர்த்துவிடுங்கள் என்றே அறிவுறுத்துவர். ஆனால், நான் அதற்கு முரணாகச் செயல்பட எண்ணினேன். எனக்கு மிகாலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால், அவனின் ஒவ்வொரு செயல்களையும் கவனிக்கத் தொடங்கினேன். பிறகு மெல்ல அவனை நெருங்கிவிடுவேன்.

அன்று மாலை, நான் ஆற்றங்கரையில் உள்ள ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டேன். இப்படிப்பட்ட மாலை பொழுதில், எங்கள் நீண்ட வீட்டில் உள்ள சிறுவர்கள் அனைவரும் ஆற்றில் குளித்து விளையாட வருவது வழக்கம். அதில் மிகாலும் அடங்குவான். ஆற்றங்கரை மரக்கிளையில் பிணைக்கப்பட்டிருந்த கப்பல் கயிற்றில் ஆடிக் கொண்டிருந்த சிறுவர்களின் கையிலிருந்து கயிற்றைப் பறித்துக் கொண்டு மிகால் தொங்கியபடி ஆற்றில் குதித்தான். வரிசையில் நின்று விளையாடும் பழக்கம் என்பது அந்த முரட்டுச் சிறுவனின் அகராதியில் என்றுமே இருந்தது இல்லை. மற்றவர்களிடமிருந்து அபகரிப்பதுதான் அவன் வழக்கம். இப்போது மிகால் மட்டும் தன்னந்தனியாகக் கயிற்றில் ஆடியபடி தார்சனை போல் கத்திக் கொண்டிருந்தான். ஆனால், என் கண்களுக்கோ அவன் காட்டிற்கு வரும் சுற்றுப் பயணிகளை வற்புறுத்தி உணவை அபகரிக்கும் குரங்கு போல தெரிந்தான். அந்தக் குரங்குகளாவது பசியால் அவ்வாறு செய்கின்றன. ஆனால் இவனோ மற்றவர்களைத் துன்புறுத்தி அதில் சுகம் காணவே அவ்வாறு செய்கின்றான்.

மிகால் மட்டும் வீடு திரும்பாமல் ஆற்றோரத்தில் சரிந்திருந்த மரத்தின் மேல் தன்னந்தனியாக அமர்ந்திருந்தான். மற்ற பிள்ளைகள் அனைவரும் அந்தி சாயத் தொடங்கியவுடன் வீடு திரும்பிவிட்டனர். மிகால் அவனின் இரு கால்களையும் நீருக்குள் விட்டு ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் பாடுகிறானா, முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றானா எனத் தெரியவில்லை. ஆனால், இதுதான் நான் மிகாலை நெருங்குவதற்கான சரியான சந்தர்ப்பம்.

நான் அவனை நெருங்கி வணக்கம் சொன்னேன். நான் சொன்னது கேட்காதது போல அவன் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. அல்லது கேட்காதது போல பாவனை செய்கிறானா? நான் மீண்டும் முகமன் தெரிவித்தேன். இம்முறை அவனின் தலை என்னைத் திரும்பி நோக்கியது. மேலிருந்து கீழ் வரை என்னை உற்று நோக்கி “பாக் சீக் உங்களுக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டான். என்னுடைய வருகை அவனுக்கு அசௌகரியத்தை உண்டாக்கியதை அவனின் முகமே காட்டிக் கொடுத்தது. “என்ன குளிக்கனுமா?” எனத் தொடர்ந்து கேட்டான்.

நான் இல்லையென்று தலையசைத்துக் கொண்டே புன்னகைத்தேன். அவனிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று சொல்லி என் பேச்சைத் தொடங்கினேன். அதற்கு அவன் “எதைப் பற்றி?” எனக் கேட்டவுடன் நான், “உனக்கு ஒரு வேலையைப் பரிந்துரைக்கின்றேன்,” எனக் கூறினேன். அவன் முகத்தில் படர்ந்திருந்த அசௌகரியம் மெல்ல குழப்பமாக மாறியது. அவனின் நெற்றி சுருங்கியது.

“நீ அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பள்ளிக்குச் செல்லமாட்டாய் என எனக்குத் தெரியும்,” என்று நான் கூறினேன். “அதனால்… உன்னுடைய ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி பாக் சீக் தயாரிக்கும் படகிற்குச் சாயம் பூச உதவலாமே. முடியுமா?”

அவன் தொடர்ந்து கேள்வி எழுப்பினான், “உதவியா? உதவியென்றால் கண்டிப்பாக இலவசம்தானே,” எனக் கூறினான். நான் புன்னகைத்துக் கொண்டேன். அந்த முரட்டு சிறுவன் இவ்வளவு புத்திசாலியாகவும் இருப்பான் என நான் எதிர்பார்க்கவேயில்லை. “கண்டிப்பாக சம்பளம் உண்டு,” என நான் கூறினேன். வேலை செய்யும் நேரத்தைப் பொருட்டு அவனுக்குச் சம்பளம் கொடுப்பதாக நான் வாக்களித்தேன். “ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரிங்கிட் சம்பளம். உன்னுடைய சாப்பாட்டுச் செலவை நான் பார்த்துக் கொள்வேன். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எனக்கு உதவி செய்ய வேண்டும். அதன் பின், நீ சுதந்திரமாக விளையாட செல்லலாம். பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட உனக்கு குறைந்தபட்சம் இந்த இரண்டு  வாரம், பயனுள்ளதாக அமையக்கூடும்,” என நான் கூறினேன்.

அவன் நெற்றி மேலும் சுருங்கியது. “பாக் சீக் உங்களுக்கு எப்படி இந்த விஷயம்…” அவன் பேசி முடிப்பதற்குள் நான் அவனை மறித்து “இந்த நீண்ட வீடு ஒன்றும் பெரிய இடமல்ல. அனைவருக்கும் அனைத்தும் தெரியும்,” எனக் கூறிவிட்டேன். மிகால் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு நின்றான். பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டோம் என்ற அவமானம் அவனிடத்தில் துளிகூட இல்லை.

“ஆனால், என்னுடைய இந்தப் பரிந்துரைக்கு நிபந்தனை உள்ளது,” நான் மேலும் கூறினேன். நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யும் இந்த உடன்படிக்கை ரகசியமாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனை மீறப்பட்டு, ரகசியத்தை வெளியே அவன் கூறினால், சம்பளம் வழங்கப்படாது என நான் கூறிவிட்டேன். அந்த முரட்டுச் சிறுவன் சிறிது நேரம் அமைதி காத்து பின்னர் இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு எப்பொழுது பணியைத் தொடங்கலாம் என வினவினான். நான், “நாளை தொடங்கலாம்” எனச் சொன்னேன். நானும் மிகாலும் கைகளைக் குலுக்கிக் கொண்டோம். இருவரும் ஒன்றிணைந்தோம், என்னுடைய திட்டத்திற்கேற்ப அனைத்தும் நடந்தேறியது.

அன்று இரவு, என்னால் கண்களை அயர்ந்து தூங்க இயலவில்லை. வலது புறம் ஒருக்களித்துக் கொண்டேன். சாயம் தோய்ந்து போன அறையின் சுவரில் என் பார்வைப் பதிந்தது. இடது புறம் திரும்பினேன். என்னுடைய சிறிய படுக்கையறை அகன்றும் அமைதியாகவும் இருந்தாலும் மூச்சை அடைப்பது போல் தோன்றியது. மல்லாந்து படுத்து கூரையை வெறித்தேன். சுவர்களில் மாட்டப்பட்டிருந்த படங்களின் மீது என் பார்வையை அலையவிட்டேன்.

என்னுடைய படம், மறைந்துபோன என் தாய் தந்தையின் படம், என் முன்னாள் மனைவியின் படத்தோடு என்னுடைய ஒரே மகனான ஆயோங் படமும் அங்கிருந்தது. என் கண்களை இறுகி மூடிக் கொள்ள முயன்றேன். ஆனால் இமைகள் மூட மறுத்தன. சற்றுமுன் ஆற்றோரத்தில் நிகழ்ந்த சம்பவம் என் எண்ண அலையை ஆக்கிரமித்துக் கொண்டது. என்னை நானே பொறுமையாக இருக்கும்படி ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். நாளைய தினம் கண்டிப்பாக உதயமாகும், என் பார்வையிலிருந்து மிகால் இனி தூரமாகச் சென்றுவிட முடியாது.

காலை சரியாக 9 மணிக்கு நான் படகு பட்டறையில் இருந்தேன். மிகால் சில நிமிடங்கள் கழித்து வந்தான். அவன் முகமன் கூறினான். நான் அதனை புன்முறுவலோடு வரவேற்றேன். நான் படகு செய்யத் தொடங்கிய முதல் நாளிலிருந்து அவன் என்னைத் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருப்பதாக கூறினான். “ஓ நீ பாக் சீக்-யை வேவு பார்த்தாயா?” நகைச்சுவையாகச் சொல்லிச் சிரித்து வைத்தேன். மிகால் உடனே தலையசைத்து மறுத்தான்.  நான் தயார் செய்து கொண்டிருக்கும் படகு தனக்குப் பிடித்துள்ளது, அழகாக உள்ளது எனக் கூறினான் மிகால். படகு தயாரானவுடன் அவனைப் படகில் அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டான். என் படகில் ஏறக்கூடிய முதல் நபராக அவன் இருக்க வேண்டும் எனவும் எண்ணம் கொண்டிருந்தான். மிகாலுக்கு படகுகளின் மீது ஈர்ப்புள்ளதை அப்பொழுதுதான் நான் அறிந்துகொண்டேன்.

மிகால் எனது படகை நெருங்கி, நான் எந்த நிறத்தைப் படகுக்குப் பயன்படுத்த விரும்புகிறேன் எனக் கேட்டான். “அது உன்னுடைய விருப்பம்.” என்று கூறிவிட்டேன். படகின் வண்ணத் தேர்வை முழுமையாகவே நான் மிகாலிடம் ஒப்படைத்துவிட்டேன். அந்த ஒரு கணத்தில் மிகாலின் முகமே மாறிவிட்டது. முகம் மலர்ந்து உதடு புன்னகையை ஏந்தி நின்றது. அவன் நம்ப முடியாததைப் போல் மீண்டும் “உண்மையாகவா, பாக் சீக்?” எனக் கேட்டான். நான் ஆம் எனத் தலையசைத்தேன். பின்னர், புதிய வண்ணக் கலன்களை அவனிடம் காட்டினேன். “வா, நீயே நிறத்தைத் தேர்ந்தெடு.”  அன்று மிகால் கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஆகிய நிறங்களைத் தேர்ந்தெடுத்தான். அவனின் விருப்பத்திற்கு நான் எந்தவொரு மறுப்பையும் தெரிவிக்கவில்லை. அவனுடைய வண்ணத் தேர்வுகள் எதுவாக இருந்தாலும் அது எனக்கு முக்கியமல்ல. எனக்கு வேண்டியது அவன் என் கண்காணிப்பிலே இருக்க வேண்டும்.

படகிற்குச் சாயம் பூசும் முன், மிகால் படகின் மேல் சில வடிவங்களை வரைய வேண்டி என்னிடம் அனுமதி கேட்டான். நான் மறுப்பேதும் அதற்குத் தெரிவிக்கவில்லை. நான் அவனுக்குத் தேவைப்பட்ட அனைத்து பொருட்களையும் தயார் செய்து கொடுத்தேன். மிகால் ஆர்வத்துடன் காகிதத்தில் வரைந்துகொண்டிருந்தான். நான் வியர்வை அரும்பியிருந்த அவனுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் அவனின் கரங்களைக் கவனித்தேன். இந்தக் கைகள்தானா அந்தச் சின்னஞ்சிறு சிறுவர்களை முரட்டுத்தனமாகத் தள்ளியது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. என் கண்கள் மெல்ல கீழ் நகர்ந்து அவனின் கால்களை நோக்கியது. இந்தக் கால்களா அச்சிறுவர்களைக் கீழே சாய்ந்து அவர்கள் எதிர்க்க முடியாத அளவுக்குப் பந்தாடியது.

அந்தக் கைகள்… என் படகில் ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் அதே கைகள்தான் முன்பொருமுறை ஆயோங்கின் உடலையும் தலையையும் தாக்கின. அதே கால்கள்தான் பள்ளி வளாகத்தில் பலமுறை ஆயோங்கின் வயிற்றில் மிதித்தன; முதுகில் உதைத்தன.  இவையனைத்தையும் ஒரு நொடி நினைக்கும்போது, அந்தக் கைகளும் கால்களும் எனக்குச் சொந்தமான எதையும், ஏன் என் படகைக் கூட தொட தகுதியற்றவையென்றே எனக்குத் தோன்றியது.

“பாக் சீக்… அழகா இருக்கா?” திடீரென மிகால் கேட்டான். என் பார்வையை வேறு பக்கம் வீசி பின்னர் அவன் பக்கம் திரும்பினேன். “பரவாலே… அழகாதான் இருக்கு.” உதட்டில் புன்னகையோடு வரைந்த ஓவியத்தைப் படகின் மீது வைத்து பார்த்தான். அவனுக்கு அளவில்லா திருப்தி. தனது ஓவியத்தைத் தாமே பாராட்டிக் கொள்ளும் அவனின் சொற்கள் என் காதுகளில் விழுந்தன. அவன் எப்போது சாயம் பூசத் தொடங்கலாம் எனக் கேட்டவுடன் மாலையில் தொடங்கலாம் என்றேன். நான் மதிய உணவை எடுத்துவரும் வரை அவனை ஓய்வெடுக்கச் சொன்னேன்.

அன்று மதியம் நான் யாம் பான்சோவுடன் சுட சுட சோற்றைத் தயார் செய்தேன். ஆயோங்கிற்கு மிகவும் பிடித்த உணவு. ஒரு சமயத்தில் என் மகன் அனுபவித்த துயர், பயம், ஏமாற்றத்தின் அடையாளமாக இப்போது அதே உணவை மிகாலுக்கு நான் பரிமாறிக் கொண்டிருக்கின்றேன். ஆக, அந்த மதிய வேளையில் மிகால் என் ‘நினைவுகளை’ வயிறார உண்டான்.  அந்த நினைவுகளுக்கெல்லாம் தான்தான் காரணம் என்பதை அவன் உணரமாட்டான். உணவைச் சுவைத்த பின், அந்த முரடன் ஏப்பம் விட்டு சிரித்தான். என் சமையலைப் புகழ்ந்து தள்ளினான்.  ஆனால் நான் அதை பொருட்படுத்தாமல்  முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். சிறிது நேர ஓய்விற்குப் பிறகு, மிகால் அவனின் வேலைகளைத் தொடங்கினான்.

மிகால் இரண்டாவது நாள் விரைவாகவே வந்துவிட்டான். அவன் வேலையைத் தொடங்க ஆர்வமாக இருந்தான். நான் அவனிடம் அவனின் தாய், தந்தையைப் பற்றி கேட்டேன். தன் அப்பா, அம்மாவிடம் அவன் எதையும் சொல்லவில்லை  என்பதால் என்னைக் கவலைப்படாமல் இருக்கும்படி எனக்கு ஆறுதல் கூறினான். மேலும், அவனின் பெற்றோர்கள் அவன் மீன் பிடிக்கவும் மற்ற நண்பர்களுடன் விளையாட வெளியே செல்கின்றான் என்று நினைத்துக் கொண்டிருப்பதாக அவன் கூறினான். மிகால் பொய் சொல்வதில் வல்லவன்தான்.  அவன் எதையாவது சொல்லிக் கொள்ளட்டும் என நான் தலையை மட்டும் அசைத்து வைத்தேன். மிகால் சட்டைகையை மடித்துக் கொண்டு வண்ணம் பூச அனைத்து பொருட்களையும் தயார் செய்யத் தொடங்கினான். கருப்பு வண்ணத்தைப் படகின் பின்னணி நிறமாக மிகால் தேர்ந்தெடுத்திருந்தான். கருப்பு… அவனின் இருள் நிறைந்த மனதிற்கும்  தன் வயதொத்த நண்பர்களிடம் காட்டும் இரக்கமற்ற குணத்திற்கும் ஏற்ற வண்ணம்தான் என நினைத்துக் கொண்டேன்.

ஸ்டெஃபனி கசொ

நேற்று போலவே இன்றும், மிகால் படகிற்குச் சாயம் பூசும் பொழுது அவனையே கவனித்துக் கொண்டிருக்கும் என் கண்களை என்னால் தடுக்க இயலவில்லை. அவனின் வலது கையைக் கவனித்தேன். நீலநிறத்தில் ரத்தக்கட்டு அடையாளம் தெரிந்தது. கண்டிப்பாக நேற்று இவன் மற்ற குழந்தைகளிடம் விளையாடி வம்பு இழுத்திருப்பான் என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. என் கண்படவே சில காட்சிகளை நான் கண்டுள்ளேன். ருவாயில் சில இளைஞர்களுடன் மிகால் ஒன்றுகூடிக் கிண்டல் அடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பதைப் பார்த்துள்ளேன். மீண்டும் மதியம் உணவோடு நான் சென்றிருந்தேன். இரண்டு முறை உணவைக் கேட்டு சாப்பிடும் அளவிற்கு மிகால் தட்டையே சுத்தமாக வழித்தெடுத்துவிட்டான். அன்று மாலையில், அவன் வீட்டிற்குப் புறப்படும்போது அமைதியாக அவனை நான் பின் தொடர்ந்தேன்.

மிகால் நடையை நிறுத்தினான். நானும் நின்றுவிட்டேன். யாரோ ஓர் இளைஞன் மிகாலின் வழியை மறித்து நின்றான். அவனுடன் இன்னும் மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்கள் கைமுஷ்டிகளை முறுக்கிக் கொண்டு நின்றனர். அவர்களின் பேச்சின் வழி பள்ளியில் மிகாலால் துன்புறுத்தப்பட்ட சிறுவனின் உறவினன்தான் அந்த இளைஞன் என்பது தெளிவானது. மிகாலை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதன் மூலகாரணம் அவன் மற்றவர்களை அடித்துக் காயப்படுத்தியதுதான். மிகால் தன் தவற்றை ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அங்கிருந்த மாணவர்கள் மிகாலின் முரட்டுத் தனத்திற்குச் சாட்சியாக இருந்தனர். சாதாரண லாஸ்டிக்கிற்காக அச்சிறுவனை அடித்து, காலால் உதைத்து துன்புறுத்தியுள்ளான் மிகால்.

தான் பழிதீர்த்துக் கொள்ளப் போவதாகச் சொல்லி அவ்விளைஞன் மிகாலை வழி மறித்திருந்தான். மிகாலும் முதலில் அவனை முரட்டுத்தனத்துடனும் திமிருடனும் எதிர்கொண்டான். ஆனால், அவனுடன் இருந்த நண்பர்களும் தன்னை தாக்கத் தயாராக இருந்ததைப் பார்த்ததும் மிகால் பின்வாங்கினான்.  நான் அச்சம்பவத்தைக் காணும் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்க எண்ணினேன். அந்த இளைஞன் எம்மாதிரியாக மிகாலை பழி வாங்கவுள்ளான்? மிகாலின் கைகளை முறிப்பானா அல்லது அவனின் வயிற்றில் ஏறி மிதிப்பானா? அச்சத்தினால் மிகாலின் சொற்கள் தடுமாறின. அவன் தொடர்ந்து பின்வாங்கியபடி வந்தபோது, அவனுக்குப் பின்னால் நின்றிருந்த என்னை மோதினான்.

அவன் என்னை நோக்கினான். அவனின் கண்கள் தன்னைக் காப்பாற்றச் சொல்லி என்னிடம் இறைஞ்சின. இந்த மிகால் உண்மையில் எப்படிப்பட்டவன்? தன்னைக் காப்பாற்றச் சொல்லி சாடை காட்டத் தெரிந்த அவனால், ஆயோங் போன்ற பிறர் அவனிடம் இறைஞ்சும் அறிகுறியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் மிகாலின் முகத்தை உற்றுக் கவனித்தேன். அவன் சட்டென என் பின்னால் மறைந்து கொண்டான்.

“ஓ இப்பொழுதுதான் பயம் என்றால் என்னவென்று அறிகிறாயா?” என அவ்விளைஞன் மிகாலிடம் கேட்டான். நான் அவர்களைப் பின்வாங்கச் சொன்னேன். மிகாலின் செயலுக்கான தண்டனை அவனுக்குக் கிடைத்துவிட்டது. அவன் பள்ளியிலிருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டுவிட்டான். அதற்கு மேலும் அவர்கள் ஏதாவது செய்ய முயன்றால், நான் அனைத்து நீண்ட வீட்டு குடியிருப்பாளர்களையும் அழைப்பேன். அவர்கள் இச்செயலுக்குத் தண்டனை வழங்குவார்கள். “உன் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கலை மேலும் அதிகரிக்க நீ விரும்பமாட்டாய் என நினைக்கிறேன்,” எனக் கூறினேன்.  அந்த இளைஞன் மௌனம் காத்தான். என் முகத்தைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். மிகாலின் கையின் ஸ்பரிசத்தை என் தோளின் மேல் நான் உணர்ந்தேன். நான் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தேன். அவனது முகம் வெளிறிப்போயிருந்தது. என்னிடம் நன்றி கூறி, அவனது அறையின் தஞ்சு வரைக்கும் என்னை உடன்வரும்படி கேட்டுக் கொண்டான்.

மறுநாள் காலையில், முந்தைய நாள் எதுவும் நடக்காத மாதிரியே நானும் மிகாலும் ஒருவரையொருவர் எதிர்கொண்டோம். நான் அவனின் நிலையைப் பற்றி கேட்கவில்லை, அவனும் நேற்றைய சம்பவத்தைக் குறித்து எதுவும் பேசவில்லை. தன்னைத் தற்காத்துக்கொள்ள இயலாத பயமும் அவமானமும் அவனைப் பற்றிக் கொண்டிருந்தன.

அவன் மட்டும் நேற்று அந்த இளைஞர்களைத் தன்னந்தனியாக எதிர்கொண்டிருந்தால் இன்று நிலவரமே மாறியிருக்கும் என நான் நினைத்துக் கொண்டேன். ஒருவேளை படகு பட்டறையில் அமர்ந்தபடி தன் வெற்றிக்கதையை அவன் ஆணவத்தோடு சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும்.  மிகால் சாயம் பூசும் வேலையைத் தொடர்ந்தான். படகின் பெரும்பகுதியைப் பின்னணி வண்ணம் நிறைத்திருந்தது. அவன் முன்பு வரைந்த ஓவியம் படகின் மேல் ஒட்டப்பட்டிருந்தது. படகின் பின்னணி வண்ணத்தைப் பூசி முடித்த பின், ஒட்டியிருந்த ஓவியம் நீக்கப்பட்டு, காலி இடங்களில் வேறு வண்ணம் பூசப்படும். நான் மிகாலை அங்கே விட்டுவிட்டு மதிய உணவைத் தயார் செய்ய சென்றேன்.

ஆயோங்கின் புகைப்படங்களால் அலங்கரிக்கப்பட்ட அறைசுவரைக் கடந்தபோது, நான் என் நடையை நிறுத்தி அவனின் படங்களைக் கூர்ந்து கவனித்தேன். கண்டிப்பாக ஆயோங் அவனின் அம்மாவுடன் வேறொரு இடத்தில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பான். கண்டிப்பாக அவனுக்கு மீண்டும் இந்த நீண்ட வீட்டிற்கு வர விருப்பமிருக்காது. நேற்று நான் மிகாலை பாதுகாத்தது போல் அவனைப் பாதுகாக்காக்காமல் போனதற்கு ஆயோங் நிச்சயம் என்னை வெறுப்பான். என் இதயம் துண்டு துண்டாக கிழிக்கப்படுவது போல் உணர்ந்தேன். பிறகு தீயில் கருகுவது போல் இருந்தது.

நான் அடுப்பறைக்கு விரைந்தேன். சோற்றுப் பானை மூடியைத் திறந்தேன். அதில் எச்சிலை உமிழ்ந்தேன். அந்தச் சோற்றோடு நான் சமைத்த உணவையும் கொண்டு போய் மிகாலுக்கு பரிமாறினேன். மிகால் தட்டையே வழித்தெடுக்கும் அளவுக்கு உண்டான்.

மிகால் படகிற்குச் சாயம் பூச தினமும் வருவதில்லை. சில நாட்களில் அவன் எங்கிருக்கிறான் என்றே தெரியாது. நான் இதைக் குறித்து கேட்டபோது, அவனின் தந்தை அவனை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்று சொல்லுவான். மிகால் வராத நாட்களில் வேடிக்கை பார்த்துக் கொண்டும் என்  திட்டம் குறித்து சிந்தித்துக் கொண்டும் என் நாட்களைக் கடந்துவிடுவேன். அந்தப் படகைக் கண்டுகொள்வதில்லை.

ஒரு நாள் காலையில், மிகால் படகு செய்யும் பட்டறைக்கு வந்து தன்னை அங்கு ஒளித்து வைத்துக்கொள்ளும்படி கேட்டான். அவன் அன்று படகிற்குச் சாயம் பூச விரும்பினான். ஆனால் அவனின் தந்தை அவனை வெளியே செல்ல விடவில்லை. ஈட்டிக்காரனிடமிருந்து தப்பிக்கிறவனைப் போல், மிகால் அவனை மறைத்து வைக்குமாறு என்னிடம் மன்றாடினான். அவனின் நல்ல நேரம், பட்டறை ஓரத்தில் பழைய ஓட்டை படகொன்றைக் கவிழ்த்துப் போட்டிருந்தேன். நான் அவனை அதற்குக் கீழே மறைந்து கொள்ளச் சொன்னேன். சில நிமிடங்கள் கழித்து, மிகாலின் தந்தை ஆற்றங்கரையை நோக்கிச் சென்றார். அவரின் கண்கள் சுற்றி மேய்ந்தன. ஒரு வினாடி அவரின் பார்வை என் மேல் விழுந்தது. ஆனால்,  வணக்கம் சொல்லவோ ஏதும் கேட்கவோ இல்லை. அவ்வளவும் அகங்காரம். என்னை அவர் அறியாதவர் அல்ல.  

அவனின் தந்தை அங்கிருந்து புறப்பட்டபின் நான் மிகாலை வெளியே  வரச் சொன்னேன். அவன் நிம்மதி பெருமூச்சுவிட்டான், ஏதும் கேட்காமலே அவனின் வேலைகளைச் செய்யத் தொடங்கினான்.

மிகால் மீண்டும் பள்ளிக்குச் செல்ல மூன்று நாட்கள் இருக்கும் போதே, படகின் சாயம் பூசும் வேலை பூர்த்தியடைந்திருந்தது. மிகால் பெருமிதத்திலும் மகிழ்ச்சியிலும் திளைத்திருந்தான். அவனின் ஊதியத்தைப் பற்றிகூட அவன் மறந்துபோயிருந்தான். அது குறித்து நான்தான் அவனுக்கு நினைவூட்டி பணத்தை ஒப்படைத்தேன். அவன் புன்னகையோடு அப்பணத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் பெருமிதத்தில் மிதக்கத் தொடங்கினான். நான் மிகாலின் முகத்தைக் கவனித்தேன். அவனின் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தும் பிரகாசத்துடனும் ஒளிர்ந்தன. முகம் முழுவதும் மகிழ்ச்சி படர்ந்திருந்தது. நானோ, அவனின் மகிழ்ச்சியைச் சுக்கு நூறாக நொறுக்கிவிடத் தவித்துக்கொண்டிருந்தேன்.

முன்பு அவன் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக,இந்தப் புதிய நீள்படகில் முதன் முதலில் சவாரி செய்யும் வாய்ப்பை அவனுக்குத் தருவதாகக் கூறினேன். சற்றும் யோசிக்காமல், அவன் ஆமோதித்தான். நான் காத்திருந்த அத்தருணமும் வந்துவிட்டது.

மிகால் அந்தப் புதிய படகை ஆற்றில் தள்ள எனக்கு உதவி செய்தான்.  நான் எதுவும் சொல்லாமலே அவன் படகில் ஏறி அமர்ந்து கொண்டான். படகு சற்று ஆடியது. படகின் வலிமையைச் சோதிப்பதாகச் சொல்லி அவன்  வேண்டுமென்றே படகை ஆட்டி விளையாடினான். சேட்டைக்காரன்.

மிகால் காத்திருக்கும் தருணத்தில், நான் பட்டறைக்குச் சென்று இயந்திரத்தை எடுத்து வந்து படகில் பொருத்தினேன். இயந்திரத்தை இயக்குவதற்கு முன் மிகாலை படகின் கயிற்றை விடச் சொன்னேன். படகு மெல்ல மிதந்து ஆற்றின் நீரோட்டத்துக்கு எதிராக  செல்லத் தொடங்கியது. படகு இன்னும் தொலைவு செல்வது இன்னும் நல்லது என எனக்குப்பட்டது.

பயணத்தின்போது அவ்வப்போது நான் மிகாலை கவனித்தேன். அரை மணி நேரமாக அந்தப் படகு பயணத்தை ரசித்த வண்ணம் அவன் தன் தலையை இடது, வலது எனத் திருப்பி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு வந்தான். அவ்வப்போது பின் பக்கம் திரும்பிப் புன்னகைத்துக் கொண்டான். காற்றில் சற்றே நீளமான அவனின் கேசம் படபடத்தது.

ஆற்றங்கரை குடியிருப்புகளிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதை உறுதிசெய்த பின், நான் படகை நிறுத்தினேன். ஆழமில்லாத கரையோரத்தில் படகை நெருக்கி, மிகாலை படகின் கயிற்றை மரத்தில் கட்டச் சொல்லி உத்தரவிட்டேன். அவனும் என் கட்டளைக்கிணங்கிச் செயல்பட்டான்.

“அங்கே நில்!” எனக் கட்டளையிட்டேன். மிகால் என் கட்டளையைக் கேட்டு அதிர்ச்சியில் உரைந்துபோனான். நான் இதுநாள் வரையில் அவனிடம் குரலை உயர்த்திப் பேசியதே இல்லை. நானும் மிகாலும் அடர்ந்த காடொன்றின் ஆற்றங்கரையில் நின்றிருந்தோம். பறவைகளின் சத்தம் மட்டுமே அங்குச் சூழ்ந்திருந்தது. மிகால் அங்கே மௌனமாக நின்றுகொண்டிருந்தான்.

நான் மிக முரட்டுத்தனமாக அவனைக் கீழே தள்ளிவிட்டேன். அவனின் மௌனம் குழப்பமாக மாறியது. என் செயலைப் புரிந்துகொள்ள இயலாதாவனாகக் நான் அவனைத் தள்ளிவிட்டதற்கான காரணத்தைக் கேட்டான்.  மீண்டும் எழ முயன்ற அவனை என் காலால் தடுத்தேன். கீழே கிடந்தவனிடம் “கீழே தள்ளிவிட்டவுடன் எப்படி இருந்தது? இதே மாதிரிதானே முன்பு ஆயோங்கிற்கும் நீ செய்தாய்?” எனக் கேட்டேன். மிகால் என் கேள்விகளுக்குப் பதில் கூறவில்லை. தன்னை வீட்டுக்கு அனுப்பும்படி கேட்டு மன்றாடினான். “வாய மூடு! வாய மூடு!” என அதட்டினேன். மிகால்  மீண்டும் மௌனமானான். எழ முயன்றான் ஆனால் நான் என் கால்களால் அவனைத் தடுத்து வைத்திருந்தேன். வேண்டுமென்றே அவன் உடலை அழுத்தி மிதித்தேன். என் கால்களைப் பிடித்துக் கொண்டு வலிப்பதாகச் சொல்லிக் கதறினான் “இதைதான் நீ தினமும் ஆயோங்கிற்கு செய்தாய். அவனின் வயிற்றில் மிதித்தாய். முதுகில் உதைத்தாய். எதற்காக?” என் நெஞ்சு பெருங்கோபத்தில் மேல், கீழ் இறங்கி அசைந்தது.

“உன்னால்தான் இனிமேல் ஆயோங் என்னுடன் இருக்கப்போவதில்லை என்று சொல்லிட்டான். அவனை அவன் அம்மா அழைத்துச் சென்றுவிட்டாள். எல்லாம் உன்னால்தான்! சாத்தானே!” என அவனின் தலையில் மிதித்துக் கொண்டே கூறினேன். மிகால் அழத் தொடங்கினான். வீட்டுக்குத் திரும்ப அனுப்பிவிடும்படி இறைஞ்சினான்.

“மன்றாடுகிறாயா? அதை தயவு செய்து செய்யாதே! ஆயோங்கும் உன்னிடம் அவனை விட்டுவிடச் சொல்லி இப்படித்தானே மன்றாடினான். ஆனால் நீ அவனை என்ன செய்தாய். அவனுக்கு வலியைக் கொடுத்தாய். ஆற்றங்கரையில் அவனைத் தள்ளிவிட்டாய்” என்றேன். அழுகையோடு மிகால் என்னிடம் மீண்டும் கெஞ்சினான். தான் வேண்டுமென்றே ஆயோங்கை தள்ளிவிடவில்லை என்றான். மன்னிப்பும் கேட்டான்.

“வாய மூடு! உன்னுடைய மன்னிப்பு எனக்குத் தேவையில்லை. நீ என்னுடைய ஆயோங்கை என்னிடமிருந்து பறித்துவிட்டாய். அதே வலியைக் கண்டிப்பாக நீயும் உணர வேண்டும்,” நான் என் அடங்கா கோபத்தை மிகாலிடம் காட்ட என்னைச் சுற்றி ஏதும் உள்ளதா என பேய் பிடித்தவன் போல் தேடினேன். நான் பின்னால் திரும்பி படகின் துடுப்பைக் கையிலெடுத்தேன். மிகால் எழ துணிவின்றி இன்னும் அங்கேயே கிடந்தான். வீட்டுக்குச் சென்றுவிட அழுது ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தான்.

என் இதயமும் முகமும் அணலாய் கொதித்தது. அந்நேரத்தில் ஒன்று மட்டும்தான் எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. மிகாலை துன்புறுத்த வேண்டும். அவனுக்கு அது தேவைதான். பழித்தீர்க்க வேண்டும். மீண்டும் அவன் உடலை மிதித்து துடுப்பை உயரமாக வான் நோக்கி தூக்கி அவனின் கழுத்திற்குக் குறி வைத்து… புக்! என் மூச்சு ஏறி இறங்கியது. உடல் வியர்த்துக் கொட்டியது. கோபத்தில்  உரக்கக் கத்தினேன்.  ஆனால் இறுதியில் அக்கூச்சல் அழுகையாக மாறியது. துடுப்பு நிலத்தில் இறுக்கமாகப் பாய்ச்சப்பட்டிருந்தது.

“வா, உன்னைத் திரும்பி சென்று விட்டுவிடுகிறேன்.”

ஒரு பொழுதும் தாமதிக்காமல் மிகால் உடனே எழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டு தளர்ந்த அடிகளுடன் படகுக்குள் ஏறி அமர்ந்தான். எங்களுடைய நீண்ட வீட்டை  நோக்கிச் செல்லும் பயணம் முழுவதும் அவன் தோள்கள் நடுங்கிக் கொண்டே இருந்தன. ஆயோங்கிடம் அவன் நடந்துகொண்ட முறையை மிகால் நினைத்துப் பார்க்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. நான் குழப்ப மனநிலையிலே இருந்தேன். மிகால் மட்டுமல்ல, என் கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. நீண்ட வீட்டின் படகுத்துறையை நாங்கள் வந்தடைந்திருந்தபோது, எங்கள் இருவரின் கண்களில் வடிந்திருந்த கண்ணீரும் காற்றில் உலர்ந்து போயிருந்தது.

“இங்க பார்! நான் உன்னை எச்சரிக்கிறேன். இன்று நடந்த விஷயத்தை பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. அதை மீறி சொன்னால்…” என சீறினேன். அவன் சரியென தலையசைத்துக் கொண்டான். “இன்னொன்று!” நான் மேலும் தொடர்ந்தேன், “இதற்கு மேல் என் கண் எதிரே வந்துவிடாதே.” மிகால் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு மெல்ல அடியெடுத்து வைத்து வீட்டிற்குப் புறப்பட்டான். நான் பொழுது சாயும் வரை ஆற்றங்கரை ஓரத்திலே அமர்ந்து கொண்டேன். நான் தஞ்சுவை கடந்து ருவாயில் நுழையும் போது இருள் சூழ்ந்திருப்பதே எனக்கு ஆசுவாசமாக இருக்கும்.

தஞ்சுவை நான் அடைந்தபோது, மிகாலின் ருவாயில் நீண்ட வீடு மக்கள் கூடியிருப்பதைக் கண்டேன். என் மனம் படபடத்தது. இன்று நடந்த நிகழ்வைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்து விட்டதா? ஆனால் என் வருகையை  யாரும் கண்டுகொள்ளவில்லை. நான் திராணியை வரவழைத்துக் கொண்டு மிகாலின் ருவாயிற்கு சென்றேன். அங்கு மிகாலின் தந்தை தலையைக் குனிந்துகொண்டு மண்டியிட்டு அமர்ந்திருந்தார். என்ன நிகழ்ந்ததென்று அங்குள்ளவர்களிடம் கேட்டேன்.

“ஹம்… இந்த மானாப் இருக்கிறானே, இவன் தன் மகனை தாறுமாறாக அடித்து விட்டான்… பலமான தாக்குதல்தான்.. நானே பார்த்தேன்…”

இன்னொருவர் குறுக்கிட்டார், “எப்போதும் இவன் வீட்டுக்கு வந்துவிட்டாலே, மகனை போட்டு அடிப்பதே வேலை. உடல் எல்லாம் கன்னி போகும் அளவுக்கு வெலுத்து வாங்குவான்… எனக்கு தெரியாது என நினைக்கிறான்… ம்ம்ம் இப்போது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது”

“ஏ, லாங்கி… உனக்குத்தான் மிகால் அடிக்கடி ஆற்றோரம் செல்வது தெரியுமே. நீயும் அங்கேயேதானே குடியாய் இருப்பாய். இன்று அவன் அங்கு வந்தானா?” அந்த ஆண் என்னை நோக்கி கேள்வியை எழுப்பினார். நான் இல்லை என்று தலையசைத்தேன்.

நான் கூட்டத்தின் நடுவே மிகாலை தேடிக்கொண்டிருந்தேன். ஆனால் அவனின் தாயின் அழுகை ஒலி மட்டும்தான் ஒலித்துக் கொண்டிருந்தது. துவாய் ரூமா எங்களையெல்லாம் விலகி வழிவிடச் சொன்னார். இரண்டு ஆண்கள்  சுயநினைவற்ற மிகாலை அந்த அறையிலிருந்து கைகளில் ஏந்தி கொண்டு வந்தனர். முகம் முழுவதும் இரத்தம் படிந்திருந்தது. படகு துடுப்பு ஒன்று தரையில் கிடந்தது. அங்குள்ள ஒருவர் சொன்னார், மிகால் வீட்டிற்குத் தாமதமாக வந்ததால் அவனின் தந்தை அந்தத் துடுப்பால் அவனை அடித்ததாகக் கூறினார். சற்று முன் ஆற்றோரத்தில் என்னால் செய்ய இயலாமல் போன செயலை மிகாலின் தந்தையே நிகழ்த்திக் காட்டிவிட்டார்.

அந்தத் துடுப்பைக் கண்டவுடன் என் உணர்வுகள் அலைமோதின. நீண்ட வீட்டைவிட்டு வெளியேறி என் படகின் அருகில் உள்ள துறைமுகத்தில் சென்று அமர்ந்து கொண்டேன். துவாய் ரூமாவும்  அங்குள்ள சில ஆண்களும் மிகாலை சிகிச்சைக்காகப் பட்டணத்திற்குக் கொண்டு சென்றிருந்தனர். மிகாலின் தந்தையைக் காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுவார்கள்.

என் இதயம் வெடிப்பதைப் போல் இருந்தது. நெஞ்சில் யாரோ பெரிய கல்லைக் கட்டியது போல் கனத்தது. சில நிமிடம் தலை குனிந்தேன். மீண்டும், என் கண்களிலிருந்து நீர் வழிந்தது. படகில் மிகாலால் வரையப்பட்ட ஓவியத்தைக் கவனித்தேன். கொடி, இலைகள் ஒன்றோடொன்று பிணைந்துள்ள அழகிய ஓவியம். இப்போதுதான் முதல் முறையாக அவன் வரைந்த ஓவியத்தை ஆழ்ந்து பார்க்கிறேன். இதுநாள் வரையில் நான் பார்த்தது அந்தப் படகின் கருநிறப் பின்னணி வண்ணத்தை மட்டும்தான். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது.

சில கணம் உரைந்து போயிருந்தேன். பிறகு சட்டென அங்கிருந்து எழுந்து படகின் கயிற்றை அவிழ்த்தேன். இயந்திரத்தை முடுக்கினேன். என் படகு மீண்டும் அந்தக் குளிர்ந்து தெளிந்திருந்த  ஆற்று நீரைக் கிழித்துக் கொண்டு பயணித்தது.

இம்முறை, நான் பட்டணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றேன்.

***

  1. ருவாய் – நீண்ட வீட்டின் திறந்தவெளி பகுதி
  2. துவாய் ரூமா – ஊர்த் தலைவர்
  3. அயாம் பான்சோ – மூங்கிலில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சி
  4. தஞ்சு – முன் வராண்டா

மலாய் மூலம்: ஸ்டெஃபனி கசொ

தமிழில்: சாலினி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...