ஜார்ஜ்புஷ்ஷும் வட்டப்பேரும்

வாசலுக்குள் நுழைந்து அரசமரத்தைக் கடந்து செல்ல, கிளையில் இருந்து குதித்து வந்து மண்டைஓடு கூவினான், “லேய் வாத்து, நேத்து ஏம்பில வரல?” 

“ஊர்ல இல்லல. நேத்துதான் வந்தேன்”, என் பதிலை அவன் கவனித்ததாக தெரியவில்லை. 

“ஏறிச்சாடி விளாட வாரியா?”, மண்டைஓடு புதிதாக ஒரு விளையாட்டை கண்டுபிடித்துவிட்ட உற்சாகத்தில் இருந்தான். 

அவன் கண்கள் இரண்டும் விரிந்து வட்டமாக, பெரிய வெண்பற்கள் ’ஈ’ என்று இளித்தன. 

அவன் எந்த விளையாட்டை குறிப்பிடுகிறான் என்று நன்கு தெரிந்தவன் போல நானும், “நில்லு வாரேன்” என்றபடி தோள் பையை வைக்க வகுப்பறைக்கு ஓடினேன். 

“லேய் வாத்து லே, கிளாஸ் மாறியாச்சு, இப்பம் மத்த மூணாமத்த பிள்டிங்கு பாத்துக்கோ”, பின்னாலிருந்து அவன் குரல் கேட்டது.

அப்போதுதான் எனக்கு அது தலையில் ஏறியது. ஆம், நான் இப்போது ஏழாம் வகுப்பு. இனி எல்லாம் மாறப்போகிறது. சட்டென்று உடல் முறுகி தோள்கள் தினவெடுத்தது போல. எவம்ல அவன் ஆறாம் கிளாஸ் சுண்டக்கா பெய?

முன்பு போல சிறுபிள்ளைத்தனமாக இருக்கக்கூடாது என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். ஏழாம் வகுப்பு மாணவனின் பார்வையில் சட்டென்று எல்லாம் புதிதாக தெரிந்தன. எல்லாமே சற்று கனமாக, உறுதியாக. பெருக்கல் அக்காக்கள் வேப்பம் சருகை பெருக்கி அள்ளியதில் எழுந்த பொடி காலை காற்றில் தங்கத் துகள்கள் போல நின்று சுழன்றது. தூசு மண்ணின் வாசம் மூக்கில் ஏறி அடைக்க, கோடை விடுமுறை மறந்து மீண்டும் பள்ளி மனநிலை வந்தமைந்தது. 

பழக்கமான வேப்பமரத்தின் வேர்ப்புடைப்பில் மிதித்து எம்பி குதித்தபோது, தலைக்குள் ரத்தம் ஜிவ்வென்று ஏறி காது மடல்கள் எரிந்தன. மூத்திரம் முட்டிக்கொண்டு வருவது போல உற்சாகம் உள்ளே பீரிட்டது. நெஞ்சில் ஒருவித படபடப்புடன் எங்கள் புதிய வகுப்பறையை தேடிக் கண்டுபிடித்தேன். அதே போல இருள் வேய்ந்த ஓட்டு கட்டடம், பூரான்கள் ஊறும் சிமெண்ட் தரை, திகைப்பூட்டும் கரும்பலகை. பழக்கமான முகங்கள் உள்ளே தெரிய, அவசரமாக தோள்ப் பையை சன்னல் வழியாக தூக்கி உள்ளே வீசிவிட்டு மீண்டும் பள்ளியின் வாசலருகே நின்ற பெரிய அரச மரம் நோக்கி விரைந்தேன். செல்லும் வழியில்தான் அதை உணர்ந்தேன், அறையில் எங்கள் மூன்றாவது பெஞ்சில் அமர்ந்திருந்த அவனை நான் கவனிக்கவில்லை. அல்லது அத்தனை வினோதத்தை உடனே உள்வாங்கி கொள்ளும் மனநிலையில் அப்போது நான் இல்லை. 

யாரது? ஏதோ புதியவன். தேவையில்லாமல் எங்கள் உலகத்தில் ஒரு புதிய உருவம் நுழைந்திருக்கிறது. அதிகம் யோசித்தால் அது உண்மையாகிவிடும் என்பது போல அந்த காட்சியை உடனே தட்டிக்கழித்தது மனம்.

மூச்சைப்பிடித்து நான் என் முழு வேகத்தில் ஓடினேன். முதல் மணி அடிக்க இன்னும் நான்கு நிமிடங்கள் தான் இருக்கின்றன. நான்கு நிமிடங்கள்! அதற்குள் எவ்வளவோ நிகழலாம். 

தொலைவில் இருந்தே மண்டைஓடு கைக்காட்டினான், ”ஓடி வாலெ, பிடில இவன”. மீன்சட்டியை குப்புற கவிழ்த்து அவனது கைகள் இரண்டையும் பின்னால் முறுக்கி பிடித்திருந்தான். நான் நெருங்கி செல்ல மண்டைஓடு மேலும் உற்சாகமாகி “சீக்கிரம் வால, பிடி பிடி” என்றான். நான் ஓடிச்சென்று மீன்சட்டியின் மீது ஏறி அமர்ந்துகொண்டு கைகள் இரண்டையும் பிடித்துக்கொள்ள, மண்டைஓடு தேர்ந்த மல்யுத்த நடுவரின் லாகவத்துடன் தரையில் பதிந்து கையால் உரக்க மண்ணில் அறைந்தபடி எண்ணினான். ”ஒன், டூ, த்ரீ. டிங் டிங் டிங்… ”

வெற்றிக் களிப்பில் நாங்கள் இருவரும் எழுந்து துள்ள, ஒன்றும் நடக்காதது போல, அல்லது வழக்கமாக நடப்பது போல மீன்சட்டி எழுந்து சட்டையை உதறிக்கொண்டு ஓடிச்சென்றான். பின் சற்று தூரத்தில் இருந்து காற்றில் மிதந்து வந்தது எதிர்வினை. “போலே மண்டஓடு புண்டாமோனெ” 

பதக்கம் ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் நாங்கள் அரச மரத்தில் பற்றி ஏறினோம். 

“நேத்து ஏம்ல வரல, பாதி நாள்தான் கிளாஸ் இருந்து. பொறவு நாலு மணி வர கபடி. பல்லன் புல்டோசர புடிச்சு கமத்தி போட்டான் தெரியுமா?”

“அப்டியா?” மரப்பொந்தில் கால் வைத்து ஏறிக்கொண்டே நான் ஆச்சரியமாக கேட்க, அவன் முதல் கிளையில் இருந்து தொங்கி மற்றொரு கிளைக்கு தாவினான்.

”நேத்து காலமே வந்து நானும் ஆடும் சேர்ந்து நமக்க பழைய டெஸ்க எடுத்து மாத்தி போட்டாச்சு கேட்டியா? பழைய கிளாஸ்லல்லா கிடந்து? நமக்க பேர் போட்டது? ஆறாம் கிளாஸ் பயக்க ஏம்ண்ணே எடுக்கீங்கனு கேட்டு நின்னானுவ, போவிலெனு அந்தால மண்டைல தட்டி தூக்கிட்டு வந்தாச்சு” 

புகழ்பெற்ற அந்த மூன்றாம் பெஞ்சில் நாங்கள் நாலு பேர். அந்த பழைய டெஸ்கில் எங்கள் பெயர் காம்பஸால் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருக்கும். வாத்து, மண்டைஓடு, ஆடு, மீன்சட்டி. 

சட்டென்று எனக்கு அந்த புதிய உருவம் நினைவுக்கு வர, ஏதோ அசௌகரியம் ஒன்றை உணர்ந்தேன். உடல் காரணமில்லாமல் லேசாக புல்லரித்தது, அவன் கேட்டான், “லேய், நீ மத்தவன பாத்தியா?” 

”யாரு?”, நான் தெரியாதது போலவே கேட்டேன். 

”புதுசா வந்திருக்காம்லா, நீ பாக்கலயா?”

”இல்ல”

”ஜார்ஜ் புஷ்” அவன் கிளையில் சாவகாசமாக அமர்ந்து கால்களை ஆட்டியபடி சிரித்தான். 

“என்னது?”

“நம்ம ஆடு அவனுக்கு வச்ச வட்டப்பேரு. அவனக்கு ஏதோ சூக்கேடாம்லே. பாக்க வெள்ளக்காரன் மாதிரி இருப்பாம்”

”ஓஹ்”

“ட்ராயிங் மிஸ் புடிச்சு நம்ம பெஞ்சுல இருத்திப்பிட்டா கேட்டியா, அவதான் நமக்க கிளால் டீச்சராம்.” 

“யாரு குசுமணத்தியா?”

“ஆமா” அவன் மீண்டும் சிரித்தான்.

“எளவெடுத்தவ! கிருமிகடி வந்த மாறில்லா மூஞ்சி இருக்கும். என்ன கண்டாலே அவளக்கு வட்டெளகும்”

ஆறாம் வகுப்பிலேயே என்னை புரட்டிப் புரட்டி அடித்திருக்கிறாள். எவ்வளவு அடித்துத் திருத்தினாலும் ஒரு வட்டம் கூட ஒழுங்காக வரையாத என்னை திமிர் பிடித்தவன் என்றே அவள் கருதியிருந்தாள். 

”ஒருநாள் உனக்க கைய ஒடிக்கேம்ல, நீ ஏழாம் கிளாஸ் வா, தோலை உரிக்கேனா இல்லையானு பாரு”, ஆறாம் வகுப்பில் அவளது கடைசி வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

முதல் மணி அடித்தது. வழக்கம் போல அடிவயிற்றில் சட்டென்று சுரந்தெழும் அமிலம் அன்று எனக்கு தோன்றிய உடனே தணிந்தது. அன்று முதல் நாள், யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது.

”வால லேய், மொத கிளாஸ் வள்சலாவாக்கும். முட்டங்கால் போட என்னால கழியாது” 

மண்டைஓடு சரசரவென்று ஓந்தானாக மாறி கிளைகளில் இருந்து மரத்தை பற்றி கீழே இறங்கினான். நான் ஒரு கணம் தயங்கி பற்றிய கிளையில் இருந்து அப்படியே தாவிக்குதித்தேன். குதிகால்கள் இரண்டிலும் நூறு குண்டூசிகள் சுருக்கென்றன.

*** 

புதிதாக வந்து சேர்ந்திருந்த ஜார்ஜ் புஷ்ஷை தவிர ஆறாம் வகுப்பில் இருந்த எங்கள் கிளாஸில் எந்த மாறுதலும் இல்லை. அதேபோல முன் வரிசையில் இரு பெஞ்சுகளிலாக பெண்கள்.

வலது பக்கம்; வெள்ளப்பல்லி, ஆமை, எறும்புக்கண்ணி (கண்கள் தேன் நிறத்தில் இருக்கும்), சொர்ணாக்கா (ஏதாவது வேண்டாத வேலை செய்தால் பூட்டை கழட்டி விடுவாள்) 

இடது பக்கம்; சிரட்ட-சில்லாட்ட (இவர்கள் சகோதரிகள்), ஸ்ப்ரிங்கு முடி, செல்லக்குட்டி (எல்லா பெண்களையும் ஆண்கள் வெறுக்க வேண்டிய அவசியமில்லை)

பெண்கள் வரிசைக்கு பின்னால் இரண்டாம் வரிசையில்; வலது பக்க பெஞ்சில்; கோழி, பாண்டகுசு, நாப்பீ (நாய்ப்பீ என்பதன் மரூ), அவிச்சமுட்ட, லட்சுமணப் பெருமாள் (இயற்பெயர்)

இடது பக்கம்; செனப்பன்னி, தீக்கோழி (யார் சீண்டினாலும் முகத்தை கைகளில் புதைத்து கொள்வதால்), காண்டாமிருகம், அம்பாசடர் (விசாலமான டிக்கி இருப்பதால்), பல்லன்.

மூன்றாம் வரிசை; வலது பக்க பெஞ்சில்; எலி (எந்த பொந்திலும் நுழைந்து செல்வதால்), சக்கக்குரு, பால்டப்பி, பேயம்பழம் (அல்லது பழவாயன்) 

இடது பக்கம்: வாத்து (அல்லது சைக்கோ), மண்டைஓடு, ஆடு, மீன்சட்டி

நான்காம் வரிசை:

வலது பக்கம்; சனியன் சகட, சடநாயி, தொறை (மரியாதை நிமித்தமாக), ஒட்டகம்  

இடது பக்கம்; புல்டோசர், பிரேதம், கறவ மாடு, உயர்ந்த மனிதன் (அல்லது குலசாமி). 

இவையெல்லாம் வெவ்வேறு காரணங்களால் வெவ்வெறு தருணங்களில் உருவாகி வந்த பெயர்கள். ஆனால் இவை நிலையானவை என்று சொல்லிவிட முடியாது. சில பெயர்கள் உருமாற்றத்தின் காலகட்டத்தில் இருக்கும். நான் கொஞ்சம் கொஞ்சமாக ’வாத்தி’ல் இருந்து ’சைக்கோ’ என்ற பெயரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன். அதற்கான காரணங்கள் வேறு. சில பெயர்கள் மருவி மருவி அடையாளம் தெரியாமல் மாறிவிடுவதுண்டு. சில வேறு வேறு இணைப்புகள் வழியாக சென்று கொண்டேயிருப்பவை. ஆடு முதலில் ஜமுனா பாரியாக மாறி, பின்  ஜம்பராக மாறி பின் பாவாடையாக மாறியது அப்படித்தான். பொதுவாக இந்த மாற்றத்தின் வேகம் வகுப்பில் அவர்களது இயக்கத்தை பொறுத்து மாறுபடும். அதிகம் இயங்குபவர்களின் பெயர்கள் நாளொன்றிலும் மாறிக்கொண்டே இருக்கும், இயங்காத சிலரது பெயர்கள் சூட்டப்பட்ட தருணத்திலேயே உறைந்து கிடக்கும். 

வட்டப்பெயர் சூட்டுவது ஒரு கலை, ஒருவனுக்கு ஏன் ஒரு வட்டப்பெயர் உருவாகிறது என்பது உண்மையில் மர்மமே, அது நிலைபெறுவது பல்வேறு காரணங்களால் தீர்மானிக்கப்படுபவை. ஆனால் பொது விதி என ஒன்றை சொல்லலாம். வட்டப்பெயர் என்பது ஒரு சுருக்குக்கண்ணி போல. ஒருவன் ஒரு பெயரை எத்தனை எதிர்க்கிறானோ அத்தனை வேகமாக அது அவன் கழுத்தைச் சுற்றி இறுகும். அதேநேரம் அவன் ஒரு கட்டத்தில் அப்பெயருக்கு அடிபணிய வேண்டும். அழைத்தால் ‘ஏன்?’ என அவனே குரல் கொடுக்கும் தருணம் அப்பெயர் அதிகாரபூர்வமாக சூட்டப்படுகிறது. எதிர்க்கப்படாத பெயர்கள் நிலைபெறுவதில்லை, கடைசி வரை எதிர்க்கப்படும் பெயர்களும் அப்படியே. 

எங்கள் வகுப்பில் கூட லட்சுமன பெருமாள் என்பவனுக்கு ஏனோ வட்டப்பெயரே இருந்ததில்லை. அதற்கான காரணம் ஏதும் பிரத்யேகமாக இல்லை. ஏதோ ‘சிஸ்டத்தில்’ நிகழ்ந்த பிளவு வழியாக அவன் நழுவிவிட்டான். நாளடைவில் அவனை யாரும் அழைக்காமலே ஆனார்கள், எதிலும் அவனை பொருட்படுத்தாமல் கடந்தார்கள். ஒருகட்டத்தில் அவனே எங்களிடம் தனக்கு வட்டப்பெயர் வைக்குமாறு கெஞ்சத் துவங்கினான். அவனே வித விதமான பெயர்களை கொண்டுவந்து கொடுத்தான். அவற்றில் சில மோசமாக கூட இருந்தன (அதாவது நன்றாக). ஆனால் ஏனோ அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவற்றை நாங்கள் பொருட்படுத்தாத போது அவன் மேலும் வருந்தினான். ஆனால் என்ன செய்ய முடியும்? வட்டப்பெயரின் விதிகள் அப்படி இயங்குவன அல்ல. ஒருகட்டத்தில் கடுப்பான மண்டைஓடு ஒருநாள் அவனிடம் தனியாக அழைத்து சென்று சொன்னான் “லேய் உன் பேரு தாம்ல உனக்க வட்டப்பேரு, சரியா? கொண்டு போ”. அவன் வேறு வழியின்றி அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டான். அன்றிலிருந்து அவன் ’லட்சுமணப் பெருமாள்’ என்றே அழைக்கப்படலானான்.  

பெரும்பாலானவர்களின் வட்டப்பெயர்களை ஆடுதான் சூட்டினான். அவன் ஒரு வட்டப்பெயர்க் கலைஞன். அவனிடம் சாதா பேச்சிலும் வினோதமான சொற்சேர்க்கைகள் எழுந்தபடியே இருக்கும். பள்ளியில் சேர்ந்த புதிதில் எனக்கு இந்த முறை வினோதமாக இருந்தது. வட்டப்பெயர் என்றால் என்ன என்றே எனக்கு முதலில் புரியவில்லை. ஆடு விளக்கினான், “பழயகாலத்தில சோறு கொண்டு வர சோத்துவட்டை இருக்குல்லா, அதுலதான் பேரு எழுதி வைப்பாவ, அதாக்கும் வட்டப்பேருனு சொல்லுகது” .அந்த விளக்கம் வினோதமாக இருந்தது, ஆகவே உண்மையாகத் தான் இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். 

நான் அந்த பள்ளியில் வந்து சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. தனியார் பள்ளியில் இருந்து வந்த என்னை முதலில் எல்லாரும் வினோதமாகவே கண்டார்கள். என்னை முதலில் நெருங்கி வந்தது சடநாய்தான். வழக்கம்போல தனித்தவர்களை குறிவைக்கும் சாடிஸ்ட். முதல் இரண்டு மாதங்களுக்கு  தினமும் அவன் என்னை விதவிதமாக அடித்து, கிள்ளி, உதைத்து துன்புறுத்தினான். ஒவ்வொரு இடைவேளையின் போதும் அவன் கையில் சிக்காமல் இருக்க நான் ஓடி ஒளிந்தேன். வகுப்பு துவங்கும் நேரம் டீச்சர் வருவதற்கு அரைக் கணம் முன்பு கிளாஸுக்குள் நுழைந்தேன். வகுப்பின் பொழுதெல்லாம் கழுத்துக்கு பின்னாலிருந்து வரும் அவனின் மிரட்டல்களை கேட்டு நடுங்கியபடி அமர்ந்திருந்தேன். எனது எம்பிய பல்லை கேலி செய்து அவன்தான் எனக்கு வாத்து என்ற பெயரை வைத்து அழைத்தான். ஆனால் அவனே எதிர்பாராமல் அந்த பெயர் சட்டென்று பிரபலமானது, வகுப்பில் எல்லாரும் என்னை அதன் மூலம் அறிந்துகொண்டார்கள். அவர்கள் என்னோடு மெல்ல பேசத் தொடங்கினார்கள். அப்படித்தான் மண்டைஓடும் ஆடும் என் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். அவர்களுடன் சேர்ந்து நான் குலசாமியின் குழுவில் இணைந்தேன். சடநாய் வழக்கம்போல வேறு உதிரிகளை குறிவைக்கத் தொடங்கினான்.

அப்போது எங்கள் வகுப்பு இரண்டாக பிரிந்திருந்தது. வலது பக்கம் அமர்ந்திருந்தவர்கள் பெரும்பாலும் ’தொறை’யின் பக்கம் நின்றார்கள். தொறைதான் வகுப்பிலேயே இரண்டாவது உயரமானவன், ஆகப்பெரிய அக்கிரமி. நாங்கள் எல்லோரும் அவக்கு பயந்தோம் என்பதுதான் உண்மை. இடது பக்கம் உயர்ந்த மனிதன் என்று நாங்கள் அழைத்த எங்கள் குலசாமியின் பக்கம் நின்றோம். குலசாமிதான் வகுப்பிலேயே உயரமானவன். ஆனால் அவன் யாரையும் இதுவரை அடித்ததில்லை. அதனாலேயே அவன் மீது ஒரு பயம் இருந்தது. அவன் நினைத்தால் தொறையை கூட ஒரே அடியில் வீழ்த்திவிடமுடியும் என நாங்கள் நம்பினோம். அல்லது நம்ப விரும்பினோம். தொறைகூட அவ்வாறு சந்தேகித்தான். அதனால்தான் வகுப்பு எப்படியோ ஒரு சமநிலையை அடைந்திருந்தது. ஆனால் அது நிலையான ஒரு புள்ளி அல்ல என்று எங்களுக்கு தெரியும். எங்கள் இடது பக்கம் தொறையின் ஒற்றர்களும், வலது பக்கம் எங்கள் ஒற்றர்களும் உண்டு. பரஸ்பரம் வேவறிந்து ஆட்சி அதிகார மாற்றங்களை கூர்மையாக கவனித்துக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. இரண்டு குழுவிலும் தளபதிகளுக்கு இடையில் மோதல்கள் நேர்ந்தாலும் இரு தலைகளும் மோதிக்கொள்ளும் நாள் வரவில்லை. ஒத்துமொத்த வகுப்பே ஆவலுடனும் பயத்துடனும் அதை எதிர் நோக்கியிருந்தது. வகுப்பின் ஒட்டுமொத்த அரசியல் இயக்கமும் அதை பின்புலமாக கொண்டு செயல்பட்டது.  இந்த இரு குழுக்களிலும் சேராமல் அல்லது , இவர்களுக்குள் முடிவெடுக்க முடியாமல் மூன்றாம் அணியாக இருந்தவர்களை சடநாயி வேட்டையாடினான். 

ஆனால் இப்போது எங்கள் வகுப்பில் புதிதாக ஒரு பிரச்சனை உதித்திருந்தது. புதிதாக வந்தவன் யார். எங்கிருந்து வந்திருக்கிறான். அவனை எந்த அணியில் சேர்க்கலாம்? 

***

ஜார்ஜ் புஷ் எங்கள் யாரையும் முகம் நோக்கி பேசவில்லை. உண்மையில் அவன் பேசவேயில்லை. டீச்சர் கேட்கும் கேள்விகளுக்கு கூட மூன்று நான்கு முறை திரும்ப திரும்ப கேட்டப்பிறகு மிக மெல்லிய குரலில் “ம்ம்” அல்லது “ம்ஹ்ம்ம்” என்று அவனிடமிருந்து பதில் வரும். சடநாயி கூட அவனை நெருங்கவில்லை. ஜார்ஜ் புஷ் என்ற பெயர் வெறும் பெயரளவில் அவன் மேல் தொக்கி நின்றது. எங்கள் வகுப்பின் பண்பாட்டு அசைவுகளுக்கு அவன் பெயர் இடம்கொடுக்கவில்லை. அவனது பெயரை நாங்கள் வட்டப்பெயர் என்பதையே மறந்தோம். ஒருமுறை ஆடு படுதீவிரமாக சொன்னான், “லேய், நம்ம ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஒரு நல்ல வட்டப்பேரு வெக்கணும் கேட்டியா?”. ஆனால் அது அத்தனை எளிதாக இருக்கவில்லை. எந்த பெயர் அழைத்தாலும் அவன் ஒரே போல சிரித்தான். அவனது மஞ்சள் நிற தலைமுடியும் புருவங்களும் ரத்தச் சிவப்பாக சிவந்த வாயும் ஏதோ வினோதமான இசைக்கு அசைந்தன. சிரிப்பது என்பது அவன் மகிழ்ச்சியின் பொருட்டு செய்யும் விஷயமாக இருக்கவில்லை. பயத்திலும் வலியிலும் அவன் சிரித்தான். என்னை விட்டுவிடுங்கள் என்பது போல அவன் சிரித்தான். அவனது உலகமே வேறொன்றாக இருந்தது. எங்கள் ஒளி அவனுக்கு இருளாகவும் எங்கள் இருட்டு அவனுக்கு வெளிச்சமாகவும் இருந்தது. எங்கள் தொடுகை அவனுக்கு வேதனையாக, சிரிப்பு அச்சுறுத்தலாக, எங்கள் பேச்சு வெற்று ஓசையாக இருந்தது. அவன் கண்கள் ஒரே நேரம் ஆழமற்றவை போலவும், முடிவில்லா ஆழம் கொண்டவை போலவும் தோன்றின. அவன் கண்களில் தெரிந்த எங்கள் பிம்பங்களை பார்த்தபோது அதில் நாங்கள் ஏதோ வினோதமான ஜீவராசிகள் போல தெரிந்தோம். தேனில் விழுந்த எறும்புகள் போல அந்தப் பிம்பத்தில் நாங்கள் கொடுக்குகளுடன்  நெளிந்தோம். அது ஒருவகை பதற்றத்தை அளிக்க நாங்கள் அவனிடமிருந்து விலகியே இருந்தோம். மண்டைஓடு ஒருமுறை சொன்னான், “லேய், என்ன விஷயம் தெரியுமா? அவன் ஆளே ஒரு வட்டப்பேருதான் கேட்டியா?” மண்டைஓடு அதன்மூலம் என்ன சொல்ல வருகிறான் என்று எங்களுக்கு உடனே புரிந்தது.

பள்ளி ஆரம்பித்த சில நாட்களிலேயே எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பியது. எல்லா லட்சியக்கனவுகளும் ஒரு நாள் மண்ணில் வந்திறங்க வேண்டுமே.  அதாவது, நான் எல்லா ஆசிரியைகளிடம் இருந்தும் வீட்டுப்பாடம் எழுதாமல் அடிவாங்க தொடங்கியிருந்தேன். வாத்துமுட்டை சைன்ஸ் டீச்சர், இரட்டை கிழவி தமிழ் டீச்சர்கள் (எப்போதும் இணையராக திரியும் இவர்களுக்கு ஆடு வைத்த பெயர் அது), சுடலமாடன் கணக்கு வாத்தியார், வள்சலா சமூக அறிவியல் டீச்சர் (வள் வள் என்று விழுவதால்),  ஸ்ரெயா இங்க்லீஷ் டீச்சர் (அப்போது தான் மழை படம் வெளியாகியிருந்தது) முக்கியமாக குசுமணத்தி டிராயிங் டீச்சர் என எல்லாரிடமும் சமரசமில்லாமல் அடிவாங்கினேன். எத்தனை முயன்றும் என்னால் வீட்டுப்பாடம் எழுத முடியவில்லை. கண்ணுக்கு தெரியாத விலங்கு ஒன்று ஒவ்வொரு நாள் இரவும் என் கைகளை பிடித்துக்கொள்வது போல. ஆனால் இப்போது ஒரு புதிய மாறுதல் இருந்தது, எல்லா முறையும் என்னோடு அடிவாங்க அவனும் இருந்தான். முதல் சில வாரங்கள் சில அடிகளுடன் தப்பித்துக்கொண்டிருந்தோம். ஆனால் காலாண்டு நெருங்க நெருங்க முதல் இரு பக்கங்களை கூட தாண்டாத எங்கள் வீட்டுப்பாட புத்தகங்கள் அவர்கள் ஆணவத்தை சீண்ட துவங்கின. அவற்றை கண்டு ட்ராயிங் டீச்சர் கடும் சீற்றம் கொண்டாள். கோபத்தில் அவள் முகம் ஏதோ வினோதமான ஒன்றை முகர்ந்தது போல விகாரமாக மாறும். அவளிடம் கிளாஸ் டீச்சர் என்ற முறையில் மற்ற எல்லா டீச்சர்களும் சென்று முறையிட்டிருந்ததனர். ஒருநாள் நடந்துகொண்டிருந்த சயின்ஸ் வகுப்பிற்குள் சட்டென்று நுழைந்து வாத்து முட்டையிடம் இருந்து பிரம்பை  வாங்கி எங்கள் இருவரையும் கண்மண் தெரியாமல் தாக்கத் துவங்கினாள். உடலில் எல்லா இடங்களிலும் சரமாரியாக அடிவிழுந்தது. கைகளிலும், கால்களிலும்,  முதுகிலும், நெஞ்சிலும்எல்லாம் சடசடவென  அடிவிழ நான் கீழே விழுந்து ”அடிக்காதீங்க டீச்சர், அடிக்காதீங்க டீச்சர், நான் எழுதுவேன் டீச்சர்” என  அடிகளை கைகளால் தடுத்துக்கொண்டு பின்னால்  தவழ்ந்து கெஞ்சியபடியே கிளாஸை விட்டு வெளியேறினேன். எனக்கு பின்னாலேயே அடிகளை வாங்கிக்கொண்டு அசையாமல் திகைத்து நின்ற ஜார்ஜ் புஷ்ஷையும் தரதரவென பிடித்து தள்ளி கிளாஸை விட்டு வெளியேற்றினாள். ஆத்திரம் அடங்காமல் பிரம்பை ஓங்கி தரையில் எறிந்துவிட்டு ”ரெண்டு பேரையும் இங்கயே கொன்னு பொதச்சுப் போடுவேன் பாத்துக்க” என்றபடி கையை உதறியபடியே அவள் சென்றாள்.    

அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கண்களில் இருந்து நீர் பெருகி வெளிறிய கன்னத்தின் இருபுறமும் வழிய, யாரோ மியூட்டில் வைத்துவிட்டது போல சிறிதும் ஓசையில்லாமல் அவன் அழுதான். உடலில் அடி விழுந்த தடங்கள் அதற்குள் ரத்த சிவப்பாகி கட்டி தட்டியிருந்தன. என்னால் அவனை பார்க்க முடியவில்லை. முற்றத்தின் வெயிலில் காக்கைகள் சிறிய வேப்பம் குச்சிகளை கொத்திக்கொண்டு எழுந்து எழுந்து அமர்வதை பார்த்துக்கொண்டிருந்தேன். அவனிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. அறைக்குள்ளே எந்த மாறுதலும் இல்லாமல் வகுப்பு தொடரும் ஒலிகள் கேட்க துவங்கின. மாணவர்கள் கூட்டமாக டீச்சரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள், சிரித்தார்கள், ஓசை எழுப்பினார்கள். பக்கத்து அறையின் ஆறாம் வகுப்பு மாணவர்கள் எங்கள் இருவரையும் ஜன்னல் வழியாக பார்ப்பது தெரிந்தது. சிலர் சிரிப்பது போல தோன்றியது. 

நான் வழக்கம் போல, திரும்ப வீட்டுக்குச் செல்லாமல் அப்படியே எங்காவது ஓடிவிடுவது குறித்து சிந்திக்க தொடங்கினேன். எல்லாம் என் கையில் தான் இருந்தது. இந்த கணம் நினைத்தால் ஓடிவிடலாம், இதோ இப்போது. பத்து அடி எடுத்து வைத்தால் இந்த ‘பில்டிங்கை’ விட்டு, மேலும் நூறு அடிகள் எடுத்து வைத்தால் அரச மரத்தை தாண்டி ஸ்கூலுக்கு வெளியில். அங்கு யாருக்கும் என்னை அடையாளம் தெரியாது. அப்படியே வடசேரி பஸ்டாண்ட். அங்கே எல்லா ஊர்களுக்கும் பேருந்துகள் நிற்பதை கண்டுள்ளேன். திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், குற்றாலம், திருச்சி… இனி ஒருபோதும் இந்த முகங்களை என் வாழ்க்கையில் பார்க்க வேண்டியதில்லை. அம்மா அப்பாவுக்கு நன்றாகப் படிக்கும் என் தங்கை இருக்கிறாள்.       

அருகில் அவன் குரல் கேட்டது. ஏதோ முணுமுணுப்பது போல. நான் அவன் நின்ற திசையை நோக்கி திரும்பினேன். கண்கள் கூசும் வெண்மையின் உருவம்.

நடுங்கும் உதடுகளுடன் அவன் சொன்னான். ”அஜிதா, வலிக்கி” 

அவன் என்னிடம் பேசிய முதல் வார்த்தைகள் அவைதான். 

ஏனோ எனக்கு சட்டென்று கண்களில் கண்ணீர் நிறைந்தது. நான் அவன் அருகில் சென்று  தோளின் மீது கைவைத்து “அழாதல” என்றேன். சொரசொரப்பான அவன் புறங்கைகளில் இருக்கும் மயிர்கள் கூட மஞ்சள் நிறத்தில் இருந்தன. அவன் மீண்டும் ஏதோ வினோத இசைக்கு தலையசைப்பது போல அசைந்தான்.

அன்று அந்த நிகழ்ச்சிக்கு பின் அதை யோசித்து பார்த்தபோதெல்லாம் எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. அவன் தமிழ் பேசுவான் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் எல்லோரும் அவனை என்றாவது ஒருநாள் சில வெள்ளைக்காரர்கள் தோன்றி ’இவன் எங்கள் பையன்தான். தவறி இங்கு வந்துவிட்டான்’ என சொல்லி அழைத்துச்செல்வார்கள் என்றே கற்பனை செய்திருந்தோம். 

அன்று அவன் சிரிப்பது போல பற்களை காட்டினான். ஆனால் அவன் இன்னமும் வலியில் இருந்ததை என்னால் உணரமுடிந்தது. அந்த சிரிப்பின் தருணம் அவன்  உடலின் மொத்த வலியையும் ஒரு கணம் என்னில் உணர்ந்தது போல என் உடல் சட்டென்று புல்லரித்தது. 

***

ஜார்ஜ் புஷ் அன்று என்னிடம் பேசியதை நான் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் சயின்ஸ் டீச்சர் எங்கள் இருவரையும் அடித்தபோது நான் என் கால்களாலும் கைகளாலும் அவனது அடிகளையும் சேர்த்து வாங்கிக்கொண்டேன். உடலில் விழும் ஒவ்வொரு அடியின் சுளீர் என்ற வலியும் என்னை உள்ளே வெறிகொள்ள செய்தது. வகுப்பின் போது நான் அசையவில்லை. புறங்கையில் அடிப்பட்டு சிவந்து வீங்கி துடிக்கும் சதையை மெல்ல வருடிய போது உடலெங்கும் கூசி சிலிர்த்தது. கண்களை இடுக்கி துளிர்த்து வழிந்த கண்ணீர் துளிகளை மெல்ல அதன் மீது விழச்செய்தேன். அதன் இதமான சுடும் நீர்மையும் அடியின் தடத்தை வருடிச்சென்றது. உடலெங்கும் இனிமை ஒன்று பரவியது.  நானும் என் உடலும் வலியும் மட்டுமான ஒரு உலகம். 

இடைவேளையின் போதும் வகுப்பறையை விட்டு வெளியே செல்லாமல் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தேன். அப்போது என் பெஞ்சின் மறு எல்லையில் அமர்ந்திருந்த அவன் நெருங்கி அமர்ந்து  என்னிடம் மெல்லிய குரலில் சொன்னான், 

“போட்டும்ல, எல்லாம் மாஞ்சிரும்”. 

அப்போது வகுப்பில் வேறு யாரும் இருக்கவில்லை. நான் அவன் கண்களை பார்த்தேன், அவற்றில் முன்பு கண்ட அதே ஆழமும் ஆழமின்மையும். நான் புன்னகைத்தேன். 

ஜார்ஜ் புஷ் அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எங்களிடம் பேசத் தொடங்கினான். ஓரிரு வார்த்தைகள்தான். சொல்லிவிட்டு ஒவ்வொரு முறையும் ஏதோ சாதனை புரிந்தது போல அவன் சிரித்தான். நாங்கள் அவன் பேசியபோதெல்லாம் அதிசயம் நிகழ்ந்தது போல கேலியாக கைதட்டினோம். அவன் எங்கள் பெஞ்சில் இருப்பது எங்களுக்கு பெரிய புகழை தந்தது. எட்டாம் கிளாஸ் ஒன்பதாம் கிளாஸ் அண்ணன்கள் எல்லாம் எங்களிடம் வந்து அவனை குறித்து விசாரித்து சென்றார்கள். ஜார்ஜ் புஷ், முள்ளங்கி, ராஜபாளயம், வெள்ளுளுந்து, பனங்கிழங்குத் தலயன் என அவனுக்கு வட்டப்பெயர்கள் பெருகின. 

அவனும் இப்போது எங்களுடன் அவ்வபோது வெளியே வரலானான். அவனுக்கு எங்கள் விளையாட்டு விதிகள் விளங்கவில்லை. எங்கள் விளையாட்டுக்குள் அவன் தனியாக வேறொரு விளையாட்டை விளையாடினான். ‘ஒளிச்சுகளி’யில் கண்ணை மூடி இருபது வரை எண்ணும் மீன்சட்டியை சென்று தொட்டுவிட்டு ”அவுட்” என்று சிரித்தான். அவனது விதிகளுக்கு ஏற்ப நாங்களும் எங்கள் விளையாட்டை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஆனால் எப்போதும் அவனது விளையாட்டுக்குள் நாங்கள் போக முடிந்ததில்லை.

அவனது செயல்கள் எப்போதும் சற்று வினோதமாகவே இருந்தன. ஒருமுறை பக்கத்து தெருவின் இறைச்சிக்கடையில் இருந்து ஒரு நாய் கழுத்தறுப்பட்ட கோழி ஒன்றை எடுத்துவந்து எங்கள் பள்ளிப்புறத்தில் வைத்து கிழித்து உண்டு கொண்டிருந்தது. நாங்கள் அதை பார்த்துவிட்டு கடந்த பின்பும், அவன் அதை கண்களை சுறுக்கி நெடுநேரம் அங்கேயே நின்று பார்ப்பதை கண்டேன். அவன் தலை அப்போது அசையவில்லை. உடல் மட்டும் அவ்வப்போது திடுக்கிட்டது போல துடித்தது. இடைவேளையின் இறுதிமணி அடித்தபின்பு அவனை இழுத்து செல்லவேண்டியிருந்தது. அவன் முகத்தில் மீண்டும் அந்த சிரிப்பு உறைந்திருந்தது.

***

ஒரு சில வாரங்களில் எங்கள் வகுப்பையே புரட்டிப்போடும் அந்த சம்பவம் நிகழ்ந்தது. மறுநாள் நான் பள்ளிக்கு நுழைந்த போது எல்லார் மத்தியிலும் அதுதான் பேச்சாக இருந்தது. உயர்ந்த மனிதன்- அதாவது எங்கள் குலசாமி- முந்தைய நாள் பள்ளிமுடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் தொறையின் மேல் அறியாமல் மோதியிருக்கிறான். சட்டென்று ஒருகணம் தொறை கை ஓங்கிவிட, இவன் பயந்து விலகியதை கண்டு அங்கிருந்த தொறையின் கூட்டாளிகள் சிரித்திருக்கிறார்கள். சட்டென்று தொறைக்கு தைரியம் பெருக குலசாமியை அங்கேயே ஓங்கியோங்கி அறைந்து அவனை விரட்டியடித்திருக்கிறான். மறுநாள் குலசாமி பள்ளிக்கு வரவில்லை. சம்பவத்தை நேரில் கண்ட அம்பாசடர் இதை எங்களுக்கு விவரித்தபோது வகுப்பின் இடது பக்கம் முழுவதும் மயான அமைதி பரவியது. 

தருமத்தின் வாழ்வுதனை அன்று சூது கவ்வி, நார் நாராக கிழித்துபோட்டிருந்தது. வகுப்பே மூச்சடைத்தது போல தொறையின் வருகைக்காக காத்திருந்தது. அவன் எந்த சலனமும் இல்லாதது போல வந்தான். நேராக வந்து இடது பக்கம் பின் பெஞ்சில் குலசாமியின் இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டான். பின்னால் திரும்பி பார்த்த எங்களை கண்டு புச்சமாக ஒரு நகைப்பை உதிர்த்தான். வலதுபக்கமிருந்து கூவல்கள் எழுந்தன. அத்தனை நாளாக நாங்கள் கட்டிக்காத்து வந்த வகுப்பின் சமநிலை அன்றுடன் தகர்ந்து நொருங்கியது. முன் பெஞ்சின் கோழைகள் அன்றே தொறையின் பக்கம் சேர்ந்தனர். ஆனால் மூன்றாம் பெஞ்சின் நாங்கள் அவ்வாறு சேரமுடியாது. சேர்ந்தால் வலதுசாரிகளுக்கு அடிமையாக செல்லவேண்டும். இடைவேளைகளில் நாங்கள் தலைமறைவாக வாழ்ந்தோம். ரகசிய இடங்களில் கூடி ஆலோசனைகள் நடத்தினோம். மாலை பள்ளிமணி அடித்ததும் எப்படி விதவிதமான ஊடுவழிகளின் ஊடாக வீட்டை அடைவது என சிந்தித்தோம். எங்குச் சென்றாலும் சேர்ந்தே நகர்ந்தோம். ஆனால் இந்த கலவரங்களுக்கு இடையில் ஜார்ஜ் புஷ்ஷை நாங்கள் சுத்தமாக மறந்துவிட்டிருந்தோம்.

ஒருநாள் இடைவேளையின் போது எலி ஓடிவந்து எங்களிடம் சொன்னான். “லேய் சடநாயி வெள்ளுளுந்த டாய்லெட்டு கிட்ட போட்டு அடிக்காம்ல”. நாங்கள் ஐந்தாறு பேராக திரண்டு அங்கு சென்றபோது ஜார்ஜ் புஷ் வலது கையை இடது கையால் பிடித்தபடி புல் தரையில் விழுந்துக்கிடந்தான். சடநாயி அதற்குள் அங்கிருந்து ஓடிவிட்டிருந்தான். நாங்கள் எல்லாரும் அவனை பிடித்து எழுப்பி வகுப்பறையின் முன்னாலிருந்த திண்ணையில் அமரச்செய்தோம். 

அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் அழவில்லை. சிரிப்பது போல பற்கள் விரிந்திருக்க, வவ்வால்கள் இருளில் எழுப்புவது போன்ற ஒரு வித வினோதமான ஒலி அவனிடம் இருந்து எழுந்தது. அவனிடம் நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டோம், 

“லேய் வலிக்கிதா” 

“வலிக்கிதா மக்கா” 

”சொல்லுல, என்ன பண்ணுவு”

“அவன எல்லாரும் சேர்ந்து அடிக்கலாம்ல”

எதற்கும் அவன் பதில் கூறவில்லை.

மண்டைஓடும் நானும், ஆடும், மீன்சட்டியும், பல்லனும், அம்பாசடரும், நாப்பியும், கோழியும் எல்லாம் அவனை சுற்றி அமர்ந்து தேற்ற முயன்றோம். 

அவன் எங்களிடமிருந்து முழுவதுமாக விலகியவனாக எங்கோ பார்த்தபடி சிரித்தான். அவன் கண்களில் நீர் வழிந்து அவனது சட்டையை முழுவதுமாக நனைத்தது. அப்போதுதான் அவன் வலது கை நன்றாக  வளைந்திருப்பதை கண்டேன். நடுவே எலும்பு முறிந்தது போல அது  வித்தியாசமாக திரும்பியிருந்தது. அதை  நான்சொன்னவுடன் எல்லாரும்கண்டார்கள். அவன் காதில் இருந்தும் பின்னங்கழுத்தில் இருந்தும் ரத்தம் வருவதை பின்புதான் தான் கண்டோம். 

எல்லாருமாக சென்று கிளாஸ் டீச்சரிடம் நடந்ததை சொன்னார்கள். அன்று மதியமே அவனது தந்தை பள்ளிக்கு அழைத்துவரப்பட்டார். எங்கள் எல்லாருக்கும் அவர் தோற்றத்தை கண்டு மிகுந்த ஏமாற்றம். அவர் எல்லாரையும் போலத்தான் இருந்தார். ஆனால் உடல்  நன்றாக மெலிந்து நெஞ்சு கூடுகட்டியிருந்தது. அவர் முகத்தில் எந்த கவலையும் இருப்பது போல தெரியவில்லை. அவர் மிக சாதாரணமாக டீச்சரிடம் தலையாட்டியபடி பேசிக்கொண்டிருந்தார். பின் மகனை தோள்களை பற்றிக்கொண்டு நடந்தே பள்ளியில் இருந்து கூட்டிச்சென்றார். 

ஜார்ஜ் புஷ்ஷை நாங்கள் பார்த்த கடைசி நாள் அதுதான்.

***

மறுநாள் பள்ளிக்குள் நுழைந்தபோது அரச மரத்தில் இருந்து குதித்து வந்த ஜென்சனின் குரல் கேட்டது 

“லேய் அஜிதா, எங்கல போற?” 

சட்டென்று திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தேன். அவன் கண்களிலும் அதே பார்வைதான். பள்ளியின் தொடக்கமணி அடித்தது. உடல் பதைக்க நான்  வகுப்பறைக்குள் ஓடிச்சென்று நுழைந்தபோது இருளுக்குள் இருந்து முகங்கள் ஒவ்வொன்றாக தெளிந்தன. 

சுனில், பிரேமன், ராஃபி, ஜான், அனீஷ், கோபி, பிரஜித், பார்த்திபன், டெஸ்மண்ட்…

9 comments for “ஜார்ஜ்புஷ்ஷும் வட்டப்பேரும்

  1. Sumathi sambadan
    January 3, 2026 at 2:15 pm

    மூச்சு முட்ட பயத்தோடு இறுதி வரை வந்தால் கடைசி வரிகளில் அந்த relief. நல்ல முடிவு.
    விரைவாக நம் சமூகத்தில் இந்த முதிர்ச்சி வந்துவிட வேண்டும்.
    ரீல் மயக்கம், சினிமா மயக்கம், மது மயக்கம், போதை மயக்கம் எல்லாமே வன்முறைதான் வாழ்க்கை என்ற காட்டு வாழ்க்கை புள்ளியிலிருந்துதான் விரித்தபடி செல்கிறது.
    படிப்பு, பண்பாடு எதுவுமே வன்முறை மீதான ஈர்ப்பை குறைக்க முற்படுவதில்லை.

    உங்கள் எழுத்து.
    ஒரு வார்த்தை கூட மிகுதியாக இருப்பதில்லை. குறைவாகத் தெரிவதில்லை. அதுதான் என்னைப்பொறுத்தவரை உங்களின் முத்திரை.
    இரண்டாம் முறை மூன்றாம் முறை படிக்கும்போது மனதில் அசை போடும்போது மலைப்பாக இருப்பது இந்த வார்த்தை சிக்கனம் தான்.

    கொஞ்சமாக ஜெயமோகன் அவர்களின் சாயல் இந்தக் கதையில். வட்டார மொழி மட்டுமல்ல, அந்த நாயகனின் திகைப்பும் குழப்பமும் ஆன மனநிலை. அறிந்தும் அறியாமலும் குழந்தைக் காலத்துக்கான விசைக்கு ஆட்படும் அறிவும் தர்க்கமும் மேலோங்கி வரமுடியாமல் தயங்கி நிற்கும் அரை மயக்க நிலை. ஜெயமோகன் அவர்களின் கதைகளில் முதலில் நான் உணர்ந்த இந்த உணர்வுநிலை உங்களின் இந்தக் கதையில் காணப்படுகிறது.
    உங்களின் மற்ற கதைகளில் you are at a judgemental level, (கனமாக concerned ஆக சுமை தூக்குவது போல ).
    இதில் participating level. அதற்கேற்ற துள்ளல் நடை. மிக நன்றாக இருக்கிறது.

    வாழ்க வளமுடன்.
    சுமதி.

  2. Sankar Ganesh
    January 5, 2026 at 5:15 pm

    மிகச் சிறந்த வாசிப்பின்பம் அளிக்கும் கதை. முதன் முதலில் அஜிதன் எழுதிய ஆயிரத்தி முன்னூற்று பதினான்கு கப்பல்கள் வாசித்த போது அடைந்த வாசிப்பின்பமும் பரவசமும் இதிலும் உள்ளது. சிறு பிராயத்து அனுபவங்களை ஒட்டி எழுதும் போது அஜிதனின் எழுத்து மேலும் மிளிர்கிறது.

    கி ரா வின் சிறந்த கதைகளை வாசிக்கும் போது நாம் எல்லோரும் சந்தித்திருக்கக் கூடிய கதாபாத்திரங்களைக் கொண்டு நாம் சிந்திக்காத அல்லது தவிர்க்கும் கோணங்களில் உள்ள அறப் பிரச்சனைகளை எளிதாக பேசி செல்வார். அந்த அழகியல் அஜிதனிடமும் சிறப்பாக வெளிப்படுகிறது.

    ஜார்ஜ் புஷ்ஷுடன் அந்த சிறுவர்கள் தங்கள் வட்டப்பேர்களை மட்டும் இழக்கவில்லை. தங்கள் குழந்தைமையின் ஒரு பகுதியையும்தான். எல்லோருக்கும் சிறார் பருவத்திலிருந்து சட்டென்று பெரியவனாவது பெரும் உடைவுதான்.

    வாழ்த்துக்கள் அஜிதன். சிறப்பான பல படைப்புகளை எழுதும் காலகட்டத்தில் உள்ளீர்கள் என உணர்கிறேன்.

    நன்றி
    சங்கர் கணேஷ்

  3. M. Krishnan
    January 5, 2026 at 7:03 pm

    Ajithan,

    While your father, Dr. Jayamohan, delves into highly complex science fiction, you simplify storytelling in George Bushum, Vattaperum.

    The story initially presents itself as a nostalgic tale from childhood, but it actually addresses current social issues—particularly the cruelty of society towards outsiders. You portray Vattaper as an image that symbolizes how society treats others. I understand that it’s ethically wrong to label someone as an “outsider” or “other,” but I believe there needs to be a shift in the social mindset. This story strongly emphasizes empathy against societal notions and tactfully addresses the loss of empathy in the social mind.

    I believe this is the first time in literary history that a magazine is publishing three stories from different authors within the same family, and all three are, nevertheless, brilliant. Kudos, Kanna.

    Regards,
    M. Krishnan

  4. sivasankaran
    January 6, 2026 at 1:52 pm

    மிகச் சிறந்த கதை அஜிதன் என்னை பள்ளி நாட்களுக்கே கூட்டிச் சென்று விட்டீர்கள் அற்புதம்

  5. swamygmanohar
    January 6, 2026 at 11:02 pm

    பள்ளிக்கு சென்று திரும்பிய தருணமானது வாசிக்கையில் ; சிரித்து மாளவில்லை.
    “அஜிதா வலிக்கி” என படித்தவுடன் உடைந்தேன். இது தான் சமயமென்று, சட்டென்று வாத்து 32 அடி (அம்மா 8 + அப்பா 16) பறந்து
    “போட்டும்ல, எல்லாம் மாஞ்சிரும்”
    என தத்துவத்தில் முடித்து விட்டது.

    நற் அனுபவம் தந்த கதாசிரியருக்கு நன்றி.
    வெளியிட்ட வல்லினம் பதிப்பகத்துக்கு வந்தனம்.

  6. Krishnan Sankaran
    January 7, 2026 at 6:39 pm

    சிறுவயது மனவோட்டங்களை வார்த்தைகளில் சிறப்பாக வடித்திருக்கிறீர்கள். குறிப்பாக, அவன் வீட்டைவிட்டு ஓட எண்ணும்போது. வகுப்பில் கிடைக்கும் அதே அடி வீட்டிலும் கிடைத்திருந்தால் அவன் ஓடாமல் இருந்தால்தான் ஆச்சரியம். நான் படிக்கும்போது இதுபோல சிங்காரவேல், கதிர்வேல் குரூப்பில் இருந்து அடித்துக்கொண்டது நினைவுக்கு வருகிறது. சிறப்பு.

  7. Dhandapani
    January 8, 2026 at 7:34 am

    நன்றி அஜிதன். ஆசிரியர்களுக்கு இந்த பட்டப் பெயர்கள் பெரும் தலைவலி. மாணவர்களுக்கு இடையே சண்டை வர முதற்காரணம் அதுதான்.

  8. கிருஷ்ணன் சங்கரன்
    January 8, 2026 at 3:13 pm

    சிறுவர்களின் மனவோட்டங்களை சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். குறிப்பாக அவனுக்கு வீட்டை விட்டு ஓட எண்ணம் வரும் அந்தக் கையறு நிலை. வீட்டிலும் இதே வன்முறை இருந்திருந்தால் அவன் ஓடியிருக்கவே வாய்ப்பு. பெண் குழந்தைகளின் நிலைமை இன்னும் அபத்திரம். நான் அதே ஏழாவது படிக்கும்போது நிலக்கோட்டை நாடார் பள்ளியில் கதிர்வேல் குரூப், சிங்காரம் குரூப் என்று பிரிந்து மோதிக்கொண்டது நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள்.

  9. கடலூர் சீனு
    January 10, 2026 at 5:50 am

    ஒரு பயணம். இப்போதுதான் இல்லம் மீண்டேன். இந்த புத்தாண்டு துவங்கி நான் வாசிக்கும் முதல் புனைகதை அஜிதனுடையதாக இருக்கட்டும் என்று இங்கே வந்து இதை வாசித்தேன். கதையின் முதல் வடிவை முன்பே சில முறை வாசித்திருக்கிறேன். பத்திரிக்கையில் வெளியாகும் கதையே செம்மை செய்யப்பட்ட இறுதி வடிவம் ஆகவே மீண்டும் வாசித்தேன்.

    பொதுவாக கதை வாசித்து முடித்த உடன் நான் அதன் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் வாசிப்பது இல்லை.சில நாட்கள் பிறகே வாசிப்பேன். காரணங்கள் பல. இம்முறை கதை வாசித்துவிட்டு அப்படியே scroll செய்து பின்னூட்ட பதிவுகள் வாசித்தேன்.

    சில பின்னூட்டங்கள் புன்னகையை வரவழைத்தது. ஒரு மூத்த (நரைத்த தளர்ந்த) வாசகனாக, லட்சத்து முப்பது முறை சொல்லபட்டுவிட்டதை லட்சத்து முப்பத்தி ஓராவது முறையாக இங்கே சொல்லலாம் என நினைக்கிறேன்.

    இந்த இலக்கியச் சிறுகதை சமூகத்தில் என்ன பிரச்னை சமூகத்தில் எவை எல்லாம் மாற வேண்டியவை என்பதை முதன்மையாக கொண்டது அல்ல.

    வாசகரை கை பிடித்து அவரது பால்ய காலத்துக்கே அழைத்துச் செல்ல வந்த கதை அல்ல.

    நமது பள்ளி நாட்களில் நடந்தவற்றை நினைவூட்ட வந்த கதை அல்ல.

    இந்த கதை, அடிப்படையில் மானுட நிலை ஒன்றை குறித்து கலாபூர்வமான பரிசீலனை ஒன்றை நோக்கி வாசகனை அனுப்பூர்வமாக அங்கே அனுப்ப பால்யம் என்ற கற்பனை காலத்துக்குள் செல்கிறது.

    எந்த கற்பனை உலகுக்கும் அதன் உள்ளே செல்ல வழி, தன்மைய பாவம். நமக்கே அது நிகழ்ந்து, நமக்கு நிகழ்ந்ததை நாமே கதையாக சொல்வது போல அந்த கதைக்குள் நுழைந்து வாழ்வது.

    அப்படி இந்த கதைக்குள் வாழ்ந்தால்
    ஜார்ஜ் “அஜிதா வலிக்கிதுலே” என்று சொல்லும்போது அவன் என்னவாக இருக்கிறான், அங்கே துவங்கி “விடு லே எல்லாம் மாஞ்சிரும் என்று ஆறுதல் சொல்லும்போது” அவன் எப்படிப்பட்ட வாழ்க்கையை கடந்து வந்திருக்கிறான் என்று உணர முடியும்.

    செத்த கோழியை கிழித்து குதறும் நாயை காணும்போது ஜார்ஜ் நாயாக உணர்கிறானா அல்லது கோழியாக உணர்கிறானா? அது அவனுக்கு ஒரு விளையாட்டா? அதனால்தான் அவனில் அப்படி ஒரு சிரிப்பு எழுகிறதா?

    இறுதியாக மரண அடி வாங்கி நிற்கும் போது ஜார்ஜ் ஏன் வலி குறித்து எதுவும் சொல்ல வில்லை? வலி பொறுக்க பற்களை கடித்தபடி அவனுக்கு ஏன் அந்த சிரிப்பு?

    எண்ண எண்ண திகைக்க செய்யும் கதை. இதை பரிசீலனை செய்தால் தத்துவத்தில் இதில் இரண்டு தரப்பு உண்டு. மனிதன் அவன் ஆழத்தில் தீமை கொண்டவன். மனிதன் அவன் ஆழத்தில் நன்மை கொண்டவன்.இரண்டுமே அறுதி முடிவை எட்டாத வலுவான விவாத தரப்பு. இந்த இரண்டு தரப்பில் இந்த கதை எந்த தரப்பின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது?

    பிறன் என்பதை வரையறை செய்து ஒடுக்குவது. வன்முறை வழியே அடி பணிய வைக்கும் அதிகாரம் நோக்கி செல்வது. வன்முறை வழியே பேணப்படும் அதிகார சமநிலை. மனிதன் உள்ளே இயல்பிலேயே உறைந்திருக்கும் கொல்லும் இச்சை என பற்பல மானுட நிலைகளை நோக்கி அதன் விசாரம் நோக்கி இந்த கதை வழியே ஒரு வாசகன் பயணிக்க முடியும்.

    குறிப்பாக இந்த கதை தனது இறுதியில் கைக்கொள்ளும் இருண்மையின் கவித்துவம் தீவிர தமிழ் சிறுகதை மரபில் மிக அபூர்வமாக மட்டுமே நிகழ்வது.

    மீண்டும் வாசிக்கும்போது இவற்றை போன்ற அடிப்படை விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு வாசிக்கலாம்.

    கடலூர் சீனு.

Leave a Reply to Sumathi sambadanCancel reply