
‘எம் நிலத்துக்கான, எம் வளத்துக்கான, எம் ஆநிரைகளுக்குத் தேவையான அரசியலில் இருந்து என் எழுத்துத் தொடங்குகிறது,’ என்று வெற்றிச்செல்வன் இராசேந்திரன் குறிப்பிட்டாலும், அவர் எழுத்துகள் அரசியல் சீற்றமற்றவை. கழிவிரக்கம் கொள்ளாதவை. காடு மேடுகளையும் வெய்யில் மழையையும் இலகுவாகக் கடந்து செல்லும் இடையர்களின் வாழ்க்கைபோலவே அவரது எழுத்தும் இலகுவானது. காட்டாற்றின் போக்கிலே ஓடிக்கொண்டிருந்தாலும் கரையொதுங்கும் தருணத்திற்காக அலட்டிக்கொள்ளாது காத்திருக்கும் சிறு சருகின் உணர்வுநிலையைத் தருபவை.
கடந்த 13 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பொறியியலாளராகப் பணிபுரியும் இவரது இயற்பெயர் விஜயகாந்த். தமிழ்நாட்டின் தஞ்சை மண்ணைச் சேர்ந்த இவர், இடையர் குலத்தில் பிறந்து, வளர்ந்தவர். அந்த வாழ்வியலை புனைவாகவும் ஆய்வாகவும் கவிதைகளாகவும் குறும்படங்களாகவும் பதிவுசெய்து வருகிறார்.
அவரது ‘கிடை’ இதழ்களும் கீதாரியின் உப்புக்கண்டம் கவிதைத் தொகுப்பும் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தருபவை. ‘குளம்படி’ எனும் நாவலையும் ‘மனிதச் சிறகுகள்’ எனும் கவிதைத் தொகுப்பையும் எழுதியிருக்கும் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘செவகாளி’. சிங்கப்பூரின் அலர் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
வாழ்வின் அறம்
அறமும் நீதியும் காலம், சூழல், சமூகம் போன்ற பல காரணிகளால் வரையறுக்கப்படுபவை. எல்லாக்காலத்திலும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக அவை இருப்பதில்லை. தொல்குடிகளின் வாழ்க்கையில் அது இயல்பானதாகி இருப்பதால் அது குறித்த புரிதலும் இயல்பாக அமைகிறது
‘தண்டக்காசு’, ‘தண்டுகால்’, ‘செவகாளி’ என்று பல கதைகளில் அதைக் காணமுடிகிறது. இக்கதைகளில் கள்ளர்கள் என்பவர்கள் ஒருவகையில் அனுமதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கும் ஓர் அறமிருக்கிறது. அது மதிக்கவும்படுகிறது.
‘தண்டக்காசு’ ககையில் ஆடுகளைத் திருடி, மூன்றுநாள் அலைய வைத்தவன், ஐயாயிரம் ரூபாய் தண்டக்காசு கொடுத்து இரு ஆடுகளை மட்டும் கூட்டிப்போ என்கிறான். தேடியவரும் மறுபேச்சின்றி அதற்கு உடன்படுகிறார். இச்சம்பவம் கள்ளர்களுக்கும் கீதாரிகளுக்கும் உள்ள எழுதப்படாத உடன்படிக்கையை உணர்த்துகிறது. இதை உணர்த்தும் பல உரையாடல்கள் இக்கதையில் பல இடம்பெற்றுள்ளன. கள்ளர்களுக்கான லட்சணங்களையும் இந்தக் கதையில் அறியலாம். இக்கதையில் கிராமத்து மக்களும் திருடர்களும் நண்பர்களாகவே பழகுகிறார்கள். தங்கள் ஆட்டைத் திருடர்கள் திருட வரும்போது மூர்க்கமாக எதிர்க்கிறார்கள். ஆடுகளை மேய்ப்பதுடன் இரவெல்லாம் ஆடுகளைக் காவல் காப்பதும் அவர்களின் முக்கிய வேலையாகவே இருக்கிறது. திருடர்களைத் தாக்க பல வழிகளையும் மிளகாய்ப்பொடி தூவுவதுபோன்ற தந்திரங்களையும் கையாள்கிறார்கள். இக்கதைகளின் வழி தொழில் திருடர்களை மட்டுமே கீதாரிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது புரியவருகிறது.
‘செவகாளி’ என்னும் இன்னொரு கதையில், ஆடு திருட வருபவர்கள் “பொழப்புக்குக் களவாங்குறதா இருந்தா பரவாயில்ல. வேசயெடுத்து கறி திங்க களவாங்குறோம் தப்பித் தவறி இன்னாருன்னு தெரிஞ்சாக்க ஊருக்குள்ற தலகாட்ட முடியாதுடா,” என்றே சொல்கிறார்கள். திருடர்கள் பின்னர் மக்களால் பிடிபடும்போது கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.
இதில் குற்றம் எது? தொழில் தர்மம் எது? என்பது குறித்து, கதை மாந்தர்களின் உரையாடல்கள் மூலம் விளக்குவதும் அதன் விளைவுகளும் கீதாரிகளின் வாழ்வனுபவத்தை ஆசிரியர் நன்கு உணர்ந்திருப்பதைக் காட்டுகின்றன.
“வயித்துப்பசி இருக்குமட்டும் களவும் காவலும் அடிவயித்துப் பசி இருக்குமட்டும் காதலும் மோதலும் இருக்குமடா,” என்று கள்ளன் காத்தமுத்து சொல்லும் தத்துவார்த்தை இக்கதைகள் காட்டும் வாழ்க்கைகளே புரியவைக்கின்றன. இயல்பான, அழகான பல காதல்களையும் அந்தச் சமூகத்தின் பழக்கவழக்கங்கள், பண்புகளையும் கதை நிகழ்வுகளாகக் காட்டியுள்ளார் ஆசிரியர்.
சித்தப்பா முறையில் மணப்பதும், துணையை இழந்த பின் மறுமணம் செய்வதிலும், ஒத்துபோகாத மணவாழ்கையில் இருந்து விலகி வேறு வாழ்க்கையைத் தொடங்குவதிலும் பெண்களுக்கும் உரிமை இருப்பது பல இடங்களில் சொல்லப்படுகிறது. அறுத்துக்கட்டி கதையில் அண்ணன் பாம்பு கடித்து இறந்துவிட, மணமான சில காலமே ஆகியிருந்த அவன் மனைவியைத் தம்பிக்கு மணமுடிக்க முடிவெடுக்கிறார்கள்.
ஆணுக்கு இணையான பெண்கள்
ஆண்களைப் போலவே உறுதியும் உழைப்பும் கெட்டித்தனமும் இறுமாப்பும் கொண்ட வெற்றிச்செல்வன் காட்டும் ஆயர் குலப் பெண்க வியக்க வைக்கின்றனர். ஆணும் பெண்ணும் ஒன்றாகவே பாடுபடுகிறார்கள், பலாபலன்களை அனுபவிக்கிறார்கள். சின்னஞ் சிறுவயதில் கணவனை இழந்த செல்வி, தமிழ்ச்செல்வி, சரசு என எல்லாப்பெண்களுமே விதியை நொந்துகொள்ளாமல், ஆடுகளையும் தங்கள் குழந்தைகளையும் தனித்து வளர்க்கிறார்கள். “பெண்டாட்டி செத்தா புருஷனால ஒத்தப் புள்ளய வளர்த்தெடுக்க முடியாது, ஆனா பொட்டச்சியால பத்துப் புள்ளயப் பெத்தாலும் தனியாளா வளர்த்தெடுக்கலாமுடி” என்று சொல்வதை நிகழ்த்திக் காட்டுகிறாள் செவகாளி.
‘பெட்டையாடு’ கதையில் சின்னஞ்சிறு வயதில் மணமாகி, குடும்பத்தையும் ஆடுகளையும் கட்டிக்காக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் தமிழ்ச்செல்விக்கும் படித்து, ஆசிரியர் தொழில் செய்து ஆடு மேய்க்கும் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, வேறு வாழ்க்கை வாழும் ஆசை பிறக்கிறது. அதனால், கணவனைப் பிரியவும் அவனை இழக்கவும் நேரிடுகிறது. ஈர்க்கும் அழகியாக, இளவயதினளாக, இருந்தாலும், மறுமணம் இயல்பானதாக அச்சமூகத்தில் இருந்தபோதும், தன்பிள்ளைகளோடு தன் வாழ்வை அமைத்துக்கொள்வதில் உறுதிகொள்கிறாள். ஊர்ப்பேச்சுகளையும் சாடைகளையும் சட்டைசெய்யாது பட்டாம்பூச்சிகளைப் பச்சைக்குத்திக்கொள்ளும் அவள் மனமும் உயரப் பறக்கிறது. படிப்பு, வேலையென புற மாற்றங்களிலும்; கழிவிரக்கம், சுயபட்சாதாபத்திலிருந்து விடுபடுவது என அகச் சிந்தனையாலும் நவீன சிந்தனை கொண்டவர்களாக பெண்கள் வளர்ச்சி பெறுகின்றனர்.
ஒரு வேகத்தில் தோன்றும் எண்ணத்தின் விளைவுகள் எப்படி சரி செய்யமுடியாத விதியாக உருமாறுகிறது என்பதையும் இந்தக் கதை காட்டுகிறது.
எத்தனைதான் ஆண், பெண் பேதமின்றி உழைப்பிலும் அலைவதிலும் சமமாக இருந்தாலும், பரஸ்பர மரியாதையும் சம உரிமையும் கொண்டிருந்தபோதும், பெண் எனப்படுபவள் ஒரு படி குறைந்தவளாக இந்தச் சமூகத்திலும் இருக்கிறாள். எத்தனை மன உறுதியுடன் வாழ்க்கைச் சவாலை எதிர்கொண்டபோதும் சமூகம் தமிழ்ச்செல்வியை சொல்லால் துவைத்துத்தான் எடுக்கிறது. அதையெல்லாம் தாங்கி, கடந்து, சோர்வின்றி, நோக்கமே குறியாகச் செயல்படும் அந்தச் சிறுபெண், அச்சமூகத்தின் வலுவான நங்கூரமாகத் தெரிகிறாள்.
‘வானக்கண்ணி’ கதையில் சொந்த அத்தையிடமே மாமியார் கொடுமையை அனுபவித்து, கணவனை இழந்து, தாய்வீடு வரும் செல்வி. அண்ணனுக்காக அண்ணியின் வெறுப்பைப் பொறுத்துக்கொள்கிறாள் செல்வி. ஒரு கட்டத்தில் தனித்து வாழ முடிவெடுத்து நிறைமாதக் கர்ப்பிணியாக நிரைகளோடும் தாயோடும் கிளம்புகிறாள். வேறு ஊருக்குப் போகும் வழியிலேயே வலி கண்டாலும் கடைசிவரை பொறுத்துக்கொண்டு, பாதையிலேயே குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். தாயும் மகளும் மன உறுதியும் உடலுறுதியும் கொண்டவர்களாக இருந்தபோதும், பெண் குழந்தையைக் கொடுத்தாயே என்று இறைவனை நோகிறார்கள். தன் பிள்ளையும் மாறுகண்ணோடு பிறந்துவிட்டதே என்று மகள் கலங்குகிறாள்.
ஆனாலும், அடுத்த சில பொழுதுகளிலேயே ஆடுகளோடும் பிறந்த சிசுவோடும் பயணத்தைத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையை தொகுப்பின் எல்லாப் பெண்களும் தருகிறார்கள்.
சொல்லப்போனால் தற்கொலை செய்துகொள்பவர்களாகவும் வேலைக்குத் தயங்குபவர்களாகவும் குடித்துவிட்டு முடங்கிக் கிடப்பவர்களாகவும் சமயோசித புத்தி குறைந்தவர்களாலும் ஆண்களே இருக்கிறார்கள். அதனாலேயே கள்ளனிடம் அடிவாங்குகிறார்கள், பாம்பிடம் கடிபடுகிறார்கள். பாட்டாளி சமூகத்தின் இந்தப் பொதுத்தன்மை இடையர் சமூகத்திலும் இருப்பதை காட்டியுள்ளார் வெற்றிச்செல்வன்.
தொகுப்பின் நல்ல கதைகளாக ‘மூளி ஆடு’, ‘தள்ளு கெடை’, ‘தெண்டக்காசு’ கதைகளைச் சொல்லலாம்.
‘மூளி ஆடு’ கதையில் எதுவுமே இல்லாமல் தொடங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் முத்துக் கீதாரி, காலமாற்றத்தாலும் வாழ்க்கை மாற்றத்தாலும் மெல்ல மெல்ல எல்லாவற்றையும் இழக்கிறான். கதை. மகன் தங்கவேலு படித்து, வெளியில் வேலைக்குச் சென்றதாலும் வயதானதாலும் ஆடுகளைப் பார்க்கமுடியாமல் ஒவ்வொன்றாக இழக்கிறார்கள். மருமகனிடம் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பைவிட, அவன் ஒவ்வொன்றாக விற்றுக் குடிக்கிறான். பொறுப்பில்லாத அவனது செயல்பாட்டால் அவர்களது ஆடுகள் குறைந்துகொண்டே வருகின்றன. மகளும் கணவன் பக்கம் பேச, ஆடுகளையெல்லாம் விற்றுவிடச் சொல்கிறாள் அம்மா. ஆட்டின் வாசனையுடன் வாழ்ந்த அப்பாவுக்கோ ஆடுகளைவிற்க விருப்பமில்லை. மச்சானிடம் பேசி விடுவது என்று மகன் செல்லும்போது, குடிபோதையிலும் சிதறியோடும் ஆடுகளைக் கூட்டி வழிநடத்துகிறான் அவன். காது மடங்கி மூளியாக இருக்கும் ஆடு அதிர்ஷ்டம் கொண்டு வருகிறது. எத்தனை கோணல்கள், கோளாறுகள், பிரச்சினைகள் இருந்தாலும் கைதேர்ந்த மேய்ப்பன் மந்தையைப் பேணுபவனாகவே இருக்கிறான்.
சாமிக்கு நேர்ந்த கிடா களவுபோக, மிக நொந்துபோய், பங்காளிகள் முன்னிலையில் கிடா வெட்டமுடியாத அவமானத்தை நினைத்து வருந்தி, தேடி அலையும் கீதாரி கருப்பையா, ஆடுகள் இருக்கும் இடம் தெரிந்ததும், திருடனிடம் பேரம்பேசுகிறார். இறுதியில் ஒரு சினையாட்டையும் குட்டிபோட்ட ஆட்டையும் வாங்கி வருகிறார். நேர்ந்த கடாவை அந்தச் சாமியே எடுத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவதும், பாலுக்கு ஏங்கும் இளம் கன்றுகளுக்காக குட்டிபோட்ட ஆடையும், மந்தையை வளர்க்கப் போகும் சினையாட்டையும் வாங்கி வருவது என வாழ்வின் யதார்த்தத்தை அழகியலோடு சொல்லுகிறது ‘தெண்டக்காசு’ கதை.
சமூகத்தில், எதிர்கொள்ளும் போராட்டங்களையும் ஏமாற்றங்களையும் காட்டுவதுடன், அதிலியே உழன்றுகொண்டிருக்காமல் நகர்ந்துகொண்டேயிருக்கும் மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் கதை ‘தள்ளு கெடை’. உரிய கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றும் பெரும் பண்ணையாரைப் பழிவாங்க, அவரது ஐந்து ஆடுகளை வெட்டிக்கொல்லும் அந்த மனங்களில் இறுகலும் உறுதியும் வியக்கவைப்பவை. ஆடுகளை அடையாளம் தெரியாமல் கொன்றபின்னர், தங்கள் பெரியப்பாவுக்கு பயப்படும் சூதுவாதறியாத இளையர்களாகிவிடும் இயல்பு கதையை நீரோட்டமாக நகர்த்துகிறது. தொடர்ந்து பாட்டாளி மக்களை ஏமாற்றும் பணக்காரப் பண்ணையாரைப் பெரிய அளவில் பழிவாங்கும் எண்ணமோ சிந்தனையோ அந்த எளியமக்களுக்கு இல்லை. கதை சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கதையிலும் முன்னிறுத்தப்படும் அறம் என்பது, இடையனுக்கும் கள்ளனுக்கும் பெண்ணுக்கும் என அவரவர் நிலைகளில் பேசப்படுவது இத்தொகுப்புக்குச் சிறப்பைச் சேர்க்கிறது.
ரசனைமிக்க அனுபவச் சித்திரம்
கதைகள் எல்லாமே இடையர் எனும் இனக்குழுவின் குணங்கள், மனப் போக்கினால் புனையப்பட்டவை. ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டவை. ஒரு கதையின் தொடர்ச்சியை அடுத்த கதையில் காண முடிவதும், ஒரு கதையின் வழி மற்றொரு கதையைப் புரிந்துகொள்ள முடிவதும் புதியதொரு வாசிப்பு அனுபவம்.
மொத்தமாக வாசித்து முடிக்கும்போது ஓர் இனக்குழுவின் பாடுகளையும், கால, சமூக மாற்றங்களின் தாக்கம் அவர்களின் வாழ்க்கை முறையிலும் சிந்தைனையிலும் ஏற்படுத்தும் மாற்றங்களையும் முழுமையான உணர முடிகிறது.
அரிசியும் தானியங்களும் விளைவிக்கும் விவசாயிகள் பற்றி அறிந்த அளவுக்கு பாலும் இறைச்சியும் தரும் இடையர்கள் குறித்த அறிதல் இல்லாதற்கு ஒரு காரணம், அந்த வாழ்க்கையைப் பேசும் இலக்கியம் வளராததுதான். சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் பேசும் முல்லை நில வாழ்க்கைக்குப் பிறகு அச்சமூகம் குறித்து இலக்கியம் வழி அதிகம் அறிய முடிந்ததில்லை. பண்டை இலக்கியமும் அந்த மக்களின் குரலை நேரடியாக அறியத்தரவில்லை.
ஆடுகளுடன் வாழ்ந்த அனுபவமும், வாழ்வை எழுத்தாக்கும் திறனும், சூழலியலைப் பேணும் அக்கறையும் உள்ள வெற்றிச்செல்வன் பதிவு என்பதற்கு அப்பால், அறியப்படாத கதைகளையும் அனுபவங்களையும் வாசகர்களிடம் கொண்டு தருகிறார். அதன்வழி, மற்றொரு பார்வையையும் சிந்தனையையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.
கால மாற்றம், இடையர் பழக்க வழக்கங்கள், பாரம்பரியம், வாழ்க்கை முறைகள் போன்றவை குறித்து பதிவுசெய்வதில் ஆசிரியர் கொண்டிருக்கும் அதீத கவனம், கதைகளில் துருத்திக்கொண்டு தெரிவது கதையின் அழகியலைக் குறைக்கிறது. நினைவுகளில் தேங்கிய வாழ்வை பதிவுசெய்து வைத்துவிட வேண்டும் என்ற அவசரம், வாசகரையும் அவசரமாகப் பக்கங்களை ஓட்டிவிட்ட வைத்துவிட்டும். அசைபோடுவதற்கான கதைப் பின்னலும் சிந்தனையும் சேரும்போது இக்கதைகள் வேறொரு தளத்திற்குச் செல்லும்.
அனுபவங்களையும் வாழ்க்கையையும் பதிவாக்கும்போது அது உரைநடைச் சித்திரமாகவே இருக்கும். அதற்கும் உள்ளே சென்று, அந்த வாழ்வியல் மூலமாக புதிதாக ஒன்றைச் சொல்வது அல்லது அதுவரையில் நம்பப்பட்டு வந்த ஒன்றை மறுப்பது அல்லது வாசகனைக் கண்டடையச் செய்யவதே புனைவாகிறது.
‘தெய்வம் பார்த்தல்’ கதையில் சொந்த ஊரான தஞ்சாவூருக்குப் போக வேண்டும் என்று ஆண்டுக்கணக்காகத் தவம் கிடக்கும் கீதாரியை, இறுதியில் அவன் மகன் அழைத்துப்போகும்போது, அவரது கிடாவைத் திருடியவனைச் சந்திக்கும் இடம் சுவாரஸ்யமானது. அத்தனை நாள் காத்திருந்து, அவ்வளவு தூரம் பயணம் செய்து அண்ணனாகக் கொண்டாடியவரைப் பார்த்ததும் “நீதான்னே என்னுடைய நெலம்” என்று ஊரையும் சனங்களையும் பார்க்காமலேயே திரும்புகிறார். இடையனுக்கு ஆடு, மாடுகளும், மனிதர்களும்தான் நிலம். முன்னுரையில் வெற்றிச்செல்வன் குறிப்பிடுவதுபோல ‘நிலத்தைத் தோளில் சுமந்துகொண்டு அலைபவர்கள்’ அம்மக்கள். அந்த மக்களின் வாழ்க்கையே இந்தத் தொகுப்பு.
சிங்கப்பூரில் வளர்ந்த எழுத்தாளர்
சிங்கப்பூரில் நல்ல இலக்கியம் உருவாக முடியும் என்பதை மெய்ப்பித்து வருகிறார் வெற்றிச்செல்வன். 16 வயதிலிருந்து எழுதி வந்தாலும், இந்த நாட்டில், தங்கமீன் வாசகர் வட்டம் வழி நவீன கவிதைக்கு அறிமுகமானாவர்.
கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், 2020ல் வெளிநாட்டு ஊழியர்களுக்காக எல்லா மொழிகளுக்கும் பொதுவாக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில், ‘தேக்காவில் பொம்மை வாங்குபவன்’ என்ற தமிழ்க் கவிதைக்கு முதல் பரிசை வென்றதன் மூலம் கவனம் பெற்ற இந்தப் படைப்பாளர், தொடர்ந்து இயங்கி வருபவர். சிங்கப்பூர், தமிழக இலக்கிய அமைப்புகளிலும் செயல்பாடுகளிலும் பங்களித்து வருபவர்.
இங்கு வாழும் எல்லா மக்களையும் போலவே வருமானத்துக்காக பல மணி நேர உழைக்கிறார். அதிகப்படியாக, குடும்பத்தைப் பிரிந்து வாழும் துயரம், அத்தனை வசதியில்லாத வசிப்பிடச் சூழல் என்ற சிரமங்களும் உண்டு. எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் இயக்கமாகச் செயல்படுவதற்கும் எண்ணமும் சுய ஊக்கமும் உழைப்பமே தேவையென நிறுவி வருகிறார். இங்கிருந்தே சூழலியல் சார்ந்து இயக்கமாகச் செயல்பட்டும் வருகிறார்.
