1
மலைச்சரிவில் ஒரு மின்மினி
பேருவகையும் பெருமழையும் அருகிவிட்டிருந்த அந்த வறண்ட நிலம் அன்று விழாக்கோலம் கொண்டிருந்தது. ஒருவார காலமாய் களைகட்டிய கட்டுங்கடங்காத கொண்டாட்டங்களும் கொந்தளிப்புகளும் உச்சம் ஒன்றை எட்டிவிடும் மும்முரத்தில் இருந்தது. ஏழாம் நாளான அன்றைய இரவில் நடக்கவிருந்தது மிக முக்கியமான இணைவு. ஊரின் முதன்மை வீரன் என அறிவிக்கப்பட்டு, ஒரு வருடகாலமாய் போற்றப்பட்டு வந்த வல்லன், மயில் எனும் மடந்தையைக் கரம்பிடிக்க இருந்தான்.

ஒரு வருடம் முன்பு ஊரின் தென்கிழக்கு திசையில் நின்ற கோரக்கூத்தன் மலையின் மேனியை நீவியபடி ஊருக்குள் நுழைந்த இளங்காற்றின் நுணுக்கமான முணுமுணுப்பை நுகர்ந்தறிந்த மையக்குடில் முதியவள், தெருவில் இறங்கி மார்பில் கைவைத்து விம்மி அழுதாள். வடத்திசை நெடுக விரிந்துகிடந்த பொட்டல் காட்டின் கடைக்கோடியில், பட்டுப்போன மரம் ஒன்றின் அடிப்பாகத்தைப் பற்றி நின்ற அக்குலத்தின் தெய்வமான கோரக்கூத்தன் இருந்த திசையைப் பார்த்து, “என் கூத்தா!” எனக் கைகூப்பினாள். நெடிய கழிகளையும், சீராய் செதுக்கப்பட்டிருந்த குத்துவாளையும் எடுத்துக்கொண்டு பணிக்குச் செல்ல ஆயத்தமானவர்கள் அவள் அழுகுரல் கேட்டு, கையிலிருந்ததை அப்பால் வீசிவிட்டு, ஊர் முற்றத்தில் கூடினர். சிறுவர்கள் மற்றும் இளசுகளைப் பரிகசித்து வாய்பொத்திச் சிரித்த பெண்களைக்கூட அன்று எவரும் கண்டித்திருக்கவில்லை.
உடல் முழுக்க நீறு பூசி, வியர்வைச் சொட்ட தன் குடிலில் இருந்து குதித்திறங்கிய பூசாரி வானத்தைப் பார்த்து பற்களைக் காட்டினார். பிறகு இருமுறை நெஞ்சில் அறைந்துகொண்டு குடிகளின் பக்கம் திரும்பி மூன்று விரல்களை உயர்த்திக் காட்டினார்.
செய்தியைப் புரிந்துகொண்ட கூட்டத்தினுள் இரண்டொரு நிமிடங்களுக்கு மெல்லிய சலசலப்பு கேட்டது. சிறிது நேரம் கழித்து திடகாத்திரமான மூன்று ஆண்கள் கூட்டத்திலிருந்து வெளியேறி பூசாரியின் முன் நின்று அவர் பாதம்தொட்டு வணங்கினர்.
பூசாரி அவர்களது முகங்களைச் சில கணங்களுக்குக் கூர்ந்து படித்தார். பிறகு மூவரின் தலைமுடியையும் பிடித்து இழுத்துப் பார்த்தார். பிறகு அவர்களின் மார்புகளின் மேல் கைவைத்து சில நொடிகள் இமைமூடி நின்றார். பின்னர் அவர்களிடம் இருவிரல் காட்டிவிட்டு நேராக பொட்டல் காட்டை நோக்கி நடக்கத் துவங்கினார்.
ஊர் அவரைப் பின்தொடர, தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மூன்று இளைஞர்கள் கோரக்கூத்தன் மலையை நோக்கி ஓட்டம்பிடித்தனர். அவர்கள் வெளியிட்ட உக்கிரக் கூச்சல்கள் ஊரெங்கிலும் எதிரொலித்தன.
உயிரற்று, வெளிறிப்போயிருந்த அந்த மரத்தின் மேல் செங்காவி நிறத்தில் தீட்டப்பட்டிருந்தது கோரக்கூத்தனின் திருவுரு. மூன்று ஆள் உயரம் இருந்த கூத்தனின் பற்கள் யானை தந்தமென இருபுறம் விரிந்துகிடந்தன. வெளியே துருத்தியிருந்த அவன் நாக்கு, மார்பையும் தாண்டி தொங்கிக்கொண்டிருந்தது. தேகம் நெடுக வெவ்வேறு வடிவங்களினால் ஆன முட்களைப் பதுக்கிவைத்திருந்தான். மலைநாகம்போல் நீண்டு சுழன்றிருந்த தனது நெடிய, பருத்த ஆண்குறியால் அம்மரத்தை இறுகப் பற்றியிருந்தான் கூத்தன்.
விறுவிறுவென அந்த மரத்தை அணுகிய பூசாரி அதன் முன் மண்டியிட்டு தியானத்தில் ஆழ்ந்தார். காய்த்து வெடிப்புற்றிருந்த அவரது குதிகால் முழுக்க முட்கள் இறங்கியிருந்தன. காட்டினுள் வீசிய காற்றின் உறுமல் தனித்துவமான ஆக்ரோஷம் கொண்டிருந்தது. ஊர்மக்கள் அனைவரும் அவர் பின்னே அமர்ந்து தலைகுனிந்தனர்.
இரண்டு நாட்களுக்கு உணவும், நீரும், உறக்கமும் இன்றி அவர்கள் எல்லோரும் காத்துக்கிடந்தனர். குடிகளின் கூட்டுமனம் சோர்வுறுவதை தனது நுண்ணுணர்வின் நெருடலைக்கொண்டு நுகரும்தோறும் உச்சக்குரலில் கூத்தன் புராணத்தைப் பாடினார் பூசாரி. கூத்தனின் மாயப்பிறப்பை, அவனது பெரு வல்லமையை, பல துணைவிகளின் வழியாக அவன் பெற்றெடுத்த நூறு மைந்தர்களை, உடல் நெடுக பொத்தி வைத்திருந்த விஷமுட்களை தத்ரூபமாக எய்து அவன் புரிந்த போர்களைப் பற்றி விவரிக்கும் அக்கதைகளுக்குப் பக்தர்களின் உளச்சலிப்பை வேரறுக்கும் ஆற்றல் இருந்தது.
மூன்றாம் புலரியில் அங்கிருந்த சிறு குன்றின் மேல் ஏறிக் குந்திய பூசாரி தூரத்தில் தெரிந்த கோரக்கூத்தன் மலையை உற்று நோக்கினார். கிழட்டுப் பன்றியைப்போல் உருக்குலைந்து நிற்கும் அந்தச் சிறிய மலையின் ஒவ்வொரு அங்குலத்தையும் உள்ளங்கை ரேகையென அவர் அறிவார். அதன் உச்சியில், மந்தனமான பிளவு ஒன்றினுள் வீற்றிருக்கும் புராதன கூத்தன் கோவிலினுள் நுழைய அவருக்கு மட்டுமே அதிகாரம் இருந்தது. அங்கே கூத்தன் தனது மெய்யான ரூபத்தில் பொதிந்திருப்பதாக ஊருக்குள் பேச்சு இருந்தாலும் அதைக் காணும் வாய்ப்பு எவருக்கும் வாய்த்ததில்லை. ஆண்டுக்கொரு முறை அங்கே பூசனை இயற்ற நடுச்சாமத்தில் ஒற்றையாகச் செல்வார். அந்தக் கோவிலுக்குச் செல்லும் பாதை குறித்த ரகசியம் பூசாரியின் குருதிநிரைவிட்டு ஒருபோதும் நழுவியதில்லை. மலையை மட்டுமே நம்பி வாழும் குடும்பத்தின் வாரிசுகள் சிலர் வீம்புடன் கிளம்பி அதை இம்மி இம்மியாய் அளந்தபோதும் அப்பாதையையோ, பிளவையோ கண்டுகொள்ள முடியவில்லை. அத்தோல்வி அந்த மலையின் மகத்துவத்தை வானளவு உயர்த்தியது. அதன் ஆத்மாவுடன் தனது ஆத்மாவைக் கோர்த்து வாழும் பூசாரி அவர்களுடன், அவர்கள் ஊரில் வாழும் காரணத்தினாலேயே அந்த மலையைவிடவும் உயர்ந்தவராய் கருதப்பட்டார். மூன்று மழைக்காலம் முன்பு ஊரில் நிகழ்ந்த சில அசம்பாவிதங்களால் மலைக்குப் பெண்கள் செல்வது தகாத செயலென ஒருமனதாய் முடிவுசெய்யப்பட்டிருந்தது. அவ்வப்போது விறகு சேகரிக்கச் செல்லும் பெண்களின் போக்குவரத்தும் ஒழிந்திருந்ததால் தெய்வமும், ஒருசில பன்றிகளும், மேலும் சில விலங்குகளும் மட்டும் வாழும் பிரதேசமாய் மாறியிருந்தது அந்த மலை.
கோரக்கூத்தன் மலையை வெறித்தபடி அமர்ந்திருந்த பூசாரி திடீரென தனது வலக்கை முஷ்டியை உயர்த்தினார். அவ்வசைவை உடனடியாக கிரகித்துக்கொண்ட ஜனத்திரள் கூக்குரல் எழுப்பி ஆர்ப்பரிக்கத் துவங்கியது.
தென்கிழக்கு திசையிலிருந்து உதிரம்சொட்டும் உடலுடன் நடந்துவந்தனர் அந்த மூன்று இளைஞர்கள். அவர்களின் முகம் கிழிபட்டுச் சிதைந்திருக்க விழிகளில் வெற்றிக்களிப்பும் ரௌத்திரமும் இழையோடியது. பிளவுபட்டு ரத்தம் கசிந்துகொண்டிருந்த புஜம் மற்றும் மார்புத் தசைகள் துடிதுடிக்க, தடித்த வடம் ஒன்றை மூவரும் அவரவர் இடுப்பில் முடிந்து பிரம்மாண்டமான இரண்டு காட்டுப் பன்றியின் சடலங்களை இழுத்து வந்தனர்.
பன்றியின் உடற்காயங்களை, அதை இழுத்து வந்தவர்களின் விழுப்புண்களைக் கூர்ந்து படித்த பூசாரி மூவரில் வல்லனே முதன்மையான வீரன் என அறிவித்தார்.
மையக்குடில் கிழவி சிறிய கத்தி ஒன்றுடன் முன்வந்து அவ்விரு பன்றிகளின் தோலை உரித்து வீசி, அதன் ஊனைச் சரிசமாய் பங்கிட்டு ஊரில் மடந்தைகள் இருக்கும் எட்டு குடும்பங்களுக்கு அளித்தார். மாரிகாலத்தின் வருகையைப் பூடகமாய் அறிவிக்கும் காற்றின் முணுமுணுப்பை மூத்தோர் அறியும்தோறும் இயற்றப்படும் சடங்கு இது. தெரிவுசெய்யப்பட்ட மூன்று இளைஞர்கள் வெற்றுக்கைகளுடன் மலையேறி, உக்கிரம் மிகுந்த காட்டுப்பன்றிகளுடன் சமரிட்டு, வீழ்த்தி ஊர் மீள்வதும், அதன் ஊனை மடந்தைகள் தங்கள் கைகளால் சமைப்பதும், உணவை உண்டு அதில் தனக்கு உவப்பூட்டும் கவளத்தைச் சமைத்தவளைத் துணைவியென ஏற்றுக்கொள்வதும் ஒன்றின்பின் ஒன்றாக நடந்தேறும். தனக்கானவளைத் தேர்ந்தெடுக்கும் முதல் வாய்ப்பு முதன்மை வீரன் என பூசாரியால் பெயர்சூட்டப்பட்டவனுக்கு வழங்கப்படும். நிச்சயமான அந்த மூன்று ஜோடிகளுக்கு அடுத்த ஆண்டு மழைத் துவங்கும் வாரத்தில் திருமணம் நடக்கும். அவர்கள் வழி பிறப்பெடுக்கும் சிசுக்களால் வளம் பெருகும் என்பது ஐதீகம்.
மூவரையும் வரிசையாக அமர்த்திய பூசாரி அவர்கள் வாயைப் பிளந்து அதில் தன் கைப்படக் கலந்திருந்த மூலிகை நீரை ஊற்றினார். நெருப்பென எறிந்த அத்திரவம் அடிவயிற்றை முட்டிய கணம் அவர்கள் எகிறித் துடித்து, ஏதேதோ விசித்திர ஓலங்களைக் கிளப்பி, சித்தம் பிறழ்ந்ததைப்போல் தரையில் உருண்டு புரண்டனர். வெட்டிவைக்கப்பட்டிருந்த பெரிய இலைகளில் உணவு கவளங்கள் கொட்டப்படும் வரை அவர்கள் ஆட்டம் ஓய்ந்திருக்கவில்லை.
மற்ற இருவர் காத்திருக்க, வல்லன் நாய்போல் தவழ்ந்து இலையை அணுகினான். அவன் வாயோரம் எச்சில் சொட்டிக்கொண்டிருந்தது. கண்கள் கோரமாய் விரிந்திருந்தன. மூலிகையினால் அவன் உடல் கசித்த குருதி கருநீல நிறம் பெற்றிருந்தது. முதல் கவளம் ஊன்சோற்றை எடுத்து மணம்பிடித்ததுமே அவன் முகம் மலர்ச்சிகொண்டது. வெடுக்கென அதை வாயில்தள்ளி, விழுங்கிவிட்டு வானத்தைப் பார்த்து, “மயில்” எனச் கூச்சலிட்டான்.
கூட்டத்தின் கடைக்கோடியில் தன் அக்காவின் கைபற்றி நின்ற மயில் லேசாய் விதிர்த்தாள். அவளை அருகே அழைத்த பூசாரி வல்லனின் உடலில் வழிந்த உதிரத்தின் ஒருதுளியை எடுத்து அவள் நெற்றியிலிட்டார். கூட்டம் பேரோசை எழுப்பி வாழ்த்தியது.
அதற்கு சரியாக ஒரு வருடம் கழித்து ஊர்மண்ணில் மழையின் முதல் துளி விழுந்த கணத்திலிருந்து துவங்கியிருந்தது திருவிழா. இரண்டு நாட்கள் இடைவெளியில் பிற இருவரின் மணம் சீரும் சிறப்புமாய் முடிந்திருக்க, மலை வலுப்பெற்று ஓயும் ஏழாம் நாள் இரவில் நடக்கவிருந்த வல்லன், மயிலின் இணைவுக்காக ஊரே கூடியிருந்தது. அன்று விடியலில் இருந்தே ஊரில் மழை விழுந்திருக்கவில்லை. ஆனால் மயிலின் கரத்தை வல்லன் பற்றும் கணம் வானம் உடையுமென்றும், கோரக்கூத்தன் தங்களைக் கைவிடமாட்டான் என்றும் திடமாய் நம்பினர் ஊர்மக்கள்.
காற்றில் ஒருவித புழுக்கம் அடர்ந்தபோது பூசாரி தன் கையில் வைத்திருந்த தோற்கருவியை முரட்டுத்தனமாய் அறைந்தார். கிழக்குப்புறம் இருந்த சிறு குடிலினுள் இருந்து தோழர்களால் தூக்கிவரப்பட்ட வல்லன் கழுத்துவரை கள் அருந்தியிருந்தான். ஆடை விலகி, தடித்த அவனது குறி விடைப்புற்று நெளிந்தாடிக்கொண்டிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி, பற்களைக் கடித்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான் அவன். எவரிடமோ சூளுரைப்பதுபோல் அவன் விரல்கள் அசைந்துகொண்டிருந்தன.
அவன் முன் நின்று மந்திரம் ஓதிக்கொண்டிருந்த பூசாரி அவனுக்கு இணையான கள் மயக்கில் இருந்தார். வல்லனை மேலிருந்து கீழ்வரை ஒருமுறை நோக்கியபோது அவர் உடல் ஒருவிதமாய் வெடவெடக்கத் துவங்கியது. “கூத்தா!” என ஒருமுறை அலறிவிட்டு கூட்டத்தை முறைத்தார்.
பெரியவர்களின் ஆணையைப் பெற்ற சிறுமிகள் கூட்டம் மயிலை அழைத்துவர விரைந்தோடியது.
அப்போது கூட்டத்திலிருந்து முற்றிலுமாக விலகி, அதை ஒட்டுமொத்தமாய்ப் புறக்கணித்தவனைப்போல், அல்லது அதனால் புறக்கணிக்கப்பட்டவனைப்போல் ஓரமாக அமர்ந்திருந்த ஊர் பித்தன், “பா!! பா!!” என விசித்திரமாய் ஒலியெழுப்பினான்.
அதை செவிமடுத்த பூசாரியின் முகத்தில் பீதியின் ரேகை தோன்றியது. வெடுக்கென வலப்புறம் திரும்பினார். அவர் விழியசைவுக்கேற்ப கூட்டம் விலகிக்கொள்ள, சிதிலமுற்ற குடில் ஒன்றின் வாயிலில் அமர்ந்திருந்த பித்தன் காட்சி தந்தான். வழக்கமாய் எவ்வித உணர்ச்சித் துடிப்பும் தென்படாத அவனது பொம்மை முகம் இப்போது விகாரமாய் சுளித்துக்கொண்டிருந்தது. திடுமென அவன் கருவிழி இரண்டும் இமைகளுக்குப்பின் செருகிக்கொள்ள உடல் கிடுகிடுவென அதிரத் தொடங்கியது.
மயிலைத் தேடிச் சென்றிருந்த சிறுமிகள் திகிலுற்ற முகக்குறியுடன் திரும்பி பெரியவர்களின் காதில் ஏதோ சொல்லினர்.
அபாயம் மிகுந்த அந்த அமங்கலச் செய்தியை அவர்கள் பூசாரியிடம் தெரிவிக்கும் முன்பே அதை உணர்ந்துவிட்டவர். தென்கிழக்குத் திசை நோக்கி சில தூரம் ஓடி, இடுப்பில் கைவைத்தபடி மலையை உற்றுப் பார்த்தார். இருண்டிருந்த மலைச்சரிவில் மேல்நோக்கி ஊர்ந்துகொண்டிருந்த சிறிய ஒளித்துணுக்கைக் கண்ணுற்றவருக்கு நிகழ்வதென்ன என விளங்கிக்கொள்ள அரைக்கணமே அவசியப்பட்டது.
தெய்வமும், காட்டுப் பன்றிகளும், மேலும் சில விலங்குகளும் மட்டும் புழங்கும், பெண்கள் அனுமதிக்கப்படாத அந்தப் பிரதேசத்தினுள் கையில் தீப்பந்தத்துடன் நுழைந்துகொண்டிருந்தாள் மயில்.
மேல்நோக்கி நகர்ந்த ஒளித்துணுக்கு, உச்சியை ஒட்டி குறிப்பிட்ட ஓர் புள்ளியில் நிற்பதைக் கண்டபோது ஒருகணம் நிலைதடுமாறினர் பூசாரி.
2
பித்தன் கதை
கேலிக்குரிய கோழை ஒருவனின் வித்தில் விளைந்த சிறு செடியான சிம்மனை அழைத்துக்கொண்டு அன்று மலை பக்கம் சென்றிருந்தாள் மல்லி.
நான்கு மாரிகாலம் முன்பு, காற்றின் சன்னமான முணுமுணுப்பு கேட்டிருந்த ஒரு காலை பொழுதில் அவள் பிரியத்திற்குரியவனான கோரப்பன், அன்றைய இரவுச் சடங்கில் தான் மலையேறப் போவதாகவும், மூன்று இரவுகள் கழித்து முதன்மை வீரனாய் திரும்பியபின் அவள் சமைத்தச் சோற்றை உண்டபின், தன் உடல் உகுக்கும் உதிரத்தின் ஒருதுளி அவள் நெற்றியில் திலகமென குடியேறும் எனவும் வாக்களித்துச் சென்றிருந்தவன், பன்றியால் குதறப்பட்டு பிணமாக மீண்டிருந்த நாளிலிருந்தே துணையின்றி வாழ்ந்து வருபவள் மல்லி. வெளிப்படையாய் உரைத்திராதபோதிலும் வீரியம் மிகுந்த இளசுகள் அச்சம்பவத்திற்குப் பிறகு அவளைத் துர்சகுனமென கருதத் துவங்கியிருந்தனர். வாளிப்பான அவள் தேகத்தை ஊரின் அதிகார பீடத்தில் நெளியும் உயர்குடிச் செல்வந்தர்களின் கிழட்டு விழிகள் மட்டுமே மொய்த்தன. பிடாரிபோல் சீரும் தனது அன்னைக்கு மூச்சிருக்கும்வரை அக்கிழட்டுக் கரங்கள் தன் திசையில் நீளத் தயக்கம் காண்பித்தாலும், நாளுக்கு நாள் அருகிக்கொண்டே வரும் அவளது சுவாசக்காற்று முற்றோயும் கணம் வெகுதொலைவில் இல்லை என்பதை அவள் உணர்ந்தேயிருந்தாள்.
வெப்பம் தணிந்து சூழல் இதமாகிப்போயிருந்த அந்த மாலை வேளையில் அப்பாவி சிம்மனை அழைத்துக்கொண்டு மலை பக்கம் வந்திருந்த மல்லி, துவக்கத்தில் தற்செயலாகவும், பின்னர் முழுபிரக்ஞையுடனும் அவனது புறங்கையைத் தனது நடுவிரல் நகத்தால் வருடினாள். அத்தொடுகை உணர்ந்து வியர்த்துக் குளிர்ந்திருந்த அவன் வலக்கரம் லேசாய் நடுக்குற்றாலும் முகம் எவ்வித சஞ்சலத்தையும் வெளிக்காட்டவில்லை.
வேகமாய் முன்னேறிச்சென்ற மல்லி கீழே சிதறிக்கிடந்த வழுவழுப்பான கற்கள் சிலவற்றைக் கைநிறைய பொறுக்கிக்கொண்டாள். பிறகு சிம்மனை அருகே அழைத்து, தனது கைகளில் பாரம் இருப்பதனால், தனது முகத்திலும், கழுத்திலும், முதுகிலும் வழியும் வியர்வையைத் துடைத்துவிடும்படி வேண்டுகோள் விடுத்தாள்.
சிம்மன் அவள் கைகளில் இருந்த பாரத்தை வாங்கிக்கொள்ள முன்வந்தான். மல்லி உச்சுக்கொட்டி, முறைத்ததும், வேறு வழியின்றி அவள் சொன்னதை எந்திரத்தனமாக இயற்றினான்.
உணர்ச்சியற்ற அத்தீண்டல் தனக்கு உவகையளிப்பதைப்போல் ஓரிரு நொடிகள் தனக்கே என நடித்துக்கொண்டாலும் விரைவில் அவள் உள்ளம் சலிப்பினால் சுருங்கிப்போனது. உடலை வெறிவந்தவளைப்போல் உசுப்பிவிட்டு விலகிச் சென்றாள் மல்லி.
வலிகொண்டவனின் முகபாவத்துடன் அவளைப் பின்தொடர்ந்தான் சிம்மன். உணர்ச்சிகரமான புலம்பல்களும், சிறு விம்மல்களுமாயச் சென்றுகொண்டிருந்த மல்லி திடுமென அப்படியே கீழேச் சரிந்ததும் பதைப்புடன் ஒருகணம் முழித்தவன் மறுகணமே அவளை நோக்கி விரைந்தோடினான். அழுகையால் முகம் நனைந்திருக்க, வலிபொறுக்காமல் கைகளை உதறிக்கொண்டிருந்த அவளது பிஞ்சுப் பாதத்தில் விரலளவு நீளமுள்ள கருநிற முள் இறங்கியிருந்தது. சற்றும் தயக்கம் காட்டாத சிம்மன் கீழே குந்தி அவள் பாதம் பற்றினான். மேலாடை விலகி வெளிப்பட்ட அவள் வயிற்றையும், பாவாடை உயர்ந்திருந்ததால் தென்பட்ட அவள் தொடையையும் பகிரங்கமாய் புறக்கணித்த அவன் பார்வை அவள் பாதத்தைப் பதம்பார்த்த முள்ளின் மீதே நிலைகுத்தியிருந்தது.
ஆனால் அவன் பிடியில் தற்போது புகுந்திருந்த திடம் மல்லியைக் கிளர்ச்சிக்குள்ளாக்கியது. இமைக்க மறந்தவனாய் அவள் பாதத்தை வெறித்துக்கொண்டிருந்த சிம்மன் மெல்ல அவளது மறுகாலைப் பற்றி அகற்றி, முன் நகர்ந்து, முகத்தை அந்த முள்ளின் அருகே கொண்டுவந்தபோது அவளது சுவாசம் ஆழம்பெற்றது. வலக்கையின் இருவிரல்களால் அந்த முள்ளைப் பிடித்து, லேசாய் அசைத்து, வெளியெடுப்பதைப்போல் எடுத்து, மீண்டும் உள்ளே லேசாய் நுழைத்து, இடமும் வலமும் என ஆட்டி, மிக மெதுவாய், தத்ரூபமாய், அறவே வலிகொடுக்காமல் அதை அவன் வெளியே இழுத்துக்கொண்டிருந்த கணம் மெல்லிய முனகல் ஒன்றை எழுப்பினாள் அவள்.
சிம்மன் லேசான அதிர்வுடன் அவளை நிமிர்ந்து நோக்கினான். அவள் முகம் முழுக்கப் படர்ந்திருந்த மாயப்புன்னகை அவனுள் ஏதோ ஒரு அசௌகரிய உணர்வைக் கிளர்த்தியது.
முள்ளை விருட்டென வெளியெடுத்து தூரம் வீசிவிட்டு எழப்போனவனை இருகரம்கொண்டு பற்றிய மல்லி , “சிம்மா!” என்று ஒருவித மன்றாட்டுடன் அழைத்தாள்.
அவளையே பார்த்துக்கொண்டிருந்த சிம்மனுக்குத் திடீரென பார்வை மங்கியது. அவ்வுணர்வை மயக்கம் என்றே அவன் முதலில் நினைத்தான். ஆனால் புறங்கழுத்தில் வியர்வை வழிவதை, பாதம் இரண்டும் பதறுவதை, காற்றில் கேசம் சிலிர்ப்பதைத் தன்னால் அறியமுடிவதை உணர்ந்தபோது அடிநெஞ்சில் அச்சம் வேர்விட்டது.
“எனக்கு… எனக்கு கண்ணு தெரியல” என்று பரபரப்புடன் அறிவித்தான்.
“ம்?” என்றாள் மல்லி.
“எனக்கு கண்ணு தெரியல… நீ தெரியல… எதுவுமே தெரியல” என்று அரற்றிய சிம்மன் தனது கைகால்களில் உணர்ச்சி முடங்குவதை உணர்ந்தான். ஒரே நொடியில் அவன் முகம் வெளிறி, தோள்கள் துவண்டு, மிகவும் நலிந்தவனாய் மாறிப்போனான் அவன்.
“என்ன? என்ன சொன்ன? சரி வா, போயிடலாம்” என்ற அவளது குரலில் அக்கறையும், பதற்றமும் இருக்கவில்லை. அதிருப்தியே தொனித்தது.
மலைச்சரிவில் குருடாகிப்போன அனாதை சிம்மனை மருத்துவக்குடில் வாசலில் கிடத்திவிட்டு திரும்பிப்பாராமல் சென்றாள் மல்லி.
ஏழு பௌர்ணமிகள் கழித்து பார்வையும், ஆரோக்கியமும் மீண்டபோது மல்லியின் அம்மா இறந்துவிட்டிருப்பதையும், ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவரான புலியன் கிழவருக்கு அவள் ஐந்தாம் தாரமாக வாழ்க்கைப்பட்டிருப்பதையும் அறிந்துகொண்ட சிம்மன் அதன் பிறகு மொழியிழந்தவனானான். அவன் கண்கள் நோக்கற்றவனின் கனவுத்தன்மையைச் சூடிக்கொண்டது. ஒருநாள் இரவு அவனை அடித்தும், கிள்ளியும் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவன், சற்றும் எதிர்வினையாற்றாத அவன் முகத்தைக் கண்டு எரிச்சலுற்று, “பித்தன்!” எனச் சொல்லிவிட்டு விலகியோடினான். அடர்ந்த நிசப்தத்தில் ஒலித்த அந்தச் சொல்லை ஊர் செவிமடுத்ததும் சிம்மன் எனும் இயற்பெயர் அதன் நினைவைவிட்டு நீங்கியது.
மூன்று மாரிகாலம் கழித்து புலியன் கிழவன் மாய்த்துப்போனபோது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள் மல்லி. கோரக்கூத்தன் பூசையும், பன்றி வேட்டையும், உண்டாட்டும் நிகழவிருந்த அந்த இரவில் பேற்று வலி உண்டானதால் தனது அன்னை வாழ்ந்த வீட்டிற்கு அழைத்துவரப்பட்டாள் அவள். ஊரே பொட்டல்காட்டை நோக்கி அணிவகுத்துச் செல்ல, தனது அன்னையின் குடிலுக்குள், ஒற்றைத்திரி விளக்கொளியில் முதிய செவிலியின் கையைப் பற்றிக்கொண்டு வேதனையில் புரண்டுகொண்டிருந்தாள்.
தொலைவில் நிகழ்ந்த பூசனையும், அருகினில் ஒலித்த கூச்சலும் அண்டாத உளநிலையில் இருந்த சிம்மன் சிதைவுற்ற அவன் குடிலின் வாசலில் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
சிறிய மூலிகை உருண்டை ஒன்றை நெருப்பில் காட்டி, துர்மணம் வீசும் அதன் புகையை மல்லியின் நாசியை ஒட்டி கொண்டு சென்றாள் செவிலி. அதை உள்வாங்கிய மல்லி உடனே தளரத் துவங்கினாள். கூச்சல்கள் மங்கி மெல்லிய முனகல்களாய் நிலைபெற்றதும் செவிலி பிரசவம்பார்க்கத் தொடங்கினாள். திண்டாட்டம் ஏதுமின்றி சிசுவை வெளியெடுத்த செவிலி அதை வெளிச்சத்தின் அருகே கொண்டுசென்று நோக்கியபோது மிரண்டுபோனாள். ஒரே பாய்ச்சலில் மல்லியை நெருங்கி அவள் கன்னத்தில் பலமுறை அறைந்து விழித்தெழச்செய்து அவள் கையில் இருந்த குழந்தையை, அதன் உடல் கொண்டிருக்கும் குறைப்பாட்டைச் சுட்டிக்காட்டினாள்.
கிறங்கிப்போயிருந்த மல்லி அந்தக் குறைபட்ட பகுதியைச் சில கணங்களுக்கு வெறித்து நோக்கினாள். பிறகு சட்டென செவிலியிலின் பிடியிலிருந்து அந்தச் சிசுவைப் பிடுங்கி, ஒரே நொடியில் அதன் கழுத்தை நொடித்துக் கொன்று அப்பால் வீசினாள்.
செவிலி அதிர்ந்துபோனாள்.
மல்லி “கோரக்கூத்தன் மழைய கொண்டு வருவான்னு ஊரு பட்டினி கடக்கற சமயத்துல, இப்படி ஒருத்தன் பிறந்தான்னு சேதி கசிஞ்சா எத்தன மனசு நொறுங்கிப்போவும்?” என்று பலவீனமாகக் கேட்டாள்.
“…”
“பெண் புள்ள, இறந்தே பொறந்துச்சுன்னு சொல்லுங்க”
“இந்த உடம்ப இப்ப நான் என்ன செய்யறது?” என்று பதிலுக்கு வினவினாள் செவிலி.
மல்லி சிந்தனையில் ஆழ்ந்தவாறு இடப்புறம் இருந்த சாளரத்தை நோக்கினாள். அதன் வழி தெரிந்த வெளியில் சிம்மனின் குடிலும், அதன் வாயிலில் இருந்த செம்மண் திண்டில் அமர்ந்திருந்த அவனது நிழலும் தென்பட்டது. நடுங்கும் தனது இடக்கரத்தை உயர்த்தி அத்திசையைச் சுட்டினாள் மல்லி.
செவிலி “பித்தனா?” என்று ஐயத்துடன் கேட்டாள்.
மல்லி மௌனமாக இருந்தாள்.
மூச்சற்றுக் கிடந்த குழந்தையை வெளியே எடுத்துச் சென்று வானத்தைப் பார்த்து அமர்ந்திருந்த பித்தனின் மடியில் போட்டாள் செவிலி.
அவன் அதை உணர்ந்ததாகவே தெரியவில்லை.
செவிலி, “மல்லி” என்று சொன்னதும் மெல்ல அசைந்த சிம்மன் தன் மடிமேல் கிடக்கும் சிசுவைக் கண்ணுற்றான். மெதுவாய் தணிந்தபடி அவன் பார்வை அக்குழந்தையின் அடிவயிற்றுப் பகுதியை எட்டியபோது அவன் உடல் விகாரமாய் நெளிந்து, நடுக்கம்கொண்டது. வெடுக்கென எழுந்துகொண்டு அந்தக் குழந்தையைத் தோள்மேல் போட்டபடி மலையை நோக்கி ஓட்டம் பிடித்தான்.
ஒலிகளைக் கொண்டே வெளியே நடந்தவற்றை அறிந்துகொண்ட மல்லி படுக்கை அருகே கிடந்த அந்த மூலிகை உருண்டையை முழுதாக வாயிலிட்டு மென்று விழுங்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டாள்.
கால்களைக் கிழித்து, உடல் கடுக்கச்செய்யும் முட்களை, தோள்களை இடித்து கன்றச்செய்யும் பாறைகளைப் பொருட்படுத்தாமல் எதனாலோ விரட்டப்படுவதைப்போல், சிசுவின் உடலைச் சுமந்தபடி, மலைமேல் வேகமாக ஏறிக்கொண்டிருந்தான் சிம்மன். உச்சியில் நின்ற பட்டுப்போன ஐந்து மரங்களுக்கு மத்தியில், வட்டவடிவில் பிரம்மாண்டமாய் நின்ற வழுக்குப்பாறை ஒன்றின் மேட்டில் அக்குழந்தையை வைத்துவிட்டு தூரம் சென்று குந்தி, வாயைப் பொத்திக்கொண்டான். தாளமுடியாத கூச்சமும், நடுக்கமும் அவன் உடலெங்கும் வியாபித்திருந்தது. அசைவற்றுக் கிடந்த அக்குழந்தையையே நோக்கிக் கொண்டிருந்த கண்களில் அச்சமும், துயரும் ஊடுகலந்து நீராய் பெருகிக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ ஓடிவந்த ஐந்து காட்டுப் பன்றிகள் அந்தக் குழந்தையை முகர்ந்தபடி அணுகி, அதன் கோரப்பற்களை அதன் மிருதுவான உடம்பில் பதித்தபோது விழியோரத்தில் ஒருதுளி நீர் கசிந்தது.
சிம்மன் திரும்பி நடந்தான்.
உண்டாட்டை முடித்துவிட்டு ஊர் மீண்ட மக்களிடம் பிள்ளைப்பேற்றின் போது உயிரைவிட்டாள் மல்லி என அறிவித்தாள் செவிலி. இளைஞர்கள் நால்வர் அவளைச் சிதையேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள, மற்றவர் அனைவரும் குன்றா முகமலர்ச்சியுடன் கலைந்துபோகத் துவங்கினர்.
அப்போது மூத்தவர் ஒருவர், சிதைவுற்ற குடிலின் வாசலில் சிம்மன் உருக்குலைந்து அமர்ந்திருப்பதைக் கவனித்தார். வழக்கம்போல் அவனைக் கடந்துசெல்ல உத்தேசித்தவர் அவனிடமிருந்து வெளிப்பட்ட மெல்லிய முனகலைக் கேட்டு திடுக்குற்று, சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, ஒருவித தயக்கத்துடன் அவனை அணுகி, செவியை அவன் வாயோரம் கொண்டு சென்றார். பின்னர் ஊருக்கே கேட்கும்படி, “பித்தன் சேதி சொல்றான்!” என்று கூச்சலிட்டார்.
குடிலினுள் சென்றவர்கள் அனைவரும் மீண்டும் வெளியேறினர். “என்னய்யா அது சேதி?” என்று எவரோ கிண்டலாகக் கேட்க, மீண்டும் அந்த மூத்தவர் அவன் வாயோரம் காதைக் கொண்டு சென்றார். பிறகு “பெண்கள் அணுக வேண்டாம்… பிள்ளை வேண்டாம்… பெண்கள் அணுக வேண்டாம்… பிள்ளை வேண்டாம்” என்று சிம்மன் சொன்னதை அவனைப்போலவே நடுக்கத்துடன் அனைவருக்கும் அறிவித்தார்.
ஊர் அன்று அதை வேடிக்கையெனவே உள்வாங்கியது. ஆனால் மறுநாள் மலைக்கு விறகெடுக்கச் சென்ற இரு பெண்கள், வீடு திரும்பி, தாங்கள் சேகரித்தவற்றைப் புழக்கடையில் கொட்டியபோது, அதில் சுள்ளிகளோடு சுள்ளிகளாய் கிடந்த நூற்றுக்கணக்கான பிஞ்சு விரல்களைக் கண்டு நினைவிழந்தனர்.
அச்செய்தியைக் கேட்ட பூசாரி அக்கணமே சன்னதம்கொண்டு வெகுண்டெழுந்து, கைகளை முறுக்கி தலைக்குமேல் உயர்த்தி, வெறியுடன் குதித்து, “கோரக்கூத்தன் எனக்கு விட்ட தூது இது!” என்று அறிவித்தார்.
அந்நாளில் துவங்கி கோரக்கூத்தன் மலையில் பெண்பாதம் பதியத் தடை எனத் தீர்மானிக்கப்பட்டது.
மொழியறியா நாடகமென நடப்பவற்றைப் பற்றின்றி கவனித்துக்கொண்டிருந்த சிம்மன் அப்படியே திண்டில் சரிந்து மயங்கினான். நடுச்சாமத்தில் நினைவுமீண்டபோது அவன் தலைமாட்டில் வெந்த கிழங்கு ஒரு துண்டும், மண்குவளை நிறைய நீரும் வைக்கப்பட்டிருந்தது. கிழங்குத் துண்டை எடுத்து நீரில் முக்கி விழுங்கியபோது ஏனோ விழிகளில் நீர் தேங்கியது. அப்போது அங்கு வீசிய காற்றில் நடனமுற்ற முட்புதரின் சலசலப்பு அவன் ஆழுள்ளத்தில், “மயில்” எனும் பெயராய் எதிரொலித்தது.
3
பீலியின் தீண்டல்
மயில் அனைத்தையும் வெறுத்தாள். தனது கரம் பற்றப்போகும் வல்லனை, கொலைவெறியும் கோரப்பசியும் சேர்ந்தாற்போல் மிளிரும் அவன் முழியை, அடிவயிற்றில் அதிர்வுகளைக் கிளப்பும் அரக்கச் சிரிப்பை, பாறைபோல் இறுகிக்கிடக்கும் அவன் மார்பை, அதனுள் பொதிந்திருக்கும் ஈரமற்ற இதயத்தை, காட்டுப்பன்றியின் கொழுத்த ஊனைக் குத்திக் கிளறிக் கூறுபோடும் குத்துவாளைப்போல் புடைத்து நிமிரும் குறியை, அதை கூச்சமின்றி, கர்வத்துடன் பிரகடனம் செய்யும் அவன் குணத்தை, அதை ஆர்ப்பரித்துப் பாராட்டும் இவ்வூரை, அவனைப்போன்ற ஒருவனுடன் மஞ்சம் பகிர்வது பெரும் பேறு என கணத்திற்குக் கணம் உரைக்கும் அக்காவை என அனைத்தையும் அறவே வெறுத்தாள்.
அக்காவின் அணுக்கத் தோழியான பொம்மையின் புழக்கடையில் அந்த ஓர் இரவில் சிதறிக்கிடந்த நூற்றுக்கான பிஞ்சு விரல்களைக் கண்ணுற்ற கணம் அவளது ஆழ்மனப் பரப்பில் சிறு ஊற்றென துளிர்த்திருந்தது அவ்வெறுப்பு. அகவை முதிர முதிர அவ்வூற்று பெருகி பெருங்கடலென உருவெடுத்திருந்தது. அன்று அவள் துயில நெடுநேரம் பிடித்தது. பொருளற்ற எண்ணங்களினால் அலைக்கழிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் கண்ணயர்ந்தபோது இடக்கால் கட்டைவிரலில் சுருக்கென்ற ஒரு குத்தலை உணர்ந்து விழிப்புற்றாள். சாளரத்தின் வழி குடிலினுள் பிரவேசித்த நிலவொளியில் அவள் படுத்திருந்த தோல்விரிப்பின் மேல் கிடந்த கருந்தேள் துல்லியமாய் தெரிந்தது. அக்கணம் அவள் உணர்ந்த வினோதமான பரவசத்திற்கு இணையான ஓர் உச்சத்தை அதன் பிறகு வாழ்ந்து கழித்திருந்த ஒன்பது மாரிகாலத்தில் ஒருபோதும் அவள் உணர்ந்திருக்கவில்லை. தேள்கொடுக்கின் நஞ்சு நாளங்களினுள் பரவ பரவ வறண்ட அவ்வூரில், அவ்வாழ்கையில் அன்றுவரை கண்டெயிராத பல ரம்மியமான வண்ணங்களை, மணங்களைக் கண்டுணரத் துவங்கினாள். பூத்துக்குலுங்கும் செடியை வட்டமிடும் வண்டுகளைப்போல் அவை அவளைச் சுற்றி மொய்த்தன. அப்படி குவியலின் மத்தியில் ஒரு செம்மண் திண்டையும், அதில் சுருண்டுக் கிடக்கும் வெளிறிப்போன ஓர் உடலையும் அவள் கண்டாள். கனிவு எனும் உணர்வின் ருசியை அக்கணம் தனது தேகமெங்கும் உணர்ந்தவள் அரைமயக்க நிலையில், அசைவற்றிருந்த ஒற்றைக் காலை இழுத்து இழுத்து நடந்து, அவனுக்கு உணவளித்துவிட்டு குடிலுக்குத் திரும்பினாள். மறுகணம் அவள் நினைவிழந்தாள். ஆனால் விழித்ததும் அவள் கண்டுகொண்ட ஊர் மருத்துவரின் முகம் அவள் ருசித்து உவப்புற்ற அனைத்தையும் ஒழித்து, என்றும் அகலாத வெறுமையை அவளுள் ரொப்பிச் சென்றது. அவளது பாட்டன் அவர் வாழ்ந்த காலத்தின் முதன்மை வீரன் என்பதால் அவளுக்கும் அவளது குடும்பத்திற்கும் என்றைக்குமே ஊருக்குள் பிரத்யேக செல்வாக்கு இருந்தது. சாவின் உடும்புப்பிடியிலிருந்து மயிரிழையில் தப்பிவந்தவளுக்கு அன்பை வாரிவழங்கியது ஊர்சனம். ஆனால் அந்த அன்பிற்கெல்லாம் அடித்தளமென திகழும் கொடிய நஞ்சை மட்டுமே அவள் நா ருசித்துக்கொண்டிருந்தது. சிம்மனுக்கு உணவு விளம்புவதால் கிட்டும் ஒருதுளி நிறைவும் இல்லையென்றால் இனம்விளங்காத இந்த நஞ்சு அவளைப் பிச்சியாக்கிவிடும் என்று அவ்வப்போது எண்ணிக்கொள்வாள்.
பன்றிப்போருக்கு வல்லன் தன்னை வழங்கிய கணமே அவனே முதன்மையானவனாய் வருவான் என்றும், அவன் தெரிவுசெய்யும் பெண்ணாக தானே இருப்போம் என்பதையும் அவள் உள்மனம் அறிந்துகொண்டது. மூன்றாம் நாள் புலரியில் மையக்குடில் கிழவி கையளித்த ஊனை வாங்கிச் சென்றவள், அதை தன்னால் இயன்றவரை அசுத்தமாக, அசூயைத் தரும் விதத்தில் சமைத்திருந்தாள். ஆனால் அனைத்தையும் மீறி அவள் அஞ்சியதே நிகழ்ந்திருந்தது. அன்று அவள் நெற்றியின் மேல் ஏறி, ஆசனமிட்டு அமர்ந்துகொண்ட உதிரச் சொட்டின் கெடுமணம் அவள் மூச்சுகுழாயை ஒடுக்குவதைப்போல் இருந்தது. வீடு திரும்பியதும் கைநிறைய மண் அள்ளி நெற்றியில் அடித்து அதை தேய்த்தழித்தாள். திருமணத்தன்று அதிகாலையில் பூசாரி அவளையும் வல்லனையும் அவர்களது இணைவிரவின் பாதுகாவலர்களாக திகழப்போகும் உயர்குடி மூத்தவர்களிடம் ஆசிவாங்க அழைத்துச் சென்றார். ஊரின் செல்வந்தர்களான அவர்களின் பார்வையை மயில் நினைவறிந்த நாள் முதலே வெறுத்து வந்திருந்தாள். இரவில் மணம் முடிந்தபிறகு, பொட்டல்காட்டில் நிற்கும் கோரக்கூத்தன் மரத்திற்குப் பின்னிருக்கும் மறைவில் வல்லன் தன் உடலை மேய்வதை மரத்திற்கு அப்புறம் அமர்ந்தபடி இவர்கள் கண்காணிக்கப்போவதை எண்ணும்பொழுது உடலே பற்றியெரிவதைப்போல் இருந்தது. அன்றைய பகல் முழுக்க ஊர்சனம் கள்ளும், கூத்துமாய் குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்க, அவள் மட்டும் தனது குடிலின் இருண்ட மூலை ஒன்றில் பிரமை பிடித்தாற்போல் முடங்கிக்கிடந்தாள். அஸ்தமனச் சூரியனின் பொன்னிற ஒளி குடிலின் உட்புறத்தை மினுமினுக்கச் செய்தபோது ஏனோ சிறுவயதில் கண்ட நூற்றுக்கணக்கான பிஞ்சுக் கைவிரல்களின் படிமம் சித்தச்சுவர்களினுள் சிறிய அதிர்வுடன் உருப்பெற்றது. கருந்தேளின் நஞ்சை உடல் ஏந்தியிருந்தபோது அவள் கண்ட நிறங்களும், உணர்ந்த பரவசமும் நினைவில் மீண்டு நெஞ்சை நசுக்கியது.
இருள் கவிந்தபோது குடிலுக்குள் பரபரப்புடன் ஓடிவந்த அக்கா அவளைக் குளித்துக் கிளம்பச்சொல்லி அதட்டினாள். உயிரற்ற முகபாவத்துடன் புழக்கடை நோக்கிச் சென்றவளைக் கைப்பற்றி இழுத்து ஆரத்தழுவி, “இது யாருக்கும் கிடைக்காத பாக்கியம்… வல்லன், இந்த ஊர் இதுவர பாக்காத வீரன்!” என்று காதுக்குள் சொன்னாள். பிறகு அவளது அடிவயிற்றைத் தொட்டுக் காட்டி, “நீ புண்ணியம் செஞ்சவ!” என்று முணுமுணுத்து முறுவலித்தாள்.
மயில் அவள் விழிகளைப் பார்த்தாள். பிறகு ஒன்றும் சொல்லாமல் பின்புறம் சென்றாள்.
நீரை அள்ளி உடல்மேல் தெளித்துக்கொண்டபோது அவள் பார்வைத் தானாக தொடுவான் எல்லையை நாடியது. பின்னர் அது சற்று தொலைவில் நிழல்போர்த்தி, பிணம்போல் நிசப்தமாய் அமர்ந்திருந்த கோரக்கூத்தன் மலைமேல் நிலைத்தது. உருவும், உள்ளமும் முதிர்ச்சிபெற்ற நொடியில் துவங்கி தனது ஆழ்மனப் படுகையில் ஆறாமல் இருக்கும் துயரின் வடு ஒன்று கூர்முனைகொண்ட ஈட்டியென உருவெடுத்து தனது விலாக்கூட்டை முட்டித் தகர்ப்பதன் வேதனையை உணர்ந்தாள். இடக்கால் கட்டைவிரல் தானாக நிலத்தில் பலமாய் ஊன்றிகொண்டது. அது கொடுத்த வலியில் ஒருகணம் தன்னை மறந்தவளாய் காலத்தில் பின்னோக்கி பயணித்து, உள்ளத்திற்கு நெருக்கமான அந்த இரவை மனரீதியாய் தீண்டி மீண்டாள். இமைமூடித் திறந்தபோது அன்று அனுபவித்திருந்த வண்ணங்களும், சுகந்தங்களும் அன்றைப்போலவே அவளைச் சுற்றி சிறு வளையம் ஒன்றைத் தீட்டியிருப்பதைப்போல் இருந்தது. அதன் மையத்தில் அப்போது தெரிந்த கோரக்கூத்தன் மலை அவளை வெகுவாய் கவர்ந்தது. அக்கணம் மிக மெல்லிதாய் உதித்த விசும்பல் ஓசையை நுகரும் செவிகளை அவள் மட்டுமே கொண்டிருந்தாள். மலை உச்சியில் ஜனனமெடுத்த ஓசை ஒன்றின் எதிரொலியே அது என கிரகித்துக்கொள்ளும் அறிவாற்றலும் அவளிடமே இருந்தது. சொல்லிலடங்கா பரவசத்தை வழங்கும் இன்மையெனும் மாயச்சரடு அவளைச் சுண்டியிழுக்க, ஒருகணம் கூட தாமதிக்காமல் ஒளிப்பந்தத்துடன் தென்கிழக்கு திசைநோக்கி ஓடினாள்.
ஊரை ஓர் எல்லைக்குள் அடக்கி, அதற்கொரு வடிவமும் ஒழுங்கும் கொடுப்பதன் வழி காவலை உறுதிசெய்து, அதன் மூலம் அதனுள் கட்டமைக்கப்படும் அனைத்து சட்டங்களுக்கும் திடமானதோர் அஸ்திவாரத்தை வகுத்தளிக்கும் முள்வேலிக்கு அப்பால் எட்டுத்திக்கிலும் படர்ந்துகிடந்த நிலத்தில் கால்பதித்த கணம், தான் என அவள் கொண்டிருந்த அனைத்தும் அவள் ஓட்டம் கிளர்த்தியிருந்த புழுதியோடு புழுதியாய் கரைந்தழிந்தது. எதுவாக அமைந்திருந்தோமோ அதுவாக இனி ஒருகணம் கூட நீடிக்க இயலாது எனும் தன்னுணர்வு அன்றுவரை அவள் சுமந்து சலித்திருந்த பேரெடை ஒன்றை இடித்துத் துகளாக்கியது. எதிர்ப்படும் அனைத்திற்கும் அவள் உள்ளத்தின் ஒரு பகுதி எதிர்வினை ஆற்ற முன்வந்தாலும் அதை மீறிய விசை ஒன்று அனைத்தையும் அற்பமென மாற்றிக் காண்பித்தது. மலைச்சரிவில் அவளைத் தாக்க முற்பட்ட பன்றிகள் அனைத்தும் அவள் கையிலேந்தியிருந்த தணலைக் கண்டு பதறிப் பின்வாங்கின. சுற்றிலும் ஒலித்த மழலையின் அழுகுரல்களை, பாதங்களில் அவ்வப்போது தட்டுப்பட்ட சிறிய மண்டையோடுகளை, முட்களின் குரூரத் தொடுகையினால் தேகம் நெடுக கசிந்துச் சொட்டிய இளங்குருதியை, கருநீல நிறம் பெற்றுவிட்டிருந்த தனது உதடுகளை, நீலம்பாரித்திருந்த விரல்நகங்களை, பட்டுப்போன மரங்களின் உச்சிக்கிளைகளில் அவ்வப்போது தென்படும் மனித உருவத்தை அவள் கருத்தில் கொள்ளவேயில்லை. பிச்சியைப்போல் சிரித்துக்கொண்டும், தாளமுடியாத உணர்வெழுச்சியில் அழுதுகொண்டும் உச்சியை நோக்கி நில்லாமல் ஓடினாள் மயில். திடீரென ஒருவன் அவளுடனே ஓடிவந்தான். மறுகணம் அவன் மாயமாய் மறைந்துபோனான். ஒருகணம் அடர்த்தியான நிசப்தம் சூழ்ந்து அவள் நெஞ்சின் எடையை அதிகரிக்க, மறுகணம் பெரும் ஓலம் ஒன்று உதித்து, ஒருவித எச்சரிக்கை குரலென அவதரித்தது. பக்கவாட்டில், எப்போதோ ஸ்திரமாய் நின்று, உயிர்ப்புடன் இருந்த ஏதோ ஒரு கட்டுமானத்தின் சிதைக்கூளத்தின் மேல் சிரம் மழிக்கப்பட்ட ஒரு பெண் வெற்றுடம்பாய் கிடந்தாள். திடீரென புதர்களின் பின்னிருந்து திரண்டு வந்த நூற்றுக்கணக்கான பன்றிக்குட்டிகள் அவ்வுடலைக் குதறி, மேயத் தொடங்கின. கொழுத்த பன்றி ஒன்று அவளது சடலத்தை மேல்நோக்கி வீசி முதுகில் ஏந்திக்கொண்டு அங்கும் இங்கும் உலா வந்தது. பிற பன்றிகள் அதை உறுமலுடன் வேடிக்கை பார்த்தன. பிறகு பொறுமையிழந்து அப்பெண் உடலைக் கீழே இழுத்துப்போட்டு மேலே பாய்ந்தன.
மயில் எச்சில் விழுங்கினாள். ஆனால் மறுநொடியே அந்த அபத்த அலை அவளை ஓங்கி அறைய, எதற்கோ வெடித்துச் சிரித்தாள். அப்போது உச்சியில் இருந்து மீண்டும் அந்த விசும்பல் ஒலி கிளம்பியது. உடனே வேகமெடுத்து மலையேறத் துவங்கினாள். செங்குத்தாய் நின்ற சிறிய பாறையின் பரப்பில் இருந்த பிளவுகளில் கால்பதித்து ஏறி, சமதளத்தை அடைந்து நிமிர்ந்தபோது அவள் எதிரே ஒருவன் நின்றுகொண்டிருந்தான். இருட்டில் அவன் முகமும், உடலும் தென்படவில்லை என்றாலும் மயிலினால் அவன் பற்களைக் காண முடிந்தது. ஏனோ அவை ஊர்ப்பித்தனை அவள் நினைவுக்குக் கொண்டுவந்தது. மயில் அவனைக் கடந்து உச்சியை நோக்கிச் சென்றாள். அங்கே பிரம்மாண்டமாய் நின்ற பாறை ஒன்றன் மேட்டை எட்டியதும் ஒரே ஒரு கணம் அந்தப் பரவசம் அவள் தேகம் நெடுகப் படர்ந்து, இனிமையூட்டியது. அதில் முற்றாகத் திளைத்து நிறைவுறும் முன்பே அது ஒட்டுமொத்தமாக ஒழிந்துபோனது. வாழ்வில் என்றும் உணர்ந்திராத ஓர் வெறுமையை அப்போது உணர்ந்த மயில் செய்வதறியாமல் மண்டியிட்டுக் கதறியழுதாள். பிறகு தன் கழுத்தைத் தானே நெரித்துக்கொள்ள முயன்று பார்த்தாள். அப்போது மீண்டும் அந்த விசும்பல் சத்தம் கேட்க எதிரே சில அடி தொலைவில், அவளைப்போலவே குறுகி அமர்ந்திருந்தவன் மெல்லத் துலங்கி வந்தான்.
அவன் உடல் அதிர்ந்துகொண்டிருப்பதை அங்கிருந்தே காண முடிந்தது. மயில் எழுந்து நின்றாள். ஏதேதோ நஞ்சைச் சுமந்தோடிய ரத்தம் அவள் நாளங்களினுள் அனலாய் தகித்துக்கொண்டிருந்தது. உடல்முழுக்க அதன் கசப்பே இருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் கனிவின் இனிப்புச்சுவை ஊற்றெடுப்பதை உணர்ந்த மயில் அந்த மனிதனை அணுகிச் சென்றாள். நெருங்க நெருங்க அவனது அழுகுரல் வலுத்தபடியே இருந்தது. இருகரங்களால் தனது நிர்வாண உடலைப் பொத்தியபடி விம்மியழுதுகொண்டிருந்தான் அவன். மிருதுவான அவனது சருமம் அவளுக்கு மீண்டும் சிம்மனை நியாபகப்படுத்தியது. இதழ்களில் மெல்லிய புன்னகை மலர, கண்களிலிருந்து கண்ணீர் நில்லாமல் கசிய அவன் அருகே நின்றுகொண்டாள். அவளை ஏறெடுத்து நோக்க தயக்கம் காண்பித்தவனின் மயிரற்ற உச்சந்தலையையே நோக்கிக்கொண்டிருந்தவள், கருணையுடன் அதை மெல்ல வருடிக்கொடுத்தாள்.
அவன் அதிர்ந்தான்.
மறுகணம் மேலே கருமுகில் உடைந்து மாரி பொழிந்தது.
4
விமோசனம்
கோரக்கூத்தனைக் குலதெய்வமாய் ஏற்றுவாழும் அவ்வூர் அப்படியோர் மழையை அன்றுவரை கண்டிருக்கவில்லை. கடுஞ்சினக்காரனென கிழட்டு நாக்குகளால் முன்னிறுத்தப்படும் கூத்தன், தாங்கள் அறியாமல்செய்த பிழை ஒன்றிற்கு ஆற்றும் மறுமொழி இதுவோ என அனைவரும் வெருண்டனர். வடமேற்கு திசையிலிருந்து கால்நடையாய் வந்து, இந்நிலத்தில் வேரூன்றி தளிர்த்து கிளைவிட்ட காலம்தொட்டு அடிபிறழாமல் நிகழும் மாரிகால வீரமைந்தன் திருமணம் அன்று ஒருநாள் பிந்தி எட்டாம் நாளுக்கு மாற்றப்பட்டது ஏதேனும் துர்சகுனமோ என ஐயமுற்றனர். மூளியாய் நின்ற மரங்களின் மெல்லியச் சிரிப்பும், உயிரற்றிருந்த புதர்கொடிகளின் சிலிர்ப்பும் அவ்வச்சத்தைச் சற்று தணிப்பதைப்போல் தோன்றினாலும் ஊர் பூசாரியிடம் தென்பட்ட விசித்திர மாற்றங்கள் அவர்களை நிலைபெற அனுமதிக்கவில்லை.
தனக்கேயான அம்மலையை, அசாதாரண வேகத்துடன் ஒரு பெண் அளந்ததும், அனாதிகாலமாய் தங்களது குருதிநிரையினுள் புதைந்திருக்கும் அந்த ரகசிய ஸ்தானத்தை அலட்டலின்றி அவள் எட்டியதும், அக்கணம் பார்த்து முகில்திரைக் கிழிபட்டு மழை விழுந்ததும், அவரது விலாப்பகுதியில் பிடிபட்டப் பறவையின் சிறகடிப்பை ஒத்த ஓர் படபடப்பை உண்டாக்கியது. வாழ்விலே முதல் முறையாக ஊர்சனத்தின் பார்வையை நேரடியாய் எதிர்கொள்ள தயக்கமாக இருந்தது. கூரையற்ற குடிலில் இருப்பதைப்போல் ஒருவித பாதுகாப்பின்மையை உணரலானார். பின்னர் அவ்வுணர்வுகளையே உந்துவிசையென பயன்படுத்தி நின்ற இடத்திலேயே இருமுறை குதித்து, “ஓ!” என கூச்சலிட்டார். பிறகு அதே உக்கிர குரலில் வல்லனை அருகிலழைத்து, “வல்லா!! கூத்தன் சேதி… இது உனக்கான இன்னொரு போர்! போ! உடனே போ! அவள மீட்டு வா!” என்றார்.
கூட்டாளிகள் இருவரைத் திரட்டிக்கொண்டு கையில் படைக்கலன்களுடன் கூத்தன் மலையை நோக்கிச் சென்ற வல்லன் அதன் அடிவாரத்தில் மயக்கநிலையில் கிடக்கும் மயிலைக் கண்டு அதிர்ச்சியுற்றான். பிறகு அவளை அள்ளி, தோள்மேல் போட்டுகொண்டு ஊர்திரும்பினான்.
பெருநிகழ்வொன்றை எதிர்நோக்கி, ஆசிவழங்கி அனுப்பப்பட்டவர்கள் உடனடியாக திரும்பியதையும், தூக்கிவரப்பட்ட நீலம்பாரித்திருந்த மயிலின் உடலில் சீரான மூச்சிருப்பதையும் கண்ட பூசாரிக்கு ஒரு கணம் அந்த மலையும், அதனைச் சுற்றி அமைந்த இந்நிலமும் அந்நியமாகிவிட்டதைப்போல் தோன்றியது. ஏற்ற இறக்கமின்றி ஒரே சந்தத்துடன் பெய்த மழை, சுற்றத்தின் ஆடை அகற்றி, புதுப்பித்து வேறொன்றாய் மாற்றிவிட்டதைப்போல் பட்டது. ஏதோ சொல்ல வந்தவருக்குக் குரலெழாததால் நின்ற இடத்திலேயே உடலை முறுக்கியும், நாக்கை மடித்தும், வயிற்றில் அடித்தும், ஆங்காரக்குரலெடுத்து உறுமியும் தனது பிறழ்வைச் சமன்செய்துகொண்டார். பின்னர் விழிப்பாவை இரண்டையும் மூக்கின் நுனியில் குவித்தபடி இமைகளைத் தாழ்த்தி, முகத்தை விசும்பை நோக்கி உயர்த்தினார். அருந்திய கள்ளின் மயக்கம் ஒரே நொடியில் மிகுதியானதைப்போல் தோன்ற, அந்நாள் அவரை அசங்காமல் அமர்ந்திருந்த பீடத்திலிருந்து வெடுக்கென வழுக்கிய சித்தம் ஆழ்மனக் குகையினுள் இருந்த குருதிச் சுனையின் பரப்பின் கீழ் என்றென்றும் வசித்துவரும் தனது முன்னோரிடம் தஞ்சம் புகுந்தது.
“இனி என்ன செய்வேன்?” என்று எண்ணங்களினால் கேட்டார் பூசாரி.
உள்மனக் குரல் ஒன்று “செய்யவேண்டியதை செய்” என்றது.
“என்ன?”
“சடங்கு… செய்யவேண்டிய சடங்கை செய்துமுடி… சடங்கு ஜெயிச்சா, உன் சொல்லும் ஜெயிக்கும்!”
இமைகளை விலக்கிய பூசாரியின் உடம்பில் புதுவித உத்வேகம் குடிபுகுந்திருந்தது. வல்லனைப் பார்த்து, “வீரா! பொழுது கனிஞ்சாச்சு!” என்று கூவினார். பிறகு ஓரமாய் நின்றுகொண்டிருந்த முதிய செவிலியைக் கைகாட்டி அழைத்து, மயிலைச் சுட்டிக்காட்டி, “கண் திறக்கணும்… கண் திறந்தா போதும்… சீக்கிரம்… பொழுது கனிஞ்சாச்சு!” என்று ஆணையிட்டார். ஏனோ அதன் பிறகு அவர் விழிகள் ஊர் பித்தனின் குடிலை நோக்கிப் பயணித்தது.
வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்த சிம்மன் அவரையே நோக்கிக் கொண்டிருந்தான்.
அந்தப் பார்வையால் கொஞ்சம் சஞ்சலப்பட்ட பூசாரி, “கூத்தன் வாக்கு பலிக்கும்… வல்லன் வித்துல வீரன் பிறப்பான்… ஊர் செழிக்கும்… கூத்தன் அனுப்பி வச்ச இந்த மாரி அதுக்கு அத்தாட்சி” என்று இருகரங்களையும் அகலவிரித்து அறிவித்தார். பின்னர் மீண்டும் வல்லன் பக்கம் திரும்பி, இன்னும் சற்று நேரத்தில், பொட்டல் காட்டின் கூத்தன் மரத்திற்குப் பின்னால் மயிலுடன் அவன் இயற்றப்போவதைப் பற்றிய பழங்காலத்துச் சொல்லாடல் ஒன்றைக் கொச்சை மொழியில் உரைத்து உரக்கச் சிரித்தார்.
தனது குடிலிலிருந்து சிறிய தோல் பையுடன் வந்த செவிலி மயிலின் நாடியைச் சோதித்தாள். பின்னர் மூலிகை உருண்டை ஒன்றை எடுத்து, உள்ளங்கையில் வைத்து, மழைநீரில் காட்டி, பிறகு அதை நன்கு கசக்கிக் குழைத்து, மயிலின் வாயினுள் ஊற்றினாள்.
அவள் கண்திறப்பதைப் பார்த்து வெறிக்கூச்சலிட்ட பூசாரி, “பொழுது கனிஞ்சாச்சு… பொழுது கனிஞ்சாச்சு… கூத்தா!!” என அலறினார். பிறகு வல்லனை அழைத்து அவன் கையில் மங்கலக்கொடியை அளித்து, “வீரா! போ!” என்றார்.
வல்லன் விழித்தான்.
பூசாரி “போ!” என மீண்டும் சொன்னபோதே செவிலி மயிலிடமிருந்து அகலாததைக் கவனித்தார்.
“கண்ணு திறந்தாச்சு… பொழுது கனிஞ்சாச்சு… நீ போ!” என்று செவிலிக்கு ஆணையிட்டார்.
செவிலி ஏறெடுத்து அவரை நோக்கினார். பிறகு பட் பட் என தலையில் அடித்துக்கொள்ளத் துவங்கினார்.
“பிச்சி!” என்று கூவிய பூசாரி, “உசுரு இருக்கு… முழி இருக்கு… எல்லாம் கிட்டும்… நீ போ!” என்றார்.
செவிலி, “மோசம் போய்ட்டோம் சாமி!” என்று சொல்லிவிட்டு அழுகுரல் எழுப்பினாள்.
“என்ன?” என்றார் பூசாரி.
“வளங்கெட்டு வந்து நிக்கறா, சாமி!”
“ம்?”
“உடம்பெல்லாம் நஞ்சு” என்ற செவிலி, மயிலின் மேலாடையை அகற்றி, அவள் வயிற்றில் ஓங்கி அறைந்து, “இதுல இனி ஒத்த புல்லுக்கூட விளையாது சாமி!” என்றாள்.
பூசாரி தள்ளாடி விழப்போனார். பின்னர் பக்கவாட்டில் இருந்த கம்பத்தைப் பற்றி நிலையை மீட்டுக்கொண்டு, “வளங்கெட்டச் சிறுக்கி, செத்து ஒழியட்டும்…” என்று சொன்னார். பிறகு வல்லனைப் பார்த்து, “வீரா! கூத்தன் வாக்கு பொய்க்காது… இன்னிக்கு உன் வித்து புதையனும்… யார் வேணும்? சொல்லு… இவ அக்கா எங்க? அவ வேணுமா? சொல்லு!!” என்று கர்ஜித்தார்.
வல்லன் அசைவற்று நின்றுகொண்டிருந்தான்.
அனைத்தும் பிடிநழுவிச் செல்வதை நுகர்ந்த பூசாரி, “ஓ!” என அலறிக்கொண்டே குதித்து, சொல்வதறியாமல், “கூத்தா! கூத்தா!” என மலையைப் பார்த்துக் கத்திக்கொண்டிருந்தார்.
செவிலி தலைமேல் கைவைத்து அமர்ந்திருக்க அவள் அருகே மயில் எவ்வித உணர்ச்சியுமில்லாமல் பிணம்போல் கிடந்தாள். அவள் விழிகள் மட்டும் திறந்திருந்தன. அப்போது கூட்டத்தைப் பிளந்துகொண்டு வந்த சிம்மன் மயிலின் அருகே குந்தி அவள் கையைப் பிடித்தான்.
மழை வலுத்தது.
பூசாரி குனிந்து அவனை நோக்கினார். பிறகு, “வல்லா! பொழுது கனிஞ்சாச்சு!” என்று பொருளில்லாமல் கத்தினார்.
உயிரற்றிருந்த மயிலின் கண்கள் இப்போது மெதுவாய் அசைந்து சிம்மனை நோக்கின. அவன், “நான் உன்ன கட்டிக்கறேன்” என்றான்.
மழை மேலும் வலுத்தது.
மயில் புன்னகை செய்தாள்.
பித்தனும் சிரித்தான்.
பூசாரி, “கூத்தா!” என்று கத்தினார். “சுரத்தில்லாத ஒரு இணைவு இந்த மண்ணுல நிகழணுமா? இந்த துப்பில்லாத பித்தனும், வக்கில்லாத முண்டையும் இணைஞ்சா ஊர் நாறாதா? கூத்தா!” என்று மலையைப் பார்த்து கேட்டார். முன்னோர் புகழ் எடுத்துரைக்கும் தொல்புராணங்களில் வருவதைப்போல ஏதோ மாயம் நிகழ்ந்து தனது வார்த்தைகளுக்கு எடைசேர்த்துவிடாதா என அவர் உள்ளம் பரிதவித்தது.
ஆனால் மழை மேலும் அடர்த்திப் பெற்றது.
சிம்மன் மயிலை அணைத்தபடி மெல்ல எழச்செய்து, சிதைவுற்ற தனது குடிலின் வாசலில் இருக்கும் செம்மண் திண்டில் அமர்த்தி, அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
“வல்லா! இது போர்!! இதுதான் போர்!!” என்று சொல்லி, முன்னர் தான் குறிப்பிட்ட போர் இதுவே என்றும், அவனுக்கென்று விதிக்கப்பட்டவளை மீட்பது முதன்மை வீரனின் முதன்மை கடமை என்றும் பிதற்றினார்.
அப்போது மலை உச்சியில், “டப்பட்!!” என்று யாரோ கைதட்டியதைப்போல் ஓசையெழுந்தது. பூசாரி திடுக்குற்று பித்தன் பக்கம் பார்த்தார். அப்போது வானில் வெட்டிய மின்னல் மண்ணில் தெளித்த ஒளியில் பித்தனின் இதழை மயில் கவ்விக்கொண்டிருப்பது தெரிந்தது. மறுகணம் மலையே வெடித்துச் சரிவதைப்போன்ற பேரோசையும், நூற்றுக்கணக்கான பன்றிகளின் அகோரக் கூச்சல்கள்களும் கேட்டன.
மக்கள் அனைவரும், “அய்யோ! அம்மா!!” என வயிற்றில் அடித்துக்கொண்டு ஓலமிட்டனர்.
பூசாரி ஓடிச்சென்று மலையை உற்றுநோக்கியபோது, அதன் உச்சியில் இருந்த பிரம்மாண்ட பாறை ஒன்று உருண்டு மறுபுறம் சரிவது தெரிந்தது. அந்தப் பாறையை அவர் நன்கு அறிவார். அதன் நுணுக்கமான பிளவு ஒன்றினுள் புதைந்திருக்கும் மந்தனத்தை அவர் மட்டுமே அறிவார். நெஞ்சில் கைவைத்தபடி எட்டுவைத்தபோது எதனாலோ வீழ்த்தப்பட்டதைப்போல் அவர் உள்ளமெங்கிலும் பெருவலிப் பரவியது. முன்னோர் சொல்லை நாடலாம் என உந்திப் பார்த்தபோதும் அவருள் துவண்டுபோயிருந்த ஒன்று எழமறுத்தது.
ஒருகணம் திரும்பி ஊரைப் பார்த்தார்.
கூடி நின்ற குடிகளின் பார்வைச்சரடுகள் அனைத்தும் முனைமழுங்கிய அந்த மலையுடன் பிணைந்திருந்தது. எவரும் அவரைக் கவனித்ததாக தோன்றவில்லை. சிதைவுற்ற அந்தக் குடிலின் வாசலில் இருந்த செம்மண் திண்டில் அமர்ந்திருந்த இருவரைத் தவிர.
மீண்டும் ஒருமுறை மின்னல் வெட்டியபோது அவர்கள் பக்கம் பார்த்த பூசாரி, சிம்மனும் மயிலும் தன்னையே வெறித்துக்கொண்டிருப்பதை, அவர்களின் நா வெளிநீண்டுக் கிடப்பதை, அதன் பரப்பெங்கும் செறிந்திருந்த முட்களைக் கண்டு அதிர்ச்சியில் நிலைதடுமாறி கீழேச் சரிந்தார். பிறகு கொதித்தெழுந்து தென்கிழக்கு திசையை நோக்கி ஓட்டம்பிடித்தார்.
மறுநாள் விடியலில் கூத்தன் மலையின் மறுபுறத்தை அடைந்த பூசாரி அங்கு ஓடிக்கொண்டிருந்த வெள்ளத்தைக் கண்டு மலைத்துப்போனார். மலையின் அடிவாரத்தில், வெள்ளத்தின் கரையை ஒட்டி செங்குத்தாக கிடந்தது அந்தப் பாறை. அதன் கீழே நூற்றுக்கணக்கான பன்றிகள் நசுங்கிக் கிடந்தன. உயிரற்ற அதன் விழிகள் அவரையே நோக்குவதைப்போல் இருந்தது.
கொஞ்சம் முன்சென்று நிமிர்ந்தபோது அந்தப் பாறையின் உச்சி விளிம்பில் அனாமத்தாய் கிடந்த கூத்தனின் விக்கிரகம் புலமானது. தொடைக்குழியில் கொக்கி இறக்கி இழுக்கப்படுவதைப்போன்ற ஒரு வலியை அடைந்தார். நெஞ்சம் கனத்தது. அவரது விழிகள் நனைந்தன. நெடுமூச்செறிந்து நெஞ்சிடிப்பைத் தணிக்க முற்பட்டபடி அந்தப் பாறையை நோக்கி அடியெடுத்து வைத்தார்.
அப்போது கொழுத்த முலைகளும், சிறுத்த குறியுமாய் காட்சிதரும் கூத்தனின் மெய்யான ரூபம்கொண்ட அச்சிலை லேசாய் அலும்பி, மெல்லச் சறுக்கி, கீழே வெள்ளத்தினுள் விழுந்து, அதன் ஒழுக்குடன் சிலதூரம் பயணித்து, ஆழத்தினுள் மறைந்தது.
