
2022 ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயமோகன் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க மலேசியாவுக்கு வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியை ஒட்டி கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் பி. கிருஷ்ணன் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியர் காவிய நூல்களின் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போதுதான், ஜெயமோகனிடம் எழுத்தாளர் ம. நவீன் ‘தமிழினி 2000’ போன்ற மாநாட்டை ஏற்பாடு செய்யும் தன் கனவைப் பற்றி சொன்னார். அவர் சொன்னப்போது நானும் உடனிருந்தேன். 2000 ஆம் ஆண்டு காலச்சுவடு இதழ் புத்தாயிரத்தில் தமிழிலக்கியத்தின் செல்திசையை ஒட்டி தமிழினி 2000 எனும் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. அதில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கல்வியாளர்களே கலந்து கொண்டனர். அவர்களின் கட்டுரைகளை மாநாட்டு மலரில் கண்ட போது அதன் ‘கல்வியியல் ஆய்வுக்கட்டுரைத் தன்மை’ தனக்கு அளித்த ஓவ்வாமையைப் பற்றி நவீன் அதற்கு முன்னரே என்னிடம் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். அந்த மாநாடு முடிந்து 25 ஆண்டுகளாகின்றன. அடுத்த கால் நூற்றாண்டில் தமிழிலக்கியத்தில் நடந்திருக்கும் மாற்றங்களை மீளப்பார்ப்பதாக ஒரு மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பது நவீனின் பெருங்கனவு. அத்தகைய மாநாட்டைச் செய்ய நாம் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது என்று முன்னரே என்னிடம் சொல்லியிருந்தார்.
அந்தக் கனவு குறித்து ஜெயமோகனிடம் அவர் குறிப்பிட்டதை மட்டுமே நான் அறிவேன். பின்னாளில், எழுத்தாளர் ஜெயமோகனின் பார்வையில் அது இன்னுமே விரிந்து ஒரு உலக அறிவு நிகழ்ச்சியாக ஆனது. உலக அறிவு களத்தின் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை நிறுத்தும் வாழும் தமிழ் விழாவாக மாறியது. அந்த மாபெரும் திட்டத்தில் நானும் இணைவேன் என்பது நான் முன்னரே அறிந்திராதது.

ஒருவகையில் அந்தத் திட்டத்தின் மூலக்கருவைச் சுமந்திருந்த எழுத்தாளர் ம.நவீனே எனக்கும் அதன் முக்கியத்துவத்தைச் சொல்லி வந்தார். அப்படித்தான் நியூ யார்க் நகரில் நடக்கவிருந்த வாழும் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்க நானும் ஒப்புக்கொண்டேன். பயண முயற்சியின் முதல் அங்கமான விசா நேர்முகத்தில் தோல்வியடைந்தேன். விசாவுக்காக மறுவிண்ணப்பம் செய்திருந்தபோதும் சந்தேகம் மட்டும் தீரவில்லை. ம. நவீனிடமே ஏன் அமெரிக்கப் பயணம் முக்கியமானது எனக் கேட்டேன். அவரும் உலக அரங்கின் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் நிகழ்ச்சி ஏன் முக்கியமானது என்பதை விளக்கினார். எல்லா முயற்சிகளுக்கும் பின்னரும் அறியப்படாத ஒரு சரடு பின் தொடரச் செய்கிறது. உலக அரங்கின் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் திட்டம் உருவாகிக் கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் மற்ற இன எழுத்தாளர்கள் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் முயற்சிகளும் தீவிரமாக நடந்தன.
2025 ஆம் ஆண்டு மலாய்- சீன- தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடி உரையாடும் களமான முக்கோணக்கதைகள் நிகழ்ச்சியை வல்லினம் ஒருங்கிணைத்தது. மலேசியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் மேல் ஆகியும் இம்மாதிரியான முயற்சிகள் பெரும்பாலும் நடந்ததில்லை. அதனை வல்லினம் உண்மையான தீவிரத்துடன் ஏற்பாடு செய்திருந்தது. தமிழிலிருந்து மலாய்க்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சிறுகதை தொகுப்பு, மலாயிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு, மாண்டரின் மொழியிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட சிறுகதை வெளியீடு ஆகியவை நிகழ்ச்சியை ஒட்டி நடந்தன. படைப்புகளை வெளிyiட்டப்பிறகு அதனை ஒட்டி ஒரு உரையாடல் அரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்படியாக எல்லா வகையிலும் ஓர் ஆரோக்கியமான முயற்சி நடந்து கொண்டிருந்த சூழலில்தான் வாழும் தமிழ் மாநாடுக்கான திட்டமிடலும் பின்னணியில் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருவகையில் மலேசியாவுக்குள் தமிழிலக்கியத்தைப் பற்றிய உரையாடலைத் தொடங்க நவீன் முயன்று கொண்டிருந்த சூழலில்தான் ஜெயமோகன அதனை உலகப்பரப்புக்கு எடுத்துச் செல்லும் பெரும் கோட்டை வரைந்து கொண்டிருந்தார்.
பெருங்கனவுகளைச் சூல் கொண்டிருந்த இரு ஆசிரியர்களின் திட்டங்கள் உருவாகி வருவதைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பு அமைந்தது. ஆக, தமிழில் நிகழும் அறிவுச் செயற்பாட்டை உலகுக்கு முன்வைக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு வர வாய்ப்பு கிடைத்தும் முயலாமல் இருப்பது தனிப்பட்ட சோர்வின் காரணமாகவே இருக்கமுடியும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட இரவே மறுவிண்ணப்பம் செய்து அடுத்த பதினைந்து நாட்களில் இரண்டாவது நேர்முகத்துக்குச் சென்று வெற்றியும் பெற்றேன். அப்பொழுதும் வாழும் தமிழ் விழா பற்றிய கேள்விகள் இருந்தன. யார் முன்னால் பேசப்போகிறோம்; எதை முன்வைக்கப்போகிறோம் எனும் எண்ணங்கள். தொடர்ந்தாற் போல, அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் விசாவுக்கான ஏற்பாடுகள், பயண ஏற்பாடுகள் தொடங்கி விழாவில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்பது குறித்தும் ஆலோசனைகளைத் தந்து கொண்டிருந்தனர். அவர்களின் தொடர் வழிகாட்டுதல் விழா குறித்து எழுந்துகொண்டிருந்த ஐயங்களைக் களைந்து கொண்டிருந்தன.

இன்னொருபக்கம் ஜெயமோகனின் தளத்தில் தொடர்ச்சியாக விழா குறித்து வந்து கொண்டிருந்த பதிவுகளும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி அறிவித்துக் கொண்டிருந்தன. நம்மை மீறிய பெருங்கனவின் முன்னால் நிற்கின்றோம் என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. அந்தப் பெருங்கனவைத் தனியொருவனாக சுமக்கும் வலு என் தோள்களுக்கு இல்லை. மலேசிய நவீனத் தமிழிலக்கியம் எனும் அறிவு செயற்பாட்டில் நானும் ஒரு கண்ணி என எண்ணியே அதனை ஏற்றுக் கொண்டேன். அந்தத் தெளிவு ஏற்பட்டவுடனே மனம் இலகுவாகியது.
22 மணி நேரப் பயணமும் காத்திருப்பும் கடந்து ஏப்ரல் 1 ஆம் தேதி அமெரிக்காவின் நியூஜெர்ஸி சென்றேன். விஷ்ணுபுர வாசக வட்ட நண்பர் பழனிஜோதி என்னையும் எழுத்தாளர் சயந்தன், கொரிய வாசகர் சதிஷையும் கோர்ட்யார்ட் மெரியட் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்குத்தான் எழுத்தாளர்கள் தங்குவதற்கான தங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தத் தங்கும் விடுதிக்குப் பின்னாலே ஹட்சன் ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
வந்த சில மணி நேரங்களில் குளித்து உடைமாற்றி ஹட்சன் ஆற்றுக்குச் சென்று வேடிக்கை பார்த்தேன். உடலை விறைக்கச் செய்யும் ஏழு பாகை குளிருக்கு நியூஜெர்சி நகரின் அக்கரையிலிருந்து அழகிய வண்ணவிளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்த நியூ யார்க் நகரைப் பார்த்தேன். வண்ணவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்த நியூ யார்க் நகரக் கட்டடங்களின் நீர் பிம்பத்தை கனடிய வாத்துக்கூட்டங்கள் கலைத்துக் கொண்டிருந்தன. கொஞ்ச நேரத்தில், இங்கிலாந்து, சுவிஸ்லாந்து, சிங்கப்பூர், இந்தியா என வெவ்வேறு மூலைகளிலிருந்து எழுத்தாளர்கள் விடுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் ஜெயமோகனும் விடுதிக்கு வந்தார்.
மறுநாள் காலையிலே, நண்பர்கள் சிறு சிறு குழுவாக ஹட்சன் ஆற்றங்கரையில் உலாவிக் கொண்டிருந்தனர். நானும் எழுத்தாளர்கள் ரம்யா, செந்தில் குமார், திருச்செந்தாழை, செந்தில் ஜெகன்னாதன் ஆகியோர் ஆற்றின் தென்முனையில் இருந்த ஹூஸ் (Hush) சிலை என்றழைக்கப்பட்ட நீர் ஆத்மா சிலைக்கு முன் சென்று படங்களைப் பிடித்து வந்தோம். விறைக்கும் குளிரின் காரணமாக நண்பர்கள் சிலர் அந்தப்பக்கம் வரை செல்லாமலே திரும்பிச் சென்றனர். நான் தனியாகவேணும் சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என்றதும் ரம்யாவும் நண்பர்களும் என்னுடன் இணைந்து நீர் ஆத்மா சிலைக்கு வந்தனர். பரபரப்பும் நெருக்கடியும் நிரம்பிய நியூயார்க் நகரை நோக்கி சற்றே நிதானிக்குமாறு சிலை அமைக்கப்பட்டிருப்பதாக விக்கி சொன்னது.

அந்த நாள் மாலை எழுத்தாளர்கள் அனைவரும் சுதந்திர தேவி சிலை அமைந்திருக்கும் லிபெர்டி தீவுக்குச் சென்று சுதந்திர தேவி சிலைக்குப் பார்த்தோம். இடக்கையில் தீப்பந்தமும் வலக்கையில் அமெரிக்க ஒப்பந்தத்தையும் ஏந்தி கம்பீரமாய் வான் தொட நின்று கொண்டிருந்தவளை பனிப்புகை சூழ்ந்திருந்தது. குளிரின் நடுக்கத்துடன் சில படங்களை எடுத்துக் கொண்டேன். வாழும் தமிழ் மாநாட்டுக்கு வந்திருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சூழ சுதந்திரத் தேவி சிலையின் முன்னால் குழுப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டோம். எங்களைப் படமெடுத்த அமெரிக்கர் கொஞ்சம் குள்ளமாக இருந்தார். உடலை வளைத்து கால்களுக்கு அடியில் வைத்து குனிந்து என பல கோணங்களில் படங்களாக எடுத்துத் தள்ளினார். ஜெயமோகன் மிக உற்சாகமாக இருந்தார். அவரைக் காணும் போதும் பேசும் போதும் நமக்குமே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். விடுதலையின் சுடரை ஏந்தியயிருப்பவளின் முன் நாங்கள் ஏந்தப்போகும் அறிவின் சுடரை நோக்கிய உற்சாகமாக அதைக் காண முடிந்தது.
மறுநாள், ஏப்ரல் மூன்றாம் தேதி வாழும் தமிழ் விழா தொடங்கியது. நியூ யார்க் நகரின் மையத்தில் இருந்த நியூயார்க் மருத்துவக் கழகத்தின் மாநாட்டு மையத்தில் (New York Academy of Medicine Conference Center) நிகழ்ச்சி தொடங்கியது. கொத்து விளக்குகளும் பழுப்பு நிறச் சுவர்களுமாகப் பழங்காலத்துத் தேவாலயத்தைப் போன்று தோற்றமளித்த கட்டடத்துக்குள் எங்கும் அமெரிக்கத் தமிழர்கள் நிறைந்திருந்தனர்.
ராலே ராஜன் தேவதேவனின் அசையும் போதே தோணி கவிதையைப் பாடி விழாவைத் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, விழாவின் ஒருங்கிணைப்பாளர் ஆஸ்தின் செளந்தரும், அமெரிக்க எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான டாமியன் சியர்ஸ் உரையாற்றினார்கள். அதன் பிறகு, ஜெயமோகன் தன்னுடய உரையை ஆற்றத் தொடங்கினார். அரங்கின் பின்புலத்தில் வைக்கப்பட்டிருந்த புதுமைப்பித்தனின் உருவம் பொறித்த பதாகையைச் சுட்டிக்காட்டி ‘’எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் யாராலும் கண்டுகொள்ளாமல் இறந்து போன நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளனை அமெரிக்க மண்ணுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். அவனது முன்னால் நின்று பேச பெரும் மகிழ்ச்சியடைகிறேன்,’’ என நெகிழ்ச்சியுடன் உரையைத் தொடங்கினார். அவருடைய நெகிழ்ச்சியே அரங்கினர் பலரை உள எழுச்சிக்கு ஆளாக்கியது. பலரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டனர்.
ஜெயமோகனின் 2001 கனடியப் பயணத்தின் போது வாழும் தமிழ் எனும் சொல்லையும் அதன் பரந்த கனவு குறித்தும் காலம் செல்வத்துடன் உரையாடியதாகச் சொன்னார். அந்தக் கனவைச் சாத்தியப்படுத்தியதன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழிலக்கியம் எவ்வாறு தற்காலத்தில் தமிழர்களிடம் அந்நியப்பட்டுப் போயிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டார். அந்தச் சூழலில்தான் தமிழிலக்கியம் எனும் அறிவு செயற்பாட்டை முன்வைப்பதன் அவசியத்தையும் சொல்லி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

அடுத்ததாக, வாழும் தமிழ் விழாவில் பங்கேற்ற எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகத் வெளியிடப்பட்டது. அதற்கடுத்து, வாழும் தமிழ் விழா க.நா.சுப்ரமணியம், சு.ராமசாமி என இரு அரங்குகளாகப் பிரிக்கப்பட்டு இணை அமர்வுகளாக நடைபெறத் தொடங்கியது. ஒவ்வொரு அமர்விலும் மூன்று எழுத்தாளர்கள் என பதினாறு அமர்வுகள் நடத்தப்பட்டன. தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமின்றி ஆங்கில எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் பத்து பேரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அமர்வையும் இரண்டாம் தலைமுறை அமெரிக்கத் தமிழ் இளைஞர்களே நெறியாள்கை செய்தனர். இணை அமர்வுகளாக நடந்தமையால் எல்லா அரங்குகளையும் காணமுடியவில்லை. இருந்தாலும், நான் பங்கேற்ற அரங்குகளின் வாயிலாக வாழும் தமிழ் விழா பற்றிய மனப்பதிவைத் திரட்டிக் கொள்ளமுடிந்தது.
சு. வேணுகோபாலுடன் இணைப் படைப்பாளியாக அமர்வில் கலந்து கொண்டேன். அவருடன் அமர்வைப் பகிர்ந்துகொண்டாலும் வியப்பு மேலிடாமல் அவருடைய பதில்களைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை. படைப்பின் வழி தான் அறிந்திராத வெளிக்குள் நுழைந்து வெற்றி கொண்டதை ஒரு சவாலைப் போல செய்ததை வேணுகோபால் குறிப்பிட்டார். மாதவிடாய் காலத்தில் கதிரடிக்க வரும் பெண்ணைப் பற்றி கதையை எழுதியதாகச் சொன்னார். படைப்பில் தன்னை முழுமையாக உருமாற்றிக் கொள்வதென்பது படைப்பாளனின் முன்னிற்கும் பெருஞ்சவால். அதனைப் பெண் துயர் எனப் பொதுவாகச் சொல்லாமல் நுட்பத்துடன் அணுகியிருந்ததைக் குறிப்பிட்டார். படைப்புக்கு முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுத்த படைப்பாளியின் அசல் குரலாகவே வேணுகோபாலின் குரல் இருந்தது.
வாழும் தமிழ் அரங்கில் பேசிய நண்பர்கள் பலரும் மலேசிய இலக்கியச் சூழலை வல்லினம் வழி அறிந்திருந்தனர் என்பதே மகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பின்னால் எழுத்தாளர் ம.நவீன் அளித்திருக்கும் உழைப்பையும் அறிந்திருந்தனர். ம. நவீனின் அமர்வில் மலேசியாவில் மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்பு முயற்சி பற்றி கேட்கப்பட்டது. மலேசியாவில் முன்னோடி மொழிபெயர்ப்பு முயற்சியை மேற்கொண்ட எஸ்.ராமச்சந்திரன் என்பவர் வானொலியில் வேலை செய்த ராமசந்திரன் ஐயர் என்பவர்தான் எனத் தான் கண்டுகொண்ட தருணத்தை எழுச்சியோடு சொன்னார். அரசு கட்டுப்பாடுகளினால் தன் முழு அடையாளத்தையும் மறைத்துக் கொண்டு முன்னோடி முயற்சியை ஒருவர் செய்ய முன்வந்திருக்கிறார். அத்தகைய முன்னோடி நிரையினரின் தியாகத்தையும் உழைப்பையும் எண்ணிப்பார்ப்பதை தான் இளம் தலைமுறை எழுத்தாளர்களிடையே வலியுறுத்துவதாகச் சொன்னார். முன்னோடிகளையும் அவர்களின் படைப்புகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமென்ற மனவுந்துதலை அவருடைய அமர்வு அளித்தது. அதைப் போலவே ஒரு படைப்பாளனாக இலக்கியச் செயற்பாட்டளராக அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது, தான் நம்பியவற்றுக்காகத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதாக இருந்தது.

சமகாலப் படைப்பாளியாக என்னைக் கவர்ந்த இன்னொரு படைப்பாளியின் அமர்வு என்றால் திருச்செந்தாழையின் அமர்வைக் குறிப்பிடலாம். சுதந்திரத்தேவி சிலையை நோக்கிய பயணத்தின் போதே அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அண்மையில் அவருடைய படைப்புகள் வருவது குறைந்திருப்பதை ஒட்டி கேட்கப்பட்டதற்கு, மனதுக்குள்ளே முழுமையாகக் கதையை எழுதி அழித்துக் கொள்வதாகச் சொன்னார். அதைப் போலவே, தன்னுடைய அமர்விலும் மற்றவர்களைப் போல எழுதி வெளியீட்ட தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பிலிருந்து தான் புழங்கும் சந்தைச் சூழலிலிருந்து தான் கண்டடைந்த படைப்புலகத்தைப் பற்றி குறிப்பிட்டார். தன்னுடைய பலவீனத்தையும் மறைக்காமல் திருச்செந்தாழை பேசினார்.
வாழும் தமிழ் விழாவின் முதன்மையான சாதனையாக இரண்டாம் தலைமுறை அமெரிக்கத் தமிழ் இளைஞர்களுக்கு நவீனத் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போய் சேர்த்ததையே குறிப்பிடமுடியும். உலகின் சிறந்த கல்விமுறைகளில் ஒன்றான அமெரிக்கக் கல்விமுறையின் விளைகனிகளான அமெரிக்கத் தமிழ் இளைஞர்களே வாழும் தமிழ் விழாவை ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளின் போதே அரங்குகளில் பங்குபெறுகின்ற எழுத்தாளர்களின் படைப்புகளை விரிவாக வாசித்திருக்கின்றனர். ஆங்கிலம் மட்டுமே வாசிக்க முடிந்தவர்கள் தமிழ் வாசிக்கத் தெரிந்த பெற்றோர், தாத்தா, பாட்டி உதவியுடன் அவற்றை வாசித்திருந்தனர். அத்துடன் அந்தக் கதைகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். அப்படி மொழிபெயர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்புகள் Born with the Southern Wind: Tamil Short Stories, The Sound of the Eastern Waves: New Tamil Short Stories ஆகியவை விழாவிலே வெளியீடப்பட்டன. அத்துடன், ஒர் அறிவார்ந்த நிகழ்ச்சி எல்லா விதத்திலும் இளைஞர்களுக்குக் கொண்டாட்டமாக நிகழ முடியுமென்பதை வாழும் தமிழ் நிகழ்ச்சியில் காண முடிந்தது.

ஒவ்வொரு அமர்வையும் நெறியாள்கை செய்த இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் நெறியாள்கை செய்தனர். தமிழில் பேசிய படைப்பாளர்களின் குரல்களை எழுதிவைத்தும் உடனுக்குடனும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தனர். அத்துடன், எழுத்தாளர்களின் பதில்களை நுட்பமாகப் பின் தொடர்ந்து கிளைக்கேள்விகளையும் நகைச்சுவையையும் கூட இயல்பாக உருவாக்கினர். ஒரே சமயம் நுட்பமான இலக்கிய ரசனையும் மொழியாளுமையும் கொண்ட இளைஞர்களுக்கு நவீனத்தமிழ் இலக்கியம் கையளிக்கப்படுகிறது என்பதை எண்ணி பெருமை கொள்ளாதிருக்க முடியாது. இந்தப் பெருமுயற்சி நின்று தழைப்பதற்கான எல்லா சாத்தியமும் அவர்களின் முனைப்பில் தெரிகிறது.
அடுத்ததாக, வாழும் தமிழ் விழா தமிழின் வெவ்வேறு குரல்களை முன்வைப்பதற்கான வாய்ப்பைத் தந்திருக்கிறது. கவிதை, மொழிபெயர்ப்பு,புனைவெழுத்து என இலக்கிய வகைமைகளுடன் நிலப்பரப்பும் அழகியல் பார்வையும் வெவ்வேறானதாகவே விழாவுக்கான படைப்பாளிகளின் தேர்வு அமைந்திருந்தது. அத்துடன், அமெரிக்க எழுத்தாளர்களான டாமியன் சியர்ல்ஸ், பத்மா விஸ்வநாதன், எஸ்தர் ஆலன், ஜெரால்டின் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த எழுத்தாளர் வரிசையிலும் கூட அமெரிக்க ஆப்ரிக்க எழுத்து, புலம்பெயர் எழுத்து எனப் பன்மைத்தன்மை கொண்டது. அவர்களின் வாயிலாக, தமிழ் இலக்கியம் நிச்சயமாய் உலகப்பரப்புக்கு விரியும் சாத்தியம் இருக்கிறது.
ஓர் இளம்படைப்பாளியாக நான் கற்றுக்கொள்வதற்கும் தொடர்ந்து எழுதுவதற்குமான உத்வேகத்தை அமர்வில் பேசிய பல எழுத்தாளர்களின் சொற்களின் வழித்தான் திரட்டிக் கொண்டேன். ஒரு வரலாற்றுத் தருணத்தில் பங்கேற்ற நிறைவு ஏற்படுகிறது. விழாவில் சந்தித்த அமெரிக்க நண்பர்கள் பல நண்பர்களும் என்னுடைய கதைகளையும் வாசித்துப் பேசியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. என்னுடைய அமர்வை எழுத்தாளர் சு. வேணுகோபால், எழுத்தாளர் காலம் செல்வம் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டேன். தனிப்பட்ட முறையில் என்னுடைய அமர்வில் மலேசியத் தமிழ் இலக்கியத்தைப் பற்றித்தான் பேசினேன். மலேசியாவில் இரண்டு தலைமுறை இலக்கியப் படைப்புகளில் அடையாளச் சிக்கல் என்பது பேசுபொருளாக இருந்து வந்துள்ளது. இன்றைக்கும் மலேசியம் இலக்கியத்தில் அடையாளச் சிக்கல் பேசப்படுகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. முதல் தலைமுறை தமிழர்கள் மலாயாவுக்குப் புலம்பெயர்ந்து இரப்பர் தோட்டங்களில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். அந்நிய நிலத்தில் உணரும் இந்த நிலத்துக்கு நான் யாரென்ற கேள்வியை இலக்கியம் வாயிலாக எழுத்தாளர்கள் முன்வைத்திருக்கின்றனர். தோட்ட வாழ்வும் தோட்டத் துண்டாடலினால் நகரத்துக்குப் பெயர்ந்ததும் எனக் களங்களில் அதைப் பேசியிருக்கின்றனர். அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் புதிய வாழ்க்கைச் சூழலான நகரத்தில் அந்நியப்பட்டுப் போனதை எழுதியிருக்கின்றனர். இன்றைக்கு அந்தக் கேள்வி இலக்கியத்தில் வந்து தொட்டிருக்கும் புள்ளி நுட்பமானது. சமகாலத்தில் எழுதப்படும் படைப்புகளைக் கொண்டு அந்த நுட்பமான இடத்தைத் தொட்டுக் காட்டலாம். சிராங்கூன் டைம்ஸ் இதழில் ஆழ் நெடுநீர் என்ற குறுநாவல் தொடரை எழுதிய பரிமித்தா அந்தத் தொடரில் தன் குடும்பத்தில் நிகழ்திருக்கும் விபத்தின் வழி மொத்த வரலாற்றையும் திரட்டிக் கொள்ளும் சித்திரம் வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனால் பாராட்டப்பட்ட கிருஷ்ணை எனும் சிறுகதையில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆப்ரிக்க மாணவியிடம் தன் குலத்தெய்வத்தின் அம்சத்தை தமிழ் இளைஞன் தரிசிப்பதாகச் சித்திரம் அமைந்திருக்கிறது. முகநூலில் கவிதைகள் எழுதி வரும் கெளசல்யா தன்னுடைய கவிமொழியில் கைவிடப்படும் சுயத்தைப் பற்றிய அவதானிப்புகளை முன்வைக்கிறார்.

இப்படியாக, புறமாற்றங்களால் அடையும் அடையாளச் சிக்கலிலிருந்து மாறி இன்னும் நுட்பமான அக மாற்றங்களையும் காட்டுவதாக மாறியிருக்கிறது. அடுத்து இன மற்றும் சமய அடையாளம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. மலேசியத் தமிழ்க் கல்விச்சூழலில் தனித்தமிழின் தாக்கம் என்பது ஆழமானது. நானுமே அந்தச் சூழலால் வளர்ந்தவன். பள்ளிக்காலத்தில் மரபுக்கவிதைக்கெனவே வெளிவந்து கொண்டிருந்த உங்கள் குரல் இதழ்தான் நானும் வாசிக்க நேர்ந்த முதல் இலக்கிய இதழ். கல்லூரிச் சூழல் என்பதும் தனித்தமிழ் பற்றாளர்கள் நிறைந்ததாகவே இருந்தது. ஆனாலும், இலக்கிய வாசிப்பின் வழித்தான் இந்து சமயத்தைக் கண்டடைகிறேன். சமயம் சற்றே பின்னாளில் அறிமுகமாகியது. நான் இரண்டையும் குழப்பிக் கொள்ள விரும்பவில்லை. மொழி சார்ந்த அடையாளத்தைப் பேணும் நிலையில் சமயத்தை ஞானக்கருவியாகக் காண்பதில் தடையில்லை என்றே எண்ணுகிறேன் என்றேன். கடைசியாக, மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான மலேசியாவில் உறவு சிக்கல் இருக்கிறதா எனக் கேட்கப்பட்டது. மலேசியா பொருளாதார முன்னேற்றம் அடையும் வேளையில் அதன் வேரென்பது அரசியல், சமயத்தில் ஆழம் கொண்டிருக்கிறது. இந்த முரண்பாட்டில் பார்க்கும் போது பெண்கள் பொருளாதார விடுதலை அடையும் வேளையில் குடும்ப உறவுகளைப் பொறுத்தளவில் இன்னும் முழுமையான விடுதலையை அடையாதவர்களாகவே இருக்கின்றனர் என்றேன்.
ஒரு படைப்பாளியாக அடையக்கூடிய மகிழ்ச்சியான உணர்வு ஒன்றிருக்கிறது. தன்னுடைய படைப்புகள் வாசிக்கப்படுகின்றன என அறிவதில் அடையும் மகிழ்ச்சி. வாழும் தமிழ் விழாவில் பங்கேற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என அனைவருமே அம்மகிழ்ச்சியை அடைந்திருப்பார்கள். உலகின் பண்பாடு, தொழிற்நுட்ப மையமான நியூயார்க்கின் முன்னால் தமிழ் எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளுக்காகக் கொண்டாடப்பட்டனர். அந்த வரலாற்றுத் தருணத்தை வாழும் தமிழ் விழா சாத்தியப்படுத்தியிருக்கிறது. தமிழிலக்கியம் எனும் அறிவுக்களம் உலகப்பரப்புக்குச் சென்றிருக்கிறது. அந்தப் பெருங்கனவின் ஈடேற்றத்தில் பங்கேற்க முடிந்ததே நிறைவைத் தருகிறது.
