
தினேஷ் புஸ்பராணி ஒரு நிழற்படக் கலைஞர். ‘ஃபிரி மலேசியா டுடே’ இணையச் செய்தி ஊடகத்தில் நிழற்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார். இதற்கு முன்னர் கோலாலம்பூர் பெருநகரத் தெருவோர மனிதர்களைச் சித்திரிக்கும் நிழற்படங்களை எடுத்திருக்கிறார். நிழற்படத்துறையில் இருக்கும் தொடர் ஆர்வத்தால் மலேசியா முழுதும் இருக்கும் நாட்டார் கோவில்களுக்குச் சென்று எடுத்த நிழற்படங்களைக் கொண்டு ‘அறம்’ எனும் தலைப்பில் கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஆளோய்ந்த கோவில்களில் ஏகாந்தமாய் வீற்றிருக்கும் பேச்சாயி, முனியாண்டி, காளி என நாட்டார் தெய்வ நிழற்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. வாழ்ந்து மறைந்த ஏதோ ஒரு முன்னோரை நினைவுப்படுத்துவதைப் போன்ற நெருக்கத்தைக் கறுப்பு வெள்ளை படங்களில் பதிவாகியிருந்த தெய்வ உருக்கள் தந்தன.
உங்களுடைய பின்னணியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினேஷ்: பந்திங் நகரத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். சிறுவயது தொடங்கியே ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. எஸ்.பி.எம் தேர்வுக்குப் பின்னர் நண்பர்களின் தூண்டுதலினால் தொடர்பியல் துறையில் சேர்ந்தேன். கல்லூரியில் பயின்ற காலத்தில்தான் போட்டிக்கு அனுப்ப ஒரு குறும்படத்தை இயக்கினேன். பெருமுயற்சியில் எடுக்கப்பட்ட இக்குறும்படம் விருது விழாவில் தேர்வு பெறாதது சோர்வுண்டாக்கியது. நான் இயங்கி கொண்டிருக்கும் பாதை சரியானதா என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கடுத்தாண்டு, திரைப்பட இயக்கும் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட அக்னி திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டேன். அந்தப் பட்டறையை வழிநடத்திய இயக்குநர் ஜே.கே.விக்கினேஸ்வரனும் சஞ்சய் பெருமாளும் நான் இயக்கிய குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டினார்கள். கல்லூரி முடிந்ததும் தொடர்ந்து காட்சிக்கலையில் இயங்கும் ஆர்வமிருந்தது. அப்பொழுதே மலேசியாவில் டிஜிட்டல் காமிராக்கள்தான் அதிகமும் பயன்பாட்டில் இருந்தன. பிலிம் சுருள்களைப் பயன்படுத்தி எடுக்கப்படும் திரைப்படத்துறை சிறு அளவில்தான் இயங்கி கொண்டிருந்தது. எனக்கும் ஃபிலிம் சுருள்களைக் கொண்டு படம் எடுக்கும் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. அதனாலே, பகுதி நேரமாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஒரு நிழற்படக் கடையில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அந்தப் பணியில் இருக்கும் போது, நிழற்படத் துறையின் நுணுக்கங்களை ஓரளவு கற்றுக் கொண்டேன். அதன் பிறகு, விளம்பரப்படங்களில் உதவி இயக்குநராகப் பணி செய்தேன்.
இயக்குனராகும் ஆசை இருந்ததா?
தினேஷ்: பத்தாண்டுகள் முயற்சிக்குப் பின்னர் இயக்குநர் ஹரனின் முதல்படமான ‘மெட்ரோ மாலை’யில் ஒளிப்பதிவு பிரிவுக்கான உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அந்தப் பணியைச் செய்யும் போதுதான் ஒன்றைக் கவனித்தேன். திரைப்படங்களில் சில தவிர்க்க முடியாத கட்டுப்பாடுகள் இருந்தன. ஒரு காட்சிக்காக இன்ன கோணத்தில் இன்ன ஒளிபடுமாறுத்தான் காட்சிகள் எடுக்கப்பட வேண்டியிருந்தது. அந்த மாதிரியான பணியே, ஒன்றைத் திட்டமிட்டு உருவாக்குவதைப் போல உணரச் செய்தது. அந்தப் பணி எனக்கு அலுப்பூட்டுவதாக இருந்தது. அதனாலே, இறுதி படப்பிடிப்பு நாளன்று இது எனக்கான துறையன்று என்ற எண்ணம் வலுவாக ஏற்பட்டது. திரைத்துறையில் இயங்கி கொண்டிருக்கும்போதே ஒத்த ரசனை கொண்டிருந்த இயக்குநர் சஞ்சய் குமார், ஜே.கே. விக்கினேஸ்வரன், ஹரன் போன்றோரிடம் இணைந்து பணியாற்றும் ஆர்வம் இருந்தது. ஒரு நாள் படத்தளத்தில் ஓவியர் ஸ்டீவன் மேனனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏனோ எனக்குத் திரைப்படப் பணியில் பெரிய ஒட்டுதல் ஏற்படவில்லை என்பதை ஸ்டீவனிடம் கூறினேன். அந்தச் சமயத்தில்தான் ஓவியர் ஸ்டீவன் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து பப்ளிக்கா அரங்கில் கலைக் காட்சிக்கூடம் ஒன்றைத் திறந்திருப்பதாகக் குறிப்பிட்டார். அந்தக் கலைக் கூடத்தைப் பராமரிக்கும் உதவியாளர் பணிக்கு என்னை அழைத்தார். அந்தப் பணியை மாதம் ஐந்நூறு வெள்ளி சம்பளத்துக்கு ஏற்றுக் கொண்டேன்.

உங்கள் தேர்வு ஆச்சரியமாக உள்ளது.
தினேஷ்: திரைத்துறை எனக்கானது இல்லை என்று தெரிந்த பிறகு அது சம்பந்தப்பட்ட வேறொரு துறையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்த முடிவை எடுத்தேன். ஏறக்குறைய நான்கு மாதங்களாகப் பகலில் கலைக் கூடத்தில் வேலை செய்து கொண்டும் இரவில் காரிலேயே கொசுவர்த்திக் கொளுத்தித் தூங்குவதுமாக நாட்கள் கழிந்தன. அந்தச் சமயத்தில்தான், காட்சிக்கூடத்துக்கு வரும் ஓவியர்கள் ஸ்டீவன், ஜெகா மற்றும் சிற்பிகள் ஆகியோருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் கலை வெளிப்பாட்டையும் சிந்தனைகளையும் பற்றி அறிந்து கொள்ளவும் முடிந்தது. நான் அவர்களிடம் முதன்மையாகக் கற்றுக்கொண்டது வாழ்க்கையை அணுகும் விதத்தைத்தான். ஓவியர் ஜெகா தன்னைச் சுற்றியுள்ள வாழ்க்கையை ஆன்மிகத்தன்மையுடன் அணுகக்கூடியவர். அதைப் போல இயக்குநர் சஞ்சய் குமாரின் பார்வையும் ஈர்க்கச் செய்தது. மெல்ல நான் தொழிற்முறையாகக் கற்று வைத்திருந்த நிழற்படக் கலையை எவ்வாறு கலை வடிவமாக மாற்றலாம் என்பதைக் கற்றுக் கொண்டேன். அந்தக் காலக்கட்டத்தில்தான் ‘ஃபிரி மலேசியா டுடே’ இணையச் செய்தி ஊடகத்தளத்தில் ஆவணத்தொகுப்பு பணியில் சேர்ந்தேன். ‘ஃபிரி மலேசியா டுடே’ செய்தி ஊடகம் மிகத் தொடக்கநிலையில் இருந்த காலக்கட்டமென்பதால் புதிய சிந்தனைகள் வரவேற்கப்பட்டன. சமுதாயத்தின் வெவ்வேறு நிலைகளில் உள்ள மனிதர்களைத் தேடிப் பிடித்து அவர்கள் சொல்லும் கதைகளை ஒளிப்பதிவு செய்து தொகுப்பாக மாற்றும் பணியைச் செய்யத் தொடங்கினேன். எட்டாண்டுகளாக வெவ்வேறு கதைகளைக் கேட்டு ஆவணப்படுத்தும் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் போதுதான் நாமே ஒரு கதைசொல்லியாக மாற வேண்டுமென்கிற உந்துதல் எழுந்தது.
நிழற்படங்கள்தான் உங்களின் வெளிப்பாட்டு வடிவம் என்பதை எப்படிக் கண்டுகொண்டீர்கள்?
தினேஷ்: நம்முடைய வீடுகளில் முன்பெல்லாம் நிச்சயமாக ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் எடுக்கப்பட்ட நிழற்படத் தொகுப்புகள் இருக்கும். அவற்றுள் சில படங்கள் தெளிவின்றி, மங்கலாக, ஒளி குறைவாக எனக் குறைகளுடன் தான் இருக்கும். இருந்தாலும், அந்தப் படங்கள்தான் நம்முடைய வாழ்வின் முக்கியக்கணங்களைச் சொல்லக்கூடியவை. ஆகவே, நிழற்படக் கலை என்பது ஒரு நிகழ்ச்சியுடன் கதையை அல்லது ஒரு வரலாற்றையே பதிவு செய்யக்கூடியது என்பதனாலே எனக்கு அந்தத் துறையின் மீது ஈர்ப்பு இருந்தது. பின்னாளில், நான் நிழற்படத் துறையில் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். 24 வயதிருக்கும் போது, பிலிம் காமிரா ஒன்றை வாங்கி சுயமாக அதன் நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவும் தொடங்கினேன். பிலிம் காமிராக்களில் உள்ளுணர்வை மட்டுமே நம்பி ஒரு சுருளில் இருக்கும் 36 பிலிம்களை கொண்டு ஒருமுறை மட்டுமே படங்களை எடுக்க முடியும். அப்படி எடுக்கப்படும் படங்களைப் பார்க்க பிலிம்களை கழுவ வேண்டும். பிலிம்களை படங்களாக மாற்றிப் பார்ப்பதற்கு சில நாட்களாவது ஆகும். பிலிம் சுருள் நிழற்படங்கள் உருவாகி வரும் அந்தச் செயல்முறையே ஈர்ப்பு உண்டுபண்ணுவதாக இருந்தது.
நிழற்படங்களைக் கறுப்பு வெள்ளையில் எடுக்கும் முடிவெல்லாம் அப்போதே உருவானதா?
தினேஷ்: ஆம். நிழற்படங்களைக் கறுப்பு வெள்ளை வண்ணங்களில்தான் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. வண்ணங்கள் எப்பொழுதுமே வேறுபாட்டைக் காட்டக்கூடியவை. அத்துடன், புகைபடங்களில் நான் காணவிரும்பியது ஒரு கருவை மட்டும்தான். அது கதையாக அல்லது ஒரு கணமாக இருக்கலாம். வண்ணங்கள் கருவைக் காண விடாமல் கவனத்தைச் சிதறடிக்கக்கூடியவை. ஆகவே, கறுப்பு வெள்ளையில் காணும் போதே ஒன்றின் முழுமையைக் கண்டுகொள்ள முடியும். அதனாலே என்னுடைய படங்களைக் கறுப்பு வெள்ளையில் மட்டுமே எடுப்பதாக வரையறுத்துக் கொண்டேன்.
கேள்வி: எங்கிருந்து நாட்டார் தெய்வங்களைப் படம் பிடிக்கும் எண்ணம் உருவானது?
தினேஷ்: நான் எப்பொழுதுமே என்னுடைய உள்ளுணர்வுக்கு முக்கியத்துவம் தந்தே பயணித்து வருவேன். என்னைப் பொறுத்தவரைக்கும் கலைஞர்கள் தங்கள் உள்ளுணர்வைப் பின் தொடர வேண்டும். என்னுடைய உள்ளுணர்வுக்கான வழிகாட்டிகளாக நான் காணும் காட்சிகளைத்தான் எண்ணிக் கொள்வேன். அப்படித்தான் தெருவில் நான் காணும் வித்தியாசமான மனிதர்கள், பெண் உருவங்கள், தெருக்காட்சிகளை பிலிம் ரோல்களில் படம் பிடிக்கத் தொடங்கினேன். முழு வார ஊடகவியலாளர் பணிக்குப் பிறகு இரண்டு மூன்று மணி நேரமாவது எவ்வித முன் திட்டமுமின்றி தெருக்காட்சிகளைப் படமெடுப்பது என்னைப் புதுப்பிக்கச் செய்வதாக உணர்ந்தேன். நான் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு கதை ஒளிந்திருந்தது. அதனை என்னுடைய தனிப்பட்ட சேகரிப்புக்காகவும் சமூக ஊடகத்தளங்களில் பகிர்வதற்காகவும் செய்து வந்தேன். அப்படி எடுக்கப்பட்ட படங்களைத் திரட்டி UNSEEN எனும் கருப்பொருளில் கண்காட்சியையும் ஏற்பாடு செய்தேன். நான் தெருவில் கண்ட விளிம்பு நிலை மனிதர்களின் படங்களையே காட்சிப்படுத்தியிருந்தேன். அந்தக் கண்காட்சி முற்றிலுமாக என்னை அடையாளப்படுத்திக் கொள்ள செய்த முயற்சித்தான்.
தொடர்ந்து வாழ்வில் எந்தப் பிடிப்புமற்று ஊடகப் பணி மற்றும் நிழற்படப் பணி செய்து வந்தது சற்றே சலிப்பூட்டத் தொடங்கியது. அச்சமயத்தில்தான் லங்காவி தீவிலிருந்த ஒரு முனீஸ்வரன் கோவிலைப் படம் பிடித்தேன். அந்தக் கோவிலில் இருந்த இராவணன் சிலைக்குப் பின்னால் இருந்த பல ஜோடிக் கண்களைப் படம் பிடித்தேன். நெகட்டிவ் ரோலில் இருந்து படமாக மாற்றிப் பார்க்கும் போது அதன் உள்ளே ஏதோ ஒன்றுக்கான அழைப்பு இருப்பதாகத் தோன்றியது. அதிலும் குறிப்பாக, பால்யக்காலத்தில் தோட்டத்தில் கொள்ளுபாட்டியுடன் கழிந்த பொழுதுகள் நினைவுக்கு வந்தன. என் கைகளை ஒரு கையிலும் மறு கையில் பலிச்சேவலையும் பிடித்துக் கொண்டு தோட்டத்து முனியாண்டி கோவிலுக்குப் பாட்டி அழைத்துச் சென்ற நினைவுகள் வந்தன. அது எனக்குள் வாழ்வு மீதான நம்பிக்கையைப் பற்றி நினைவுபடுத்தியிருக்க வேண்டும். அப்படித்தான் வார இறுதிநாட்களில் நாட்டின் மூலை முடுக்குகளில் இருக்கும் கைவிடப்பட்ட கோவில்களை கூகள் மேப், முகநூல் போன்றவற்றில் கண்டறிந்து நாட்டார் தெய்வங்களைப் படமெடுக்கத் தொடங்கினேன். மரத்தடிகளில் கைவிடப்பட்டு முழுமை கூடாமலும் சிதைந்தும் போயிருந்த தெய்வச்சிலைகள் என்னைக் கவரச் செய்தன. தொல்சின்னமான பூஜாங் பள்ளத்தாக்கு சண்டிகள் தொடங்கி தலைநகரின் சந்துகளில் இருந்த சிறிய கோவில்கள் வரை தேடித்தேடிப் படமெடுத்தேன். ஏறக்குறைய இரண்டாண்டுகள் வரையில் படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்படி எடுத்தப் படங்களை எல்லாம் பிலிம் ரோல்களிலிருந்து படங்களாக மாற்றி அவற்றையே பார்த்துக் கொண்டிருப்பேன். அவை எனக்குள் எதோ ஒன்றைக் கடத்த முயல்வதாகவே தோன்றி கொண்டிருந்தது. அப்படித்தான் அவை எல்லாமே நம்பிக்கை எனும் சரட்டில் ஒன்றிணைவதாக எண்ணம் ஏற்பட்டது. அந்த எல்லா தெய்வச் சிலைகளுமே தாங்கள் செய்யும் பணிக்கும் வாழ்க்கைக்கும் பாதுகாப்பு தரவேண்டி தமிழர்களால் உருவாக்கப்பட்டவை. அந்த எண்ணத்தை அருளவேண்டி கூட்டமாக நாள்தோறும் தெய்வச்சிலைகள் முன் வழிபாடுகள் நடந்திருக்கும். அந்தத் தெய்வங்கள் தந்த நம்பிக்கையால்தான் அவர்கள் வாழ்வின் எல்லா இக்கட்டுகளையும் கடந்திருப்பார்கள். அப்படி இருக்கும்போது அவை ஒவ்வொன்றும் நம்பிக்கையின் சின்னங்களாக எனக்குத் தோன்றியது.
இதை நாம் பேசிக்கொண்டிருக்கும் நாட்டில் சட்டவிரோதமாக எழுப்பப்பட்டவை என கோவில்களை நோக்கி விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன அல்லவா?
தினேஷ்: ஆம். நானுமே செய்தி ஊடகத்தில் பணியாற்றுவதால் அந்தச் செய்திகளை ஒரு நிருபராகவும் பொது மக்களில் ஒருவனாக அன்றாடம் பார்த்துக் கொண்டிருப்பேன். அதனை நோக்கி கலைஞனின் எதிர்வினையாக என்னுடைய நிழற்படங்களை முன்னிறுத்தும் எண்ணமெழுந்தது. கோவில்களைப் பற்றி சமூகத்தில் தப்பெண்ணமே அதிகமிருந்தது. தமிழ்ச் சமூகம் பழங்குடியின் வேரை இன்னும் தன்னுள் வைத்திருக்கிறது. அந்தப் பழங்குடி வேரின் வடிவம்தான் நாட்டார் தெய்வம். இன்றைக்கு, அந்தப் பழங்குடி மரபு பொதுசமூகத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டாலும் அதன் வேர் என்னவோ பழங்குடியில்தான் இருக்கிறது. அந்த மரபு மீண்டும் மீண்டும் சொல்ல முயல்வது நன்மையைச் செய் எனும் அறத்தின் வடிவம்தான். இந்த எண்ணத்துடன்தான் ஓவியர் ஸ்டிவனை சந்தித்தேன். அவரைச் சந்தித்து என்னுடைய நிழற்படங்களையும் எண்ணத்தையும் வெளிப்படுத்திய இரவு இரண்டாண்டுகளாக மனத்தை அழுத்திய பாரம் நீங்கி வெளிப்பட்டதாய் உணர்ந்தேன். ஸ்டிவன் ஒரு காப்பாளர் (Curator) கூட. நான் எடுத்திருந்த 52 புகைபடங்களில் இருந்து 13 படங்களைத் தெரிவு செய்து கண்காட்சி நடத்தத் திட்டமிட்டார். அப்படியாகத்தான் 13 படங்களைக் கொண்ட ‘அறம்’ கண்காட்சி வடிவம் பெற்றது.

‘அறம்’ நிழற்படக் கண்காட்சிக்காக நீங்கள் மேற்கொண்ட பயணம் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எதை அளித்தது?
தினேஷ்: ஒவ்வொரு வார இறுதியின் போதும் கூகுள் மேப் செயலியில் கோவில்களைத் தேடிச் சென்று கொண்டிருந்தேன். அப்படி நான் செல்லும் கோவில்களில் நடக்கும் வழிப்பாட்டுச் சடங்குகளில் அதிகமும் பங்கேற்காமல் வெறுமனே கோவில் சூழலை மட்டுமே அவதானித்துப் படங்களை எடுத்துக் கொண்டிருப்பேன். இதைத்தாண்டி எனக்குள் ஏற்பட்ட இரு அனுபவங்களைக் குறிப்பிடலாம்.
முதலாவதாக ஒரு ஞாயிறன்று தஞ்சோங் சிப்பாட்டில் இருந்த தோட்டக் கோவிலொன்றுக்குச் சென்றிருந்தேன். நான் சென்ற நாளில் அந்தக் கோவிலில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. தோட்டத்திலிருந்து வெளியேறிய மக்கள் பலரும் ஒன்றுகூடி திருவிழா நடத்திக் கொண்டிருந்தனர். அந்தத் திருவிழா சூழலில் இருந்த கோவிலைக் கண்டபோது நான் தேடிக்கொண்டிருந்த எதோ ஒன்றை அடைந்த நிறைவுணர்வு ஏற்பட்டது. அதைப் போலவே, சென்றாண்டு புனரமைப்புக்குத் தற்காலிகமாகக் கோவிலை மூடுவதற்கு முன்னால் செந்தூல் காளியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. அங்கும், செந்தூலிலிருந்து வெவ்வேறு பகுதிகளுக்குப் பெயர்ந்த மக்கள் மீண்டும் ஒன்றுகூடி திருவிழா கொண்டாடினார்கள். ஒரு தெய்வம் மக்களை ஒன்றிணைப்பதைக் காண நிறைவாக இருந்தது.
பிறகு, பூஜாங் தொல்சின்னப் பகுதியில் கோவில் மையக்கருவறையிலிருந்து வெளிப்பகுதிக்கு அபிஷேக நீரை வெளியேற்றும் குழாய் ஒன்றைக் கண்டேன். மறுநாள், அங்கிருந்து சிறு தூரத்தில் தற்காலக் கோவிலொன்றிலும் அதே மாதிரியான அமைப்புடன் கோவில் கருவறை வடிவமைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கோவிலின் அமைப்பு ரீதியிலே ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருப்பதை உணர்ந்தேன். தனிப்பட்ட முறையில், இந்தப் பயணம் எனக்குள் தெளிவை உண்டாக்கியிருக்கிறது எனலாம். பொதுவாகவே மனிதர்கள் படைப்பாற்றல் மிகுந்தவர்கள். ஆனால், அந்தப் படைப்பாற்றலைக் கண்டுணர அறிவார்ந்த பலம் தேவைப்படுகிறது. அதை அடைய எவ்விதக் கவனச் சிதறலும் இன்றி பயணிக்க வேண்டியிருக்கிறது. அதனால், நான் இன்னும் கொஞ்சம் மேம்பட்டிருக்கிறேன் என நம்புகிறேன். அதுவே இந்தப் பயணம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்.
தற்காலத்தில் நாட்டில் அதிகமாகப் பேசப்படும் சட்டவிரோத கோவில் சிக்கலை ஒட்டித்தான் உங்களுடைய கலை முயற்சி அமைந்திருந்ததா?
தினேஷ்: கலையின் பெரும்பலமே அதன் காலாதீத தன்மைத்தான். காலந்தோறும் அரசியல், சமூகச் சிக்கல் காரணமாக உருவாகும் நன்மை, தீமை கூறுகள் இருக்கவே செய்யும். அதைக் கடந்துதான் கலைஞர்கள் காலந்தோறும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்கள் வழியில் வந்தவன் என்ற முறையில் நானும் எனக்கான கலையைக் கண்டு கொண்டேன். ஆனால், சமகாலத்தில் நடக்கும் அரசியல் சிக்கலில் ஒரு நேர்மறை அம்சமாக என்னுடைய கலை இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. எதிர்மறைச் சூழலில் ஒரு நேர்மறை அம்சமாக என்னுடைய குரலும் ஒலிக்க வேண்டுமென்பது திட்டமிட்ட முடிவல்ல. அது அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது என்றுத்தான் சொல்ல வேண்டும்.
நான் என்னுடைய கண்களின் வாயிலாக ஒன்றைப் பார்ப்பதற்கும் உங்கள் காமிராவின் வழி அவற்றைப் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
தினேஷ்: என்னைப் பொறுத்தளவில் நாம் பார்க்கும் உலகின் நகல் வடிவங்கள்தான் நிழற்படங்கள். எந்தளவுக்கு அவை உண்மைக்கு நெருக்கமாக இருக்கின்றனவோ அவை கலையாகின்றது. பார்வையற்றுப் போனால் படங்கள் எடுக்க முடியுமா என்பது என்னுள் எப்பொழுதும் இருக்கும் கேள்வி. பிரிக்பீல்ட்ஸில் இருக்கும் பார்வையற்றோர் சங்கத்தில் பார்வையற்றோருக்கான காமிரா பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. அந்தப் பயிற்சியில், வெளியில் கேட்கும் ஒலிகளைக் கொண்டு உள்ளுணர்வில் உருவாக்கிக் கொள்ளும் சித்திரம் அடிப்படையில் படங்களை எடுக்கும் பயிற்சி தரப்படுகிறது. அந்தப் பயிற்சியே எனக்குப் பெரும் சிலிர்ப்பைத் தந்த அனுபவமாக இருந்தது. ஒரு காமிரா கலைஞனின் ஆகப்பெரும் பலமென்பது அவனிடம் இருக்கும் தொழிற்நுட்பம் மிகுந்த காமிராவோ அல்லது அவன் கற்றுக்கொண்ட நுட்பங்களோ அல்ல. மாறாக, தன்னுடைய உள்ளுணர்வையும் அதை வெளிப்படுத்தும் கோணங்களையும் முடிவு செய்கின்ற அவனுடைய கண்கள்தான் என்பேன். என்னுடைய காமிராக்களில் பதிவாவது வெளியுலகக் காட்சிகள் மட்டுமில்லை; என்னுடைய உள்ளுணர்வு பின் தொடர்ந்து காட்சிப்படுத்த வேண்டும் என உந்துகின்ற ஒன்றைத்தான் நீங்கள் படங்களாகப் பார்க்கின்றீர்கள். ஆகவே, என்னுடைய உள்ளுணர்வும் கோணங்களும்தான் அவற்றைக் கலையாக மாற்றுகின்றன.
நீங்கள் பெரும்பாலும் நாட்டார் தெய்வக் கோவில்களையே அதிகமும் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்?
தினேஷ்: திரைப்படத்துறையில் ஏன் எனக்குச் சோர்வு ஏற்பட்டது என்ற அனுபவத்திலிருந்து இந்தக் கேள்விக்கான பதிலை விளக்க முயல்கிறேன். திரைப்படங்களில் இன்ன கோணத்தில் இன்ன ஒளியில்தான் ஒரு காட்சியைப் பதிவு செய்ய வேண்டுமென ஒரு விதி இருக்கும். அந்த விதி ஒருவகையில் நம்மைக் கட்டுப்படுத்திவிடுகிறது. அந்த மாதிரியான விதிகளினால்தான் திரைப்படங்களை விட்டு விலகுவது என்ற முடிவுக்கு வந்தேன். அதைப் போலத்தான், திட்டமிட்ட விதிகள், ஒழுங்குடன் இருக்கும் கோவில்கள் எனக்கு எந்த உணர்வையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், நாட்டார் கோவில்களில் அப்படி எந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லை. சில கோவில்களில் நானும் தெய்வமும் மட்டுமே இருந்தோம். உதாரணத்துக்கு, ஆளரவமற்ற கோவில்களில் நாய்கள் சூழ வீற்றிருக்கும் தெய்வங்களைப் பார்க்க சிலிர்ப்பாக இருக்கும்.

படங்கள் எடுக்கும் கோவிலின் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்றதுண்டா?
தினேஷ்; ஒரு சில கோவில்களின் வரலாற்றைப் பற்றி மட்டும் கேட்டுத் தெரிந்திருக்கிறேன். ஆனால், அவ்வாறு கோவில்களின் வரலாறு, சிறப்புகள் என தகவல்களை அதிகமும் தெரிந்து கொள்வதால் கற்பனை தடைபட்டுவிடும் என்ற பயமும் இருக்கிறது. வெறும் கற்பனையை மட்டுமே கொண்டு கோவிலை அணுகுவது இன்னும் சிறப்பானதாக இருந்தது.
தமிழர்கள் இடையே கலைக்கண்காட்சி ஆகியவற்றில் ஆர்வம் இருக்கிறதா?
தினேஷ்; பொதுவாக, தமிழர்களிடம் இம்மாதிரியான கலையார்வம் குறைவாகவே இருக்கிறது. கலைக்கூடங்களுக்குச் சென்று கண்காட்சிகளைப் பார்ப்பதைவிட வெகுஜனக் கலையான திரைப்படங்களைப் பார்ப்பது இன்னும் எளிதானதாக இருக்கிறது. அதனாலே, கலைக்கூடங்களை நோக்கிய தேடல் தமிழர்களிடம் குறைவாக இருக்கிறது. ஆனாலும், அந்தத் தேடல் சிறிய அளவில் வளர்ந்து வருகிறது. ART VOICE GALLERY நடத்தி வரும் ஓவியர் ஸ்டீவன் போன்றவர்கள் கலைத்துறையில் ஆர்வம் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்களை அடையாளம் கண்டு தகுந்த கவனத்தை உருவாக்கும் பணிகளைச் செய்து வருகிறார்கள்.
இந்தப் படங்களின் முக்கியத்துவம் என்ன?
தினேஷ்; இந்தப் படங்களின் முக்கியத்துவமே அதன் ஆவணப்படுத்தல் தன்மைத்தான். நான் சென்ற கோவில்கள் இன்னும் சில ஆண்டுகளில் எந்த மாதிரியான மாற்றங்களைக் காணும் எனச் சொல்ல முடியாது. ஆனால், என்னுடைய படங்களின் வாயிலாக அக்கோவில்கள் நிரந்தரமாக இருக்கும். அவை வரலாற்றின் ஓரங்கமாக படங்களில் இருக்கும். அத்துடன், ஒரே தெய்வச் சிலைகளுக்கும் இடையில் நுண்ணிய மாற்றங்கள் இருக்கின்றன. அந்த மாற்றங்களையும் படங்களின் வாயிலாக பதிவு செய்ய முடிந்துள்ளது.
உங்களுடைய கண்காட்சிக்கு ஏன் ‘அறம்’ எனப் பெயர் சூட்டினீர்கள்?
தினேஷ்; நான் எடுத்திருந்த கோவில் படங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது மிக இயல்பாகத்தான் அறம் என்ற சொல் எண்ணத்தில் உதித்தது. அதன் பிறகுத்தான், அந்தச் சொல்லுக்கும் என்னுடைய படங்களுக்குமான தொடர்பைக் கண்டறிந்தேன். தமிழைக் கற்கத் தொடங்குகின்ற சிறுகுழந்தைகளுக்கு முதலில் கற்றுத்தரப்படும் ஆத்திசூடியே அறம் செயவிரும்புதான். மொழியைக் கற்கத் தொடங்கும் போதே நன்மையைச் செய் என்பதை ஒரு மொழி கற்பிப்பது மிக உன்னதமானது. நான் தமிழ்வழி மாணவன் இல்லை. ஆனாலும், ஒரு சமூகத்தின் கூட்டுமனச்சான்றாக அறம் இருக்கிறது. அதனை மொழிக்கல்வியின் தொடக்கத்திலே கற்பிக்கிறார்கள் என்பது ஆர்வமூட்டியது. கைவிடப்பட்ட இந்தத் தெய்வங்களும் அந்தச் செய்தியைத் தாங்கித்தான் நிற்கின்றன என்பதால் ‘அறம்’ எனக் கண்காட்சிக்குப் பெயர் சூட்டினேன்.
உங்களுக்கு மிகப்பிடித்த நிழற்படக் கலைஞர் யார்?
தினேஷ்; எனக்கு மிகப்பிடித்த நிழற்படக் கலைஞர் டயடோ மோரியாமா (Daido Moriyama). அவர் மிகச்சிறிய காமிராவைக் கொண்டு தோக்யோ நகர வீதிகளில் அலைந்து முன் திட்டமின்றி படங்களை எடுப்பார். அவரை என் ஆதர்ச கலைஞராகக் கண்டுகொள்ளும் முன்னர் நானும் அவ்வாறுத்தான் இலக்கின்றி வீதிகளில் அலைந்து திரிந்து படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்படி எடுக்கின்ற பிலிம் சுருள்களின் நெகட்டிவை மாற்றும் போது மலாய் கடைக்காரர் ஒருவர்தான் டயடோ மோரியமாவை எனக்கு அறிமுகம் செய்தார். அப்படித்தான் டயடோ மோரியாமாவை கண்டடைந்தேன். அவர் விடுதியிலிருந்து வெளியேறும் போது தலை உயர்த்தி பார்க்கும் தெருநாயின் படமொன்று மிகப் பிரபலமானது. எவ்வித திட்டமின்றி எடுக்கப்பட்ட அப்படம் உலகின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக விளங்கியது. அவருடைய படம் எடுக்கும் விதமும் அவருடைய சிந்தனைகளும் எனக்கு மிக நெருக்கமானதாக இருந்தது.
நாட்டார் தெய்வ நிழற்படங்களின் வாயிலாக நீங்கள் தனித்துவமாக எதையாவது கண்டடைந்தீர்களா?
தினேஷ்; எனக்கு கேரித்தீவில் இருக்கும் மா மேரி பழங்குடிகளின் கடல் ஆற்றும் படுத்தும் சடங்கைப் படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் சடங்குகள் பெருமளவு இந்து நாட்டார் தெய்வச் சடங்குகளுடன் ஒத்துப் போயிருந்தது. சடங்குகளில் பயன்படுத்தும் தோல் கருவி, தோற்றங்கள் எல்லாமே இந்து மதத்துடன் நெருங்கியத் தொடர்புடையதாக இருந்தன. அதை போல ஆஸ்திரேலிய நாட்டுக்குச் சென்றிருந்த போது அங்கிருந்த பழங்குடிகளின் பாடல்களும், சடங்குகளும் கூட பலவகையில் நாட்டார் தெய்வங்களுடன் தொடர்புடையதாக இருந்தது. ஆக, இப்படி நாட்டார் தெய்வங்களை மட்டுமே ஆவணப்படுத்தினாலே அதற்குள் ஒரு தனித்துவமான தொடர்பு வலை உலகம் முழுவதும் விரிந்திருப்பதைக் கண்டுகொள்ள முடியும் என எண்ணுகிறேன்.
நேர்காணல்: அரவின் குமார்
