
மலேசியத் தமிழ் இலக்கியத்தில் நான் ஆச்சரியமாகப் பார்க்கும் தன்மை ஒன்று உண்டு. இந்நாட்டு இலக்கியவாதிகளுக்குச் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்குவதுபோன்ற விருதுகளோ பரிசுத்தொகைகளோ அங்கீகாரங்களோ இல்லை. தமிழக இலக்கியவாதிகளுக்குக் கிடைப்பதுபோன்ற வாசகர் பரப்போ நூல் விற்பனைக்கான சந்தையோ அரசு விருதுகளோ இல்லை. மலேசியாவில் நவீன இலக்கியத்தில் ஈடுபடும் ஒருவன் ஒருவகையில் தனியன். அவர்களை யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்தப்போவதும் இல்லை. பொருளியல் ரீதியாகவோ வாசகர்கள் ரீதியாகவோ அவன் அடையப்போகும் நன்மை என பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் 50கள் தொடங்கியே இந்நாட்டில் நவீன இலக்கியத்தை வளர்க்க வேண்டுமென ஓர் அறுபடாத கொடி மரபு ஒன்று தொடர்ந்து வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தலைமுறை ஒன்று உருவாகி அந்த மரபை அடுத்தடுத்தத் தலைமுறைக்கு இழுத்துச் செல்கிறது. அப்படி 2007இல் வல்லினம் உருவாகி 20 ஆண்டுகள் தொடும் சூழலில் ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் மலேசியாவில் உருவாகியுள்ளனர்.
இந்தத் தலைமுறையினர் எழுதுவதோடு தங்களை நிறுத்திக்கொள்ளாமல் இயக்கமாகவும் செயல்பட வல்லினம் தொடர்ந்து ஊக்குவித்து வரும் சூழலில்தான் ‘முதல் எழுத்து’ இலக்கிய விழா நடைபெற உள்ளது.
மே 23 ஆம் திகதி இலக்கியம் போதிக்கும் ஆசிரியர்களுக்கான நவீன இலக்கியப் பட்டறையுடன் தொடங்கும் இந்த முயற்சி, மே 24 ஆம் திகதி ‘முதல் எழுத்து’ விழாவுடன் நிறைவடைகிறது. கோலாலம்பூர் பிரிக்பீல்டில் அமைந்துள்ள YMCA மண்டபத்தில் பட்டறையும் விழாவும் நடைபெறுகின்றது. இவ்விழாவில் எழுத்தாளர் சு. வேணுகோபால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட குறுநாவல் போட்டிக்கான பரிசளிப்புவிழாவும் இந்நிகழ்ச்சியில் ஓரு அங்கமாக இடம்பெறும். அதோடு முதன்மையாக மூன்று அங்கங்கள் இந்த விழாவில் இணைக்கப்பட்டுள்ளன.
அகப்பக்க அறிமுகம்
மலேசியாவில் 60கள் தொடங்கி எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளைத் தொகுக்கும் பணியை இளம் எழுத்தாளர் பரிமித்தா முன்னெடுத்துள்ளார். இந்த அகப்பக்கத்தின் வெளியீட்டு விழா ‘முதல் எழுத்து’ நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக இடம்பெறும். இந்த விழாவுக்குத் தலைமைத் தாங்கும் அருண் மகிழ்நன் அவர்களே அகப்பக்கத்தையும் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுவார். அரவின் குமார், சாலினி, தர்மராஜ் என பலரது உழைப்பில் உருவாகியுள்ள இந்த அகப்பக்கம் மலேசியாவின் சிறந்தச் சிறுகதைகளைக் காட்டும் முகமாக வெளிபடும்.

நூல் வெளியீடு
கி. கோகிலவாணியின் கட்டுரைத் தொகுப்புகள் அடங்கிய ‘கீரவாணி’ எனும் நூல் இந்த நிகழ்ச்சியில் வெளியீடு காண்கின்றது. பல்வேறு கலைகள், அதன் சாரங்கள் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் அடங்கிய இந்த நூலை சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் வெளியீடு செய்வார்.

ஆவணப்பட வெளியீடு
மலேசியாவில் ஆண்டு தோறும் நடக்கும் காமன் ரதி விழாவின் ஆவணப்பட வெளியீடு மூன்றாம் அங்கமாக இடம்பெறும். கௌசல்யா, செல்வன், சாலினி ஆகியோர் முயற்சியில் தயாராகியுள்ள இந்த ஆவணப்படத்தை இயக்குநர் சஞ்சய் குமார் வெளியீடு செய்து உரையாற்றுவார்.

மதியம் 2 முதல் மாலை 5 வரை இலவசமாக நடைபெறும் இவ்விழாவில் பங்கெடுக்க முன்பதிவு அவசியம். முன் பதிவு செய்ய கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.
முதல் எழுத்து இலக்கிய விழா பதிவு பாரம்
மேற்கொண்ட விபரங்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அரவின் குமார் அவர்களை அணுகலாம்: 0103626478
