மலேசியப் பாட்டிகள் சொன்ன கதைகள் – தொடர் – 2

க்ரூக் க்ரூக் மணிப்புறா

ஓர் ஊரில் புறா வளர்ப்பதில் ஆர்வம் உள்ள ஒருவன் இருந்தான். அவன் பெயர் குமார். அவன் இரண்டு நாள் உண்ணாமல் மணிப்புறா வேண்டும் என அப்பாவிடம் அடம்பிடித்தான். வாங்கி தருகிறேன் என அப்பா வாக்குக் கொடுத்தார். ஆனால் சாமியின் பேச்சைக் கேட்டதும் மனம் மாறிவிட்டார். சாமி என்பவர் பகுதி நேரமாக பலகையில் சாமிப்படங்கள் வரைவதையும் சாமி மேடைகளை முழு நேரமாக செய்வதையும் தொழிலாகச் செய்து வருபவர். அவரிடம் புறா வளர்ப்பதற்குக் கூண்டு செய்ய கேட்டு பார்க்க குமாரை அழைத்து கொண்டு சென்றார் அப்பா.

அப்பா சொன்னதைக் கேட்ட சாமி “இதெல்லாம் ஒருவகையில் பாவம்” என்றார் ஆழமாக அப்பாவைப் பார்த்து, ஆழ்ந்த மௌனத்திற்குப் பிறகு, அப்பாவும் மனம் மாறி குமாரை அழைத்து சென்று விட்டார்.

ஆசையை வளர்த்துக்கொண்ட குமார் தொடர்ந்து அப்பாவிடம் அடம்பிடித்தான். குமாரின் பிடிவாதத்தின் முன் அப்பா மண்டியிட்டார். “குருவிக்காரனிடம் சொல்லி வைத்துள்ளேன். காட்டுக்குள் சென்று பிடித்ததும் தகவல் சொல்லி அனுப்புவான்,” என்றார். அந்தக் குருவிக்காரன் குருவிகளைக் கண்ணி வைத்து பிடிப்பதில் வல்லவன். பசித்திருந்த ஒரு ஜோடி மணிப்புறாக்கள் குருவிக்காரன் வைத்த கண்ணியில் சிக்கிக் கொண்டன. சிறிய குருவிக் கூண்டு ஒன்றில் அடைத்து கொண்டு குமார் வீட்டுக்கு வந்தான். கூண்டோடு சேர்த்து விலைப் பேசி குமாருக்குப் பிறந்தநாள் பரிசாக அப்பா கொடுத்து விட்டார். அன்றிரவு புறா கூண்டை அணைத்தப்படியேதான் தூங்கினான் குமார்.

க்ரூக் க்ரூக் எனக் காலையில் புறாக்கள் குனுகியதைக் கேட்டுதான் கண் விழித்தான். அதற்கான தட்டில் தீனியைப் போட்டான். அதன் அருகிலிருந்த குவளையில் தண்ணீர் ஊற்றினான். ஜோடிப் புறாக்கள் இரண்டும் உண்டதும் க்ரூக் க்ரூக் எனக் கூவின. அவனுக்கு நன்றி தெரிவிப்பதாக நினைத்து கொண்டான். பதிலுக்கு அது போலவே நன்றி சொல்ல வாயில் ஊதிப் பார்த்தான். க்ரூக் க்ரூக் சத்தம் வரவில்லை. இரண்டு கை விரல்களையும் ஒட்டியப்படி சேர்த்து மடக்கினான். சங்குப் போல உருவத்தை ஒத்திருந்தது. சங்கை ஊதுவது போலவே ஊதினான். சரியாக வரவில்லை. மூன்றாவது முறையாக முயல்கையில் க்ரூக் க்ரூக் சத்தத்தைக் கேட்டு, ஜோடிப் புறாக்களும் குனுகத் தொடங்கின.

புறா முட்டை இடும். எனவே தேங்காய் மட்டையைச் சின்னதாக உரித்து கூண்டுள்ளே போடச் சொல்லியிருந்தான் குருவிக்காரன். அவன் சொன்னதிலிருந்து குமார் புறா எப்போது முட்டை இடும் எனத் தினமும் எதிர்பார்த்தான். அவன் உரித்து போட்ட மட்டையில் கூண்டுக்குள் இன்னொரு வடிவத்தில் கூண்டு ஒன்றை அந்த ஜோடிப் புறாக்கள் கட்டின.

அவன் எதிர்பார்த்தபடி புறாவும் முட்டை இட்டது. புறா முட்டையைப் பார்த்தவுடனே, முட்டைவுடைந்து குஞ்சு எப்போது வெளிவரும் என்று எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தான்.  இரண்டு முட்டைகளிலிருந்தும் குஞ்சுகள் வெளியாயின. மகிழ்ச்சியில் அவன் துள்ளிக் குதித்து க்ரூக் க்ரூக் எனப் பல முறை குனுகினான். இரண்டு குஞ்சுகள் நான்கு குஞ்சுகளாகப் பல்கிப் பெருகின. கூண்டுகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. சொந்தமாக கட்டைகளைச் சேகரித்து வந்தான். வலைக்கம்பியை அவன் அப்பா வாங்கி வந்து கொடுத்தார். புறா நன்றாக வசதியாக விளையாட ஏற்றவாறு கூண்டு ஒன்றைச் செய்து முடித்தான். முன்பிருந்த கூண்டு போல இதைத் தொங்க விட முடியாது. தரையில் ஓரமாக வைக்கக் கூடிய ரகமாக அது அமைந்தது.

கொஞ்ச நாளிலேயே அந்தக் கூண்டும் புறாக்களுக்கு வசதி இல்லாமல் போனது. அந்த அளவுக்கு மிக விரைவாக அவை முட்டையிட்டு பல்கிப் பெருகின.  மீண்டும் இன்னொரு கூண்டை முன்பு செய்ததை விட இரண்டு மடங்குப் பெரியதாக செய்து முடித்தான். அவனின் அண்டை வீட்டு நண்பர்கள் அதற்கு உதவினர். ஆனால் சில வாரங்களிலேயே புறாக்களின் எண்ணிக்கை மேலும் கூடின. கூண்டை மேலும் பெரிதாகச் செய்ய அவன் வீட்டில் இட வசதியில்லை.  எவ்வளவு பெரிய கூண்டு செய்தாலும் இந்தப் புறாக்களுக்குப் போதாதென இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான். 

தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்து வந்தான். அனைவரையும் ஆளுக்கு ஒரு பக்கம் பிடிக்கச் சொன்னான். அப்படியே தூக்கிக் கொண்ட வீட்டை விட்டு நகர்ந்தனர்.

அவர்கள் அனைவரும் குமாரின் கட்டளைக்கிணங்கி வீட்டுக்கு அருகிலுள்ள காட்டு பகுதியில் கூண்டைக் கீழே இறக்கி வைத்தார்கள். ஒரு முறை க்ரூக் க்ரூக் என குனுகினான். கூண்டினுள்ளேப் புறாக்களும் பதிலுக்கு நன்றி சொல்லும் தொனியில் க்ரூக் க்ரூக் எனச் சொல்லி உற்சாகம் கொண்டன. கூண்டின் கதவைத் திறந்தான். ஒவ்வொரு புறாக்களும் எகிறிக் குதித்தும், நடந்தும் வெளியாயின. ஆங்காங்கே கோழிகளைப் போலவே மேய்ந்து திசைத் தெரியாமல் திரிந்தன. அவன் ஒவ்வொரு புறாவையும் பிடித்து ‘பற… பற… பறந்து போ…!’ எனத் தூக்கி மேல் நோக்கி பறக்க விட்டான். தூக்கிப் போட்ட வேகத்திலேயே ஒவ்வொரு புறாவும் கீழே வந்து விழுந்தன.

அந்த நேரம் அங்கிருந்த பூனைகள் பாய்ந்து வந்து புறாக்களின் கழுத்தைக் கௌவ்வி எடுத்து கொண்டு ஓடின. பூனைகளைப் பார்த்த பயத்தில் புறாக்கள் காட்டுக்குள்ளே ஓடின. ஓடும் போது கூட எகிறி எகிறி இறக்கைகளை அசைத்து பார்த்தன. ஒரு புறாவால் கூட உயரப் பறந்து போக முடியவில்லை. இறுதி முயற்சியும் தோல்வியில் முடிய காட்டுக்குள் சென்று மறைந்தன. அவை அச்சத்தில் க்ருக் க்ருக் எனக் குனுகியது. குமாரின் நெஞ்சைப் பதற வைத்தது. குமார் அழுது கொண்டே தன் நண்பர்களுடன் வீடு திரும்பினான்.

காலமும் மாங்காய் மரமும்

மாங்காய் மரம் ஒன்றை தாத்தா நட்டு வைத்தார். இந்த வயதில் தாத்தாவுக்கு ஏன் தேவை இல்லாத வேலை என அந்தத் தோட்டத்து மக்கள் கேலி செய்தார்கள். அவர்களின் கேலி பேச்சுக்குத் தாத்தாவின் ஒரே பதில் “இந்த மரம் வருங்காலத்தில் கொடுக்கும் கனியை நம் தோட்டத்து மக்கள் எல்லோரும் உண்டு மகிழ்வார்கள்” என்பதுதான்.

மாங்காய் மரம் நட்டு வைத்த ஒரே மாதத்தில் தாத்தா இறந்து விட்டார்.

மாங்காய் மரத்தைத் தாத்தாவின் நினைவாக பாதுகாக்கும் பொறுப்பு அந்தத் தோட்டத்து மக்களையே சேர்ந்தது. ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒவ்வொரு நாளும் தண்ணீர் ஊற்றினார்கள். மரமும் விரைவிலேயே வளர்ந்து விட்டது. மரம் முழுவதும் மாங்காய்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கிய காலகட்டம் வந்தது. அந்தத் தோட்டத்து மக்கள் அனைவரும் மாங்காய் பறித்து போக வந்து போனார்கள்.

ஆண்டுதோறும் சில மாதங்களில் மட்டும் மாங்காய் அதிகமான எண்ணிக்கையில் பூத்துக் குலுங்கினாலும் மாங்காய் இல்லாமல் மரத்தைப் பார்க்க முடியாது. மாங்காய் பறிக்க வந்தவர்கள் யாரும் ஏமாற்றத்தோடு திரும்பிப் போனதில்லை.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு முத்து என்பவரின் குடும்பம் அந்தத் தோட்டத்திலுள்ள வீட்டுற்குக் குடி வந்தார்கள். முத்து மாங்காய் மரத்தைத் தினமும் மேலும் கீழுமாக உற்றுப் பார்ப்பார். கொஞ்ச நாள் இவ்வாறே நோட்டம் விட்டார். ஏழை சிறுவன் ஒருவன் வழக்கம் போல அங்கே மாங்காய் பறிக்க வந்தான். அவனை விரட்டி அடித்தார். “இந்த மரம் என் வீட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. ஆதலால் எனக்குச் சொந்தமான அந்த மரத்தில் இனி யாரும் மாங்காய் பறிக்க வரக்கூடாது. போய் எல்லோரிடமும் சொல்” என்று மிக கடுமையானத் தொனியில் சொல்லி அனுப்பினார். அதன் பிறகு ஒவ்வொருவராக விரட்டினார்.

பகலில் அவர் தூங்கும்போது மரத்தில் மாங்காய் பறிக்க சிறுவர்கள் படையெடுத்தனர்.  இதை அறிந்த முத்து மறைந்து பார்க்கத் தொடங்கினார். குச்சி, கல் என்று பொறுக்கி வைத்து மறைந்து கொண்டார். மாங்காய் பறிக்க வந்த சிறுவனின் மேல் கல் ஒன்றை வீசி எறிந்தார். மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது. தலையில் கை வைத்தப்படி அழுதுக் கொண்டே ஓடினான்.

மாங்காய் மரத்தைச் சுற்றி வேலி ஒன்றை அமைத்தார். யாரும் அந்தப் பக்கம் வருவதில்லை. இவ்வாறு முத்துவே எல்லா மாங்காய்களையும் எடுத்து வைத்து கொண்டார். கீழே விழுந்து கிடக்கும் மாங்காய் உட்பட சொந்தம் கொண்டாடினார். காலப்போக்கில் தோட்டத்து வாசிகள் யாரும் அந்த மாங்காய் மரத்தை ஏறெடுத்து கூடப் பார்க்கவில்லை.

திடீரென ஒரு நாள் எல்லோர் முன்னிலையிலும் மாங்காய் மரத்திற்கு விஷம் வைத்தார். தடுக்க வந்த பெரியவர்களை விரட்டி அடித்தார்.

மூன்று நாள்களில் ஒரு மாங்காய் கூட இல்லாமல் மரம் முதல் முறையாக காட்சி அளித்தது. ஒரு வாரத்திற்குப் பிறகு மாங்காய் இலைகள் உதிர்ந்து விட்டன. மொட்டையான மரம் ஒரு மாதத்திற்குப் பிறகு வீங்கி உப்பத் தொடங்கியது. மாங்காய் மரம் வீங்கி உப்பத் தொடங்கிய போதே முத்துவும் தனது கைகள் உப்பத் தொடங்குவதைப் பார்த்தார். மருத்துவர் வீக்கம் என மருந்து கொடுத்து அனுப்பியிருக்கிறார். சிகிச்சைக்குப் பிறகும் எந்த முன்னேற்றம் காணப்படாமல் இரு கால்களும் வீங்கி உப்பத் தொடங்கின. அதே நேரத்தில் மாங்காய் மரமும் முன்பை விட வீங்கிக் காணப்பட்டது.

மாங்காய் மரம் முத்துவின் உருவத்தை ஒத்திருப்பதாக அனைவரும் கருதினார்கள். மாங்காய் மரம் அழுகத் தொடங்கியது. முத்துவும் வினோதமான நோயினால் பாதிக்கப்பட்டார். அவரின் உடலும் அழுகிப் போகும் மாங்காயை ஒத்திருப்பதாக பார்த்தவர்கள் சொன்னார்கள்.

ஒரு நாள் விடியலின்போது மாங்காய் மரம் முற்றிலுமாக சரிந்து விட்டிருந்தது. அதன் அருகில் முத்துவும் பிணமாகக் கிடந்தார்.  அழுகிப் போயிருந்த மாம்பழம் ஒன்று முத்துவின் கைப்பிடியில் இருந்ததைத் தோட்டத்து மக்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அதன் பின்னர் அங்குக் குடியேறிவர்கள் அந்நிலத்தில் எத்தனை முறை பழ மரங்கள் நட்டாலும் அது துளிர்ப்பதே இல்லை. அப்படியே துளிர்த்தாலும் அது கருகிக் காய்ந்துவிடுகிறது.

அப்பியம்மா

ஒரு ஊரில் பாட்டி ஒருவர் சுடச் சுடத் தோசை சுட்டு விற்று வந்தார். அதிகாலையிலேயே விறகு அடுப்பை எரிய வைத்து தோசைக் கல்லைச் சூடாக்கி விடுவார். முக்காடு போட்டிருந்த ஒருத்தி, “நான்தான் அப்பியம்மா. எனக்கு இரண்டு தோசை வேண்டும்” என்றார். “ஓ அப்பியம்மாவா! ஏன் உடம்பு எதுவும் சரி இல்லையா? முக்காடு போட்டு வந்திருக்க,” தோசை சுட்டுக் கொண்டே பாட்டி கேட்டார்.

அப்பியம்மா ஏதோ சலிப்பாக பதில் சொல்லிக்கொண்டே கணக்கில் எழுதிக் கொள்ள சொல்லி இடத்தைக் காலி செய்தாள். தோசை பாட்டியும் ‘இவளுக்கு என்ன கிறுக்குப் பிடித்து விட்டதா, அல்லது சேட்டை ஏதாவது பிடித்து விட்டதா’ என மனதில் முணுமுணுத்து கொண்டார்.

மாலையில் தோசை கடைப் பாட்டி அப்பியம்மா வீட்டின் வழியே நடந்து சென்றார். சரி, அப்பியம்மாவைப் பார்த்து விடலாம் என அப்பியம்மாவின் வீட்டிற்கு முன் சென்று அழைத்தார்.

அப்பியம்மாவின் கணவர் வெளியே வந்தார்.

“வாங்க வாங்க பாட்டி. எங்க இந்தப் பக்கம்…?” என்றார் அப்பியம்மாவின் கணவர்.

“அப்பியம்மாவுக்கு உடம்பு ஏதும் சரி இல்லையா? காலையில் கூட முக்காடு போட்டுக்கிட்டு தோசை வாங்க வந்தா? அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என்றாள் தோசை பாட்டி.

“அப்பியம்மாவுக்கு ஒரு வாரமா குளிர்க் காய்ச்சல் பாட்டி. வெளியே எங்கயும் போகலையே” என்றார் அப்பியம்மாவின் கணவர்.

தோசை பாட்டி ஒரு நிமிடம் உஷாரானார்.

“சரி, சரி! அவளை நல்லப்படியா பார்த்துக்கோ. கசாயம் எல்லாம் செய்து குடு. நான் கிளம்புறேன்,” தோசை பாட்டி கிளம்பினார்.

மறுநாள் காலையில் தோசை பாட்டி கடையைத் திறந்தார். முதல் ஆளாக “நான் அப்பியம்மா வந்திருக்கேன். ரெண்டு தோசை குடுங்க பாட்டி,” என்றது முக்காடு போட்டிருந்த உருவம்.

“இதோ போட்டுட்டேன். உனக்கில்லாத தோசையாடி. சுடச் சுடப் போட்டு தரேன்”.

தோசைக் கல்லைச் சூடாக்கிய பாட்டி, கறி கரண்டியை அடுப்பில் செறுகினார். “இந்தாடி அப்பியம்மா.”

அப்பியம்மாவும் கை நீட்டினாள். நீட்டிய கையில் பாட்டி சூடாகியிருந்த கரண்டியைக் கொண்டு ஒரு கோடு போட்டார். 

“அய்யோ அம்மா…” அப்பியம்மா உருவத்தில் வந்திருந்த பேய் அலறியடித்துக் கொண்டு ஓடிப் போனது.

அப்பியம்மா உருவத்தில் வந்திருந்த பேய் அலறிக்கொண்டு ஓடியதைப் பார்த்ததும் பாட்டிக்கு இரக்கம் பிறந்தது. ‘இரண்டு தோசைத் தானே கொடுத்திருக்கலாமே’ எனப் பாட்டி வருத்தப்பட்டார். நாளை வந்தால் மன்னிப்புக் கேட்டுவிட்டு தோசையும் கொடுத்து விடுவோம் என எண்ணிக்கொண்டார்.

அன்றிலிருந்து பாட்டி இறக்கும் வரை அப்பியம்மாவின் பெயரைப் பயன்படுத்திய பேய் தோசை வாங்க வரவே இல்லை.

கலகக்காரன்

டக்… டக்… டக்… வீட்டின் பின் வாசல் கதவை யாரோ விட்டு விட்டு வேகமாக தட்டினார்கள். நாகம்மாள் கதவைத் திறந்து பார்த்தாள். பாம்பு உடலில் கருப்புப் பொட்டு வைத்த பெண் முகம். அதனருகில் குள்ளமான ஒருவன் ஒரு தட்டைக் கையில் ஏந்திக் கொண்டிருந்தான்.

“உன் மாமியார் என்னை அனுப்பினார். உன்னிடமுள்ள சிவ லிங்கத்தின் சிலையை வாங்கி வரச் சொன்னார்கள். அவர் வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டுமாம். பூஜை முடிந்ததும் நானே கொண்டு வந்து தருகிறேன்”

“என் கணவரைக் கேட்காமல் கொடுக்க முடியாது. நீ இங்கேயே நில். நான் அவரை எழுப்பிக் கேட்டு பார்க்கிறேன்.”  பின் வாசல் கதவைச் சாத்திவிட்டு அவசரமாக தூங்கிக் கொண்டிருந்த கணவனை நோக்கி ஓடினாள்.

“என்னங்க சீக்கிரம் எழுந்திறீங்க…” எனக் கத்திய நாகம்மாள் கணவனிடம் நடந்ததை அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் சொல்லி முடித்தாள்.

அவளின் கணவன் ராஜா பின் பக்க வாசல் கதவைத் திறந்தான். மனிதத் தலை பாம்பு அதே இடத்தில் குள்ள மனிதனுடன் நின்றுக் கொண்டிருந்தது. அதன் நீண்ட வாலை எகிறிக் குதித்து தாண்டி அதனிடம் கேட்டான்.

“என்ன வேண்டும் உனக்கு.  நீ யார். ஏன் முன் வாசல் நோக்கி வரவில்லை…” கேள்விகளை அடுக்கினான். அவன் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல், “உன் பூஜை அறையிலுள்ள சிறிய சிவலிங்கத்தின் சிலை வேண்டும். உன் அம்மாதான் அந்தச் சிலையை வாங்கி வரச் சொல்லி என்னை அனுப்பினார்கள்,” சொன்னதையே சொன்னது.

“சரி. எடுத்து வருகிறேன். இங்கேயே நில்” என்றவன் அதன் வாலை எகிறிக் குதித்து வீட்டுக்குள் வந்தான். பூஜை அறைக்குச் சென்றான். சிவலிங்கத்தின் சிலையைக் கையில் எடுத்தான். கீழே வைத்து விட்டு, தன் அறைக்குள் சென்றான். புல்லாங்குழல் ஊதும் கண்ணன் சிலை ஒன்றை அவன் அறையில் வைத்திருந்தான். அந்தச் சிலையை எடுத்தான். கருப்புத் துணியைக் கொண்டு அந்தச் சிலை முழுவதுமாக சுற்றி மூடினான். எடுத்து வந்து அந்த மனிதப் பெண் தலை பாம்பிடம் நீட்டினான். பாம்பு அருகில் நின்ற குள்ளனைப் பார்த்தது. குள்ளன் தன் கையிலிருந்த தட்டை நீட்டினான். சிலையை அதில் வைத்தான்.

“திரும்பிக் கொடுத்து விடுவீர்கள் தானே” என்று கேட்டான்.  “ஆமாம். பூஜை முடிந்ததும் உன்னிடமே கொடுத்து விடுவோம்,” எனச் சொல்லிக் கொண்டே பாம்பும் குள்ளனும் திரும்பிச் சென்றார்கள். 

மனைவி நாகம்மாள் “ஏன் சிலையை மாற்றிக் கொடுத்தீர்கள்” என்றாள். “ஏனோ கண்ணன் சிலைதான் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்ற உள்ளுணர்வின் தூண்டலால் கொடுத்து விட்டேன்,” என்றான்.

நாகம்மாள் கணவனுக்குத் தெரியாமல் பின் வாசல் பக்கமாக அந்தப் பாம்பும் குள்ளனும் சென்ற இடம் நோக்கி மெதுவாக நடந்தாள். அவர்களின் வீட்டின் பின் பக்கத்தைக் கடந்து சென்றால் மாங்காய் மரம் ஒன்று இருக்கும். அந்த மாங்காய் மரத்தின் அடியில் பெரிய சுடுகாட்டு காளி சிலை இருந்தது. குள்ளனும் அந்தப் பாம்பும் அமர்ந்து கொண்டு பூஜை செய்தார்கள். அதைப் பார்த்து ஓடி சென்றாள் நாகம்மாள். கணவனிடம் நடந்தவற்றைச் சொன்னாள். கணவனைப் போய் பார்த்து ஏதாவது செய்யும் படி அழைத்தாள். கணவன் சிரித்தான். திரும்பிப் பார் என்றான். அவன் கொடுத்து அனுப்பிய கண்ணன் சிலை வைத்த இடத்திலேயே இருந்தது.

“யாரோடு யாரை அனுப்ப வேண்டும் என்பதை உணர்ந்து தான் சிலையை மாற்றி அனுப்பினேன். கண்ணன் கலகக்காரன். எப்படியும் தப்பித்து வந்து விடுவான்.” என்றான்.

“அவனுக்கு மாயக் கண்ணன் என்ற இன்னொரு பெயரும் உள்ளதே” என்றாள். இருவரும் சேர்ந்து சிரித்து கொண்டே ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டார்கள்.

தாத்தா சைக்கிள்

தாண்டவராயன் யாருக்கும் பத்து காசுக் கூட கொடுக்காத கஞ்சன். தன்னுடைய சைக்கிளே தனது உலகம் என்று வாழ்ந்து வந்தார்.

தன் சைக்கிளை தினமும் வெள்ளை துணியில் துடைப்பார். மற்ற வண்ணங்களின் துணி அழுக்கை எடுக்காது என்பார். தச்சு வேலை செய்யும் அவர் சில நேரம் இரவிலேயே வீடு திரும்புவார். சைக்கிளில் இரவு விளக்கு எல்லாம் பொருத்தி இருந்தார்.

ஒரு நாள் வேலை முடிந்து இரவு பத்து மணிக்குப் பிறகே சைக்கிளில் வீடு திரும்பினார். மெதுவாக சைக்கிளை மிதித்த வண்ணம், விசிலால் பாடல் ஒன்றை ஒலிக்க விட்டப்படி காட்டு வழியில் புகுந்தார். தாத்தாவிற்கு எந்தப் பேய் பயமும் இல்லை. தாத்தாவின் உடலும் மனமும் பாறைக் கல் போன்று உறுதியானவை.

அப்போது சைக்கிளின் சக்கரத்தில் ஆணி போல ஒன்று குத்தி காற்று முழுவதும் வெளியாகிவிட்டது. இறங்கிப் பார்த்தார் தாத்தா. இனி தாண்டவராயன் நட ராஜா தான் என மனதில் சொல்லியப்படி சைக்கிளை தள்ளிக் கொண்டே போனார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட தாத்தா உற்சாகமாக விசில் அடித்தப்படியே இருந்தார். காட்டுப் பாதையைக் கடந்ததும் சைக்கிள் கடை ஒன்று இருக்கும். ஆனால் இந்நேரம் அடைக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் அழைத்து பார்க்கலாம் எனத் தாத்தா கடையின் முன் சென்று நின்றார். கடையின் இரும்புக் கதவு பூட்டிக் கிடந்தது. தாத்தா நாளை காலை பார்த்து கொள்ளலாம் என வீடு நோக்கி சைக்கிளை தள்ளிக் கொண்டு போனார். 

சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டின் முன் இரண்டு பதின்ப வயது சிறுவர்கள் அமர்ந்திருந்தனர். தாத்தாவைப் பார்த்ததும் “என்ன தாத்தா…” என்று ஓடி வந்தார்கள். தங்களால் பஞ்சர் பார்க்க முடியும் என சொல்லியப்படி வீட்டினுள் சென்று சில பொருட்களைக் கொண்டு வந்தார்கள்.

கொஞ்ச நேரத்திலேயே பஞ்சர் சரி செய்யப்பட்டதில் தாத்தா மகிழ்ந்தார். பணம் கொடுத்தபோது அந்த இரு சிறுவர்களும் வாங்க மறுத்து விட்டனர்.  “இருட்டி விட்டது உங்கள் வீட்டீல் தேடுவார்கள். சீக்கிரம் வீட்டுக்குப் போங்கள் தாத்தா” என இருவரும் தாத்தாவை அவசராவசரமாக வழி அனுப்பி வைத்தார்கள். தாத்தாவும் கிளம்பினார்.

வீடு போய் சேர்ந்த தாத்தாவுக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை. நாளை காலை அந்த இரு சிறுவர்களைச் சந்தித்து நன்றியாவது சொல்ல வேண்டும் என்ற சிந்தனையோடு தூங்கினார்.

மறுநாள் காலையில் வேலைக்குச் செல்லும் முன்பு அந்தச் சிறுவர்களைக் காணச் சென்றார். அதே இடத்தில் இரண்டு சிறுவர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். தாத்தா அவர்களின் அருகில் சென்று சைக்கிளை நிறுத்தினார்.

“வாங்க தாத்தா…” என்றார்கள்.

“என்னைத் இதற்கு முன் உங்களுக்குத் தெரியுமா” என்று தாத்தா கேட்டார். தாத்தாவிற்கு அவர்கள் அறிமுகம் இல்லை. ஆனால் அவர்கள் இருவரும் தாத்தாவிற்கு நல்ல பழக்கமானவர்களைப் போலவே உபசரித்தனர்.

“ஆமாம் தாத்தா. நீங்கள் மறந்து விட்டடீங்க. அன்று நாங்கள் பஸ்ஸுக்குப் பணம் இல்லாமல் தவித்த போது நீங்கள் எங்களுக்குப் பணம் கொடுத்தீர்கள். பஸ்ஸுக்கு மட்டுமில்லாமல் உணவுக்கும் பணம் கொடுத்து சென்றீர்கள்.” என்றார்கள்.

தாத்தா தன் வாழ்நாளில் இதுவரை யாருக்கும் பண உதவி உட்பட எந்த உதவியும் செய்ததில்லை. பிச்சைக்காரர்கள் வந்தால் கூட “போங்கடா போய் உழைத்து சாப்பிடுங்கள். காசு என்ன என் சிறுநீரில் இருந்தா வெளிவருது” என்று விரட்டி விடுவார்.

தன்னைப் போல யாரோ ஒருவர் இவர்களுக்கு உதவியிருக்கிறார். தான் தான் என்று நினைத்து இவர்களும் பிரதிபலனாக உதவியிருக்கிறார்கள். தான் செய்யாத உதவிக்குப் பிரதிபலனை ஏற்ற தாத்தா சைக்கிளை தள்ளிக் கொண்டே ஆழ்ந்த சிந்தனையில் அங்கிருந்து கிளம்பினார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...