ராமகிருஷ்ணன் நிம்மதியாகத் தூங்கி இன்றோடு ஐந்து வருடங்கள் இருநூற்று பன்னிரண்டு நாட்கள் ஆயிற்று. படுக்கையில் நீட்டி உருண்டு கொள்ளக் கூட அவனால் முடிந்ததில்லை. ஒரு விரிசல் விழுந்த சுவர் போல இவன் அம்மாவின் உயிர் உடலோடு ஒட்டியும் ஒட்டாமலும் போன நாளிலிருந்து அப்படித்தான். இவன் சாயும் இடம், அம்மா உயிர் விடைபெறக்காத்திருக்கும் அந்தக் கட்டிலின் அருகே உள்ள சாய்வு நாற்காலிதான். எழுந்தாலும் உட்கார்ந்தாலும் அது ‘கிரீச்’ என்ற சத்தமிடும்.

தலைமுறைக் கட்டில் என பேர் போன கட்டில் அது. பல உயிர்கள் உருவான இடம். சந்தோசத்தின் சுவடுகளைத் தனக்குள் பரவி வைத்திருந்த இந்தக் கட்டில்தான் இப்பொழுது இவனின் அம்மா உயிர் விடைபெற அவளைச் சுமந்து கொண்டு நிற்கிறது. கட்டில் இப்பொழுதும் நன்றாகத்தான் இருக்கிறது. அடுத்த தலைமுறைகளுக்கு இந்தக் கட்டில் இடம் கொடுக்காதுபோனது துரதிருஷ்டம். ஒன்று அம்மா கமலாவின் நோய்க்காலத்தின் நீட்டிப்பு. இதே கட்டிலில்தான் அவள் படுத்திருத்திருக்கிறாள். இன்னொன்று இவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
சற்று பெரிய வீடுதான். நான்கு தலைமுறை தாண்டி இன்னும் உறுதியாக இருக்கிறது. முன்படி ஏறி இருபுறமும் திண்ணைகள் நிழலோடு அடுத்தது முற்றம். மேலே கம்பிகள் போட்டு நட்சத்திரங்களை மொத்தமாக ரசிக்க விடாமல் செய்தது போன தலைமுறைக்கு முந்திய தலைமுறை. அடுத்தது நிலைக்கதவு எல்லா பழைய வீடுகளில் உள்ளதுபோல் தேக்குதான். உள்ளே நுழைந்தால் வலது புறம் ஒரு தூண். இடது புறம் ஒரு தூண். இந்தத் தூண்களை இரண்டு பேர் இரு கைகளையும் விரித்து சேர்த்தால்தான் பிடிபடும். அடுத்து ஓர் அறை. அதன் ஓரத்தில் துணி மாற்ற ஒரு தடுப்பு. உள்ளே சற்றே ஒரு பெரிய அறை. ஒரத்தில் விளக்கு வைக்க, அரை அடியில் பீடம். அருகேதான் சாப்பிடும் இடம். கமலா இங்கேதான் கட்டிலில் இப்பொழுது படுத்திருக்கிறாள். அடுத்தது சமையல் அறை, அங்கனக்குளி. பின் சிறியதாய் ஒரு தோட்டம். அதன் ஓரம் ஒரு கழிப்பறை.
நன்றாக வாழ்ந்த வீடு, தற்சமயம் கலையிழந்து நின்றது. முன்னர், வயல் வெளி, தோட்டம், எல்லாமே இருந்தது. எந்தத் தலைமுறை அழித்தது என்று சரியாய் தெரியவில்லை. இப்பொழுது மிச்சம் இருப்பது இந்த வீடு மட்டும்தான் .
ராமகிருஷ்ணனின் அப்பா இந்த ஊர் கிராம அதிகாரி. ஒரு சாதி கலவரத்தில் இறந்து போன 17 உடல்களுக்கு நடுவில் இவருடைய உடலும் கிடைத்தது. எப்படி நடந்தது என்று இது வரை யாருக்கும் தெரியவில்லை. அப்பொழுது இவனுக்கு பதின்மூன்று வயதிருக்கும். இவனுக்கு ஒரு தங்கை. தற்சமயம் திருவண்ணாமலைக்குப் பக்கத்தில் செங்கம் என்ற ஊரில் வாக்கப்பட்டு இரண்டு குழந்தைகளோடு இருக்கிறாள்.
இவன் அப்பா இறுதி யாத்திரையின்போது இவனுக்கு அரைகுறை புரிதல்தான். ஆனாலும் அம்மாவைப் பார்க்கும் போதுமட்டும் ஏனோ இவனுக்கு அழத் தோன்றியது. கண்ணீர் இமைகளைத் தாண்டி வெளியே குதித்துக் கொண்டே இருந்தது. கன்னத்தில் வழிந்த கண்ணீரை எடுத்து டவுசரில் துடைத்துக் கொண்டான்.
இந்தக் கட்டிலில் அவள் சேர்ந்த நாளுக்கு முந்தைய நாள் வரை அம்மா தடுமாறி இவன் பார்த்ததேயில்லை; கலங்கியதும் இல்லை. குறை சொல்ல முடியாத தங்க மனசுக்காரி. அம்மாவின் நிதானம் இவனுக்குப் பிடிக்கும். பதற்றப்பட மாட்டாள். அப்பா இறந்த அன்று கூட அழுகையினூடே சொந்தக்காரர் யாரையோ அழைத்து குழந்தைகள் எல்லாருக்கும் சாப்பாடு வாங்கி தரச் சொன்னாள். இறுதி காரியங்கள் எல்லாவற்றையும் மிக நேர்த்தியாகச் செய்தாள்.
அதன் பின்னான வாழ்நாட்களில் கூட அவள் கலங்கியோ பதற்றப்பட்டோ இவன் பார்த்ததே இல்லை. அப்பாவின் நண்பர் ஒருவர் அப்பாவின் மறைவிற்குப் பின் உதவி செய்யும் சாக்கில் அம்மாவிடம் வழிந்து நின்றபோதுகூட நிதானமாய் அதை எதிர்கொண்டாள். வாழ்வு என்பது இப்படித்தான். அந்தந்த காலங்களில் அந்தந்த வளர்ச்சிகளும் தடைகளும் இருக்கும் என்று தெளிவாக தெரிந்து வைத்திருந்தாள்போல. எதன் பொருட்டும் இடறியதேயில்லை.
அப்பா இறந்த பிறகு இவனுக்கு 21 வயது ஆனதும் வாரிசு வேலை கிடைக்க நாயாய் அலைந்தாள். அதன் விளைவாக இவனுக்கு வேலையும் கிடைத்தது. அதுவும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள பக்கத்து ஊரில். சந்தோசமாய் வேலைக்குப் போய் வந்தான். உடனேயே தங்கைக்கும் வரன் தேடி வந்தது. திருவண்ணாமலை தூரம் என்று ஒரு முனை யோசித்தாலும் மறுமுனை நல்ல சம்மந்தம் விட்டு விடக்கூடாது என்று இழுத்தது. உடனடி திருமணம். இப்பொழுது வீட்டில் இவனும் அம்மாவும் மட்டும் இருப்பது என்னவோபோல் இருந்தது இவனுக்கு. மகளின் பிரிவையும் கூட எந்த வித சலனமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டாள். “எப்படிம்மா?” என்று கேட்டால் “வாழ்க்க ஒனக்கு எல்லாமே சொல்லித் தரும். ஒனக்குப் புடிச்சாலும் புடிக்காட்டியும் அது கத்து கொடுக்கிறத தடுக்க முடியாது. அதனோட ஒத்துப்போகக்கூடிய ஒரு காலம் வரும். எனக்கு வந்துடுச்சு… ஒனக்கும் ஒரு நாள் வரும்,” என்றாள்.
ஆறு மாதம் கழித்து இவனுக்குப் பணி நிரந்தரமானது. உறுதி கடித்தத்தை வாங்கி இவளிடம் காண்பிக்க வரும் போதுதான் அது நடந்தது .
“அம்மா கன்பர்ம் லெட்டர் வந்துருச்சும்மா,” கையில் அந்தப் பழுப்பு நிற கவரோடு நின்றிருந்ததைப் பார்த்தபோது கூட அவள் நிதானமாகச் சொன்னாள், “சாமி முன்னாடி வைச்சுக் கும்பிட்டுட்டு வாப்பா,”
திருச்செந்தூர் முருகன், குலசாமி அப்புறம் இவன் அப்பா போட்டோ. மூன்றுக்கும் நடுவில் வைத்துக் கும்பிட்டு விட்டு திரும்பியபோதுதான் கவனித்தான். கமலா சரிந்து விழுந்து கிடந்ததை.
பதற்றத்துடன் ஓடிச்சென்று தூக்கிப் பார்த்தபோது இவன் கைகளில் இரத்தம் படர்ந்திருந்தது. இரத்த வாந்தி எடுத்திருக்கிறாள் என்று புரிந்து கொள்ள சில வினாடிகள் பிடித்தது. முகத்தில் தண்ணீர் தெளித்து, பக்கத்தில் உள்ளவர்களைத் துணைக்கு அழைத்து, ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள். ஒரு வாரம் அங்கேயே இருந்து, என்னன்னவோ டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்ததில் வயிற்றில் குடல் கேன்சர் என்று வந்தது.
தங்கை வந்து பார்த்தாள். ஒரு வாரம் கூட இருந்தாள். முதல் குழந்தையைச் சுமந்துகொண்டு இருந்ததால் மேற்கொண்டு மருத்துவமனை மருந்து, இந்தச் சூழ்நிலை, குழந்தையைப் பாதிக்கும் என்று இவனின் மச்சான் கூறி தங்கச்சியை ஊருக்கு அழைத்து சென்று விட்டார். தினமும் இரவு 8.30 மணிக்கு போன் செய்து விசாரிப்பாள். 8.30 மணிக்கு போன் சத்தம் கேட்டாலே இவனுக்குத் தெரியும் அது அவள்தான் என்று.
இவனின் அம்மா அப்பொழுதும் நிதானமாகத்தான் இருந்தாள். “ராமகிருஷ்ணா… பூமியில பொறந்தா செத்துதானே ஆகணும். வருத்தப்பட்டு ஒண்ணும் ஆகப் போறதில்லை. நாமா முடிவ தேடக்கூடாது. அவ்வளவுதான். என்ன… எனக்கு கொஞ்சம் கூடுதல் கஷ்டம்… கொஞ்சம் வலிக்கும்,” என்று புரண்டு படுத்தாள். புரண்டு படுக்கும்போது அவள் பேசிய விதத்தில் அவளுக்கு எவ்வளவு வலி இருக்கிறது என்று இவனால் புரிந்து கொள்ள முடிந்தது .
கொஞ்சம் தெரிந்தவர்கள் சொந்தக்காரர்கள் மருத்துவமனைக்கு கீமோ கொடுக்க கூட்டிட்டுப் போக வர உதவி செய்தார்கள். ‘ஒத்த ஆம்பளைப் புள்ளையால என்ன செய்ய முடியும்?’ என்று அங்கலாய்த்து கொண்டார்கள்.
நாட்கள் செல்லச் செல்ல அம்மாவின் உருவம் மாறத் தொடங்கியது. முடி கொட்டியது. வயிறு உள் வாங்கியது. தோள்கள் தோலுடன் மட்டும் இருந்தது. கன்னம் இருந்ததற்கான அடையாளம் இல்லை. கண்கள் உள்ளே போனது. ஆனால் அதன் ஒளி மட்டும் இன்னும் மிச்சமிருந்தது. அவளின் நம்பிக்கையுடன் சேர்ந்த நிதானம் அந்தக் கண்களின் வழியே அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.
“உன்னைய ரொம்ப கஷ்டப்படுத்துறேனாடா ?”
“ம்மா… அதெல்லாம் இல்லம்மா“ என்று மேற்கொண்டு எதோ சொல்ல வந்தவனை மறித்து, “போதும்டா இனிமே ஆஸ்பத்திரில்லாம் போக வேண்டாம். நீ வேற அடிக்கடி லீவு போட வேண்டியிருக்கு. பேசாம வீட்டுலேயே இருக்கேன். வேணும்னா… டாக்டர் வந்து இங்கேயே பார்க்கட்டும். அவரு சொல்ற மாத்திரை மருந்து மட்டும் வாங்கித்தா… அது போதும்.” எவ்வளவோ பேசி பார்த்தும் அம்மா மறுத்து விட்டாள். அவள் இவனை விட எப்பொழுதுமே உறுதியானவள்.
“நா இருக்குற வரைக்கும் ஒனக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்க. இந்த நோய்க்காரி வீட்டுக்கு எந்த வீட்டுல இருந்து வந்து சம்பந்தம் பண்ண போறாங்க? என்ன ஆனாலும் எவ்வளவு மருந்து மாத்திரை எடுத்துக்கிட்டாலும் இது குணமாகற மாதிரி தெரியலையேடா. சாவு சீக்கிரமா என்னைய தேடி வரட்டும். அதுக்கப்புறம் நீ சந்தோசமாக இருடா மகனே.” இப்போதெல்லாம் மனதில் நினைக்கிறாளா வாய்த்திறந்து சொல்கிறாளா என அவளுக்கே தெரிவதில்லை.
பகலில் இவன் வேலைக்குப் போகும் நேரங்களில் இவளைப் பார்த்துக் கொள்ள, தெரிந்த ஒரு அக்காவை வேலைக்கு வைத்து விட்டான். காலையில் இவன் சமையல் எல்லாம் செய்து அம்மாவுக்கும் கொடுத்து விட்டு, கொஞ்சம் உலர் திராட்சைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்து விட்டு, அந்த அக்கா வந்தவுடன் ” பார்த்துக்கோங்க ” என்று சொல்லி அரக்க பறக்க வேலைக்குச் சென்று விடுவான். மதியம் வெளியே சாப்பிட்டுக் கொள்வான்.
காலையில் இவன் சென்றவுடன் கமலாவை பாத்ரும் போக வைத்து, வெந்நீர் வைத்து, துணியால் உடம்பைத் துடைத்து விட்டு, யூரின் டியூப் மாற்றி விட்டு, கொஞ்சம் பழங்கள் வெட்டி கமலாவுக்குக் கொடுத்து, அப்படியே இவளும் உடம்பைத் தேற்றிக் கொள்வாள் அந்த அக்கா. மதியம் டாக்டர் வருவார். சோதித்தப் பின், அவர் சொன்னபடி பத்திய சமையல் கமலாவிற்கு. அப்படியே இவளுக்கும் கொஞ்சம் சமைத்து சாப்பிட்டு, கமலா உறங்கியவுடன் இவளும் சற்று கண் அயர்ந்து மாலை இவன் வரும் நேரத்திற்குச் சற்று முன்பாக யூரின் டியூப் மாற்றி விட்டு இவன் வந்ததும் சென்று விடுவாள். அந்த டியூப் மறுநாள் காலை வரை தாங்கும். தாங்க வேண்டும்.
மாலை இவன் வந்து கொஞ்ச நேரம் அம்மாவிடம் பேசி விட்டு காலையில் ஊற வைத்த அம்மாவுடைய துணி, இவனுடைய துணி எல்லாம் துவைத்து விட்டு, இரவு உணவு இவனுக்கும் அம்மாவிற்கும் சேர்த்து சமைத்து விட்டு, சாப்பிட்டு விட்டு, அம்மா பக்கத்தில் உள்ள அந்தச் சாயும் நாற்காலியிலேயே சாய்ந்து உறங்குவான். அப்படி உறங்கும்போது அம்மாவின் பழைய சேலையைத்தான் போர்த்திக் கொள்வான். ஏனென்றெல்லாம் தெரியாது. அதுதான் சின்ன வயதிலிருந்து இவனுக்குப் பழக்கம். மீண்டும் மறுநாள் காலை. மற்ற எல்லாம் அப்படியே.
அப்படியே என்ற சொல் மிகச் சிறியதுதான். ஆனால் அதன் செயல் எத்தனை பெரிய வலி. திரும்ப திரும்ப அதையே செய்வதில் உள்ள களைப்பு. எந்த மாற்றமும் இல்லாத சலிப்பு. எப்போது மீளுவோம் என்ற விடை தெரியாத கேள்விகள். இப்படித்தான் என்று தெரிந்தால் கூட ஏதோ ஒரு விதத்தில் சமாதானம் ஆகலாம். எந்தப் பதிலும் இல்லாத கேள்விகளைக் காலம் தோறும் சுமந்தலைவது என்பது கொடுமை.
இவனுக்கும் நல்ல வயது தான். இயற்கை படுத்தும் பாடு இவனால் தாங்க முடிவதில்லை. என்னென்னவோ நினைவுகள் இவனையும் வஞ்சிக்கத்தான் செய்தது. வீடு விட்டால் ஆபீஸ். ஆபீஸ் விட்டால் வீடு; அம்மா. பதில் கிடைக்காத வரை இதையெல்லாம் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும் என்று இவனாக சமாதானப்பட்டுக்கொள்வான் .
யோசனைகள் எழுப்பும் மௌன அலறல்கள், அம்மாவின் முனகல்கள், இந்தச் சாயும் நாற்காலியின் கிரீச் கிரீச் சத்தம். இதற்கிடையில் இவன் எங்கே தூங்குவது? அவ்வப்போது தூங்குதல், அவ்வப்போது எழுதல் இந்த ஐந்து வருடங்களில் இவனுக்குப் பழகிவிட்டது; அல்லது பழக்கி விட்டது.
அம்மாவைத் தவிர எந்தச் சொந்தமும் இப்போது இவனுடன் இல்லை. அவளுக்காக வேலை செய்வது, அவளுடன் தினமும் பேசுவது, அவள் அருகிலேயே இருப்பது, இனிமேல் இவனால் கூட மாற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு இவையெல்லாம் இவனுடன் ஒட்டிக்கொண்டன.
மனதிற்குள் ஒரு பசைத்தன்மை இருக்கிறது என்பதை அவன் தாமதமாகவே அறிந்தான். எப்பொழுது அந்தப் பசை வலுவிழக்கும் என்பதும் அதுக்குத் தெரியாமல் இருந்தது.
8.30 மணிக்கு அழைப்பு வந்தது. அம்மாவை விசாரித்து விட்டு, மீண்டும் கருவுற்றிருப்பதாகச் சொன்னாள். ‘சந்தோசம்’ என்று மட்டும் பதிலளித்தான். கமலா இப்பொழுது பேசுவதற்குக் கூட தடுமாறினாள். நாளுக்கு நாள் புற்று தன் வேலையைக் காட்டியது. எலும்புகள் இன்னும் தெரிய ஆரம்பித்தன.
இவனுக்கும் சரியான சாப்பாடு இல்லை; தூக்கம் இல்லை. பிடித்தம் இல்லாத வாழ்க்கையில் விட்டேத்தியாக போய் வந்து கொண்டிருந்தான். ஆனாலும் கடைசி வரை அம்மாவைத் தனியே விட்டுவிடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாயிருந்தான்.
நேற்றிரவு திடீரென்று இவன் பாதத்தில் எதோ ஈரம் படர்வதைப்போல ஒரு உணர்வு. வேகமாக எழுந்து அம்மாவின் அருகில் சென்று பார்த்தான். அம்மாவின் யூரின் டியூப் விலகியிருந்தது. யூரின் வடிந்து இவன் பாதங்களை நனைத்து இருக்கிறது. இந்த நள்ளிரவில் யாரிடம் போய் உதவி கேட்பது? கமலா ஈரத்தில் படுத்திருப்பதை அசூசையாய் உணர்ந்தாள் என்பதை அவளின் முனகல் சத்தம் இவனுக்குச் சொல்லியது.
டாக்டர் ஏற்கனவே சொன்னது ஞாபகத்தில் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பிரசவத்துக்குத் தயாராகும் ஒரு கர்ப்பிணியைப்போல அம்மாவின் கால்களைத் தூக்கி நிறுத்தினான். அவள் உடைகளை உயர்த்தி, இரு துண்டு துணிகள் எடுத்து, அவளின் யோனியை முடிந்த வரை இவன் கண்களில் இருந்து மறைத்தான்.
இவனுக்குப் பதற்றம் அதிகமானது, கைகள் நடுங்கத் தொடங்கின. வியர்த்து கொட்டியது.
தன் இயலாமை, அவமானம், பெற்ற பையன் முன்பு இப்படியா என்ற வெட்கம். நோய்மையின் கூறு, அதனால் உண்டான வலி எல்லாம் சேர்த்த முகபாவம் கமலாவிடம் வெளிப்பட்டது. கண்ணீர் வழியாக அத்தனை உணர்வுகளும் வழிந்து கொண்டிருந்தது.
ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் போனது. கண்கள் தாழ்ந்து கொண்டன.
முதல் முறையாக இவன் இதைச் செய்வதாலும் பதற்றத்தாலும் வேகமாக உள்ளே செலுத்தி விட்டான். ஏற்கனவே இருந்த வலியில் மேலும் இந்த வலியும் சேர துடிதுடித்துப் போனாள்.
இவன் சட்டென்று யூரின் டியூப்பை வெளியில் எடுத்து விட்டு தன்னை நிதானப்படுத்த முயற்சித்தான். சிறிது நேரத்துக்குப் பின், இதுதான் இப்படித்தான் என்பதை மனதுக்குப் புரிய வைத்து, மீண்டும் முயற்சித்தான்.
வாழ்நாளில் இதுவரை இல்லாத பதற்றம் கமலாவிடம் முதல் முறையாக வந்தது. இவனிடம் இதுவரை இல்லாத நிதானம் இப்பொழுது இவனுக்குள் முதல் முறை முளைத்தது.
படுக்கை அறை எல்லாம் சுத்தம் செய்தான். நாற்றம் போவதற்கு அறைக்கு வெளியே இரண்டு பத்தி ஏற்றி வைத்தான். வந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். அதன் பிறகு, அவள் இவனைப் பார்ப்பதை தவிர்த்தாள். தூங்கிவிட்டதைப்போல கண்களை மூடியே வைத்திருந்தாள்.
இன்று அலுவலத்தில் இருக்கும் போது கமலாவைக் கவனித்துக் கொள்ளும் அக்காவிடம் இருந்து போன் வந்தது . போன் எடுக்கும் போதே இவனுக்கு ஏதேதோ தோன்றியது .
“அம்மா நிலைமை கொஞ்சம் மோசமா ஆகுதுப்பா நீ வர்றியா?”
உடனே டாக்டருக்கு போன் பண்ணி விசயத்தைச் சொன்னான். இவன் போகும் போது டாக்டர் கமலாவை செக் செய்து கொண்டிருந்தார். இவனைத் தனியே அழைத்து இன்னைக்கு நைட்டு தாங்காது, யாருக்காவது சொல்லணும்னா சொல்லிடுங்க. சாரி ராமகிருஷ்ணன்.” டாக்டர் போய் விட்டார்.
“அக்கா நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன்,” என்றான்.
“இல்லப்பா நான் வேணும்னா இன்னைக்கு …”.
“இல்லக்கா வேண்டாம், நா பார்த்துக்கறேன் . நாளைக்கு நான் லீவு தான். நானே பார்த்துக்கிறேன்,” என்று அவளை அனுப்பி வைத்தான்.
வீட்டிற்குள் வந்து அம்மாவைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான் “ரொம்ப கஷ்டப் பட்டுட்டேல்லம்மா,“ கண்கள் கலங்கி நிதானத்திற்கு வந்தான். வழக்கம் போல துணி துவைப்பது என மற்ற வேலைகள் பார்க்க ஆரம்பித்தான். 8.30 போன் வந்தது வழக்கம் போலவே பேசினான். எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.
ஒன்பது மணிக்கு அம்மாவின் அருகில் வந்து உட்கார்ந்தான். அவளையே உற்றுப் பார்த்தான். கமலா கண்களை மூடித்தான் இருந்தாள். இவனுக்கு இவனைப் பார்த்து அவள் புன்னகைப்பது போல இருந்தது. அது உண்மையில்லை என்பது புத்திக்கு மட்டும் தெரிந்தது .
சிறிது நேரத்தில் இரண்டு முறை உடல் குலுங்கியது. ஒரு நீண்ட பெருமூச்சு சத்தம் கேட்டது. கண்கள் திறந்து உடனே மூடியது; முடிந்தது.
இவன் கண் முன்னாலேயே எல்லாமே முடிந்தது. நிதானமாக பார்த்து கொண்டே இருந்தான். கை மீறும் செயலைக் கவனிக்க மட்டுமே முடியும் என்ற உண்மையை, நிதானம் இவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. இம்முறை இவனுக்குக் கண்ணீர் வரவில்லை.
ஒரு ஏக்க மூச்சு எடுத்தான். வாசலுக்குச் சென்று வெளிக் கதவுகளைத் திறந்து வைத்தான். உள்ளே வந்து அம்மாவின் யூரின் டியூப்பை எடுத்து குப்பையில் போட்டான். அவள் கட்டிலைச் சுத்தப் படுத்தினான். வீடு முழுவதும் பெருக்கி ஈரத்துணியால் துடைத்து விட்டான். வெளிக் காற்று இப்பொழுது சீராக உள்ளே வந்ததைப் போல உணர்ந்தான். வெளிக்கதவுகளைத் தாளிட்டான்.
பாத்ரும் சென்று மேல் கை கால் எல்லாம் கழுவினான். அடுப்பறை சென்று ஆறு தோசை சுட்டான். அவனுக்குப் பிடித்த தேங்காயுடன் நிலக்கடலையைச் சேர்த்து சட்னி தயாரித்தான். தட்டில் போட்டு எடுத்து நடு அறைக்கு வந்து, தொலைக்காட்சியைத் திறந்து இளையராஜா பாட்டு வரும் சேனலை தேடி வைத்து விட்டு, நிதானமாகச் சாப்பிட்டான். நீண்ட நாள் கழித்து வயிறு நிரம்பியது போல் தோன்றியது. எச்சில் தட்டை எடுத்து அடுப்பறை சென்று கழுவி சுத்தம் செய்தான் .
பீரோவில் இருந்து அம்மாவின் புடவை ஒன்றை எடுத்து வந்து, நடு அறையில் பாய் விரித்து, கைக்கு ஒன்று தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, என்று தலையணை வைத்துக் கொண்டு, அம்மாவின் சேலையைப் போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்தான்.
