குழந்தைகள் உருவாக்கும் சொர்க்கம்

திரையிடலுடன் கூடிய சந்திப்பான ‘பேசும் படம்’ இரண்டாவது கலந்துரையாடல் ஏப்ரல் 11ஆம் திகதி நடந்தேறியது. இம்முறை இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் வெளிவந்த ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ (Children of Heaven) திரைப்படம் திரையிடப்பட்டது. 1997ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் 1999ஆம் ஆண்டு சிறந்த அயல் மொழி திரைப்படத்திற்கான அகாடமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஈரானியத் திரைப்படம் என்பது கவனிக்கத்தக்கது.

இத்திரைப்படத்தில் அலி எனும் சிறுவன் தன் தங்கை சாராவின் காலணியைச் சரி செய்து கொண்டு வரும்போது, அதனைத் தவறுதலாக இழந்து விடுகிறான். தம் குடும்பம் வறுமையால் வாடுகின்ற நிலையில், இவ்விடயத்தைப் பெற்றோரிடம் வெளிப்படுத்த இவ்விரு சிறுவர்களும் தயங்குகின்றனர். அதனால் இருவரும் கூடி ஒரே காலணியை மாறி மாறி பள்ளிக்கு அணிந்து செல்ல உடன்பாடு செய்கின்றனர். இவ்வாறான நிகழ்வுகள் அவர்களின் பரஸ்பர அன்பையும், பொறுப்புணர்ச்சியையும் தன்னலமற்ற எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறது. பின்னர், அலி ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் பரிசாக வழங்கப்படும் காலணியைப் பெற முயல்கின்றான். ஆனால் விதியின் வினோதம் காரணமாக அவன் முதலாம் பரிசை வென்று விடுகிறான். இதை எண்ணி மனம் வருந்துகிறான். வீட்டிற்குத் திரும்பியபோது தன் நிலையைச் சாராவிடம் சொல்லாமல் தயங்கியபடி நிற்கிறான். இதற்கிடையில் அலியின் தந்தை விபத்துக்குள்ளான மிதிவண்டியைச் சரிசெய்து வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் இரண்டு ஜோடி செருப்புகளை வாங்கி வருகிறார். அலி ஓட்டப்பந்தயப் போட்டியின்போது கிழிந்த காலணிகளைக் கழற்றி, காயப்பட்ட தனது கால்களை நீரில் மூழ்கடித்துக் கொண்டிருக்கையில் தங்க மீன்கள் அவன் கால்களைச் சுற்றி வட்டமிடும் இறுதி காட்சியோடு இத்திரைப்படம் முற்றுப்பெறுகிறது. இம்முறை சந்திப்பில் புதிய முகங்கள் அறிமுகமானதால் எழுத்தாளர் அரவின் குமார் இச்சந்திப்பின் நோக்கத்தையும் நிரல் ஓட்டத்தையும் சுருக்கமாக விளக்கினார்.

இச்சந்திப்பின் சிறப்பு அம்சமாக மலேசியாவில் குறிப்பிடத்தக்க மூன்று முக்கிய இளம் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் கோகுலராஜன் மலேசியத் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் குறும்பட இயக்குநர், நடிகர் மற்றும் தொகுப்பாளர் ஆவார். இவர் இயக்கிய ‘வைரஸ் மைரஸ்’ குறும்படம் ‘குமான்’ குறும்படப் போட்டியில் வென்றுள்ளது. மேலும், ‘Bird on the 27th floor’ மற்றும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘Walay Balay’ போன்ற படைப்புகள் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் மலேசியத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, லேனா சீனிவாசன் 2024-இல் வெளியான Blues திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். மேலும், HAIKU: A Neurodivergent Harmony போன்ற ஆக்கங்களை இயக்கியுள்ளார். மலேசியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களிலும் சர்வதேச நிகழ்வுகளிலும் தீவிரமாகப் பங்களித்து வருபவர். இவர்களுடன் இணைந்து இச்சந்திப்பில் கலந்துகொண்ட மற்றுமொரு இளம் இயக்குநர் கீர்த்தியிஷா இயக்கிய ‘வருங்காலம் வசந்தகாலம்’ எனும் குறும்படத்துக்காக 2024ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் புகழ்பெற்ற பி.எம்.டபுள்யு குறும்படப் போட்டியில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. சிறப்பு வருகையாளர்களாக கலந்துகொண்ட இம்மூன்று இளம் இயக்குநர்களும் திரைப்படத்தை வெறும் கதை சொல்லும் ஊடகமாக அல்லாமல், ஒரு கலைப்படைப்பாக உணர்ந்து அணுகுபவர்கள். ‘பேசும் படம்’ சந்திப்பின் மையநோக்கமான, திரைப்படங்களை ஆழமாகப் பார்க்கவும் பேசவும் கற்றுக்கொள்வது இம்முறை இன்னும் கூர்மையான தளத்தில் பயணிக்க இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்திரையிடல் அங்கம் நிறைவுற்றபின் கலந்துரையாடல் அங்கம் தொடங்கியது. முதலாவதாக, எழுத்தாளர் தயாஜி தன் கருத்தைப் பகிர்ந்து கொண்டார். இத்திரைப்படத்தை மனங்கலங்காமல் தன்னால் என்றும் காண இயன்றதில்லை என்பது அவருணர்வின் வெளிப்பாடாக இருந்தது. ஓட்டப்பந்தயத்தில் முதல்நிலை வெற்றிபெற்றும் அதைக் கொண்டாட முடியாமல் வருந்திய நிலையில் வீடு திரும்பும் சிறுவன் அலி கதாபாத்திரத்தின் மனநிலையை நினைவு கூர்ந்தார். அலி பெற்றது முதல்நிலை வெற்றியாக இருந்தாலுமே அதைக்கொண்டு அவனால் தங்கையின் மனதை வெல்ல முடியாமல் போனதை எண்ணி வருந்துகிறான் எனக் குறிப்பிட்டார். பள்ளி காலணியைக் கொண்டே இத்திரைக்கதை அணுகப்பட்டிருப்பதால் தன் சிறுவயது நினைவுகள் அவரைச் சற்று வருடி சென்றதாகக் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, திரைப்படத்தில் அலியின் தந்தை தன்னிடம் கொடுக்கப்பட்ட பள்ளிவாசல் நிகழ்வுக்குத் தேவையான சர்க்கரை கட்டிகளை வறுமையிலும் தன் சுய தேவைக்குப் பயன்படுத்தாமல் நேர்மையாக கையாளும் காட்சியை வறுமையிலும் நல்லவன் நல்லவனாகவே இருக்க முற்படுகிறான் என்பதற்குச் சாட்சியாகச் சுட்டிக்காட்டினார். மேலும், திரைப்படத்தில் குழந்தைகள் எதிர்நோக்கும் துயரிலும் அவர்தம் குடும்பத்தினர் எதிர்நோக்கும் சவால்களிலும் சில நல்ல உள்ளங்கள் உதவிக்கரம் நீட்டும் காட்சிகள் ஏதோ ஒருவகையில் கடவுளின் இருப்பை வலுப்படுத்தும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தொலைந்த சாராவின் காலணியைத் தேடி சிறுவர்கள் இருவரும் செல்லும்போது, அக்காலணி தங்களை விட வறுமையில் இருக்கும் சிறுமியிடம் இருப்பதைக் கண்டு அமைதியாக அச்சூழ்நிலையைப் புரிந்து ஏற்றுக்கொண்டு கடந்து சென்றுவிடுகின்றனர். அது வறுமையும் நெருக்கடியான குடும்பச் சூழலும் அவர்களுக்குள் ஏற்படுத்திய மனவிரிவினால் ஆக இருக்கும் என்றார்.

அடுத்து பேசிய கௌசல்யா, சாரா தன் காலணியைத் தேடி செல்லும் காட்சியை ஒட்டி பேசினார். காலணியைத் தேடிப்போனபோது சாரா ரோயாவைக் கண்டதோடு அவர்களுக்கிடையிலான தொடர்பு முடிந்ததென்றுத்தான் எண்ணியதாகக் கூறினார். தன்னுடைய எண்ணத்திற்கு மாறாக, மீண்டும் சாராவிற்கும் ரோயாவிற்கும் ஒரு பேனாவின் மூலம் சந்திப்பு முடுக்கிவிடப்படுவதைக் குறிப்பிட்டார். ரோயா சாராவிடமிருந்து கிடைக்கப்பெற்ற காலணி கிழிந்ததால் வீசிவிட்டதாக கூறியபோது எந்தவித கோபக்கனலையும் அவள்மீது எறியாமல் சாரா அவளை மன்னித்துவிடும் நுட்பமான காட்சி அவரை வெகுவாக கவர்ந்ததாக கூறினார். பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளிடம் மன்னிக்கும் மனப்பான்மை இயல்பாகவே இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சண்முகா, திரைப்படத்தில் சாரா கதாபாத்திரம் வாழ்க்கை நெருக்கடியை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை திரைப்படத்தின் ஆதி முதல் அந்தம் வரை இழையோடியிருப்பதைத் தெளிவான உதாரணங்களோடு முன்வைத்தார். ரோயா அந்தக் காலணியை வீசிவிட்டதாக சொன்னபோது அக்காலணியை இழந்து தினமும் போராடிக் கொண்டிருக்கும் சாரா தன் வேதனையைச் சட்டென உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கலாம். மாறாக, அவள் அச்சூழலையுமே அடர்ந்த மௌனத்தால் கடந்து செல்கிறாள். அதுமட்டுமல்லாது, தன் அண்ணன் அலி வாக்கு கொடுத்தபடி போட்டியில் கலந்து காலணியைப் பரிசாக பெறாததை அறிந்த சாரா அப்போதும் அதே மௌனத்தின் வழி அத்தருணத்தைக் கடந்து செல்கிறாள். இம்மாதிரியான காட்சிகள்தான் தன் கருத்துக்கு வலு சேர்த்ததாக சண்முகா விளக்கமளித்தார். மேலும், வறுமை குழந்தைகளின் குழந்தைமையைக் கொன்றுவிடுவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து, அலியின் அப்பா தன் மனைவியிடம் அறுவை சிகிச்சைக்குப் பணம் போதாது என்பதை நேரடியாக சொல்லவியலாமல் பல காரணங்களைக் கூறி தட்டி கழிக்கிறார். வறுமையே அவரை அவ்வாறு செய்யவைத்ததென்பது சண்முகாவின் பார்வையாக இருந்தது.

அடுத்து பேசிய இளம் உதவி இயக்குநர், லேனா சீனிவாசன் இத்திரைப்படம் முழுக்க பரவலாக காட்டப்பட்டிருந்த குழந்தைமை அவரைப் பற்றிக்கொண்டதாகத் கூறினார். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் குழந்தைத்தனத்தை விட்டு வெகுதூரம் பயணித்துவிட்டதாக ஏக்கத்தோடு கூறினார். அக்குழந்தைத்தனத்தைத் திரைப்படத்திலுள்ள சிறுவர்கள் வறுமையால் இழந்துவிடுவதை மனக்கலக்கத்தோடு முன்வைத்தார். வெகுஜன திரைப்படங்களோடு ஒப்பிடுகையில் இத்திரைப்படத்தில் வறுமையை இயக்குநர் அரசியல்படுத்தாமல் நுட்பமாக திரைக்கதையில் வெளிக்கொணர்ந்திருப்பதைக் குறிப்பிட்டார். உதாரணமாக, அலி கிழங்கு வாங்க கடைக்குச் செல்லும்போது அவன் ஏழ்மையை அறிந்த கடைக்காரர் அலி விலை அதிகமுள்ள கிழங்குகளை எடுக்க செல்லும்போது அவனைப் பொறுமையாக நிறுத்தி சற்று விலை குறைவான கிழங்குகளை எடுக்குமாறு தனிந்த குரலில் கூறும் காட்சி. இக்காட்சியையே தன் கருத்துக்குச் சாட்சியாக லேனா முன்னிறுத்தினார். மேலும், இம்மாதிரியான காட்சி வெகுஜன திரைப்படங்களில் எடுக்கப்பட்டிருந்தால் அரசியல் திணிப்பு செய்யப்பட்டுக் கடைக்காரர் வில்லனாகச் சித்திரித்திருப்பார் என்று கூறி முடித்தார்.

தொடர்ந்து பேசிய இளம் இயக்குநரான கோகுலராஜன் திரைப்படத்தின் சிறிய துணுக்குக் கதைத்தளம்தான் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்து விடுவதாகக் கூறினார். கதை நெடுக காலணி தொலைந்ததன் விளைவால் ஏற்பட்ட தாக்கங்களைப் பற்றித்தான் அவருடைய கருத்து பரிமாற்றம் இருந்தது. மேலும், திரைப்படத்தில் அச்சிறுவர்களிடத்தில் காட்டப்பட்டிருந்த களங்கமின்மையையும் அப்பாவித்தனத்தையும் முன்வைத்து கோகுல் பேசினார். திரைப்படத்தில் வறுமையானது களங்கமின்மைக்கு எதிரான வன்முறையென சாடினார்.

அதனையடுத்து பேசிய விஜயலட்சுமி இத்திரைபடம் விசுவாசத்தை முன்னிறுத்துவதை உணர்ந்ததாகக் கூறினார். இத்திரைப்படத்தில் சாரா எனும் சிறுமி கதாப்பாத்திரம் பல இடங்களில் தன் வறுமையை ஏற்றுகொண்டு அமைதியாக அதைக் கடந்து செல்கிறாள். மாறாக, அவளின் தந்தை வறுமையை உணர்வுப்பூர்வமாகக் கையாள்கிறார். இவ்விரு கதாபாத்திரச் சித்திரிப்பையும் ஒப்பீடு செய்கையில் பெரியவர்களைக் காட்டிலும் சிறுவர்களிடத்தில் வறுமையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அதீத நிலையில் இருக்கிறது எனும் கருத்தைப் பதிவு செய்தார். தொடர்ந்து, தன் காலணி வேறொரு சிறுமியிடம் இருப்பதை அறிந்தும் அவளிடம் ஏதும் வினவாமல் அமைதி காத்த சாராவின் முதிர்ச்சி நிலையைத் தொட்டுப் பேசினார். மேலும், வசதி வாய்ப்பு கைக்கூடி வருகையில் பெரியவர்கள் ஆடம்பரத்தைத்தான் விரும்புகின்றனர். மாறாக, குழந்தைகள் தேவையை முன்வைப்பதைக் கூர்ந்து கவனித்து பகிர்ந்து கொண்டார். தோட்ட வேலைக்குச் செல்லும்போது அலியின் அப்பா பேச தயங்கும் போது அலி தயங்காமல் தேவையானதைப் பேச முற்படுகிறான். பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்குத் தயக்கமின்றி ஒன்றை நிகழ்த்தும் எண்ணம் வெகுவாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார். மேலும் சிறுவர்களிடத்தில் விசுவாசம் இயல்பாகவே இருக்கிறது எனக் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாது, சிறுவர்கள் இல்லாமையைப் பெரிதாக எண்ணி குற்றச்சாட்டு வைக்காமல், சின்ன சின்ன விடயங்களையும் ரசித்து வாழும் மனப்பக்குவம் கொண்டிருக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.

விஜயலட்சுமியின் கருத்தை ஒட்டி பேசிய அபிராமி, குழந்தைகள் சின்ன சின்ன தருணங்களைக் காரணம் காட்டி ஆனந்தம் அடைகின்றனர் எனும் கருத்தை ஆமோதித்தார். குழந்தைகள் மிக எளிதில் நட்பு பாராட்டுகின்றனர். சாரா ரோயாவுடன் நட்பு பாராட்டியது, தோட்ட வேலைக்குச் செல்லும்போது அங்கொரு சிறுவனுடன் அலி நட்புறவு கொண்டது போன்ற காட்சிகளைக் குறிப்பிட்டுப் பேசினார். இத்திரைப்படம் அனைவரின் மனதைக் கலங்க வைத்ததன் மத்தியில், தனக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் இருந்ததாக அபிராமி குறிப்பிட்டார். வாழ்வில் பிரச்சனைகளைச் சரிசெய்ய பல சவால்களை எதிர்நோக்க வேண்டித்தான் இருக்கிறது. அதனை எதிர்நோக்கும் உத்தியை அறிந்தால் அனைத்தும் சுமூகமாக இருக்கும் என அவர் பகிர்ந்த கருத்து ஊக்கமளிக்கும் விதமாக இருந்தது. திரைப்படத்தின் முடிவில் இயக்குநர் முடிவைத் தெரியப்படுத்தவில்லை. ஆகையினால், முடிவைத் தானே கற்பனை செய்து கொண்டதாகச் சொன்னார்.

அடுத்து பேசிய லோகாம்பாள், இத்திரைப்படம் தன் சொந்த வாழ்க்கையோடு பலவகையிலும் ஒத்து போனதாகக் குறிப்பிட்டார். அலி, சாரா கதாப்பாத்திரங்களின் வடிவமாக தன் சொந்த வாழ்வு நகர்ந்ததாகக் குறிப்பிட்டார். அலி ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது பரிசுக்காக ஓடும்போது இடையில் கைவிடும் நிலைக்கு வருகிறான். ஆனால் ஓட்டத்தை நிறுத்திவிட்டால் தன் தங்கையின் பாட்டை நிறுத்தவியலாது என்றெண்ணி முன்னேறிச் செல்கிறான். மேலுல், சாரா காலணியைத் தேடி செல்லும்போது, அக்காலணி தன்னைவிட ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியிடம் இருப்பதை அறிந்து, அதை அமைதியாக கடந்து செல்லும் காட்சி தன் கவனத்தை வெகுவாக ஈர்த்ததாக கூறினார். அடுத்ததாக பேசிய துஷன், அலி பிரச்சனைகளை எதிர்நோக்கும் விதத்தைக் கண்டும் பிறரின் தேவையை முன்னிறுத்துவதையும் வைத்து அலியின் முதிர்ச்சி நிலையைக் கண்டு தன்னைத்தானே அச்சூழலுடன் பொறுத்திப் பார்த்து சுயவிமர்சனம் செய்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இளம் இயக்குநர் கீர்த்திஷா திரைப்படத்தில் காட்டப்படும் வறுமையைத் தாண்டி ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஏற்படும் நல்ல நிகழ்வுகள் தன் கவனத்தை அதிகமும் ஈர்த்ததாகக் கூறினார். இத்திரைப்படம் அனுதாபத்தை அல்லாது சூழலுடன் இயைந்து போகும் தன்மையை அளித்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து, சண்முகா தோட்ட வேலைக்குச் செல்லும் காட்சியைப் பற்றி பேசினார். தோட்ட வேலைக்குச் செல்லுகையில் அலி அங்கொரு சிறுவனோடு விளையாடி மகிழ்கிறான். வேலை முடிந்ததும், வீடு திரும்ப முற்படும்போது, அச்சிறுவனின் பொம்மையை அலி அவளிடத்தில் வைத்துவிட்டு செல்லும் காட்சியைச் சுட்டி காட்டி பேசினார். அலி அது தனக்கானது அல்ல என்பதை அறிந்து அதை திருப்பி வைப்பதைக் குறிப்பிட்டார். இறுதிக்கட்டத்தில், காயம் கொண்ட கால்களை அலி நீரில் மூழ்கடிக்கும்போது மீன்கள் அவன் காலருகே வந்து ஆசுவாசப்படுத்தும் காட்சியில் அலியின் கஷ்டங்களுக்கு மீன்கள் ஆறுதலாக இருந்ததென குறிப்பிட்டார். அதுதான் மானுடத்துக்கும் இயற்கைக்குமான ஊடுறவென விதந்தோதினார்.

இறுதியாக, எழுத்தாளர் அரவின் குமார் பேசினார். தங்கைக்கு வாக்குறுதியளித்தப்படி காலணியில்லாமல் வீட்டிற்கு வந்த அலியைப் பார்த்து காலணி இல்லாததைப் புரிந்து கொண்ட சாரா அதை எண்ணி வருந்துவதற்குள் அழும் குழந்தையைச் சமாதானம் செய்ய ஓடுகிறாள். குடும்ப வறுமை என்பது சிறுவர்களின் உணர்வுகளையும் தேவைகளையும் ஏக்கங்களையும் முதலில் பறித்துவிடுகிறது என அரவின் குமார் குறிப்பிட்டார். மேலும் அலி தன் தங்கைக்காகவும், வறுமையை எண்ணியும் மட்டும் போராடவில்லை. எங்கோ தொலைத்த தன் குழந்தைமையையும் தேடித்தான் அவன் போராட்டம் இருந்ததெனக் குறிப்பிட்டார். வறுமையோடும், குழந்தைமையைத் தக்க வைக்கவும் போராடும் சிறுவனுக்கு நியாயம் செய்யும் வகையில்தான் இறுதியில் தங்க மீன்கள் அவன் கால்களை ஆசுவாசப்படுத்தும் காட்சி இருந்ததாக குறிப்பிட்டு சந்திப்பை நிறைவு செய்தார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...